நாமக்கல் தொகுதி ரவுண்டப்

Posted: Wednesday, March 23, 2011 | Posted by no-nononsense | Labels: 0 comments

3 votes

அன்புள்ள இட்லிவடை,

நாமக்கல் தொகுதியின் தேர்தல் நிலவரம் பற்றி என்னுடைய சில அவதானங்களை அனுப்பியுள்ளேன். ஏற்புடையதாக கருதினால் அதை நீங்கள் இட்லிவடையில் பிரசுரிக்கலாம்.

நன்றி.
அன்புடன்,
ராஜா,
நாமக்கல்.



தொகுதி: நாமக்கல்

முக்கிய போட்டியாளர்கள்:
கொ.மு.க: ஆர்.தேவராஜன்
அ.தி.மு.க: கே.பி.பி.பாஸ்கர்

நாமக்கல் தொகுதியை பொறுத்தவரை அது தனித் தொகுதியிலிருந்து பொதுத் தொகுதியாகி இருப்பதுதான் இந்த சட்டமன்ற தேர்தலின் முக்கியமான சிறப்பம்சம். தொகுதியில் பெரும்பான்மையினராகவும் செல்வாக்கு பெற்றவர்களாகவும் இருக்கும் கொங்கு வேளாள கவுண்டர்களின் நீண்ட நாளைய எதிர்பார்ப்பு இது.

இதில் சாதி ரீதியான மனசாய்வுகள் ஒருபுறம் இருக்க, தனித் தொகுதி என்பதால் உள்ளூரில் அறிமுகமில்லாத தொகுதிக்கு துளியும் சம்மந்தமில்லாத தற்போதைய சிட்டிங் எம்.எல்.ஏ., ஜெயகுமார் போன்றவர்களை அரசியல் கட்சிகள் கொண்டு வந்து நிறுத்திவிடுவது வாடிக்கையாக இருந்தது ஒரு குறையாக இருந்தது. மாநில அரசின் தலைமையை மனதில் கொண்டு வேறு வழியில்லாமல் அவர்களை தேர்ந்தெடுக்கும் ஒரு இக்காட்டான சூழ்நிலை இனிமேல் தவிர்க்கப்படும் என்பது தொகுதி மக்களிடையே பொதுவில் ஏற்பட்டுள்ள ஒரு ஆறுதல்.

இனி தேர்தல் கூட்டணிகள் முடிவாவதற்கு முன்பாக தொகுதியில் நிலவிய கருத்துக்களை ஆராய்வோம்.

சட்டமன்ற தேர்தல்கள் முடிந்து, அடுத்த தேர்தல்கள் வரும்போது எழும் முக்கியமான ஒரு கேள்வி ‘என்ன செய்தார் உங்கள் எம்.எல்.ஏ?’ என்பதாக இருக்கும். ஆனால், நாமக்கல் தொகுதியை பொறுத்தவரை ’யார் உங்கள் எம்.எல்.ஏ?’, ‘எப்படி இருப்பார் உங்கள் எம்.எல்.ஏ?’ என்னும் ரீதியில் தான் கேள்விகள் இருக்கும். அந்த அடுக்கடுக்கான எல்லா கேள்விகளுக்கும் பதில் ஒன்றுதான் — ‘தெரியாது’ என்பதுதான் அது.

அந்தளவுக்கு தொடர்ந்து இரண்டாவது முறையாக 2006-ல் நாமக்கல்லில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜெயகுமார், தொகுதியை அம்போவென விட்டு விட்டார். கடந்த முறையே அவர் மீது இதே போன்ற குற்றசாட்டு இருந்தது. ஆனால் இப்போதைய நிலைமையை எண்ணிப் பார்க்கையில் அதுவே எதேஷ்டம் என்பதாக இருக்கிறது. சென்ற முறை எம்.எல்.ஏ.,ஆக இருந்த பொழுதாவது ஆறு மாதங்களுக்கு ஒருமுறையாவது தொகுதியில் மருந்துக்காவது கண்ணில் பட்டார். ஆனால் 2006-ல் தேர்தல் முடிந்து பெரிதாக ஒரு கும்பிடு போட்டுவிட்டுச் சென்றதோடு சரி. அதற்குப் பிறகு எதற்காகவும் எட்டிப் பார்க்கவில்லை. ஒரு அரசு நலத் திட்ட விழா, ஒரு நல்லது கெட்டது... ம்ஹூம்... எம்.எல்.ஏ.,வை எந்த நிகழ்ச்சியிலும் பார்த்ததேயில்லை. நகைச்சுவைக்காக எம்.எல்.ஏ காணவில்லை என்று போஸ்டர் ஒட்ட வேண்டும் என்று எழுதுவார்கள். அதற்கு நடைமுறை எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டி வாளாவிருந்து விட்டார் எம்.எல்.ஏ ஜெயகுமார்.

இதற்கு லோக்கல் தி.மு.க மத்திய அமைச்சரின் உருட்டல் மிரட்டல்கள் தான் காரணம் என்பார்கள். அவருக்கு டெல்லி அரசியலில் நாட்டம் அதிகமாகிவிட்டது என்றும் சொல்வார்கள். ஏற்றுக்கொள்ளக் கூடிய காரணமாக இருப்பது, தொகுதி மறுசீரமைப்பில் நாமக்கல் தனித் தொகுதிலிருந்து பொதுத் தொகுதியாக மாற்றப்படும் செய்திகள் வெளியானதுதான். அடுத்தமுறை இங்கே போட்டியிடப் போவதில்லை என்பதால் தொகுதிக்கு ரிட்டர்ன் டிக்கெட் எடுக்காமல் சமர்த்தாக சிக்கனம் பிடித்து விட்டார். இப்போது ஜெயகுமார் ஆத்தூர் (தனி) தொகுதிக்கு விருப்ப மனு கொடுத்திருக்கிறார் என்பது ஒரு தகவலுக்காக.

தொகுதிக்கு ஏன் எம்.எல்.ஏ வரவில்லை என்பதெல்லாம் அவருடைய தனிப்பட்ட பிரச்னைகள். தொகுதி நலனை பொறுத்தவரை அவர் பூஜ்ஜியம். அதனால் இம்முறை காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியாகிய தி.மு.கவிற்கு எதிராக உள்ளூரில் பெரும் அதிருப்தி அலை நிலவுகிறது. அதனாலேயே காங்கிரசின் விருப்பத் தொகுதிப் பட்டியலில் பல ஆண்டுகளாக இடம்பிடித்துவந்த நாமக்கல்லை இம்முறை காங்கிரஸ் கைகழுவி விட்டது. கேட்டிருந்து, கிடைத்து, ஊருக்குள் ஓட்டுக்கேட்கவும் வந்திருந்தால் ரணகளமாகியிருக்கும்!

தமிழக அரசியல் கட்சிகளின் மாரத்தான் கூட்டணி பேச்சுவார்த்தைகள் ஒருவழியாக முடிந்து தற்போது நாமக்கல்லில் கொ.மு.க.வும், அ.தி.மு.க.வும் போட்டியிடுகிறார்கள் என்பது தெளிவாகியுள்ளது.

கொ.மு.க.வை பொறுத்தவரை அவர்கள் இந்தத் தேர்தலில் தங்களின் சாதி ஓட்டு வங்கியை இரண்டாம் முறையாக நிரூபித்துக் காட்ட வேண்டிய ஒரு ’ஆசிட் டெஸ்ட்’ நிலையில் இருக்கிறார்கள். அதற்கான எல்லா வித சாதகமான அம்சங்களும் இருந்தன — அவர்கள் சென்று தி.மு.க அணியில் சேரும் வரை. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக அவர்கள் சென்று தி.மு.க கூட்டணியில் இணைந்து சீட் வாங்கிக் கொண்டது கொங்கு வேளாள கவுண்டர்களிடையே மேலிருந்து கீழ் வரை ஒரு அதிருப்தி அலையை உண்டாக்கியுள்ளது.

காரணம் அடிப்படையில் கொங்கு வேளாளர்களுக்கு இணக்கமான கட்சி அ.தி.மு.க.தான் என்பது வெள்ளிடை மலை. அது மாத்திரமல்லாமல், கொங்கு வேளாளர்களின் அடிப்படையான சில கோரிக்கைகளை கூட தி.மு.க அரசு கண்டுகொள்ளாது காலம் தாழ்த்தியது குறித்து அவர்களின் சமுதாயத்தில் ஒரு கோபம் இருந்துவருகிறது. அதனுடன் பொதுவில் தி.மு.க ஆட்சி குறித்து இருக்கும் எதிர்மறையான கருத்துநிலையும் இணைந்துகொள்ள, கொங்கு சமுதாயத்தின் ஒட்டு மொத்த கருத்தோட்டமும் தி.மு.க.வுக்கு எதிராக மாறியிருந்தது.

இந்நிலையில் யார் அதிக சீட் கொடுத்தார்களோ அவர்களிடம் சென்று சேர்ந்துகொண்ட கொ.மு.க. தலைவர்களின் செயல் கொங்கு வேளாளர்களிடையே கசப்புணர்வையே ஏற்படுத்தியுள்ளது. விளைவாக, மணி கவுண்டர் போன்ற அவர்களின் சில தலைவர்கள் கொ.மு.க.வுக்கு எதிர்நிலை எடுத்து அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டார்கள். ஏற்கனவே தனி அமைப்பு வைத்துக்கொண்டு தனியாவர்த்தனம் செய்துவரும் தனியரசு அ.தி.மு.க கூட்டணியில் இணைந்து ஒரு சீட்டும் வாங்கிவிட்டார். அவருக்கு ஓரளவு பரவலான தனிப்பட்ட செல்வாக்கு உண்டு. அதனால் சாதி ரீதியான ஓட்டுக்கள் இம்முறை சிதறவே அதிக வாய்ப்புள்ளது.

அதை ஈடுகட்டும் விதமாக நாமக்கல்லில் கொங்கு வேளாளர்களின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆர்.தேவராஜன் என்பவருக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது. அது எந்தளவு வேலை செய்யப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எனினும், கொ.மு.க.வுடன் இணைந்து தி.மு.க உடன்பிறப்புகள் வேலை பார்ப்பதில் நாமக்கல் தொகுதியை பொறுத்தவரை பிரச்னை இருக்காது. இரண்டு கட்சிகளின் மாவட்ட அளவிலான தலைவர்களும், வேட்பாளரும் ஒரே இனம் என்பதோடு, சுற்றி பார்க்க தூரத்து உறவினர்களாக இருப்பார்கள்.

உடன்பிறப்புகளின் இனப் பாசம் ஒருபுறம் இருந்தாலும், வெகுசனமக்களிடம் இத்தேர்தலில் பொதுவில் நிலவும் பணப் பாச எதிர்பார்ப்பு நிறைவு செய்யப்படுமா என்பது கேள்விக்குறிதான். தி.மு.க என்றால் ஓட்டுக்கு காசு கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்; உரிமையாக(?) கேட்கவும் செய்யலாம். கொ.மு.கவில் ஓட்டுக் கேட்டு வரும் மாமன், மச்சான், பங்காளிகளிடம் அதை எதிர்பார்க்க முடியுமா?

இது தி.மு.க கூட்டணியின் நிலைமை.

எதிர்புறம் அ.தி.மு.க கூட்டணியில் முதலில் வெளியான பட்டியலில் நாமக்கல் தே.மு.தி.க.வுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அது அப்படியே தொடர்ந்திருந்தால் சிரமம் தான்; கொங்கு வேளாளர்களின் கணிசமான ஓட்டுக்களை இலகுவில் தேவராஜன் பாக்கெட்டில் போட்டுக்கொண்டிருந்திருப்பார். ஆனால் திருத்தப்பட்டு வெளியான இரண்டாவது பட்டியல்தான் நாமக்கல் தொகுதியின் கதாநாயகன். (இப்போதெல்லாம் கதாநாயகன், கதாநாயகி என்ற வார்த்தைகளை கட்டுரைகளில் சேர்த்துக்கொண்டால்தான் அதை சமகால அரசியல் கட்டுரை என்றே ஒப்புக்கொள்கிறார்கள்!).

அதன்படி, அதாவது கதாநாயகன் என்று சொன்னேனே அந்த அ.தி.மு.க.வின் திருத்தப்பட்ட பட்டியலின்படி இந்த ஒட்டு மொத்தக் கட்டுரையையும் ஒரு வரியில் சுருக்கி இப்படி எழுதிவிடலாம் — ’அ.தி.மு.க.வில் உள்ளூரில் பொது மக்களின் செல்வாக்கு பெற்ற கே.பி.பி.பாஸ்கருக்கு சீட் கொடுக்கப்பட்டிருப்பதால் மற்ற எதையும் பரிசீலிக்க அவசியமின்றி ‘அட்வாண்டேஜ் அ.தி.மு.க’ என்று சொல்லிவிடலாம்’.

அ.தி.மு.க.வின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பாஸ்கர் உள்ளூரில் நன்கு அறிமுகமானவர். பொதுமக்களின் அபிமானத்திற்கு உரியவர். அதனாலே கட்சிகளை கடந்தும் ஓட்டுகளை பெறும் செல்வாக்கு படைத்தவர். அவருடைய தந்தை நாமக்கல் நகராட்சியில் சேர்மனாக இருந்தவர் என்பதால் பாரம்பரிய அரசியல் அடையாளமும் வாய்க்கப்பட்டவர். அதோடு கடந்த முறை நடந்த உள்ளாட்சி தேர்தலில் நகராட்சி சேர்மனாக தேர்ந்தடுக்கப்பட்டு, பின்னர் தி.மு.க.வின் ஆள் கடத்தல் அரசியல் செப்பிடு வித்தையில் பதவியை பறிகொடுத்திருந்தது வேறு அவருக்கு மக்களிடையே ஒரு அனுதாப அலையை சம்பாதித்து கொடுத்திருந்தது. அதனால் அ.தி.மு.க. என்றால் வேட்பாளராக பாஸ்கர் அறிவிக்கப்பட வேண்டும் என்று பொதுவில் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.

மாறாக, முதலில் வெளியான பட்டியலில் அ.தி.மு.க பெயர் (பாஸ்கர் பெயர்) இடம்பெறாதது தொகுதி மக்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. எப்போதும் ஒரு சிறிய ஏமாற்றத்திற்கு பிறகு அதில் வரும் மாற்றம் ஆர்பரிப்பை தருவதாக அமையும். பாஸ்கரின் தேர்வும் அப்படி ஒன்றை அளித்துள்ளது என்றுச் சொல்லலாம். இதில் நான் எதையும் மிகைப்படுத்திச் சொல்லவில்லை என்பதை ஒருமுறை உறுதிப்படுத்திக் கொள்கிறேன்.

பாஸ்கருக்கு சாதகமாக இருக்கும் இன்னொரு அம்சம் - அவர் உள்ளூர் பிள்ளை என்பது. தேவராஜனின் வேர்களும், உறவுகளும் நாமக்கல்தான் என்றாலும், அவர் பல காலமாக திருச்சியில் நிலைகொண்டுவிட்டவர். அதனால் அசலூர்க்காரர் என்னும் எண்ணப்பூச்சு அவர் மேல் பூசப்படுவதை அவரால் தவிர்க்க முடியாது.

ஆக, நாமக்கல் தொகுதியை பொறுத்தவரை தற்சமயம் வரை முன்பே சொன்னது போல ‘அட்வாண்டேஜ் அ.தி.மு.க’ என்று சொல்லலாம். எனினும், இலவச அறிவிப்புகளைப் பற்றிய எதிர்பார்ப்புகள் - அலசல்கள், ஏற்கெனவே அளித்த இலவச பொருட்களை மனங்கோணாமல் வாங்கி பரணிலாவது கடாசிக் கொண்ட பாங்கு ஆகியவற்றை பரிசீலிக்கும்போது, நம் மக்கள் கடைசி நேரத்தில் எதற்காக எந்த பொத்தானை அமுக்குவார்கள் என்பதெல்லாம் அவர்களுக்கே வெளிச்சம். இன்னொரு முறை பாஸ்கர் தோற்பதை காண சகிக்க மாட்டார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன்.

ஊர் நிலவரம் பற்றி பகிர்ந்துகொள்ள வாய்ப்பளித்த இட்லிவடையாருக்கு நன்றி. (அரசியல் என்று வந்து விட்டாலே வாய்ப்பளிப்போரை விதந்து இட்லியார், வடையார் என்று வாயாற விளித்து வைப்பது - அது நல்லது!).

http://idlyvadai.blogspot.com/2011/03/blog-post_23.html

மேலும்...

ஜாதி ஒழிப்பு

Posted: Saturday, March 12, 2011 | Posted by no-nononsense | Labels: 0 comments

இன்று ஒரு அன்பர் என்னிடம் ஜாதி ஒழிப்பைப் பற்றி கருத்து கேட்டிருந்தார். அவருக்கு எழுதிய பதிலை இங்கேயும் பகிர்ந்து கொள்கிறேன்.

...........
I have a question, what you think about "Caste System in Tamil Nadu" either in people's mind or in the tamil nadu state politician mind.?
Please share your view point or your friends view point.
I want to see "United Tamil Nadu State" and my vote goes for united Tami Nadu only(I hate the caste system). We all know, our state is fully separated by caste and by politician and people.

Thanks,

..........

அன்புள்ள ...,

ஜாதி மட்டுமல்ல மக்களின் உணர்வுநிலையை தொட்டுப் பார்க்கும் எல்லா சமுதாய அவலங்களையும் வெறும் ஓட்டுக்களாக மட்டுமே பார்க்கக்கூடியவர்கள் அரசியல்வாதிகள். இன்றுள்ளவர்கள் தாம் அப்படி என்று இல்லை. எப்போதும் அப்படித்தான். தற்காலத்தில் ஜாதிக் கட்சிகளின் வரவால் அந்த சதவிகிதம் அதிகரித்திருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம்.

ஏன் அரசியல்வாதிகள் ஜாதிப் பிரிவினையை ஆதரிக்கிறார்கள்? அது மக்களிடம் எடுபடுகிறது என்பதால் ஆதரிக்கிறார்கள். ஏன் எந்த அரசியல்வாதியும் ஜாதி ஒழிப்பை முன்வைத்து பிரச்சாரம் செய்வதில்லை? ஏனென்றால் வெகுஜன ஆதரவு அதற்கு கிடையாது என்பதால். அதனால் பிரச்னை மக்களிடம் தான் இருக்கிறது. அதனால் அதன் தீர்வும் மக்களிடம் தான் இருக்க வேண்டும்.

ஆனால் அதுவும் அவ்வளவு சுலபம் அல்ல. ஏனென்றால் நீங்கள் தமிழரா, தெலுங்கரா, மலையாளியா என்பதெல்லாம் பிறந்த பிறகு நீங்கள் கற்றுக்கொள்ளும் மொழியை பொறுத்தது. நடுவில் வேறு மொழியை கற்றுக்கொண்ட பின்னால் நீங்கள் எந்த மொழியினர் என்று கண்டறிவது கடினம். எடுத்துக்காட்டாக, ஒரு தமிழர் பெங்களூரில் சென்று வாழ்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் அங்கே தமிழ் பேசும் வரைதான் தமிழர் என்னும் அடையாளம் அவர் மீது இருக்கும். அதுவே அவர் சீக்கிரமாக கன்னடம் கற்றுக்கொண்டு விட்டார் என்றால், பிறகு அவரை கன்னடரிலிருந்து வேறுபடுத்திப் பார்ப்பது எளிதன்று. அவரும் தன்னை கன்னடர் என்றே சொல்லிக்கொள்ளலாம்.

ஆனால் ஜாதி பொறுத்தவரை அப்படியல்ல. அதனை நாம் பிறந்த பின்னர் தேர்ந்தெடுப்பது இல்லை. பிறக்கும்போதே இன்னார் இன்ன ஜாதி என்ற முத்திரையுடனே பிறக்கிறோம். அந்த முத்திரை நிரந்தர முத்திரை. எனக்கு வேண்டாம் என்று நீங்கள் ஒதுக்கி வைத்தாலும் அது விடாமல் துரத்தும். ஏனென்றால் அது நீங்கள் வரித்துக்கொண்டது அல்ல. உலகம் உங்கள் மீது சுமத்தியது. பள்ளி, கல்லூரி, வேலை என்று எல்லா இடங்களிலும் அதன் பிடி வலுவாக நீண்டிருக்கிறது. நீங்கள் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் அதனுடன் ஒட்டியே வாழ வேண்டியுள்ளது. அந்தளவு அது பல்லாயிரம் ஆண்டுகளாக இந்திய நாகரிகத்தில் ஆழ வேரூன்றியுள்ளது. அதை நம் காலத்தில் உடனடியாக வேரறுத்து வீழ்த்துவது இயலாத காரியம். காரணம் நம் இருவரைப் போல ஜாதியை விலக்க நினைப்பவர்களின் எண்ணிக்கை குறைவு என்பதுதான்.

அந்த எண்ணிக்கை பெருக என்ன செய்ய வேண்டும்? நம் பிள்ளைகளின் மீது ஜாதியின் நிழல் படியாமல் வளர்க்க வேண்டும். அவர்களின் எண்ணங்களில் அழுத்தமாக ஜாதிக்கு எதிரான கருத்துக்களை விதைக்க வேண்டும். அந்த கருத்து சுற்றியுள்ள ஜாதி ஆதரவு கருத்துச்சூழல்களால் நீர்த்துப்போய் விடாமல் கண்காணிக்க வேண்டும். அதற்கு அவர்களுடைய பகுத்தறிவின் கதவுகளை திறந்து விட வேண்டும். சின்ன வயதிலேயே படிக்கும் பழக்கத்தை ஊட்டி வளர்க்க வேண்டும். அதன்மூலம் வளரும் சுயசிந்தனை அளிக்கும் தெளிவுதான் தான் அவர்களை பழைய மூடத்தனங்களின் கரங்களில் இருந்து காக்கும். இங்கே சுயசிந்தனை, தெளிவு என்னும் வார்த்தைகள் மிக முக்கியமானவை.

இப்படி செய்தால் உடனடியாக ஜாதியின் தளையிலிருந்து விடுபட்டு விட முடியுமா என்றால், இல்லை என்பதுதான் பதில். ஆனால் இந்த மனித சமுதாயத்தை அதை நோக்கி அழைத்துச் செல்லும் பாதையில் பயணிக்க ஆரம்பித்து விட்டோம் என்று அர்த்தம். இப்படி பலராலும் பல திசைகளிலும் எடுத்து வைக்கப்படும் சின்ன சின்ன தப்படிகள், மெல்ல எல்லோரையும் ஒரு குவியம் நோக்கி ஒன்று திரட்டும். அன்று ஜாதிகள் ஒழியும். அதற்கு இப்போது இருந்து முயற்சி செய்தாலுமே பல நூற்றாண்டுகள் ஆகலாம். ஆனால் அதை நோக்கி வேலை செய்கிறோம் என்பதை நமக்கு நாமே உறுதி செய்து கொள்வது மிக முக்கியம். சுயகண்காணிப்பு அவசியம். இது ஒரு சமூக பொறுப்பு. நாம் அதன் ஒரு அங்கத்தினராக நம் பங்களிப்பை இவ்விதம் நம் தலைமுறையில் அளித்து வர வேண்டும்.

பிரச்னை என்னவென்றால், நம் படித்த இளைஞர்கள் எல்லா தீர்வுகளையும் இன்ஸ்டண்டாக எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் கடைபிடிக்கும் ஒரு முற்போக்கு முன்முயற்சி அவர்கள் காலத்திலேயே அதன் பலனை அவர்கள் கண்ணில் காட்டிவிட வேண்டும் என்று எண்ணுகிறார்கள். இல்லையென்றால் மனதளவில் சோர்ந்து விட்டு விடுகிறார்கள். இந்த மனோபாவம் மாறினாலே மாற்றங்கள் தலைக்க ஆரம்பித்து விடும்.

என்னளவில் எனக்கு தோன்றிய கருத்துக்களை எழுதியுள்ளேன். நன்றி.
மேலும்...

அரசியல் சட்ட திருத்தங்கள்

Posted: Wednesday, March 9, 2011 | Posted by no-nononsense | Labels: 0 comments
நமது அரசியலமைப்பு சட்டங்களில் நிறைய திருத்தங்கள் தேவைப்படுகின்றன. நிறைய காலத்திற்கேற்ற புதிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டியுள்ளன. ஆனால் நாடாளுமன்றம் நடந்தால் தானே... தலைபோகிற பிரச்னை போல எதையாவது கிளப்பி கூச்சலிட்டு 'house adjourned' என்று சொல்ல வைத்து வெற்றி வீரர்களாக காண்டீனில் கிடைக்கும் சகாய பண்டங்களை சுவைக்க சென்று விடுகின்றனர்.

எல்லா கட்சிகளிலும் வக்கீல்கள் அணி உள்ளன. அவற்றின் வேலை இது மாதிரி தேவைப்படும் சட்டத் திருத்தங்களை முன்மொழிவதும், புதிய ஷரத்துக்களை பரிந்துரைப்பதுமாக ஒரு காலத்தில் இருந்தது. ஆனால் இன்று தங்கள் கட்சித் தலைவர் மீதுள்ள வழக்குகளை சமாளிப்பதுவே அதற்கு பெரிய வேலையாக உள்ளது. ஜெயலலிதா மீதும் சசிகலா மீதும் 15 வருடங்களாக வழக்குகள் நடக்கின்றன. ஆனால் ஒருநாளாவது அவர்கள் கோர்ட் வாசல் மிதித்திருப்பார்களா? ஒரு சாமானியனால் இது முடியுமா?

பணம், பதவி, செல்வாக்கு, அதிகாரம் மிக்கவர்கள் முன் வாலை ஆட்டும் நாய் போல தான் இன்று சட்டம் உள்ளது. அதன் ஓட்டைகளை அடைத்து சீர்திருத்தி செம்மையாக்க மீண்டும் ஒரு அரசியலமைப்பு ஆய்வுக் குழு காலத்தின் தேவையாக உள்ளது. ஆனால் JPC-கள் தான் கட்சிகளின் அதிகபட்ச தேவையாக உள்ளது. தங்களை, தங்கள் வாரிசுகளை பாதிக்கும் எந்த திருத்தத்தையும் அரசியல்வாதிகள் செய்யமாட்டார்கள்.

இதோ வருகிறது; அதோ வந்தேவிட்டது என்று லோக்பால் மசோதாவை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் வரவில்லையே. அது பிரதமர் உட்பட பொது ஊழியர்கள் அனைவருக்கும் எதிரான ஊழல் புகார்களை விசாரிக்கத் தேவையான அதிகாரங்களை கொண்டதாக இருக்கிறது. அதனாலேயே ஆளும் கட்சி, எதிர்கட்சி என ஒருவரும் அதைக் கண்டு கொள்வதில்லை. இன்றைய எதிர்கட்சி நாளைய ஆளும்கட்சி அல்லவா!
மேலும்...

ஞாநியுடன் ஒரு சந்திப்பு

Posted: Tuesday, March 8, 2011 | Posted by no-nononsense | Labels: 0 comments
நேற்று ஒரு திருமண நிகழ்ச்சிக்காக நாமக்கல் வந்திருந்த ஞாநியுடன் கணிசமான பொழுது செலவிடும் நல்வாய்ப்பு கிடைத்தது. பெரும்பாலும் தனிமையில் நடைபெற்ற உரையாடல்கள் என்பதால் யாருடைய  குறுக்கீடுகளும் இருக்கவில்லை. பெரியார், திராவிடம், சமகால இலக்கியம், சமூகம், அரசியல், இந்திய தேசியம், தமிழ் தேசியம் என்று நிறைய கேள்விகள் கேட்டேன், அவர் பதிலில் நிறைய குறுக்கிட்டேன், நிறைய உள்வாங்கிக் கொண்டேன். எதை எழுதுவது எதை விடுவது என்று தெரியவில்லை. சில நிமிடங்கள் இருவரும் மௌனமாக பேச விஷமின்றி அமர்ந்திருக்கும் அளவுக்கு உரையாடல்களின் விஸ்தீரணம் சமயங்களில் நீண்டது. அதையெல்லாம் பொருட்படுத்தாத ரொம்ப உற்சாகமான மனிதர். 

அவருடன் ஹோட்டல் அறையில் இருந்தப்பொழுது நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியிலிருந்து ஆசிரியர் ஒருவர் கல்லூரில் மாணவர்களுடன் சந்திப்புக்கு போனில் அழைத்தார். தன்னுடையது நண்பர்களை மட்டும் சந்திக்கும் ஒரு நிகழ்ச்சி நிரல் என்றும் சந்திப்புகளுக்கு ஒப்புக்கொள்ள நேரமில்லை என்றும் கூறி ஞாநி மறுத்து விட்டார்.  மறுமுனையில் பேசிய நபரோ விடுவதாயில்லை, தான் மட்டுமாவது நேரில் சந்தித்தே ஆகவேண்டும் என்று அடம்பிடித்து ஹோட்டல் அறைக்கே வந்துவிட்டார். வந்தவர் நேரே சாஷ்டாங்கமாக ஞாநி காலில் விழுந்து கண்ணீர் மல்க ஆரம்பித்து விட்டார். அல்லது அப்படி ஒரு பௌயமான த்வனியை அவரின் குரலில் உணர முடிந்தது. பின்னர், ”உங்களை மிகவும் கவர்ந்த அரசியல்வாதி/நடிகர்/எழுத்தாளர் யார்’ என்பது மாதிரி சில கேள்விகளை வந்தவர் கேட்டுக்கொண்டிருந்தார். அவர் போன பிறகு எப்படிப்பட்ட விசித்திரமான கேள்விகளை எல்லாம் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது பார்த்தீர்களா என்பதுபோல் புன்முறுவல் புரிந்தார் ஞாநி. இந்த அழகில் வந்தவர் ஒரு நூல் கூட எழுதியிருக்கிறாராம்! நாமக்கல்லில் நாமறியாத எழுத்தாளர்கள் பலரும் இருக்கிறார்கள் போலுள்ளது. 

இதை நான் குறிப்பிட்டு எழுதக் காரணம் எழுத்தாளர்களை தெய்வங்களாக கொண்டாடும் சில மனிதர்களுக்கான எடுத்துக்காட்டுக்காக. ஞாநியின் நேர்மையும், தன் கருத்தில் காட்டும் உறுதியும், அதிகாரத்தை நோக்கி சமரசமின்றி கேள்வி எழுப்பும் தீரமும் அவருக்கு ஒரு ஹீரோ அந்தஸ்தை கொடுத்திருந்தால் அதில் தவறும் இல்லை. போலியான பிம்பங்கள் நாயகர்களாக ஆராதிக்கப்படும் சமூகத்தில் சிந்தனையை செழுமைப்படுத்தும் எழுத்தாளர்கள் கொண்டாடப்படுவது நல்ல விஷயம் தான்.

பிறகு ஞாநியை சந்திக்க வேல்சாமி, பெருமாள் முருகன் வந்திருந்தனர். உண்மையில் நான் வேல்சாமியை சந்திக்கவே ஞாநியின் அறையில் காத்திருந்தேன். அதை அறைக்கு வந்த வேல்சாமியிடம் ஞாநி சொன்னதும் அவருக்கு பெரும் ஆச்சரியம் ஏற்பட்டது. என்னுடன் ஆவலாக உரையாடினார். ஏனென்றால் வேல்சாமி ஆய்வு ரீதியான எழுத்துக்களில் மிக முக்கியமான ஆளுமை. நான் மிகவும் மதிப்பு கொண்ட ஒரு எழுத்தாளர். ஆனால் உள்ளூரில் அவரை ஒரு முட்டை வியாபாரி என்னும் அளவுக்கு மேல் யாருக்கும் தெரியாது.

பிறகு ஞாநி, வேல்சாமியும் தங்களின் நட்பு ரீதியான உரையாடலை துவக்க, பெருமாள் முருகனும் இணைந்து கொள்ள, சிற்சில இடங்களில் நானும் ஆர்வமாக பங்கெடுக்க, பேச்சுக் கச்சேரி களைகட்டியது. அந்த இடத்தில் நான் என்னை ஒரு புது ஆளாகவே உணரவில்லை. பெரும்பாலும் பெரியார் மற்றும் நடப்பு அரசியல் குறித்து பேசப்பட்டதில் நிறைய புது தகவல்கள் கிடைத்தன. நல்ல ஓர் அனுபவம்.

பிறகு ஞாநி கிளம்பி ராசிபுரம் எஸ்.ஆர்.வி பள்ளிக்குச் சென்று விட்டார்.
மேலும்...

தேள்கடி வாங்கிய முனிவர் கதை

Posted: Sunday, March 6, 2011 | Posted by no-nononsense | Labels: 0 comments
தமிழக அரசியல் சூழலை முன்வைத்து:

ஒருமுறை ஒரு முனிவர் குளக்கரைக்கு குளிக்கச் சென்றாராம். அப்போது குளத்தின் நீரில் ஒரு தேள் மிதந்தபடி உயிர் பிழைக்கத் தத்தளிப்பதை கண்டு அதன் மேல் பரிதாபப்பட்டு அதை கையில் எடுத்து கரையில் விட முயற்சி செய்தாராம்.

கையில் எடுத்தவுடனே தேள் கொடுக்கால் கொட்டியது. உடனே ‘ஆ’ என்று அலறியபடி கையை உதறி தேளை கீழே போட்டுவிட்டவர், மீண்டும் அது தத்தளிப்பதை பார்த்து மீண்டும் பரிதாபம் கொண்டு, அதை மீண்டும் கையில் எடுத்தார். தேள் மீண்டும் கொட்டியது. மீண்டும் அலறியபடி தண்ணீரில் போட்டு விட்டார். கையை தேய்த்துவிட்டுக் கொண்டு மீண்டும் தேளை காப்பாற்ற முயற்சிக்கிறார்.

மீண்டும் மீண்டும் அது கொட்டுவதும், இவர் அலறி அதை கைவிடுவதும், ஆனால் மீண்டும் கை கொடுப்பதும் ஒரு தொடர் நிகழ்வாக நீண்ட நேரம் நடந்து கொண்டே இருக்கிறது.

இதைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் கேட்டார்களாம் ‘சுவாமி.. அதுதான் கடிக்கிறதே, அதைப் போய் ஏன் காப்பாற்ற முயற்சிக்கிறீர்கள்..’ என்று.

அதற்கு முனிவர், ’கடிப்பது அதன் சுபாவம். அதைக் காப்பாற்றுவது என் சுபாவம்’ என்று கூறிவிட்டு தன் வேலையை தொடர்ந்தாராம்.

இதைப் போலவே கருணாநிதி, ஜெயலலிதா இருவரும் தமிழகத்தை மாறி மாறி ஊழல்/அராஜக ஆட்சி செய்வதுவும், அவர்கள் என்ன செய்தாலும் மக்கள் மீண்டும் மீண்டும் இருவரில் ஒருவருக்கே வாக்களித்து தேர்ந்தெடுத்து ஆட்சி செய்ய விடுவதுமாக இருக்கிறது.

இதுவரை இந்த தேள்களின் கொடுக்குகளில் மட்டும் இருந்து வந்த விஷம், இப்போது மெல்ல மக்களின் மனங்களிலும் சேர்ந்து விட்டதை அவர்கள் ஓட்டு போட லஞ்சம் வாங்க துணிந்து விட்டதிலிருந்து உணர்ந்து கொள்ள முடிகிறது. லஞ்சம், ஊழல் எல்லாம் சமூகக்கேடு என்பதிலிருந்து இதெல்லாம் அரசியலில் சகஜம் என்னும் நிலைக்கு அவர்களை இட்டுச் சென்று ஆயிரம் கோடி ஊழல்களெல்லாம் தேர்தலில் ஒரு பிரச்னையே இல்லை என்னும் அளவிற்கு விஷத்தின் வீரியம் அவர்களின் மனதை எதிர்மறையான போக்கில் தகவமைத்துக் கொள்ளச் செய்து விட்டது.

தேளைக் காப்பாற்றுவது அந்த முனிவரின் சுபாவமாக இருக்கலாம். ஆனால் சிறிது சிறிதாக உடலில் சேரும் விஷம் காரணமாக ஒரு கட்டத்திற்கு மேல் உறுப்புகள் செயலிழந்து சவமாகப் போவதும் அவர் தான். அதுபோலவே, தொடர்ந்து ஊழல்வாதிகளையே ஆட்சியாளர்களாக தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தால் ஒருநாளில் இந்த சமூகமும் விஷம் பாரித்து சவமாகி செயலிழக்கும்.
மேலும்...