எங்கள் அலுவலகத்தில் உதவியாளராக 21 வயது நிரம்பிய இளைஞன் ஒருவன் இருக்கிறான். அவனுடைய சின்சியாரிட்டி காரணமாக அவன்மேல் எனக்கு எப்போதும் தனிப் பிரியம் உண்டு. என்னுடைய மேஜையில் இருந்து அலுவலகத்தில் பணியாற்றும் அனைவரின் நடவடிக்கைகளையும் எளிதாக கவனிக்க முடியும். இன்று காலையில் இருந்து பார்க்கிறேன், இவன் மட்டும் கொஞ்சம் பதட்டமாக, ஜன்னலில் ஒரு கண்ணும், sms இல் ஒரு கண்ணுமாக காணப்பட்டான். கூப்பிட்டதைக்கூட இரண்டொருமுறை கவனிக்கவில்லை.
அடுத்தமுறை அவன் ஜன்னலில் நின்று நோட்டம் விடும்போது நானும் அருகிலிருக்க நேர்ந்ததால் என்னவென்று எட்டிப் பார்த்தேன். விஷயம் புரிந்துவிட்டது.
எங்கள் அலுவலகத்தின் எதிரில் இருக்கும் ’அஜந்தா’ சினிமா தியேட்டரைத்தான் பார்த்தபடி இருந்திருக்கிறான். அதில்தான் இன்று வேட்டைக்காரன் ரிலீஸ் ஆனது. காலையில் இருந்து அவ்வப்போது சரவெடிகளின் ஓசை காதைப் பிளந்து கொண்டிருக்கிறது.
மெல்ல அவனிடம் பேச்சுக் கொடுத்தேன்.
“என்ன சதீஷ்.. வெடியா கொளுத்துறானுங்க பசங்க.. படம் ஹிட்டு போல?”
“ஆமாங்க சார்.. சூப்பரா இருக்காம். கில்லிக்கு அப்பறம் இதுதான்னு ஃப்ரெண்ட்ஸ் சொல்றாங்க சார்”
டீ வாங்க வெளியே செல்லும்போது விசாரித்திருக்கிறான் போலிருக்கிறது.
“நானும் அப்படித்தான் கேள்விப்பட்டேன். உனக்கு விஜய் பிடிக்குமா?’
‘சார்.. ரொம்ப பிடிக்கும் சார். காலேஜ் படிக்கும்போது திருப்பாச்சியே கட் அடிச்சி கட் அடிச்சி 60 தடவை பார்த்திருக்கேன் சார்”
”ஆறா? அறுபதா?.. சரியா சொல்லு, கேட்கலை”
“60 தடவைங்க சார். கூடதான் இருக்கும். கம்மியா இருக்காது” கண்கள் விரிய சொன்னவனை கண் இமைக்காமல் பார்த்தேன்.
”ம்ம்.. திருப்பாச்சியே 60 தடவைன்னா.. இந்த படம்?”
‘எப்படியும் 10 தடவையாவது பார்த்துருவேன் சார். படம் ஃப்ர்ஸ்ட்ல இருந்து கடைசி வரை ஃபாஸ்டா போகுதாம். தலைவர் கலக்கறாராம்.. “
இவன் குடும்பம் எவ்வளவு ஏழ்மையில் இருக்கிறது என்று எனக்கு தெரியும். இவனே இன்னொருவர் வீட்டில்தான் தங்கி படித்தான். அதனால் 60 தடவை என்று - இவன் சொன்னதுதான் ஆச்சரியமாக இருந்ததே தவிர, இப்படி ஒரே சினிமாவை பல தடவை பார்க்கும் பலரை சந்தித்திருக்கிறேன். முன்பு என்னுடன் வேலை செய்த பூபதி என்னும் விஜயகாந்த் ரசிகன், கேப்டன் பிரபாகரனை ஐம்பது தடவைக்கும் மேல் பார்த்ததாக சொன்னது மட்டுமல்லாது, அந்த கடைசி கோர்ட் சீன் முழுவதையும் ஒரு வக்கீல் போல நடந்தபடியே பேசியும் காண்பிப்பான்.
‘அவ்வளவு ரசிகன்னா இந்த படத்த நீ ஃபர்ஸ்ட் ஷோ பார்த்திருக்க வேண்டாமா?”
“எப்படிங்க சார்.. ஆபீஸ் இருக்கே”
நேற்று இரவு போன் செய்து இவன் இன்றைக்கு லீவு கேட்டதன் காரணம் இப்போது புரிந்தது. வேறு ஒருவரும் லீவில் இருந்ததால் கொடுக்கவில்லை. காரணமும் வலுவாக இல்லை.
“கவலைப்படாத.. இன்னைக்கு டிரேடிங் முடிந்ததும் 3.30க்கே நீ கிளம்பலாம்’
நான் சொன்னதைக் கேட்டு நம்ப முடியாமல் பார்த்தான். வழக்கமாக இவன்தான் கடைசியாக ஆபீஸ் பூட்டிவிட்டு போக வேண்டும்.
‘நிஜமாத்தான் சொல்றேன்.. Go and enjoy!. பட், நாளைக்கு உண்மையான ரிசல்ட் சொல்லணும். ஓகே”
இப்போது மணி 3.55 PM. சற்று முன்னர்தான் மகிழ்ச்சியுடன் விடை பெற்றுச் சென்றான்.
இதையெல்லாம் கடந்து தானே நாமும் வந்திருக்கிறோம்?
0 comments:
Post a Comment