அபிமானத்தை அரசியல்படுத்தாதீர்கள் (தொடர்ச்சி...)

Posted: Tuesday, May 31, 2011 | Posted by no-nononsense | Labels: 0 comments
(தொடர்கிறேன் ...)

இளையராஜாவை பிடிக்காதவர்களும் தமிழகத்தில் உண்டா? இசையை பொறுத்தவரை அவருடைய அருமை பெருமைகளை விளக்கித்தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்னும் நிலையில் செவியுள்ளோர் இல்லை. அவரை கேட்டு லயிக்காத ஆளுமில்லை; நாளுமில்லை. அவரும்கூட இதுவரை எந்த விதமான தமிழகப் பிரச்னையிலும் கருத்துச் சொன்னதில்லை. ஒகேனக்கல் போராட்டத்தில் தமிழ் திரை உலகமே குவிந்து தன் உணர்வுகளை வெளிப்படுத்திய மேடையில் கூட அவர் பாதம் பதியவில்லை. தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கும் எதிர்ப்பு தெரிவித்ததில்லை. ஈழத் தமிழர்கள் பிரச்னையிலும் கூட ஒரு கருத்தை கூட உதிர்த்ததில்லை. ஒட்டு மொத்தமாக எந்த வித மக்கள் பிரச்னையிலும் ஆர்வம் காட்டாமல் இசையமைப்பதில் மட்டும் ஈடுபட்டு வருகிறார்.

நாளை இளையராஜா சாகக் கிடக்கிறார் என்றால், நிச்சயமாக அவருக்காக பிரார்த்தித்துக் கொள்ளும் உள்ளங்கள் இன்று ரஜினிக்கு இருக்கும் அளவுக்கு இருக்கும். உடனே, “ஆ! அவர் என்ன தமிழர்களுக்கு செய்து கிழித்து விட்டார்? எங்களோடு ஒரு முறையாவது ஈழ/தமிழக தமிழர்களுக்காக தெருவில் இறங்கி போராடியிருப்பாரா? நிவாரண நிதி கொடுத்திருப்பாரா? அவருக்காக போய் வேண்டிக் கொள்கிறீர்களே, உங்களுக்கெல்லாம் மனசாட்சி இருக்கா..” என்று ஏதாவது இயக்கத்தார் கேட்டால் எவ்வளவு விசித்திரமாக இருக்கும்?

இளையராஜாவை கொண்டாடவும், அவரின் நலன் விரும்பவும் அரசியல் காரணம் எதற்கு? கேட்கும் பொழுதெல்லாம் நரம்பெங்கும் வியாபித்து, உணர்வுகளை மீட்டி, நுண்ணுணர்வான இன்பத்தை நாளும் அளித்து மகிழ்விக்கும் ஒரு தன்னிகரற்ற இசைக்கலைஞனாக அவரைக் கொண்டாடினால் போதாதா? அதுவும்கூட பணத்திற்காக இசைக்கப்பட்ட பாடல்கள் தானே? பணத்தை வைத்து கலையை மதிப்பிட முடியாது என்பதை இளையராஜாவை முன்வைத்தும் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் பிறகு எதைக்கொண்டும் விளக்க முடியாது.

அதுபோலதுதான் ரஜினி தமிழர்களிடையே சம்பாதித்து வைத்திருக்கும் நேசமும், அபிமானமும். ஒருவகையில் அபிமானம் என்பதும்கூட அநாவசியம்தான். அவருக்காக பிரார்த்திக்க மனிதாபிமானம் ஒன்று மட்டுமே கூட போதும். அதுவும் இல்லையென்றால், இப்படி வார்த்தை ரவுடியிஸம் செய்யாமல் சும்மாவாவது இருக்கலாம்.

‘பகைவர்க்கும் அருள்வாய் நன்னெஞ்சே’ என்றான் பாரதி. ரஜினி யாருக்கும் பகைவரும் இல்லை. சில காலமாக அவர் அவராக இருக்க முயல்வதாக தெரிகிறது. அவரை அப்படியே விட்டு விடுவதுதான் விவேகம். மீண்டும் பொதுதளத்தில் செயல்பட்டால் மீண்டும் விமர்சிக்கலாம். ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருப்பவரிடம் ஏன்?

நேற்று ஏதோ தொலைக்காட்சியில் ‘தர்மத்தின் தலைவன்’ படம் ஓடிக்கொண்டிருந்தது. நான் டிவி பார்ப்பதே அரிது என்பது ஒருபுறம் இருக்க, அதிலும் பகல் நேரத்தில் சினிமா பார்ப்பது என்பதெல்லாம் என் வாழ்வில் நடவாத காரியம். ஆனால் அந்தப் படத்தில் ரஜினியின் பேராசிரியர் கேரக்டர் என்னை கட்டிப்போட்டது. என்னமா பண்ணியிருக்கார் மனுசன் என்று ரசித்து பார்த்துக் கொண்டிருந்தேன். ஏற்கெனவே பார்த்ததுதான் என்றாலும் சிறிதும் அலுக்கவில்லை. ‘அட பாவமே, இவர் நடிப்பை நாம் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கும் இதே வேளையில் தானே, இவருக்கு டயாலிஸிஸும் நடந்து கொண்டிருக்கும்’ என்று அப்போது இயல்பாக எனக்குள் ஒரு பச்சாதாபம் ஏற்பட்டது. அப்படித்தானே பலருக்கும்?


-0-

ரஜினியின் எளிமை போன்ற தனிப்பட்ட பண்பு நலன்கள் பற்றியெல்லாம் எனக்கு பெரிதாக கருத்து இல்லை. அது உண்மை என்றால் நல்ல விஷயம். இல்லையென்றாலும் அதில் பெரிதாக புகார் இல்லை. அவர் பணம்; அவர் தேர்வு. நாம் விவாதிக்க வேண்டியதெல்லாம் அவரின் பொதுதளத்திலான செயல்பாடுகள் மட்டும்தான்.

ரஜினி பெங்களூர் சென்று தன் பழைய ஏழை நண்பர்களை இன்றும் சந்திக்கிறார் என்றால், அவரும் அங்கே இருந்து வந்தவர் தானே? அப்புறம் அங்கே சென்றுதான் தன் பழைய நண்பர்களை சந்திக்க முடியும். இதை கமலை முன்வைத்து ஒப்பிட்டு பார்த்தால் நன்கு புரியும்.

கமல் பிறக்கும் போதே நிலச்சுவான்தார் மகன். பழக்க வழக்கங்களும் அதற்கேற்ற அந்தஸ்திலேயேதான் இருந்தன. அதைவிட்டால் நண்பர்கள் எல்லாம் சினிமா சம்மந்தப்பட்டவர்கள் தாம். அதனால் கமல் தன் நண்பர்களுடன் உறவாட வேண்டும் என்றால் சினிமாவுக்கு உள்ளேயோ, அல்லது தன் சரி அந்தஸ்திலேயோ தான் செய்து கொள்ள வேண்டும். பார்த்தால், கமல் கர்வத்துடன் நடந்து கொள்வது போல் தோற்றம் தரும்.

அதுவே ரஜினி, தன் அந்தஸ்திலிருந்து வெகு கீழேயுள்ள பழைய சிநேகிதர்களைத்தான் பால்ய நட்புக்காக நாடிச் சென்றாக வேண்டும். அது அவர் உருவாகி வந்த சூழல். ஒருவேளை இதைத்தான் எளிமை என்கிறார்களோ தெரியவில்லை.

இரண்டுமே அவரவர் சூழ்நிலைகளை பொறுத்து தன்னால் அமைந்த விஷயங்கள். மற்றவையெல்லாம் ஆளுக்கு தகுந்த மாதிரி உலகம் கொடுக்கும் பட்டங்கள்.



கருத்து வேறுபாடு பற்றி பொருட்டில்லை. எல்லோரின் அபிப்ராயங்களும் ஒரே மாதிரி இருந்துவிட முடியாது. ஆனால் பாஸ்கர் எந்த இடத்தில் என் கருத்தில் இருந்து மாறுபடுகிறான் என்பதை அறிந்து கொள்ள ஆவல். நேரம் இருக்கும் போது கண்டிபபாக எழுதவும்.

எப்போதும் கருத்துக்களை எழுத்தில் பதிவு செய்து வைப்பது மிகவும் முக்கியம். யாருக்காவது அது ஒரு சின்ன வெளிச்சத்தை, அல்லது குறைந்தபட்சம் சின்ன தகவலைத் தருவதாக அமையலாம்.


-0-

அதோடு - வழுக்கை மண்டையை காட்டிக்கொண்டு, நரைத்த தலையுடன் மீடியா முன் உலா வரும் தைரியம் எந்த நடிகருக்கு உண்டு? எம்.ஜி.ஆருக்கே இருந்ததில்லை. ரஜினியின் எளிமை உண்மை என்றால் நல்ல விஷயம் என்றுதான் நானும் சொல்லியிருக்கிறேன். ஆனால் அவர் நண்பர்களை சந்திப்பதை மட்டும் எடுத்துக்காட்டி ‘ஆஹா பாரீர் எளிமை’ என்று சிலர் பேசுவதில்தான் நான் மாறுபடுகிறேன்.

ஒரு உதாரணத்துக்கு pala oorkalil வாழ்ந்தாலும் பள்ளித்தோழர்களை சந்தித்து கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்க விரும்பினால் நாமக்கல் வந்து தரையில் காலை பதித்துதானே தீர வேண்டும்? ;-) ரஜினிக்கும் அப்படித்தான். ரஜினி போன்று தலைக்குப் பின்னால் ஒளிவட்டங்களை சுமந்து திரியும் பிரபலங்களுக்கும், எப்போதும் மீடியாவின் அதிகபட்ச வெளிச்சத்தில் இருந்துவரும் வி.ஐ.பி.க்களுக்கும் அதிலிருந்து விலகி ஓடி, தன்னை பழைய சிவாஜிராவ்வாக மட்டும் எண்ணி பேசி நண்பர்களை சந்திப்பது மட்டும்தான் வடிகாலாக இருக்க முடியும். It's their need. அதை அவர்கள் அவர்களுக்காகச் செய்கிறார்கள் என்பதால்தான் சொல்கிறேன், அதை என்னால் எளிமை கேட்டகரியில் சேர்க்க முடியாது என்று. பட்டியலில் உள்ள மற்ற பண்புகள் உண்மை எனில் எனக்கும் ஏற்புடையவையே.
மேலும்...

அபிமானத்தை அரசியல்படுத்தாதீர்கள்

Posted: Monday, May 30, 2011 | Posted by no-nononsense | Labels: 0 comments
ரஜினியின் சுகவீனத்தை முன்வைத்து -->

வெகுசன பரப்பில் பிரபலமாக இருக்கும் மனிதர்கள் மீது பொதுவாக நன்றி, பெருமை, பக்தி, விசுவாசம், அபிமானம் போன்ற பல வித உணர்ச்சிகள் பொது மக்களிடம் ஏற்படுவதுண்டு.

  1. நேதாஜி, பிரபாகரன் போன்றோரின் அர்ப்பணிப்பு மீது நன்றியும், பெருமையும்,
  2. பாபாஜி, சத்யபாபா போன்றவர்கள் மீது பக்தியும்,
  3. எஜமானர்களிடம் விசுவாசமும்,
  4. ரஜினி, டெண்டுல்கர் போன்றோரின் கலை, விளையாட்டுகளின் மீது அபிமானமும்,

    ... அவரவர் ரசனைக்கு ஏற்ப ஏற்படுவது இயல்பு.

ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான உணர்ச்சிகள். இவர்களில் யாருக்கு உடல் நலிவடைந்து போனாலும் அவர்களின் பாதிப்புகள் உள்ள மனிதர்களிடம் அவர்களுக்காக பிரார்த்தனை நடப்பதும் வழக்கமான ஒன்றுதான். அது புரிந்து கொள்ளக் கூடிய ஒன்றும் கூட.

தமிழ்நாட்டை பொறுத்தவரை, ரஜினி ஒரு மிகப் பெரிய ஐகான். பலருக்கும் ஆதர்சமான கலைஞர். அவருடைய அத்யந்த ரசிகர்களையும் தாண்டி எல்லா தளங்களிலும் தனக்கான அபிமானிகளை கொண்டிருப்பவர். தன்னுடைய அரசியல் நிலைப்பாடுகளைத் தாண்டி ஒரு கலைஞனாக ஒரு பெரிய ஜனத்திரளின் எண்ணங்களுடனும் உணர்ச்சிகளுடனும் ஊடு பாவி இருப்பவர். அதன் காரணமாக இயல்பாகவே அவரின் உடல் நலிவு என்பது அந்தப் பெரிய ஜனத்திரளுக்கு தனிப்பட்ட சோகம் தான். அது நிழலோ, நிழமோ, யார் ஒருவரும் தான் நெருக்கமாக உணரும் மனிதரின் நலனுக்காக பிரார்த்திப்பது இயல்பான விசயம் தான். இதற்கு அரசியல் காரணங்கள் அவசியமில்லை.

நாளை டெண்டுல்கருக்கு இதே போல் ஒரு நோயுற்ற நிலை என்றால், அதற்காக இந்தியாவே பிரார்த்திக்கும். இப்போது ரஜினி மீது வைக்கும் குற்றச்சாட்டுகளையே வேறு வார்த்தைகளில் அப்போது டெண்டுல்கர் மீதும் சுமத்த முடியும். ஆனால் பிரதிபலன் பாராது, முகம் தெரியாது பிராத்தனையில் ஈடுபடும் உள்ளங்களுக்கு அரசியல் காரணங்கள் பொருட்டல்ல. அவர்களை பொறுத்தவரை டெண்டுல்கர் அவர்களவில் தெரிந்த மனிதர். தற்சமயம் உடல் நலமில்லாமல் இருக்கிறார். அவர் நலம் நாடி, அவர்கள் ஒரு நிமிடம் தங்கள் இஷ்ட தெய்வத்திடம் வேண்டிக் கொள்வது தன்னிச்சையானது. தன்னுடைய ஆட்டத்தால் அவர் தங்களை மகிழ்வித்துள்ளார் என்பது மட்டும்தான் அவர்கள் இடையேயான ஒரு மாய உறவு. உறவு நேரடியானது அல்ல என்ற போதிலும், பிரார்த்தனை தூய்மையானது என்பதில் எள்ளளவும் கேள்வி எழ முடியுமா?

டெண்டுல்கர் காசு வாங்கிக் கொண்டு தானே விளையாடினார் எனலாம். நடந்து முடிந்த ஐ.பி.எல்.,லில் நூற்றுக்கணக்கான ஆட்டக்காரர்கள் காசுக்காகத்தான் விளையாடினார்கள். ஆனால் கெயில் மட்டும் அனைவரின் அபிமான ஆட்டக்காரராகவும் ஆனது எப்படி? பார்வையாளர்களின் உணர்ச்சிகளை நர்த்தனமாட வைக்கும் நிகரற்ற பொழுதுபோக்கை அளித்து, லட்சக்கணக்கானோர் மனதில் இடம் பிடித்து விட்டார். அது காசை விட பெரிய விஷயம்.

எப்போதும் கலையும், விளையாட்டும், திறமையும் தங்களுக்கான இடத்தை மக்களின் மனதில் நிர்ணயித்துக் கொண்டு விடுகின்றன. அதைத்தான் அபிமானம் என்கிறோம். இன்னபிற புறக்காரணிகள் தனியானவை. தனித்து விவாதிக்க தக்கவை. ஒற்றை பரிமாண கோணத்தில் ஒரே சாடியினுள் எல்லா கருத்துக்களையும் ஒருசேரப்போட்டு குலுக்கி வடிவம் காண முயலும் வேலை சரியான வெளிப்பாட்டை(output) அளிக்காது என்பதை அறியாமலே, அல்லது அறிந்து கொள்ள விரும்பாமலே செய்யும் வேலை.

ரஜினியின் சினிமா பாணியில் நமக்கு விமர்சனங்கள் இருக்கலாம். அவருடைய அரசியல் முதிர்ச்சியின்மை பற்றி கடுமையான கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், அவை அவரின் உடல் நலனில் இருந்து மிகவும் வேறு தளம் சார்ந்தவை. அவருடைய நலன் நாடி நடக்கும் பிரார்த்தனைகளுடன் அரசியலை கலப்பது துவேசமானது.

நாம் ஒருவரின் சினிமா மற்றும் அரசியலுடன் கருத்து வேறுபாடு கொள்கிறோம் என்பதற்காகவே அந்த மனிதரின் உடல் நலனில் இரக்கம் கொள்ள வேண்டியதில்லை என்றில்லை. அப்படி ஒரு நேயத்துடன் காட்டப்படும் அக்கறையை அவதூறு செய்யவும் வேண்டியதில்லை.

டயானா விபத்தில் இறந்த போது உலகெங்கும் மக்கள் சோகம் பூண்டார்கள். அஞ்சலி செலுத்தினார்கள். அவரின் அழகோ, ஆளுமையோ ஏதோ ஒன்று டயானாவை தேசம் கடந்து மக்கள் பரப்பில் பிணைத்திருந்ததை அச்சமயம் உணர முடிந்தது. அது தனிப்பட்ட அஞ்சலி. அவரின் adultery மீதான விமர்சனம் என்பது வேறு.


இந்த அபிமானம் X விமர்சனம் தெளிவு எளிய மனிதர்களிடையே கூட பரந்து பட்ட அளவில் பகுத்துணரப்படும் நிலையில், இந்த இயக்கக்காரர்களால் மட்டும் ஏன் பிரித்து புரிந்து கொள்ள முடியவில்லை? இதைப் புரிந்து கொள்ள இயலாதவர்களால் எப்படி பெரிய சிந்தாந்த சிடுக்குகளை சிக்கல் அவிழ்க்க முடியும்? அவிழ்க்க முடியும் என்று எப்படி அவர்களின் பின்தொடர்பாளர்கள் நம்புகின்றனர்?

அபிமானம் வேறு. அரசியல் சார்பு நிலைகள் வேறு. இரண்டு தரப்பினரும் அவரவரின் அறிதல் நிலைகளையும், அவரவருக்கு கிடைக்கும் தகவல்களையும், அவற்றை தன் மனச்சாய்வுடன் ஒப்பிட்டு ஏற்படுத்திக் கொள்ளும் கருத்தைப் பொறுத்தே நிலைப்பாடுகளை எடுக்கிறோமே தவிர, இரு தரப்பிலும் தனிப்பட்ட விரோதம் எதுவும் இல்லை.


ரஜினி யாருக்கும் தீங்கு செய்ததாகவோ, சமூக விரோத செயல்களில் ஈடுபட்டதாகவோ புகார் இல்லை. பிறகு ஏன் ரஜினியின் தனிப்பட்ட உடல் நலிவில் அவரின் அபிமானிகளால் காட்டப்படும் அக்கறையில், பிரார்த்தனையில் வன்முறையை நிகழ்த்த வேண்டும்? இந்த முதிர்ச்சியற்ற கருத்து-முன்விரோத-வன்மம், அதை செய்யும் இயக்கத்தை தான் மக்களிடம் இருந்து மேலும் மேலும் அந்நியப்படுத்தி வைக்கும். மக்களின் உணர்வு நிலையிலான செயல்பாடுகளை புரிந்து கொண்டு, அதற்கு எதிராக கருத்து திணிப்பு வேலை எதையும் செய்யாத இயக்கங்கள் மட்டுமே அமைப்பு ரீதியாக பலப்பட முடியும்.


கவுண்டமணி - தமிழ்நாட்டின் மிக பிடித்தமான நகைச்சுவை நடிகர். ரஜினி போலவே தமிழ் சினிமா மூலம் கணிசமாக செல்வம் சேர்த்தவர். அத்தனையும் தமிழ் ரசிகன் மறைமுகமாக அள்ளித்தந்தப் பணம். ஆனால், ஒருநாளும் அவர் ஈழம் உள்ளிட்ட எந்த ஒரு அரசியல் போராட்டங்களிலும் கருத்து ரீதியாககூட தன்னை அடையாளப்படுத்திக் கொண்டதில்லை. வெளிப்படையாக தன்னுடைய ஆதரவை நல்கியதில்லை. நாளை ஒருவேளை அவர் நோய்வாய்ப் பட்டாலோ, இறந்துபட்டாலோ எழும் வருத்தங்களையும், அஞ்சலிகளையும் கண்டு இவர் என்ன சேகுவாராவா, பிடல் காஸ்ட்ரோவா? தேச விடுதலைக்கு பாடுபட்டாரா? அவரைப் பற்றி கவலைப்பட அவர் குடும்பம் இருக்கிறது. போங்கய்யா, உங்கள் உறவினர்களை பற்றி கவலைப்படுங்க - என்பார்களா இயக்கக்காரர்கள்?


செய்ய மாட்டார்கள். இங்கேயுள்ள தமிழ் தேசிய இயக்கங்களுக்கு பல காலமாக ரஜினிதான் ஊருக்கு இளைத்து கிடக்கும் பிள்ளையார் கோவில் ஆண்டி. அவர் எதுவும் சொன்னாலும் குற்றம். சொல்லவில்லையென்றாலும் துரோகி பட்டம். அவர் ஏன் சேகுவாரா ஆக வேண்டும் என்னும் கேள்விக்கு தகுந்த பதில் உண்மையில் இல்லை என்பதுதான் உண்மை. ஒரு கலைஞராக தனக்குப் பின்னால் பெரிய கூட்டம் வைத்திருக்கிறார் என்பதற்காக அவர் எல்லா அரசியல் நிகழ்வுகளின் மீதும் அக்கறை கொண்டு கருத்துச் சொல்ல வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? தார்மீக ஆதரவை தகுந்த அளவில் அவர் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்துள்ளார் என்ற போதிலும், அவர் ஏன் சேகுவாரா ஆகவில்லை என்பதுதான் இயக்கக்காரர்களின் ஒரே பிரச்னை போலும்.


ரஜினி, பாலகுமாரன் இடையே நடந்த உரையாடல் இங்கே நேற்று படிக்கக் கிடைத்தது. அதில் அனுபவப்பூர்வமான ஒரு கருத்தை ரஜினி பகிர்ந்து கொண்டிருந்தார்: ஓரளவு பிரபலமாகி விட்டதும், “உனக்கு அது தெரியாதா? இதை இன்னும் கற்றுக் கொள்ளவில்லையா, இதுவும் தெரியாதா?! ... பிறகு எப்படி நீ இந்தளவு வெற்றி பெற்றாய்? குருட்டு அதிர்ஷ்டமா” என்று தன்னை சூழ்ந்து கொண்டு பலரும் விமர்சித்ததாகவும், அதையெல்லாம் கடந்து வர பெரிய பொறுமையை வளர்த்துக் கொள்ள வேண்டியிருந்ததாகவும் கூறியிருந்தார்.


இப்போது படுக்கையில் கிடக்கும் நிலையில் வீசப்படும் இக்கட்டுரை போன்ற தூசனைகளின் போதும் காய்ந்த மரமாகவே கல்லடிப் படுகிறார். கல்லடிக்கு தகுதியானவராக தன்னை முன்னிறுத்தி வந்த பொழுதுகளை அவர் கடந்துவிட்ட நிலையிலும், அவர் மீது கல்லை எறியும் கைகளின் இலக்கு மட்டும் இன்னும் மாறவேயில்லை. மிக எளிதான இலக்கு என்பதோடு, குறுக்குவழியில் கிடைக்கும் விளம்பரமும் பெரிய ரீச் கொண்டது அல்லவா?


மக்களின் அபிமானம் என்பது அவர்களுக்கு ஈடுபாடுள்ள எந்த துறையில் வேண்டுமானாலும் அதில் அவர்களை கவர்ந்த நபர்களிடம் ஏற்படலாம். அவர்களின் நலனில் அக்கறை கொள்ளவும், நோய் காலங்களில் கவலைப்படவும், பிரார்த்தனை செய்யவும் செய்யலாம். அம்மாதிரியான தனிப்பட்ட உடல் நலன் சார்ந்த மனிதாபிமான அக்கறைகளின் மீதெல்லாம் கருத்து பாசிச போக்கை கையாண்டு வந்தால், கையாள்பவர்கள் எந்த சித்தாந்தத்தை முன்வைத்து தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள முயல்கிறார்களோ, அது தவறான நபர்களால் முன்னெடுக்கப்படுகிறது என்றே அர்த்தமாகிறது.

ஆக, இது மிகவும் வன்மமான கட்டுரை என்பது என் கருத்து. விமர்சனமும் வன்மமும் வேறுபடும் புள்ளி - அந்த விமர்சனம் எந்த சூழலில் முன்வைக்கப்படுகிறது என்பதில் இருக்கிறது. தற்சமயம் ரஜினியின் சர்ச்சையை கிளப்பும் திரைப்படம் எதுவும் ரிலீஸாகி இருக்கவில்லை. அவர் தன்னை அரசியலில் இருந்து துண்டித்துக் கொண்டும் உள்ளார். அவர் உடலும் நலிவுற்றுக் கிடக்கிறது. இந்நிலையில் அவரின் நலன் வேண்டி நடக்கும் பிரார்த்தனைகளின் மீது கருத்து வன்முறை நிகழ்த்துவது விசமமானது.

இப்போதும் சொல்கிறேன். ரஜினி மீது எனக்கும் நிறைய விமர்சனம் உள்ளது. ஆனால் அது சரியான காரணங்களின் அடிப்படையில் ஆரோக்கியமான தளத்தில் செய்யப்படுவதாக இருக்க வேண்டும். பழைய காழ்ப்புணர்ச்சிகளுக்கு முழாம் பூசி பொருத்தமற்ற தருணத்தில் அலங்காரமான கேள்விகளால் உமிழப்படும் வன்மமாக இருக்கக்கூடாது. எளிய மனிதர்களின் அபிமானத்தின் மீது மூர்க்கமான ஒரு தாக்குதலை நடத்தியுள்ளது இக்கட்டுரை. ஆகவே, முழுமையாக நிராகரிக்கத் தக்கது.


மாற்றுக் கருத்துக்கள் தகுந்த எடுகோள்களுடன் முன்வைக்கப்பட்டால் மட்டும் மீண்டும் எதிர்வினையாற்ற உள்ளேன்.

மேலும்...

சிவப்பு சீனா

Posted: Sunday, May 29, 2011 | Posted by no-nononsense | Labels: 0 comments
சமீபமாக சீனாவின் சரித்திரம் மற்றும் அரசியல் பொருளாதாரம் பற்றிய மூன்று நூல்களை அடுத்தடுத்து வாசித்து முடித்திருக்கிறேன். மூன்றாவதை - சிவப்பு சீனா (விகடன் பிரசுரம்) - இன்று முடித்தேன்.

சீனாவின் நீண்ட நெடிய அரசாட்சி வரலாறு இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் மஞ்சூக்களின் அரசாட்சியுடன் முடிவுக்கு வந்தது. சன்-யாட்-சென்னின் புரட்சியாலும் முயற்சியாலும் சீனாவில் குடியரசு பிறந்தது. இந்த நூல் சீனா, மிங் வம்சத்தினரிடமிருந்து மங்கோலியாவை சேர்ந்த அந்நியர்களான மஞ்சூக்களின் கைக்கு எப்படிச் சென்றது என்பதில் இருந்து ஆரம்பித்து, மஞ்சூக்களின் ஆளுகையின் கீழ் அது எப்படியெல்லாம் மேற்கத்திய நாடுகளால் சுரண்டப்பட்டது, ஜப்பானின் ஆதிக்கம் சீனாவில் ஏற்படுத்திய பாதிப்புகள்
அடுத்து சமகால சீனாவைப் பற்றிய விரிவான நூல் ஏதும் அகப்படுகிறதா என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன். முன்பு நான் இங்கே வாசிப்பனுபவம் பகிர்ந்து கொண்டிருந்த பல்லவி ஐயரின் ‘சீனா - விலகும் திரை’ ஓரளவு நல்ல நூல். ஆனால் அதை ஒரு அறிமுக நூலாக மட்டுமே கொள்ள முடியும்.

கிழக்கு பதிப்பகத்தில் ‘நீயா நானா - இந்தியா சீனா வல்லரசு போட்டி’ என்று ஒரு நூல் வெளியாகியுள்ளது. ஆனால் வழக்கம் போல் விலைதான் அச்சுறுத்துகிறது. 100 ரூ மதிப்பிலான நூல்களை செம்பதிப்பு என்று போட்டு இரு மடங்கு விலையில் விற்பார்கள்.

என் அனுபவத்தில் விகடன் பிரசுரங்களில் வெளியாகும் நூல்களே மலிவானவையும் தரமானவையும். ஆனால் விரிவானவையாக இருப்பதில்லை என்பது மட்டுமே குறை. அறிமுக வாசிப்பு தேவைப்படுவோர் படிக்கலாம்.

மஞ்சூக்களின் ஆளுகையின் கீழ் அது எப்படியெல்லாம் மேற்கத்திய நாடுகளால் சுரண்டப்பட்டது, ஜப்பானின் ஆதிக்கம் சீனாவில் ஏற்படுத்திய பாதிப்புகள், அபினி போர், ஹாங்காங் கைமாறியது ... என்று முக்கியமான சரித்திர நிகழ்வுகளை கோடிட்டு காட்டுகிறது. மாவோவின் செம்படை புரட்சி என்னும் ஆசியாவின் மிக முக்கியமான அரசியல் நிகழ்வை, சீனாவின் சரித்திரத்தை புரட்டிப்போட்ட சம்பவத்தையும் அதன் பின்விளைவுகளையும் ஒரு அறிமுகமாக தருகிறது.

ஆசிய நிலப்பரப்பில் நாம் அவசியம் ஆய்ந்தறிந்து கொள்ள வேண்டிய இரு நாடுகள் சீனாவும் ஜப்பானும் என்பது என் கருத்து. இரண்டும் தன்னை பல நூற்றாண்டுகளாக வெளியுலகில் இருந்து துண்டித்துக்கொண்டு வாழ்ந்தவை என்பதால் தனக்கென பிரத்யேக கலாச்சார பின்புலத்தைக் கொண்டு இயங்குபவை.

சீனாவை அதன் யுவான் வம்சத்தின் குப்ளாய் கானில் இருந்து இன்று வரை ஓரளவு நுனிப்புல் மேய்ந்து விட்டேன். ஜப்பான் குறித்த நூல்கள் தான் இன்னும் அகப்படவில்லை.
மேலும்...

சின்னக்குத்தூசி

Posted: Monday, May 23, 2011 | Posted by no-nononsense | Labels: 1 comments



எத்தனையோ ஆளுமையான மனிதர்களைப் பற்றி நாம் அறிந்து கொள்ளாமலே காலத்தை கடத்தி விடுகிறோம். அவர்களில் ஒருவர் பத்திரிக்கையாளர் சின்னக்குத்தூசி. திராவிட சித்தாந்தத்தின் அடையாளக் குரல். கலைஞரின் நெருங்கிய சகா. முரசொலியின் முக்கிய எழுத்தாளர். கடைசி காலங்களில் நக்கீரனுடன் நெருங்கிய தொடர்புகள் கொண்டிருந்தவர்.
இவருடைய கட்டுரைகளுக்காகவே சில காலம் நான் தொடர்ந்து நக்கீரன் வாங்கி வந்தேன்.

பெரியாரிடம் குத்தூசி என்று ஒரு பத்திரிக்கையாளர் இருந்தார். மிக பிரபலமான விமர்சகர். அவரை அடியொற்றி தன் பெயரை சின்னக்குத்தூசி என்று வைத்துக் கொண்டார். இயற்பெயர் தியாகராஜன். (எழுத்தாளர் அசோகமித்திரனின் இயற்பெயரும் அஃதே).

கடைசி 4 மாதங்களாக சின்னக்குத்தூசியை பில்ராத்தில் வைத்து சிகிச்சை செய்துவந்தவர் நக்கீரன் கோபால் தான். கோபால் அவரை தன் தந்தை ஸ்தானத்தில் வைத்து மரியாதை செலுத்தி வந்தார். குடும்பம் ஏதும் இல்லாததால், நேற்று அவர் இறந்த பிறகு அவர் உடல் நக்கீரன் அலுவலகத்தில் கொண்டுபோய் வைக்கப்பட்டிருந்தது. கலைஞர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். கடைசி காலங்களில் கலைஞருடன் ஊடல் கொண்டு முரசொலியில் இருந்து வெளியேறியவர், முரசொலிக்கு மட்டும் தவறாமல் கட்டுரைகள் அனுப்பி வந்தார்.

இவரைப் பற்றி எழுத நிறைய இருக்கிறது. அவற்றில் ஒன்று மட்டும் குறிப்பிட வேண்டும். காஞ்சி காமகேடி சாமியார் ஜெயேந்திரரை 83-ல்(நினைவில் இருந்து எழுதுகிறேன்) ஞாநியுடன் சென்று பேட்டிக் கண்டு, கிடுக்கி பிடி கேள்விகளால் அவர் உண்மை முகத்தை உலகறிய செய்தவர். அது எங்கேயாவது எப்போதாவது கிடைக்கும் கிடைத்தால் படித்துப் பாருங்கள்.

சின்னக்குத்தூசியின் மேன்சன் அறை பத்திரிக்கையாளர்களின் பாசறை. அவரை அங்கே சென்று சந்தித்து சந்தேகம் நிவர்த்தி செய்துகொள்ளாத, குறிப்புகள் கேட்காத, உரையாடிக் கொண்டிராத சென்னை பத்திரிக்கையாளர்கள் கிட்டத்தட்ட இருக்கவே முடியாது என்பார்கள்.

திராவிட அரசியலின் குரல்கள் ஒவ்வொன்றாக விடைபெற்று வருகின்றன. அவற்றில் கடைசி குரலாக கலைஞர் இருப்பார். அவரின் மறைவு ஒரு சகாப்தத்தின் மறைவாக இருக்கும். யாரையும் இட்டு நிரப்ப முடியாத இடைவெளியாக அது இருக்கும். இவர்களுக்கு எல்லாம் நாம் செய்யும் மரியாதை, அவர்களின் குரல்கள் ஓங்கி ஒலித்த திராவிடத்தைப் பற்றி தேடி படித்து தெரிந்து கொள்வதுதான்.
மேலும்...

Judgement Day

Posted: Sunday, May 22, 2011 | Posted by no-nononsense | Labels: 0 comments
மூடநம்பிக்கைகளுக்கும், முட்டாள்தனத்துக்கும் நாடு/இடம்/நாகரிகம்/கல்வி/பொருளாதார வளர்ச்சிக்கும் சம்மந்தமில்லை என்பதற்கு நேற்று அமெரிக்க ஆன்மிக கிறுக்கர்களால் எதிர்பார்க்கப்பட்ட ”Judgement Day, May 21” நல்ல எடுத்துக்காட்டு.

கடவுளையும், மதத்தையும், அதன் பெயரால் உலவி வரும் மதநம்பிக்கைகளையும், ‘இவர் அப்படி இல்லப்பா’ என்று அடுத்தடுத்து பின்தொடர்ந்து வரும் ஃப்ராடு சாமியார்களையும் நம்பிக் கொண்டு இருக்கும் வரை இதற்கெல்லாம் விடிவே கிடையாது.

ஒரு சின்ன விஷயம்தான் - நம்ப அவசியவில்லை என்று ஏன் சொல்கிறார்கள் என்பது குறித்து திறந்த மனதுடன் தேடி வாசித்தாலே போதும்.

ஆனால், தேங்கிய இடத்திலேயே தேங்கிக் கிடந்து இருக்கும் நம்பிக்கைகளின் மீதே நின்றுகொண்டு கைவசம் இருக்கும் பழைய விளக்கங்களையே திரும்ப திரும்ப கொடுத்து திருப்தி பட்டுக் கொள்வதுதான் பொதுவில் எளிதாக இருக்கிறது. மூட நம்பிக்கைகளை முதலீடாக கொண்டு நடந்து வரும் உலகளாவிய வணிகத்திற்கும் அது ஊக்கமாகி விடுகிறது.

World doesn't end: California prophet had no Plan B


மேலும்...

சில நேரங்களில் சில மனிதர்கள்

Posted: Thursday, May 12, 2011 | Posted by no-nononsense | Labels: 0 comments
ஜெயகாந்தன் ‘அக்கினிப் பிரவேசம்’ என்று ஒரு சிறுகதை எழுதியிருந்தார். பின்னர் அதையே விரிவாக்கி ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்னும் புதினமாக எழுதினார். வெளியான காலத்தில் மிகப் பரவலான விமர்சன பாதிப்பை ஏற்படுத்தி இருந்த கதை அது. சாஹித்ய அகாடமி விருதும் கிடைத்தது. பின்னர் பீம்சிங் டைரக்சனில் அதே பெயரில் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது. என்னுடைய சேகரிப்பில் வெகுகாலமாக இருந்துவந்த அந்தப் படத்தை பார்க்கும் வாய்ப்பை இன்றுதான் ஏற்படுத்திக் கொண்டேன்.

புதினமாக எழுத்தில் வெற்றி கண்ட கதையை சினிமாவுக்கான திரைக்கதையாக திருத்தியமைக்கும் பொழுது மூலக்கதையின் ஜீவன் சிதைக்கப்பட்டுவிடுவதுதான் பெரும்பாலும் நிகழ்ந்துவரக்கூடிய ஒன்று. ஆனால் இந்த படம் அதனுடைய புதினத்தின் அழகு கெடாமல் வெகு நுட்பமான ரசனையுடன் வணிக சமரசங்களுக்கு ஆட்படுத்திக் கொள்ளாமல் எடுக்கப்பட்டிருந்தது. முக்கிய கதாபாத்திரங்களில் லட்சுமியும், ஸ்ரீகாந்தும் நடித்திருந்தார்கள்.

ஒரு மழைநாளின் மாலைப்பொழுதில் கல்லூரி முடிந்ததும் பேருந்துக்காக காத்திருக்கிறாள் கங்கா. விடாது பெய்யும் மழையில் தனியாக ஒரு அழகிய இளம்பெண்(கங்கா) நின்று தவிப்பதை காண்கிறான் காரில் உலா வரும் காமுகன் பிரபாகர். அவளிடம் சென்று லிப்ட் கொடுப்பதாக கூறுகிறான். முதலில் மறுத்தாலும், பின்னர் சூழ்நிலையை உத்தேசித்து அதை ஏற்றுக்கொண்டு வண்டியில் ஏறிவிடுகிறாள். பிரபாகரின் திட்டப்படி கார் ஊரை விட்டு விலகி தடம் மாறிச்செல்கிறது; தன்னுடன் வாழ்க்கையின் வழித்தடத்தையே கலைத்துப் போடும் சம்பவத்தை நோக்கி அவளையும் அழைத்துச் செல்கிறது. அவளுடைய எதிர்ப்புகளுக்கு பலனில்லாமல் கற்பு சூறையாடப்படுகிறது.

கல்லூரி முடிந்து வீடு திரும்பும் மகளின் அலங்கோல நிலை கண்டு நடந்ததை விசாரிக்கிறாள் கங்காவின் தாய். மறைக்க முடியாமல் உள்ளதை உள்ளபடியே அழுது புலம்பியபடி சொல்லிவிடுகிறாள் கங்கா. பொதுவாக குடும்ப ரகசியமாக நான்கு சுவர்களுக்குள் மூடி மறைக்கப்பட்டு விடக்கூடிய அந்த விஷயத்தை ஊரைக்கூட்டி ஒப்பாரி வைத்து விடுகிறாள் அவளுடைய தாய். உறவுகள் வெறுக்கின்றன. சுற்றம் வார்த்தைகளால் சுட்டெரிக்கின்றன. தங்கையின் மகளுக்கு நேர்ந்துவிட்ட கதியை கேள்விப்பட்ட பணக்கார தாய்மாமன் அவளை தன்னுடன் பட்டணம் அழைத்துச் சென்று தன் வீட்டில் தங்க வைத்து படிக்கவைக்கிறார். சபலம்... தங்கையின் மகள் என்றாலும் கற்பு கெட்டவள் தானே என்னும் சபலம் வயது வித்தியாசமின்றி அவளை வளைக்கப் பார்க்கிறது. ஒரு சந்தர்ப்பத்தில் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படும் அவளைப் பார்த்து அவர் சொல்கிறார்,

“Ganga.. Let me tell you something. You can be only a concubine. Not a wife. நீ யாருக்காவது வப்பாட்டியா இருக்கலாமே தவிர, யாருக்கும் மனைவியா இருக்கமுடியாது. Why not MINE? "

தாய்மானின் சீண்டல், சில்மிஷம், ஆசை வார்த்தைகள் எதற்கும் பிடிகொடுக்காமல் சமாளித்துக்கொண்டே படிக்கிறாள். பட்டம் வாங்குகிறாள். நல்ல ஒரு வேலையிலும் சேர்ந்துவிடுகிறாள். விரக்தியில் ஒருநாள் அவள் தாய்மாமன் சொல்கிறார், “இவளுக்கு சமர்த்து இருந்தா இவள கெடுத்தவனையே தேடிப்பிடிச்சி இ-வ-ந்-தா-ன் என் ஆம்படையான்னு காட்டட்டுமே” என்கிறார். அவளிடம் சவாலாக அல்ல, காது படாமல்தான். ஆனாலும் அவள் காதில் விழுகிறது. தன்னை நிர்கதியாக்கியவனை மீண்டும் சந்திப்பது குறித்த எதிர்பார்ப்புகள் முதல்முறையாக அவள் மனதிலும் விழுகின்றன.

இதன் பிறகே கதையின் மையநீரோட்டம் தொடங்குகிறது. அதன் பயணம் எதிர்பார்ப்புகளுக்கு எதிர்மாறான திசையில் கண்ணியமான உரையாடல்களின் வழியாக நகர்ந்துச் செல்ல ஆரம்பிக்கிறது.

கங்காவாக லட்சுமியும் அவரை கற்பழித்த பிரபாகராக ஸ்ரீகாந்தும் வாழ்ந்திருப்பார்கள். ஸ்ரீகாந்த் எந்தளவு திறமைசாலியான நடிகர் என்பதை அவரை இந்த கதையினுள் பிரபாகராக பார்க்கும்போதே உணரமுடியும். உடல்மொழிகளில் நுட்பம் வேண்டி நிற்கும் சற்று கடினமான பாத்திரம்; அநாயசமாக செய்திருப்பார். திரையுலகம் வீணடித்துவிட்ட ஒரு நடிகர்.

லட்சுமிக்கோ இப்படம் ஊர்வசி பட்டமே பெற்றுத் தந்தது. (அதாவது தேசிய விருது). அந்த பாத்திரத்தில் கங்காவாக வாழ்ந்து காட்டியிருப்பார் என்பதெல்லாம் சம்பிரதாயமான வார்த்தைகளாகவே இருக்கும். இவரைப்போய் பல காலத்திற்கு டூயட் பாடவிட்டு விட்டார்களே என்று வருத்தம் கவிகிறது.

இன்னொரு முக்கியமான பாத்திரமாகிய தாய்மாமா பாத்திரத்தை ஏற்று நடித்திருந்தவர் ஒய்.ஜி.பார்த்தசாரதி (சுருக்கமாக ஒய்.ஜி.பி - ஒய்.ஜி.மகேந்திரனின் தந்தை). நாடக உலகில் மிகப்புகழ்பெற்ற ஆளுமை. இவரின் நடிப்பைக் காணும்போது இவர் ஏன் நாடகங்களுடன் நிறுத்திக்கொண்டார் என்று தவிர்க்க முடியாமல் ஒரு அங்கலாய்ப்பு ஏற்படுகிறது.

கங்காவின் கதையை நாவலாக எழுதும் எழுத்தாளராக நாகேஷும் வருகிறார். அவர் மூலமாகத்தான் கங்கா பிரபாகரையே சந்திக்கிறாள். நாகேஷ் எந்தவித சிரமமும் இன்றி வெகு லாவகமாக, உடல்மொழிகளை காணும்போது - மிகவும் அனுபவித்து செய்த வேடமாகவே தெரிகிறது.

ஜெயகாந்தனின் விருது பெற்ற கதை என்பதால் இதைக் கையாள்வதில் இயக்குநருக்கு இருந்திருக்கக்கூடிய அழுத்தத்தை இந்த கைதேர்ந்த நடிகர்களெல்லாம் சேர்ந்து வெகு சுலபமாக்கி விட்டிருக்கிறார்கள். நாம் பார்த்துக்கொண்டிருப்பது சினிமா என்னும் நினைவை மறந்து காட்சிகளுடன் ஒன்றிப்போய் நாமும் அதன் போக்கில் நம்மை தொலைத்து விடுகிறோம்.

சில நேரங்களில் சில மனிதர்கள் - இலக்கியத்திற்கு பெருமை சேர்த்த திரைப்படைப்பு. தமிழின் சிறந்த படங்களின் வரிசையில் கட்டாயம் இடம்பிடிக்கக்கூடிய ஒரு நல்ல சினிமா. சந்தர்ப்பம் கிடைக்கும்போது தவறவிடாமல் பாருங்கள்.
மேலும்...

இளைஞர்கள் ஓட்டெல்லாம் திமுக பக்கம்தான்

Posted: Wednesday, May 11, 2011 | Posted by no-nononsense | Labels: 0 comments

இன்று நடை பயிற்சியின் போது எனக்கு பின்னால் இருவர் பேசியபடியே வந்தனர்.

“இளைஞர்கள் ஓட்டெல்லாம் திமுகவுக்குத்தாங்க விழுந்திருக்கு”

“அப்படீன்னு சொல்ல முடியாதுங்க.. கலந்தும் இருக்கலாம்”

“இல்லீங்க.. திருச்செங்கோடு ஏரியால ஒரு பத்து காலேஜ் பொண்ணுங்களாவது கேட்டிருப்பேன். எல்லோரும் காங்கிரஸுக்கு போட்டதாத்தான் சொன்னாங்க. ஒருத்தர்கூட தேமுதிகன்னு சொல்லலை”

“அப்படீங்களா.. சரி நாளைக்கு தெரிஞ்சிடும். பார்ப்போம்”

“எக்ஸிட் போல்லாம் சும்மாங்க. அடிச்சு சொல்றேன் பாருங்க. இளைஞர்கள் ஓட்டெல்லாம் திமுக பக்கம்தான்”

அது யாருடா இப்படி அடிச்சு பேசுறது என்று திரும்பி பார்த்தேன். ஒருவர் திமுகவில் ஊராட்சி பொறுப்பில் உள்ளவர்(அதாவது அவர் மனைவி). அவரிடம் அறுதியிட்டு கூறிக்கொண்டிருந்தவர் யாரென்று தெரியவில்லை. அவரிடம் ஏதாவது சகாயம் எதிர்பார்ப்பவராக இருக்கலாம். எதற்கும் சொல்லி வைப்போமே என்று தாராளமாக அடித்து விடுகிறார்.


அதுசரி, வெறும் 5000 பேரிடம் நடத்தும் கருத்து கணிப்புகள் எந்த அளவில் சரியாக இருக்க முடியும்? ஒருவேளை நாளைய முடிவுகளுடன் அவை பொருந்தி வந்தாலும் அது தற்செயல் நிகழ்ச்சியாகவே இருக்க முடியும் என்பது என் கருத்து. சோதிடம் போல!


மேலும்...

கோ - திரை விமர்சனம்

Posted: Thursday, May 5, 2011 | Posted by no-nononsense | Labels: 0 comments
கோ: ஆனந்தையும், ஷங்கரையும் பார்த்து மற்றவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்

இன்று காலை எண்ணியிருந்த வேலையில் இடர் ஒன்று ஏற்பட்டு தள்ளிப்போக, அதனால் கிடைத்திட்ட பொன்னான நேரத்தை சிந்தாமல் சிதறாமல் வீணாக்காமல் தமிழர் கலாச்சாரத்தின்படி திரைப்படம் பார்த்து அதைக் கழிக்கலாமே என்று மேலிடத்திலிருந்து யோசனை வந்தது. அந்த மேலிட மேடத்தையும் அழைத்துக்கொண்டு நாமக்கல் எல்.எம்.ஆர் தியேட்டரை 11 மணியளவில் அடைந்தேன்.



டிக்கெட் எடுத்து உள்ளே சென்றால் எங்களையும் சேர்த்து இருபது சொச்சம் பேர் இருந்தார்கள். அதுவும்கூட கோடை விடுமுறை என்பதால்தான் என்று நினைக்கிறேன். [இருபது பேர்தான் என்று பார்க்காமல் ஏ.ஸியை கர்ம சிரத்தையாக போட்டிருந்தார்கள்]. அதிலும் மூன்று நான்கு காதல் ஜோடிகள் என்பதை காதும் காதும் வைத்தாற் போல் கவனித்து வைத்தேன்.



நானெல்லாம் காதலித்த காலங்களில் (பன்மையேதான்) இப்படி தியேட்டர்களில் கூட்டம் இல்லாமல் போகவும் இல்லை; காதலியுடன் வசதியாக தனித்து அமர்ந்து பார்க்க குஷன் ஷோபாக்கள் போடப்படவும் இல்லை. கூட்டத்திற்கு நடுவே இருளில் படம் பார்ப்பது மாதிரியே நடிப்பது எவ்வளவு சிரமம் என்பதை இங்கே சுத்த சுயம்பிரகாசங்களை போல் வேஷம் போட்டு கமெண்ட் போட தயாராயிருப்பவர்களுக்குச் சொல்லத் தேவையில்லை. அது இஷ்டப்பட்டு கஷ்டப்பட்ட காலம். சரி, மேற்கொண்டு நானே என் வாயை பிடுங்கிக்கொள்ளும் முன்னால் விஷயத்துக்கு வருவோம்.



நாங்கள் சென்றமர்ந்த திரைப்படத்தின் திருநாமகரணம் ‘கோ’! சின்ன வயதில் இருந்து சுபாவின் நாவல்களில் நிறைய நேரத்தை பறிகொடுத்தவன் என்கிற முறையில் இந்த படத்தை பார்க்க எந்தவிதமான முன்தயாரிப்புகளும் அவசியப்படவில்லை. அவர்களுடைய எந்த நாவலும் சோடைபோனதில்லை. உடன் சூப்பர் நாவல் காலத்தில் இருந்து பிடித்துப்போன கே.வி.ஆனந்தின் கூட்டணி எனும்போது அதைப் பார்ப்பது தனிவிருப்பமாக இருந்தது. ஏன் என்ற கேள்விக்கு பதிலளிக்க 80-களின் இறுதிக்கு அழைத்துச் சென்று இன்னொரு நீண்ட கட்டுரைதான் எழுத வேண்டியிருக்கும். சூப்பர் நாவல் படித்து வந்தவர்களுக்கு அந்த ஆவல் புரியும். சூப்பர் நாவலின் உள்ளடக்கத்தின் கர்த்தாக்கள் சுபா என்றால், அட்டைப் படத்தின் ஹீரோ கே.வி.ஆனந்த். அவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருந்தது.



கனாக் கண்டேன், அயன் இரண்டிலும் ஒரு கமர்சியல் முழுமை இருந்தது என்றால் அது இவர்கள் மூவரின் த்ரில்லர் நாவல் கள முன் அனுபவம்தான் காரணம். ஒரு த்ரில்லர் நாவலை இரண்டரை மணி நேர திரைக்கதை ஆக்கிவிடும் உத்தியை அயனில் வெற்றிகரமாக செய்துகாட்டியிருந்தார்கள். அதனால் கோ படத்தின் output பற்றி எனக்கு பெரிய எதிர்பார்ப்பெல்லாம் இருக்கவில்லை. எப்படியும் கதையை வேகமாக நகர்த்திவிடுவார்கள்; வந்ததும் பார்க்க வேண்டும் என்று ஏற்கெனவே நினைத்திருந்தேன். படம் வெற்றி என்னும் செய்தி பார்ப்பதை கொஞ்சம் தள்ளிப்போட்டது. வெற்றிப் படங்கள் என்றால் சில வாரங்களுக்கு டிக்கெட் விலையில் ஒரு நியாயமும் இன்றி அநியாயம் நடக்கும்.

‘கோ’ படத்தில் விறுவிறுப்பான திரைக்கதை ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு முழம் முழமாக காதில் பூ சுற்றுகிறார்கள். ஆனால் அப்படி பூ சுற்றுவதையும் அலங்காரமாக அபாரமான கேமரா வேலைகள், கச்சிதமான அடுத்தடுத்த காட்சி நகர்த்தல்களை கொண்டு முக்காடிட்டு செய்வதால் பெரிதாக கவனத்தை கவராமல் கடந்து சென்று விடுகிறது. மேலே சொன்ன அதே விஷயம்தான் சுபாவிடம் ஒரு நாவலை எழுதி வாங்கி படமாக்கி முடித்துவிட்டார் ஆனந்த்.

இயக்குநர்கள் புதிதாக ஒரு உத்தியை கண்டறிந்திருப்பதாக தோன்றுகிறது. நாயகனை புதிய களத்தில் இறக்கிவிட்டுவிட வேண்டும். அதுவே படத்திற்கு ஒரு freshness கொடுக்கும். மீதியை காமெடி, பாட்டு, சண்டை என்று fill in the blanks செய்துகொள்ளலாம். அதன்படி இதில் ஜீவா பத்திரிக்கை போட்டோகிராபராக வருகிறார். பல சாகசங்கள் செய்து ஒரு புதிய கட்சியையே ஆட்சியில் அமர்த்துகிறார். உடம்பெல்லாம் சிலிர்க்கிறது. இத்தனை கேனைத்தனமாகவா எதிர்கட்சி அரசியல்வாதி இருப்பார் என்று கோட்டா சீனிவாச ராவை பார்க்கும்போது பரிதாபம் மேலிடுகிறது. என்ன செய்ய, கமர்சியல் சினிமா ஆயிற்றே! அவர் புத்திசாலியாக இருந்துவிட்டால் ஹீரோவை எப்படி ஹீரோத்தனம் செய்ய வைப்பது?

இறகுகள் என்று ஒரு இளைஞர் அமைப்பு. சட்டென்று ஒரு பத்திரிக்கையால் தமிழ்நாட்டு மக்கள் மனங்களில் எல்லாம் இடம் பிடித்து ஒரே தேர்தலில் ஆட்சியையே பிடித்து விடுகிறது 28 வயதே ஆன அதன் தலைவர் முதல்வர் ஆகிவிடுகிறார். ஜனநாயகத்தில் இப்படி ஒரு ஷார்ட் கட் இருக்கிறது என்பது இதுவரை தன்னார்வலர்களுக்கு தெரியாமல் போய்விட்டது. அதன் நான்காவது தூண்களுக்கும் புரியாமல் இருந்துவிட்டது. என்றாலும், படம் ஜெயிக்கிறது என்றால் நம் ரசனை எத்தனை படி கீழே இருக்கிறது என்பது கண்களுக்கே தெரியவில்லை.

பாடல் ஒன்றுகூட கவரவில்லை. ஹாரிஸ் ஜெயராஜ் ஒரு டெம்ப்ளேட் இசையறிவு கொண்டவராக இருக்கிறார் என்றால் அது பழைய செய்தி. அந்த டெம்ப்ளேட்டும் out date ஆகிவருகிறது என்பதுதான் ரசிகர்களுக்கு ஏற்பட்டு வரும் சோதனை. முன்பு கேட்கும்படியாவது இருந்தது.

பாடல் இடம்பெறும் சூழ்நிலைகளும் திணிக்கப்பட்ட ஒன்றாகவே உள்ளது. ஒரு காட்சியில் உயிர் தோழி இறந்துவிட்ட துக்கத்தை உடனே டூயட் பாடி ஆற்றிக்கொள்கிறார்கள் நாயகனும் நாயகியும். சகிக்கவில்லை.

நல்லவேளையாக அந்த விரல் தம்பி நடிக்கவில்லை என்பது எனக்கு படம் முழுக்க ஆறுதலாக இருந்ததும் இந்த படத்தை நான் சகித்துக்கொள்ள காரணமாக இருக்கலாம். ஜீவா - பாத்திரத்துக்கு பொருந்திப் போகிறார். மெல்ல எல்லா விதமான பாத்திரங்களையும் செய்யக்கூடிய எல்லோருக்கும் ஏற்புடைய கதையின் நாயகனாக உருவாகி வருகிறார்.

கதாநாயகிதான் இந்த சினிமா அனுபவத்தின் பெரிய சோதனை. உங்களுடைய ரசனை இந்த விஷயத்தில் மட்டும் எப்படி சார் இவ்வளவு பிசகாகிப் போனது என்று கே.வி.ஆனந்தை பார்த்து கேட்க வேண்டும் போல் இருக்கிறது. நான் அவர் உள்வட்டத்தில் இல்லாததால் முடியவில்லை. இருந்தவர்கள் கேட்டார்களா தெரியவில்லை. படத்திற்கே ஒரு திருஷ்டி அந்த ராதா மகள். அது ஏன்தான் அந்த புருவத்தை அப்படி வில்லாக்கி வரைந்திருக்கிறார்களோ. ஒரு நளினமும் இல்லை. யார் கண்டது, இவரையும் சிலருக்கு பிடித்துப் போகலாம். அவர்களில் சிலர் நம்மிடையே கூட இருந்து இதைப் படித்து பொருமிக்கொண்டு இருக்கலாம். தமன்னாவுக்கெல்லாம் ரசிகர்கள் இல்லை?!

ஆனந்த், ஷங்கர் போன்ற இயக்குநர்கள் ஒரு விஷயத்தில் தெளிவாக இருக்கிறார்கள். அது கதை-வசனத்தை ஒரு திறமையான எழுத்தாளரிடம் விட்டு விட்டு தாங்கள் தங்கள் வேலையை மட்டும் கவனிப்பது என்பது. அதை எல்லா இயக்குநர்களும் பின்பற்ற முன்வர வேண்டும். த்ராபையான கதைகளில் இருந்து தமிழ் சினிமா தப்பிப் பிழைக்க ஒரு வாய்ப்பாக அது இருக்கும். மாறாக, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என்று ஒரு ஏழெட்டு உருப்படிகளை தன் பெயருக்கு பின்னால் போட்டுக்கொள்வதில் என்ன பெரிய படைப்பூக்கம் இருக்கிறது? இந்த விஷயத்தில் மலையாள சினிமாவுலகம் முன்னோடியானது. இதைப்பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாக பேச வேண்டியுள்ளது. இன்று நேரமில்லை.
மேலும்...

காவியம் கவிதை: பிரமிள்

Posted: Wednesday, May 4, 2011 | Posted by no-nononsense | Labels: 0 comments
வேறொரு இழையில் ரிஷி பகிர்ந்து கொண்ட ஒற்றை இறகு கவிதையைப் படித்தவுடன் எனக்கு பிரமிளின் மிகப்புகழ்பெற்ற இறகு கவிதை உடனே ஞாபகம் வந்தது. உலகத்தரமான கவிதை என்று இலக்கிய உலகில் போற்றுப்படுவது அது.

காவியம்

சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின் தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச்செல்கிறது.

தமிழ் இலக்கிய ஆக்கங்களில் ஆர்வம் காட்ட விழைவோர் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய இலக்கிய முகம் பிரமிளுனுடையது. கவிஞர், விமர்சகர், சிறுகதை ஆசிரியர் என்று பன்முக ஆளுமை கொண்ட பிரமிள் என்கிற தருமு சிவராமு, இலக்கிய ஆர்வம் காரணமாக இலங்கையிலிருந்து தமிழ்நாடு வந்து மிகத் தீவிரமான ஆளுமையாக தன்னை நிறுவிக்கொண்டதுடன், அந்தத் தீவிரம் காரணமாகவே வாழ்க்கையை தொலைத்து வறுமை பீடிக்க தெருவில் அலைந்து தொலை தூரம் சென்று முகவரி அற்று இறந்து போனார்.

பாரதிக்குப் பிறகு அதிக மரியாதையை சம்பாதித்துக் கொண்ட பின்நவீனத்துவ கவிஞர் பிரமிள்.

அவர் பத்தோடு பதினொன்றாகிவிடக்கூடாது என்பதற்காகவே இந்தத் தனிப்பதிவு.
மேலும்...

தமிழில் எழுதும் போது ...

Posted: | Posted by no-nononsense | Labels: , 0 comments
எதை எழுதினாலும் அதை ஒருமுறை receivers end-ல் இருந்து வாசித்துப் பார்க்க வேண்டும். ஆனால் பொதுவாக நண்பர்களுக்கு இடையேயான உரையாடல்களின் போது அதில் பெரும்பாலும் நாட்டமிருக்காது. ‘எல்லாம் போதும் போதும்..’ என்று அனுப்பிவிடுவோம். அது ஒரு இயல்பான விஷயம். அதை அப்படிப் பார்க்காமல் நமக்கு தேவைப்படும் பயிற்சியை எடுத்துக்கொள்ள ஒரு வாய்ப்பாக நினைக்க வேண்டும். அதன்மூலம் நம்முடைய எழுதுதமிழை இழைத்து இழைத்து மெருகேற்றிக்கொள்ளாலாம். இங்கே நண்பர்களிடையே முடியாவிட்டால் வேறு எங்கும் அந்த சுதந்திரம் கிடைக்காது.

அந்நிய மொழி போகட்டும். தாய்மொழியில் தெளிவுபட பேசுவதும் எழுதுவதுமான ஒரு articulation skill இல்லாமல் இருப்பதும் தன்னளவில் ஒரு குற்றமே. மனம் நினைப்பதை சரியான வார்த்தைகளில் நாவிலும் விரலிலும் கொண்டுவரமுடிய வேண்டும். அது பெரிய கம்ப சூத்திரம் ஒன்றுமில்லை. அடிப்படையில் கொஞ்சம் ஆர்வமும், கவனமும் இருந்தால் போதும்.

இந்த ஒருமை / பன்மை குழப்பம் மிகவும் சகஜமாகி விட்டது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.
நம்புவது சிரமம், ஆனால், வைரமுத்து , வாலி கூட இதற்கு விதி விலக்கு இல்லை (அது சந்தத்திற்காக என்ற சால்ஜாப்பை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது). துரதிஷ்டவசமாக அந்த பாடல் வரிகள் எனக்கு இப்போது ஞாபகம் வரவில்லை.


துட்டுக்குப் பாட்டு எழுதும் சந்தக்கட்டு வேலையை விட்டு விடலாம். அதில் வாலி என்ன வைரமுத்து என்ன.. எல்லோரும் ஒன்றுதான். இங்கே பிழை சகஜமாகிவிட்டது என்று குறிப்பிடுவது இணையதளங்களில் புழங்கும் தமிழை என்றால், நாம் நல்ல தமிழைத் தவறான இடங்களில் தேடிக்கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம். Self-publishing-ல் பிழைத் திருத்த கம்போஸிடர்கள் கிடையாது. மீண்டும் மீண்டும் படித்து வரிகளை சீரமைக்க எடிட்டர்கள் கிடையாது. அவரவர் கையில் என்ன வருகிறதோ, அதுதான் தமிழ்; எழுத்து; சுயஇலக்கியம். அதனால் நல்ல தமிழை வாசிக்கவும், கற்கவும் ஆர்வமுள்ளோர் நல்ல எழுத்தாளர்களின் நூல்களின் வழியாக அதை மேற்கொள்ளலாம். இது என் அனுபவ பகிர்வு.
மேலும்...

அறிவியல் ஆபத்து

Posted: Sunday, May 1, 2011 | Posted by no-nononsense | Labels: 0 comments
இயற்கையை விஞ்சப் பார்க்கும் அறிவியல் ஆபத்துக்கே அதிகம் இட்டுச்செல்கிறது. நம்மைச் சுற்றி நடக்கும் இயற்கைக்கு மாறான துர்மரணங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு பார்த்தால் எல்லாவற்றிலும் மனிதனின் வேலையை எளிமைப்படுத்தக் கண்டுபிடிக்கப்பட்ட ஏதாவது ஒரு இயந்திரம், ரசாயனம், செயற்கை ஆற்றல் சம்மந்தப்பட்டிருக்கும். யோசித்துப் பாருங்கள்.

அறிவியலால் உயிர் பிழைச்சது ? அதை விட அதிகம் இல்லையா?

அதுவும் உண்மைதான். அறிவியலுக்கு மறுபக்கமும் உண்டு என்பதை சுட்டுவதே என் கூற்றின் நோக்கம்.

இயற்கையோடு இயைந்த வாழ்வில் மனிதனின் மரணம் இயற்கையாக இருந்தது. இன்று எத்தனை எத்தனை வாகன விபத்துக்கள், புதிது புதிதான நோய்கள். சாப்பிடும் சாப்பாடு விஷமாகிவிட்டது. காற்று தூய்மை கெட்டுவிட்டது. ஆயுதங்கள் நவீனமயமாகி கொத்து கொத்தாக உயிரை மாய்க்கின்றன. அணு விபத்துகளால் உலகம் பெரிய ஆபத்தை சந்திக்கவிருக்கிறது. ஓசோன் ஓட்டை பெரிதாகிக்கொண்டே செல்கிறது. பனி உருகுகிறது. சூழலியலில் மாசு பெரும் மாற்றங்களை விளைவித்து வருகிறது (environmental pollution). இதெல்லாம் நிச்சயம் அறிவியல் செய்துள்ள பெரும் கேடு.

அதன் மருத்துவ முன்னேற்றம் மட்டுமே அதை போற்றி பாராட்ட இருக்கும் ஒரு குறிப்பான நல்ல விஷயம். பல பெருநோய்களை அது வென்றுவிட்டது. ஆதிகாலத்தில் மனிதனின் சராசரி ஆயுட்காலம் 30க்குள். இன்று அறுபதுக்கும் மேல். இது அறிவியலின் மகத்தான சாதனைதான்.

மற்றபடி, தகவல் தொடர்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைச் சொல்ல வேண்டாம். அது இல்லையென்றாலும் மனிதன் ஜீவித்திருப்பான். அது பணக்காரர்களின் பெருவியாபாரத்திற்கு பெருமளவில் உதவும் ஒரு சாதனம்; அவ்வளவே. பத்து வருடங்களாகத்தானே செல்போனும், இண்டர்நெட்டும். ஐம்பது வருடங்களுக்கு முன்பு வரை கம்பித் தொடர்பு தொலைபேசி கூட கிடையாதே. என்ன குறைந்துவிட்டது?

அறிவியலால் நன்மை உண்டு. வாழ்க்கையில் வசதிகள் பெருகிவிட்டன. எல்லாம் easy going ஆகிவிட்டது. ஆனால் அதனால் மனித குலத்திற்கு நீண்ட கால நோக்கில் தீமையே அதிகம். அவற்றை கண்கூடாக பார்க்க நாம் இருக்க மாட்டோம் என்பதால் இன்றைய வசதிகளை உத்தேசித்து நல்லெண்ண கருத்துச் சொல்ல முனையலாம்.

இது தனித் தனியாக அலசி விரிவாக பேச வேண்டிய விஷயம்.
மேலும்...