சடங்குகள் என்பன மனிதன் வாழ்வில் தொன்று தொட்டு இருந்து வரும் மரபு சார்ந்த ஒரு நடைமுறை வழக்கம். பெரும்பாலும் சமய நம்பிக்கைகள் அதற்கு காரணமாக இருக்கின்றன. இனம், மதம், கலாச்சாரங்களைப் பொறுத்து சடங்குகள் பலவிதமான மாறுபட்ட வழக்கங்களை கொண்டிருக்கின்றன. சமயங்களுள் சடங்குகள் இல்லாத சமயம் என்று ஒன்று இருக்கவியலுமா என்று எனக்குத் தோன்றுவதுண்டு. ஒரு நம்பிக்கை, மதமாக பரிணாம வளர்ச்சி காண்பதில் சடங்குகளின் பங்கு மகத்தானது. மதங்களை சடங்குகள் நிறுவனமயமாக்கி நிலைபெறச் செய்கின்றன.
சடங்குகள் நாம் நன்கறிந்த மதமான இந்து மதத்தின் ஆதாரமான ஒரு விஷயம். எல்லாவற்றுக்கும் அதில் சடங்குகள் உண்டு. பின்பற்றப்படும் சடங்குகள் போதாதென்றால், நாமாக நம் மெய்யுணர்வின் பால் உந்தப்பட்டு இஷ்டப்படியாக ஒரு சடங்கை உருவாக்கிக் கொள்ளலாம். உருவாக்க மட்டுமன்றி சடங்குகளை மறுதலிப்பதற்கும்கூட அதில் அனுமதியுண்டு என்பதுதான் அதன் தனித்துவமான அம்சம். ஆனால் இந்த வசதி எல்லா மதங்களிலும் கிடையாது. சில மதங்கள் தங்கள் மாந்தர்களின் வாழ்வியலை சட்டங்கள் கொண்டு வரையறுத்து வைத்துள்ளன. அதை மீறி நடந்து கொள்வது தன்னை அதிலிருந்து சுய பிரஷ்டம் செய்துகொள்வதற்கு சமமானதாக கருதப்படுகிறது.
ஆனால் சில மதங்களில், இனக் குழுக்களில் கட்டாயமாக்கப்பட்டிருக்கும் மதச் சடங்குகள் - அவற்றை எதிர்கொள்பவர்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சிகரமானவை அல்ல. இஸ்லாம் உள்ளிட்ட ஆப்ரகாமிய மதங்களில் புனித சடங்காக பின்பற்றப்படும் சுன்னத் (அ) விருத்த சேதனம் அந்த வகையிலானது.
சுன்னத் என்றால் நமக்கு அதன் செய்முறை தெரியும். பூணூல் கல்யாணம் போலவே அதற்கும் ‘... கல்யாணம்’ என்ற கொண்டாட்டமான சொல் வழக்கமும் உண்டு. நாம் அறிந்தவரை ஆண்களுடைய பிறப்புறுப்பின் முன்தோல் நீக்கப்படும். சில நாட்களில் புண் ஆறிய பிறகு பெரிதாக எந்தவித மாறுதலும் இன்றி வாழ்க்கை சகஜநிலைக்குத் திரும்பி விடும். இது ஆண்களுக்கு. இதுவே பெண்களுக்குச் செய்யப்படும் சுன்னத்தில்...?
-0-
முதலில் பெண்களுக்கு சுன்னத்தா என்னும் வியப்பை விலக்கி வைக்க சில விஷயங்களை அறிந்துகொள்ள வேண்டியுள்ளது. இஸ்லாமில் ஆண்களுக்கு விருத்த சேதனம் செய்யப்படுவது போலவே பெண்களுக்கும் செய்யப்படும் ஒரு மத ரீதியான நடைமுறை வழக்கம் (religious practice) உண்டு. பெரும்பாலும் அராபியர்களிடமும், ஆப்பிரிக்க நாடுகளின் இஸ்லாமிய பழங்குடிகளிடையேயும் அது வழக்கத்திலுள்ளது. சிறுமிகளாக இருக்கும் பெண்கள் ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்து விட்டால் அவர்களை ஊர் பொதுவில் அதற்கென இருக்கும் கலாச்சார குழுவினரிடம் கொண்டு விட்டு விடுவார்கள். அவர்கள் அந்தப் பெண்களுக்கு விருத்த சேதனம் செய்து (female circumcision), புண் ஆறும் வரை ஒரு கொட்டிலில் விட்டு விடுவார்கள். அதை அவர்கள் ‘புனிதப்படுத்தல்’ (purification) என்று அழைக்கிறார்கள். அப்படி விருத்த சேதனம் செய்துகொள்ளும் பெண்களுக்கே திருமணம் நடைபெறும். செய்துகொள்ளாதப் பெண்களை மணமாக தகுதியற்றவர்கள் (bilakoro) என்று கூறி விலக்கி வைத்து விடுவார்கள். Bilakoro என்றால் புனிதமடையாதவள் என்று அர்த்தம்.
அது ஒருபுறம் இருக்க, ஆண்களுக்கு விருத்த சேதனம் எப்படி செய்யப்படும் என்று ஒருவாறு அறிவோம். ஆனால், பெண்களுக்கு அதை எப்படி செய்வார்கள்?
படத்திலுள்ளது போல மல்லாக்க படுக்க வைத்து, இருவர் அழுத்திப் பிடித்துக் கொள்ள, பிளேடு, கத்தி, அல்லது கூரான கண்ணாடி சில்லு போன்றவைகளைக் கொண்டு பெண்ணுறுப்பின் மேல் தோல்கள் முழுவதையும் கிளிடோரியஸ் உட்பட வெட்டி எடுத்துவிட்டு தையல் போட்டு விடுவார்கள். முடிவில், சிறுநீர் துளை, கீழ்புற துளை இரண்டு மட்டுமே மீதம் இருக்கும்.
அதாவது பெண்களுக்கு பாலுணர்ச்சியை தூண்டும் மேல்புறத் தோலுறுப்பு சுத்தமாக அகற்றப்பட்டு விடும். விளைவாக, அவர்களால் என்றுமே உடலுறவு இன்பத்தை துய்க்க முடியாது. அதாவது அவர்களுக்கு என்றுமே orgasm கிடையாது. உடலில் அதுவும் மற்றொரு உறுப்பாக இருக்கும். அவர்களின் கணவனுடைய பாலியல் தேவைகளை நிறைவு செய்யும் ஒரு துளையாக பயன்பட்டுக் கொண்டிருக்கும்.
‘அந்த சடங்கை செய்துகொள்ளா விட்டால் பெண்கள் பாலுணர்ச்சியால் தூண்டப்பட்டு கணவனுக்கு துரோகம் இழைத்துவிட வாய்ப்புண்டு. அவர்களுடைய பாலுணர்வு உறுப்புகளை சிதைத்து விடுவதன் மூலம் அவள் கணவனிடம் யோக்கியமாக இருப்பாள்’ - என்பது அவர்களின் நம்பிக்கை.
அதனை செய்து கொள்வதால் ஏற்படும் பாதிப்பு பாலுணர்வு இழப்பு என்பதுடன் மட்டும் முடிந்து விடுவதில்லை. முறையற்ற இரண சிகிச்சையினால் ஆறாத ரணங்கள் ஏற்பட்டு நாள்பட்ட வலியையும் வேதனையையும் கொடுத்துவரும். சரியாக தைக்கப்படாமல் மிகச் சிறியதாக மாறிவிடும் சிறுநீர் துளைகளில் எவ்வளவு அவசரம் என்றாலும் சிறுநீர் சொட்டு சொட்டாக மட்டுமே வெளியாகி கடும் வலியை ஏற்படுத்தும். இது போன்ற நீண்ட கால பாதிப்புகள் பல உண்டு.
-0-
மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகலைச் சேர்ந்த Moolaade என்னும் படத்தை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது. அது ஏற்படுத்திய தாக்கமே மேற்சொன்ன female circumcision பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளும் ஆவலை தந்தது.
அது செனகலில் உள்ளடங்கி அமைந்திருக்கும் ஒரு குக்கிராமம். ஒரே வளாகத்தில் அமைந்துள்ள மூன்று வீடுகளில் ஒரே நபருக்கு வாழ்க்கைப்பட்ட மூன்று மனைவிகள் வசிக்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கை முறையில் கணவனுக்கு எத்தனை தாரங்கள் இருந்தாலும், அனைவரும் அவனுடைய சொல்லுக்கு கட்டுப்பட்டு, அடுத்ததாக தங்களுடைய மூத்தாளுக்கு கட்டுப்பட்டு ஒற்றுமையாக வாழ்கிறார்கள். அவர்களுள் இரண்டாம் தாரமாக இருப்பவளே கதையின் நாயகி ‘கோலி’.
ஒருநாள் கோலி வீட்டில் மும்முரமாக வேலையில் இருக்கும் போது நான்கு பெண் குழந்தைகள் அவள் பெயரை அழைத்த வண்ணம் ஓடி வந்து அவள் காலடியில் விழுந்து உதவி கேட்கிறார்கள். அவர்களின் வயது சராசரியாக ஐந்து முதல் ஏழு இருக்கலாம். அவர்களின் இடுப்புகளை மறைத்திருக்கும் அரையாடைகளை காணும் போதே தெரிகிறது அவர்களெல்லாம் உறுப்பை வெட்டித்தள்ளும் சுன்னத் புனித சடங்கிலிருந்து பாதியில் தப்பி வந்தவர்கள் என்பது. அவர்களின் நிலையறிந்து கோலி அவர்களுக்கு அடைக்கலம் தருகிறாள்.
அவர்கள் ஏன் கோலியிடம் அடைக்கலம் தேடி வந்தார்கள் என்பதற்கும் ஒரு பின்னணி இருக்கிறது. கோலி ஏழு ஆண்டுகளுக்கு முன்னால் தன்னுடைய மகளுக்கு சுன்னத் செய்ய மறுத்துவிட்டாள். அது ஒன்றும் அவ்வளவு இலகுவான காரியமல்ல. ஆனாலும் சாதித்திருந்தாள். எதிர்ப்புகளுக்கு அஞ்சவில்லை. அதற்கு முன் அப்படி எந்த பெண்ணும் மத சடங்கை நிராகரித்து கலகம் செய்ததை அந்த ஊர் கேள்விப்பட்டிருக்கவும் இல்லை. அதனால்தான் புனித சடங்கு நடக்கும் கொட்டிலில் இருந்து தப்பிப்பது என்று முடிவு செய்ததும் அந்த சிறுமிகளுக்கு ஞாபகம் வந்த ஒரே இடம் கோலியின் இல்லம் தான். அதை பின்னர் அவள் ஆற அமர விசாரிக்கும் போது அந்த சிறுமிகளே சொல்கிறார்கள்.
சிறுமிகளுக்கு தான் அடைக்கலம் தந்தது விடிந்ததும் ஊரில் எந்த மாதிரி விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை கோலி அறிவாள். அதனால் அந்த ஊரில் பாரம்பரியமாக வழக்கத்தில் இருக்கும் 'moolaade' என்னும் அடைக்கல பிரகடனத்தை வெளியிடுகிறாள். அது ஒரு மந்திர சக்தி கொண்ட பிரகடனம் என்பது ஐதீகம். அதன்படி அவள் வீட்டு வாயிலை மறைத்து குறிப்பிட்ட வண்ணங்கள் கொண்ட கயிறு கட்டப்படும். அதைத்தாண்டி அந்த சிறுமிகளை கவர்வதற்காக யாரும் உள்ளே வரக்கூடாது. அப்படி வர முற்படுபவர்கள் ரத்தம் கக்கி சாவார்கள் என்பது அவர்களின் அமானுஷ்ய நம்பிக்கை. அதனால் அச்சிறுமிகள் நாடி வந்த பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.
ஆனால், எதிர்பார்த்தப்படி ஊரில் அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்துகிறது.
கோலி, புனித சடங்கு கொட்டிலை விட்டுத் தப்பிச் சென்ற நான்கு குழந்தைகளுக்கு Moolaade தந்துள்ளச் செயல் ஊரில் பரபரப்பை ஏற்படுத்துகிறது. ஊர்த்தலைவனின் தலைமையில் பஞ்சாயத்து கூடி விவாதிக்கிறது. முடிவில் வெளியூர் சென்றுள்ள அவள் கணவன் வந்ததும், அவனைக் கொண்டு கோலியை வழிக்கு கொண்டு வர முடிவு செய்கின்றனர். அதற்கு மும் முக்கியமாக ஒரு பொருளை ஊர் முழுவதும் தடை செய்கின்றனர். அது, ரேடியோ!
-0-
0 comments:
Post a Comment