நான் முன்பு எழுதியிருந்த அண்ணமார் சாமி கதை என்பது கொங்கு நாட்டில் வழங்கப் பெறுவது. அண்ணன்கள் இருவரைப் பற்றி தங்கையின் நோக்கில் இருந்து சொல்லப்படும் கதையது.
அதுபோல் நல்ல தங்காள் கதை என்றும் ஒன்று உண்டு. விருதுநகர் பிரதேசத்தை கதைக்களமாக கொண்ட அதுவும் அண்ணன் - தங்கை கதைதான். ஆனால் படிக்கப் படிக்க நெஞ்சம் நெக்குருகி, கண்கள் நீரை தாரைத் தாரையாக சொரிய, தொண்டையில் பந்தொன்று வந்தடைத்து தேம்ப வைக்கும் அளவுக்கு துன்பகரமான கதை. கல்யாணம் செய்து கொடுத்து வறுமையில் வாடி வதங்கும் பெண்களை ‘இப்படி நல்ல தங்கா மாதிரி ஆயிட்டியே..’ என்று பழம்பெரிசுகள் வருத்தப்பட்டுக் கொள்வதை இன்றும் காணலாம்.
எனக்கு சின்ன வயதாக இருக்கும்போது என்னுடைய ஆயாவிடம் (அம்மாவின் அம்மா) கதை கேட்டு வளரும் பெரும் பாக்கியம் கிடைத்தது. அவர் எனக்கு சொன்ன பல கதைகளில் நல்ல தங்காள் கதையும் ஒன்று. அப்போது அது அவ்வளவாக புரியவில்லை. ஆனால் சில வருடங்களுக்கு முன்பு என் ஆயா மறைந்த பின்னர் ஒருநாள் என் அம்மாவை மீண்டும் சொல்லச் சொல்லிக் கேட்டேன். அதை தனக்கேயுரிய பேச்சுத் தமிழில் காட்சி விவரிப்புகளுடன், வசனங்களுடன் அவர் சொல்ல சொல்ல என்னையறியாமல் கண்ணில் நீர் திரள துயரத்தில் ஆழ்ந்தேன். என் அம்மாவிடம் இப்படி ஒரு கதை சொல்லும் திறன் இருப்பதையும் அப்போதே அறிந்தேன்.
நல்ல தங்காள் கதையை அறிய விரும்பினால் சொல்கிறேன்.
-0-
சமீபத்தில் ஒரு டிவி நிகழ்ச்சியில் எஸ்.ராமகிருஷ்ணன் குழந்தைகளுக்கு கதை சொல்வதையும், கதைகள் கேட்டு அவர்கள் வளர்வதையும் பற்றி அருமையான உரையாற்றினார். குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களாகிய நாமும் கதைகளுடன் ஏன் உறவாடி வர வேண்டும் என்பது குறித்தும் அவர் உரையில் விரிவான தர்க்கம் இருந்தது. அதன் சுட்டியை நான் இங்கே பகிர்ந்து கொண்டிருந்ததாக கூட ஞாபகம்.
நாம் பல நல்ல விஷயங்களை கண நேர கைத்தட்டலுடன் கைவிட்டு விடுகிறோம். வாழ்க்கை வரை அவற்றை எடுத்துச் செல்வதில்லை. அதற்கான சிறிய முயற்சியையும் கூட தொடங்குவதில்லை. ஆனால், மற்ற விஷயங்களை போல அசுவாரசியமானதல்ல கதை வாசிப்பதும், அந்த வாசிப்பு அனுபவத்தை பகிர்ந்து கொள்வதும். உண்மையில் இலக்கிய ரசனை அங்கேதான் துளிர்க்கிறது. அதை அறியாமல் இலக்கியம் படிக்க எங்கே தொடங்குவது என்று பலரையும் யோசனை கேட்டு காலத்தை வீணடிக்கிறோம். படிக்க நேரமில்லை என்று பெரிதும் அலுத்துக் கொள்கிறோம். எங்கே வேண்டுமானாலும் தொடங்கலாம். எப்போது வேண்டுமானாலும் படிக்கலாம்.
நம் வாழ்க்கையில் நம்மை நாமே முதலில் ஏமாற்றிக்கொண்டு பிறகு மற்றவர்களையும் ஏமாற்றும் வண்ணம் தொடர்ந்து சொல்லி வரும் ஒரு பொய் - நேரமில்லை என்பது.
மிகவும் பிஸியான ஒரு மனிதரை நான் அறிவேன். அவர் ஒரு ஐ.டி. கம்பெனியில் மிக துடிப்பான அதிகாரியாக பணியாற்றிக் கொண்டே நான்கு பத்திரிக்கைகளில் தொடர் எழுதி வருகிறார். அது ஒன்றும் சாதாரண காரியமல்ல. நூல்களும் இடையிடையே எழுதுகிறார். அதோடு, தொடர்ந்து இணையத்தில் எழுதப்படும் முக்கியமான எல்லா எழுத்துக்களையும் உடனுக்குடன் படித்தும் விடுகிறார். படித்ததைப் பற்றி ட்விட்டரில் சிறு விவாதங்களும் நடப்பதுண்டு. ஆனால் ஒருநாளும் நேரம் போதவில்லை என்று அலுத்துக் கொண்டதில்லை. எப்படி முடிகிறது என்று கேட்டால் ‘டைம் மேனேஜ்மெண்ட்’ என்று சொல்லி புன்னகைப்பார். அவர் எனக்கு பெரிய முன்மாதிரியாக இருக்கிறார். அவரால் நான் சில காலமாக அலுத்துக் கொள்வதை கைவிட்டு விட்டேன்.
இப்படி பல துறைகளிலும் நமக்கான முன்மாதிரிகளை நாம் கண்டறிந்து கொள்ள வேண்டும். அது ஒரு inspiration ஆக நமக்கு இருக்கும் என்பது எனது சுய அனுபவம்.
-0-
சங்கப் பாடல்களில் தமிழர்களின் வாழ்வாக சித்தரிக்கப்படும் சடங்குகளும், நம்பிக்கைகளும் சுவாரசியமானவை. ’ஆ! தமிழர் பண்பாடு’ என்று இன்று நாம் தோள் தட்டி புஜம் முறுக்கி கலாச்சாரத்தை காக்க கத்தியை கையில் எடுப்பதற்கும் அன்றிருந்த தமிழ் கலாச்சாரத்திற்கும் சம்மந்தமில்லை.
நேற்று பழந்தமிழர் திருமண சடங்கு முறைகள் பற்றிய குறிப்புகளை வாசித்துக் கொண்டிருந்தேன். அதில் வரிசையாக பல சடங்குகளும் முடித்து இறுதியாக ’கட்டிலேற்றுதல்’ என்று ஒன்று வருகிறது. அதுதான் சாந்தி முகூர்த்தம் என்று இன்று சொல்கிறோமே, அது. அந்தக் காலத்தில் அது எப்படி இருந்தது என்பது படிக்க சுவாரசியமாக இருந்தது.
அதைப் பற்றி அடுத்த பகுதியில் தொடரலாம்.
0 comments:
Post a Comment