குழந்தைமை

Posted: Friday, February 26, 2010 | Posted by no-nononsense | Labels:
குழந்தைகளைப்பற்றி Janusz Korczak-ன் இக்கருத்துக்களின் மீது நடந்த உரையாடலும் என் சில கருத்துக்களும்:

மற்ற கட்டுரைகளைப் போல படித்த உடனே இதற்கு எந்த கருத்தையும் மனதை செலுத்தி எழுதிவிட முடியவில்லை. Janusz Korczak-ன் கருத்துக்களை வாசிக்கும் ஒவ்வொருமுறையும் மனம் சிந்தனையில் ஆழ்ந்துவிடுகிறது. என் குழந்தையிடம் நான் எந்த மாதிரி நடந்துகொள்கிறேன் என்பதை மீண்டும் மீண்டும் பரிசீலித்து கொண்டிருக்கிறேன்.

பல விதமான இஸங்களிலும் பின்நவீனத்துவ கூறுகளிலும் சித்தாந்த சிடுக்குகளிலும் பகலிரவு பாராமல் சிந்தையை செலுத்தி மண்டையை உடைத்துக்கொண்ட பொழுதுகளில், எத்தனை நிமிடங்களை என் குழந்தையை புரிந்துகொள்ள ஒதுக்கியிருப்பேன் என்பது முதலில் பெரும் கேள்விக்குறியாக விஸ்வரூபம் எடுத்து என் முன் நிற்கிறது.

அவள் விரும்பி நான் மறுத்த, என்னால் எளிதில் அளித்திருக்க முடியக்கூடிய விஷயங்கள் எல்லாம் நினைவில் வந்து குற்றவுணர்ச்சி கொள்ள வைக்கின்றன. அவள் உலகத்திற்கு அவள் என்னை கையை பிடித்து அழைத்தபோது, அதை தட்டிவிட்டு உதாசீணம் செய்த தருணங்கள் எல்லாம் இப்போது ஞாபகத்தில் வந்து நெருடுகின்றன. அரைகுறையாக பேச ஆரம்பிப்பதற்குள்ளாகவே அறிவுஜீவித்தனத்தை புட்டிப்பாலுடன் சேர்த்து புகட்டிவிட நினைத்த அதிமேதாவித்தனம், சடுதியில் அறிவீனமாக மாறி தெரிகிறது. கற்பித்தலாக நினைத்து அவளுக்கு விதிக்கப்பட்ட வரையறைகள் எல்லாம் அவள் உலகத்தில் எவ்வளவு பெரிய வன்முறைகள் என்பதை உணரமுடிகிறது.

கண்டிப்பு என்பதன் அர்த்தம் கடுமை காட்டலோ காயப்படுத்தலோ அல்ல என்பதை மீண்டும் ஒருமுறை எனக்குள் உறுதி செய்துகொள்கிறேன். அறிவுறுத்தலைக்கூட அரவணைப்புடன் செய்வதென்பது ஒரு கலை; அதை தாமதியாமல் கற்றுக்கொள்ள விழைகிறேன். முக்கியமாக அவளுடைய தனித்துவத்தை(individuality) மதிக்கும் மனநிலையை தக்கவைத்துக்கொள்ள வேண்டும். அது அவளுடைய தன்னம்பிக்கை வளர உதவும். பெரும்பாலும் அடுத்த குழந்தைகளுடன் ஒப்பிட்டே நம் குழந்தையிடம் தன் திறமையின் மீது ஒரு அவநம்பிக்கையை வளர்த்துவிடுகிறோம். அது நிகழாமல் பார்த்துக்கொள்வது எப்போதும் கவனத்தில் இருக்க வேண்டிய காரியம்.

எல்லாவற்றிற்கும் மேலாக எல்லாவற்றையும் எழுத்தில் படித்து கருத்துகளாக உதிர்த்து போவது மிகவும் சுலபம். ஆனால் ஒரு சிலவற்றையாவது வாழ்க்கையிலும் கடைபிடிக்க ஒரு பெரும் அர்ப்பணிப்பு உணர்வு நம் குழந்தையின் மீது — இடம், பொருள், ஏவல் எல்லாம் தாண்டி — வாழ்வின் எல்லாச் சூழலிலும் தேவைப்படுகிறது. அதை முதலில் உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

வாழ்க்கை சமத்காரமாக அமைவதற்கு அதை பல சரிபார்ப்புகளுக்கு உட்படுத்துவது அவசியம். அதற்கான தூண்டுதலை இம்மாதிரி அறிஞர்களின் கருத்துக்கள் விதைக்கின்றன. Janusz Korczak - தன் வாழ்க்கையாலும் வாசகங்களாலும் என்னை பலமாக பாதித்து விட்டார். (அவருடைய வாழ்க்கையை இங்கே அறியலாம்).

0 comments:

Post a Comment