சச்சின்..
21 வருடங்களாக சர்வதேச போட்டி ஒன்றில் தொடர்ந்து ஒரே உத்வேகத்துடன் விளையாடி வருவது என்பது நினைத்து பார்க்க முடியாத சாதனை. அதிலும் தொடர்ந்து மக்களின் அதீத எதிர்பார்ப்பை நிறைவு செய்யும்படி ஆடியாக வேண்டும் என்பது பெரிய நெருக்கடி. எல்லாவற்றையும் சிறப்பாக செய்து வருகிறார்.
டென்னிஸ் எல்போ பிரச்சினை ஒன்றைத் தவிர மற்றபடி அவருடைய உடல்திறனையும் மெச்சும்படி பராமரித்து வருகிறார். 50 ஓவர்களும் களத்தில் இருந்து 400 ரன்களுக்கும் ஓடி சலிப்பது என்பது எல்லா 37 வயதுகாரர்களுக்கும் எளிதான காரியம் அல்ல.
இவருடன் அறிமுகமாகி இன்றைய புயல்வேக கிரிக்கெட்டுக்கு ஈடுகொடுக்கமுடியாமல் ஆட்டத்தில் இல்லாமலே போய்விட்ட லாரா, இன்சமாம் இந்த இடத்தில் ஏனோ எனக்கு நினைவுக்கு வருகிறார்கள். அவர்களெல்லாம் ஒரு 20-20 கிரிக்கெட் கூட விளையாடவில்லை என்று நினைக்கிறேன்.
சச்சினிடம் எனக்கு பிடித்த விஷயம், இவ்வளவு பெரிய celebrity ஆக இருந்தும் அவரைப்பற்றி இதுவரை எந்த கிசுகிசுவோ சர்ச்சையோ கிடையாது. இந்திய கிரிக்கெட்டின் ஸ்ரீசாந்த், யுவராஜ், ஹர்பஜன் போன்ற குறைகுடங்கள் போடும் துள்ளாட்டத்தை இங்கே ஒப்பிட்டு பார்த்தால் இந்த நிறைகுடத்தின் அருமை புரியும்.
சச்சின் சர்வதேச கிரிக்கெட்டில் நூறாவது சதத்தை நெருங்கி வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐம்பதுகளை நூறாக மாற்றும் கவன குவிப்பை அவர் வளர்த்துக் கொண்டுள்ளதால், இச்சாதனையும் விரைவிலேயே எட்டப்படும் என்று உறுதியாக நம்பலாம்.
கிரிக்கெட் என்பது ஃபாஸ்ட் புட் அளவிற்கு வேகமாக போய்க்கொண்டிருக்கிறது. அதனால் ஒருநாள் கிரிக்கெட்டில் 200 ரன் சாதனை என்பது விரைவிலேயே யாராவதால் முறியடிக்கப்படலாம். ஆனால் கிரிக்கெட் விளையாட்டுக்கு சச்சினின் ஒட்டுமொத்த பங்களிப்பை இந்த நூற்றாண்டில் இன்னொருவரால் விஞ்சி விட முடியாது என்பது வெள்ளிடை மலை.
Copybook cricketer!
1 comments:
Tendulkar is an amazing player!
Post a Comment