ஈழப் பிரச்சினையில் எதிர் குரல் கொடுப்பதன் மூலம் தங்கள் சோனியா விசுவாசத்தைக் காட்டிக்கொண்டு அதன்மூலம் காங்கிரஸில் பதவி சுகம் அனுபவித்து வருபவர்களுக்கு மத்தியில் ஈழப் பிரச்சினையில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டைக் கண்டித்து தான் வகித்து வந்த பொதுச் செயலாளர் பதவியையே ராஜினமா செய்தவர்தான் இந்த மணியன்.
மணியன் காங்கிரஸிலிருந்து விலகிய பிறகு காந்திய கொள்கைகளை முன்வைத்து காந்தி பிறந்தநாளான அக். 2 அன்று ‘காந்திய அரசியல் இயக்கம்’ என்ற ஒரு இயக்கத்தை தொடங்கி மாநிலம் முழுவதும் கூட்டங்கள் நடத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக நேற்று நாமக்கல் சுப்புலட்சுமி மண்டபத்தில் அதன் கூட்டம் நடைபெற்றது. நான் அக்கூட்டத்தில் கலந்துகொள்ள மிக ஆர்வமாக இருந்தேன். ஆனால் அதேசமயத்தில் அலுவல் ரீதியான கூட்டம் ஒன்றில் கலந்துகொள்ள ஈரோடு செல்ல வேண்டியிருந்தது. அதனால் சரியான நேரத்தில் கலந்துகொள்ள முடியாத நிலை இருந்தது. எனினும் அந்த இறுதி பகுதியில் மணியன் உரையாற்றும் போது அடித்து பிடித்து அரங்கினுள் நுழைந்து விட்டேன்.
மிக அற்புதமாக பேசினார். ஓமந்தூரார் தொடங்கி காமராஜ் வரை தமிழக முதல்வராக இருந்தவர்களெல்லாம் எப்படி எளிமையானவர்களாக அரசியலை மக்கள் தொண்டாக கருதி கறைபடாத கரங்களுக்கு சொந்தக்காரர்களாக இருந்தார்கள் என்பதை பல உதாரணங்களுடன் வரிசைபடுத்தி, அதனை இன்றைய அரசியல் தலைமைகளுடனும், முதலமைச்சர்களின் செயல்பாடுகளுடன் ஒப்பிட்டு இன்று அரசியல் அடைந்துள்ள சீர்கேடை வெளிச்சம்போட்டுக் காட்டினார். ஈழப் பிரச்சினையில் கருணாநிதி ஆடிய நாடகங்களை கண்டித்தும்(மற்றவர்களைப் போல ஓட்டரசியல் உள்நோக்கம் கொண்டு அல்ல; உணர்வு ரீதியாக), சாமானியன் ஒருவனின் வாழ்க்கையில் ஊழலும், அரசியல் அராஜகங்களும் எப்படியெல்லாம் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்பனவற்றையெல்லாம் சுட்டிக்காட்டியும் அறச்சீற்றம் காட்டினார். நீண்ட நாட்கள் கழித்து ஒரு நல்லவரின் நாவன்மையின் பொழிவு, செவிக்கும் சிந்தனைக்கும் விருந்தாக அமைந்தது.
அரங்கினுள் இருந்தவர்களில் மிகப் பெரும்பாலானோர் ஐம்பது வயதிற்கும்
மேலானவர்களே. இளைஞர்களாக தென்பட்டவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். இம்மாதிரியான உரைகள் இளைஞர்களிடம் சென்று சேர்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். போலியாக ஆவேசம் காட்டி ஓட்டுக்காக வேஷம் போடும் கபடவேடதாரிகளின் பின்னால் கட்டுண்டு கிடக்கும் அவர்களை மணியன் போன்ற சமூக இயக்கம் ஒன்றை கட்டமைக்க பாடுபடும் நேர்மையாளர்களின் பின்னால் அணிவகுக்க செய்யவேண்டும். அப்போதுதான் நாம் கருத்தளவில் பேசி கனவு கண்டுவரும் அரசியல் சமூக மாற்றத்திற்கு ஒரு துரும்பையாவது கிள்ளிப்போட்டதாக இருக்கும்.
இதற்குமுன் டாக்டர்.எம்.எஸ்.உதயமூர்த்தி இதே போன்று ‘மக்கள் சக்தி இயக்கம்’ என்னும் சமூக இயக்கத்தைக் கட்டியெழுப்பியபோது, அது பெரிய எதிர்பார்ப்புக்கும் வரவேற்புக்கும் உள்ளானது. பாலசந்தர் அதன் இன்ஸ்பிரேசனில்தான் ‘உன்னால் முடியும் தம்பி’ படம் கூட எடுத்தார். அதில் கதாநாயகனின் பெயர் ‘உதயமூர்த்தி’ என்று இருப்பதை கவனிக்கலாம். ஊழலுக்கும் எதிராக அது நடத்திய சில ஆர்பாட்டங்களில் நான் கலந்து கொண்டிருக்கிறேன். குறிப்பாக சிலிண்டர் தட்டுபாடைப் பயன்படுத்தி நாமக்கல் சமையல் கேஸ் கடை ஒன்று அடித்துவந்த கொள்ளைக்கு எதிராக அது நடத்திய போராட்டங்களை நான் அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. (காரணம் அதன் பொறுப்பாளர் என் உறவினர்). ஆனால் காலப்போக்கில் அந்த இயக்கம் காணாமல் போனதன் காரணம் அது முதியவர்களின் இயக்கமாக உருவாகி அந்த முதியவர்களின் காலத்தோடு மூப்பும் எய்திவிட்டது. இளைஞர்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் களப்பணிகளில் அது கவனம் செலுத்தவில்லை. மணியனின் இந்த காந்திய அரசியல் இயக்கமும் அப்படி ஆகிவிடக்கூடாது.
*
காந்தியின் கீதை உரைகளில் வெளிப்படும் வர்ணாசிரம ஆதரவு, கர்மயோகத்தை அவர் வலியுறுத்திய விதம், அவரால் மட்டுமே புரிந்துகொள்ளமுடிந்த அவரின் ஆன்மிக விசாரங்கள் எல்லாம் எனக்கு ஏற்புடையன அல்ல. காந்தியின் செக்ஸ் பரிசோதனைகள் படிக்க சுவாரஸ்யமானவை. சில சமயம் அவரின் செயல்பாடுகளை நோக்கும்போது அவரை ஒரு மசோக்கிஸ்டாகவே(masochist) கருத வேண்டியுள்ளது. என்றாலும், இவற்றை விலக்கி - மற்ற அவரின் ஒட்டு மொத்த அற்பணிப்பு வாழ்க்கை மற்றும் போராட்ட திண்மை ஆகியனவற்றை ஒப்புநோக்கும்போது, அவரை விட இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு சிறந்த மனிதராக இன்னொருவரை இனம் காணமுடியாது என்பதை என்றும் ஒப்புக்கொள்வேன். காந்தியை அறிந்துகொள்ளாமலே நிதமும் அவரை நிந்தனை செய்பவர்களை நானறிவேன். அவர்கள் ஒருமுறை அசோகமித்திரன் எழுதிய ‘காந்தி’ சிறுகதையை வாசிக்க வேண்டும்.
0 comments:
Post a Comment