இரண்டு நாள்கள் முன்பு சன் டிவியின் நிஜம் நிகழ்ச்சியில் சுந்தரவன காடுகளை ஒட்டி வாழும் கிராம மக்களின் வாழக்கையைப் பற்றி காட்டிக் கொண்டிருந்தார்கள். சுந்தரவனக் காடுகளை பற்றி நாம் பாட புத்தகங்களில் படித்திருக்கிறோம். அவை மாங்குரோவ் மரங்களை அதிகளவில் கொண்டிருக்கும் சதுப்பு நிலக் காடுகள். கங்கை நதியின் கழிமுகப்பகுதியில் அமைந்துள்ளன.
இந்த காடுகளில்தான் அழிந்து வரும் இனமான வங்காளப் புலிகள் (Royal Bengal Tigers) வசிக்கின்றன. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை ஐம்பதுக்கும் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே இருந்த அவைகள், சுந்தரவன காடுகள் புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்ட பிறகு (Sundarban National Park)இருநூறு வரை உயர்ந்துள்ளன. இது ஓரளவு நல்ல எண்ணிக்கை என்றே சொல்லலாம்.
புலிகளின் வாழ்க்கைமுறை தனித்துவமானது. அது தனக்கென வகுத்துக்கொண்ட சுயஎல்லைகளை கொண்டது. ஒரு காட்டில் புலிகளின் எண்ணிக்கை அதிமாக இருந்தால் அதன் பல்லுயிரியம் (bio-ecology) இன்னும் பாழ்படாமல் ஆரோக்கியமாக உள்ளது என்று வேறெந்த ஆய்வுகளையும் மேற்கொள்ளும் முன்பே கூறிவிட முடியும். எப்படி என்பது தனியாக விரிவாக பேச வேண்டிய விசயம். சுவாரஸ்யமானதும் கூட. இங்கே சுந்தரவனக் காடுகளை ஒட்டி வாழும் மக்களைப்பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதால் அது வேறொரு நாள்.
காடுகளை ஒட்டி வாழும் மக்களுக்கு அக்காடுகளுக்கு உள்ளே சென்று விறகு, சுள்ளிகள் பொறுக்குவது, தேனெடுப்பது ஆகியவை முக்கிய தொழிலாக இருக்கும். குறிப்பாக தேனெடுப்பது நல்ல வருமானம் தரக்கூடியது. ஆனால் இம்மாதிரி புலிகள் வசிக்கும் காடுகளில் தேனெடுப்பது மிகவும் ஆபத்தான காரியம். ஏன் என்று சொல்ல வேண்டியதில்லை. இருந்தும் கூட்டமாக பலர் சேர்ந்து தீப்பந்தங்கள் கொளுத்திக்கொண்டு புலிகளின் கால் தடங்களை அவதானித்தபடி முன்னேறிச் செல்கிறார்கள்.
கூட்டமாக ஆட்கள் வந்தால் புலிகள் உடனடியாக தாக்காது. பதுங்கி மறைந்திருக்கும். ஏதாவது சந்தர்ப்பத்தில் கூட்டத்திலிருந்து யாராவது தனித்து நடமாடினால் மேலே பாய்ந்து விடும். பாய்வதையும் நாம் சட்டென்று உணர்ந்து விலகி ஓடி விட முடியாது. ஏனென்றால் புலிகள் எப்போதும் பின்னாலிருந்துதான் தாக்கும்.
இதனால் தேனெடுக்கச் செல்பவர்கள் என்ன செய்தார்கள் என்றால், பின்னாலும் முகம் இருக்கும்படி முகமூடி ஒன்றை அணிய ஆரம்பித்தார்கள். அதாவது முன்பக்கம் நிஜமுகம் இருக்கும். பின்னால் பார்த்தால் முகம் போன்ற முகமூடி இருக்கும். இதனால் புலிகள் குழம்பி போயின. சில காலங்களுக்கு புலிகளின் தாக்குதல் முற்றிலுமாக குறைந்திருந்தது. ஆனால் புத்திசாலி புலிகள் வெகுசீக்கிரமே அந்த தந்திரத்தை புரிந்துகொண்டு தாக்க ஆரம்பித்தன.
புலிகளிடம் தரையில் உள்ள ஆபத்தை விட அவைகளிடம் மரத்திலோ, தண்ணீரிலோ மாட்டிக் கொண்டால் ஏற்படும் ஆபத்து அதிகம். புலிகள் மரம் ஏறும் என்பது நமக்குத் தெரியும். ஆனால் தண்ணீரிலும் அவை வேகமாக நீந்தக்கூடியன. இதனால் அலையாத்தி காடுகளினூடே படகுகளில் செல்வோர் அடிக்கடி ஆபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். படகுகளை நோக்கி அவை நீந்தி வந்து தாக்குகின்றன. பசித்திருக்கும் புலியின் ஆவேச தாக்குதலின் முன்பு மனிதனின் ஜீவ மரணப் போராட்டம் மிகவும் பலஹீனமானது.
இப்படி காடுகளிலும், நீரிலும் புலியடித்து இறந்தவர்களின் எண்ணிக்கை ஒருபுறம் என்றால், ஊருக்குள் புகுந்து தாக்கும் அவைகளிடம் மாட்டிக்கொண்டு இறந்தோர், அங்கமிழந்தோர் வீட்டுக்கு ஒருவராவது இருப்பார்கள் என்றார் கிராமவாசி ஒருவர். பேசிக்கொண்டே பனியனை கழற்றி அல்லையை காண்பித்தார். பாதியை காணவில்லை. பின்னாலிருந்து தாக்கி அல்லையில் கடித்த புலியை கையில் இருந்த கத்தியால் முகத்தில் குத்தவும் அது விட்டு விட்டு ஓடி விட்டது என்றார். கையில் அப்போது கத்தி இருந்ததால் மட்டுமல்ல, இதயம் உறுதியாக இருந்ததினாலும் தான் தப்பித்திருக்கிறார். புலி தாக்கி உறுமும்போதே பலருக்கும் முதுகு தண்டு சில்லிட்டு பயத்தில் உயிர் போய்விடும்.
“புலிகளின் முகம் பார்க்கத்தான் அழகாக இருக்கிறது. ஆனால் அவைகள் இரையை(மனிதர்களை) தாக்கும்போது அது மிக கொடூரமாக, மிகுந்த அச்சமூட்டுவதாக மாறி குலை நடுங்கச் செய்யும். அதைக் கண்ட அதிர்ச்சியிலேயே நிலைகுலைந்து விடுவோம். அந்த சில நொடிகள் போதும் - எல்லாம் முடிந்துவிடும்” என்றார் ஒரு கிராமவாசி.
புலிகள் தங்களை தாக்கினாலும் ஊர் மக்கள் முடிந்தவரை அவற்றின் உயிருக்கு ஊறு செய்வதில்லை. வளைத்து பிடித்து மீண்டும் காட்டுக்குள் கொண்டு விடவே செய்கின்றனர். சரணாலய பகுதி என்பதால் கொல்வது குற்றம் என கருதலாம். அல்லது அது ஒரு மரபாகவும் இருக்கலாம். எதுவாகிலும் அவர்கள் ஆபத்துடனேயே வாழப் பழகிக் கொண்டு விட்டனர்.
*
இதுவரை நாம் பேசியது வனப்புலிகள் பற்றி. அவற்றினுடைய படைப்பின் இயல்பே இரையை அடித்து சாப்பிடுவதுதான். அவைகள் வாழும் பகுதியில் சென்று வாழ்வதும் நடமாடுவதும் அவைகளின் தவறல்ல; நம் தவறே. இதில் புலிகளை குற்றம் சொல்ல ஒன்றுமில்லை.
ஆனால் ஊருக்குள் சிலப் புலிகள் இருக்கின்றன. அவற்றின் இயல்பும் வேட்டையாடி உண்பதுதான். சில சமயம் வலுத்தவனுக்கு முதுகு சொறிந்தும், பல சமயங்களில் இளைத்தவனின் வயிற்றில் அடித்தும், எல்லா சமயங்களிலும் முகம் பார்க்க புன்னகை செய்து; ஆனால் முதுகுக்கு பின்னால் புறம் பேசியும்(character assassination) அவைகள் பிழைக்கின்றன. வனப்புலிகள் போலவே இவைகளும் பதுங்கி பின்னாலிருந்துதான் தாக்கும். அப்போது அவற்றின் நிஜமுகம் வெளிப்பட்டு, கோரமாக விகாரமடைந்து மேலும் மேலும் அஷ்டகோணலாவதை மனக்கண்ணில் காணமுடியும். மாறாக கண்ணை திறந்து பார்த்தால் அதன் மனிதமுகம் புன்னகைத்தபடி அப்பாவியென தோற்றம் காட்டும்.
அப்புலிகளின் கால்தடத்தை நாமும் அறிந்து நடந்துகொள்ள வேண்டுமானால் நாமும் அப்புலிகளின் இயல்பில் சிலவற்றை அறிந்து வைத்திருக்க வேண்டும். அதாவது களவும் கற்று மற என்னும் கணக்கில். கற்று மறந்து விடாமல் நினைவில் வைத்துக் கொண்டிருக்கவேண்டும். மேலும், அவற்றின் இயல்பை வெறும் உடல்மொழி மூலம் மட்டும் அறிந்துகொள்வது சுலபமல்ல. அவற்றின் நடத்தை மொழியை கூர்ந்து கவனித்து வர வேண்டும்.
அதற்காக மனித முகத்துடன் திரியும் எல்லோரையும் உஷாராக கவனித்து வருவது சாத்தியமா என்று கேட்கலாம். அம்மாதிரி அம்மாஞ்சிகளுக்கு இவ்வுலகத்தில் எள்ளளவும் இடமில்லை. அதையும் மீறி வாழ்பவர்கள் தாம் பிறவிப் பெருங்கடலை நீந்தாமல் நீந்தி தத்தளித்துக்கொண்டு இருக்கின்றனர். அது முடியாதவர்கள் பேசாமல் வனாந்தி ரப்பகுதியில் வசிக்கச் சென்று விடலாம். அங்கே வசிக்கும் வனப்புலிகள் குறைந்தபட்சம் நேர்மையானவை. பசித்தால் மட்டுமே இரை தேடும். அல்லது தன்வழியில் குறுக்கிட்டால் மட்டுமே தாக்கும்.
0 comments:
Post a Comment