மலையாளிகளின் உளவியலை இந்த கடிதம் மூலம் புரிந்துகொள்ளமுடிகிறது.நேரடியாக பாதிக்கப்படும் நாம் இதற்க்காக கோபப்படமுடிகிறதே ஒழிய பரிதாபப்படமுடியவில்லை
இதே மனோபாவத்தையும் அலட்சியத்தையும்தான், நாமும் இங்கே வாழும் இலங்கை தமிழர்கள் குறித்து கொண்டிருக்கிறோம் என்று நான் சொல்வேன். ‘சிலோன் ரிட்டர்ன்’ என்றாலே ஒரு இளக்காரம்தான்.
கேரள கம்பெனியில் இருமுறை பணிபுரிய நேர்ந்திருக்கும் எனக்கு மாறுபாடான அனுபவம் ஏதும் இதுவரை ஏற்பட்டதில்லை. ஆனால் பொதுவில் தமிழர்களை ‘பாண்டிங்க’ என்று திட்டுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஒருவேளை அங்கேயுள்ள அரசு அதிகாரிகளுடன் புழங்க நேர்ந்தால் அது மாதிரி நிகழ்ந்திருக்கலாம்.
கேரளாவில் இடதுசாரி அரசியல் எல்லாவற்றையும் பாழ்படுத்தி விட்டதாக ஜெமோ கூறுகிறார். இதேபோன்ற குற்றச்சாட்டு கம்யூனிச அரசு ஆளும் மேற்கு வங்கம் மீதும் உண்டு. இடதுசாரி சிந்தாந்தம் முதலாளித்துவத்தை கட்டுக்குள்தான் வைத்திருக்கும். அதன் ஆகப்பயன் எல்லாம் விளிம்பு நிலை மனிதர்களினிடத்தில்தான் தெரியும். கான்கிரீட் காடுகள் பெருகுவதுதான் வளர்ச்சி; கால் வயிறு அரை வயிறு மனிதர்களின் இன்றைய நாளின் வாழ்வாதாரப் பிரச்சினைகளைப் பற்றியெல்லாம் பெரிய கவலை கிடையாது என்பது சரியான சமூக சிந்தனையாக இருக்காது. இடதுசாரி அரசியல் சமூகத்தின் வேர் வரையிலான மனிதர்கள் குறித்தும் கவலைப்படுகிறது. அம்பானிகளை உருவாக்குவதல்ல அதன் வேலை.
மற்றபடி அங்கேயுள்ள கல்வி நிலை குறித்தும் மற்ற விஷயங்கள் மீதும் அவர் கூறியுள்ளதெல்லாம் ஒப்புக்கொள்ளக்கூடிய அலசல்தான். அதன் தொழில்வளம், விவசாயம் எல்லாம் எதனால் பாதிக்கப்பட்டது என்பதெல்லாம் சமூக பொருளாதார ரீதியிலான ஆய்வுக்குட்பட்ட விஷயங்கள். எல்லாமே இடதுசாரி அரசியலால்தான் நிகழ்ந்தது என்பது பிரச்சினையை முன்முடிவுடன் அணுகுவதால் எழும் எண்ணம் என்றே சொல்ல தோன்றுகிறது.
0 comments:
Post a Comment