நண்பர்களுடனான விவாதத்தின் ஒரு பகுதி:
இங்கே இப்படம் பிடிக்கவில்லை என்று சொன்ன அனைவரும் முன்வைத்த காட்சிகளும் கருத்துக்களும் என்னை கன்வின்ஸ் பண்ணவில்லை. ’ஆம்.. அந்த இடத்தில் flaw இருக்கிறது’ என்று ஒப்புக்கொள்ளும் ஒரு குறையைக் கூட இன்னும் நீங்கள் சுட்டிக்காட்டவில்லை. மேலும் இப்படத்தை தியேட்டரில் பார்ப்பதில் அனுபவிக்கும் பிரம்மாண்டத்திற்கும் மசமச இண்டர்நெட் டவுண்லோடில் பார்ப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. நிச்சயமாக எனக்கு பிடித்ததால் எல்லோருக்கும் பிடிக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. என்னால் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும் ஒரு கதையை அதன் காட்சிப்படுத்தலை வலுவான வாதங்களுடன் முன்வைக்கிறேன். அவ்வளவுதான்.
எனக்கு அப்படத்தில் பிடிக்காத ஆனால் இங்கே யாருமே சுட்டிக்காட்டாத சில விஷயங்கள்:
1. எனக்கு சோழர்களை நர மாமிசம் தின்பவர்களாக காட்டியதில் உடன்பாடு இல்லை. சோழர்கள் நல்லதொரு நாகரிக சமூகமாக வாழ்ந்தவர்கள். நாட்டில் இருந்தாலும் தீவில் இருந்தாலும் மனிதனை தின்னும் அளவிற்கு வாழ்க்கைமுறையில் காட்டுமிராண்டித்தனம் வந்திருக்கும் என்பது சுத்த பேத்தல்.
2. சோழர் குடிமக்களாக காட்டப்படுபவர்களெல்லாம் அதீத கருப்பில் மிக அசிங்கமாக காட்டப்பட்டிருந்ததும் அப்படியே. வறுமை பீடிப்பதால் மட்டுமே ஆப்பிரிக்க கருப்பு வந்துவிடுமா? இவர்களை விட பழங்குடியினராக காட்டப்பட்ட மக்கள் நல்ல தேக ஆரோக்கியத்துடன் செழுமையாக இருந்தனர். ஆனால் அவர்கள் வணங்கும் சோழர்கள் சோம்பியும் சூம்பியும் இருப்பதாக காட்டியிருப்பது ஏற்புடையதில்லை.
3. சோழர்களுக்கும் படை வீரர்களுக்கும் இடையே நடைபெறும் சண்டையில் திடீரென்று பாண்டிய குல வாரிசுகளெல்லாம் அரசர் கால ஆடை அணிந்து கொண்டு அணிவகுத்து நிற்பது சுத்த தமாஷ்.
4. பூமியின் ஒவ்வொரு இண்டு இடுக்கையும் தன் கேமிரா கண்ணால் சல்லடை போட்டு சளித்து எடுக்கக்கூடிய நவீன சேட்டிலைட்கள் வந்துவிட்ட யுகம் இது. இதில் இன்னும் ஒரு தனி தீவில் பழங்கால பாழடைந்த நகரம் ஒன்று ஆள் அரவமற்று கிடப்பதாக, அதன் அருகில் மக்கள் கூட்டம் வாழ்வதாகவும் அது இந்த உலகிற்கு இன்னும் தெரியவில்லை என்பது நம்பும்படி இல்லை.
5. சோழர்கள் அணியும் ஆடைகள் ஆபரணங்களெல்லாம் அந்த குகைக்குள் அவர்களே தயாரித்துக் கொண்டதாக இருக்க வேண்டும். அந்தளவு தொழில்நுட்பம் வாய்க்கப்பட்டவர்களால் தங்களுக்கு தேவையான உணவை தாங்களே விளைவித்துகொள்ள முடியவில்லை என்பது காதில் வைக்கும் பூ. ’சோழ நாடு சோறுடைத்து’ என்று புகழப்பட்ட பெருமை மிக்க சமூகமன்றோ சோழர்கள்?!
இப்படி சிலவற்றை சொல்லிக்கொண்டே போகலாம்.
0 comments:
Post a Comment