நேற்று இல்லாத மாற்றம்

Posted: Thursday, December 17, 2009 | Posted by no-nononsense | Labels: ,
ஒரு காலத்தில் பஸ்ஸில் பயணிப்பது(நன்றி: சுஜாதா) என்றால் எட்டிக்காய் கசப்புதான். அருகில் இருக்கும் பரமத்தியில் மேட்ச் என்றாலேகூட ’பைக்கில் அழைத்துச் சென்றால்தான் ஆச்சு’ என்று ஜபர்தஸ்த் காட்டுவேன். ஆனால் கடந்த நான்கைந்து ஆண்டுகளாக பஸ் பயணங்கள் வாழ்வின் ஓர் அங்கமாக ஆகிவிட்டன. காலப் போக்கில் பழகியும் விட்டன. எந்த ஒரு பயணத்திலும் உற்று நோக்க ஒரு நூறு விஷயங்களாவது இருக்கின்றன என்பது என் அனுபவம். அது சுற்றியுள்ள மனிதர்களாக இருக்கலாம்; அல்லது ஜன்னலுக்கு வெளியே கடந்து செல்லும் காட்சிப் பொருள்களாகவும் இருக்கலாம், எல்லாமே ஏதோ ஓர் உள்ளுறை செய்தியின் சமிக்ஞைகள் தாம். அதை புரிந்து கொள்ளும் கலையை வளர்த்துக் கொள்வதில்தான் ரசனையின் சூட்சமம் அடங்கி இருக்கிறது.

சில நாட்கள் முன் சதீஷ்கண்ணனுடன் பேசிக் கொண்டிருந்தபோது, பயணத்தைப் பற்றிய ஒரு மாறுபட்ட கண்ணோட்டத்தைக் கூறினான். அன்றாட அச்சு பிச்சுகளில் இருந்து விலகிப் போய் தனிமைப்பட்டு சிந்திக்க அவனுக்கு பயணங்களே உதவுகின்றன என்றான். அதை நானும் பலமாக ஆமோதித்தேன். திருச்சிக்கும் நாமக்கல்லுக்கும் அலைந்து கொண்டிருந்த நேரங்களில் முடிவெடுக்க முடியாமல் ஒத்திப் போட்டுவந்த எத்தனையோ விஷயங்களைப் பற்றிய தெளிவுகள், பஸ் பயணங்கள் ஏற்படுத்திக் கொடுத்த தனிமையில் எனக்கு கிடைத்திருக்கின்றன.

இருப்பினும், ஒரே ஒரு விஷயத்திற்காக நம் ஊர் பஸ் பயணங்களை நான் வெறுக்கிறேன். அது சுகாதார கேடு.

பெரும்பாலும் ஏதாவது கைப்பிடியைப் பிடித்துக் கொண்டே தான் பயணம் செய்ய வேண்டியுள்ளது. அதை இதற்கு முன் யார் யாரெல்லாம் தொட்டார்களோ; என்ன வியாதிக்கான என்ன மாதிரி ஜெர்ம் அதில் ஒட்டிக் கொண்டிருக்கிறதோ என்று எப்போதும் ஓர் அருவெறுப்பு மனதின் ஓரத்தில் இருந்து கொண்டே தான் இருக்கிறது.

ஒருவரோடு ஒருவர் செருகிக் கொண்டு பயணம் செய்ய நேரும் சில நேரங்களில், நம் எதிரே நிற்கும் மனிதர் நம் முகத்திற்கு நேரே தும்முவார். இரண்டு கைகளும் இருபுறமும் எதையாவது பேலன்ஸ்க்காக பற்றிக் கொண்டிருக்கும் நிலையில், முகத்தை திருப்பிக் கொள்ளக் கூட அவகாசம் இருக்காது. அவர் வெளியேற்றுவதை நாம் சுவாசித்தே ஆக வேண்டிய நொம்பலத்தில் அகப்பட்டு விடுவோம். நம் முன்னோர்கள் மக்கள் தொகையை பெருக்கித் தள்ளியதற்கான தண்டனையை, ஏதாவது வியாதி ரூபத்தில் இன்று நாம் அனுபவிக்க நேரிடும்.

இந்த ஒரு காரணத்திற்காகவே வீடு கட்டியதும் கார் வாங்க விரும்புகிறேன். மற்றபடி இந்திய சாலைகளில் கார் பயணங்களை விட பஸ், ரயில் பயணங்களே பாதுகாப்பானவை என்பது என் கருத்து.

*

அண்மைகாலமாக சக பெண் பயணிகளின் மனோபாவத்தில் புரட்சிகரமான ஒரு மாற்றத்தைக் காண்கிறேன். அதுவும் குறிப்பாக இளம்பெண்களிடம். எங்கே உட்கார இடம் கிடைத்தாலும், சங்கோஜப்படாமல் சென்று அமர்ந்து கொள்கிறார்கள். அது மூன்று பேர் நெருக்கியடித்து அமரும் இருக்கையாகவும் இருக்கலாம்; தயங்குவதில்லை.

அன்று ஒரு நாள் ஒரு சம வயது பெண், பார்க்க கல்லூரி ஆசிரியை போன்ற தோற்றம்; கையில் ஜெஃப்ரி ஆர்ச்சரின் ‘Not a Penny More, Not a Penny Less’ இன் தமிழ் மொழிபெயர்ப்பு; நான் நிற்பது கண்டு அழைத்து தன் அருகே அமர்த்திக் கொண்டார். பிறகு புத்தகத்தில் மூழ்கிவிட்டார். எனக்குத்தான் பட்டும் படாமல் பக்கத்தில் அமர்ந்து பயணிப்பது படு அவஸ்தையாக இருந்தது. பாரதி கனவு கண்ட புதுமை பெண்களில் ஒருவர் போலும் என்று நினைத்துக் கொண்டேன். ஆனால், பிறகு அது போன்ற அமர்வுகள் சகஜமாகி விட்டன. பெரிதாக எடுத்துக் கொள்வதும் இல்லை.

எனினும், நேற்று சட்டென்று என் அருகில் அமர்ந்து கொண்ட பெண்ணைக் கண்டதும் கொஞ்சம் துணுக்குற செய்தேன். காரணம், அவர் ஓர் இளம் இஸ்லாம் பெண்! இரண்டு சீட்டுகள் தள்ளி அவர் கணவரும் அமர்ந்திருக்கிறார் என்பதையும் கவனித்தேன். இஸ்லாம் சமூக கட்டுப்பாடுகள் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை என்பதால், அப்பயணம் நிறைவுறும்வரை எனக்கு ஆச்சரியம் நீடித்தபடியே இருந்தது.

ஆண்-பெண் பேதம் தரும் அநாவசிய கூச்ச நாச்சங்கள், மதங்களை கடந்துமே கூட, குறைந்து வருவதாகவே தோன்றுகிறது.

எனினும், நம் பேரிளம் பெண்கள் இன்னும் அப்படியேத்தான் இருக்கிறார்கள் என்பது, சொல்லித்தான் தெரிய வேண்டும் என்றில்லை.

0 comments:

Post a Comment