அங்காடித் தெரு விமர்சனம்

Posted: Sunday, March 28, 2010 | Posted by no-nononsense | Labels:
கதாநாயகர்களை மையமாகக் கொண்டு இயங்கும் தமிழ்த்திரைச் சூழலில் எவர் ஒருவர் இயக்குநர்களைப் பின்பற்றி படங்களுக்கான தன் விருப்பப் பட்டியலை(wish list) அமைத்துக் கொண்டிருக்கிறாரோ அவரின் எதிர்பார்ப்பும் சராசரிகளுக்கு அதிகமாகவே இருந்து விடுகிறது. அங்காடித் தெருவைப் பொருத்தவரை எனக்கும்
அப்படித்தான் ஆனது. வெயில் படம் மற்றும் அதனைத் தொடர்ந்த அவரின் பேட்டிகளின் மூலமாகவும், சில இலக்கிய கூட்டங்களில் அவரின் பங்கேற்புகள் மூலமாகவும் வசந்தபாலனைப்பற்றிய என் அபிப்ராயங்கள் வெகுவாக உயர்ந்திருந்தன. இப்படத்தில் உடன் ஜெயமோகன் வேறு பங்களித்திருந்தார். இப்படி மலையளவு எதிர்பார்ப்புகளை என்னுள் குவித்து வைத்துக்கொண்டு படைப்பை எதிர்கொள்ளும்போது, அது செய்நேர்த்தியாக இல்லாது போகும் பட்சத்தில் எழும் சிறிய ஏமாற்றம்தான் படம் பார்த்த உடனே என்னை வியாபித்திருந்தது.

சற்று நிதானம் கூடி இன்று யோசித்து பார்க்கும்போது இதை வேறு யாராவது ஒரு புதுமுக இயக்குநர் இயக்கியிருந்தால் எப்படி எல்லாம் பாராட்டியிருப்போம் என்பதை உணர முடிகிறது. ஒருவர் தன் ஆகச்சிறந்த படைப்பை வெளியிட்டு விட்ட பிறகு அவரிடமிருந்து அதற்கு நிகரான ஒன்றை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம். இது பொதுபுத்திக்கு இயல்பான ஒன்றுதான். அதனை விலக்கி வைத்து விட்டு ஒவ்வொரு படைப்பையும் ஒரு நிர்மலமான மனநிலையுடன் அணுகும்போது மட்டும்தான் அதன் இயல்புத்தன்மை புலப்படுகிறது.

அங்காடித்தெருவின் இயல்பான கதையோட்டத்தை இப்போது நிதானமாக அசைபோட்டுப் பார்க்கிறேன். நம் எல்லோருக்கும் பழக்கமான கடைகள்தான் ரங்கநாதன் தெருவில் இருப்பவை அனைத்தும். குறிப்பாக சரவணா ஸ்டோர்ஸ். சென்னை செல்லும் எல்லா சமயங்களிலும் அங்கேச் செல்ல நான் தவறியதில்லை. அல்லது குறைந்த பட்சம் நேரத்திட்டங்களை முடிந்தவரை அங்கே செல்வதற்கேற்ப மாற்றியமைக்க பிரயத்தனப்பட்டிருக்கிறேன். ஒரே இடத்தில் விலை மலிவில் குடும்பத்துக்கு, இன்னும் குறிப்பாக குழந்தைக்கு தேவையான ஆடைகளை வாங்கி விட முடிவதுதான் காரணம். இப்படி ஒவ்வொருவருக்கும் அங்கேச் செல்ல ஒரு காரணம் இருக்கும்.

வருடம் முழுவதும் நெரிசல். வாடிக்கையாளர்களின் அலைமோதும் கூட்டம். சற்று ஆயாசப்படுத்திக்கொள்ளக்கூட அவகாசம் அற்ற வேலை சரவணா ஸ்டோர்ஸ்(படத்தில், செந்தில் முருகன் ஸ்டோர்ஸ்) ஊழியர்களினுடையது. அவர்களில் ஒருவனே படத்தின் கதாநாயகன்.

வழக்கம்போலவே நாயகனின் பின்புலம் சோகமானது. அப்பா இறந்ததால் தோளை அழுத்தும் குடும்பச் சுமை; படிக்கும் வயதுக்கு வந்த தங்கைகள் எல்லாம் சேர்ந்து அவனை சென்னைக்கு துரத்துகின்றன. அவனுடைய கிராமத்திற்கு சென்னையின் பெரிய ஜவுளிக்கடையிலிருந்து வேலைக்கு ஆள் எடுக்க வருகிறார்கள். அதில் சேர்ந்து சென்னைக்கு செல்கிறான்.

கடையின் வெளிப்புறத் தோற்றத்துக்கும் உள்விவகாரங்களுக்கும் பெரிய வித்தியாசத்தை காண்கிறான். ஊழியர்களுக்கு சரியான அடிப்படை வசதிகள் கிடையாது. கொத்தடிமைகளைப்போல வேலை வாங்குகிறார்கள். சாப்பிட்டு வர ஒரு நிமிடமே தாமதம் என்றாலும் சம்பளத்தில் ஒரு ரூபாய் பிடித்தம். ’ம்’ என்றால் அடி! ‘ஏன்’ என்றால் வேலை காலி. குடும்பச்சூழலை கருத்தில்கொண்டு எல்லோரும் அடக்குமுறைகளை மௌனமாக ஏற்றுக்கொண்டு அடிப்பணிந்து வாழ்கிறார்கள். சில பாலியல் அத்துமீறல்களைக் கூட பெண் பணியாளர்கள் பெரிதுபடுத்துவதில்லை.

இந்நிலையில்தான் அங்கே சக பணியாளர்களாக இருக்கும் நாயகன் நாயகி இடையே காதல் அரும்புகிறது. ஆனால் ஏற்கெனவே காதல் விவகாரத்தில் ஒரு தற்கொலை சம்பவம் நடந்திருப்பதால், அங்கே காதல் என்னும் வார்த்தைக்கூட தடைச் செய்யப்பட்ட ஒன்று. இவர்களின் காதல் தெரிய வரும்போது, மிகக்கடுமையாக தாக்கப்பட்டு இருவரும் தெருவில் நிறுத்தப்படுகின்றனர். வேறு கடைகளில் வேலை கிடைக்காத காரணத்தினால் சொந்தமாக அதே தெருவில் கூவி விற்கும் வியாபாரம் துவங்குகின்றனர்.

துயரம் அவர்களை விடாமல் துரத்துகிறது. இரவில் படுக்க சென்ற பிளாட்பாரத்தின் மேல் வாகனம் ஏறியதில், நாயகிக்கு கால் போகிறது. அந்நிலையிலும் காதலை விட்டுக் கொடுக்காமல் திருமணம் செய்து கொண்டு அதே தெருவில் நடைபாதையில் கடை விரித்து வியாபாரத்தை தொடர்கின்றனர். சுருக்கமாக இவ்வளவுதான் கதை. இதை காட்சிபூர்வமாக வரிசைப்படுத்துவதில்தான் இயக்குநரின் திறமை இருக்கிறது. திறமை மிளிர்கிறதா என்றால், ஒரு நிலையான கதைக்களனை எடுத்துக்கொண்டு அதில் எவ்வளவு சொல்லமுடியும் என்பதையெல்லாம் பரிசீலித்து பார்க்கும்போது, நிச்சயமாக குறைசொல்ல ஒன்றும் இல்லை என்றுதான் சொல்லமுடியும்.

சின்ன சின்ன சம்பவங்களை உருவாக்கி சீட்டுக்கட்டுகளைப்போல அடுக்கி வைத்திருக்கிறார். ஒட்டு மொத்தமாக ஒரு கனமான உருவகத்தை அது உருவாக்கி காட்டினாலும், தனித்தனியாக பிரித்து பார்க்கும்போது சில இடங்களில் பலஹீனமான இடைச்செருகல்கள் போல சில காட்சிகள் தனித்து தெரிகின்றன. எடுத்துக்காட்டாக நாயகியின் தங்கை ருதுவானதும் அவளை அவளின் எஜமானி தங்க வைத்திருக்கும் இடம். அவளை ஒரு நாய்கூண்டு போன்ற இடத்தில் அடைத்து வைத்திருக்கிறார் என்பது ஒரு அதிர்ச்சி மதிப்பிற்காக செய்யப்பட்டது போலத்தான் தோன்றுகிறது. இயக்குநர் குரூரம், அதிர்ச்சி இவற்றில் அதிக ஆர்வம் கொண்டவர் என்பது கடைசி இரு படங்களையும் கருத்திக்கொண்டு பார்க்கும்போது தோன்றுகிறது. இப்படத்தில் நாயகனின் தந்தையை ஒரு ஆட்டோவில் ஏற்றி அதை ஒரு தண்டவாளத்தில் சிக்க வைத்து, அதன்மீது ரயில் ஏற்றி கொன்றிருக்கிறார்.

இன்னொரு இடத்தில் நாயகனின் தங்கை அண்ணன் வேலை செய்யும் கடையின் கைப்பையை கொண்டுசெல்லும் இருவரின் பின்னாலேயே சென்று அதை இரந்து பெற்று, அப்பாவின் படத்தருகில் அண்ணன் நினைவாக மாட்டி வைக்கிறாள். மனதோடு ஒட்டாத செயற்கையான காட்சி அது. விடுத்து, கதையுடன் ஒட்டி வரக்கூடியதாக சில செண்டிமெண்ட்களை இயக்குநர் யோசித்திருக்கலாம்.

படத்திற்கு நாயகன் ஒரு பெரிய குறை. சிலர் புதுமுகம் தானே என்று நடிப்பை பாராட்டுகிறார்கள். படத்தின் மையமான பாத்திரம் முகத்தில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தமுடியாதபடி பலவீனமாக இருப்பதை, வெறும் புதுமுகம் என்பதினால் மட்டுமே மன்னித்து விட முடியாது. காரணம் இது நாடகம் அல்ல; அடுத்த ஷோவில் தேறிவிடுவார் பையன் என்று சமாதானம் சொல்லிக்கொள்ள. இது சினிமா - எல்லாம் ஒருமுறைதான். ஆனால் பலமுறை ஒத்திகைப் பார்த்துக்கொள்ள முடியும். இருந்தும் சொதப்புகிறார். தேர்ந்த நடிப்பால் அப்பாத்திரத்தை தாங்கிப் பிடிக்கும் ஒருவராக பார்த்து நடிக்க வைத்திருக்க வேண்டும்.

நாயகனின் நடிப்பின் பின்னடவை நாம் கவனிக்க சந்தர்ப்பம் தராமல் தன் அற்புதமாக நடிப்பால் நாயகி அஞ்சலி நம் கண்களை தன் பக்கம் கவர்ந்து கொள்கிறார். படத்தின் முதுகெலும்பு அப்பெண்ணின் நடிப்பு. அடுத்து நாயகனின் நண்பனாக சக ஊழியனாக வலம் வரும் ’கனா காணும் காலங்கள்’ பாண்டி. எனக்கு அவரை மிகவும் பிடித்து விட்டது. தமிழ் சினிமா எதிர்காலத்தில் நன்றாக பயன்படுத்திக்கொள்ள போகும் ஒரு நடிகர் என்று தோன்றுகிறது.

இப்படத்தில் floor manager ஆக டைரக்டர் ஏ.வெங்கடேஷூம் (ஏய், மலைமலை, சாக்லேட், குத்து, பகவதி..), ஜவுளிக்கடை உரிமையாளர் அண்ணாச்சியாக எழுத்தாளரும் தற்போதைய அதிமுக இலக்கிய அணி செயலாளருமாகிய பழ.கருப்பையாவும் நடித்திருக்கின்றனர். பொருத்தமான தேர்வுகள். இருவரும் பழுத்த அனுபவசாலிகள் என்பது அவர்களின் நடிப்பில் வெளிப்படுகிறது.

படத்தின் இசை பெரிதாக கவனத்தை கவரவில்லை. ஏற்கெனவே பிரபலமடைந்திருந்த ’அவள் அப்படி ஒன்றும்’ பாடல் மட்டுமே நினைவில் தங்குகிறது. வசனங்களில் ஜெயமோகன் சில இடங்களில் மட்டும் தென்படுகிறார். கடையில் இருப்பவர்கள் முழுக்கவே ‘எலேய்’ என்று நெல்லை தமிழ் பேசுவது சென்னையின் இயல்போடு ஒத்துவரவில்லை.

கதைக்களன் எனக்கு “The terminal" ஐ ஞாபகம் செய்கின்றது. ஒரு நிலையான களனை கையில் எடுத்துக்கொண்டு அலுப்பைத் தராமல் இரண்டு மணி நேரத்தில் சம்பவங்களை கோர்வைப்படுத்தி அதில் கதை சொல்லியிருப்பதைப்போல் மசாலத்தனங்கள் இல்லாமல் இங்கேயும் ஒரு தீவிரத்தன்மையுடன் கதைச் சொல்லும் சூழல் எப்போது வரும் என்பதுதான் மாற்றுப்படங்களை எதிர்நோக்கி இருக்கும் என்னைப் போன்றவர்களின் விடை தெரியா கேள்வி. அதற்கு விடை காண வசந்தபாலன் போன்ற இயக்குநர்களின் இதுபோன்ற முயற்சிகள் ஒரு வழி சமைத்ததாக வரலாறு பின்னால் ஒருநாளில் குறிக்கக் கூடும்.

0 comments:

Post a Comment