தண்டட்டி கருப்பாயி

Posted: Tuesday, December 22, 2009 | Posted by no-nononsense | Labels:
அந்திசாய இன்னும் நேரம் இருந்தது. இருந்தும் ஏனோ இன்று சீக்கிரமே இருட்டிவருவது போல ஒரு உணர்வு. மெல்ல கதவுக்கு வெளியே தலையை நீட்டியவன் மழை வருமா என்று அன்னாந்து வானம் பார்த்தேன். மனைவி, குழந்தை சகிதம் வெளியே செல்ல வேண்டியிருந்தது. செஞ்சாந்தை அள்ளி தெளித்தாற் போல சிவந்திருந்தது கீழ்வானம். இப்போதைக்கு தூறலுக்குகூட வாய்ப்பில்லை.

“மேல மட்டும் பாத்தா பத்தாது. அக்கம் பக்கமும் கழுத்த திருப்பி பாரு. அந்த கொள்ளி கண்ணு கெழவி கண்ணுல உழாமப் போனாலே எல்லாம் நல்லா நடக்கும்”

என்னடா இது இன்னும் ஆரம்பிக்கவில்லையே என்று நினைத்தேன். ஆரம்பித்துவிட்டது. நாங்கள் வெளியே செல்கிறோம் என்றாலே அம்மாவுக்கு அங்கங்க வெட்டிப் போட்டிருக்கும் பாதாள சாக்கடை குழிகளை விட எங்க தெரு கருப்பாயியின் விழிகளைப் பற்றித்தான் அதிக கவலை. ’என் ஊட்டு மேலயே எப்ப பாரு அவளுக்கு கண்ணு’ என்று அந்த ஆயாவை எப்பவும் வையும்.

காரணம் இல்லாமலும் இல்லை. எங்கள் வீட்டருகில் வசிக்கும் கருப்பாயி ஆயா அந்த தெருவுக்கே சட்டாம்பிள்ளை மாதிரி. காதில் தண்டட்டி ஆடியபடி பேசுவதால் அதற்கு ’தண்டட்டி ஆயா’ என்று பட்ட பெயர். யார் எங்கே போனாலும் அதுக்கு தெரிஞ்சே ஆகணும். நாம் சொல்லாவிட்டாலும் கேட்கவெல்லாம் வெட்கமேப் படாது. “அப்பறம்.. கெளம்பிட்டாப்லருக்கு” என்று அது இழுத்தாலே எல்லோரும் எதையாவது ஒரு காரணத்தை சொல்லிவிட்டு நகர்ந்துவிடுவார்கள். இல்லையென்றால் இன்னும் குறைந்த பட்சம் பத்து கேள்விக்காவது பதில் சொல்ல வேண்டியிருக்கும்.

இதைப் பார்த்தாலே அம்மாவுக்கு பற்றிக் கொண்டு வரும். இருந்தாலும் உறவுமுறை பெரிசுகளில் போனதுபோக இன்னும் எஞ்சி இருப்பது இது ஒன்றுதான் என்பதால் முகதாட்சண்யத்துக்காக காதுபட ஒன்றும் சொல்லாது.

எனக்கு கண்ணு வைக்கிறதுன்னா என்ன என்று இன்றுவரை புரிவதில்லை. வீட்டில் குழந்தை கொஞ்சம் சிணுங்கினாலும் கண்ணுபட்டு போச்சி என்று அம்மா கரித்துக் கொட்டி மிளகாய் சுத்திப் போடுவதைக் காணும்போது வேடிக்கையாக இருக்கும்.

வண்டியை வெளியே எடுத்து ஸ்டாண்ட் போட்டுவிட்டு தண்டட்டி ஆயா எப்போதும் இருக்கும் திண்ணையைப் பார்த்தேன். வெறிச்சோடிக் கிடந்தது. இதென்ன உலக அதிசயம் என்று மனதினுள் எண்ணியவாறே அம்மாவிடம் திரும்பி “எங்கம்மா ஆயாவ காணோம்?” என்றேன்.

“ஏன் இருந்து கண்ணு வெக்கறதுக்கா? கெளம்புங்க சீக்கிரம்” உறுமினாள் மனைவி.

கிளம்பிவிட்டேன். இப்படி நான் வெளியே கிளம்புவதைக் கண்டால் சில சமயம் “ராசா.. மணிகூண்டு பக்கம் போனா வெட வெடன்னு இருக்கறதா பாத்து ஒரு கெவுளி வாங்கியாடா’ என்று சொல்லி வெத்தலை வாங்க பணம் எடுத்து நீட்டியிருக்கும். மற்றவர்கள் வாங்கி வருவதில் அதற்கு திருப்தி இருந்ததில்லை. கடைவீதியை கடந்து போகும்போது எதற்கும் இருக்கட்டும் என்று ஒரு கவுளி வாங்கிக் கொண்டேன்.

சென்ற வேலை முடிந்து வீடு திரும்பும்போது மணி ஒன்பது ஆகிவிட்டிருந்தது. தெருவிளக்கு விட்டு விட்டு எரிந்தது கண்ணை உறுத்தியது. அரைகுறை தூக்கத்தில் இருந்த குழந்தையை பற்றிய நினைவில் தெருவை பராக்கு பார்க்காமல் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே சென்றுவிட்டேன்.

அடுத்த நாள் காலை வேலைக்குச் செல்லும்போது கவனித்தேன் - இன்னும் திண்ணை காலியாகவே இருந்தது. கடைசி நேரம்வரை நீட்டி நெளித்துவிட்டு பஸ் வர ஐந்து நிமிடமே இருக்கும்போதுதான் அரக்க பரக்க வீட்டை விட்டு ஓடுவது என் வழக்கம்.

“பொழுதோட போனானான் பொன்னான் மவன். அளுக்கி குலுக்கி ஓடுனானான் ஆம கிறுக்கன்” என்று நான் ஓடுவதைப் பார்த்து இரண்டு நாளுக்கு ஒருமுறையாவது ஏசும் தண்டட்டி ஆயா.

வேலை முடிந்து வரும்போதும் இப்படித்தான் சீக்கிரமோ தாமதமோ ஆளை நிறுத்தி விசாரிக்காமல் விடாது. சில நாள் வேலூர் மாமரத்து செட்டியார் கடையில் புகையிலை வாங்கிவந்து தருவேன். அப்போது பார்க்க வேண்டுமே வாயெல்லாம் பொக்கையை!

அடுத்தடுத்த நாட்கள் ஆனபோதும் ஆயாவைக் அதன் இடத்தில் காணவில்லை. சரிதான்.. கெழவி, மக வீட்டுக்கு போயிடுச்சி போல என்று முதலில் எண்ணிக் கொண்டு நடையைக் கட்டிவந்தேன்.

”எப்போதாவதுதான் போகும். போனாலும் பொழுது சாய வந்திடும். மருமகனோட ஒண்ணு மண்ணா பழகாது. ரோசக்கார கிழவிக்கு என்ன பிணக்கோ.. கேட்டாலும் சொல்லாது. பெரிசுக்கு இந்த விஷயத்துல மட்டும் வாய் கெட்டி” பக்கத்து வீட்டு குப்பன் ஒருமுறை சொன்னது நினைவில் வந்துபோனது.

நேற்றுதான் தெரியவந்தது, ஆயா மக வீட்டுக்கு போன இடத்தில் நலுங்கிக் கொண்டதென்று.

இரவு உணவு முடித்து, கையில் குழந்தையை தூக்கிக் கொண்டு காத்தாட வெளியே வந்தேன். அக்கம் பக்கத்து அக்காமார்கள் தெரு முக்கில் கொட்டிக் கிடந்த மணற் பரப்பில் உட்கார்த்து அடிக்கும் அரட்டை சத்தம் காதில் கேட்டது. தெருமுனையில் வீடு இருப்பதில் இது பல நேரங்களில் தொல்லை என்றால், அண்டை வீட்டு நடப்பை தெரிந்து கொள்வதில் சில நேரங்களில் சௌகரியம்.

“ஆஸ்பத்திரியில் சேர்த்து குளுகோஸ் போட்டதில் இப்ப பரவாயில்லையாம். ஆனால் இனிமே இங்க தனியாவிட மாட்டாங்களாம்”

“போயிடும்னு பார்த்தேன்.. பொழச்சிகிச்சே” இன்னொரு அக்கா விசனப்பட்டாள். ஓரியாக பிறந்து ஓரி வீட்டில் வாழ்க்கைப்பட்டவள் அவள்.

”இப்போதைக்கு போயிடுமா என்ன.. கெழவி கடுங்கட்டையப்பா. அந்த காலத்தில சும்மாடு போட்டு எத்தனை கட்டு தூக்கியிருக்கும் எத்தனை வெள்ளாம கண்டுருக்கும்”

நீட்டி முழக்கியபடி நீண்டு சென்ற பேச்சு ஆயாவை விட்டு விலகி அடுத்தடுத்த வீடுகளை அலசி ஆராய ஆரம்பித்ததும், அங்கிருந்து அகன்றேன். மொத்தத்தில் இனி கருப்பாயி ஆயா இங்கே வராது என்பது புரிந்துவிட்டது.

நாட்கள் சென்றன. எப்பொழுதும்போல் இப்பவும் அடிக்கடி குடும்பத்துடன் வெளியே சென்று வருகிறேன். ஆனால் “எங்கியாம்..’ என்று இப்போதெல்லாம் யாரும் தெருவில் கேட்பதில்லை. காலையில் இன்னும் அதே கடைசிநேர பரபரப்புதான். ”தொங்குனு ஓடாதடா தொங்கியான்..’ என்று திட்ட யாருக்கும் தைரியமில்லை. அன்றொரு நாள் ஓடும் பஸ்ஸிலிருந்து குதித்ததில் கால் வலி ஏற்பட்டு நொண்டியபடி வந்தேன். ”ஏண்டா பயலே.. எங்கிட்டாட்டம் உழுந்த..” என்று அருகில் அழைத்து வாஞ்சையுடன் தடவி கொடுத்து வைத்தியம் சொல்ல நாதியில்லை.

எல்லோரும் ஏதாவது சீரியலில் முடங்கி வீட்டினுள்ளே கிடக்கிறார்கள். சில சமயம் பல பேர் புழங்க தெரு நிறைந்து கிடந்தாலும் ஆள் அரவமற்ற தனிமை என்னை சூழ்ந்திருப்பது போல் உணர்கிறேன். யாருக்கும் யாரிடமும் பேச பெரிதாக விஷயமில்லை. பேசினாலும் எதையும் பல கூட்டல் கழித்தல்களுக்கு உட்படுத்தி கணக்கு போட்டு பேசும் கூட்டத்தினிடையே இயல்பான மனிதர்களை தேடித் தேடி சலிக்கிறேன். வெள்ளந்தியான மனசும் மனிதர்களும் அரிதாகி வருகிறார்கள். பணமும், படித்த மேட்டுகுடி நாகரிகமும் மனிதர்களுக்கு தரும் இந்த நாசூக்குத்தனம், மனதில் வெறுமையை மட்டுமே ஏற்படுத்துகிறது. தண்டட்டி போல இருக்கும் ஒன்றிரண்டு பெரிசுகளும் போய்விட்டால் இந்த தெருவும் உலகமும் இனிமேல் இப்படித்தான் இருக்கும் என்று தோன்றுகிறது.

எண்ணச் சுழலில் சிக்கிய மனதை மீட்க எண்ணி நகரும்போது அன்று ஒருநாள் அதற்காக வாங்கிவந்த வெற்றிலையின் காய்ந்த மிச்சம் தொட்டிமேல் இன்னமும் கொஞ்சம் எஞ்சி கிடப்பது கண்ணில்பட்டது.

“ஏம்மா.. ஒரு எட்டு போயி அந்த தண்டட்டிய பாத்துட்டு வரவா?” அம்மாவிடம் கேட்டேன்.

”அட ஏண்டா.. நான் போனப்பவே என்ன ஏதுன்னு ஊட்டு வெவகாரம் முச்சூடும் கேட்டு தொன தொனத்துது.. உன்ன பாத்தா பழம புடிச்சிக்கும். அப்புறம் வெரசுல போக உடாது”

என் முகத்தில் புன்முறுவல் பூத்தது.

“எனக்கு வேண்டியதும் அதுதானம்மா!” மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.

0 comments:

Post a Comment