My comment in a discussion on curruption in Indian politics:
நிச்சயமாக ஓரிரவில் ஒரு சட்டம் போட்டு இதையெல்லாம் ஒழித்துவிட முடியாதுதான். அப்படி முடியுமென்றால் ஏற்கெனவே இருக்கும் சட்டங்களும், அதைக் கட்டிக்காக்க இருக்கும் லஞ்ச ஒழிப்புத் துறையும், அதன் போலீஸார்களுமே போதுமே. ஆனால் இதில் கொடுமை என்னவென்றால் அவர்கள்தான் அதிகம் வாங்குகிறார்கள் என்பதுதான். இங்கு வேலியே பயிரை மேய்கிறது.
இதற்கெல்லாம் என்ன காரணம்?
லஞ்சம் வாங்குபவனுக்கு, நான் ஒருவன் திருந்துவதனால் இந்த உலகம் திருந்திவிடப் போகிறதா என்னும் அலட்சிய மனோபாவம். அதில் உண்மையும் இல்லாமலில்லை. அம்மணமாக திரிபவன்கள் ஊரில் கோவணம் கட்டினவன் கோமாளி என்பதற்கேற்ப, அப்படி நேர்மையாக இருப்பவனின் வாழ்க்கை பிழைக்கத் தெரியாதவன் என்று பரிகாசத்துக்குள்ளாகிறது.
லஞ்சம் கொடுப்பவன், தன் வேலை சீக்கிரமாக முடிய வேண்டும் என்றோ, அல்லது தனக்கு தகுதியில்லாத நிலையிலும் ஒன்றை அடைந்துவிடும் பேராசை காரணமாகவோ, பணத்தைக் கொடுத்து எதையும் சாதிக்க நினைக்கிறான்.
இதில் பாதிக்கப்படுவதெல்லாம் லஞ்சம் கொடுக்க முடியாத ஏழைகள் தான்.
மாற்றத்தை மனோபாவத்தில் கொண்டு வர வேண்டும். வாங்குபவர்கள் நிறுத்திக்கொண்டால் கொடுப்பவனும் நிறுத்திக் கொள்வான். இல்லையில்லை, கொடுக்கிறதினாலத்தானே அவன் வாங்குகிறான் என்பதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. வாங்குகிறவன் என்று ஒருவனிருந்தால், நாம் கொடுக்கவில்லை என்றாலும் வேறு ஒருவன் கொடுத்து காரியத்தை சாதித்துக்கொண்டு போய்விடுவான். அதனால் லஞ்சம் வாங்குகிறவர்கள் தான் திருந்த வேண்டும்.
எப்படி திருத்துவது?
காலம் காலமாக இருந்துவரும் அதே இரண்டு வழிகள் தான் - ஒன்று விழிப்புணர்ச்சியால் நடக்க வேண்டும். அல்லது ’புரட்சியால் நடக்கும்’.
விழிப்புணர்வு உண்டாக மக்கள் அனைவரும் கல்வியறிவு பெற வேண்டும். அதன் காரணமாக பகுத்தறிவு வளர வேண்டும். முக்கியமாக நாம் பின்பற்றிச் செல்லத் தக்க மக்கள் பொதுநலனில் அக்கறை கொண்ட நேர்மையான தலைவர்கள் உருவாக வேண்டும். தமிழ்நாட்டில் காமராஜருக்குப் பிறகு குறிப்பிட்டு சொல்லத்தக்க ஒரே ஒரு தன்னலமற்ற தலைவர் கூட உருவாகவில்லை என்பது நமது சாபக்கேடு. இருக்கிற திருடனிலேயே சின்ன திருடன் யாரென்று தான் தேர்ந்தெடுத்து ஓட்டுப் போட வேண்டியுள்ளதே தவிர, இவர் நல்லார் என்று நம்மால் ஒருவரையும் சுட்டிக்காட்ட முடியவில்லை. வைகோ போன்ற சில நீர்குமிழிகள் சில நேரங்களில் தோன்றி பொது வாழ்வில் தூய்மை என்று முழங்கினாலும், நிலைப்பதில்லை.
இந்திய விடுதலைப் போராட்டம் எப்படி வெற்றி பெற்றது? ராவ் பகதூர், திவான் என்றெல்லாம் வெள்ளைக்காரன் கொடுத்த பட்டங்களை பெருமிதம் பொங்க வாங்கிக்கொண்டு, ‘துரைமார்’, ‘துரைசாணிமார்’ என்று அவனுக்கு சலாம் போட்டுக்கொண்டிருந்த ஆட்டுமந்தைக் கூட்டம் தன் கையில் கத்தியில்லாத, ஆனால் தான் ரத்த சிந்த தயாரான ஒரு மனோதிடத்தைப் பெற்றது எங்ஙனம்? அன்றிருந்த தூய்மையான காந்தி போன்ற தலைவர்களால் தான். ஏன் ஜின்னா போல காந்தி இந்தியாவின் அரியணையில் ஏறவில்லை என்ற ஒரு விஷயத்தை சிந்தித்திப் பார்த்தாலே எல்லாம் விளங்கும். அவர்களுக்கு மக்களின் நலனில் மட்டுமே அக்கறை. அதற்காக போராட்டங்கள் நடத்தினார்கள். அதில் தாங்களே முன்னின்று தங்களை வருத்திக்கொண்டார்கள். வெள்ளையனுக்கு எதிராக ஒரு போராட்டத்தை அறிவித்துவிட்டால் காந்திதான் அதில் முன்னிற்பார். அதற்காக பல நாட்கள் உண்ணாவிரதம் இருப்பார். அதை காணும் மக்களும் அவர் பின்னால் அணி திரள்வார்கள். எத்தகைய சோதனைக்கும் தயாராக இருப்பார்கள். போராட்டம் வெற்றி பெற்றது. லட்சியம் நிறைவேறியது. (ஒரே ஒரு காந்தியவாதியையாவது லஞ்சம் வாங்க-கொடுக்க வைத்துவிட முடியுமா? அதுதான் காந்தியிஸத்தின் தாக்கம்!)
ஆனால் இன்று? உண்ணாவிரதங்கள் போலி பாசாங்குகள். ஈழத் தமிழர் பிரசிச்னையில் கருணாநிதி நடத்திய உண்ணாவிரதத்தை விட ஒரு கேவலம் இன்றுவரை நான் பார்க்கவில்லை. இப்படிப்பட்ட தலைவர்கள் இருக்கும்போது, சீனத்தில் மாவோவும், ரஷ்யாவில் லெனினும் நிகழ்த்திக் காட்டிய சமுதாய மாற்றம் எங்கிருந்து வரும்?
அதற்கு மக்கள் தயாராக இருக்கிறார்களா என்றால், மக்கள் எப்பொழுதும் தயாராகத்தான் இருக்கிறார்கள். 1970களில் ஜெய பிரகாஷ் நாராயண் பின்னால் திரண்ட மாணவர் கூட்டம், சமுதாய புரட்சியை அமைதியான முறையிலும் கூட ஸ்தாபிக்க முடியும் என்பதற்கு அண்மை கால உதாரணம். இப்பொழுதும் கூட ஆலையில்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை என்பதைபோல் அப்துல் கலாமை ஆதர்ஷமாக கொண்டுள்ள இளைஞர் கூட்டம் சுட்டிக் காட்டுவதெல்லாம், நாங்கள் பின்பற்ற தேவை ஒரு நல்ல தலைவர் என்பதுதான்.
அப்படியொரு மிதவாதி தலைவர் ஜனநாயக ரீதியில் மாற்றங்களை உருவாக்க உருவாகவேயில்லையென்றால், அடுத்து புரட்சி தான் வெடிக்கும். அது சமுதாய சீர்கேடுகளை துப்பாக்கி முனையில் தகர்த்தெறியும். வரலாற்றில் ஏடுகளில் காண கிடைக்கும் புரட்சியெல்லாம் உரைப்பது மிதவாத முயற்சிகளின் தோல்வியைத்தான். இதற்கு அண்மைகால உதாரணம் நேபாளம்.
இன்று நக்ஸலைட்டுகளை மிக மோசமான சமூக விரோதிகளாக சித்தரித்து கூப்பாடு போடுவதெல்லாம் இன்றைய மக்களின் சீரழிவுக்கு காரணமாக அரசியல்வாதிகளும், அதை வைத்து பணம் பார்க்கும் நாலாந்தர ஊடகங்களும் தானே தவிர, அங்கே இருக்கும் மக்கள் அல்ல. நக்ஸலைட்டுகளின் மிகப் பெரிய சக்தி, மக்கள் ஆதரவு. மக்கள் ஏன் ஆதரிக்கிறார்கள் என்பதை லால்கரிலும், ஜார்கண்டிலும் சென்று அறிந்து கொள்ள எத்தனித்தால் அப்போது விளங்கும்.
சின்ன கமெண்டாக எழுத ஆரம்பித்து பெரிதாக வளர்ந்துச் செல்கிறது. நான் சொல்ல வருவது இதைத்தான்.. நல்ல தலைவர்கள் உருவாகி, அவர்களினால் மக்கள் மனநிலையில் தாக்கம் பெறுவதும், கல்வியறிவும் மற்றும் அதன் காரணமாக பகுத்தறிவு மேம்படுவதும், இவற்றின் தொடர்ச்சியாக பெருமளவில் தனிமனித ஒழுக்கம் மிகுவதுமே இதையெல்லாம் சரி செய்யும். ஒரு நாள் நடக்கலாம். நம்பிக்கை தானே வாழ்க்கை!
0 comments:
Post a Comment