ஆன்லைன் வர்த்தகமும் விவசாயிகளும்

Posted: Sunday, February 28, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
அத்தியாவசிய உணவு பொருள்கள் மீதான ஆன்லைன் பேர வர்த்தக தடை பற்றி யாரும் விவதிகாதது, யாரும் கவலை படாதது ஏமாற்றம்.

இது அறியாமல் பேசும் பேச்சு. நுனிபுல்கூட மேயாமல் எழுதுகிறார்களோ என்று தோன்றுகிறது. வாய்பாய் அரசு அறிமுகப்படுத்திய அரிசி, கோதுமை போன்றஅத்தியாவசிய உணவு பொருளின் மீதான ஆன்லைன் வர்த்தகத்தை மன்மோகன் சிங் அரசு தூக்கி இரண்டு வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது.(காரணம் அப்போது நாட்டில் பண வீக்கம் விண்ணை முட்டி நின்றது). ரீபைண்ட் ஆயில், உருளை கிழங்கு, சர்க்கரை ஆகியவற்றை தவிர வேறு உணவுடன் சம்மந்தப்பட்ட அத்தியாவசிய பொருள் எதுவும் தற்போது டிரேடிங்கில் இல்லை. (Ref:www.mcxindia.com)

இந்தியாவில் இனிமேல் அரிசியும், கோதுமையும் ஆன்லைன் வர்த்தகத்திற்குள் அனுமதிக்கப்பட வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன்.

ஆன்லைன் வர்த்தகம் என்பதைப்பற்றிய அறிதல் இக்கால விவசாயிகளுக்கு மிகவும் அவசியம். தங்களின் நிலையற்ற வேளாண் விளைபொருள் விலை நிர்ணயத்துக்கும் உற்பத்திக்கும் எதிராக ஆன்லைன் வர்த்தகத்தை ஒரு வெற்றிகரமான hedging product-ஆக உபயோகித்துக்கொள்ள முடியும். மேலும் ஒரு குறிப்பிட்ட விளைபொருளின் விளைச்சல் மற்றும் உற்பத்தி நிலையின் போக்கு(trend) பற்றியெல்லாம் நீண்ட கால விவசாயிகளுக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும். அவர்களெல்லாம் நேரடி விவசாயத்துடன் ஈடுபடுவதுடன் ஆன்லைனிலும் வர்த்தகம் செய்யலாம். அதை விடுத்து வெறுமனே குறைகூறிக்கொண்டு இருப்பது, வளர்ந்து வரும் தொழில் நுட்பம் அறிமுகப்படுத்தும் வர்த்தக வாய்ப்பு நிலைகளை மறுதலிப்பதாகவே அமையும்.

என்னுடைய ஈரோடு வட்டார வாடிக்கையாளர்கள் பலர் மஞ்சளில் ஆன்லைன் வர்த்தகம் மேற்கொண்டு சமீபத்தில் நல்ல லாபம் பார்த்திருக்கிறார்கள். அவர்கள் ஒரு குழுவாக செயல்பட்டு அதில் ஈடுபட்டனர். அவர்களில் பலர் மஞ்சள் உற்பத்தி செய்யும் விவசாயிகளும்கூட என்பது கவனிக்கத்தக்கது.
மேலும்...

மலையாளிகளின் உளவியல் - ஓர் எதிர்வாதம்

Posted: | Posted by no-nononsense | Labels: , 0 comments
மலையாளிகளின் உளவியலை இந்த கடிதம் மூலம் புரிந்துகொள்ளமுடிகிறது.நேரடியாக பாதிக்கப்படும் நாம் இதற்க்காக கோபப்படமுடிகிறதே ஒழிய பரிதாபப்படமுடியவில்லை
இதே மனோபாவத்தையும் அலட்சியத்தையும்தான், நாமும் இங்கே வாழும் இலங்கை தமிழர்கள் குறித்து கொண்டிருக்கிறோம் என்று நான் சொல்வேன். ‘சிலோன் ரிட்டர்ன்’ என்றாலே ஒரு இளக்காரம்தான்.

கேரள கம்பெனியில் இருமுறை பணிபுரிய நேர்ந்திருக்கும் எனக்கு மாறுபாடான அனுபவம் ஏதும் இதுவரை ஏற்பட்டதில்லை. ஆனால் பொதுவில் தமிழர்களை ‘பாண்டிங்க’ என்று திட்டுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஒருவேளை அங்கேயுள்ள அரசு அதிகாரிகளுடன் புழங்க நேர்ந்தால் அது மாதிரி நிகழ்ந்திருக்கலாம்.

கேரளாவில் இடதுசாரி அரசியல் எல்லாவற்றையும் பாழ்படுத்தி விட்டதாக ஜெமோ கூறுகிறார். இதேபோன்ற குற்றச்சாட்டு கம்யூனிச அரசு ஆளும் மேற்கு வங்கம் மீதும் உண்டு. இடதுசாரி சிந்தாந்தம் முதலாளித்துவத்தை கட்டுக்குள்தான் வைத்திருக்கும். அதன் ஆகப்பயன் எல்லாம் விளிம்பு நிலை மனிதர்களினிடத்தில்தான் தெரியும். கான்கிரீட் காடுகள் பெருகுவதுதான் வளர்ச்சி; கால் வயிறு அரை வயிறு மனிதர்களின் இன்றைய நாளின் வாழ்வாதாரப் பிரச்சினைகளைப் பற்றியெல்லாம் பெரிய கவலை கிடையாது என்பது சரியான சமூக சிந்தனையாக இருக்காது. இடதுசாரி அரசியல் சமூகத்தின் வேர் வரையிலான மனிதர்கள் குறித்தும் கவலைப்படுகிறது. அம்பானிகளை உருவாக்குவதல்ல அதன் வேலை.

மற்றபடி அங்கேயுள்ள கல்வி நிலை குறித்தும் மற்ற விஷயங்கள் மீதும் அவர் கூறியுள்ளதெல்லாம் ஒப்புக்கொள்ளக்கூடிய அலசல்தான். அதன் தொழில்வளம், விவசாயம் எல்லாம் எதனால் பாதிக்கப்பட்டது என்பதெல்லாம் சமூக பொருளாதார ரீதியிலான ஆய்வுக்குட்பட்ட விஷயங்கள். எல்லாமே இடதுசாரி அரசியலால்தான் நிகழ்ந்தது என்பது பிரச்சினையை முன்முடிவுடன் அணுகுவதால் எழும் எண்ணம் என்றே சொல்ல தோன்றுகிறது.
மேலும்...

ஈழப்போராட்டமும் சர்வதேச இன மோதல்களும்

Posted: | Posted by no-nononsense | Labels: , , 0 comments
நிறைய பேர் ஆயிரத்தில் ஒருவன் கதையை ஈழ நிகழ்வுகளோடு ஒப்பிட்டு சொன்னார்கள். ஆனால் ஈழப்போராட்டத்தை பிரதிபலிக்கும் கதை அம்சம் கொண்ட படம் 300 என்னும் ஆங்கிலப்படம்.

300, ஆ.ஒ.தான் என்றில்லை, உலகின் பெரும்பாலான காலனியாதிக்க, ஆக்கிரமிப்பு போர்கள் மற்றும் இன மோதல்கள் சம்மந்தப்பட்ட கதைகளும் படங்களும் கூட உனக்கு ஈழப் பிரச்சினையைத்தான் ஞாபகப்படுத்தும். அனைத்தின் பின்புலமான காரணங்களும் கிட்டத்தட்ட ஒன்றுதான்.

சமகாலத்திலேயே ஈழப் பிரச்சினையோடு ஒப்பிடக்கூடியதாக டார்பர், பாலஸ்தீனம், திபெத், ருவாண்டா, கொசோவோ போன்ற பலவற்றைக் குறிப்பிடமுடியும்.

இவற்றில் கொசோவோவை ஈழத்துடன் நெருங்கி வரக்கூடிய ஒன்றாக பார்க்கமுடியும். அவர்கள் செர்பியாவின் இன அழிப்புக்கெதிராக ஆயுதம் ஏந்திய அதேசமயத்தில், அதை சர்வதேச அளவில் அரசியல் ரீதியாகவும் முன்னெடுத்து, 2008-ல் தங்களை தன்னிச்சையாகவே சுதந்திர நாடாகவும் அறிவித்துக் கொண்டார்கள். அதற்கு அமெரிக்க, ஐரோப்பிய கூட்டமைப்பின் அங்கீகாரமும் கிடைத்தது.

அந்த அரசியல் சாமார்த்தியம்தான் ஈழப்போராட்டத்தில் புலிகளிடம் இல்லாமல் போனது. பாரிய இழப்புகளை சந்தித்து அடைந்த unofficial தமிழீழ அரசை தங்களின் மூர்க்கத்தன; அதீத ஆயுதப் போராட்ட தன்னம்பிக்கையால், திரண்டிருந்த வெண்ணையுடன் பானையை போட்டு உடைத்து விட்டார்கள். அதன் வலியை இன்னும் பல காலத்திற்கு ஈழம் அனுபவிக்க போகிறது.

கொசோவோவின் சுதந்திர நாடு பிரகடனத்தை சர்வதேச சமுதாயம் அங்கீகரித்த போது அதனைக் கண்டு எங்கே ஈழப் பிரச்சினையிலும் அதுவே நடந்து விடுமோ என்று நடுநடுங்கிய இலங்கை அரசு, கொசோவோவுக்கு எதிராக எப்படியெல்லாம் கண்ட குரல் எழுப்பியது என்பதை பழைய ஏடுகளை புரட்டிப் பார்த்தால் புரியும்.

*

மேலே ருவாண்டா பற்றி குறிப்பிட்டிருந்தேன். அங்கே 1994-ல் நடந்த இனமோதல்தான் அண்மை கால மனித குல வரலாற்றிலேயே, கொடூரமானதும் கொடுமையானதுமான ஒன்று ஆகும். டுட்சி, ஹூடு என்கிற இரு இனங்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மூன்று மாத காலத்திற்குள் ஐந்து முதல் பத்து லட்சம் பேர் ஒருவரை ஒருவர் வெட்டிக்கொண்டு இறந்தார்கள். (பத்து லட்சம் என்பது சாதாரண எண்ணிக்கை அல்ல). இறந்தவர்களில் அதிகம் பேர் அங்கே சிறுபான்மையினராகிய டுட்ஸி இனத்தினர். இலங்கையில் சிங்களவன் போல அங்கேயும் பெரும்பான்மையினராகிய ஹூடுவின் ஆட்சிதான் அப்போது நடந்து கொண்டிருந்தது.

இதனை அடிப்படையாகக் கொண்டு Hotel Rwanda என்றுகூட ஒரு படம் வந்தது. பலரும் பார்த்திருக்கலாம்.

திருச்சியில் நான் பணிபுரிந்தபோது எங்கள் அலுவலகத்திற்கு நிறைய ருவாண்டா மாணவர்கள் பணம் மாற்ற(Forex) வருவார்கள். Hotel Rwanda படம் பார்த்த அனுபவத்தில் அவர்களிடம் அந்த இனப்படுகொலைகளைப்பற்றி சிலவேளைகளில் நான் பேச்சுக் கொடுப்பதுண்டு. ஆள் தராதரம் பார்க்காமல் இனம் ஒன்றை மட்டுமே வேறுபடுத்தி பார்த்து கணவன் மனைவியையும், அப்பா பிள்ளையையும்கூட வெட்டித்தள்ளியதாக அவர்கள் கூறினார்கள். அதில் ஒருவன் என்னுடைய மின்னஞ்சல் முகவரியை பெற்றுச் சென்று, கர்ம சிரத்தையாக அது சம்மந்தமான பல புகைப்படங்களையும் கட்டுரைகளையும் கூட அனுப்பி வைத்தான்.

- ஈழத்தை நினைவுபடுத்தும் திரைப்படங்கள் மற்றும் இன மோதல்கள் மீதான விவாதத்தின் ஒரு பகுதி..
மேலும்...

தமிழ் திரைச்சூழல் - தொடரும் உரையாடல்

Posted: Saturday, February 27, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
எப்பவுமே கதை இல்லையென்றால் பெரிய ஆக்டரோ சின்ன ஆக்டரோ படம் ஓடாது

அந்த கதையும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த கதையாக இருந்தால் மட்டுமே படம் ஹிட்டடிக்கும். உ.ம்: நாடோடிகள்.

இல்லையென்றால், ஒரு சிறிய வட்டத்தில் மட்டும் ரசிக்கப்பட்டு பெட்டியில் சுருண்டு விடும். கிளாஸிக் கதைகளை பொறுத்தவரை அந்நிலையில்தான் இன்றைய தமிழ் ரசிக சூழல் இருக்கிறது. அதற்கு நல்ல உதாரணம்: காஞ்சிவரம். பார்த்த எல்லோராலும் பாராட்டப்பட்டு, தேசிய விருதும் வாங்கிவிட்ட அப்படத்தை தைரியமாக வாங்கி வெளியிட இன்றுவரை எந்த விநியோகஸ்தரும் முன்வரவில்லை. காரணம் அதில் கதை மட்டுமே இருக்கிறது. ’சதை’ இல்லை.

இதில் விநியோகஸ்தர்களையும் மட்டுமே குற்றம் சொல்லிவிடவும் முடியாது. அப்படி வாங்கி தைரியமாக வெளியிடப்பட்ட ஒரு சில படங்களையும் தோல்வியுறச் செய்துவிட்டது மக்களின் குற்றம்தான். உ.ம்: அச்சமுண்டு அச்சமுண்டு, பூ, பசங்க(நல்ல படம் என்று இதற்கு டாக் இருந்த அளவிற்கு வசூல் கிடையாது), யாவரும் நலம். அதற்கு மக்கள் சொல்லும் காரணம் எண்டர்டயிண்மென்ட் இல்லை. போரடிக்கிறது என்பதுதான். கதை நல்லாயில்லை என்று ஒருவராலும் சொல்லமுடியாது.

கந்தசாமி, வில்லு போன்ற சில மசாலா படங்கள் த்ராபைகளாக இருந்தும் போட்ட காசுக்கும் மேலேயே முதல் இரண்டு வாரங்களில் மட்டுமே வசூலித்து தள்ளிய விந்தையையும் இங்கே கணக்கில் எடுத்துக்கொண்டு பார்த்தால் ஏன் தமிழில் நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் வருவதில்லை என்பது புரியும். (கந்தசாமியின் வசூலுக்கு தாணு செய்த விளம்பர யுக்திகள்தான் காரணம்).

ஒரு படத்தை தயாரிப்பதன் முக்கிய அம்சமாக, முதற்கண் வேலையாக ஹீரோக்களின் கால்ஷீட்டை பெறுவது இருக்கும்வரை இந்நிலை மாறாது. மலையாள சினிமாக்களில் முதலில் கதைகளைத்தான் உரிமம் பெறுவார்கள். பிறகுதான் அதற்கு எந்த ஹீரோ என்று தேடுவார்கள். அங்கே தகழி.சிவசங்கரன் பிள்ளை, எம்.டி.வாசுதேவன் நாயர் போன்ற எழுத்தாளர்கள்தான் ஹீரோக்களை விடவும் பிரபலம்.

ஆனால் அச்சூழல் இங்கே இல்லை. எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன் போன்றவர்களின் நல்ல பல நாவல்கள் இருக்க, அதை விடுத்து தங்களின் மசாலா கதைகளுக்கு அவர்களிடம் வசனம் மட்டும் எழுதி வாங்கிக்கொண்டு இருக்கிறார்கள் இங்கே. நான் கடவுளாக மலர்ந்த ஜெயமோகனின் ‘ஏழாம் உலகம்’ மற்றும் சொல்ல மறந்த கதையின் மூலமாகிய நாஞ்சில் நாடனின் ‘தலைகீழ்விகிதங்கள்’ போன்றவை ஒரு சில விதிவிலக்குகள்.

சில உரையாடல்களில் இப்படி நல்ல எழுத்தாளர்களின் நல்ல கதைகள் படமாக்கப்பட வேண்டும்; நல்ல கிளாசிக் கதையம்சம் கொண்ட படங்கள் ஓடவேண்டும் என்பதையெலாம் வலியுறுத்தி பேசினால், உடனே பொழுதுபோக்கு படங்களை மறுதலிப்பதாக எடுத்துக்கொள்கிறார்கள். அதுவும் தேவை. இதுவும் ஆராதிக்கப்படுவது அவசியம். அப்படியொரு சமநிலையிலான ரசனை சூழல் இங்கே இல்லாமல் இருப்பதுதான் நம் கவலை.
மேலும்...

குழந்தைமை

Posted: Friday, February 26, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
குழந்தைகளைப்பற்றி Janusz Korczak-ன் இக்கருத்துக்களின் மீது நடந்த உரையாடலும் என் சில கருத்துக்களும்:

மற்ற கட்டுரைகளைப் போல படித்த உடனே இதற்கு எந்த கருத்தையும் மனதை செலுத்தி எழுதிவிட முடியவில்லை. Janusz Korczak-ன் கருத்துக்களை வாசிக்கும் ஒவ்வொருமுறையும் மனம் சிந்தனையில் ஆழ்ந்துவிடுகிறது. என் குழந்தையிடம் நான் எந்த மாதிரி நடந்துகொள்கிறேன் என்பதை மீண்டும் மீண்டும் பரிசீலித்து கொண்டிருக்கிறேன்.

பல விதமான இஸங்களிலும் பின்நவீனத்துவ கூறுகளிலும் சித்தாந்த சிடுக்குகளிலும் பகலிரவு பாராமல் சிந்தையை செலுத்தி மண்டையை உடைத்துக்கொண்ட பொழுதுகளில், எத்தனை நிமிடங்களை என் குழந்தையை புரிந்துகொள்ள ஒதுக்கியிருப்பேன் என்பது முதலில் பெரும் கேள்விக்குறியாக விஸ்வரூபம் எடுத்து என் முன் நிற்கிறது.

அவள் விரும்பி நான் மறுத்த, என்னால் எளிதில் அளித்திருக்க முடியக்கூடிய விஷயங்கள் எல்லாம் நினைவில் வந்து குற்றவுணர்ச்சி கொள்ள வைக்கின்றன. அவள் உலகத்திற்கு அவள் என்னை கையை பிடித்து அழைத்தபோது, அதை தட்டிவிட்டு உதாசீணம் செய்த தருணங்கள் எல்லாம் இப்போது ஞாபகத்தில் வந்து நெருடுகின்றன. அரைகுறையாக பேச ஆரம்பிப்பதற்குள்ளாகவே அறிவுஜீவித்தனத்தை புட்டிப்பாலுடன் சேர்த்து புகட்டிவிட நினைத்த அதிமேதாவித்தனம், சடுதியில் அறிவீனமாக மாறி தெரிகிறது. கற்பித்தலாக நினைத்து அவளுக்கு விதிக்கப்பட்ட வரையறைகள் எல்லாம் அவள் உலகத்தில் எவ்வளவு பெரிய வன்முறைகள் என்பதை உணரமுடிகிறது.

கண்டிப்பு என்பதன் அர்த்தம் கடுமை காட்டலோ காயப்படுத்தலோ அல்ல என்பதை மீண்டும் ஒருமுறை எனக்குள் உறுதி செய்துகொள்கிறேன். அறிவுறுத்தலைக்கூட அரவணைப்புடன் செய்வதென்பது ஒரு கலை; அதை தாமதியாமல் கற்றுக்கொள்ள விழைகிறேன். முக்கியமாக அவளுடைய தனித்துவத்தை(individuality) மதிக்கும் மனநிலையை தக்கவைத்துக்கொள்ள வேண்டும். அது அவளுடைய தன்னம்பிக்கை வளர உதவும். பெரும்பாலும் அடுத்த குழந்தைகளுடன் ஒப்பிட்டே நம் குழந்தையிடம் தன் திறமையின் மீது ஒரு அவநம்பிக்கையை வளர்த்துவிடுகிறோம். அது நிகழாமல் பார்த்துக்கொள்வது எப்போதும் கவனத்தில் இருக்க வேண்டிய காரியம்.

எல்லாவற்றிற்கும் மேலாக எல்லாவற்றையும் எழுத்தில் படித்து கருத்துகளாக உதிர்த்து போவது மிகவும் சுலபம். ஆனால் ஒரு சிலவற்றையாவது வாழ்க்கையிலும் கடைபிடிக்க ஒரு பெரும் அர்ப்பணிப்பு உணர்வு நம் குழந்தையின் மீது — இடம், பொருள், ஏவல் எல்லாம் தாண்டி — வாழ்வின் எல்லாச் சூழலிலும் தேவைப்படுகிறது. அதை முதலில் உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

வாழ்க்கை சமத்காரமாக அமைவதற்கு அதை பல சரிபார்ப்புகளுக்கு உட்படுத்துவது அவசியம். அதற்கான தூண்டுதலை இம்மாதிரி அறிஞர்களின் கருத்துக்கள் விதைக்கின்றன. Janusz Korczak - தன் வாழ்க்கையாலும் வாசகங்களாலும் என்னை பலமாக பாதித்து விட்டார். (அவருடைய வாழ்க்கையை இங்கே அறியலாம்).
மேலும்...

Copybook cricketer!

Posted: Thursday, February 25, 2010 | Posted by no-nononsense | Labels: 1 comments
சச்சின்..

21 வருடங்களாக சர்வதேச போட்டி ஒன்றில் தொடர்ந்து ஒரே உத்வேகத்துடன் விளையாடி வருவது என்பது நினைத்து பார்க்க முடியாத சாதனை. அதிலும் தொடர்ந்து மக்களின் அதீத எதிர்பார்ப்பை நிறைவு செய்யும்படி ஆடியாக வேண்டும் என்பது பெரிய நெருக்கடி. எல்லாவற்றையும் சிறப்பாக செய்து வருகிறார்.

டென்னிஸ் எல்போ பிரச்சினை ஒன்றைத் தவிர மற்றபடி அவருடைய உடல்திறனையும் மெச்சும்படி பராமரித்து வருகிறார். 50 ஓவர்களும் களத்தில் இருந்து 400 ரன்களுக்கும் ஓடி சலிப்பது என்பது எல்லா 37 வயதுகாரர்களுக்கும் எளிதான காரியம் அல்ல.

இவருடன் அறிமுகமாகி இன்றைய புயல்வேக கிரிக்கெட்டுக்கு ஈடுகொடுக்கமுடியாமல் ஆட்டத்தில் இல்லாமலே போய்விட்ட லாரா, இன்சமாம் இந்த இடத்தில் ஏனோ எனக்கு நினைவுக்கு வருகிறார்கள். அவர்களெல்லாம் ஒரு 20-20 கிரிக்கெட் கூட விளையாடவில்லை என்று நினைக்கிறேன்.

சச்சினிடம் எனக்கு பிடித்த விஷயம், இவ்வளவு பெரிய celebrity ஆக இருந்தும் அவரைப்பற்றி இதுவரை எந்த கிசுகிசுவோ சர்ச்சையோ கிடையாது. இந்திய கிரிக்கெட்டின் ஸ்ரீசாந்த், யுவராஜ், ஹர்பஜன் போன்ற குறைகுடங்கள் போடும் துள்ளாட்டத்தை இங்கே ஒப்பிட்டு பார்த்தால் இந்த நிறைகுடத்தின் அருமை புரியும்.

சச்சின் சர்வதேச கிரிக்கெட்டில் நூறாவது சதத்தை நெருங்கி வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐம்பதுகளை நூறாக மாற்றும் கவன குவிப்பை அவர் வளர்த்துக் கொண்டுள்ளதால், இச்சாதனையும் விரைவிலேயே எட்டப்படும் என்று உறுதியாக நம்பலாம்.

கிரிக்கெட் என்பது ஃபாஸ்ட் புட் அளவிற்கு வேகமாக போய்க்கொண்டிருக்கிறது. அதனால் ஒருநாள் கிரிக்கெட்டில் 200 ரன் சாதனை என்பது விரைவிலேயே யாராவதால் முறியடிக்கப்படலாம். ஆனால் கிரிக்கெட் விளையாட்டுக்கு சச்சினின் ஒட்டுமொத்த பங்களிப்பை இந்த நூற்றாண்டில் இன்னொருவரால் விஞ்சி விட முடியாது என்பது வெள்ளிடை மலை.

Copybook cricketer!
மேலும்...

புராதனங்கள் குறித்த புரிதல் நிலை

Posted: Sunday, February 21, 2010 | Posted by no-nononsense | Labels: , 0 comments
இந்த கடித உரையாடல் குறித்த நண்பர்களுடனான உரையாடலில் என் சில கருத்துக்கள்:

பொதுவாக பாமர மக்களிடம் எதுவும் தமக்கு நடந்தால் மட்டுமே அதை பற்றி அலறுகிறார்கள்.மற்றவர்கள் துன்பப்படும்போது யாரும் அதை கண்டுகொள்வதில்லை

பாமர மக்கள் மட்டும்தானா? மெத்த படித்த மேதாவிகள் மத்தியில் மட்டும் நமது புராதனங்கள், சரித்திரங்கள் குறித்தெல்லாம் என்ன பெரிய புரிதல் நிலவுகிறது? தொன்மம் பற்றிய பேச்சு எழுந்தாலே ஏதோ தொழுநோயை கண்டதுபோல் பின்னங்கால் பிடரியில் அடிக்க அல்லவா ஓடுகிறார்கள். வரலாறு என்பது பள்ளியில் பக்கம் பக்கமாய் படிக்க வைத்து கழுத்தறுத்த ஒரு பாடம் என்கிற அளவில்தான் படித்தவர்களின் புரிதல் நிலையே எனும்போது, பாமரர்களை மட்டும் வைவானேன்.

நமது புராதன சின்னங்களின் முக்கியத்துவம் நமக்கு புரிய வேண்டுமானால் நமது பார்வையை கொஞ்சம் நாம் கடந்து வந்துள்ள சரித்திரத்தின் பக்கமும் திருப்ப வேண்டும். வரலாற்றின் ஏடுகளை புரட்டி பார்க்கும் பொறுமை வேண்டும். அவற்றில் கிடைக்கும் அறிதல் ஒருநாளும் இண்டர்நெட்டை இடையறாது மேய்ந்து திரிவதில் கிட்டிடாது. அதன்மூலம் அடையும் தெளிவு, தற்காலத்தின் சர்வரோக நிவாரண சரணாகதிகளாக திகழும் எந்த சத்குரு-ஸ்ரீலஸ்ரீ-பூஜ்யஸ்ரீயின் சொற்பொழிவிலும் கிடைத்திடாது.

முக்கியமாக இன்று பலரின் தலையை பாரமாக அழுத்திக்கொண்டிருக்கும் கடவுள், சமயம், மதம் போன்ற பல உள்நோக்கிய கேள்விகளுக்கான பதில் சரித்திரத்தை அறிந்து கொண்டு, அதனை ஒரு பருந்து பார்வை பார்க்கும் நிலையை ஒருவன் அடையும்போது, அப்போது அவனுக்கு கிடைக்கிறது. என் அனுபவத்திலிருந்து சொல்கிறேன்.

இக்கடிதத்தில் ராஜன் குறிப்பிட்டுள்ள சமணர் மலையில் காணப்படும் பாறைச் சிற்பங்கள் மிகவும் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டியவை. காரணம் - தென்னாட்டில், குறிப்பாக தமிழகத்தின் மேலதிகமான பகுதிகளில் கோலாச்சிய சமண மதத்தை, இன்று சைவம், வைணவம் என்ற பெயரில் நீங்களெல்லாம் தொழுது வணங்கும் வைதீகம், அழித்தொழித்ததின் மிச்சங்கள் இவை. பழம்பெருமை வாய்ந்த இந்து சமய கோவில்களாக இன்று கருதப்படும் பெரும்பாலானவை ஒரு காலத்தில் பௌத்த விகாரைகளாகவும், சமண மடங்களாகவும் இருந்தவை என்பதற்கு சான்று பகர்பவை. இவ்வளவு முக்கியத்துவங்கள் இருந்தும் இது கவனிப்பாரற்று கேட்பாரின்றி சிதிலமடைந்து கிடப்பது பதற வைக்கிறது.

இன்னும் சில இடங்களில் பழங்கால சுவர் ஓவியங்களையெல்லாம் பாதுகாக்க தவறிவிட்டு பிறகு அதை புதுப்பிக்கிறேன் பேர்வழி என்று அதன்மேல் பெயிண்டை அள்ளி பூசி பாழ்படுத்தி வருகின்றனர். தமிழகத்தின் ஒரு ஐந்து நூற்றாண்டு சரித்திரத்தின் சான்றுகளாக கூறப்படுபவை நாயக்கர்களின் சுவர் மற்றும் பாறை ஓவியங்கள். இன்று அவையெல்லாம் பெரும்பாலும் சிதிலமடைந்து விட்டன. அவை மீதெல்லாம் அவற்றை காணச் செல்பவர்கள் தங்களின் சொந்த ஓவியங்களை கிறுக்கி வைத்து விட்டு வந்து கொண்டிருக்கிறார்கள். மதுரை, செஞ்சியில் ஒரு பத்து வருடங்களுக்கு முன்பு தான் பார்த்துவிட்டு வந்திருந்த பல சுவர் ஓவியங்கள் இன்று சுத்தமாக அழிந்துவிட்டதாக முன்பு அறிஞர் ஒருவர் எழுதியிருந்தார். இதெல்லாம் இச்சமூகம் தன்னுடைய புராதனம் குறித்து கிஞ்சித்தும் புரிதலின்றி இருந்துவருவதையே காட்டுகிறது.

இவற்றை பேணுவதற்கென்றும் குறிப்பான துறைகள் கிடையாது. சில மாநில தொல்லியல் துறையின் கீழும், சில மத்திய தொல்லியல் துறையின் கீழும் வருகின்றன. மீதம் கோவில் நிர்வாகங்களின் கீழ் விடப்பட்டுள்ளன. இவையெல்லாம் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும். ஆனால் இவற்றால் எந்த மேஜையடி வருமானமும் கிடையாது என்பதால் எந்த அரசும் கண்டுகொள்வதில்லை.

புராதன சின்னங்களை பொறுத்தவரை இம்மாதிரி ஒரு இழிநிலையை ஐரோப்பிய மேற்கத்திய நாடுகளில் எங்கும் பார்க்கமுடியாது. காரணம் அங்கே பாடத் திட்டங்களில் சரித்திரம் என்பது வெறும் மனப்பாட பாடமாக அல்லாது, பண்பாட்டு சின்னமாகவும் அதைக் கட்டிக்காக்கப்பட வேண்டியது ஒரு கடமையாகவும் கற்பிக்கப்படுகிறது.

இக்கடிதத்திற்கு ஜெயமோகனின் பதில் அட்சர சுத்தமான உண்மை.
மேலும்...

Buzzings - 2 (14.02.2010 to 21.02.2010)

Posted: | Posted by no-nononsense | Labels: 0 comments
  • என் நண்பன் என்னை வாழ்த்தினான். நான் அவனை வாழ்த்தினேன். காதலர் தினம் இனிதே முடிந்தது. சம்சாரியானதிலிருந்து சங்காத்தங்கள் இப்படித்தான் பரிமாணம் கொண்டிருக்கின்றன.

  • காதல் பரிசு: கடந்த மூன்று நாட்களாக காலை பொழுதில் நான் செய்யும் முதல் வேலை பிட்டு பிட்டாக இப்படத்தை பார்ப்பதுதான். நான் என்ன செய்ய? ஆனி புடுங்க நான் போகும் தேனி பஸ்ஸில் மார்னிங் மார்னிங் இதுதான் ஓடிக்கொண்டிருக்கிறது.

    இப்படி வேறு வழியில்லாமல் ஒரே படத்தை திரும்ப திரும்ப பார்க்க நேர்வதிலும் ஒரு நன்மை இருக்கிறது. வழக்கத்திற்கு மாறாக கவனத்தை கதையிலிருந்து மற்ற தொழில் நுட்பங்களின் மீது செலுத்தமுடிகிறது. அப்படி கவனித்து பார்த்ததில் நாடோடிகளின் ஒளிப்பதிவு, காதல் பரிசின் வசனங்கள் சிலாக்கியமாக இருந்தன. எதிர்மறையான கருத்தை ஏற்படுத்தியது ‘தளபதி’ படம். இசை ஒன்றைத் தவிர வேறு எத்துறையிலும் தேறாத அதனை இன்றும் கொண்டாடும் என் நண்பர்கள்தான் அப்படத்தை விட என் ஆகப்பெரும் ஆச்சரியங்கள்!

    காதல் பரிசின் வசனங்கள் என்னை கவர்ந்தன.குறிப்பாக கமலும், அம்பிகாவும் சந்திக்கும் இடங்களில் அனல் பறக்கச் செய்ய பிரயோகிக்கப்படும் வார்த்தைகளின் தெரிவில் நறுக்கு தெரிக்கிறது. யாரென்று தேடிப் பார்த்தேன். டைரக்சன் ஜகன்நாதன் என்று மட்டும் தெரிந்தது. வசனமும் அவராகவே இருக்கலாம். அதுதானே பின்நவீனத்துவ தமிழ் சினிமா தொடங்கி வைத்த புது டிரெண்ட்!

  • சாருவைப்பற்றி சதா கருத்து கேட்டு சதாய்க்கிறான் என் இலக்கிய ஆர்வ இளவல் ஒருவன். நகைமுரணை ரசிக்கலாம்; அதற்காக இலக்கியமென அதையே புசிக்கமுடியாது என்பதை எடுத்துச் சொன்னால் வாசகர்களுக்கு புரியும். ஆனால் ரசிகர்களுக்கு?!

  • எல்லா கணங்களிலும், எல்லா நிகழ்வுகளிலும் நாம் உற்றுப் பார்த்து உள்வாங்கிக்கொள்ள ஏதாவது உட்பொருள் இருக்கத்தான் செய்கிறது என்பதை எனக்கு நிர்தாட்சண்யமாக உணர்த்தச் செய்யும் நிகழ்கால நிரூபணங்களே என் அன்றாட பேருந்து பிரயாணங்கள் என்பதாக உணர்கிறேன்.

  • புறவய கவர்ச்சிக்கும் பாலியல் கிளர்ச்சிக்கும் பெரிதாக சம்மந்தமில்லை என்பதற்கு அத்தாட்சியானதொரு தம்பதியை சந்தித்தேன். அவர்களுக்கு மூன்று குழந்தைகள்!

  • தண்ணிய போட்டா சந்தோசம் பொறக்கும் - வறுமையின் நிறம் சிவப்பு, சிங்காரி சரக்கு - காக்கிசட்டைக்காரன், ஜாதியில்ல பேதமில்ல தண்ணி போட்டுட்டா - காதல் பரிசு, சொர்க்கம் மதுவிலே - சட்டம் என் கையில், etcetera. எண்ணிப் பார்த்தால் தன் படங்களில் குடியை அதிகம் கொண்டாடிய நடிகராக கமல்தான் கண்ணில் தெரிகிறார்.

  • தன் சுருளான - அதனால் அழகான - தலைமுடியை அழகு நிலையம் சென்று அலங்கோலம் செய்துவந்து நிற்கும் தோழியை தோப்புகரணம் போட வைத்த பிறகும் ஆறவில்லை மனது. எதனால் தோழியானோம் என்பதையே சமயத்தில் மறந்து விடுகிறார்கள், என் செய்ய!

  • தனிப்பட்ட விருப்பம்; தனிமனித சுதந்திரம் பற்றியெல்லாம் பேசுவதற்கு முன் அஜித் முதலில் தன்னுடைய ரசிகர் மன்றத்தை கலைத்து விட்டு, தன்னை அனைத்து சங்கங்களிலும் இருந்து விலக்கிக் கொண்டு அதனை சொல்லவேண்டும். தன்னை ஆதர்சமாக கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான இளைஞர்களை தன் பின்னால் அணி வகுக்கச் செய்திருக்கும் ஒருவருக்கு, உணர்வுபூர்வமான பொது விஷயங்களில் தன்னிஷ்டம் பற்றி பேசும் தகுதி கிடையாது. அதேபோல் சங்கத்தின் உறுப்பினராக இருக்கும்வரை அதன் முடிவுகளுக்கு எதிராக நடக்கவும் உரிமை இல்லை. எதிர்த்து பேசி விட்டதாலேயே கொண்டாடப்படுகிறார். என் மதிப்பிலிருந்து சறுக்கிவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும்.

  • கலைஞரை மனநோயாளி என்று விளித்திருக்கும் ஞாநியின்(இவரை எப்படி இன்னும் எழுத விட்டு வைத்திருக்கிறார்கள்?!) கட்டுரை வெளியாகியிருக்கும் அதே குமுதத்தில்தான் கலைஞரின் பேட்டியும் வெளியாகியிருக்கிறது. குமுதத்தின் சாமார்த்தியம் வியக்க வைக்கிறது!

  • ”என்னது, இந்திராகாந்தி இறந்துவிட்டாரா!” என்பதுபோல இருக்கிறது குமுதத்தில் பாலகுமாரனைப்பற்றி எழுதப்பட்டிருக்கும் கிசுகிசு.

  • சேவியரின் “இயேசு என்றொரு மனிதர் இருந்தார்” வாசித்துக்கொண்டிருக்கிறேன். ஏசு, மீட்பரானதின் பின்னால் உளவியல் காரணங்கள் உள்ளதாக தோன்றுகிறது.
மேலும்...

முத்திரை சுமக்கும் முதுகுகள்

Posted: | Posted by no-nononsense | Labels: 0 comments
ஒரு விழிப்புணர்விற்காக எதை பேசினாலும் அது சம்பந்தமான இயக்க முத்திரையை நம்மீது குத்தி விடுகிறார்கள்

முத்திரைக்கெல்லாம் பயந்தால் உன் வாழ்க்கையை உன்னால் வாழ்ந்திடவே முடியாது. அடுத்தவர் வாழ்க்கையை நீ வாழும் அவலம்தான் நேரிடும் . “வாழ்ந்தாலும் ஏசும்; தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா’ எனும் பழைய அற்புதமான பாடலை இங்கே ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

ஆனால் அதெல்லாம் உன்னளவில் நீ உன்னை தெளிவாக வைத்துக்கொள்வதில் மட்டுமே இருக்கவேண்டும். அதாவது சுயத்தை சுத்திகரிப்பு செய்துகொள்வதில் மட்டும். மற்றபடி, குடும்ப வாழ்க்கையில் நம்பிக்கை இருக்கும்வரை, லௌகீகத்தில் ஈடுபாடுகொண்டிருக்கும்வரை அரசுக்கெதிராகவோ, ஆளும் கட்சிக்கெதிராகவோ இயக்கம், போராட்டம் என்ற பெயரில் நீ தயவு செய்து எதையும் என்றும் முயன்றிட வேண்டாம்.

உணர்ச்சி மேலிட வைக்கும், உணர்வை தூண்டும் சம்பவங்கள் எல்லா காலங்களிலும் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. நடந்து கொண்டேதான் இருக்கும். இல்வாழ்க்கையில் இருந்துகொண்டு நம்மால் முடியக்கூடியது நல்லனவற்றுக்கு நம்முடைய தார்மீக ஆதரவை நல்குவது மட்டுமே.

- கருத்து சுதந்திரம் குறித்த உரையாடலின் ஒரு பகுதி
மேலும்...

வீட்டுத்தோட்டம் - சிறு நினைவு குறிப்பு

Posted: Wednesday, February 17, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
Excerpts from the discussion on BT.Brinjal and Home gardeining:

பி.டி. கத்தரிக்காயில் மட்டுமா ஆபத்து? தற்கால பூச்சிக்கொல்லி விவசாய முறையே விஷத்தைத்தானே விளைவித்துக் கொண்டு இருக்கிறது. முட்டைகோஸையும், காலிபிளவரையும் அதன் விளை நிலத்தில் சென்று பார்த்தவர்கள் ஏழேழு ஜென்மத்திற்கும் உணவில் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். அந்தளவுக்கு, காய் ஃபிரெஸ்ஸாக இருக்கவேண்டும் என்று ரசாயனத்தில் முக்கி எடுப்பார்கள். கத்தரிக்காயும் அப்படித்தான்.

*

திருச்சியில் நான் பணிபுரிந்தபோது என்னுடைய வாடிக்கையாளர் ஒருவரது வீட்டிற்கு அவரது அழைப்பின் பேரில் சென்றிருந்தேன். அங்கே அவரது வீட்டு பின்கட்டில் அவர்கள் பராமரித்து வந்த வீட்டு தோட்டம் கண்ணில் பட்டது. அருகில் சென்று பார்த்தவன் அசந்தே விட்டேன். ஒரு வீட்டு சமையலுக்கு தேவையான காய்கறி இனங்களில் பெரும்பாலானவை அங்கே சிறிய அளவில் பயிராகிக்கொண்டு இருந்தன.

அவரை, வெண்டை, கத்தரி, தக்காளி, சுரை போன்ற காய்கறிகளுடன் புதினா, தண்டு கீரை போன்ற கீரை வகைகளும் அவற்றில் அடக்கம். வெங்காயமும், கறிவேப்பிலையும் கூட இருந்ததாக ஞாபகம். முழுமையாக கவனித்து உள்வாங்கிக்கொள்ள அன்று நேரம் அனுமதிக்கவில்லை.

இதெல்லாம் தன்னுடைய ஓய்வுபெற்ற தந்தையின் வேலை என்றும், தாங்கள் அரிதாகவே கடைகளில் காய்கள் வாங்குவதாகவும் சொன்னார். அழகாக இடம் விட்டு, பாத்தி கட்டி பராமரிப்பில் இருந்த அவற்றைப் பார்க்கவே ஆசையாக இருந்தது.

ஆனால் இதற்கெல்லாம் வீட்டில் கொஞ்சமேனும் காலியிடமும், களப்பணியில் சிறிதேனும் ஆர்வமும், வளையும் முதுகும் வேண்டும்.
மேலும்...

Buzzings - 1 (10.02.2010 to 13.02.2010)

Posted: Saturday, February 13, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
  • ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் வாசலில் அரை மணி நேரம் காத்திருக்க நேர்ந்தது. பொழுது போகாமல் அங்கேயிருந்த ’அம்மா’வின் திருவாய்மொழி சுவர் எழுத்துக்களை படித்துக்கொண்டு இருந்தேன். இவரை விட ஒரு சிந்தனை மலடான ஆன்மிகவாதி யாரையும் படித்ததாக நினைவில்லை. இவர் பெண்களை கவர்ந்ததிலும் ஆச்சரியமில்லை!

  • 'ப்ரமரம்’ பார்த்துமுடித்தேன். தமிழ் திரைச்சூழல் குறித்து ஏற்கெனவே ஆட்டம் கண்டிருந்த என் குறைந்தபட்ச மிகை மதிப்பீட்டில் இன்னுமொரு செங்கல் உதிர்ந்தது.

  • Plurk-என்ற இன்னொரு SNS-ஐ சோதித்திக்கொண்டு இருக்கிறேன். எத்தனைதான் புதிதாய் வந்தாலும் அத்தனைக்கும் உடனே பயனர் உருவாகிறார்கள். இனிவரும் நாட்களில் இகபர லோகம் யாவும் இணையத்தினுள் ஐக்கியம் என்பது அட்சர ஸ்பஷ்டம்!

  • அவதார் படத்தை 3D-ல் தான் பார்க்க வேண்டும் என்ற பிடிவாதத்தால் பார்க்க தவறிவிட்டேன். மிஸ் பண்ணி விட்டேனோ என்று தோன்றுகிறது. சிற்றூரில் வாழ நேர்வதன் மற்றுமொரு குறைபாடு.

  • அடம் பிடித்து அழுத குழந்தை வடிவேலை கண்டதும் இடம் பிடித்து அருகில் அமர்ந்து கொண்டது. இதற்கு முன் டோரா, பும்பா விஷயங்களில் மட்டுமே இது சாத்தியம்.

  • ’திருதினஸ் பிருக் ஸ்மிருதி’யின் படி கொண்டாடப்படும் இன்றைய சிவராத்திரியை ’ஆகம சவுரமான விதி’ தடுக்கிறதாமே? ஈஸ்வரோ ரக்ஷிது!

  • பாதி இரவை இணையத்தில் கடத்தி விட்டு பாதி பகல் வரை தூங்கிவிட்டேன். எப்படியோ, மஹாசிவராத்திரி கொண்டாட்டம் என்னளவில் ஜோராக தொடங்கிவிட்டது

  • Dec 21st, 2012- அன்று உலகம் அழிந்து விடுமாம். அதற்கு ஆறு நாட்கள் முன்புதான் எனக்கு "Many Many Happy Returns Of The Day" சொல்லியிருப்பார்கள் என்பது எத்தகு நகைமுரண்! ;-)

  • சில காலமாக சாரு நித்தியானந்தா ஜபம் செய்வது ஏன் என்பது ஜெமோ ஜக்கியை விதந்தோதியதை படித்த பிறகுதான் விளங்குகிறது.

  • ஜக்கி வாசுதேவ் - வெள்ளியங்கிரி, நித்தியானந்தா - பிடதி, ரவிசங்கர் - கொல்கத்தா. ஆளுக்கொரு லிங்கம்; நாள் முழுவதும் கொண்டாட்டம். கலக்குகிறார்கள் கார்ப்போரேட் சாமியார்கள்.

  • கூகிளில் ’ஓரின சேர்க்கை கதைகள்’ என்று தேடி தினமும் நான்கு பேராவது என் பதிவை எட்டிப்பார்க்கிறார்கள். கோவாப் படத்துக்கு விமர்சனம் எழுதியதன்றி யாமொன்றும் அறியேன் பராபரமே!

  • பஸ் பிடிக்கும் அவசரத்தில் பணம் எடுக்க ஓடினால், எட்டு கார்டுகள் வைத்துக்கொண்டு அதில் உருப்படியாக எடுக்கவும் தெரியாமல், வெளியே நிற்பவர்களைப் பற்றிய எவ்வித பிரக்ஞையும் இல்லாமல், ஏ.டி.எம்முடன் ஏகாந்தமாக மல்லுக்கட்டிக்கொண்டு இருப்பவர்களை எத்தால் அடிக்கலாம்?

  • மீண்டும் ஒருமுறை ‘திரக்கதா’ பார்த்தேன். அலட்டல் இல்லாத இம்மாதிரி திரைக்கதைகளை தமிழ் எப்போது தழுவும்? பெருமூச்சுதான் வருகிறது!

  • பதிலளிக்காமல் எஞ்சி கிடந்த கடிதங்களுக்கெல்லாம் பதிலிட்டு அஞ்சல் பெட்டியை சுத்தம் செய்தபின் செய்யும் நெட்டிமுறிப்பு தரும் சுகமே தனிதான் ;-)

மேலும்...

திரைநாயகிகள்; திரக்கதா - சில எண்ணங்கள்

Posted: Wednesday, February 10, 2010 | Posted by no-nononsense | Labels: , 0 comments
In reply to the discussion on actresses married life:

அதிகம் சம்பாதிக்கும் முன்னணி நடிகைகளைப் பற்றி பிரச்சினையில்லை. ஒன்றில்லா விட்டால் இன்னொன்று என்று பொருந்திப்போகும் வரை உறவை புதுப்பித்துக் கொண்டே இருக்கலாம். உதாரணமாக ராதிகா, லட்சுமியை சொல்லலாம். ஆனால் கனகா போன்ற மார்க்கெட் நிலையில்லாத நடுவாந்தர நடிகைகளின் நிலைதான் சினிமா, தனிப்பட்ட வாழ்க்கை இரண்டிலுமே நிர்கதியானது.

அவர்கள் எப்போதும் தங்களைச் சுற்றி ஒரு பாதுகாப்பற்றத்தன்மையை உணர்வார்கள். பெரிய நடிகைகளைப் போல பரிசோதனை முயற்சிகளில் எல்லாம் அவர்களால் இறங்கமுடியாது. ஒரே வாழ்க்கை; அதுவும் தங்களின் மேல்தட்டு வர்க்க செலவுகளுக்கு ஈடுகொடுக்கக் கூடிய ஒன்றாக இருக்கவேண்டும். இந்த criteria-க்கு பொருந்தும் வரன்களையோ ஆண்களையோ ஏற்றுக்கொண்டு செட்டில் ஆகிவிடுகின்றனர் (தேவயானி போன்ற ஓரிருவர் விதிவிலக்கு).

இவர்களும் கிட்டத்தட்ட மற்ற மிடில் கிளாஸ் பெண்களைப் போலத்தான். எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப அமைந்தால் அமையும். மாறாக வந்தவன் இருப்பதையும் பிடுக்கப் பார்த்தால் மணமுறிவில் முள் வந்து நிற்கும். இதற்கு உதாரணம் எண்ணிலடங்காதவை. ஒன்றே ஒன்றை மட்டும் சொல்வது இந்த இடத்தில் பொருத்தமாக இருக்கும். அது ஸ்ரீவித்யாவின் காதல்; கல்யாணம் மற்றும் விவாகரத்து.

எனக்கு கனகா பற்றிய செய்திகளைப் படித்ததும் ஒரு வருடம் முன்பு மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘திரக்கதா’ படம்தான் உடனே நினைவுக்கு வந்தது. ஸ்ரீவித்யா - கமல் கதை என்றும் அதனைச் சொல்வார்கள். திரை வாழக்கையின் மென்மையான ஒரு பக்கத்தை மேல்பூச்சுகளற்று சொல்லிச் செல்லும் திரைச்சித்திரம் அது.

திரைவானின் உச்சத்தில் மின்னிக் கொண்டிருக்கும் நட்சத்திர நடிகை மாளவிகா. அவர் திடீரென்று பொதுவெளியில் இருந்து ஒருநாள் முகவரியற்று போகிறார். அவரைப்பற்றி எந்த தகவலும் யாருக்கும் தெரியவில்லை. இந்த மர்மத்தின் முடிச்சிகளை அவிழ்த்து, அந்த உண்மை கதையைக் கொண்டு தனது அடுத்தப் படத்திற்கு திரைக்கதை அமைக்கும் நோக்கில் அவரைத் தேடியலைகிறான் இளம் இயக்குநன் அக்பர்.

மாளவிகாவின் ஆரம்பகால வாழ்க்கை, தன்னுடைய சக நடிகர் அஜய்சந்திரனுடன் அவருக்கு மலர்ந்த காதல்;கல்யாணம், பிறகு அவர்களுக்குள் ஏற்பட்ட மணமுறிவு எல்லாவற்றையும் அந்த நட்சத்திர தம்பதிகளுக்கு நெருக்கமான டைரக்டர் ஒருவர் தன் மனைவிக்கு எழுதிய பழைய கடிதங்களின் மூலம் அறிகிறான் அக்பர். பலவாறு கஷ்டப்பட்டு, காணாமல் போன மாளவிகா தமிழ்நாட்டின் ஒரு சிற்றூரில் இருப்பதாக கண்டறிந்து, அவளை சந்திக்கப்போனால், அவளோ புற்று நோயால் பாதிக்கப்பட்டு, உடல் நலிவுற்று, மெலிந்து, தலைமுடியெல்லாம் கொட்டி அழகுபோய், அதனாலேயே வெளியுலகிலிருந்து தன்னை துண்டித்து கொண்டு, நாட்களை எண்ணிக்கொண்டு மருத்துவமனை ஒன்றின் தனியறையில் ஒரு நடைபிணமாக காட்சியளிக்கிறாள்.

மாளவிகாவின் கடைசி ஆசை தன்னுடைய முன்னாள் கணவரும் இந்நாள் சூப்பர் ஸ்டாருமான அஜய்சந்திரனை ஒருமுறை பார்த்துவிட வேண்டும் என்பது. அதை நிறைவேற்றும் விதமாக அவரைச் சென்று சந்தித்து மன்றாடி அழைத்து வருகிறான் அக்பர். அப்போதுதான் அஜய்சந்திரன் மூலம் அவர்கள் பிரிந்ததன் பின்னுள்ள காரணத்தையும், அதை மாளவிகா எந்தளவு தவறாக புரிந்து கொண்டிருக்கிறாள் என்பதையும் அறிகிறான்.

அதுவரை தவறாக புரிந்து கொண்டிருந்தது மாளவிகா மட்டுமல்ல; கதையின் போக்கில் பயணம் செய்யும் நாமும்தான். மாளவிகாவும் அஜய்சந்திரனும் சந்திப்பதும், மாளவிகாவின் வாழ்வில் இன்னும் எஞ்சியிருக்கும் ஒரு சில நாட்களையும் இருவரும் அவர்களின் ஆரம்ப கால காதல்களனான மலைவாசஸ்தல பங்களாவில் கழிப்பதுமான காட்சிகள் உணர்ச்சிகரமானவை.

இதில் மாளவிகாவாக ப்ரியாமணியும், அஜய்சந்திரனாக அனூப் மேனனும், அக்பராக பிரிதிவிராஜூம் நடித்திருந்தார்கள். 2008-ஆம் ஆண்டுக்கான தேசிய விருதையும் இப்படம் தட்டிச்சென்றது. சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்த ப்ரியாமணிக்கு இரண்டாம் முறையாக தேசிய விருது கிடைத்திருக்க வேண்டியது. ஆனால் அவர் சொந்தக்குரலில் பேசாததால் அந்த வாய்ப்பு பறிபோனது. (ராணி முகர்ஜியின் குரலுடன் ஒப்பிடும்போது இவருடையது தேவலாம்)

இது எப்படி ஸ்ரீவித்யா - கமல் கதை ஆகும் என்றால், கமலின் ஆரம்பகால காதல் கதைகளின் அத்தியாயங்களில் ஒன்றுதான் ஸ்ரீவித்யா என்று ஒரு கிசுகிசு உண்டு. அதற்கு வலு சேர்க்கும் விதமாக புற்று நோயால் பாதிக்கப்பட்டு தன்னுடைய இறுதி நாட்களை திருவனந்தபுரத்திலுள்ள மருத்துவமனையில் ஸ்ரீவித்யா கழித்துக்கொண்டு இருந்தபோது, அவர் தன்னை சந்திக்க அனுமதித்த ஒரே நபர் கமல் மட்டுமே. இது அப்போதே செய்திகளில் தனி கவனம் பெற்றிருந்தது. அந்த சந்திப்பு முடிந்த சில நாட்களிலேயே ஸ்ரீவித்யா இறந்துவிட்டார்.

நடிகைகள் ஆகட்டும் அல்லது நம் வீட்டு பெண்கள்தான் ஆகட்டும்; ரிலேசன்ஷிப் என்பது இரு மனங்களைப் பொருத்தது. அதில் ஆளுமை அதிகம் மிக்கதும், அதே சமயம் அதிகம் பாதிப்புக்குள்ளாவதும், இரண்டுமே பெண்கள்தான்.
மேலும்...

இரண்டு கற்களும் சில சொற்களும்

Posted: Monday, February 8, 2010 | Posted by no-nononsense | Labels: , 1 comments
நேற்று அதிகாலை 4 மணி இருக்கும். அடிவயிற்றுக்கும் கீழே உயிர்நிலையில் ஊசி துளைப்பது போல் ஒரு வலி. சிறியதாக ஆரம்பித்து சிறிது நேரத்தில் அடிவயிறு முழுவதும் வலி பரவியது. வலி என்றால் அப்படியொரு கடுமையான வலி. என்னவென்று எனக்கே புரிந்தது - சிறுநீரக கல். ஐந்து மாதங்களுக்கு முன்பும் இதேபோன்ற வலியால் அவதியுற்று மருத்துவரை நாடியிருந்தேன்.

நம் ஊரில் எல்லா நோய்களுக்கும் எல்லா மருத்துவர்களும் வைத்தியம் பார்க்க தயாராக இருக்கிறார்கள். MBBS படித்தவரே ENT பிரச்சினைக்கும் பிரிஸ்கிரிப்ஸன் தருவார். ENT டாக்டரிடமே பல் வலிக்கும், வயிற்று வலிக்கும்(வேறென்ன ஜெலூஸில்தான்) மாத்திரை வாங்கிக்கொள்ளலாம். கேஸ் வேறு எங்கும் போய்விடக்கூடாது. அவர்களுக்கு வேண்டியதெல்லாம் அவ்வளவுதான். இதற்கு நீங்கள் இன்ன ஸ்பெஷலிஸ்டைத்தான் அணுக வேண்டும் என்று சுலபத்தில் நம்மிடம் சொல்லிவிட மாட்டார்கள். இரண்டு மூன்று முறையாவது பீஸை கறந்துகொண்டு மெல்லதான் முத்தை உதிர்ப்பார்கள். அதுவரை அந்நோய் வளராமல் இருப்பது அவரவர் பூர்வஜென்ம புண்ணியத்தை பொருத்தது.

விவரம் புரியாமல் நானும் அப்படிப்பட்ட ஒரு பொது மருத்துவரை அணுகினேன். அவர் இல்லாததால் அவரின் மகன் - இவர் ஒரு குடல்புண் மருத்துவர் - கேஸை எடுத்துக்கொண்டார். விரிவாக ஸ்கேன் பார்த்து கிட்னி ஸ்டோன் என்று அறிவித்தார். அதற்குள் நான்கு மணி நேரம் ஆகியிருந்ததால் வலியின் தீவிரம் தானே கொஞ்சம் குறைந்திருந்தது. இரண்டு பெயின் கில்லர் ஊசிகளும், சில வலி நிவாரணி மாத்திரைகளும் கொடுத்தார் (எப்படி தெரியும் என்றால் எதற்கு இருக்கிறது இண்டர்நெட்?). அன்றைய பிரச்சினை நிவர்த்தியானது. பிறகு வலையில் மேய்ந்து இதற்கு எந்த மாதிரி வைத்தியம் செய்ய வேண்டும் என்பதையெல்லாம் அலசி ஆராய்ந்து ஒரு யூராலஜி டாக்டரைப் பிடித்தேன். உள்ளே நுழைந்தவனிடம் மூன்று ரெடிமேட் கேள்விகள் மட்டும் கேட்டார். படுக்க வைத்து சம்பிரதாயத்துக்கு சில உடல் பரிசோதனைகள்; பிறகு விறு விறுவென்று பிரிஸ்கிரிப்ஸன் எழுதி நீட்டினார். எல்லாம் அதிகபட்சம் ஐந்து நிமிடங்களில் முடிந்தது. வெளியில் வரும்போது அவர் கையில் திணித்த அட்டையில் இவர் பேச வேண்டிய விவரங்களெல்லாம் தயாராக அச்சில் இருந்தது. அதில் சாப்பிடக் கூடாது என்றிருந்த உணவு பொருள் லிஸ்டை அப்படியே கடைபிடித்தால் ஆறே மாதங்களில் ஆள் பாதி ஆகிவிடுவேன் என்று தோன்றியது.

அவர் எழுதிக்கொடுத்த மருந்து மாத்திரைகளை ஒழுங்காக சாப்பிட்டு வந்தேன். ஒரு வாரம் வரைப் பார்த்தேன். அன்று வாட்டிய உபத்திரம் மீண்டும் வரவில்லை. அதுவரை அலுங்காமல் குலுங்காமல் நடந்து கொண்டிருந்தவன் ஆடி ஓட ஆரம்பித்தேன் - கைவசம் வலி நிவாரணி இருக்கும் தெம்பில். அப்படியும் ஒன்றும் ஆகவில்லை. பிறகு வலி வந்ததையும் மருத்துவம் பார்த்ததையும் அப்படியே மறந்துவிட்டேன். சில நாட்கள் முன்பு அதைப்பற்றி கேட்ட தோழி ஒருவரிடம் கூட அதெல்லாம் தானாக சரியாகி விட்டது என்று ஏகாந்தமாய் சொன்னேன்.

அதுதான் ஐந்து மாதம் கழித்து இப்போது மீண்டும் தலை காட்டுகிறது.

வலி நிவாரணி என்று முன்பு அந்த யூராலஜி டாக்டர் கொடுத்த மாத்திரையை சாப்பிட்டுவிட்டு நின்றேன்;படுத்தேன்;புரண்டேன்; நடந்தேன். எதற்கும் வலி அசைந்து கொடுக்கவில்லை. இரண்டு கால்களையும் விரித்து வைத்து பலம் கொண்ட மட்டும் ஓங்கி உதைத்தால் எப்படி வலிக்குமோ அப்படி இருந்தது. விடியற்காலை ஐந்து மணி ஆகியிருந்தது. இந்நேரத்தில் எந்த டாக்டரிடம் ஓடுவது என்பது வலியை விட பெரும் துன்பமாக இருந்தது. காரணம் நாமக்கல்லின் ஆகப்பெரும் குறை ஆத்திர அவசரத்திற்கு என்று சென்று அட்மிட் ஆக ஒரு நல்ல மருத்துவமனை கிடையாது. மருத்துவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் டிஸ்பென்ஸரிகளும் இருக்கின்றன. ஆனால் உயிர் போகும் அவசரம் என்றாலும் அர்த்த ராத்திரியில் கதவு திறக்காது. திறந்தாலும் இரவு நேரத்துக்கு என்று டியூட்டி டாக்டர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அங்கேயிருக்கும் நர்ஸ்களே ஏதாவது மேல்பூச்சு வேலை செய்ய முனைவார்கள். இத்தனைக்கும் அவர்களின் வீடு, கிளினிக் எல்லாம் ஒரே கட்டிடமாகத்தான் இருக்கும்.

எனக்கும் அதேதான் நடந்தது. முன்பு பார்த்த அதே குடல்புண் மருத்துவரிடமே ஓடினேன். சென்ற முறை அவர் போட்ட பெயின் கில்லர் ஊசியில் வலி சட்டென்று நின்றிருந்தது. இந்த க்ஷணத்திற்கு எனக்கு தேவையெல்லாம் அதுதான். வலி முதலில் நிற்க வேண்டும். மற்றதைப்பற்றியெல்லாம் பிறகு சிந்தித்துக்கொள்ளலாம். ஆனால் தட்டிப் பார்த்தும் முட்டிப் பார்த்தும் குடல் மருத்துவரின் கதவு திறக்கவில்லை. காம்பவுண்ட் கேட்டருகே காலிங்பெல் கூட இல்லை. அவரின் செல்போன், லேண்ட்லன் எல்லாம் அன்அவைலபிள். அதே ரோட்டில் இருக்கும் இன்னொரு பிரபல மருத்துவரின் ஆஸ்பத்திரிக்கு ஓடினேன். பத்து நிமிடம் கதவைத் தட்டிய பின் சாவகாசமாக தலையை வெளியே நீட்டிப்பார்த்த நர்ஸ், டாக்டர் 11 மணிக்குத்தான் வருவார். வேண்டுமானால் டிரிப்ஸ் போடுகிறேன் என்றார். இத்தனைக்கும் அவர் இருந்தது ICU வார்டில். அம்மருத்துவரின் வீடும் அங்கே மேல் மாடியில்தான். இதற்கு எதற்கு சலைன்; அட்மிட் பண்ணி பில் தீட்டவா.. எனக்கு வேண்டியதெல்லாம் பெயின் கில்லர் ஊசி மட்டும்தான் என்று அங்கேயும் கவைக்குதவாமல், வேண்டாம் என்று தவிர்த்து வந்த என் உறவினரின் மருத்துவமனைக்கே சென்றேன். மணி 6 ஆகியிருந்தது.

அம்மருத்துவமனையில் எனக்கு உடனடியாக இன்ஜக்‌ஷன் போடப்பட்டது. வலி நிற்கவில்லை. நர்ஸை கடிந்துகொள்ள ஆரம்பித்தேன். இரண்டாவதாக ஒரு ஊசியும் போட்டார்கள். இதற்கு பலன் இருந்தது. அரை மணி நேரத்தில் வலி குறைய ஆரம்பித்தது. 1 மணி நேர ஓய்விற்கு பின் வீடு வந்து சேர்ந்தேன். அதற்கு பிறகு இப்போது வரை வலியில்லை. ஆனால் வந்துவிடுமோ என்று உள்ளூர ஒரு அச்சம் இருந்து கொண்டே இருக்கிறது. சிறுநீரக கல் வலி, பிரசவ வலிக்கு இணையாக இருக்கும் என்பார்கள்.

இதையெல்லாம் இங்கே எழுத வேண்டுமா என்றுதான் முதலில் யோசித்தேன். எனினும் அனுபவங்களை பகிர்ந்துகொள்வது எப்போதாவது யாருக்காவது பயன்படலாம் என்பதால் எழுத்தில் பதிவு செய்கிறேன்.

இன்றைய நாமக்கல்லில் மருத்துவத்தின் நிலை என்ன?

1. மருத்துவ வசதிகளை பொருத்தவரை நாமக்கல் மிக ஆபத்தான ஊராக இருக்கிறது. ஒரு சளி, காய்ச்சலுக்கு வைத்தியம் செய்ய வேண்டும் என்றாலே எந்த டாக்டரிடம் போவது என்று யோசனையாக இருக்கிறது. பழம் தின்று கொட்டைப் போட்ட பழம் பெரிசு டாக்டர்கள் எல்லாம் வாரிசுகளிடம் வைத்தியத்தை ஒப்படைத்து விட்டு ஏற்கெனவே ஓய்வுபெற்றுக்கொண்டு விட்டார்கள். தொடர்ந்து கேஸ் பார்க்கும் ஒரு சிலரும் நவீன மருத்துவங்களைப் பற்றிய அறிதல் இல்லாமல் இருபது வருடங்கள் பின் தங்கியே இருக்கிறார்கள். போதாதகுறைக்கு இவர்கள் மாதிரி மருத்துவ சேவையில் ஆயாசம் கண்டுவிட்ட, முதலீடு செய்திருக்கும் வெவ்வேறு தொழில்களில் கவனம் சென்று விட்ட நபர்களை கெடுக்க என்றே இருக்கவே இருக்கிறார்கள், மெடிக்கல் ரெப்புகள்! மூட்டு வலி என்று போனால் அதனுடன் சேர்ந்து முதுகு வலிக்கும் நாலு மாத்திரை எழுதுவது எதிரில் இருக்கும் ஆளைப் பொருத்து சர்வ சாதாரணமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. எந்த நோயானால் என்ன; ரெப் விற்கும் மாத்திரைகளில் எவ்வளவு சேல்ஸோ அவ்வளவுக்கு வருமானம். இதனை நான் வாய்ப்பேச்சாக இல்லை - ருசுப்படுத்திக்கொண்டுதான் சொல்கிறேன். மேலும், புதிதாக திறக்கப்பட்ட மருத்துவமனைகளில் பெரும்பாலானவை பிரசவ ஆஸ்பத்திரிகள். நல்ல ஒரு பொது மருத்துவர் என்று எனக்கு வைத்தியம் செய்துகொள்ளவே இன்று வரை தேடிவருகிறேன். வேறு வழியில்லாமல் சமீபமாக நம்ம குடலிடமே சரணடைகிறேன். அவர் தன் எண்டாஸ்கோபி பயாஸ்கோப்புகளையெல்லாம் முடித்து விட்டு நம்மிடம் வருவதற்குள் நோவால் தாவு தீருகிறது.

2. வலி கடுமையாக இருந்தாலும் சிறுநீரக கல் என்பது உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நோய் எல்லாம் இல்லை. அதனால் எங்கேயாவது அடித்து பிடித்து அந்த நேரத்திற்கு ஒரு ஊசியை போட்டு வலியை போக்கிக்கொள்ள முடிந்தது. இதுவே ஒருவேளை ஹார்ட் அட்டாக் மாதிரி உடனடி சிகிச்சை தேவைப்படும் நோய் தாக்குதலாக இருந்து, ஆத்திர அவசரத்துக்கு டாக்டர் கிடைக்காமல் நேற்று போல காம்பவுண்ட் கேட்டுக்கும், ICU அறை கதவுக்கும் வெளியே நின்று கொண்டு பரிதவிக்கும் நிலை ஏற்பட்டிருந்தால் என் கதி என்னாவது?

இந்த இடத்தில் சேலம் லோட்டஸ் மற்றும் இதர பெரிய மருத்துவமனைகளை ஒப்பிட்டுப் பார்த்தால் நான் சொல்வதன் பின்னுள்ள விஷயம் விளங்கும். அங்கெல்லாம் டியூட்டி டாக்டர்கள் இருப்பார்கள். காசு, பணம் போனாலும் அந்த நேரத்துக்கு தேவையான சிகிச்சை தேவையான பொழுதில் தாமதமில்லாமல் கிடைக்கும். அவற்றை அளிக்க தேவையான உபகரணமும் இயங்கு நிலையில் இருக்கும். நாமக்கல்லில் அப்படி ஒரு மருத்துவமனையைக் காட்ட முடியுமா? ஏதாவது வாகனத்தை ஏற்பாடு செய்து கொண்டு சேலத்திற்கோ, ஈரோட்டிற்கோதான் ஓட வேண்டும்.

நாமக்கல்லில் வாழ்வதில் இப்படியும் ஒரு ஆபத்து இருக்கிறது.

30 - 40 வயதுள்ள ஆண்களில் யாருக்கும் இது வரலாம் என்பதால் உஷார்! தண்ணீர் நிறைய குடியுங்கள். (தண்ணீர் அதிகம் குடித்தால் அதற்கும் ஏதாவது நோய் வரக்கூடுமோ? காயமே இது பொய்யடா. வெறும் காற்றடைத்த பையடா!)

அப்புறம்.., என்னது GH-ஆ? மன்னிக்கவும். தமாஷ்களுக்கு சிரிக்கும் நிலையில் இன்று நான் இல்லை.

- வீ. புஷ்பராஜ்


பின்குறிப்பு 1: ஒரு சாமானியனின் அனுபவ நோக்கில் இருந்து எழுதியிருக்கிறேன். இங்கேயும் மருத்துவர்கள் இருக்கிறார்கள். அவர்களை புண்படுத்தும் எண்ணமில்லை.

பின்குறிப்பு 2: பெரிய மருத்துவமனைகளின் தேவையை வலியுறுத்தி எழுதியிருக்கிறேன். அவற்றின் பின்னாலும் பெரிய பெரிய (ரமணா) கதைகள் இருக்கலாம். யாமறியேன். யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்!
மேலும்...

காந்திய அரசியல் இயக்கம் - சில சிந்தனைகள்

Posted: Sunday, February 7, 2010 | Posted by no-nononsense | Labels: , 0 comments
இரண்டு நாட்களுக்கு ஒருமுறையாவது நான்கு மடல்களுக்கு ஒரு தடவையாவது நாம் அரசியலில் அறம் குறித்தும் அரசியல்வாதிகளின் கை சுத்தம் குறித்தும் பேசி வருகிறோம். பதவிக்காகவும் ஓட்டுக்காகவும் சந்தர்ப்பவாத அரசியல் செய்யாத நேர்மையான ஒருவரையாவது இன்றைய அரசியலில் காணமுடிகிறதா என்பதே நமக்கெல்லாம் இருக்கும் ஆதங்கம். அத்தி பூத்தார் போல அப்படி ஒரு சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களில் ஒருவர் தமிழருவி மணியன்.

ஈழப் பிரச்சினையில் எதிர் குரல் கொடுப்பதன் மூலம் தங்கள் சோனியா விசுவாசத்தைக் காட்டிக்கொண்டு அதன்மூலம் காங்கிரஸில் பதவி சுகம் அனுபவித்து வருபவர்களுக்கு மத்தியில் ஈழப் பிரச்சினையில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டைக் கண்டித்து தான் வகித்து வந்த பொதுச் செயலாளர் பதவியையே ராஜினமா செய்தவர்தான் இந்த மணியன்.

மணியன் காங்கிரஸிலிருந்து விலகிய பிறகு காந்திய கொள்கைகளை முன்வைத்து காந்தி பிறந்தநாளான அக். 2 அன்று ‘காந்திய அரசியல் இயக்கம்’ என்ற ஒரு இயக்கத்தை தொடங்கி மாநிலம் முழுவதும் கூட்டங்கள் நடத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக நேற்று நாமக்கல் சுப்புலட்சுமி மண்டபத்தில் அதன் கூட்டம் நடைபெற்றது. நான் அக்கூட்டத்தில் கலந்துகொள்ள மிக ஆர்வமாக இருந்தேன். ஆனால் அதேசமயத்தில் அலுவல் ரீதியான கூட்டம் ஒன்றில் கலந்துகொள்ள ஈரோடு செல்ல வேண்டியிருந்தது. அதனால் சரியான நேரத்தில் கலந்துகொள்ள முடியாத நிலை இருந்தது. எனினும் அந்த இறுதி பகுதியில் மணியன் உரையாற்றும் போது அடித்து பிடித்து அரங்கினுள் நுழைந்து விட்டேன்.

மிக அற்புதமாக பேசினார். ஓமந்தூரார் தொடங்கி காமராஜ் வரை தமிழக முதல்வராக இருந்தவர்களெல்லாம் எப்படி எளிமையானவர்களாக அரசியலை மக்கள் தொண்டாக கருதி கறைபடாத கரங்களுக்கு சொந்தக்காரர்களாக இருந்தார்கள் என்பதை பல உதாரணங்களுடன் வரிசைபடுத்தி, அதனை இன்றைய அரசியல் தலைமைகளுடனும், முதலமைச்சர்களின் செயல்பாடுகளுடன் ஒப்பிட்டு இன்று அரசியல் அடைந்துள்ள சீர்கேடை வெளிச்சம்போட்டுக் காட்டினார். ஈழப் பிரச்சினையில் கருணாநிதி ஆடிய நாடகங்களை கண்டித்தும்(மற்றவர்களைப் போல ஓட்டரசியல் உள்நோக்கம் கொண்டு அல்ல; உணர்வு ரீதியாக), சாமானியன் ஒருவனின் வாழ்க்கையில் ஊழலும், அரசியல் அராஜகங்களும் எப்படியெல்லாம் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்பனவற்றையெல்லாம் சுட்டிக்காட்டியும் அறச்சீற்றம் காட்டினார். நீண்ட நாட்கள் கழித்து ஒரு நல்லவரின் நாவன்மையின் பொழிவு, செவிக்கும் சிந்தனைக்கும் விருந்தாக அமைந்தது.

அரங்கினுள் இருந்தவர்களில் மிகப் பெரும்பாலானோர் ஐம்பது வயதிற்கும்

மேலானவர்களே. இளைஞர்களாக தென்பட்டவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். இம்மாதிரியான உரைகள் இளைஞர்களிடம் சென்று சேர்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். போலியாக ஆவேசம் காட்டி ஓட்டுக்காக வேஷம் போடும் கபடவேடதாரிகளின் பின்னால் கட்டுண்டு கிடக்கும் அவர்களை மணியன் போன்ற சமூக இயக்கம் ஒன்றை கட்டமைக்க பாடுபடும் நேர்மையாளர்களின் பின்னால் அணிவகுக்க செய்யவேண்டும். அப்போதுதான் நாம் கருத்தளவில் பேசி கனவு கண்டுவரும் அரசியல் சமூக மாற்றத்திற்கு ஒரு துரும்பையாவது கிள்ளிப்போட்டதாக இருக்கும்.

இதற்குமுன் டாக்டர்.எம்.எஸ்.உதயமூர்த்தி இதே போன்று ‘மக்கள் சக்தி இயக்கம்’ என்னும் சமூக இயக்கத்தைக் கட்டியெழுப்பியபோது, அது பெரிய எதிர்பார்ப்புக்கும் வரவேற்புக்கும் உள்ளானது. பாலசந்தர் அதன் இன்ஸ்பிரேசனில்தான் ‘உன்னால் முடியும் தம்பி’ படம் கூட எடுத்தார். அதில் கதாநாயகனின் பெயர் ‘உதயமூர்த்தி’ என்று இருப்பதை கவனிக்கலாம். ஊழலுக்கும் எதிராக அது நடத்திய சில ஆர்பாட்டங்களில் நான் கலந்து கொண்டிருக்கிறேன். குறிப்பாக சிலிண்டர் தட்டுபாடைப் பயன்படுத்தி நாமக்கல் சமையல் கேஸ் கடை ஒன்று அடித்துவந்த கொள்ளைக்கு எதிராக அது நடத்திய போராட்டங்களை நான் அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. (காரணம் அதன் பொறுப்பாளர் என் உறவினர்). ஆனால் காலப்போக்கில் அந்த இயக்கம் காணாமல் போனதன் காரணம் அது முதியவர்களின் இயக்கமாக உருவாகி அந்த முதியவர்களின் காலத்தோடு மூப்பும் எய்திவிட்டது. இளைஞர்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் களப்பணிகளில் அது கவனம் செலுத்தவில்லை. மணியனின் இந்த காந்திய அரசியல் இயக்கமும் அப்படி ஆகிவிடக்கூடாது.

*

காந்தியின் கீதை உரைகளில் வெளிப்படும் வர்ணாசிரம ஆதரவு, கர்மயோகத்தை அவர் வலியுறுத்திய விதம், அவரால் மட்டுமே புரிந்துகொள்ளமுடிந்த அவரின் ஆன்மிக விசாரங்கள் எல்லாம் எனக்கு ஏற்புடையன அல்ல. காந்தியின் செக்ஸ் பரிசோதனைகள் படிக்க சுவாரஸ்யமானவை. சில சமயம் அவரின் செயல்பாடுகளை நோக்கும்போது அவரை ஒரு மசோக்கிஸ்டாகவே(masochist) கருத வேண்டியுள்ளது. என்றாலும், இவற்றை விலக்கி - மற்ற அவரின் ஒட்டு மொத்த அற்பணிப்பு வாழ்க்கை மற்றும் போராட்ட திண்மை ஆகியனவற்றை ஒப்புநோக்கும்போது, அவரை விட இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு சிறந்த மனிதராக இன்னொருவரை இனம் காணமுடியாது என்பதை என்றும் ஒப்புக்கொள்வேன். காந்தியை அறிந்துகொள்ளாமலே நிதமும் அவரை நிந்தனை செய்பவர்களை நானறிவேன். அவர்கள் ஒருமுறை அசோகமித்திரன் எழுதிய ‘காந்தி’ சிறுகதையை வாசிக்க வேண்டும்.
மேலும்...

ஆயிரத்தில் ஒருவன் - நான் முரண்படும் இடங்கள்

Posted: | Posted by no-nononsense | Labels: 0 comments
நண்பர்களுடனான விவாதத்தின் ஒரு பகுதி:

இங்கே இப்படம் பிடிக்கவில்லை என்று சொன்ன அனைவரும் முன்வைத்த காட்சிகளும் கருத்துக்களும் என்னை கன்வின்ஸ் பண்ணவில்லை. ’ஆம்.. அந்த இடத்தில் flaw இருக்கிறது’ என்று ஒப்புக்கொள்ளும் ஒரு குறையைக் கூட இன்னும் நீங்கள் சுட்டிக்காட்டவில்லை. மேலும் இப்படத்தை தியேட்டரில் பார்ப்பதில் அனுபவிக்கும் பிரம்மாண்டத்திற்கும் மசமச இண்டர்நெட் டவுண்லோடில் பார்ப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. நிச்சயமாக எனக்கு பிடித்ததால் எல்லோருக்கும் பிடிக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. என்னால் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும் ஒரு கதையை அதன் காட்சிப்படுத்தலை வலுவான வாதங்களுடன் முன்வைக்கிறேன். அவ்வளவுதான்.

எனக்கு அப்படத்தில் பிடிக்காத ஆனால் இங்கே யாருமே சுட்டிக்காட்டாத சில விஷயங்கள்:

1. எனக்கு சோழர்களை நர மாமிசம் தின்பவர்களாக காட்டியதில் உடன்பாடு இல்லை. சோழர்கள் நல்லதொரு நாகரிக சமூகமாக வாழ்ந்தவர்கள். நாட்டில் இருந்தாலும் தீவில் இருந்தாலும் மனிதனை தின்னும் அளவிற்கு வாழ்க்கைமுறையில் காட்டுமிராண்டித்தனம் வந்திருக்கும் என்பது சுத்த பேத்தல்.

2. சோழர் குடிமக்களாக காட்டப்படுபவர்களெல்லாம் அதீத கருப்பில் மிக அசிங்கமாக காட்டப்பட்டிருந்ததும் அப்படியே. வறுமை பீடிப்பதால் மட்டுமே ஆப்பிரிக்க கருப்பு வந்துவிடுமா? இவர்களை விட பழங்குடியினராக காட்டப்பட்ட மக்கள் நல்ல தேக ஆரோக்கியத்துடன் செழுமையாக இருந்தனர். ஆனால் அவர்கள் வணங்கும் சோழர்கள் சோம்பியும் சூம்பியும் இருப்பதாக காட்டியிருப்பது ஏற்புடையதில்லை.

3. சோழர்களுக்கும் படை வீரர்களுக்கும் இடையே நடைபெறும் சண்டையில் திடீரென்று பாண்டிய குல வாரிசுகளெல்லாம் அரசர் கால ஆடை அணிந்து கொண்டு அணிவகுத்து நிற்பது சுத்த தமாஷ்.

4. பூமியின் ஒவ்வொரு இண்டு இடுக்கையும் தன் கேமிரா கண்ணால் சல்லடை போட்டு சளித்து எடுக்கக்கூடிய நவீன சேட்டிலைட்கள் வந்துவிட்ட யுகம் இது. இதில் இன்னும் ஒரு தனி தீவில் பழங்கால பாழடைந்த நகரம் ஒன்று ஆள் அரவமற்று கிடப்பதாக, அதன் அருகில் மக்கள் கூட்டம் வாழ்வதாகவும் அது இந்த உலகிற்கு இன்னும் தெரியவில்லை என்பது நம்பும்படி இல்லை.

5. சோழர்கள் அணியும் ஆடைகள் ஆபரணங்களெல்லாம் அந்த குகைக்குள் அவர்களே தயாரித்துக் கொண்டதாக இருக்க வேண்டும். அந்தளவு தொழில்நுட்பம் வாய்க்கப்பட்டவர்களால் தங்களுக்கு தேவையான உணவை தாங்களே விளைவித்துகொள்ள முடியவில்லை என்பது காதில் வைக்கும் பூ. ’சோழ நாடு சோறுடைத்து’ என்று புகழப்பட்ட பெருமை மிக்க சமூகமன்றோ சோழர்கள்?!

இப்படி சிலவற்றை சொல்லிக்கொண்டே போகலாம்.
மேலும்...

அசல்; அஜித் மற்றும் விஜய்

Posted: Friday, February 5, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
இன்று அலுவலகத்திற்கு எதிரில் உள்ள அஜந்தா-எல்லோரா தியேட்டரில் ‘அசல்’ ரிலீஸ் ஆனது. முதல் நாள் முதல் ஷோவுக்கு வேட்டைக்காரனுக்கு கூடிய கூட்டத்தை விட குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம், சரம் சரமாய் பட்டாசு என்று அமர்க்களப்படுத்தி விட்டார்கள் அஜித் ரசிகர்கள்.

விஜய்-அஜித் இருவருமே அட்டு படங்களைத்தான் தருகிறார்கள். இருந்தும் அஜித் மீது பொதுவில் ஒரு பரிவு இருப்பதற்கு காரணம் அவர் விஜய் போல அரசியல் ஆசையில் பஞ்ச் டயலாக் பேசி படுத்தி எடுப்பதில்லை என்பதாக இருக்கலாம். எந்த பின்புலமும் இல்லாமல் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர் என்பதாகவும் இருக்கலாம். ஏதோ ஒன்று; ஆனால் எல்லோருக்கும் அவர் மீது ஒரு soft corner இருப்பதாக தோன்றுகிறது.

இருவரின் படங்களையும் நான் அதிகம் பார்த்தவனில்லை என்பதால் அவை குறித்து எனக்கென்று எந்த கருத்தும் இல்லை. ஆனால் எனக்கு விஜயை விட அஜித்தை பிடிக்க ஒரு காரணம் உண்டு. அது அவரின் ஆளுமை. அண்மையில் அவரின் மூன்று மணி நேர பேட்டி ஒன்றை பார்த்தேன். எல்லா கேள்விகளுக்கு ஆழமாக தெளிவாக பதிலளித்துக் கொண்டிருந்தார். தத்துவவிசாரங்கள் தெறிக்கும் பேச்சு. இந்த இடத்தில் விஜயின் ஆளுமையை ஒப்பிட்டு பார்த்தோமேயானால் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசமாக இருக்கிறது. திரையில் மட்டும் ஜபர்தஸ்த் காட்டினால் போதாது. நாம் நாயகர்களாக கொள்ளத்தக்கவர்கள் நிஜ வாழ்க்கையிலும் ஆகிருதி மிகுந்தவர்களாக இருக்கவேண்டும். இது என் தனிப்பட்ட கருத்து. எனக்கு கமலை பிடித்துப் போகவும் இதுதான் காரணம். அவரின் திரைபட முயற்சிகளெல்லாம் இரண்டாம் பட்சம்தான்.

*

எழுத நினைத்ததற்குள் நுழைவதற்குள் வேறு வேலை வந்துவிட்டதால் பாதியில் விட்டுப் போகிறேன். பிழைத்துப் போங்கள்!
மேலும்...

இலங்கை இனப் பிரச்சினையும் தமிழக தமிழனின் தற்கால மனோபாவமும்

Posted: Thursday, February 4, 2010 | Posted by no-nononsense | Labels: , 0 comments
ஈழப் பிரச்சினை காரணமாக தமிழக தமிழன் இந்திய அரசு பற்றி குமைந்து கொண்டிருப்பதாக கூறப்பட்ட கருத்தின்மீது என் உரை:

நண்பர் அழகாக சுருக்கமாக சொல்லி விட்டார். அதற்கு மேல் சொல்ல ஒன்றுமில்லை. இது மாதிரி எழுதுபவர்களைப் பார்த்தால் எதன் அடிப்படையில் இப்படியெல்லாம் எழுதுகிறார்கள் என்று ஆச்சர்யமாக உள்ளது. போர் உக்கிரமாக நடந்து வந்த சூழலில், தினமும் பல்லாயிரம் மக்கள் படுகொலையாகி விட்டதாக செய்திகள் தெரிவித்து வந்த நிலையில் நடந்த தேர்தலிலேயே மக்கள் அதனைக் கண்டுகொள்ளவில்லை எனும்போது, போரெல்லாம் முடிந்து இலங்கையில் தேர்தல்களும் நடத்தி முடிக்கப்பட்டு, அதிலும், அத்தேர்தலில் இன படுகொலையின் இரு காரண கர்த்தாக்களில் ஒருவருக்கு அங்கேயுள்ள மக்களே வாக்களித்துள்ள சூழலில், இனியும் இங்கே தமிழ்நாட்டில் என்ன பெரிய புரட்சி வெடிக்கப் போகிறது என்று எதிர்பார்க்கிறார்களோ தெரியவில்லை.

இந்திய தேசியத்துக்கு எதிரான குரல் தமிழ்நாட்டில் எடுபட வாய்ப்பில்லை. அதற்கான காரணங்கள் தமிழக மக்களின் வாழ்வியல் நிலையில் இதுவரை உருவாகவில்லை. ஈழப் பிரச்சினையில் இந்தியா எடுத்த நிலைப்பாடு இங்கேயுள்ள ஆம் ஆத்மியை எந்த வகையிலும் இந்தியாவுக்கு எதிராக திருப்பாது. நாட்டு நடப்பு குறித்து குறைந்த பட்ச புரிதலாவது இருந்தால் தானே அதெல்லாம் நடக்க.

நெருக்கடியான நேரங்களில் எல்லாம் மௌனம் காத்து கடந்து விட்ட நிலையில் மீண்டும் கடந்த காலத்தை கவனத்தில் கொள்ள சொன்னால் காதில் போட்டுக்கொள்ள யாரிங்கு தயார்? நடந்ததை மறுபரிசீலனை செய்ய தமிழன் பழகியிருந்தால் இங்கே கருணாநிதியும் ஜெயலலிதாவும் மீண்டும் மீண்டும் மாறி மாறி ஆட்சிக் கட்டில் ஏற முடியுமா? மக்களுக்கு இலவச நோய் பிடித்து ஆட்டிக்கொண்டிருக்கிறது. போன தேர்தலில் டிவி கிடைத்தது (இன்னும் எங்கள் ஏரியாவில் யாருக்கும் கிடைக்கவில்லை). இந்த தேர்தலுக்கு செல்போன் கிடைக்குமா என்பதில்தான் மக்களின் கவலையெல்லாம். அப்படி கெடுத்து வைத்து விட்டார்கள்.

இப்படி கட்டுரை எழுதிக்கொண்டிருப்பவர்கள் உண்மையிலேயே தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டுமானால் இலங்கை பொருட்கள் பகிஷ்கரிப்பை நடத்தலாம். கொழும்பு பெரு முதலாளி கம்பெனிகளின் பிஸ்கட்கள், சாக்லேட்கள் இப்போது சாதாரணமாக தமிழகத்தின் அனைத்து பெரிய மால்களிலும் விற்கப்படுகின்றன. நன்றாக விற்பனையும் ஆகின்றன. அவற்றை வாங்காமல் நிராகரிக்கச் சொல்லி மக்களைக் கேட்டுக்கொள்ளலாம். அக்கடைகளின் முன் போராட்டம் நடத்தலாம். அதை விடுத்து மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சிட முயற்சிப்பது நேர விரயத்தைத் தவிர வேறு ஒரு பயனையும் தராது.

மேலும்...

தமிழில் பொறியியல் கல்வி - சில கருத்துக்கள்

Posted: | Posted by no-nononsense | Labels: 0 comments
பொறியியல் கல்வியை தமிழில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக வந்த செய்தியின் மேல் நடந்த உரையாடலில் என் கருத்துக்கள்:

இதை ஒரு ஐம்பது வருடங்கள் முன்பு முயற்சி செய்து பார்த்திருக்கலாம். ஒருவேளை பயன்பட்டிருக்கக் கூடும். இப்போது ஏழைகளைத் தவிர யார் வீட்டு பிள்ளை தமிழ் வழியில் கல்வி கற்கிறது - அதற்கு நாம் என்ஜினியரிங் பாடங்களை தமிழில் சொல்லி கொடுக்க?

ஏழை வீட்டு பிள்ளைக்கு பயன்படுமே என்றால் எந்த ஏழை இங்கே என்ஜினியரிங்/மெடிக்கல் காலேஜ் பீஸை கட்டும் நிலையில் இருக்கிறான்? அப்படி கட்டுபன் ஏழையாக இருக்க வாய்ப்பில்லை.

அதுதான் போகட்டும், அப்படி தமிழில் பாடம் வைக்கிறோம் என்றே வைப்போம். அந்த மாணவர்கள் அனைவருக்கும் தேவையான reference books தமிழில் கிடைக்குமா? அப்படி தமிழில் படித்து பட்டம் பெறுபவர்களுக்கு வேலை வாய்ப்பு தமிழ்நாட்டுக்குள்ளேயே கிடைத்தால் மட்டுமே மொழிப் பிரச்சினை இன்றி அவர்களால் பணியாற்ற முடியும். அதற்கு தகுந்தளவு வேலை வாய்ப்புகள் இங்கே உண்டா? இல்லையென்றால் எல்லை தாண்டிய வேலை சந்தையில் தகுதி நீக்கம் செய்யப்பட்டு விடுவோம்.

எதற்கெடுத்தாலும் சீனாவை எடுத்துக்காட்டுவது ஒரு மோஸ்தர் ஆகி வருகிறது. அவ்வளவு பெரிய நாடாகிய சீனாவில் - சில வட்டார மொழிகள் ஆங்காங்கே வழக்கில் இருந்தாலும் - மாண்டரின் மொழியைத்தான் பெருமளவில் மக்கள் பேசுகின்றனர். அதுதான் அங்கே அதிகாரப்பூர்வ மொழியும் கூட. அதனால் மாண்டாரின் மொழியில் மட்டுமே பாடங்கள் அனைத்தையும் கற்றாலும் வேலை வாய்ப்புகளில் பிரச்சினை வருவதில்லை. மேலும் அங்கே நடப்பது கம்யூனிச ஆட்சி என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

சீனாவின் மாண்டரின் போலவோ அல்லது ஜப்பானின் நிஹோங்கோ போலவோ தேசம் முழுமைக்குமான ஒரு பொது மொழி நம் நாட்டில் கிடையாது. இங்கே மாநிலத்துக்கு மாநிலம் பிராந்திய மொழி மாறுபடுகிறது. அதன் காரணமாக அனைவருக்கும் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளுக்கான பொதுவான ஒரு மொழியாக ஆங்கிலம் இருந்துவருகிறது. அது உலக பொது மொழியாகவும் இருப்பது அதிலுள்ள மேலும் ஒரு சாதகமான அம்சம். அதனால் தேசம் கடந்தும் வேலை வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ள முடிகிறது.

சீனாவிலும் ஜப்பானிலும் கூட கடந்த பத்து வருடங்களில் நிலை மாறி வருகிறது. Globalization காரணமாக ஆங்கில வழிக் கல்வியை கற்பதில் மக்கள் ஆர்வமாக இருக்கின்றனர். சீனர் ஒருவர் தான் எழுதிய கட்டுரை ஒன்றில் ஆங்கில வழிக் கல்வியைப் பொருத்தவரையில் தற்காலத்தில் சீனாவில் நிலவும் சூழல் பற்றி என்ன சொல்கிறார் என்று பாருங்கள்:

English classes starts from kindergarten, and many parents give English lessons to their babies once they can speak. Until the end of high-school study, all the grammar is taught. In almost every university, one cannot get his BS degree if he/she cannot pass the College English Test (CET) Band 4, and no opportunity of a good job after graduation if he/she cannot pass CET Band 6. Proficient oral and aural English increases the possibility of offers from big companies like P&G, GE, Dow, BP, etc.

எனவே மாறி வரும் சமூக பொருளாதார சூழ்நிலைகளின் காரணமாக உலகம் ஒரு பொது மொழியை நோக்கிப் பயணப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில் அதனுடன் ஒட்டாமல் மாறுபட்டு பயணிப்பது பின்னடைவையே தரும். இதனை வள்ளுவரின் வார்த்தைகளில் சொல்வதானால்,

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.

தமிழ் மொழி ஆர்வலர்கள் மொழிப் பற்றுக்கும் மொழி வெறிக்கும் இடையேயுள்ள வேறுபாட்டை அறிந்துகொள்ளாவிடில் இனி வரும் சந்ததியினர்தான் அதன் பாதிப்புகளை சந்திக்க நேரிடும். அந்த பாவம் நமக்கு வேண்டாம்.

உண்மையாகவே நம் மாணவர்களுக்கு பயனளிக்கும் ஒரு திட்டத்தை தீட்ட வேண்டும் என்று அரசாங்கம் நினைத்தால் தொழிற்கல்வி வரைக்கும் கல்வியை முழுமையாக இலவசமாக அளிக்க வேண்டும். மற்றதெல்லாம் வெட்டி வேலை.
மேலும்...