இதுவரை: விக்டோரியா மகாராணி மற்றும் அவருக்கு அடுத்து பதவிக்கு வந்த ஏழாம் எட்வர்டு ஆகிய இருவரின் முடிசூட்டல் விழாக்களும் ‘டெல்லி தர்பார்’ என்ற பெயரில் டெல்லியில் நடைபெற்றன. ஆனால் இரண்டிலுமே சம்மந்தப்பட்ட அரசியும், அரசரும் கலந்து கொள்ளாமல் அவர்களின் பிரதிநிதிகளும், அதிகாரிகளும் மட்டுமே கலந்து கொண்டதாக அமைந்துவிட்டன. இனி..,

King George V, Emperor of India with Empress Mary
இவர் ரொம்ப அதிர்ஷ்டசாலி ராஜா. உண்மையில் இவருக்கு கிடைத்த இந்த சக்கரவர்த்தி பதவி, மற்றும் அதன் பட்டமகிஷியாகிய மேரி - இரண்டுமே இவரது அண்ணனுக்கு கிடைக்க வேண்டியது. மன்னருக்கான வாரிசுரிமைப் பட்டியலில் ஜார்ஜ் இரண்டாம் இடத்தில்தான் இருந்தார். இவரின் அண்ணன் இளவரசர் ஆல்பர்ட் விக்டர் தான் அடுத்து பதவியேற்க இருந்தார். மேலும் மிக அழகிய இளவரசியாகிய மேரியுடன் விக்டருக்கு நிச்சயமாகியும் இருந்தது. இருவருக்கும் காதல் வேறு.
கல்யாணத்துக்கு மூன்று மாதங்கள் இருந்தநிலையில் விக்டரை நிமோனியா காய்ச்சல் ரூபத்தில் மரணம் தழுவிக்கொண்டது. அவரது அஞ்சலி கூட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்த அண்ணனின் fiancée மேரியுடன் துக்கத்தை பங்கிட்டுக்கொள்ள வேண்டி அடிக்கடி சந்திக்க நேர்ந்ததில், வாழ்க்கையை பங்கிட்டுக்கொள்ளும் அளவுக்கு இருவரின் நெருக்கமும் வளர்ந்தது. பட்டத்து உரிமை, அண்ணனின் காதலி இரண்டுமே ஜார்ஜ் வசமானது.
ஜார்ஜ் இன்னொரு விதத்திலும் அதிர்ஷ்டசாலி... அவரைப்போல பெருமை வாய்ந்த பட்டாபிஷேகம் வேறு யாருக்கும் நடந்ததில்லை.
டெல்லி தர்பார் III: கண்டதுமில்லை கேட்டதுமில்லை
1910-ல் ஜார்ஜ் பிரிட்டிஷ் சக்கரவர்த்தியாக பதவியேற்றுக் கொண்ட பிறகு, அவருக்கு இந்திய சக்கரவர்த்தியாகவும் முடிசூட்ட முடிவு செய்யப்பட்டது. இவருக்கு முன்பு யாரும் அப்படி தனியாக முடிசூட்டிக் கொண்டதில்லை. ஆனால் இவர் செய்து கொள்ள விரும்பினார். அது நிமித்தம் மூன்றாவது டெல்லி தர்பார் ஏற்பாடாகியது. ஜார்ஜ் அவசியம் கலந்து கொள்வதாக அப்போதைய வைஸ்ராய் ஹார்டிங் பிரபுவிடம் உறுதியளித்து விட்டார்.
ஜார்ஜுக்கு இளவரசராக ஏற்கெனவே இந்தியா வந்த அனுபவம் உண்டு. அதன்போது அவர் மதராஸில் இருந்த போது ராஜா ரவிவர்மாவைகூட அழைத்து சந்தித்திருக்கிறார். பாரதியார் கூட அவரின் மதராஸ் வருகை குறித்து பாடல் பாடியுள்ளார். அதனால் இந்தியா அவருக்கு புதிதல்ல. இந்தியாவுக்கும் அவர் புதியவரல்ல.
சக்கரவர்த்தி ஜார்ஜ் இந்தியா வரப்போகிறார், வந்து டெல்லியில் இந்திய சக்கரவர்த்தியாக பதவி ஏற்றுக்கொள்ளப் போகிறார் என்னும் செய்தி தீயாக வேலை செய்தது. நாடே உற்சாக ஏற்பாடுகளில் திமிலோகப் பட்டது. டெல்லி தர்பாரை கண்ணார காண மக்கள் தங்களை ஆவலுடன் தயார் செய்து கொண்டனர்.
(சமீபத்தில் நடந்த உலக கோப்பை இறுதிப் போட்டியை காண இந்தியா ஆவலுடன் தன்னை எப்படி தயார் படுத்திக் கொண்டதோ, அது போல என்று சொல்லலாம்.)
ஏற்பாடுகள் தொடங்கின.
தர்பாருக்காக செங்கோட்டையில் கேலரி கட்டப்பட்டது. 12,000 சிறப்பு விருந்தினர்களும்(ராஜாக்கள், கவர்னர்கள்), 70,000 வரையிலான உள்ளூர் மற்றும் ஐரோப்பிய விருந்தினர்கள் அமர்ந்து பார்க்கும் விதமாக அது திட்டமிடப்பட்டது. விருந்தினர்கள் தங்குவதற்காக 40 சதுர கிலோ மீட்டரில் 233 கூடாரங்கள் அமைக்கப்பட்டன. டெல்லியை சுற்றி 64 கி.மீ.க்கு புதிய சாலைகள் போடப்பட்டன. 48 கி.மீ.க்கு தண்ணீர் குழாய்கள் பதியப்பட்டன (அக்காலத்தில் அது பெரிய விஷயம்). இதுபோல இன்னும் பல பிரம்மாண்ட ஏற்பாடுகள்..., சொல்லிக்கொண்டே போகலாம். (கிடைத்தால் அஹ்மெத் அலியின் ‘Twilight in Delhi’ நூல் படியுங்கள். அதில் விரிவாக இருக்கும்).
பேரரசரின் கிரீடம் அந்த காலத்தில் லண்டனில் மிகப்பிரபலமாக இருந்த Garrad & Co மூலமாக எட்டு வளைவுகளுடன் 6100 வைரங்கள், வைடூரியங்கள், பச்சைக் கற்கள் பதிக்கப்பட்டதாக தயாரிக்கப் பட்டது. செலவு அறுபதாயிரம் பவுண்ட். எடை சுமார் 1 கிலோ.
சக்கரவர்த்தினி மேரியின் கிரீடத்தை(tiara) பாட்டியாலாவின் ராணி விரும்பி பொறுப்பேற்று செய்து கொடுத்தார். ஒட்டு மொத்த இந்திய பெண்களின் அன்பின் அடையாளமாக மேதகு ராணிக்கு பரிசளிப்பதாகவும் அறிவித்தார்.
சொன்னபடி 1911, டிசம்பரில் பேரரசர் ஐந்தாம் ஜார்ஜ் முடிசூட்டிக் கொள்ள இந்தியா வந்தார்.
முறைப்படி 101 துப்பாக்கி குண்டுகள் முழங்கி மரியாதை செய்ய 1911, டிசம்பர் 12 -ல் டெல்லி தர்பார் தொடங்கியது. தர்பார் மண்டபத்தில் ராணி சகிதம் பேரரசர் வீற்றிருந்தார். (வீடியோ)

முதலில் ஹார்டிங் பிரபு தொடங்கி ஒவ்வொருவராக மன்னருக்கு மரியாதை செய்யத் துவங்கினர்.
யார் யாரெல்லாம் மரியாதை செய்தார்கள்?
அது எப்படிபட்ட மரியாதையாக இருந்தது?
பிரிட்டிஷ் இந்தியாவில் அப்போது இருவிதமான ஆட்சிமுறைகள் நிலவி வந்தன. பிரிட்டிஷாரின் நேரடி ஆட்சியில் இருந்த ரெஸிடென்ஸி இந்தியா (Residencies of British India). மற்றும், மஹாராஜாக்கள், நவாப்கள், ராணாக்கள் போன்றவர்களின் கீழ் இருந்த சுதேசி இந்திய நாடுகள் (Native Indian States). அப்படியாக மொத்தம் 562 சுதேசி சமஸ்தானங்களாக இருந்தன.
அத்தனை சமஸ்தானங்களின் ராஜாக்கள், ராணிக்கள், இளவரச, இளவரசிகள் என தோராயமாக கூட்டிப் பார்த்தால் ராஜ வம்சத்தினர் மட்டும் ஆயிரக்கணக்கானோர் எண்ணிக்கையில் வரும். அவர்கள் எல்லோரும் பார்வையாளராக இருக்க, அவர்களில் ராஜாக்கள் அல்லது அவர்களின் பிரதிநிதிகள் 562 பேர் வரிசையாக வந்து தர்பாரில் வீற்றிருக்கும் பிரிட்டிஷ் சக்கரவர்த்தியின் முன்னால் மண்டியிட்டு மரியாதை செலுத்திச் செல்லும் காட்சி எப்படி இருக்கும்?
ஒரு தேசத்தின் ராஜா என்றால் அவருக்கு தினம் தாள் பணிந்து மரியாதை செய்ய அவர் தர்பாரிலேயே தினம் ஆயிரம் பேர் வரப்போக இருப்பார்கள். ஆனால் நூற்றுக்கணக்கான தேசங்களின் ராஜாக்கள் ஒவ்வொருவராக ஒரு பேரரசருக்கு முன் மண்டியிட்டு, அவர் கையைப்பிடித்து முத்தமிட்டு (kissing of 'His Majesty's hand) வணங்கி மரியாதை செய்யும் காட்சி எவ்வளவு அபூர்வமானது! அது அந்த பேரரசருக்கு எவ்வளவு மதிப்பானது! அதுதான் மூன்றாம் டெல்லி தர்பாரில் நடந்தது. (வீடியோ)
காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரை பிரதேசம் வாரியாக (அதன் வரிசைக்கிரமம் கூட சொல்ல முடியும்) ராஜாக்கள், கவர்னர்களின் மரியாதை செலுத்தும் வைபவத்தைக் காணும் போது, பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் முன் மண்டியிட்டது அவர்களல்ல ஒட்டு மொத்த இந்தியாவின் மாட்சிமையும் என்பதை எடுத்துக்காட்டிய நிகழ்ச்சி அது.
இத்தனை மன்னர்கள் சேர்ந்து அடித்த ராயல் சல்யூட், ஒரு grand salutation, வேறு எந்த அரசருக்கும் எப்போதும் கிடைத்ததாக சரித்திரம் கண்டதும் இல்லை, கேட்டதும் இல்லை!
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொது மக்களின் எண்ணிக்கை ஐந்து லட்சம் என்று ஒரு கணக்கு சொல்கிறது.
உண்மையிலேயே இந்த ராசா ரொம்ப அதிர்ஷ்டக்காரர் தானே?
விஷயம் இதோடு முடிந்துவிட வில்லை. இவ்வளவு சிறப்பான பட்டாபிஷேக விழாவின் இறுதியில் ஹைலட்டாக ஏதாவது அறிவிப்பு வெளியிட்டால் தானே அதற்கே ஒரு அழகு! சக்கரவர்த்தி ஜார்ஜ் அவ்வாறாக இரண்டு அறிவிப்புகளை தன் வாயாலேயே வெளியிட்டார். அதைக் கேட்டதும் அங்கே கூடியிருந்த லட்சோப லட்ச மக்களும் ஆர்பரித்து சந்தோஷ கூச்சலிட்டனர். அவை,
1. இந்தியாவின் தலைநகர் இன்று முதல் கல்கத்தா அல்ல, இனி அது டெல்லி! தலைநகர் மாற்றப்படுகிறது.
2. 1905-ல் கர்சன் பிரபு காலத்தில் இரண்டாக பிரிக்கப்பட்டு, அதனால் மக்களின் கடும் அதிருப்திக்கு ஆளாகியிருந்த வங்க பிரிவினை திட்டம் உடனடியாக கைவிடப் படுகிறது. வங்கம் மீண்டும் ஒன்றிணைக்கப்படுகிறது.
இந்த இரண்டு அறிவிப்புகளும் கடைசி நேரம் வரை மிக மிக ரகசியமாக வைக்கப்பட்டிருந்தன. தான் அறிவிக்கும் வரை செய்தி வெளியே கசிந்துவிடக் கூடாது என்பதில் மன்னர் தனி கவனம் கொண்டிருந்தார். அதற்காக அந்த அறிவிப்பை அச்சு கோர்த்து அச்சிட்டுத் தந்தவர்கள் எல்லாம் மூன்று நாட்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். அதன்படியே, ஒரு இன்ப அதிர்ச்சி அறிவிப்பாக அவை அமைந்தன.

-0-
ஐந்தாம் ஜார்ஜுக்கும் ஜன கன மன பாடலுக்கும் ஏற்பட்ட தொடர்பும் எழுந்த சர்ச்சையும் — அடுத்தப் பகுதியில்...
0 comments:
Post a Comment