இளமையில் மரணம்

Posted: Thursday, September 9, 2010 | Posted by no-nononsense | Labels: ,
புனரபி ஜனனம் புனரபி மரணம் - மீண்டும் மீண்டும் பிறப்பு மீண்டும் மீண்டும் இறப்பு (பஜகோவிந்ததில் ஆதிசங்கரர்). இது எல்லா நொடிகளிலும் யாராவது சிலருக்கு நடந்து கொண்டிருப்பதுதான். நமக்கு தெரிந்தவர்களுக்கு நிகழும்போது மட்டும் அதன் வலியை நிதானித்து உணர்கிறோம்.

முரளியின் ரசிகரல்லாத பலரையும்கூட அவருடைய மரணம் சோகம்கொள்ள வைத்திருப்பதை காணமுடிகிறது. காரணம் வயதுதான். 40-களில் இயற்கை எய்துவதை நம் ஆழ்மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. மரணம் குறித்து பொதுவில் நாம் போட்டு வைத்திருக்கும் மனக்கணக்குக்கு முரணான இந்த நிகழ்வைக் கண்டு துணுக்குறச் செய்கிறோம். இதுவே சாலை விபத்து போன்ற அகால மரணமாக இருந்திருந்தால்கூட அது இந்தளவுக்கு அதிர்ச்சியை தந்திருக்காது. ஆனால் முதுமைக்கு முன்பே உடல் தானாக இயக்கத்தை நிறுத்திக் கொண்டுள்ளது நம்மை சற்று பீதியடையச் செய்கிறது. நம்முடைய சொந்த மரணம் குறித்த அச்சத்தை நாமும் லேசாக மனதில் உணரும் தருணங்கள் இவை. 

மரணத்தை நெருக்கத்தில் காணும் எல்லா சமயங்களிலும் எதுதான் நிலை என்பன போன்ற தத்துவவிசாரங்களை வாய் தானாக முணுமுணுக்கிறது. சிந்தனையில் மனம் ஆழ்ந்து light at the end of the tunnel-ஆக இம்மானுட ஜென்மம் பற்றி ஏதோ தெளிவு பிறந்துவிட்டது போலகூட தோன்றுகிறது. ‘காதற்ற ஊசியும் வாராது காணும் கடைவழிக்கே’ போன்ற பட்டினத்தார் வாசகங்களெல்லாம் எண்ணத்தில் வந்து அலை மோதுகின்றன.

ஆனால் எல்லாம் சில தினங்களுக்கு மட்டுமே. 

துவும் கடந்து போய் லௌகீகம் வந்து மீண்டும் தழுவிக்கொள்கிறது. ஆஸ்தியும், அந்தஸ்தும், கௌரவமும் மீண்டும் பிரதானமாகிறது. வஞ்சினம், வெஞ்சினம், கோபம், குரோதம் மற்றும் இத்யாதிகளெல்லாம் மீண்டும் வந்து குடிகொள்கின்றன. அடுத்த மரணத்தை நெஞ்சில் உணரும் வரை விட்ட இடத்திலிருந்து பழைய ஆட்டம் மீண்டும் ஆரம்பிக்கிறது.

உண்மையில் இது ஒரு இயல்பான மனசுழற்சி. இதில் சரி என்றும் தவறு என்றும் எதுவுமில்லை. 

0 comments:

Post a Comment