எண்ணச்சுழல்

Posted: Friday, February 25, 2011 | Posted by no-nononsense | Labels: 0 comments
அது காலை நேரத்தின் வழக்கமான பீக் அவர்ஸ் கூட்ட நெரிசல். பிதுங்கியபடி வந்து நின்ற பேருந்தை காணவே அலுப்பாக இருந்தது. படிகளில் தொங்கிவரும் கூட்டத்தில் கலந்து முன்னேறி உள்ளே செல்வது அனுதினமும் ஒரு சாகசச் செயல்.

கரூருக்கு வேலைக்குச் செல்ல ஆரம்பித்த இரண்டு வருட அனுபவத்தில் இதெல்லாம் இப்போது கைவந்த கலையாகிவிட்டது. கால்விரல்களில் பேலன்ஸ் செய்து கைகளை லாவகமாக கண்ணில் படும் இடங்களில் நுழைத்து முன்னாலிருக்கும் மனிதர்களுக்கு முகம் இடிபட போவது போல பாவனை செய்தால் உள்ளே செல்ல தானாக இடைவெளி கிடைக்கும்.

அந்த சாகசக் கலையை பயன்படுத்தி படிக்கட்டிலிருந்து மேலே சென்று இருக்கையோரம் நின்று கொண்டேன். அடுத்த வேலையாக சுற்றிலும் அமர்ந்திருப்பவர்களை நோட்டம் விட வேண்டும். அவர்கள் டிக்கெட் வாங்கும்போது எந்த ஊருக்கு எடுக்கிறார்கள் என்று கவனிக்க வேண்டும். அப்போதுதான் அருகாமையில் இருக்கும் நிறுத்தங்களுக்கு டிக்கெட் எடுப்பவர்களின் அருகில் மதியூகமாக சென்று நின்று இடம்பிடிக்க முடியும்.

கண்களை சுழலவிட்டதில் எல்லோரும் நீண்ட பயணக்காரர்களாகவே தெரிந்தார்கள். மதுரை, போடி, கீழக்கரை போன்ற நீண்ட தூர வண்டிகளில் ஏறிவிட்டால் இதுதான் பிரச்னை. உட்கார இடம் கிடைப்பது குதிரைக் கொம்பாகி விடும்.

பயணிகளுள் என் முன்னாலிருந்த இருக்கையில் 23 வயது மதிக்கத்தக்க இளைஞனும் அவனுடன் யூனிஃபார்ம் அணிந்திருந்த +1 அல்லது +2 படிக்கும் பெண்கள் இருவரும் கவனத்தை கவர்ந்தார்கள்.

அவர்களுக்கு முன்னாலிருந்து இருக்கையிலும் அதே யூனிஃபார்ம் அணிந்த பெண்களின் கூட்டம்.

அவர்களெல்லாம் பள்ளி மாணவிகள் என்றும், இந்த இளைஞன் அவர்களின் சார் என்றும் அவர்களின் பேச்சிலிருந்து புரிந்தது.

பெண்கள் அனைவருமே சுமாரான அழகு தான். இளமைக்குண்டான வனப்பும் செழிப்பும் அவர்களிடத்தில் இல்லை. எனினும் அவர்களின் சராசரிக்கும் கூடுதலான உயரம் அதை ஈடுகட்டியது. என்னுடைய யூகத்தின்படி அவர்கள் எஸ்.சி ஹாஸ்டல் பெண்களாக இருக்கக்கூடும்.

‘சார்’ என்று அந்தப் பெண்கள் அழைந்த அந்த இளைஞனின் போக்கு வித்தியாசமாக இருந்தது. பாக்கெட்டில் கையைவிட்டு பாக்கு பாக்கெட் ஒன்றை எடுத்து வாயில் கொட்டி அரக்கிக் கொண்டே இருந்தான். ஒரு மாதிரி காலை நீட்டி சாய்ந்து கொண்டிருந்தான். அதில் ஒரு ஆசிரியருக்குரிய லட்சணம் இருக்கவில்லை.

சிறிது நேரத்தில் அவன் தனக்கு முன் இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு குறிப்பிட்ட மாணவியிடம் தன் லூட்டிகளை ஆரம்பித்தான். அவளின் ஜடையை பிடித்து இழுக்கவும், கன்னத்தை கிள்ளிவிட்டு வேறு பக்கம் பார்க்கவும், அதற்கு அந்தப் பெண் “சார் நீங்க தானே.. இல்ல, எனக்கு தெரியும், நீங்கதான்..” என்று சிணுங்கவும், ஏதோ அவர்களுக்கு மட்டும் புரியும் சங்கேத மொழியில் பேசி சில்மிஷமாக சிரித்துக் கொள்ளவும் என... ஒருவாறாக பொழுது போய்க்கொண்டிருந்தது.

அவர்களுடன் வந்த மற்ற மாணவிகள் அதைக் கண்டும் காணாமலும் தங்களுக்குள் ‘களுக்’ என்று சிரித்துக்கொண்டும் இருந்தனர். சார் அல்லவா! அதிலும் இளைஞர்.

பஸ் வேலூரை தாண்டியிருந்தது. இப்போது அந்த இளைஞனின் சேட்டை ஜடையிலிருந்து உடைக்கு முன்னேறியிருந்தது. அந்தப் பெண்ணின் சிணுங்கலின் டெஸிபல் மேலும் அதிகரித்ததில் பலருக்கும் காதில் புகை வராத குறை. அவள் போட்டிருந்த சுடிதாரை அல்லையில் பிடித்து இழுத்துவிட ஆரம்பித்தான். அவள் அதன் பட்டியை இழுத்துவிட்டுக் கொண்டு சிரித்தாள்; சில நேரங்களில் நாணத்தில் சத்தம் வராமலும், சில நேரங்களில் சில்லறையை சிதற விட்ட மாதிரியும்.

இவர்களின் விளையாட்டிலே சகபயணிகளின் கண் நிலைத்திருந்தது.

திடீரென்று சிவபூஜையில் கரடியாக பொறுத்தது போதும் என பொங்கியெழுந்தார் ஒரு நடுத்தர வயது மனிதர்.

“இதென்ன பஸ்ஸூன்னு நெனைச்சீங்களா இல்லை வேற ஏதாவதுன்னு நெனைச்சீங்களா..? இதெல்லாம் உங்க இடத்துல போய் வெச்சிகுங்க...”

அந்த இளைஞனுக்கு அறச்சீற்றம் பொங்கியது.

“ஏன் சார் தப்பான கண்ணோட்டத்தில் பார்க்கறீங்க. நாங்க சும்மா விளையாடிட்டு இருந்தோம். உங்களுக்கு என்ன போச்சி..”

அந்த பெண் பாய்ந்தெழுந்தார்.

“இது எங்க சாருங்க சார். நாங்க சும்மா வெளையாடிட்டுதான் இருந்தோம். பார்த்தா படிச்சவர் மாதிரி இருக்கீங்க, ஏன் இப்படி தப்பா பாக்கறீங்க..”

மற்ற மாணவிகளும் சேர்ந்திசையில் இணைந்தனர். பலவாறாக அவருடைய கல்வியை, வயதை, முதிர்ச்சியை சீண்டி தூஷித்தனர். விட்டுத் தராமல் பேசினர். பெண்களின் ஒருமித்த குரல் உண்மையை ஒடுங்கச் செய்யும் ஆற்றல் கொண்டது.



சில்மிஷ விளையாட்டுக்கு ஆட்சேபம் தெரிவித்த அந்த நபர் தனித்து விடப் பட்டார். முடிந்தவரை ‘இதெல்லாம் உங்க வீட்டுல இல்ல எங்கயாவது காட்டுல போய் வெச்சுக்கங்க.. திஸ் இஸ் பப்ளிக் ப்ளேஸ்...” என்று தமிழும் ஆங்கிலமும் கலந்து சிறிது நேரம் கத்திக் கொண்டிருந்தவரை கண்டக்டர் சமாதானம் செய்து அமர வைத்தார்.

பின்னர் ஊர் சென்று சேரும் வரை முகத்தில் கடுப்புடன் குறுகுறுவென்று அவர் அமர்ந்திருந்ததை கவனித்தேன். அவருக்கு உறுதுணையாக வேறு யாரும் குரல் தரவில்லை என்னும் ஆற்றாமையை அவர் கண்களில் கண்டேன்.

‘நாம்தான் அநாவசியமாக இதையெல்லாம் தட்டிக்கேட்டு சங்கடப்பட்டுக் கொண்டோமோ’ என்னும் ஓர் எண்ணம் மனதில் அவருக்கு தொந்தரவளித்துக் கொண்டிருந்ததை உணர முடிந்தது. அதற்கு பிறகு அவர் எதுவும் பேசவில்லை. அவரிடமும் யாரும் பேச முற்படவில்லை.

கண்களை மூடி ஒருமுறை ஆழமாக மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டேன். எண்ணங்கள் அந்த சம்பவத்தின் தாத்பரியத்தை சுற்றி வந்தன. இதை நான் எப்படி அணுகுவது? அது அந்த இளைஞன் மற்றும் மாணவியின் சொந்த விஷயம் என்று விட்டுத் தள்ளுவதா? இல்லை, பொதுநாகரிக சாட்டையை நானும் சுழற்றுவதா?

அவர்கள் மகிழ்ந்து விளையாடினார்கள் -

அந்த ஆட்சேபகர் அதிருப்தி கொண்டார் -

இதெல்லாம் படர்க்கை. தன்மையின் மெய்ம்மை எப்போது எந்தவித உணர்வில் சஞ்சாரம் செய்து கொண்டிருந்தது? அதாவது நான்...

அவர்கள் செயல் எனக்கு அளித்தது என்ன? பொழுதுபோக்கா? இல்லை, ஒரு கணம் அவன் இடத்தில் என்னை கற்பனை செய்து பார்த்துக் கொண்டதில் ஏற்பட்ட உள்ளக் கிளர்ச்சியா? இல்லை, காட்சிப்புலன் உய்வித்த உவகையா?

அல்லது, சில பொழுதுகளில் மனம் உணரும் இவை எல்லாவற்றையும் கடந்த ஒரு பற்றற்றத் தன்மையா?

அந்த மனசங்கடத்திற்குள்ளான மனிதரின் முகம் அவர் பக்கம் திரும்பிப் பார்க்காமலே கண்களில் அலையாடியது. அதிலிருந்து விடுபடுவது சிரமமாக இருந்தது. கேள்விகள் ஒன்றிலிருந்து ஒன்றாக கிளைத்த வண்ணம் இருந்தன.

அவற்றிற்கான பதில்கள் குறித்தான தேடல் தன் திசையை தீர்மானிப்பதற்குள் நிறுத்தம் வந்துவிட்டது. இறங்கிக் கொண்டேன் - நினைவுகளின் தடங்களை மட்டும் அங்கேயே விட்டு விட்டு.
மேலும்...

தாய்மொழியும் ஆன்மிகமும் - ஜெமோவுக்கு ஓர் எதிர்வினை

Posted: Tuesday, February 22, 2011 | Posted by no-nononsense | Labels: 0 comments
மொழிக்கான தேவை என்பது அக்குழந்தைகளின் இயல்பான ஆன்மீக வல்லமை சார்ந்த விஷயம்.வெறுமே உலகியலார்வம் மட்டும் உள்ள குழந்ததைகளுக்கு ஒருவேளை தாய்மொழி தாய்நாடெல்லாம் பொருட்டாகத் தெரியாது. ஆனால் கணிசமான குழந்தைகள் அப்படி அல்ல. அவற்றுக்குள் ஆன்மீகமான ஒரு நாட்டம் உள்ளது. அவைதான் கலைகளையும் சிந்தனைகளையும் நோக்கிச் செல்கின்றன. - ஜெயமோகன்

ஜெயமோகனின் அரசியலை எளிமைப்படுத்திச் சொல்லி விடலாம். அது எந்த கருமாந்திரம் குறித்த உரையாடாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதற்கான பதிலில் ஆன்மிகத்தையும், தேசிய இன உணர்வையும் கோட்டிங் வேலை செய்துவிட வேண்டும். உடனே கூட்டம் நாம் நடக்க நடக்க ‘லாலேலலலாலா...’ என்று பின்னால் கோரஸ் பாட ஆரம்பித்து விடும்.

மொழி உணர்வு குறித்து நான் எண்ணற்ற கட்டுரைகள் வாசித்திருக்கிறேன். இராம.கி(http://valavu.blogspot.com/) போன்ற உணர்வாளர்களுடன் நேரடி உரையாடல்களிலும் ஈடுபட்டிருக்கிறேன். பாவாணரில் மூழ்கி கிடந்திருக்கிறேன். பின்னால் அவரின் பல வாதங்களுடன் நான் ஒப்பவில்லை என்பது வேறு விசயம். ஆனால் அவர்களில் யாரிடமும் உள்ளடி அரசியல் கோட்டிங் வேலையை நான் காணவில்லை. குழந்தைகள் மொழி உணர்வுடன் இருக்க வேண்டும் ஏனென்றால் அப்போதுதான் அவர்களுக்கு ஆன்மிக நாட்டம் இருக்கும். ஏனென்றால் அது அவர்களின் ஆன்மிக வல்லமை சார்ந்த விசயம். பலே ஜெயமோகன்! ஒரே வரியில் தமிழ்நாட்டின் கார்ப்போரேட் சாமியார்களின் பின்னால் ஆன்மிக நாட்டம் கொண்டு தன்னுணர்வற்று திரியும் மேட்டுகுடி வர்க்கத்தையே புறந்தள்ளிவிட்டார்.

உண்மையில் ஆன்மிக நாட்டத்திற்கும் மொழிக்கும் யாதொரு சம்மந்தமும் இல்லை. எந்த மொழியில் பொழிப்புரைத்தால் என்ன... ஆன்மிக நாட்டம் வளரவேச் செய்யும். அது முற்றிலும் மனம் சார்ந்த விஷயம். தத்துவம் சார்ந்த விருப்பம். ஓஷோ என்ன தமிழ் மொழியிலா ஆன்மிக தொண்டாற்றினார். இல்லை ஜெமோ இங்கே காட்டியிருக்கும் ராமாயணம் என்ன தமிழ் மொழியிலா இயற்றப்பட்டது? தமிழில் உள்ள பக்தி இலக்கியங்களின் காலம் என்ன? மிஞ்சிப் போனால் ஒரு நானூறு ஆண்டுகள்! தமிழின் தொன்மை ஜெமோவே கூறியுள்ளது போல ஐயாயிரம் ஆண்டுகளை தாண்டும். ஐயாயிரம் ஆண்டுகளில் வெறும் நானூறாண்டு பக்தி இலக்கியங்கள்தான் மொழியுணர்வை அளித்து ஆன்மிக நாட்டத்தை குழந்தைகளிடம் புகட்டுகின்றனவா?

தாய்மொழியின் அவசியம் என்ன? குறிப்பான தமிழை நம் அடுத்தடுத்த தலைமுறைகளிடம் கொண்டுசெல்வதன் நோக்கம் என்ன? தமிழின் தொன்மையும், அதன் இலக்கிய வளங்களும், அது அளிக்கும் முடிவற்ற சுவையும்தான். அதன் தொன்மையைப் பற்றி எழுதிக் கொண்டிருந்தாலே இங்கே இடம் காணாது. எழுத திறனும் போதாது. உதாரணமாக,

“வைசிகன் பெறுமே வாணிப வாழ்க்கை”

இதன் அர்த்தத்தை விளக்கவும் வேண்டுமா? எல்லோருக்கும் புரியும் மொழிதான். அதாவது வைசிகன் (வணிகன்) வாணிபம் செய்யும் வாழ்க்கையை பெறுவான் என்பது பொருள்.

இன்னொரு உதாரணம் பார்ப்போம்.

“வேளான் மாந்தர்க்கு உழுதூண் அல்லது
இல்லென மொழிப பிறவகை நிக்ழ்ச்சி”

வேளாண்மை செய்பவனுக்கு உழுவதே தொழில். அதுவன்றி அவன் வேலை வேறு இல்லை.

எவ்வளவு எளிமையாக புரிகின்றன. இது தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்திலிருந்து கொடுக்கப்பட்டிருக்கும் வரிகள். தமிழில் கிடைக்கப்பெற்ற ஆதி நூல் தொல்காப்பியம். அது வழிநூல் தான். அதற்கு மூலநூல் அகத்தியம் கிடைக்கவில்லை. தொல்காப்பியக் காலம் 4500 ஆண்டுகள் என்பது பொதுவாக ஒப்புக்கொள்ளப்பட்ட கருத்து. அது இடைச்சங்க காலத்தில் எழுதப்பட்ட நூல். இடைச்சங்கம் 3500 ஆண்டுகள் நடைபெற்றதா சொல்லப்படுகிறது. அது உண்மையானால் முதல் சங்க காலம் 7500 ஆண்டுகள் வரை பழமையானதாக இருக்கக்கூடும்.

இவ்வளவு தொன்மை வாய்ந்த தமிழ் இன்று வரை சிறு சிறு வரிவடிவ மாற்றங்களைத் தவிர மற்ற பெரும் மாறுதலின்றி தன்னுடன் எண்ணற்ற இலக்கியச் செல்வங்களை தாங்கிக்கொண்டு கடந்து வந்திருக்கிறது. காலமெல்லாம் அவற்றை கற்றுக்கொள்ள நினைத்தாலும் முடியாது. அதை ஆங்கிலம் என்னும் போலிகௌரவத்தின் காரணமாக நம் காலத்தில் அழியவிட வேண்டுமா? உலகில் நாகரிகத்திலும் பண்பாட்டிலும் முதிர்ச்சியுள்ள வேறு எந்த சமூகமும் செய்ய மனம் உவக்காத இந்தச் செயலை நாம் நம் காலத்தில் பிரக்ஞையற்று ஸ்மரணை செத்து செய்து கொண்டிருக்கிறோம். அது எவ்வளவு கேவலம்?

இதைப்பற்றியெல்லாம் என்னை விட அதிகம் எழுதும் விஷயஞானம் கொண்டவர் ஜெமோ என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. நான் அறிவில் சிறியன். ஆனால் அதையெல்லாம் அவர் செய்ய மாட்டார். காரணம் அவரின் நோக்கம் அவரின் பீடம்.
மேலும்...

Encounter with comrades

Posted: Tuesday, February 15, 2011 | Posted by no-nononsense | Labels: 0 comments


photo0309p.jpg

ஏறத்தாழ இரண்டு வருடங்களாக கரூருக்கு பேருந்தில் சென்று கொண்டிருக்கிறேன். ஆனால் எப்போதும் கரூர் பேருந்து நிலையம் சென்று இறங்குவது எனக்கு வழக்கமல்ல. அதற்கு முந்தைய நிறுத்தத்திலேயே இறங்கி விடுவேன். மிக நெரிசலான தினங்களில் நடுப் பேருந்தில் மாட்டிக்கொண்ட நாள்களில் மட்டும் பஸ் நிலையம் சென்று இறங்கி அங்கேயிருந்து அலுவலகம் நோக்கி பின்னோக்கி வருவேன்.

என்றாவது நடக்கும் இந்த சம்பவம் எனக்கு ஒரு விதத்தில் பிடிக்கும். பஸ் நிலையத்திலிருந்து அலுவலகம் வரும் வரை சுவரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களையும், துண்டு பிரசுரங்களையும், அரசியல் கட்சிகளின் - சினிமா ரசிகர்களின் ஃப்ளக்ஸ் போர்டுகளையும் வேடிக்கை பார்த்துக்கொண்டே வரலாம். பல சுவாரசியமான விஷயங்கள் அதில் கிடைக்கும்.


சில சமயம் பஸ் நிலையம் வெளிப்புறமுள்ள ரவுண்டானா அருகில் ஏதாவது தெருமுனை பிரச்சார கூட்டம் நடந்து கொண்டிருக்கும். பெரும்பாலும் ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகள் அதை செய்வதில்லை. மாற்று சிந்தனைகளை மக்கள் மனதில் விதைப்பதை சித்தாந்தமாக கொண்டிக்கும் இயக்கத்தினர்தான் வெயிலில் வதையும் சிரத்தைகளை எடுத்துக் கொள்வர் என்பதால், அதையும் சிறிது செவி மடுக்கலாம்.

இன்று அப்படியாக பேருந்து நிலையம் சென்று இறங்க நேர்ந்தது. பேருந்து உள்ளே நுழையும் போதே ஏதோ தெருமுனைப் பிரச்சாரம் நடந்து கொண்டிருப்பதைக் கண்டேன். சிவப்பு வண்ண பேனர்கள் அது பொதுவுடமை குழுவினர்களில் ஒருவருடையதாக இருக்கலாம் என்று கட்டியம் சொன்னது. தேர்தல் நேரத்த்தில் எப்படி என்னதான் பேசுகிறார்கள் என்று கேட்க அவர்களை நோக்கிச் சென்றேன்.

'பழங்குடியினரின் வாழ்வாதரமான இடங்களை சுரங்கம் அமைத்து சுரண்டும் பெருமுதலாளிகளுக்கு எதிராக கிளர்ந்தெழுவோம். ஸ்பெக்ட்ரம் ஊழல் சொத்துக்களை “நக்சல்பாரிகளாக” மாறி பறித்தெடுப்போம்’ என்று பிரச்சாரம் நடந்து கொண்டிருந்தது. மைக் பிடித்து பேசியவர் மிக ஆவேசமான, அதே நேரம் கருத்துள்ள உரையை ஆற்றிக் கொண்டிருந்தார். அதைக் கேட்டுக்கொண்டே நெருங்கி மிக நேராக அவர்களுக்கு நேரெதிராக நின்று என் மொபைலில் போட்டோ எடுத்துக் கொண்டேன். இது எனக்கு எப்போதும் ஓர் அநிச்சை செயல். என் கவனத்தை கவரும் எந்த நிகழ்வையும் உடனே படம் பிடித்துக் கொள்வேன்.


படம் பிடித்துக் கொண்டு அவர்களை நோக்கிச் சென்றேன். அவர்களை கடந்துதான் அலுவலகம் செல்ல வேண்டும். ஒரு சிவப்பு சட்டைத் தோழர் மெல்ல என்னை நெருங்கி கொஞ்சம் கனத்தை குரலில் விசாரிக்க ஆரம்பித்தார்.

‘உங்க பேர் என்ன சார்? உங்க போன் நம்பர் கொடுங்க’

‘எதுக்கு கேக்கறீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா?’

’இல்லை.. அங்கேயிருந்து போட்டோவெல்லாம் எடுத்தீங்க? எதுக்குன்னு தெரிஞ்சிக்கலாமா?’

‘நான் இந்த நாட்டு சிடிசன் சார். என் முன்னாடி திறந்தவெளியில நடந்த கூட்டத்தைதான் போட்டோ எடுத்தேன். அதென்ன தப்பு’

‘இல்ல.. எங்கள போட்டோ எடுத்த எல்லோருடைய டீடெயிலும் கேட்டு வாங்கி வெச்சிருக்கோம்.. பாருங்க வேணா.. ‘ என்று பல பெயர்களும் நம்பர்களும் குறித்து வைக்கப்பட்டுள்ள ஒரு தாளைக் காட்டினார்.

‘அதிருக்கட்டும். அதுக்காக நான் ஏன் என் டீடெயில் தரணும். அதான் சொன்னேனே நான் ஒரு சாதாரண குடிமகன். அவ்வளவுதான்’

‘இந்த மாதிரி மீட்டிங் நடந்தா உங்கள கூப்பிடுவோம். அதுக்குதான். அதில்லாம நீங்க போட்டோ எடுத்தது டீடெயில் தர மாட்டேன்னு சொல்றது எல்லாம் மர்மமா இருக்கு. பெயர், நம்பர் கொடுங்க’

அந்தத் தோழரின் பதட்டம் எனக்கு சிரிப்பையே வரவழைத்தது. சிரித்துக் கொண்டே சொன்னேன்.

‘தோழர்.. என்ன இப்படி பதட்டப்படுறீங்க. நான் பார்த்த ம.க.இ.க இயக்கம் இது இல்லையே. புதிய கலாச்சாரத்திலும், புதிய ஜனநாயகத்திலும், தோழர் மருதையனின் உரையிலும், ஸ்ரீரங்க கருவறை நுழைவுப் போராட்டங்களிலும் நான் கண்ட தீரம் இது இல்லையே’ என்றதும் சிறிது பின்வாங்கினார்.

ம.க.இ.க பற்றிய அறிதல் இல்லாதவர்களுக்கு இந்தப் பெயர்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதிலும் குறிப்பாக அவர்களின் இயக்கத் தலைவர் மருதையனின் பெயர் பொதுவெளியில் அதிகம் புழக்கமில்லை.

‘இல்ல, ஏதாவது மீட்டிங்னா சொல்லுவோம். அதுக்குதான்...’, தோழர் விடவில்லை.

‘தோழர்.. இயக்கத்திற்கான தியாகமும் என்னிடமில்லை; குடும்பம் இருக்கிறது. ஒரு சாமானியனாக கருத்தியல் ரீதியான ஆதரவு என்றும் உண்டு. அதற்கு மேல் களப்பணிக்கு நான் ஆளில்லை. உங்களுக்கு இந்த போட்டோவை அழித்துவிட வேண்டும்னா இப்பவே செய்யறேன்’ என்றபடி மொபைலை எடுத்து அழிக்கப் போனேன்.

தோழர் தடுத்து, ‘நான் இந்த மாவட்டத்து ம.க.இ.க பொறுப்பாளர்ங்க. பெயர் *&^$#@. இந்த நம்பர்ல என்னை காண்டக்ட் பண்ணுங்க’ என்று விடாப்பிடியாக பெயரையும் எண்ணையும் ஒரு துண்டு பிரசுரத்தில் எழுதிக் கொடுத்தார்.

‘உங்க பெயரையாவது சொல்லிட்டு போங்க தோழர்’

’பெயர் ......, என் அலுவலகம் LGB பெட்ரோல் பங்க் கட்டிடத்தில்’ என்றபடி புன்னகைத்து நகர்ந்து நடக்க ஆரம்பித்தேன். மைக் பிரச்சாரகர் இன்னும்கூட பழங்குடி வாழ்விடங்களிலேயே இருந்தார். அதில் விளக்கிச் சொல்ல நிறைய இருக்கிறதல்லவா. ஆனால் ஒருவரும் கவனித்ததாகத்தான் தெரியவில்லை.

அவரை அனுப்பி என்னை விசாரிக்கச் சொல்லிவிட்டு, அதுவரை தூரத்தில் இருந்தவாறு எங்களை கவனித்துக் கொண்டிருந்த மற்ற தோழர்கள் என்னை விசாரித்தவரிடம் பார்வையால் விசாரித்ததை கவனித்தேன். என்ன பதில் சொல்லியிருப்பார் என்பதைப் பற்றி எனக்கு அக்கறையில்லை. ஆனால் தோழர்கள் ஏன் இப்படி பதட்டப்படுகிறார்கள் என்பதில்தான் என் சிந்தனை இருக்கிறது.

பிரச்சாரம் செய்வது பொது இடத்தில், தெருமுனையில். ஆனால் யார் யாரெல்லாம் தங்களை குறிப்பெடுக்கிறார்கள் என்பதிலும் ஒரு நோட்டமும் கவனமும். அநேகமாக ”நக்சல்பாரியாக மாறுவீர்” என்னும் பேனரும் முழக்கமும் அவர்களுக்கே பதட்டத்தைத் தந்து ஒருவித அதீத எச்சரிக்கை உணர்வின் பிடியில் வைத்திருக்கிறது என்று நினைக்கிறேன்.

இப்படி ஒரு வெளிப்படையான நக்சல்பாரி பிரச்சாரத்திற்கு அனுமதி தந்து அரசு எப்படி வேடிக்கைப் பார்க்கிறது என்பதுதான் எனக்கு இதில் புதிராயிருக்கும் விஷயம். இது அரசு கொள்கைக்கு விரோதமானது. எனக்கு விரோதமானதா என்று கேட்டால் புன்னகையே என் பதில். ஏன் என்று கேட்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். பிறகு கேட்பவர்களை நானும் தோழர் போல குறிப்பெடுக்க வேண்டியிருக்கும் ;-)
மேலும்...

ராஜராஜன் ஆட்சி காலம் பொற்காலமா?

Posted: Friday, February 11, 2011 | Posted by no-nononsense | Labels: 0 comments
//ராஜராஜர் கோவில் கட்டியதால் மட்டுமல்லாமல் நிலவரி, கிராமசபை, குடவோலை முறை பற்றும் பல சமுதாய முன்னேற்றங்களாலும் மிகச்சிறந்த மன்னர்களுள் ஒருவனாக கருதப்படுகிறார். //

நிலவரி, கிராமசபை, குடவோலை, சமுதாய முன்னேற்றம் --- இதிலெல்லாம் பயனடைந்தவர்கள் குப்பனோ, சுப்பனோ, விவசாயியோ, வியாபாரியோ அல்ல. மேற்சொன்ன எதிலும் பங்கெடுத்துக் கொள்ள அவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. அதனால் ராஜராஜன் காலம் பொற்காலம் என்றால், அது யாருக்கு பொற்காலம் என்பது முக்கியமான கேள்வியாகிறது. இன்னும் முழுமையான வரலாறுகள் எழுதப்படவேயில்லை. எழுதப்பட்டுள்ளவை எல்லாம் ஒருசார்பானவைகளாகவே உள்ளன. சோழர் சரித்திரத்தில், தமிழக வரலாற்றில் ராஜராஜன் மிக முக்கியமான மன்னன். பெரிய கோவிலைக் கட்டி அழியா புகழ்பெற்றவன். அதற்கு அப்பாலும் இருக்கும் வரலாறுதான் அறிந்து கொள்ளப்பட வேண்டியதாக இருப்பவை. அவை புதினங்களில் காணக் கிடைக்காது. காரணம் அடிப்படையில் அவை புனைவு கலந்தவை. ஒரு அறிமுகத்திற்காக வேண்டுமானால் படிக்கலாம். குறைந்த பட்சம் அதற்காகவாவது படிக்கலாம்.

-0-

அது மேலோட்டமான பார்வை.

ஆங்கிலேயரின் ஆட்சி காலம் என்பது திவான் பகதூர், ராவ் பகதூர் போன்ற பட்டம் பதவி பவிசுகளை அனுபவித்து வந்த சில ஜால்ராக்களுக்கு அப்போது பொற்காலம். அவர்கள் சரித்திரம் எழுதியிருந்தால், அதையும் அப்படியேதான் படித்து --எல்லா மக்களுக்கும் பொற்காலம்-- என்று சொல்லிக் கொண்டிருப்போம். ஆனால் ஆங்கிலேயரின் ஆட்சி என்பது அன்னியரின் ஆட்சி காலமாக, அண்மை கால சரித்திரமாக போய், அதோடு அச்சு பத்திரிக்கை காலமாகவும் இருந்துவிட்ட படியால் அக்கால நிகழ்வுகள் இன்றும் படிக்க கிடைத்து உண்மையை அறிந்து கொள்கிறோம். ஆனால் பழங்கால மன்னர்களின் வரலாறு கல்வெட்டு, செப்பேடு, இலக்கியங்களின் மூலமாக மட்டும் அறிந்து கொள்ள முடிகிறது. அதனால் பேனாப் பிடித்தவன் இஷ்டத்திற்கு சரித்திரம் வளையும். வளைந்தது.

கலைஞர் கூட தன்னுடையதை பொற்கால ஆட்சி என்றே சொல்லிக் கொள்கிறார். கழக கரை வேட்டிகளுக்கும் அவரின் வாரிசுகளுக்கும் நிச்சயமாக இது பொற்காலம். கழக ஏடுகளிலும் இது அப்படியேதான் குறிக்கப்படும். அவர்களையும் தாண்டி பல பயனாளிகள் உண்டு. அவர்களுக்கு இலவச பொருட்கள் நிறைய கிடைத்தன. ஆனாலும் ஏன் பொதுவில் ஒரு அதிருப்தி நிலவுகிறது? காரணம் - குடும்ப/கட்சி உறுப்பினர்களின் ஆதிக்கம், எதேச்சதிகார மற்றும் சுரண்டல் வேலைகள்.

இப்போது கட்சியினர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் என்றால் ராஜராஜன் காலத்தில் பிராமணர்கள் அந்த இடத்தில் இருந்தார்கள். அவர்களுக்கு அது பொற்காலம். ஆனால் குப்பனுக்கும், சுப்பனுக்கும் அது மற்றொருமொரு மன்னனின் ஆட்சி - just one another king's rule. அவ்வளவுதான் வித்தியாசம்.

இந்தியாவில் அசோகர் காலம் பொற்காலம் எனப்படுகிறது. ஆனால் அவரின் மறுபக்கம் என்ன? கலிங்க போருக்கு முன்னர் அசோகர் கொடுங்கோலராக இருந்துள்ளார். தனது அரண்மனையில் ஒரு சித்திரவதை கூடம் அமைத்து தவறு செய்பவர்களை பல வகையிலும் தண்டித்துள்ளார். அசோகர் கரிய நிறமும் , அழகற்றவராகவும் இருந்துள்ளார். இதனை கிண்டல் செய்த அந்தப்புற பெண்கள் 1000 பேரை கழுவில் ஏற்றி கொன்று உள்ளார். இது பிற்கால சரித்திர ஆராய்ச்சியாளர்களால் வெளிக்கொணரப்பட்ட விஷயம்.

எல்லாவற்றிற்கும் இரண்டு பக்கங்கள் உண்டு. குறிப்பாக வரலாறுகளுக்கு. வரலாறுகளின் மிகப்பெரிய பொய் அந்த வரலாறுகளே என்பார்கள். ராஜராஜன் மட்டுமல்ல, சோழ மன்னர்களின் நெடும் ஆட்சி காலத்தின் பெரும் பயனாளிகள் என்றால், அது பிராமணர்களே. இன்னும் சொல்லப் போனால் சோழர்கள் மட்டுமல்ல, பிற்கால தமிழ் சரித்திரத்தில் ஆட்சியாளர்களாக குறிக்கப்படும் பலரின் நிர்வாக முறையும் பிராமண ஆதிக்கத்தில் பிடியுண்டு கிடந்தது என்பதே வரலாற்றின் மறுபக்கம்.

இதற்கு விதிவிலக்கு களப்பிரர் ஆட்சி காலம் மட்டுமே. அதைத்தான் வரலாறை எழுதிய பிராமணர்கள் ‘இருண்ட காலம்’ என்று குறித்து வைத்திருக்கிறார்கள். ஏன் அவர்கள் பார்வையில் அது இருண்ட காலம் என்பதை ஆராய்ந்தால், ஏன் சோழ மன்னனின் ஆட்சி காலம் பொற்காலம் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

கிராம நிர்வாகம் பிராமணர்கள் மற்றும் மேல்சாதி வேளாளர்கள் கையில்தான் இருந்தது. வரிவசூல் செய்யும் காணிகளாகவும் அவர்களே இருந்தனர். கிராமங்கள் அவர்களுக்கு கொடையளிக்கப்பட்டன. அதன்மூலம் அவர்கள் பெரும் நிலக்கிழார்களாக இருந்தனர். ஆனால் பிராமணர்களுக்கு மட்டும் வரி கிடையாது. இந்திய ஜனநாயகத்தின் ஆதிகாலசான்று என குடவோலை முறையை குறிக்கிறோம். அதில் பெரும்நிலக்கிழார்களான பிராமணர்கள் அல்லது அவர்களை ஒத்த சாதியினர் மட்டுமே போட்டியிட முடியுமே தவிர, வேறு எந்த குடிமகனுக்கும் தகுதி இல்லை. இப்படியாக பல விதிகள் அதற்கு இருக்கின்றன. அவை எதற்கும் பொதுமக்களுக்கும் சம்மந்தமில்லை.

பிராமணர்கள் நன்றாக இருந்தால்தான் தங்கள் நல்வாழ்வு சுபிட்சமாகவும் இறைவனின் ஆசிர்வாதத்துடன் இருக்கும் என்பது அக்கால மன்னர்களிடம் பிராமணர்களால் வலிந்து ஏற்படுத்தப்பட்ட நம்பிக்கை. அக்காலம் பக்தி இயக்க காலம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

அதனால்தான் சொல்கிறேன்: மேலோட்டமாக பொற்காலம் என்று சொல்வது பொருந்தாது. பொற்காலம் என்றால் அது யாருக்கு என்பது ஆராய்ச்சிக்குரியது என்று. இதன் பேரில் ஆழ்ந்த வாசிப்பு அவசியமாகிறது. அதற்கு ஓரிரு புதினங்களும், சிற்சில இணைய தேடல்களும், பாடசாலை புத்தகங்களும் மட்டும் உதவாது. உண்மை அதற்கு அப்பால் இருக்கிறது. சரித்திரம் பற்றியும் வரலாற்று நாயர்கள் பற்றியும் ஒரு feel-good perception தான் வேண்டும்; அதுதான் எனக்குப் பிடிக்குமென்றால் அப்படியே இருந்து கொள்ளலாம். எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை ;-)

-0-

ஒரு தகவலுக்காக சொல்கிறேன் - தஞ்சை பெரிய கோவிலைக் கட்டியது மாமன்னன் ராஜராஜன் தான் என்பது ஒரு நூற்றாண்டு முன்பு வரையிலும் கூட யாருக்கும் தெரியாது. ஜி.யூ.போப் அதை காடுவெட்டிமன்னன் கட்டிய கோவில் என்றே எழுதி வைத்திருக்கிறார். கூல்சு என்பார்தான் 1900 ஆண்டு வாக்கில் அதைக் கட்டியவன் ராஜராஜன் என்பதை கோவில் கல்வெட்டிகளை மறுஆய்வுக்கு உட்படுத்தி கண்டறிந்தார்.

இதுதான் நம் சரித்திரங்களின் லட்சணம்.

-0-

சில துறைகளில் எனக்கு ஆய்வு ரீதியான வாசிப்பு உண்டு என்பதைத் தவிர இதில் பெரிதாக ஒன்றுமில்லை. புதினங்கள் சோழர்களை பற்றி ஒரு அறிமுகம் தரலாம். ஆனால் அதுவே வரலாறு காட்டும் உண்மையல்ல. காரணம் அவை வாசிப்பு சுவைக்காக கற்பனை கலந்து எழுதப்பட்டவை. புதினங்களையும் தாண்டி நம்முடைய வாசிப்பை நாம் நீட்டித்துக் கொள்ள வேண்டும். அக்கால அரச செயல்பாடுகள் குறித்து வெளிவந்துள்ள நூல்களையும் கட்டுரைகளையும் வாசிக்க வேண்டும். விமர்சனங்களை தேடிப் படிக்க வேண்டும். அதன்மூலம் ஓரளவு உண்மையை நெருங்கிப் பார்க்க முடியும். நான் இங்கே பணி நேரத்தில் பாலாஜிக்கு எழுதிய பதில் முழுமையானது அல்ல. ராஜராஜனின் அரசு, ஆட்சிமுறை குறித்து பெரிய கட்டுரை எழுதும் அளவுக்கு நிறைய விஷயங்கள் உள்ளன. அவன் நிச்சயமாக பேரரசன். சோழ வம்சத்தின் மிக ஆளுமையான மன்னன். ஆனால் அவனுடையது பொற்கால ஆட்சி என்பது சற்று மிகையான மதிப்பீடு என்பதுதான் சுருக்கமாக நான் சொல்ல வருவது.
மேலும்...

மரபு சுற்றுலாக்கள்

Posted: | Posted by no-nononsense | Labels: 0 comments
வருடம் ஒருமுறை நடக்கும் சந்திப்புகளை கொஞ்சம் திட்டமிட்டால் இந்த மாதிரி புராதன இடங்களை சென்று பார்க்கும் heritage tour-களாக மாற்றிக்கொள்ளலாம். ஆனால் அடிப்படையில் அதற்கெல்லாம் ஒரு ஆர்வம் வேண்டும். அப்படிப்பட்டவர்கள் பத்து பேருக்கும் ஒருவர் தேறினால் பெரிய விஷயம்.

தஞ்சை பெரியகோவில் என்றால் பொதுவில் நந்தி சிலையும், கோவிலும், கற்கோபுரமும் தான் அதன் சிறப்பு என்று நினைக்கிறோம். ஆனால் ராஜராஜ சோழனின் ஆட்சியில் அது ஒரு கருவூலமாக, ஜமீனாக, வங்கியாக, வரி வசூல் மையமாக, ஆடல் மகளிரின் இருப்பிடமாக ... இன்னும் பலவாறான செயல்பாடுகளுடன் தனித்துவமாக விளங்கியது. அது போன்ற அரசியல் முக்கியத்துவம் வேறு கோவில்களுக்கு கிடைத்ததில்லை என்று சொல்லலாம். அதையெல்லாம் படித்து விட்டு கோவிலை பார்க்கச் சென்றால் அந்த பார்வையே முற்றிலும் வேறுபட்டதாக நம்மை கால இயந்திரத்தில் ஏற்றிப் பின்னால் கொண்டு சென்று விடும்.

-0-

நாமக்கல்லின் சிறப்பு மிக்க குகை குடைவரை கோவில்களாகிய நரசிம்மர் கோவில், ரங்கநாதர் கோவில் ஆகியன பல்லவர் கால புடைப்பு சிற்பங்களுக்கு புகழ்பெற்றவனாவாக விளங்குகின்றன. அதன் அருமை தெரிந்து பல கலை ஆர்வலர்களும், ஆராய்ச்சி மாணவர்களும் வந்து பார்த்து, படமெடுத்துச் செல்கிறார்கள். அப்படிப்பட்ட சிலரின் கட்டுரைகளை நான் இணையத்தில் கூட படித்திருக்கிறேன். ஆனால் உள்ளூரில் அதன் பெருமை, பூஜ்ஜியம்!

ஓராண்டு முன்பு நான் இங்கே Namakkal should be rediscovered என்று ஒரு கட்டுரை எழுதினேன். அதில் ஒரு தகவலாக --- இந்த இரண்டு கோவில்களின் சிற்பங்களும் பல்லவர் கால சிற்ப கலையை ஒத்தவையாக இருக்கின்றன. ஆனால் நாமக்கல் பகுதியை பல்லவர்கள் ஆளாத போது இது எப்படி என்று தெரியவில்லை --- என்று குறிப்பிட்டிருந்தேன். அதிலிருந்து ஒரு முன்னேற்றமாக இக்கோவில்கள் பல்லவர்களின் கீழேயிருந்து திருச்சி, புதுகோட்டை பகுதிகளில் குறுநில மன்னர்களாக ஆட்சி செலுத்திய அதியர்களால் (முத்தரையர் மரபு) கட்டப்பட்டிருக்கலாம் என்பது வரை வந்திருக்கிறேன். இன்னும் பல தகவல்கள் தேவைப்படுகின்றன. கிடைத்ததும் அதன் அடிப்படையில் நாமக்கல் கோவில்களின் கலை சிற்ப புராதன சிறப்புகள் குறித்து உருப்படியாக ஒரு கட்டுரை எழுதி இணையத்தில் போட்டுவைக்க இருக்கிறேன். நாமக்கல் பற்றி தேட முற்படுபவர்களுக்கு என்றைக்காவது எதற்காகவாவது உதவும். அதாவது இன்றைக்கு இருக்கும் ‘இல்லை’ என்னும் நிலை பிற்காலத்தில் இருக்கக்கூடாது.

என்னுடைய ஆர்வமும், முயற்சியும் நான் பிறந்த மண்ணின் சிறப்புகள் பற்றி அறிந்துகொள்வது என்பது மட்டுமே. ஒரு சுயதிருப்திக்காக.
மேலும்...

காவலன்

Posted: Wednesday, February 9, 2011 | Posted by no-nononsense | Labels: 0 comments
காவலன் படம் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று ட்விட்டியதும்தான் எத்தனை கெக்கலிப்புகள்! புருவம் சுருக்கல்கள்! பரிதாப பார்வைகள்! விஜய் பாவமா அல்லது நான் பாவமா என்று புரியாமலே படம் பார்க்க ஆரம்பித்தேன்.

காவலன், முதல் பாதியில் எனக்கு பிடித்த விஜய் படமான வசீகராவை நினைவூட்டினான். எவ்வித அதீதங்களும் அலட்டல்களும் இல்லாத கதைப்போக்கில் விஜயின் underplay-வை ரசித்தபடியும், சித்திக்கின் நகைச்சுவை காட்சியில் மீண்டும் பரிமளித்த வடிவேலை கண்டு சிரித்தபடியும் இடைவேளை வரை படம் நன்றாகவே சென்றது. அதற்கு பிறகு திரைக்கதை soap opera ஆகி சொதப்பலாக மாறி எப்போது முடியும் என்றாகிவிட்டது. ரொம்பவே சுமாரான படம் !


விஜய் போன்ற பொதுமக்களின் அபிமானத்திற்குரிய நடிகர் மட்டும் இதில் நடித்திருக்கவில்லை என்றால் மிக மோசமான தோல்வியை இப்படம் தழுவியிருக்கும். இருந்தாலும் வாய்மொழியாக (word of mouth) ஒரு குறைந்த பட்ச நல்ல பெயர் சம்பாதித்திருக்கிறது என்றால் அதற்கும் காரணம் விஜய் தான். இதற்கு முன் விஜய் செய்த ஓவர் பில்டப்புகள் எதுவுமே இதில் இல்லை என்பதுதான் இப்படத்தின் ஒரே ப்ளஸ் பாயிண்ட்! மக்களும் நிம்மதி பெருமூச்சு விட்டு பாராட்டுகிறார்கள்!

ஒல்லி அசினை பார்க்க சகிக்கவில்லை. அதைவிட ஒரு அட்டு ஃபிகரை அவருடனே அலையவிட்டு கடைசியில் விஜய்க்கும் ஜோடியாக்கி கொடுமை செய்துள்ளார்கள். இப்படி ஒரு ஃபிகர் வறட்சியானதொரு படத்தை நான் இதுவரை பார்த்ததில்லை. போதாத குறைக்கு ‘ஏனிப்படி இங்கு கோவணத்துடன் ஆண்டியானாய்’ எனும்படி அசினுக்கு அம்மாவாக வரும் (சற்று குண்டாகிவிட்ட) ரோஜா வேறு முகத்தில் கடுமை ஏற்றி குரலை உயர்த்தி.. உஸ் அப்பா..!

குண்டு என்றதும் ஞாபகம் வரும் இன்னொரு விஷயம் பழைய குண்டு ஷர்மிலியை சில காட்சிகளில் படத்தில் ஓடவிட்டு ரசிகர்களை கடுமையாக தண்டித்திருக்கிறார்கள். அவர் இன்று சுமோ மல்யுத்த வீரனின் சைஸில் இருக்கிறார்! சித்திக் சார்..! நீங்க நிஜமாவே மலபார் தானா?!

ராஜ்கிரணை இப்படி இன்னும் எத்தனை படங்களில்தான் வீரதீரமான ஊர் பெரியவராக பார்ப்பது? அவரும் அதே அரைத்த மாவு நடிப்பையே அள்ளித் தெளிக்கிறார். இனி இவர் நடித்திருந்தால் அப்படத்தை பார்க்க ஒருமுறைக்கு இருமுறை யோசிப்பேன்.

விஜய் படத்தில் ஒரு பாட்டு கூட ஹிட் ஆகாத ஒரே படம் இதுவாகத்தான் இருக்கும். நடனத்திற்கும் அவ்வளவாக வேலையில்லை. விஜய் ஏனோ இப்போதெல்லாம் தன் படங்களின் பாடல்களில் ஏதாவது விக்கை மாட்டிக்கொண்டு ஆடுகிறார். சுத்தமாக பொருந்தவில்லை.

விஜய் - அசின் ஆகிய இரண்டே கதாபாத்திரங்களை சுற்றியே வழவழவென்று நகரும் திரைக்கதையின் ஒரே ஆறுதல், வடிவேலு !


என் குழந்தை விஜய் ரசிகை என்பதாலும், மனைவியை சினிமாவுக்கு அழைத்துச் சென்று நாளாகிவிட்டது என்பதாலும் மட்டுமல்ல, இந்தப் படத்தை ரிலீஸ் செய்வதற்கு விஜய் & கோ பட்ட பாட்டை படித்ததாலும் கூட [http://truetamilans.blogspot.com/2011/01/blog-post_19.html] இதை தியேட்டரில் சென்று பார்க்கவே விரும்பினேன். Mission completed !

***

பல காரணங்களாலும் தியேட்டர் சென்று சேரவே மணி 6.45 ஆகிவிட்டது. என் மனைவிக்கு படத்தை எழுத்து போடுவதில் இருந்தே பார்த்தால்தான் திருப்தி. இல்லையென்றால் வீடு வந்து சேர்ந்தாலுமே கூட தொடங்கிய மண்டகப்படி ஓய்ந்திருக்காது என்பதால் அடித்து பிடித்து தியேட்டரை ஏழு மணியளவில் அடைந்தோம். உள்ளே சென்று பார்த்தால் மொத்தமே இருபது பேர்தான் இருந்தார்கள் ! நேரம் ஆக ஆக இன்னும் ஒரு பத்து பேர் சேர்ந்திருக்கலாம்.

டிக்கெட் விலை 40 ரூபாய். 40*30 = 1200 ரூ. மொத்த வசூல்.

‘வெறும் ஆயிரத்து சொச்சத்துக்கெல்லாம் ஷோ ஓட்டி எப்படி உங்களுக்கு கட்டுபடியாகிறது..?’ என்று டூவீலர் பார்க்கிங்கில் டிக்கெட் கிழித்தவரைக் கேட்டேன்.

‘இன்னைக்கு பரவாயில்லைங்க.. 40 பேராவது இருக்காங்க. மத்த நாளெல்லாம் 7 பேர் சேர்ந்தாலே கூட போதும்னு ஓட்டுவோம்..!’ என்றார் அவர்.

இன்னும் சில ஆண்டுகள் கூட தியேட்டர்கள் தப்பி பிழைத்திருக்காது என்று தோன்றுகிறது.

இதில் குறைபட்டுக்கொள்ளவும் ஒன்றுமில்லை. கூத்து மேடை அழிந்து நாடக மேடை வந்தது. நாடக மேடை அழிந்து சினிமா கொட்டகை வந்தது. இப்போது சினிமா கொட்டகைகளுக்கு அழிவு காலம். கால மாற்றத்தில் இந்த மாற்றம் தவிர்க்க இயலாதது
மேலும்...

போலி கலாச்சார மதிப்பீடுகள்

Posted: Saturday, February 5, 2011 | Posted by no-nononsense | Labels: 0 comments
கையில் பணமும் செல்வாக்குள்ள மனிதர்களை வளைக்கும் தந்திரமும் தெரிந்திருந்தால் இந்த நாட்டில் ஏழைகளை என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்பதற்கு திவ்யாவின் படுகொலை ஒரு சாட்சி.

இந்த தற்கொலை சாவுக்கும் இந்த வரிகளுக்கும் என்ன சம்மந்தம் என்று வினவுக்கு மட்டுமே வெளிச்சம்.

இந்தப் பெண்ணுக்கு ‘திருடி’ பட்டம் கிடைத்து எள்ளி நகையாடப்பட்டு, அதன் அவமானம் காரணமாக மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டிருந்தால் அது ஓரளவு புரிந்து கொள்ளக்கூடியதே. அதுதான் உண்மை என்றால் இதற்கு மேல் நான் எழுதுவதற்குள் செல்ல வேண்டியதில்லை.

ஆனால் நிர்வாணமாக சோதனை செய்தார்கள் என்பதற்காக தற்கொலையை நாடியிருந்தால், அது தவறான முடிவு! அந்த முடிவு இந்திய சமூகத்தில் நிலவி வரும் பாலியல் அடிப்படையிலான தவறான மனநிலை கட்டமைப்பை எடுத்துக்காட்டுவதாகவே உள்ளது. அது இந்திய இளைஞர்கள் மனதளவில் எந்தளவு பலவீனமானவர்களாக இருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது. நிர்வாணத்திற்கும் கற்புக்கும் நாம் போட்டுவைத்துள்ள மாயமுடிச்சு உயிரையும் இறுக்கிக் கொல்லக்கூடியதாக உள்ளது.

நான் இன்னமும் அந்த ஆசிரியைகள் முழு நிர்வாணப்படுத்தி சோதனை செய்தார்கள் என்று நினைக்கவில்லை. உள்ளாடைகள் இருந்திருக்கலாம். அந்த பெண்ணின் கடிதத்தில் தகவல் முழுமையாக இல்லை. அப்படியே நடந்திருந்தாலும் ஆடைகளை களைந்து செய்யப்பட்ட சோதனை ஒரு சாதாரண விஷயம். அமெரிக்க விமான நிலையங்களில் இப்போதெல்லாம் நமது மந்திரிகளையே அப்படித்தான் செய்கிறார்கள். ஷாரூக்கானின் நிர்வாண ஸ்கேன் உருவப்படமெல்லாம் ஊடகங்களில் உலா வந்தன.

இந்த பெண்ணையுமே கூட ஏதேனும் காரணமாக விமான நிலைய சோதனை அறையில் இப்படி ஆடைகளை களைந்து சோதித்திருந்தால் அவருக்கு அது அவமானகரமாக இருந்திருக்காது என்று சொல்லமுடியும். பெருமையாக கூட வெளியே சொல்லிக் கொண்டிருந்திருக்கக் கூடும். ஆனால் அதுவே மற்ற இடம் என்று வரும்போது ஆடை களைந்த சோதனையால் (
நிர்வாண சோதனை என்பது politically மிகைப்படுத்த சொல்லாடல் என்பது என் கருத்து) அவமானம் தலைவிரித்தாடி மனம் பட்டென்று உடைந்து உலகம் இருண்டு எல்லோரும் சுற்றி நின்று கைகொட்டி சிரிப்பதாக பிரமைகள் தோன்றி தற்கொலை எண்ணம் வந்துவிடுகிறது. இத்தனைக்கும் சோதனை செய்தவர்களும் பெண்கள் தான்.

இந்த சம்பவத்தில் அந்த ஆசிரியைகளை கொலைகாரிகளை போல சித்தரிப்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை. பணம் காணவில்லை; சில பேரின் மீது சந்தேகம் என்றால், அந்த இடத்தில் பொறுப்பானவர்களாக இருப்பவர்கள் அதற்கு தக்க நடவடிக்கை எடுத்து சோதனை செய்யாமல் வேறு என்ன செய்வார்கள்?!

இந்தப் பெண்ணின் தற்கொலை முடிவு பரிதாபத்துக்குரியது. அதற்குமேல் இதில் வர்க்கப் பிரச்னை எதுவும் உள்ளதாக நான் நினைக்கவில்லை. எல்லா இடங்களிலும் பணக்காரர்களை விட ஏழைகள் இரண்டாம் பட்சம் தான். உலகம் முழுவதுமே இப்படித்தான். நடைமுறை வாழ்க்கையில் அவர்கள் அதனை எதிர்கொண்டு வாழ பழகிக் கொண்டவர்களாகவே இருக்கின்றனர். நூற்றாண்டு கால சமூக ஒடுக்குமுறை அதை அவர்களின் ஜீன்களில் எழுதி வைத்து விட்டிருக்கிறது. இந்தப் பெண்ணுக்கு வர்க்கப் பிரச்னையையும் தாண்டி மனதளவில் வேறு ஏதோ காரணம் இருந்திருக்க வேண்டும். தொட்டாற்சுருங்கி என அவர் மனம் மிகவும் பலவீனமாக இருந்திருக்க வேண்டும். இல்லையென்றால் இது போன்ற தற்கொலை சம்பவங்கள் இங்கே தினமும் பத்திரிக்கை செய்தியாக வந்து கொண்டிருக்கும்.

ஏழைகளின் குழந்தைகளை மட்டுமல்ல, யாருடைய குழந்தைகளாக இருந்தாலும் அவர்களை உலகம் தெரியாத கூட்டுப்புழுக்களாக போலியான கலாச்சார மதிப்பீடுகளை கற்றுக்கொடுத்து வளர்த்தால் நெருக்கடியான தருணங்களை எதிர்கொள்ளத் தெரியாமல் இது போன்ற எதிர்மறையான சிந்தனைகளுக்கும் முடிவுகளுக்கும் தங்கள் மனதில் இடம் கொடுத்துவிடக்கூடும்.

பச்சைப் படுகொலை என்று தலைப்பு என்னவோ எடுப்பாகவே உள்ளது. ஆனால் ஒரு சாதாரண சம்பவத்துக்கு எப்படி எல்லாம் கண் காது மூக்கு வைத்து கற்பனை செய்து வர்க்கப் பிரச்னையை உள்ளே நுழைத்து எழுத்தாணியை ஓட விடமுடியும் என்பதற்கு இக்கட்டுரை ஒரு எடுத்துக்காட்டு. தோழர்களின் வினவு கட்டுரைகள் சில காலமாக தேய்மானம் அடைந்து வருவது வருத்தத்துக்குரியது.
மேலும்...