தேசிய கட்சியாகிய பிஜேபி தனித்து போட்டியிட்டு மூன்றாவது வாய்ப்பாக வாக்காளன் முன்னால் நிற்கிறது.
இவர்கள் எல்லாம் அறிந்த முகங்கள்.
ஒரு புதிய முகமாக ஒரு ஜாதிக்கட்சி இந்தத் தேர்தலில் மற்ற பெரிய கட்சிகளுக்கு இணையாக எல்லா தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி, பெரிய பெரிய விளம்பரங்களாக செய்திதாள்களில் தந்து கவனத்தை ஈர்த்து வருவதை கவனித்திருக்கலாம். அதுதான் இந்திய ஜனநாயக கட்சி (http://ijkparty.org/). IJK என்று சுருக்கமாக அழைத்துக் கொள்கிறார்கள்.
இருக்கும் எல்லா ஜாதிகளின் சங்கங்களும் தங்களை அரசியல் கட்சிகளாக பதிவு செய்து கொண்டு ஒவ்வொருவராக அரசியல் களம் இறங்கி வருகிறார்கள். அந்த வரிசையில் புதிய உதயம் இந்த ஐஜேகே. பார்க்கவ குல சங்கத்தின் அரசியல் அவதாரம். இவர்களை உடையார்கள் என்று சொன்னால் எளிதில் புரியும். இவர்களின் உட்பிரிவுகள் - மூப்பனார், நயினார்.
இப்போது இந்தக் கட்சியை துவக்கி இருப்பவர் பாரி வேந்தர் என்று தன்னை அழைத்துக் கொள்ளும் பச்சமுத்து. பச்சமுத்து என்னும் பெயர் அவ்வளவு சிலாக்கியமாக இல்லை என்பதால் பாரிவேந்தர் என்று அழைத்துக் கொள்கிறார் போலுள்ளது. இந்த காலத்தில் ஒரு கட்சியை நிறுவி ஒரு பொது தேர்தலில் மற்ற பழம் தின்று கொட்டை போட்ட பெரிய கட்சிகளுக்கு இணையாக எல்லா தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துவது என்பது லேசுபட்ட காரியமல்ல. அதற்கு பெரும் முதலீடுகள் தேவைப்படும். அதற்கான நிதி ஆதாரம் பச்சமுத்துவிடம் கொட்டிக் கிடக்கிறது. பச்சமுத்து தான் சென்னை, திருச்சி, டெல்லியில் கல்விச் சேவை(!) செய்து வரும் SRM பல்கலை கழகங்களின் வேந்தர். அதாவது முதலாளி.
கருப்பை வெள்ளையாக்கிக் கொள்வதுடன் தன்னுடைய ஜாதியின் தனிப்பெரும் தலைவராகவும், தமிழகம் முழுவதும் பரவி இருக்கும் உடையார்களின் அரசியல் முகமாகவும், அடுத்த தேர்தலில் தவிர்க்க முடியாத சக்தியாகவும் உருவெடுக்க பெரும் பணம் வாரியிறைத்துக் கொண்டிருக்கிறார் பச்சமுத்து. நிச்சயம் அவர்களுடைய ஜாதிகளின் ஓட்டுக்களை அவர்கள் கணிசமாக சேகரம் செய்து கொள்வார்கள் என்று நம்பலாம்.
காரணம், மக்களிடையே இருக்கும் ஜாதிப் பற்று. ‘நம்ம ஜாதிக்காரன் நிக்கறான்பா. அவனுக்கு போடாம யாருக்கு போட. ஓட்டு கம்மியா போயி டெபாஸிட் போச்சின்னா ஜாதி மானம்ல போவும்’ என்று என் ஜாதிக்காரர்கள் பேசுவதை நான் அனுபவப்பட்டிருக்கிறேன். ‘இததன நாள் எவன் எவனுக்கோ போட்டோம்.. நம்ம ஜாதிக்காரனும்தான் பொழச்சிட்டு போகட்டுமே’ என்பதும் ஒரு பொது கருத்து. இது எல்லா ஜாதி மக்களிடமும் இருக்கும் ஒரு சுயஜாதி அபிமானம். அதைத்தான் பச்சமுத்து போன்றவர்கள் தங்கள் அரசியல் அபிலாஷைகளுக்கு அனுகூலமாக்கிக் கொள்கிறார்கள்.
தலித் அரசியல் என்பது நீண்ட காலமாக அரசியல் களனில் ஓங்கி ஒலிக்கும் குரல். அதன் நியாயங்கள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவை. ஒடுக்கப்பட்ட இனத்தின் அரசியல் முக்கியத்துவம் ஒரு சமூகவியல் கட்டாயமும் கூட. ஆனால் பொருளாதார நலன்களில் வலுவான இடத்தில் இருக்கும் மேல்ஜாதி அமைப்புகளும் ஒடுக்கப்பட்ட இனங்களின் கோரிக்கைக்கு இணையான குரல்களை எழுப்பி அரசியலில் குதித்திருப்பதன் பின்னால் இருப்பது அதன் பெருமுதலாளிகளின் சுயநல அரசியலே என்பது அந்தந்த ஜாதியின் நிறுவனர்களையும் தலைவர்களையும் பார்த்தாலே புரியும். அவர்களை ஆதரிப்பவர்களும் சிறுமுதலாளிகளாகவே இருப்பதைக் காணலாம்.
பா.ம.க.,வில் ஆரம்பித்து சென்ற சில தேர்தல்கள் வரை தேவர், கவுண்டர்கள், செட்டியார் என்று வரிசையாக ஜாதி சங்கங்கள் அரசியல் கட்சிகளாகி வரும் நிலையில் அடுத்து எந்த பெரிய ஜாதி தங்கள் இனத்தை காக்க பத்து அம்ச கோரிக்கைகளுடன் அரசியலில் குதிக்கப் போகிறது என்பது அதிலுள்ள பெரும் பணக்காரர்களை பொறுத்தது. சாமானியனுக்கு ஜாதியை விட கவலைப்பட வேறு பல அன்றாட வயிற்றுப்பாடுகள் இருக்கின்றன.
0 comments:
Post a Comment