பொறியியல் கல்வியை தமிழில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக வந்த செய்தியின் மேல் நடந்த உரையாடலில் என் கருத்துக்கள்:
இதை ஒரு ஐம்பது வருடங்கள் முன்பு முயற்சி செய்து பார்த்திருக்கலாம். ஒருவேளை பயன்பட்டிருக்கக் கூடும். இப்போது ஏழைகளைத் தவிர யார் வீட்டு பிள்ளை தமிழ் வழியில் கல்வி கற்கிறது - அதற்கு நாம் என்ஜினியரிங் பாடங்களை தமிழில் சொல்லி கொடுக்க?
ஏழை வீட்டு பிள்ளைக்கு பயன்படுமே என்றால் எந்த ஏழை இங்கே என்ஜினியரிங்/மெடிக்கல் காலேஜ் பீஸை கட்டும் நிலையில் இருக்கிறான்? அப்படி கட்டுபன் ஏழையாக இருக்க வாய்ப்பில்லை.
அதுதான் போகட்டும், அப்படி தமிழில் பாடம் வைக்கிறோம் என்றே வைப்போம். அந்த மாணவர்கள் அனைவருக்கும் தேவையான reference books தமிழில் கிடைக்குமா? அப்படி தமிழில் படித்து பட்டம் பெறுபவர்களுக்கு வேலை வாய்ப்பு தமிழ்நாட்டுக்குள்ளேயே கிடைத்தால் மட்டுமே மொழிப் பிரச்சினை இன்றி அவர்களால் பணியாற்ற முடியும். அதற்கு தகுந்தளவு வேலை வாய்ப்புகள் இங்கே உண்டா? இல்லையென்றால் எல்லை தாண்டிய வேலை சந்தையில் தகுதி நீக்கம் செய்யப்பட்டு விடுவோம்.
எதற்கெடுத்தாலும் சீனாவை எடுத்துக்காட்டுவது ஒரு மோஸ்தர் ஆகி வருகிறது. அவ்வளவு பெரிய நாடாகிய சீனாவில் - சில வட்டார மொழிகள் ஆங்காங்கே வழக்கில் இருந்தாலும் - மாண்டரின் மொழியைத்தான் பெருமளவில் மக்கள் பேசுகின்றனர். அதுதான் அங்கே அதிகாரப்பூர்வ மொழியும் கூட. அதனால் மாண்டாரின் மொழியில் மட்டுமே பாடங்கள் அனைத்தையும் கற்றாலும் வேலை வாய்ப்புகளில் பிரச்சினை வருவதில்லை. மேலும் அங்கே நடப்பது கம்யூனிச ஆட்சி என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
சீனாவின் மாண்டரின் போலவோ அல்லது ஜப்பானின் நிஹோங்கோ போலவோ தேசம் முழுமைக்குமான ஒரு பொது மொழி நம் நாட்டில் கிடையாது. இங்கே மாநிலத்துக்கு மாநிலம் பிராந்திய மொழி மாறுபடுகிறது. அதன் காரணமாக அனைவருக்கும் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளுக்கான பொதுவான ஒரு மொழியாக ஆங்கிலம் இருந்துவருகிறது. அது உலக பொது மொழியாகவும் இருப்பது அதிலுள்ள மேலும் ஒரு சாதகமான அம்சம். அதனால் தேசம் கடந்தும் வேலை வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ள முடிகிறது.
சீனாவிலும் ஜப்பானிலும் கூட கடந்த பத்து வருடங்களில் நிலை மாறி வருகிறது. Globalization காரணமாக ஆங்கில வழிக் கல்வியை கற்பதில் மக்கள் ஆர்வமாக இருக்கின்றனர். சீனர் ஒருவர் தான் எழுதிய கட்டுரை ஒன்றில் ஆங்கில வழிக் கல்வியைப் பொருத்தவரையில் தற்காலத்தில் சீனாவில் நிலவும் சூழல் பற்றி என்ன சொல்கிறார் என்று பாருங்கள்:
English classes starts from kindergarten, and many parents give English lessons to their babies once they can speak. Until the end of high-school study, all the grammar is taught. In almost every university, one cannot get his BS degree if he/she cannot pass the College English Test (CET) Band 4, and no opportunity of a good job after graduation if he/she cannot pass CET Band 6. Proficient oral and aural English increases the possibility of offers from big companies like P&G, GE, Dow, BP, etc.
எனவே மாறி வரும் சமூக பொருளாதார சூழ்நிலைகளின் காரணமாக உலகம் ஒரு பொது மொழியை நோக்கிப் பயணப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில் அதனுடன் ஒட்டாமல் மாறுபட்டு பயணிப்பது பின்னடைவையே தரும். இதனை வள்ளுவரின் வார்த்தைகளில் சொல்வதானால்,
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்கல்லார் அறிவிலா தார்.
தமிழ் மொழி ஆர்வலர்கள் மொழிப் பற்றுக்கும் மொழி வெறிக்கும் இடையேயுள்ள வேறுபாட்டை அறிந்துகொள்ளாவிடில் இனி வரும் சந்ததியினர்தான் அதன் பாதிப்புகளை சந்திக்க நேரிடும். அந்த பாவம் நமக்கு வேண்டாம்.
உண்மையாகவே நம் மாணவர்களுக்கு பயனளிக்கும் ஒரு திட்டத்தை தீட்ட வேண்டும் என்று அரசாங்கம் நினைத்தால் தொழிற்கல்வி வரைக்கும் கல்வியை முழுமையாக இலவசமாக அளிக்க வேண்டும். மற்றதெல்லாம் வெட்டி வேலை.
0 comments:
Post a Comment