திண்ணைப் பேச்சு : ஜெ. பிரசாரம், இருவர் படம்

Posted: Saturday, April 9, 2011 | Posted by no-nononsense | Labels:
பல ஆண்டுகள் கழித்து தேர்தல் சமயத்தில் நாமக்கல்லில் இருக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதில் ஒரு சுரத்தும் இல்லை என்னும்படியாக தேர்தல் முஸ்தீபுகள் ஆர்பாட்டமில்லாமல் நடந்து வருகின்றன. திருமங்கலம் ஃபார்முலாவில் தேர்தல் வியூகம் அமைத்து வைத்திருந்த இருதரப்பும் தேர்தல் கமிசனின் கெடுபிடிகளில் சிக்கி தவித்துக் கொண்டுள்ளன. மக்கள் பரமஆறுதலாக உள்ளனர்.

தேர்தலை பொருத்தவரை நான் எதிர்பார்ப்பது நல்ல மேடைப் பேச்சாளர்களின் உரையை கேட்க வேண்டும் என்பது. துரதிர்ஷ்டவசமாக குசுபு, பாக்கியராசு, செந்தில், வையாபுரி போன்றவர்களே இதுவரை பிரச்சாரம் செய்ய வந்தனர். அவர்களை சென்று கேட்பதற்கு பதிலாக பழகிப்போன கஷ்டமாக நாதஸ்வரத்தையே குடும்பத்தாரோடு சேர்ந்து பார்த்து விடலாம் என்று என்னை வருத்திக் கொள்ளாமல் காத்துக் கொண்டேன்.

இவ்வாறிருந்த நிலையில் குறிப்பிடத்தக்க நிகழ்வாக இன்று ஜெயலலிதா நாமக்கல் வந்தார். ஆனாலும் அவர் உரையை கேட்க ஒரு ஆர்வமும் எனக்கு கிளர்ந்தெழவில்லை. ஸ்டீரியோடைப்பாக எல்லா ஊர்களிலும் பேசியதையே பேசிக்கொண்டு, ஒரு உற்சாகமும், சாமார்த்தியமும், நையாண்டியும், சிலேடையும் இல்லாமல் ரோபோத்தனமாக ‘அண்ணா நாமம் வாழ்க. புரட்சித்தலைவர் நாமம் வாழ்க’ என்று சொல்லி வலம் வரும் அவரை ஒரு சாதாரண பேச்சாளர் பட்டியலில் கூட என்னால் சேர்க்க இயலாது.

ஆனால் என் கருத்துக்கெல்லாம் வீட்டில் மதிப்பிருக்குமா அவர் வந்து பேசப்போகும் இடம் என் வீட்டிற்கும் எதிர்புறமுள்ள சாலையில்தான் எனும்போது. அதிலும் வெறும் நாலே எட்டில் எட்டிப் பிடிக்கும் தொலைவு. வீட்டுப்பெண்களும் அக்கம் பக்கமுள்ள அக்காமார்களும் காலை முதலே சென்று பார்க்க ஆயத்தமாகி சரியாக 1 மணிக்கே சென்று இடம்பிடிக்கவும் ஆரம்பித்து விட்டார்கள்.

வழக்கம் போல வண்டி வண்டியாக தொண்டர்கள் கொண்டு வந்து இறக்குமதி செய்யப்பட்டனர். ஊரெங்கும் ஒரே அலம்பல் சலம்பல். சாலையோர சந்து பொந்துகளெல்லாம் டாஸ்மாக்காகவும் கழிவறைகளாகவும் ஆகிப்போயின. அவர்களில் பெண்கள் தான் பாவம். அவசரத்துக்கு ஒதுங்க இடம் தேடி அலைந்த வண்ணம் இருந்தனர். ஒரு சிறிய மறைவிடம் கூட சேலையை முட்டி வரை உயர்த்த வைத்தது. அந்தளவில் அரசியல் தொண்டர் படை பெண்கள் இன்னும் சுடிதாருக்கு மாறாமல் இருப்பது ஒரு சௌகரியமான விஷயம் தான்.

1 மணி என்பது அறிவிக்கப்பட்ட நேரம். நான் சென்று சாலையில் நின்றது 2.50 மணிக்கு. அங்கே நடந்த தொண்டர்களின் தள்ளாட்டத்தையும், ஒரு குடிமகளின் குத்தாட்டத்தையும் கண்டு களித்தேன். உச்சி வெயிலில் சிலர் சில குழந்தைகளையும் கையோடு தொண்டர்கூலிவேலைக்கு அழைத்து வந்திருந்தது பார்க்க பரிதாபமாக இருந்தது. அவர்களின் தாகத்தை பாக்கெட் பாக்கெட்டாக தணித்து உதவியது பாக்கெட் வாட்டர். நேரம் 3.30 ஆனது. ஜெ. விரைவில் வந்துவிடக்கூடிய அறிகுறியை காணோம். அதற்கு மேல் எனக்கு பொறுமை இல்லை. குவிந்திருந்த கூட்டத்தை சில போட்டோக்கள் எடுத்துக் கொண்டு சோலியை பார்க்க நகர்ந்து விட்டேன்.
4 மணியளவில் தலைக்கு மேலே ஹெலிகாப்டர் பறந்தது. தொண்டர்கள் ஆர்பரிக்கும் சத்தமும் தொலைவில் கேட்டது. அதில் கலந்திருந்தது உள்ளூர் மக்களின் கரகோஷமும்தான் என்று என்னால் சொல்ல முடியும்.

நாமக்கல் தற்சமயம் தன் மேல் பச்சை வண்ணம் போர்த்தி அதிமுக ஆதரவில் திளைத்துக் கொண்டுள்ளது. அடுத்து 2015-ல் ஸ்டாலின் அபிமானத்தில் திளைக்கக்கூடும். 1990-ல் இருந்தே ஆட்சி மாறி மாறிதானே வந்து கொண்டுள்ளது. அந்த Anti-Incumbent Fever இப்போதைக்கு விட்டு விடாது.

-0-

நான் எழுதுவதாக ஒப்புக்கொண்டு நிலுவையிலுள்ள விஷயங்களை பட்டியலிட்டு பார்த்தேன். ஞாபகத்தில் உள்ளவரை சுமார் 10 என்று எண்ணிக்கையில் தேறுகிறது. அவையெல்லாம் அடுத்தடுத்த தினங்களில் ஒவ்வொன்றாக எழுதி முடித்துவிட இருக்கிறேன். பிரச்னை என்னவென்றால் எதையும் தீர்மானித்துக் கொண்டு எழுத அமர்வதில்லை. நேரம் கிடைக்கும் நேரத்தில் அமர்ந்து கைபோன போக்கில் எழுதுகிறேன். அதனால் அன்றைய டாபிக் எழுத்தாகி விடுகிறது. எல்லாம் ஒரு பயிற்சிக்காக.

படிப்பதும் எழுதுவதும் மட்டுமே வாழ்க்கையாகவும் தொழிலாகவும் வாய்க்கப் பெற்றோரை நினைத்து பொறாமைப் படுகிறேன். என்ன ஒரு சௌஜன்யமான வாழ்க்கை அது!

-0-

ஏதோ ஒரு லோக்கல் கேபிள் டிவியில் ‘இருவர்’ திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது. படம் வந்தபோது பார்த்தது. அப்போது பிடிக்கவில்லை. (இன்று பார்த்தவரையில் இப்போதும்கூட பிடிப்பதற்கான முகாந்திரம் தெரியவில்லை). அதற்கு பிறகுதான் திராவிட வரலாறின் அரிச்சுவடி பாடங்களை வாசிக்கத் துவங்கினேன். இன்று ஓரளவு விஷயஞானம் உண்டு என்னும் நிலையில் அப்படத்தை மீண்டும் முழுவதுமாக பார்க்க விரும்புகிறேன்.

மாலையில் வெளியே சுற்றித் திரிந்து அதன் சிடியை வாங்கிவிட முனைந்தேன். நாமக்கல் சிடி கடைகளில் குவியலாக குப்பைகூளமான படங்கள்தான் குவிந்து கிடக்கின்றன. ஒரு பிரபல டைரக்டரின் படங்கள், அல்லது கிளாஸிக் பட வரிசை என்று வரிசைக் கிரமமான ஒரு ஒழுங்கு எதுவும் கிடையாது. பழைய அனுபவங்களைப் போல இன்றைய தேடலும் அலுப்பையே அனுபவமாக்கித் தந்தது.

இந்தியாவைப் பொறுத்தவரை இணைய இணைப்புகள் இன்னும் வேகமாக வேண்டும். தேவைப்படும் திரைப்படங்களை பணம் செலுத்தி உடனடியாக இணையத்தில் வாங்கிக் கொள்ளும், அல்லது நேரடியாக பதிவிறக்கிக் கொள்ளும் வசதி வர வேண்டும். அதுதான் இம்மாதிரி குறைகளை நிவர்த்திச் செய்யும். அப்படி ஒரு காலம் வந்தால் இந்த சிடி, டிவிடி கடைகள் எல்லாம் தன்னால் காணாமல் போய்விடும்.

ஆனால் காலக் கொடுமையாக இன்னும் இங்கே இணைய இணைப்பு 512 kbps-க்கு மேலே செல்லவில்லை. என்னுடையதெல்லாம் வெறும் 256 kbps தான். உலக நாடுகளின் சராசரி இணைய வேகம் 1.5 Mbps. இந்தியாவிலோ அது வெறும் 772 kbps தான். இணைய வேகத்தில் உலக அளவில் இந்தியா 115 இடத்தில் பின்தங்கியுள்ளது.

இதிலுமா?

0 comments:

Post a Comment