சினிமா ரசிகர்கள்

Posted: Friday, March 19, 2010 | Posted by no-nononsense | Labels:
இப்பதிவில் என் மறுமொழி:

ரசிகர்கள் பல விதம். அவர்களில் நம் ஊர் சினிமா ரசிகர்கள் அளவிற்கு கண்மூடித்தனமான பின்பற்றுதல் மற்ற துறை ரசிகர்களிடம் இருக்கிறது என்று சொல்லமுடியாது. எஸ்.பி.பியை ஒருவர் ரசிக்கிறார், பாடல்களை சேகரித்து வைத்திருக்கிறார் என்றால், பாடகரின் திறமை மீது கொண்ட லயிப்பாக அதனை புரிந்துகொள்ள முடிகிறது.

ஆனால் அதற்கு மாறாக நம் சினிமா ரசிகர்களோ வெற்று பிம்பங்களுக்கு மாலையணிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்திய பாணி சினிமாக்களுக்கும் மற்ற அயல்நாட்டு சினிமாக்களுக்கும் உள்ள வித்தியாசங்களைப் பட்டியலிட்டு, இந்தியச் சூழலையும் உளவியலையும் கணக்கில் கொண்டு சிந்தித்தால் இதற்கு ஓரளவு காரணம் பிடிபடும் என்று தோன்றுகிறது.

இங்கேயுள்ளது போல வேற்று தேச சினிமாக்களில் சூழ்நிலைக்கேற்ற பின்னணி பாடல்கள் கிடையாது. பஞ்ச் டயலாக் கிடையாது. ஒரே அடியில் ஒன்பது பேரை வீழ்த்தும் சூப்பர் ஹீரோயிஸம் கிடையாது. முக்கியமாக, கிட்டத்தட்ட அனைத்து படங்களிலும் ஹீரோவே இறுதியில் தீமையை அழித்து தர்மத்தை நிலைநாட்டும் ’சம்பவாமி யுகே யுகே’ கிடையாது. அதனால் அங்கேயெல்லாம் நம் ரசிகர்களைப்போல தொழல் கிடையாது. அங்கேயும் cult இருக்கலாம். ஆனால் அது வாழ்க்கையை தொலைத்துவிட்டு ‘தலைவா’ என்று திரியும் அளவிற்கு இருக்காது என்று நம்பலாம்.

இங்கே கதையை முன்னிறுத்தி அல்ல; கதாநாயகனை முன்னிறுத்தியே காட்சிகள் கட்டமைக்கப்படுகின்றன. தன்னுடைய புராணங்களிலும் இதிகாசங்களிலும் பற்பல தனி மனித சாகசங்களையே தெய்வச் செயல்களாக படித்தும் கேட்டும் வளர்ந்துள்ள ஒருவனால், சினிமா முன்னிறுத்தும் சாகசங்களின் நாயகனுடனும் வெகு இயல்பாக பொருந்திப் போக முடிகிறது. எல்லோராலும் அல்ல என்றாலும், கணிசமான மனிதர்களிடம், குறிப்பாக வாழ்க்கையை அதன் ஆகசாத்தியமான அத்தனை கொண்டாட்டங்களுடனும் அறிந்துகொள்ளும் முனைப்பில் இருக்கும் இளந்தலைமுறையினரிடம் அதன் தீவீர பாதிப்பை காணமுடிகிறது. சிலர், இளங்கன்றுப் பருவம் மாறி, நடப்புகளைப்பற்றிய அடிப்படையான புரிதல்கள் ஏற்பட்டதும் கடந்துவிடுகிறார்கள். சிலரால் முடிவதில்லை.

இவர்களின் இந்த பலவீனத்தை சில நடிகர்கள் திறமையாக பயன்படுத்திக்கொண்டு தங்களை வளப்படுத்திக் கொள்கிறார்கள். இவர்களைக் கொண்டே அரசியல் பேரங்களிலும் ஈடுபடுகின்றனர். இதனால் அடிமட்ட தொண்டன் எவனுக்கும் ஒரு பிரயோஜனமும் கிடையாது என்பதற்கு விஜயகாந்த் நிகழ்கால உதாரணமாக திகழ்கிறார். வேறு கட்சிகளில் போணியாகாத லோக்கல் பெரும்புள்ளிகள்தான் இப்போது விஜயகாந்த் கட்சியில் நிறைந்து காணப்படுகிறார்களேத் தவிர, விஜயகாந்தை இந்த உயரத்துக்கு ஏற்றிவிட்ட அவரின் ரசிகர்கள் அல்ல.

மாற்று சினிமாக்களின் எண்ணிக்கை பெருகும் நாட்களில் இதுவும் மாறும் என்றே நம்பலாம்.

0 comments:

Post a Comment