இன்றைய இளைஞர்கள் மற்றும் சீமானின் அரசியலை முன்வைத்து

Posted: Sunday, November 29, 2009 | Posted by no-nononsense | Labels: , 0 comments
My reply to my friend's support for Seeman and his view on today's youths:

நண்பா, சீமான் விஷயத்தில் நிச்சயம் நீ என்னை எதிர்கொள்வாய் என்று எதிர்பார்த்தேன். அப்படியே நடந்தது. விவாதிக்க முன்வந்ததற்கு முதலில் நன்றி. விவாதிப்பதன் மூலம்தான் சிந்தனையை கூர் தீட்டிக்கொள்ள முடியும். மாற்று கருத்துக்களை எதிர்கொண்டால்தான் தெளிவு கிடைக்கும்.

இன்றைய இளைஞர்களை யாரும் தவறாக வழிநடத்திவிட முடியாது என்கிறாய். நமது இளைஞர்கள் அவ்வளவு பக்குவப்பட்டு விட்டார்கள் என்றால் எனக்கும் மகிழ்ச்சியே. ஆனால் நாட்டு நடப்பு அப்படியிருப்பதாகத் தெரியவில்லை. ஜாதி, இனம், மொழியின் பெயரால் இளைஞர்களின் உணர்வுகள் தூண்டிவிடப்படும் செயல்களே பெரும்பாலும் நடைபெறுகின்றன. அண்மையில் சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் மாணவர்கள் கொலைவெறி கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டது எந்த பக்குவத்தின் அடிப்படையில் என்று விளக்கினால் நல்லது. அது முதலில் ரேக்கிங் காரணமாக எழுந்த தகராறு என்றார்கள். ஆனால் பின்னர்தான் தெரியவந்தது அது முழுக்க முழுக்க ஜாதி துவேஷத்தின் அடிப்படையில் எழுந்த மோதல் என்பதும்; பின்னாலிருந்து தூண்டி விட்டவர்கள் அரசியல்வாதிகள் என்பதும். இதெல்லாம் பிற்பாடு மாணவர்களே அளித்த பேட்டியில் வெளியான தகவல்கள். இவர்கள் படித்த இளைஞர்கள் தானே, பிறகு ஏன் ஜாதி மோதல்?

சரி, இருவேறு ஜாதி இளைஞர்கள் தான் அடித்துக் கொள்கிறார்கள் என்றால், ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்களே வெட்டிக் கொள்கிறார்களே? விடுதலை சிறுத்தைகளும், தேவேந்திர குல வேளாளர்களும் இளைஞர்களால் நிரம்பிய கட்சி தானே? ஏன் அடித்துக் கொள்கிறார்கள்? சரி, அவர்கள் மிக பிற்படுத்தப்பட்ட இனம் என்பதால் விட்டு விடலாம் என்றால், சற்று முன்னேறிய இனமாகிய கவுண்டர்களே இரண்டு கட்சி வைத்துக்கொண்டு(பெஸ்ட் ராமசாமி, தனியரசு) தெருமுனைகளில் அடித்துக் கொள்வது எதனால்? இத்தனைக்கும் அடித்துக் கொள்பவன் எல்லாம் மாமன்-மச்சானாக இருக்கிறான். அதிலும் தனியரசின் பின்னாலுள்ளவர்கள் அனைவரும் இளைஞர்கள் மட்டுமே! அவர்களின் மீதுதான் அடிக்கடி அடிதடி வழக்குகள் பதிவாகின்றன. இத்தனை நாளும் ஒற்றுமையாக இருந்த இனம் இன்று பிளவுபட்டு நிற்பதும், அதற்கு அந்த இனத்தின் இளைஞர்களே துணை போவதும் எந்த பக்குவத்தின் அடிப்படையில்?

அரசியல் / ஜாதி கட்சிகளின் மாநாடுகளை கவனித்திருக்கிறாயா.. அதன் முன்புறம் ஆடிக்கொண்டும் ஓடிக்கொண்டும் திரிவதெல்லாம் யார்? அதிலேதாவது அர்த்தம் இருக்கிறதா?

இந்திய தேசியத்தைப் பற்றி இன்றைய இஸ்லாம் சமுதாய இளைஞர்களின் கருத்தென்ன? இந்து தீவிரவாதத்தால் தாங்கள் நசுக்கப்படுவதாக நினைக்கிறார்கள். ஜிகாத் தவறில்லை என்று கருதுகிறார்கள். இந்தியாவில் தங்களுக்கு ஒரு பாதுகாப்பற்ற நிலை நிலவுவதாக நினைக்கிறார்கள். ஆனால் அப்படியில்லை; நாம் நமது முஸ்லிம் நண்பனையோ, அல்லது நம் வீட்டருகில் வசிக்கும் முஸ்லிம் குடும்பத்தையோ வேறுபாடாக நினைக்கவில்லை என்று உனக்கும் எனக்கும் தெரியும். அவர்களுக்கும் சமீபகாலம் வரை அப்படித்தான் தெரிந்துவந்தது. ஆனால் இன்று நிலைமை அப்படியில்லை என்பதையும், இந்தியத்துவத்திற்கெதிரான அவர்களின் ஆவேசமான கருத்துக்களையும் நீ அவர்களின் ஏகத்துவம் போன்ற பத்திரிக்கைகளில் படித்தால் தெரிந்துகொள்ளலாம். 1994க்கு முன்பில்லாத மாற்றம் இன்றைக்கு ஏற்பட்டது எதனால்? இன்றைக்கு இருப்பதில் 90% தீவிரவாத அமைப்புகள் 1990க்கு முன்பு வரை காஷ்மீரில் கிடையாது. இவ்வளவு பிரச்சினைகளும் கிடையாது. ஆனால் அதற்கு பிறகு அங்கே இத்தனை இளைஞர்கள் தீவிரவாதம் பக்கம் திரும்பியது எதனால்?

ஒரிஸ்ஸா கந்தமாலில் கிறிஸ்துவர்களை தேடி தேடி வேட்டையாடிய கும்பலில் இருந்ததெல்லாம் யாரென்று நினைக்கிறாய்?

மொழியின் பெயரால் இன்று மஹாராஷ்டிராவில் மற்ற மாநிலத்தவர்கள் அடித்து துரத்தப்படுவது யாரால்? ராஜ் தாக்கரே பின்னால் திரண்டிருக்கும் இளைஞர் கூட்டத்தினால். அன்று பால் தாக்கரேவினால் தமிழர்கள் அடித்து துரத்தப்பட்டார்கள்; இன்று ஹிந்திவாலாக்கள் துரத்தப்படுகிறார்கள். அவ்வளவுதான் வித்தியாசம். கர்நாடகாவில் வட்டாள் நாகராஜ் பின்னால் நிற்பதும் தமிழனை தாக்குவதும் இளைஞர்களே!

நடிப்பென்று தெரிந்தும் திரையில் தெரியும் போலி பிம்பங்களை ஹீரோயிஸமாக சிரமேற்க் கொண்டு கொண்டாடி நடிகர்களின் பின்னால் திரியும் கூட்டத்தில் எத்தனை முதியவர்கள் இருக்கிறார்கள்? பல நடிகர்களுக்கும் அரசியல் ஆசை வருவது யாரை நம்பி என்று நினைக்கிறாய்?

இப்படி இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம் நண்பா! இது எல்லாமே உனக்கே தெரியும். இவர்களையெல்லாம் எந்த ஊடகமும் தீண்டுவதில்லை என்றா நினைக்கிறாய்? இல்லை அனைவரும் படிப்பறிவு அற்றவர்களா? பிறகு எப்படி இந்த மனிதநேயமற்ற துவேஷம் ரத்தத்தில் கலந்தது?

இத்தனை கேள்விகளுக்கும் விடை ஒன்றுதான். சுயலாபநோக்கு கொண்ட அல்லது முதிர்ச்சியற்ற மூர்க்கம் நிறைந்த தலைவர்களால் அவர்களின் ஜாதி-மொழி-இன உணர்வுகள் தூண்டப்படுகின்றன. அவர்களின் பேச்சுத் திறமையால் இளைஞர்களின் சுயமரியாதை சோதிக்கப்பட்டு அவர்களுக்கான சித்தாந்தங்கள் கட்டமைக்கப்படுகின்றன. இளைஞர் சக்தி இவ்வாறு தவறான கருத்தாக்கத்தின் பின்னால் பிரவாகமெடுத்து திசை தவறி பயணிக்கும்போது இழப்புகள் பாரிய அளவில் இருக்கின்றன - சமுதாயத்துக்கு மட்டுமல்ல, அவர்களுக்கே கூட!! இது தொடர்ந்து நடைபெற்று கொண்டேதான் இருக்கிறது. பெரும்பான்மை முதிர்ச்சியடையும் வரை நடந்து கொண்டேதான் இருக்கும்.

சமகால நிகழ்வுகள் இவ்வாறு இருக்க, இன்றைய இளைஞர்களை தவறாக வழி நடத்திவிட முடியாது என்று நீ கூறுவதை நான் முற்றிலும் மறுக்கிறேன்.

சீமான் மேல் எனக்கு என்ன விமர்சனம் என்பதை அடுத்த மடலில் தொடர்கிறேன்.

*

(நேற்று எழுதியதன் தொடர்ச்சி...)

-----------------------------------------------------------------------
இதையா எதிர்பார்த்தோம் சீமானிடம்?
-----------------------------------------------------------------------

சீமானை விமர்சிப்பவர்கள் மீது அவருடைய அபிமானிகளுக்கு கோபம் வருவதில் வியப்பில்லை. சுயநலம் மட்டுமே மேலோங்கியிருக்கும் தமிழக அரசியல் சூழலைக் கண்டு சலிப்புற்று மரத்துப் போய்விட்ட தங்கள் தமிழ் இன உணர்வுகளை, தட்டியெழுப்பி மீட்க வந்த மேய்ப்பராக அவரை இந்த (நாம் தமிழர்)இளைஞர்கள் காண்கிறார்கள். நானும் ஆரம்பத்தில் அப்படித்தான் கண்டேன்.

1. சீமானின் எழுச்சி பலரும் நினைப்பதைப் போல திரையுலகம் நடத்திய இராமேஸ்வரம் ஆர்பாட்டத்தில் தொடங்கியது அல்ல. அதற்கு முன்பே அவர் தமிழக முற்போக்கு களங்களில் அவருடைய பெரியாரிஸ்ட் முழக்கங்கள் மற்றும் சாதி மத பேதங்களுக்கு எதிரான சீர்திருத்தக் கருத்துக்களுக்காக அறியப்பட்டவராக இருந்தார். மேடையில் இந்து மத பிற்போக்குத்தனங்களைக் கண்டித்து அனல் பறக்க பேசி பகுத்தறிவாளர்களிடையே பெரும் மதிப்புக்கும் நம்பிக்கைக்கும் உள்ளாகி வந்தார். கோவையில் கோவை இராமகிருஷ்ணன் நடத்திய பெரியார்.தி.க பொது கூட்டத்தில் இந்து மத அடிப்படைவாதிகளால் அவர் கல்லால் தாக்கப்பட்டபோது, அதைக் கண்டு உள்ளம் பூரிக்கப் பெற்றவர்களுள் நானும் ஒருவன். இந்து மத அடிப்படைவாதம் தங்கள் பிற்போக்குத்தனத்திற்கு ஆபத்து வந்து விட்டதாக அச்சம் கொள்ளும்போதுதான் கல்லை கையில் எடுக்கும். அத்தகைய அச்சத்தை ஏற்படுத்தும் வல்லமை கொண்ட ஓர் ஆள் நமக்கு கிடைத்து விட்டார் என்னும் பூரிப்பு அது. ஆனால் அந்த நம்பிக்கை பொய்த்து, கழுதை தேய்ந்து கட்டெறும்பாக கூட இல்லை அதற்கும் கீழே போய்க் கொண்டிருப்பதுதான் கவலை கொள்ளச் செய்கிறது.

2. சீமானின் பெரியாரிஸ்ட் சாயம் வெளுத்தது அவருடைய தம்பி திரைப்படத்தில். அதில் ஒரு காட்சியில் மாதவன் வீட்டில் மாட்டப்பட்டிருக்கும் படங்கள் வரிசையாக காட்டப்படும். பெரியார், பாரதிதாசன் வரிசையில் அடுத்து இடம்பெற்றிருந்தப் படம் முத்துராமலிங்க தேவருடையது. பெரியாரும், அவர் வழி வந்த பாரதிதாசனும் காலமெல்லாம் எதை எதிர்த்து போராடினார்களோ, அந்த ஆதிக்கச் சாதி வெறியின் ஒட்டுமொத்த உருவகமான முத்துராமலிங்க தேவரின் படத்தை அவர்கள் அருகில் மாட்டி அவமானப்படுத்தியிருந்தார். வேறு யாருமென்றால் அறியாமல் செய்தது எனலாம். ஆனால் தன்னை பெரியாரின் பேரனாக அறிவித்துக் கொள்ளும் ஒருவரிடமிருந்து இதை நாம் எதிர்பார்க்கவில்லை. பின்னர் கீற்று இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் அறியாமல் தவறு நடந்துவிட்டதாக வருந்தியதுடன், முத்துராமலிங்கத்தின் சாதி வெறியை கண்டிக்கவும் செய்கிறார். அப்பேட்டி கீழே,

கேள்வி: தமிழ் சினிமா சாதியை எப்படி கையாளுது. சாதியை எதிர்த்து வந்த படங்கள் கூட அதைத் தீவிரமா செய்யலை. சாதியை எதிர்த்து ‘வேதம் புதிது’ன்னு பாரதிராஜா ஒரு படம் எடுத்தார். அதிலயும் கடைசியில் பார்ப்பனர்களுக்கு அடிபணிந்து போறமாதிரி தான் எடுத்திருப்பார்...

மார்க்சிஸ்டுகள், பெரியாரிஸ்டுகளைத் தவிர வேறு யாருக்கும் சாதியைக் கடந்து மக்களை மீட்கணுங்கிற நோக்கம் கிடையாது. இங்க சாதி, மதம்னு எல்லாம் எதுவும் கிடையாது. அது ஒரு உணர்வு அவ்வளவுதான். கடவுள், கற்பு இதெல்லாம் எப்படிக் கற்பிதமோ சாதியும் அப்படி ஒரு கற்பிதம். ஒரு உருவகம். வேதங்கள் சொல்லுது, தர்மங்கள் சொல்லுதுன்னா அதையே நாமக் கொளுத்தணும். ஆனா சாதியை அடிச்சு நொறுக்கணுங்கிற நோக்கத்தில இங்க யாரும் எதையும் படைக்கலை. அந்த உணர்ச்சிகளையும் வைச்சு காசு சம்பாதிக்கணுங்கிற நோக்கத்தில் தான் திரைப்படங்கள் படைக்கப்படுது.

கேள்வி:நீங்க சாதியைப் பத்திப் பேசறதால இங்க ஒரு கேள்வி கேட்க விரும்புறோம். முத்துராமலிங்கத் தேவரை கைது செய்தாத்தான் தமிழ்நாட்டில் சாதிப்பிரச்சனை ஒழியும்னு முதுகுளத்தூர் கலவர நேரத்தில் பெரியார் சொல்லியிருக்கார். ஆனால் உங்களோட படங்களில் முத்துராமலிங்கத் தேவரோட புகைப்படம் தொடர்ந்து இடம்பெறுகிறது.?

கொஞ்சநாள் முன்பு வரைக்கும் எனக்கு முத்துராமலிங்கத் தேவர் பத்தின உண்மைகள் எதுவும் தெரியாது. தம்பி படம் வந்தபிறகு அண்ணன்களெல்லாம் சொன்னபிறகு தான் என்னோட பிழை தெரிஞ்சது. அவரை முன்னிறுத்தணுங்கிற உள்நோக்கம் எல்லாம் எதுவும் கிடையாது. படம் வந்த பிறகு தான் தேவரும், பெரியாரும் கொள்கைரீதியா வேறானவங்கன்னு எனக்குத் தெரிய வந்தது. பெரியார் இறந்தபோது அரைக்கம்பத்தில் பறக்காத ஒரே கொடி, முத்துராமலிங்கத்தோட பார்வார்ட் பிளாக் கொடிதான் என்பதையும் தெரிஞ்சிக்கிட்டேன். நான் முழுக்க முழுக்க பெரியாரைப் பின்பற்றுகிறவன். முத்துராமலிங்கம் படத்தை நான் பயன்படுத்தியது முழுக்க முழுக்க அறியாமல் நடந்த பிழைதான்.

அதுதான் அறியாமல் நடந்த பிழை என்று சொல்லிவிட்டாரே, இன்னும் அவரை ஏன் குற்றம் சொல்ல வேண்டும் என்று நினைக்கத் தோன்றுகிறதா? எங்களுக்கும் அப்படித்தான் தோன்றியது. அதை அதோடு விட்டு விட்டோம். ஆனால் ஆதிக்கச் சாதியினரால் ஆண்டு தோறும் நடத்தப்படும் தேவர் குரு பூஜையில் இந்த வருடம் கலந்து கொண்டதுடன், யாரை மேலேயுள்ள பேட்டியில் விமர்சித்து இருந்தாரோ, அதே தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து போட்டோவுக்கு சிரித்தபடி போஸும் கொடுத்தவரை, பகுத்தறிவு படகு ஓட்டித் தமிழனின் தன்மானம் காக்க வந்த தனயன் என்று அதற்கு பிறகும் சொல்லிக் கொண்டிருந்தால் நாடு சிரிக்காது?

’அவர் தேவர் சிலைக்கு மட்டுமா மாலை அணிவித்தார்? இமானுவேல்சேகரன் சிலைக்கும் தானே மாலை அணிவித்தார்’ என்கிறார்கள் அவருடைய ஆதரவாளர்கள். கொலையாளிக்கும் மாலை, கொலையானவருக்கும் மாலை - கணக்கு சரிதானே என்பது எந்த ஊர் நியாயம் அய்யா? தலித் மக்களின் மறுக்கப்பட்ட உரிமைகளுக்காக போராடி உயிர் நீத்த இமானுவேல்சேகரனின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர் தான் பசும்பொன் முத்துராமலிங்க தேவர்(அவர் கதை தனி வரலாறு..).

இப்படி பாலுக்கும் காவல்; பூனைக்கும் தோழன் என்னும் இரட்டை வேடத்தை ஓட்டு பொறுக்கி அரசியல் கட்சிகள் தான் போடுகின்றன என்றால், சே குவேரா சட்டையணிந்த புரட்சிக்காரர், பெரியார் பேரன் சீமானுக்கு அது எதற்கு?

இன்னொன்றும் சொல்கிறார்கள் அவருடைய ஆதரவாளர்கள்., தேவர் இனமும் தமிழர்கள் தானே. அவர்களை எப்படி விட்டுவிட முடியும் என்று. இந்த வாதம் இவர்களிடமிருந்து வந்தது அதிர்ச்சியாக இருந்தது. இந்த அளவுகோல் கொண்டு அளந்தால் தமிழ் பள்ளர், தமிழ் பறையர், தமிழ் சக்கிலியர் என்று எல்லோரும் சாதி பாகுபாடு தமிழர்களாகவே நீடிப்பார்களேயொழிய, சீமான் முன்வைக்கும் literal ‘நாம் தமிழர்’ஆக மட்டும் எவனும் கிடைக்க மாட்டான். சாதி ஒழிப்பை ஆதரிக்காத யாரும் தன்னை சீர்திருத்த செம்மலாக முன்னிறுத்திக் கொள்ள முடியாது.

அதிலும், கடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவை ஆதரித்து பிரச்சாரம் செய்த இந்த முன்னாள் முற்போக்காளர் ’ஈனச்சாதிப்பயலா இருந்தா காங்கிரஸுக்கு ஓட்டுப் போடு” என்று சாதியை இழிவுச் செய்து ஓட்டு வேட்டையாடி இருக்கிறார்.

மேலே முதல் கேள்வியில் சாதி மறுப்பாளராக நாம் அடையாளம் கண்ட அதே நபர், பின்னர் சாதியை வைத்து சதிராட ஆரம்பித்துவிட்டார் என்பது எத்துனை வேதனை தரும் விஷயம்?


3. இன ஒடுக்குமுறைகளுக்கு எதிராக கிளர்ந்தெழுந்து போராடிய இயக்கங்களெல்லாம் பிற்பாடு அரசியல் கட்சியாக பரிணாமம் கண்ட பிறகு ஓட்டு அரசியலில் இறங்கி நீர்த்துப் போன வரலாறு திமுக, பாமக முதல் அண்மை கால விடுதலை சிறுத்தைகள் வரை நம் முன்னே கொட்டிக் கிடக்கிறது. ஆதிக்க சாதிகளின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ’அடங்க மறு; அத்து மீறு” என்று தன் இனத்தின் இளைஞர்களை தட்டியெழுப்பி போராட்ட களம் கண்ட திருமா, அரசியல் கட்சியாக இயக்கத்தை மாற்றியது முதல், திராவிட அரசியலின் சமரசங்களுக்குள் சறுக்கி விளையாடிக் கொண்டு, புலியிலிருந்து பாலுக்கு அலையும் பூனையாக மாறிவிட்டார். அப்படி சீமானும் ஆகிவிடக்கூடாது என்று புத்தி எச்சரிக்கிறது. ஆனால் நடப்புகள் வேறு மாதிரி இருக்கின்றன.

செய்தி: நாம் தமிழர் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறுகிறது

சமுதாயத்தில் மாற்றங்களை கொண்டு வர வேண்டுமானால், தேர்தல் களத்துக்கு வெளியே இருந்து கொள்கைகளை மக்களிடம் விதைத்து வர வேண்டும். இன்று வரை பெரியாரிஸ்ட்கள் அதைத்தான் கடைபிடித்து வருகிறார்கள். ஆனால், பெரியாரின் உண்மையான பேரன் தான்தான் எனத் தன்னைச் சொல்லிக் கொள்ளும் சீமானும் ஓட்டு அரசியலில் இறங்குவது உள்ளபடியே வருத்தமான விஷயம்.

அதிலும் அரசியல் இயக்க அறிவிப்பு கூட்டத்திலேயே என்ன கூறுகிறார் பார்:
நாம் தமிழர் இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்ற போகிறோம். மே-17ல் இதற்கான மாநாடு நடைபெறும். அதன் பிறகு அடிக்கு அடி; உதைக்கு உதைதான். அடி, உதை கொடுக்க தைரியமுள்ளவர்கள் என் இயக்கத்தில் சேருங்கள்

இவர் இளைஞர்களை இட்டுச் செல்லும் பாதை அச்சம் தருவதாகவுள்ளது.

4. ஈழப் பிரச்சினையில் சீமானின் செயல்பாடுகள்................... பெரிய்ய்ய டாபிக், நண்பா! சுருங்கச் சொன்னால், பிரபாகரனின் மேல் அவர் கொண்டுள்ள personality cult, இன்று அவரைப் பின்பற்றும் இளைஞர்களையும் தவறான பாதைக்கு இட்டுச் செல்கிறது. தவறான பாதை என்று எதனைச் சொல்கிறேன் என்றால், இங்கேயிருந்து ஐம்பதாயிரம் பேருடன் இலங்கைச் சென்று போராடப் போவதாகவெல்லாம் கூறுகிறார். ஆகக் கூடிய காரியமா அது? ஆவேசமான பேச்சு இருக்கும் அளவிற்கு தெளிவான அணுகுமுறை இல்லை. இருந்தும் அவர் பேச்சில் மயங்கி பெரும் இளைஞர் கூட்டம் அவர் பின்னால் செல்வது கவலைக்குரியது. இலங்கையில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் தமிழர்களின் ஓட்டுக்காக ஐடிபி கேம்பை காலி செய்து அகதிகள் அனைவரையும் அவரவர் ஊருக்கு அனுப்பிவிடுவார்கள் என்று சொல்கிறார்கள். அப்படி நடந்துவிட்டால், பிறகு சிறிது நாளில் ஈழப் பிரச்சினையின் வீச்சு அடங்கிவிடும். அதன்பிறகு ஈழத்தைப் பற்றி பேசிப் பெரிதாக யாரும் ஜல்லியடிக்க முடியாது.

*

சீமானின் ஆதரவாளராக இருந்து பின்னர் அவரின் விமர்சகனாக நான் மாறியதன் பின்னணி இதுதான். சீமானை அண்ணனாக ஏற்றுக் கொண்டிருக்கும் உன்னத நோக்கம் கொண்ட உன் போன்ற உண்மையான தம்பிகளுக்கு என்னுடைய காரசாரமான கருத்துக்கள் கொஞ்சம் மன வருத்தத்தைத் தரக் கூடும். அப்படியாகின் வருந்துகிறேன். என் கோபத்தின் பின்னால் நம்பியிருந்த ஏமாற்றம் இருக்கிறது என்பது நீங்கள் புரிந்து கொள்ள வேண்டிய உண்மை.

(இனியாவது)இருப்பாய் தமிழா நெருப்பாய்!
மேலும்...

சிதறலாய் சில குறிப்புகள்

பங்கு வர்த்தக தொழிலில் இருக்க நேர்வது ஒரு வகையில் புலி வாலைப் பிடித்த நாயர் கதைக்குச் சமம். இதிலுள்ள ஸ்ட்ரெஸ்ஸை நினைத்தால் விட்டு ஓடிவிடலாம் என்று தோன்றும். அதே நேரம் இதர சலுகைகளையும், விடுமுறைகளையும் எண்ணிப் பார்க்கும்போது, கை வாலை இன்னும் கொஞ்சம் இறுக பிடித்துக் கொள்ளச் செய்யும்.

பலரும் நினைப்பதுபோல் இதில் பிரச்சினை மார்க்கெட்டால் வருவதே இல்லை. கிளையண்ட் என்கிற மஹானுபாவர்கள் தான் நம்முடைய பி.பி அளவை நிதமும் உயர வைத்துக் கொண்டிருப்பார்கள். குறிப்பாக டே டிரேடர்ஸ்! அவர்களைப் பற்றி இன்னொரு நாள் பார்ப்போம். இப்பொழுது நான் சொல்ல வருவது, வெள்ளி கிழமை பங்கு சந்தைகளில் ஏற்பட்ட கிடுகிடு வீழ்ச்சி பற்றி.

2008 ஜனவரியில் ஏற்பட்ட வீழ்ச்சிக்குப் பிறகு இப்பொழுதுதான் மார்க்கெட் கொஞ்சம் ஒரு ஸ்டேபிலிடியை அடைந்திருந்தது. முதலீட்டார்களிடம் கொஞ்சம் நம்பிக்கையும் ஏற்பட்டிருந்தது. அந்த நம்பிக்கையை தகர்க்கும் வண்ணம் வெள்ளி கிழமையன்று எதிர்பாராத திசையிலிருந்து செய்திகள் வந்தன. துபாயின் மிகப் பெரிய ஹோல்டிங் கம்பெனியான துபாய் வேர்ல்ட் தன்னுடைய கடனை திருப்பிச் செலுத்த 6 மாதம் தவணைக் கேட்ட செய்திதான் அது. மொத்தம் 60 பில்லியன் டாலர் கடனில் இக்கம்பெனி இருந்துவந்தது. இதனுடைய முதலீட்டின் கீழ் தான் துபாயின் பிரபலமான ’பால்ம் ஜூமைரா’ உள்ளிட்ட முக்கிய பிராஜட்கள் செயல்படுத்தப்பட்டு வந்தன. துபாயின் ஆட்சியாளர்கள் தான் இதனுடைய முதலாளி என்பது கவனிக்கத் தக்கது. துபாய் போன்ற அரசாட்சி நடைபெறும் தேசங்களில் எப்பொழுதும் transparency எல்லாம் எதிர்பார்க்க முடியாது என்பதால், கடன் பிரச்சினையின் தீவிரம் இன்னும் பல மடங்கு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அது உலகம் முழுவதும் பங்கு சந்தைகளில் வெள்ளியன்று எதிரொலித்து சந்தை வீழ்ந்தது. குறிப்பாக ரியல் எஸ்டேட் மற்றும் இன்ஃப்ரா பங்குகள் சரிந்தன.

சிலர் இது கொஞ்சம் ஓவர் ரியாக்‌ஷன் என்கிறார்கள். தெளிவான விவரங்கள் வெளியாக இன்னும் சில நாட்கள் ஆகலாம். இருப்பினும், தற்சமயம் முதலீட்டாளர்களின் நம்பிக்கை மீண்டும் ஒருமுறை அடிவாங்கி இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

சில ஆண்டுகள் முன்பு துபாயை சேர்ந்த Emaar இந்தியாவின் MGF உடன் இணைந்து 6000 கோடி நிதி திரட்டும் ஒரு மெகா IPO விற்கு அடி போட்டார்கள். அதற்குள் Reliance power IPO இந்தியாவின் குப்பன்-சுப்பனின் மொத்த பணத்தையும் உறிஞ்சித் தள்ளியதுடன், அமெரிக்க mortgage பிரச்சினையும் சேர்ந்து சந்தையை வீழ்த்தியதால், இப்போதைக்கு இங்கே ஒன்றும் தேறாது என்று அந்த துபாய் ஷேக் கம்பெனி ஜகா வாங்கிக் கொண்டது. இல்லையென்றால் இங்கேயிருந்து மக்கள் பணம் எப்படியும் பத்தாயிரம் கோடியாவது ஸ்வாகா ஆகியிருக்கும்.

---------------

”யோகி” திரைப்படம் பெரிய ஓப்பனிங்குடன் வெளியானது. அமீரின் திறமை மீது எனக்கும் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் கேள்விப்படும் செய்திகள் அவ்வளவு சிறப்பனதாக இல்லை. பெரும்பாலும் மொக்கை படத்திற்கும் கூட கருணையின் அடிப்படையில் நல்ல ரேட்டிங் கொடுக்கும் நாமக்கல் ’சினிமா சுப்புடு’ சுரேஷ்குமார் கூட ஒரே வரியில் ‘எனக்கு பிடிக்கலை’ என்று சொல்லிவிட்டான். இணையத்தில் படிக்க நேர்ந்த விமர்சனங்களும் படம் மனதோடு ஒட்டவில்லை என்றே சொல்கின்றன. மேலும் இது விருது வாங்கிய Tsotsi என்னும் ஆப்ரிக்க திரைப்படத்தின் அட்டை காப்பியாம். ஆனால் நான் You too amir? என்றெல்லாம் கேட்க மாட்டேன். இங்கே மாட்டினவன் திருடன்; மாட்டாதவன் புத்திசாலி!

திரைத்துறையில் இருக்கும் ஒருவரின் விமர்சனம் இங்கே http://cablesankar.blogspot.com/2009/11/tsosti.html

---------------

சீமான் கைதாக காரணமாக இருந்த கனடா உரை பற்றி சதீஷ்கண்ணனுடன் பேசிக் கொண்டிருந்தேன். அதனுடைய லிங்க் கிடைக்குமா என்று கேட்டிருந்தான்.


தமிழின் பெயரால் காது நரம்புகள் புடைக்க அடுக்குமொழியில் ஆவேசமாக யார் பேசினாலும் அவன் பின்னால் தலைவன் என்று சொல்லிக்கொண்டு அலைந்து திரிவது தமிழனின் பரம்பரை வியாதி. அந்த பேச்சின் பின்னுள்ள நடைமுறை சாத்தியங்களையோ அல்லது குறைந்த பட்சம் அதன் பொருளையோ கூட அவன் ஆராய முற்பட்டதில்லை. முற்பட்டிருந்தால் காமராஜரை தோற்கடித்து பிரிவினைவாதம் பேசி திமுகவை ஆட்சி கட்டிலில் அமர்த்தியிருக்க மாட்டார்கள். பேசி பேசியே ஆட்சிக்கு வந்தார்கள். இன்றுவரை பேசி பேசியே தமிழனின் மூளையை மழுங்கடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த உரையில் சீமான் கூறுவதைப்போல் அவர் பின்னாலும் இப்பொழுது பெரிய கூட்டங்கள் கூடுகின்றன. எல்லோரும் இளைஞர்கள். தங்கள் இன-மொழி-உணர்வுகள் தவறான காரணத்திற்காக திரட்டப்படுகின்றன என்பதை ஒருநாள் அவர்கள் உணரக் கூடும்.
மேலும்...

மாவீரர் நாள் 2009 - ஒரு பார்வை

Posted: Friday, November 27, 2009 | Posted by no-nononsense | Labels: 0 comments
பலரும் பலநாளும் எதிர்பார்த்திருந்த முக்கியமான மாவீரர் நாள் நேற்று கடந்து சென்றிருக்கிறது. மாவீரர் நாளில் உரையாற்றுவதன் மூலம் ஈழப் போராட்டத்தை யார் அடுத்து முன்னெடுத்துச் செல்லப் போகிறார் என்று பலரின் மனதிலும் தொக்கி நின்ற கேள்விக்குத் தெளிவான பதிலைத் தராமலே இந்த நாள் சென்றுவிட்டது. சிலர் பொட்டு அம்மன் வருவார் என்றனர்; இன்னும் சிலர் பிரபாகரனே தன்னை வெளிபடுத்திக் கொள்வார் என்றனர். இரண்டுமே நடக்கவில்லை. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைச் செயலகம் ’மாவீரர் தின உரை’ என்ற பெயரில் அறிக்கை மட்டும் வெளியிட்டுள்ளது. ஆனால் பிரபாகரனின் இடத்திலிருந்து தமிழீழ விடுதலை புலிகளின் சார்பில் யாரும் உரையாற்றவில்லை.

புலம் பெயர் சமூகத்திலிருந்து நாடு கடந்த தமிழீழ அரசு செயற்குழு இணைப்பாளர் ருத்ரகுமாரன் அறிக்கை வெளியிட்டார். என்னைப் பொருத்தவரை, களத்தில் போராட்டங்கள் சுத்தமாக துடைத்தழிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த transnational goverment என்பது மிக அவசியமானது ஒன்று. இததகைய அரசமைவு, போராட்டத்தை உளவியல் ரீதியாக பலப்படுத்துவதாகவும், சர்வதேச சமுதாயத்தில் ஓர் கவன ஈர்ப்பாகவும் இருக்கும் என்பதால் இதற்குரிய முக்கியத்துவம் தமிழ்ச் சமுதாயத்தில் முதலில் கிடைக்கப்பெற வேண்டும்.

இதற்கிடையில், விடுதலை புலிகளின் மூத்த தளபதி ராம் என்பார், பிரபாகரன் போர் முனையின் இறுதி நாளில் முள்ளிவாய்க்காலில் வைத்து தனக்குப் பின் விடுதலைப் போரை முன்னெடுத்துச் செல்லும் பணியை தன்னிடம்தான் ஒப்படைத்ததாகவும், அதனை தமிழ்ச் சமுதாயம் ஆதரிக்க வேண்டும் என்று கூறி மாவீரர் தின உரையாற்றி ஓர் ஒலிநாடா வெளியிட்டுள்ளார். பிரபாகரனின் உள்வட்டத்திலிருந்த முக்கிய தளபதிகளில் ஒருவரான இந்த ராம் காட்டுப் பகுதியில் ஒளிந்திருந்தபோது, இலங்கை ராணுவத்தின் தேடுதல் படையணியால் அண்மையில் கைது செய்யப்பட்டுவிட்டதாக ஒரு செய்தி வெளியாகி இருந்தது. இப்போது அந்த ராமிடமிருந்துதான் உரை வெளியாகியுள்ளது. இதனால், ஒருவேளை இது இலங்கை ராணுவத்தின் உளவியல் ரீதியான யுத்தத்தின் ஒரு நடவடிக்கையாக, தமிழ் மக்களை குழப்பத்தில் ஆழ்த்த செய்யப்பட்ட ஏற்பாடாக இருக்கலாம் என்று சந்தேக கண் கொண்டு பார்க்கப்ப்படுகிறது. கிட்டத்தட்ட நிராகரிக்கவும் படுகிறது. அவ்வளவு சீக்கிரத்தில் பிரபாகரன் இடத்தில் யாரையும் தமிழ் சமூகம் ஏற்றுக் கொண்டு விடாது.

வழக்கம்போல் பழ.நெடுமாறன் பிரபாகரன் உயிருடன் தான் உள்ளார் என்று மக்களை குழப்பும் வேலையை மாவீரர் நாளிலும் செய்துள்ளார். ஆனால் அவரிடம் கேபி உள்ளிட்ட பிரபாகரனின் சகாக்கள், புலிகளின் தலைமைச் செய்லகம் மற்றும் சர்வதேச ஈழ சமுதாயம் அனைத்தும் ஒப்புக்கொண்டுவிட்ட பிரபாகரனின் இறப்பை எதன் அடிப்படையில் மறுக்கிறீர்கள் என்று மட்டும் கேட்டுவிட முடியாது. கேட்பவர் தமிழின விரோதியாக சித்தரிக்கப்படுவார். வைகோ தேவலாம்; ஒருவழியாக பிரபாகரன் கொலை செய்யப்பட்டுள்ளதாக பேட்டிக் கொடுக்கத் துவங்கிவிட்டார்.

இம்மாதிரியான குழப்பவாதிகளால்தான் பிரபாகரனுக்கு நியாயமாக செலுத்தப்பட்டிருக்க வேண்டிய அஞ்சலி செலுத்தப்படாமலே இன்றுவரை தொடர்கிறது.

கிட்டத்தட்ட ஏழெட்டு ஆண்டுகளாக ஈழ நடப்புகளை உன்னிப்பாக அவதானித்து வரும் எனக்கு இந்த மாவீரர் நாள் பிரபாகரனின் உரையின்றி மௌனமாக கடந்து சென்றிருப்பது, மௌனத்தின் வலியாக மட்டுமல்ல, தமிழின அழிப்பு நடவடிக்கையை ஆதரித்துவிட்ட ஒரு நாட்டின் குடிமகன் என்ற வகையில், மனசாட்சியின் வலியாகவும் இருக்கிறது.
மேலும்...

2012

Posted: Tuesday, November 24, 2009 | Posted by no-nononsense | Labels: 0 comments
எனக்கு இப்படத்தை பார்ப்பதைப் பற்றி இறுதி வரை இருமனதாகவே இருந்தது. காரணம் இப்படத்தை எடுத்த டைரக்டர்தான் “இண்டிபெண்டென்ஸ் டே”, “டே ஆஃப்டர் டுமாரோ” போன்ற மொக்கைகளையும் எடுத்தவர் என்கிற பயம் ஒருபுறம்; பதிவுலகம் முதல் பத்திரிக்கையுலகம் வரை இப்படத்துக்கு கொடுத்து வரும் பில்டப்புகள் (viral marketing) மறுபுறம் என குழப்பமாக இருந்தது. எதற்கும் ‘நடமாடும் சினிமா என்சைக்ளோபீடியா’ நம்ம டிபிஎன். சுரேஷ்குமாரை கேட்கலாமேயென்றால், அவனோ ’கந்தசாமி ஜூப்பர் அப்பு’ என்று சர்டிபிகேட் கொடுத்து விட்டு, பிறகு நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டதிலிருந்து இனி எந்த படம் பார்த்தாலும் கருத்து சொல்ல மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறான். சரி, போகட்டும், டிவிடியில் பார்த்துக் கொள்ளலாம் என்று லூஸில் விட்டு விட்ட சமயமாகப் பார்த்து ஒரு போன் கால் - சதீஷ்கண்ணனிடமிருந்து. ’2012 போலாமா’ என்று அழைத்தான்.

அப்போது சிறிது வேலையாக இருந்ததால் ’கொஞ்சம் வெயிட் பண்ணு; இங்கே நிதானம் பார்த்து சொல்றேன்’ என்று சொல்லி வைத்துவிட்டு மீண்டும் அழைப்பதற்குள்ளேயே டிக்கட் கௌண்டரில் வரிசை கட்டியிருந்தான். என் அருகிலிருந்த டிபிஎன் இப்போதாவது படத்தைப் பற்றி ஏதாவது கருத்து சொல்வானா என்று பார்த்தேன். சலனமேயில்லாமல் நரசிம்மராவ் மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு, ’போலாமா’ என்றால் ’சரி’ என்றும், ‘இல்ல வேண்டாமா’ என்றால் அதற்கும் ’சரி வேண்டாம்’ என்றும் கடுப்படித்தான். அதற்குள் சதீஷ்கண்ணனிடமிருந்து அடுத்த போன், ‘டிக்கெட் எடுத்துட்டேன்’ என்று. வீட்டில் வேறு அப்போது மும்மரமாக ராமாயணம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். வானர - ராவண படைகளின் போர்க்களக் காட்சி. இது முடிய எப்படியும் 1 மணி நேரம் ஆகும். அதுவரை வேறு சேனல்கள் எதுவும் மாற்றவும் முடியாது என்பதால் பேசாமல் சினிமாவுக்கே போகலாம் என்று கிளப்பி கே.எஸ் தியேட்டரை அடைந்தேன்.

கடைசியாக இந்த தியேட்டரில் என்ன படம் பார்த்தேன் என்பது வெகு நேரம் நினைவுக்கு வ்ரவில்லை. யெஸ்.. ’பெரியார்’ பார்த்தேன். நமது நகர தலைவர் தான் ஒரு கையில் சிகரெட்டும் மறு கையில் டிக்கெட்டுமாக அன்று இரண்டையும் விநியோகம் செய்து கொண்டிருந்தார். வண்டியை நிறுத்திவிட்டு டிக்கெட் வாங்கிக் கொண்டு உள்ளே சென்று சதீஷ்கண்ணன் போட்டு வைத்திருந்த இடத்தில் அமர்ந்தோம்.

பூமியின் மைய அச்சின் வெப்பநிலை திடீரென்று வெகு அதிகமாக உயர்ந்து வருவதைக் கண்டறியும் இந்திய விஞ்ஞானி ஒருவர், அதை தன் அமெரிக்க விஞ்ஞானி நண்பரை அழைத்து காட்டுவதில் ஆரம்பிக்கும் படம், உலகத்தை ஒரு புரட்டு புரட்டி போட்டுவிட்டு தான் ஓய்கிறது. பெரிய சஸ்பென்களெல்லாம் வைக்காமல் படத்தின் துவக்கத்திலேயே உலகத்தின் முடிவை கொண்டு வந்துவிடுகிறார்கள். எல்லோருக்கும் எளிதில் புரியும் கதை; அதற்கேற்ற பிசிறில்லாத திரைக்கதை அமைப்பு; மிக பிரம்மாண்டமான காட்சியமைப்புகள்; குறிப்பாக திறமையான தமிழ் டப்பிங் என்று எல்லாம் கச்சிதமாக அமைந்திருந்தன. எந்த இடத்திலும் போரடிக்கவில்லை. முக்கியமாக சில சயின்ஸ் ஃபிக்‌ஷன்கள் போல எரிச்சல் தரவில்லை என்பதே இதன் வெற்றிதான்.

பூகோள அமைப்பறிவு கொஞ்சம் வாய்க்கப் பெற்றவர்களாயிருந்தால் திரையில் காட்டப்படும் இடங்களின் புவியியல் தன்மைகளை கருத்தில் கொண்டு, காட்சியமைப்பின் பின்னுள்ள செய்திகளையும் உணர்ந்து பார்க்க முடியும். உதாரணமாக, எஞ்சியுள்ள சிலராவது உயிர் பிழைக்கக் கட்டப்படும் ஸ்பேஸ் ஷிப்கள் ஏன் திபெத் பகுதியில் கட்டப்படுகின்றன என்பதை திபெத் ‘உலகத்தின் கூரை’ என்று ஏன் அழைக்கப்படுகிறது என்று அறிந்திருந்தால் நன்கு புரிந்துகொள்ள முடியும்.

இங்கே இப்படத்தின் இன்னொரு நுண்ணரசியலையும் கவனிக்க வேண்டும். இந்த ஸ்பேஸ் ஷிப்கள் எல்லாம் சீனாவில் கட்டப்படுகின்றன் என்று தான் படத்தில் சொல்லப்படுகின்றதே தவிர, திபெத் என்று மருந்துக்கும் யாரும் சொல்வதில்லை. ஒபாமா மட்டுமல்ல, ஒவ்வொரு அமெரிக்கனும் இனி திபெத்தை சீனாவின் ஒரு பகுதியாகத்தான் கருதுவான். காரணம் நான் பழகிப் பார்த்தவரையில் எந்த அமெரிக்கனுக்கும் உலக அரசியல் நடப்புகள் பற்றி தெரிந்திருக்கவில்லை. அல்லது அதில் அவர்களுக்கு ஆர்வமில்லை. பெரும்பாலான அமெரிக்கர்கள் கிணற்று தவளைகள்.

கடைசியில் படம் உலக பெரும் பணக்காரர்கள் மட்டும் ஸ்பேஸ் ஷிப்பில் ஏறி உயிர் தப்பிப்பதோடு முடிவடைகிறது. பெரும் பணக்காரர்கள் மட்டுமா என்று சிலர் புருவம் உயர்த்துவது தெரிகிறது. பின்னே.., ஸ்பேஸ் ஷிப்பில் இடம் வேண்டுமென்றால் ஒரு டிக்கெட் ஒரு பில்லியன் யூரோ ஆயிற்றே! சாதாரண மக்களால் மேலே தான் டிக்கெட் வாங்க முடியும். ஸ்பேஸ் ஷிப்பில் அல்ல, அல்லவா? (இங்கே இன்னொரு நுண்ணரசியல்: அமெரிக்கன் படத்தில் யூரோவுக்கு முக்கியத்துவம்!! டாலர் சினிமாவிலும் வலுவிழக்கிறது)

முதலாளித்துவத்தை ஆதரிக்கும் பூர்ஷ்வாத்தன படம் இது என்று எனக்குள்ளே ஒளிந்திருக்கும் கம்யூனிஸ்ட் குரல் கொடுத்தாலும், பணம் இருப்பவனே இவ்வுலகில் பாக்கியசாலி என்பதே நிதர்ஸனம் என்பதால், கதையமைப்பை புரிந்து கொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் முடிகிறது.

உலகம் அழிவதாகக் காட்டும் ஒவ்வொரு காட்சியிலும் தியேட்டரில் அப்படியொரு கரவொலி; கை தட்டல்! அழிவை கூட ’மனித மனம் எப்படி கொண்டாடுகிறது பார்’ என்று நானும் சதீஷ்கண்ணனும் பேசிக் கொண்டோம். இடைவேளையில் பார்த்தால் எல்லோரும் கல்லூரி இளைஞர்கள். இளங்கன்று ஸீரியஸ்னெஸ் அறியாது. எல்லாமே அவர்களுக்கு கொண்டாடம் தான். நாமும் அப்படித்தானே இருந்தோம். (இப்படிச் சொல்வதால் நாம் இளைஞர் இல்லை என்று அர்த்தமில்லை :-) )

முடிவற்ற நிலநடுக்கங்கள், சுனாமிகளின் முடிவில் பூமியின் புவியியல் அமைப்பில் பாரிய மாற்றங்களுடன் படம் முடிவடைகிறது.

படம், நிச்சயம் பார்க்கலாம். ஆனால் கண்டிப்பாக தியேட்டரில்!
மேலும்...

கும்பல் வன்முறை கருத்தும், நிபுணரின் விளக்கமும் உரையாடலும்

Posted: Saturday, November 14, 2009 | Posted by no-nononsense | Labels: 0 comments
My comments about a blog post shared by my friend and explanation on vandalism by my friend Dr.Singaravelu, psychiatrist :

>> இப்படி, கொடூரமாக துடிக்க துடிக்க அடித்துக் கொல்லப்படுவது தங்களது உரிமைகளை கேட்டு ஊர்வலமாக வந்த குற்றத்திற்காக மட்டுமே <<

வரலாற்றிலிருந்து தமக்கு வசதியான ஒன்றை மட்டும் உருவி பரபரப்பாக ‘ப்ளாக்’ எழுதுவது என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம். உரிமை கேட்டு ஊர்வலமாக வந்ததற்காக அவர்கள் தாக்கப்படவில்லை. அவர்கள் கோரிக்கைகளுக்கும் நடந்த இந்த சம்பவத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

நடந்தது இதுதான்.

இங்கேயிருந்து தமிழர்கள் எப்படி இலங்கை தேயிலை தோட்டங்களில் வேலை செய்ய ஆங்கிலேயரால் அழைத்து செல்லப்பட்டார்களோ, அதேபோல் ஜார்கண்டை சேர்ந்த பழங்குடியினரும் அஸ்ஸாம் தேயிலை தோட்டங்களுக்கு வேலைக்காக சில நூற்றாண்டுகளுக்கு முன் அழைத்து செல்லப்பட்டனர். அவர்கள் இன்றுவரை தொடர்ந்து அஸ்ஸாம் தேயிலை தோட்டங்களிலேயே வேலை செய்து வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் இனத்திற்கு அவர்கள் சொந்த மாநிலத்தில் ST ஜாதி சான்றிதழ் கிடைக்கிறது. ஆனால் புலம் பெயர்ந்து வாழ்ந்துவரும் அஸ்ஸாமில் அவர்களுக்கு ST தகுதி கிடையாது. அதைக் கேட்டுத்தான் சம்பவம் நடந்த அன்று தலைநகர் குவாஹாத்தியில் ஊர்வலமாக சென்றார்கள். கிட்டத்தட்ட மூவாயிரம், நாலாயிரம் பேர் கலந்து கொண்ட ஊர்வலத்தில், சம்மந்தமில்லாமல் ஆங்காங்கே உள்ளூர் கடைகளும், வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டன. இதனால் ஆத்திரமடைந்த உள்ளூர் ஆட்கள், ஊர்வலத்திலிருந்து சிதறி ஓடினவர்கள் போக கையில் கிடைத்தவர்களையெல்லாம் கொடூரமாக தாக்கினார்கள். அந்த காட்சிதான் இந்த வீடியோவில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்த சமயத்தில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் இது.

ப்ளாக் எழுத்துக்களை அப்படியே உள்வாங்கிக் கொள்வதிலுள்ள ஆபத்தை சுட்டிக்காட்டவே இதனை எழுதுகிறேன். மற்றபடி அந்த மிருகத்தனமாக தாக்குதலுக்கு நியாயம் கற்பித்தல் என் நோக்கமல்ல.

********

வகையாக ஒருத்தன் சிக்கினால் அவனை கும்பலோடு கும்பலாக சேர்ந்து மிருகத்தனமாக தாக்கி கொல்லும் மனோவியாதி எல்லா மனிதனுக்குள்ளும் ஆழ் மனதில் உள்ளூர உறைந்திருக்கிறது. ஊரில் ஒரு திருடன் சிக்கினால் அவனை கரண்ட் கம்பத்தில் கட்டி வைத்து உயிர் போகும் வரை அடித்துக் கொல்லும் சம்பவங்கள் நம்ம ஊரில் சகஜமாக நடப்பது தானே? அதைப் பற்றி குற்றவுணர்வு நமக்கு என்றைக்காவது இருந்திருக்கிறதா? சென்னை சட்ட கல்லூரி மோதலில் மாணவர்கள் கும்பலாக சேர்ந்து இரு மாணவர்களை கொடூரமாகத் தாக்கியதை நாம் பார்க்கவில்லை? அப்பாவி மாணவிகளை அரசியல் ரவுடிகள் பஸ்ஸோடு வைத்து கொளுத்தவில்லை? ஜாதி / இன / மத கலவரங்களிலெல்லாம் நடப்பதென்ன? ஆயிரக்கணக்கில் இன்னார் இளையார் என்று பார்க்காத படுகொலைகள், கற்பழிப்புகள், கற்பனைகளை விஞ்சிய வன்முறைகள். பதிவு செய்யப்பட்டவைகளை விட செய்யாமல் விடப்பட்டவைகள் தான் அதிகம்.

தனி மனிதனாக இருக்கும்போது மனிதன் மனதில் உறங்கி கிடக்கும் வன்முறை, கும்பல் சேரும்போது விழித்துக்கொண்டு கோர தாண்டவம் ஆடுவது ஏன்? சிங்காரவேல் போன்ற மனோதத்துவ நிபுணர்கள் தான் விளக்க வேண்டும்.

*

Dr.Singaravelu:

எப்படி உடலுக்கு பசியும் உறக்கமும் அடிப்படையோ அது போல எல்லா மனிதனுக்கும் பொதுவான அடிப்படை உணர்வுகள் (basic instincts- sharan stone நடித்ததல்ல ) வன்முறையும் காமமும் மட்டுமே. நமக்கு குழந்தை பருவத்தில் கிடைக்கும் அன்பு, பாதுகாப்பு, கல்வியினால் வரும் அறிவு மற்றும் சமுதாயத்தின் கட்டுப்பாடுகள் நம்மை இந்த உணர்வுகளை பாதுகாப்பாகவும், பிரச்சினைகள் இல்லாமலும் வெளிப்படுத்த கற்று கொடுக்கின்றன. ஆனாலும் நாம் இந்த உணர்வுகளை அவ்வப்போது வெளிப்படுத்தி கொண்டுதான் இருக்கிறோம்- மற்றவர்களை கடுமையான சொற்களால் காயப்படுத்துவதும், ragging, college election சண்டை, விளையாட்டு மற்றும் பல வழிகளில்.

ஆனால் இந்த அன்பு, கல்வியறிவு போன்றவை கிடைக்காத மனிதர்கள் மிக சுலபமாக இந்த வன்முறைகளில் ஈடுபடுகிறார்கள். இந்த மாதிரியான வன்முறை செயல்களில் ஈடுபடும் கூட்டங்களில் (ஆமா கூட்டத்துக்கும், கும்பலுக்கும் என்ன வித்தியாசம்?) பொதுவாக இந்த மாதிரி மனிதர்கள் தான் இருக்கிறர்கள். Mass behaviour என்று ஒன்று உண்டு. அதாவது ஒரு கூட்டத்தில் இருக்கும்போது மனிதன் அந்த கூட்டத்தின் மன நிலையோடு ஒத்த எண்ணங்களையும், செயல்களையும் பிரதிபலிக்கிறான். தனியாக கூப்பிட்டு கேட்டால் அவன் கருத்து வேறு மாதிரியாக இருக்கக்கூடும். நாம எந்த மாதிரி இடங்களில் யாருடன் இருக்கிறோம் என்பதை நாம் தான் தீர்மானிக்கிறோம். இது போன்ற ஒரு வன்முறையில் ஈடுபடும் கும்பலை பார்த்தால் நாம் ஒதுங்கி விடுவோம்.ஆனால் நான் முன்னே குறிப்பிட்ட மாதிரியான மனிதர்கள் இதில் பங்கு கொண்டு வன்முறைகளில் ஈடு படுகிறார்கள். இது இல்லாமல் அரசியல் காரணங்களுக்கவும், பணத்துக்காகவும் சில பேர் இதில் சேர்ந்து கொள்வதும் நடக்கிறது இல்லையா?

*
My reply to Dr.Singaravelu:

மிக மிக அருமையான விளக்கம் டாக்டர் சிங்காரவேலு. நன்றி. நீ பதில் எழுதவேயில்லை என்று நினைத்திருந்தேன்.

எல்லா மனிதனுக்கும் பொதுவான அடிப்படை உணர்வுகள் வன்முறையும் காமமும் மட்டுமே.

இது மனித குலத்தின் எவ்வளவு பெரிய துரதிஷ்டம்!! அன்பும், பண்பும் அடிப்படை குணமாக இருந்திருந்தால் உலகம் எவ்வளவு சௌஜன்யமாக இருந்திருக்கும்!

நம்பிக்கையாளர்களின் (believers of almighty and his creations) சிந்தனைக்கு: படைப்பு பிழைபட படைக்கப்பட்டது படைப்பின் குற்றமா? படைத்தவனின் குற்றமா?


ஆமா கூட்டத்துக்கும், கும்பலுக்கும் என்ன வித்தியாசம்?

கூட்டம் என்பதை நாகரிகமான மக்களின் கூடுதல் என்றும் (gathering of civilized people), முன்னறிவிப்பின் பிறகு ஒரு நோக்கத்துடன் கூடிய மக்கள் திரள் (gathering after some notification or announcement) என்றும் பொருள் கொள்ளலாமென தோன்றுகிறது.

கும்பல் என்பதன் பொருள் மேற்சொன்னதற்கு எதிர்பதமானது.
மேலும்...

வாழ்க்கையின் தேட்டமும் தேடலும்

Posted: Sunday, November 8, 2009 | Posted by no-nononsense | Labels: 0 comments
ஒரு சராசரி மனித வாழ்க்கையின் தேடல் என்னவாக இருக்கும்?

பணமும் புகழும் சம்பாதிப்பது

அதை அடைந்த பிறகு?

மேலும் பணமும் புகழும் சம்பாதிப்பது

அதற்கும் பிறகு?

மேலும் மேலும் பணமும் புகழும் சம்பாதிப்பது

இப்போது அவை இரண்டிலும் உங்களை விஞ்ச ஆளில்லை. அதற்கும் பிறகு உங்களின் தேடல் என்னவாக இருக்கும்??

இக்கேள்விக்கான தேடலில்தான் வாழ்க்கையின் உண்மையான அர்த்தம் ஒளிந்திருப்பதாகத் தோன்றுகிறது.

இன்று மாலை நாமக்கல்லின் பிரபல மருத்துவரும் செல்வந்தருமான ஒருவருடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. சராசரிக்கும் கீழான வாழ்க்கை நிலையிலிருந்து தன் உழைப்பால் முன்னேறி நல்ல நிலையை அடைந்திருப்பவர். அந்த ஆழமரத்தின் நிழலில் இளைப்பாறுவோர் பற்பலர்.

பேச்சுவாக்கில் ஒரு நேரடியான கேள்வியை அவரிடம் தொடுத்தேன்.

“ஒரு காலத்தில் ஒருவேளை சோற்றுக்கு கஷ்டப்பட்டதாக சொல்றீங்க. இன்று சகல சௌபாக்கியங்களும் அமையப்பெற்ற வாழ்க்கை உங்களுடையது. வாழ்வில் நீங்கள் விரும்பிய நிலையை அடைந்துவிட்ட திருப்தி இருக்கிறதா?”

“இல்லப்பா. அன்னைக்கு இல்லாத சொத்து சுகம் இன்னைக்கு இருக்கு. ஆனா திருப்தியா இருக்கேனான்னு கேட்டா, நிச்சயமா இல்லைன்னுதான் சொல்ல முடியும். இப்போ என்னைவிட சொத்து அதிகம் வச்சிருக்கவன பார்த்து ஒரு காம்ப்ளக்ஸ் வந்துட்டுது”

“நீங்க கஷ்டப்பட்ட காலத்த நெனச்சிப் பார்த்தா கூடவா இன்றைய நிலை திருப்தி தரலை?”

“அதுதான் மனித மனதின் விசித்திரம். கீழிருந்து மேல வர்ற வரைக்கும் தான் அது போராட்டம். அதற்கு பிறகு மேல்மட்டத்தில் போராட்டம் மறைந்து ரேஸ் தொடங்கிடும். யார் அதிக பணக்காரன்ங்கிற ரேஸ்”

அவரே மேலும் தொடர்ந்தார்.

“வாழ்க்கையில முன்னேறனும்; சம்பாதிக்கணும்னு நினை. தப்பில்ல. ஆனா பணம் காசு வந்துட்டா நிம்மதி கிடைக்கும்னு நினைச்சிடாத. நிம்மதியை நீ இப்ப இருக்க வாழ்க்கையிலேயே கூட தேடிக்க முடியும். ஆனா எப்படி அப்படிங்கறதுதான் மேட்டர். அத கண்டுபுடிக்கறது பெரிய விஷயம்”

அதன்பிறகு பல பொருள் குறித்து பேச்சு தொடர்ந்தாலும் மனம் மேற்குறிப்பிட்ட உரையாடலையே சுற்றிவருகிறது.

எதனை ஆதர்ஷமாகக் கொண்டு வாழ்க்கையை முன்னகர்த்திச் செல்கிறோமோ, எதனை அடைய பெரும் பிரயத்தனங்களை எதிர்கொள்கிறோமோ, அதனை அடைதல் இறுதியில் அதற்குரிய பலனைத் தரவில்லை எனும்போது, அதுவரை அதன்பொருட்டு செலவழித்த காலத்திற்கும், உழைப்பிற்கும் நிஜத்தில் அர்த்தமென்ன?

வாழ்க்கையில் பொதிந்துள்ள மறைபொருள்கள் எளிதில் விளங்கி விடுவதில்லை.
மேலும்...

விசிலடிச்சான் குஞ்சுகள்

Posted: Thursday, November 5, 2009 | Posted by no-nononsense | Labels: , 0 comments
1) முதலில் விசிலடிச்சான் குஞ்சுகள் பற்றி,
எனக்கு அப்படியிருப்பதைப் பற்றி பெரிய விமர்சனம் கிடையாது. ஒரு music concert சென்றால் எப்படி ஆடிப் பாடி கொண்டாடி மகிழ்கிறோமோ அதைபோல் ஒரு பொழுதுபோக்கு திரைப்படத்தை கொண்டாடி மகிழ்வதில் பிரச்சினையில்லை. ஆனால் திரை நாயகனை நிஜத்திலும் நாயகனாக வரித்துக்கொண்டு வாழ்க்கையை தொலைப்பது தான் உள்ளபடியே பரிதாபம். விஜய் போன்ற நடிகர்களின் பின்னால் கூடும் கூட்டங்களைப் பார்க்கும்போது இது குறைவதற்கு பதிலாக அதிகரித்து வருவதாகவே தோன்றுகிறது. தமிழனுக்கு யாரையாவது துதி பாடிக்கொண்டே இருக்க வேண்டும். அது அரசியல், சினிமா, இலக்கியம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஒரு சார்பு நிலை எடுத்து விட்டால் பிறகு no look-back or reconsideration. இது நம் பாட்டன் காலத்திலிருந்து நம்மை பீடித்திருக்கும் சமூக நோய். அன்று பாகவதர் என்றால் இன்று ரஜினி, விஜய். அவ்வளவு தான் வித்தியாசம்.

முன்பு இதே பொருளில் ஒரு நல்ல கவிதை வாசித்திருக்கிறேன். அதை இங்கே பகிர்ந்து கொள்வது பொருத்தமாக இருக்குமென நம்புகிறேன். இக்கவிதையை எழுதிய தொ. சூசைமிக்கேலுக்கும் எனக்கும் ஒரு விநோதமான உறவு உண்டு. கேட்க சுவாரசியமாக இருக்கும். பிறகு எழுதுகிறேன்.


Photo Sharing and Video Hosting at Photobucket

எங்கு சென்று சொல்வதடா தமிழன் செய்யும் கூத்தினை ?
என்ன சொல்லி அழுவதடா யாம் அடைந்த வேதனை.
எங்கிருந்து வந்ததடா இப்படியோர் சிந்தனை.
இன்னொருவன் உருவம்மீது பால் சொரியும் நிந்தனை.

கண்ணகிக்குச் சிலையெடுத்தான், அது தமிழன் சாதனை.
கலிங்கம் வரை படையெடுத்தான் , அது தமிழன் போர்முனை.
மன்னுதமிழ்க் குறள் படைத்தான், அது தமிழன் நூல்வினை.
மாயைகளில் மயங்குகின்றான்... இது என்ன சோதனை ?

சித்திரத்தைத் தீட்டிவைத்து அதைத் தொழுகை புரிவதும்
சிந்தையிலா மந்தைகளாய்த் திரையினர்பால் சரிவதும்
எத்திறத்தில் செந்தமிழன் இங்கிதத்தில் சேர்ந்ததோ
எப்படித்தான் இப்படியோர் இழிவுநிலை நேர்ந்ததோ.?

நடிகர்களின் படம்காண விடியும்வரை விழிக்கிறான்.
நல்லதமிழ் படியென்றால் நாணமின்றி முழிக்கிறான்..
கொடியதிரைப் போதைதனில் அடிமையெனக் கிடக்கிறான்.
குலப் பெருமைதனைத் தமிழன் குழிதோண்டிப் புதைக்கிறான்....

-
தொ. சூசைமிக்கேல் - சவூதி அரேபியா.
மேலும்...