கடைசி பரிட்சை முடிந்ததும் சினிமா போகவேண்டும் என்று முன்பே பேசி வைத்திருந்தோம் என்று நினைக்கிறேன். தினமும் பள்ளியிலேயே படுத்துப் படித்த பசங்க யார் யாரென்று ஞாபகப்படுத்திப் பார்த்தால் அன்று யார் யார் சினிமா போனோம் என்று தெரிந்து விடும்.
பாட்டை யார் பாடியது என்று விவாதித்தது ஞாபகம் இல்லை, ஆனால் எஸ்.பி.பி.யை நகலெடுத்து இருந்த மனோவின் குரலை வியந்து கேட்டது ஞாபகம் இருக்கிறது. அப்புறம் நாள் செல்ல செல்ல இரண்டு குரல்களுக்கும் இடையேயான வித்தியாசததை அறிந்துணர செவிப்புலன்கள் பழகிக் கொண்டுவிட்டன.
தேர்வை முடித்துக்கொண்டு நான் பார்த்தது அந்தப் படம் என்றால், ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வுக்கு ஒருநாள் இருக்கும் நிலையில் எந்தக் கவலையும் இல்லாமல் ஒரு படம் சென்று பார்த்தேன்: புது மனிதன். பார்க்க அப்படத்தைத் தேர்வு செய்ததிலும், அழைத்துச் சென்றதிலும் எனக்கு கூட்டாளி - போதுப்பட்டி இளங்கோ. அவன் அப்போது சத்யராஜின் தீவிர ரசிகன். இப்போது எப்படி என்று கேட்பது சரியாக இருக்காது. ஆனாலும் இரண்டு வருடங்களுக்கும் முன்பு திருச்சியிலிருந்து ஊர் திரும்பும்போது பேருந்தில் சந்தித்தபோது, பழைய சம்பவங்களை நினைவுபடுத்திக் கேட்டேன். ஹிஹி என்று சிரித்தான். என்ன அர்த்தம் என்று ஆராய விரும்பவில்லை.
-0-
பத்தாம் வகுப்பு தேர்வுகள் முடிந்து கிடைத்த இரண்டு மாத விடுமுறையும் அவ்வளவு கொண்டாட்டமானவை. கவலைகள் ஏதுமின்றி கால் போன போக்கில் மகிழ்ந்து விளையாடித் திரிந்தவை. புதிய நண்பர்களை எனக்கு அறிமுகம் செய்தவை. அந்த இன்பகரமான தருணங்களை எல்லாம் நினைத்தால் நெஞ்சம் விம்மும்.
அதற்குப் பிறகு காலம் காட்டாற்று போக்கான தன் வழியில் தக்கையென இழுத்துச் சென்று பல மூலைகளிலும் முகடுகளிலும் முட்டவைத்து அனுபவ புத்தியை அளிக்க பல வகைகளிலும் அலைக்கழித்து முடிவில் கரை ஒதுக்கி விட்டது. இன்றைய என் மனநிலையின் முதிர்ச்சியையும் இருபது வருடங்களுக்கு முன்பிருந்த மனநிலையின் சிறுபிள்ளைத்தனத்தையும் ஒப்பிட்டு பார்த்தால் அந்த சிறுபிள்ளைத்தனம் சிலாக்கியமானது என்பதை மறுநொடியே சொல்லிவிடலாம்.
அதில் வாழ்க்கையை அந்த நாளின் அந்த நொடியின் இன்பத்திற்காக செலவிட்ட ஒரு சௌகரியம்; அதிஇன்பம் இருந்தது. குடும்பம், எதிர்காலம், நிதி ஆதாரம், நில உடமை குறித்த கவலைகள் கிஞ்சித்தும் இல்லாமல் சிறகடித்த பறவைகளாய் இப்பிரபஞ்ச பேரின்ப பெருவெளியின் சிறுபுள்ளிகளாய் சுற்றித் திரிந்தோம். அந்தக் கள்ளம், கபடு, சூது, துரோகம், முதுகு சொறிதல், வஞ்சம் இல்லாத ஒரு உலகம் இனி திரும்பக் கிடைக்கப் போவதில்லை. அதன் ஞாபகம் வரும்போதெல்லாம் இருக்கும் உலகத்தில் பெருமூச்சுகள் விட்டு நாள் கடத்த வேண்டியதுதான். காலம் கறந்த பால் இனி மடி புகாது!
0 comments:
Post a Comment