தேவை ரசனையில் மாற்றம்

Posted: Friday, May 21, 2010 | Posted by no-nononsense | Labels: 2 comments
இன்றைய வெகுஜன இதழ்களின் போக்கை முன்வைத்து

எஸ்.ஏ.பியுடன் குமுதமும் பாலசுப்ரமணியனுடன் விகடனும் அவை எதற்காக விரும்பப்பட்டனவோ அத்தனித்தன்மையை இழந்து விட்டன. இது தலைமுறை மாற்றம்; நிர்வாகத்தில் மாத்திரமல்ல, வாசகர்களின் ரசனையிலும்கூட. சினிமாவும் பிரபலங்களின் அந்தரங்கம் பற்றிய கிசுகிசுவும் இல்லாத ஒன்றை புரட்டியும் பார்க்கவும் தயாரில்லாத சமூகம் இது. இவை மட்டுமே விற்கும்போது அவை மட்டுமே அச்சில் கிடைக்கும்.

நல்ல சினிமா அதிகம் வருவதில்லை என்று சினிமாவுக்குச் சொல்லப்படும் தகுமானம் போல பத்திரிக்கைகளுக்குச் சொல்லி தப்பிவிட முடியாது. உயிர்மை, காலச்சுவடு, அம்ருதா, தீராநதி, புதிய புத்தகம் பேசுகிறது என்று கனமான விஷயங்களை உள்ளடக்கங்களாகக் கொண்ட பல பத்திரிக்கைகள் வெளியாகின்றன. கிட்டத்தட்ட எல்லா ஊர்களிலும் கிடைக்கவும் செய்கின்றன. ஆனால் எத்தனை விற்கின்றன?

தொடர்ந்து பாலியல் சர்வேக்களையே புத்தகமாகப் போட்டு விற்றுவரும் இந்தியா டுடே விற்பனையாகும் அளவிற்கு தரமான ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டு வரும் சண்டே இண்டியன் விற்கிறதா?

இன்று விகடனிலும், குமுதத்திலும் விமர்சனக் கட்டுரைகள் எழுதிப் பிரபலமாக இருக்கும் ஞாநி இதற்கு முன் நடத்திவந்த ’தீம்தரிகிட’ இதழின் கதி என்ன ஆனது? இதைவிட காத்திரமான பல கட்டுரைகளை அதில் எழுதி வந்தார். ஆனால் யார் சீண்டினார்?

விஜயின் அடுத்தப் படத்துக்கும் அடுத்தப் படம் கூட எல்லோருக்கும் தெரியும். எஸ்.ராமகிருஷ்ணன் கடைசியாக எழுதிய நாவலின் பெயராவது பலருக்கு தெரியுமா? முதலில் எஸ்.ராமகிருஷ்ணன் யார் என்றாவது தெரியுமா? தெரியும் என்பவர்களுக்கும் அவர் விகடனில் துணையெழுத்து எழுதாது போயிருந்தால் தெரிந்திருக்குமா? துணையெழுத்து, கதாவிலாசம் என்று அவர் தொடர்ந்து பொதுஜன வாசகர்களுக்கு மத்தியிலும் தன் முத்திரையை பதித்த பின்னரும் எத்தனை பேரை சென்றடைந்திருக்கிறார்?

அருகில் இருக்கும் கேரளாவில் தரமான எழுத்துக்களும் பத்திரிக்கைகளும் கொண்டாடப்படுகின்றன. சகீலா படத்திற்கு கியூ கட்டிய கூட்டம்தான் எம்.டி.வாசுதேவன் நாயரையும், வைக்கம் முகம்மது பஷீரையும், தகழியையும் லட்சக் கணக்கில் விற்க வைக்கின்றன. கமர்ஷியல் சினிமா என்பது அங்கே சமீப காலம் வரை இல்லை என்றே சொல்லலாம். இலக்கிய தரத்தில் எடுக்கப்படும் படங்களே பரவலான அங்கீகாரத்தை பெற்றிருக்கின்றன. மலையாளிகளிடம் ரசனையில் ஓர் சரிவிகிதத்தை காணமுடிகிறது. ஆனால் இங்கே?

அதிகம் விற்பனையாகும் பண்டமே அதிகம் தயாரிக்கவும் படும் என்னும் பொது விதி வேறு எதற்கு பொருந்துகிறதோ இல்லையோ பத்திரிக்கை தொழிலுக்கு அட்சர சுத்தமாக பொருந்தும்.

உதாரணத்திற்கு இன்று இணைய வெளியில் சாருநிவேதிதா அதிகம் படிக்கப்படும் எழுத்தாளராக இல்லையா? ஆனால் அவரைப் போலவே வலைமனை கொண்டு எழுதிவரும் கலாப்ரியா, அழகிய சிங்கர், அ.முத்துலிங்கம், இரா.முருகன், ஜெயபாரதிக்கெல்லாம் எத்தனை ஹிட்ஸ் கிடைக்கின்றன?

ஆனால் உன்னை போல் ஒருவனுக்கு வசனம் எழுதியவர்தான் இரா.முருகன் என்றால் பளிச் சென்று ’ஆமா, அதில் டயலாக்கெல்லாம் நல்லாயிருந்ததே’ என்பார்கள். அரசூர் வம்சம் எழுதியவரின் அறிமுகம் இப்படித்தானா நிகழ வேண்டும்?

அதனால் வியாபாரிகளை மட்டும் குறை சொல்லி பயனில்லை. தேவை ரசனையில் மாற்றம்.
மேலும்...

இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் - தொடரும் உரையாடல்

Posted: Monday, May 17, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
இரும்பு கோட்டை முரட்டு சிங்கத்தை முன்வைத்த விவாதத்தில் என் சில கருத்துகள்:

தமிழ்ப்படங்களை விமர்சிக்கும்போது அதனை ஹாலிவுட் படங்களுடன் ஒப்பிட்டுச் செய்வது தமிழ்ச் சினிமா சூழலுக்கு பொருத்தமாக இருக்காது. அவை மலைகள்; இவை மண் மேடு. வேண்டுமானால் குயிக் கன் முருகனையும் இ.கோ.மு.சி.ஐயும் ஒப்பிடலாம் :-) இவைகளின் தரம் அவ்வளவுதான். மற்றபடி படம் சுமார்தான் என்பதில் எனக்கும் மாற்றுக் கருத்து இல்லை.

அதேசமயம் இதைத்தாண்டி ஒரு திரைக்கதையை தமிழ் சினிமா ரசிகனுக்கு ஏற்றபடி எழுதிவிட முடியுமா என்பதும் சிந்தனைக்குரியது. கொஞ்சம் நுணுக்கமாக எடுத்து விட்டால் ‘புரியலை’ என்றும், எதார்த்தமாக எடுத்தால் ‘படம் ஸ்லோ’ என்று எளிதில் நிராகரித்து விடுகிறார்கள்.

அதனால் ரசிகனின் ரசனையின் மட்டத்திற்கு தங்களை தாழ்த்திக்கொள்ளும் நிலையில்தான் எஞ்சியிருக்கும் ஒன்றிரண்டு படைப்பாளிகளும் இருக்கிறார்கள். பிஸினஸ் பேச விநியோகஸ்தர்கள் முன்பு உட்காரும்போது அவர்களின் டிமாண்டுக்கு ஏற்றபடி நிறைய விஷயங்களில் சமரசம் செய்து கொண்டிருந்தால் மட்டுமே அந்த பணடம் விற்பனையாகும் சூழல் இங்கு. இதில் படைப்பாளியை மட்டும் தனித்து குற்றம் சாட்டுவது முழுமையான விமர்சனமாக அமையாது.

அப்படி சமரசம செய்து கொள்ளாமல் விட்டதால்தான் மிஷகினின் ‘நந்தலாலா’ வாங்குவாறின்றி பெட்டியில் தூங்கிக் கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்த சூழலும் மாறினால் மட்டுமே நமக்கு நல்ல படங்கள் கிடைக்கும். அதுவரை இப்படி மசாலாத் தடவித்தான் சில நல்ல முயற்சிகளையும் கூட செய்யமுடியும்.


மேலும்...

இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் மீட்டெடுத்த காமிக்ஸ் நினைவுகள்

Posted: Saturday, May 8, 2010 | Posted by no-nononsense | Labels: , 0 comments
இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் படத்தை இன்று மாட்னி ஷோ பார்த்தேன்.

படம் பற்றி நான் படித்தனவற்றுள் இந்த பதிவரின் விமர்சனம் (http://digs.by/boFQGX ) எனக்கு வரிக்கு வரி உடன்பாடாக இருப்பதால், தனியாக நானும் ஒன்றை எழுத வேண்டிய அவசியமில்லை என்று விட்டு விடுகிறேன்.

இருந்தாலும் சுருக்கமாக: சிம்புதேவனிடம் அதிகம் எதிர்பார்த்து செல்பவர்களுக்கும், மெக்கனாஸ் கோல்டு புதையல் வேட்டை வகையறாக்களை ஏற்கெனவே பார்த்து விட்டவர்களுக்கும் இப்படம் சலிப்பை தரலாம். மற்றவர்களுக்கு தமிழில் இது ஒரு புது அனுபவமாக இருக்கும். இம்சை அரசன் அளவிற்கு நான் ஸ்டாப்பாக இல்லையெனினும் அவ்வப்போது சிரிப்புக்கு உத்தரவாதம் உண்டு.

*

படம் பார்க்கும்போது சிறு வயதில் படித்த கௌபாய் காமிக்ஸ்களின் கதையோட்டமும் காட்சிகளும் கண்முன் வந்து போனபடி இருந்தன. கௌபாய் கதாநாயகர்களில் டெக்ஸ் வில்லரின் பரம ரசிகன் நான். இப்படம் பார்த்தது முதல் அவருடைய ஒரு புத்தகத்தையாவது மீள்வாசிப்பு செய்ய ஆர்வமாக உள்ளது. (அவருடைய ’தலை வாங்கி குரங்கு’ எனும் புத்தகம் ஒரு கிளாஸிக்!)

ஆனால் தற்சமயம் கைவசம் காமிக்ஸ் என்று ஒன்று கூட இல்லை. ஒரு காலத்தில் குறைந்தது ஒரு நூறு புத்தகங்கள் இருந்தன. எல்லாவற்றையும் முறையாக பராமரிக்க இயலாமல் செல்லரிக்க விட்டு விட்டு வருத்தப்பட்டு கொண்டிருக்கிறேன்.

நாமக்கல்லில் காமிக்ஸ்களை ஒரு பொக்கிஷமாக பாதுகாத்து வரும் இரண்டு இளைஞர்களை நான் அறிவேன். விலை கொடுத்து வாங்க முன்வந்தாலும் விற்க தயாராக இல்லாத, காமிக்ஸ்களுடன் ஓர் அத்யந்த ஈடுபாடு கொண்டவர்களாக அவர்கள் இருந்து வருகின்றனர். எங்கேயாவது சந்திக்க நேரும்போது எங்கள் பேச்சின் பெரும்பாலான நேரத்தை ஆர்ச்சியும், இரும்புக் கை மாயாவியும், மந்திரவாதி மாண்டிரேக்கும், ஸ்பைடர் மேனும், மாடஸ்டி பிளைஸியும், லக்கி லுக்கும் எடுத்துக் கொள்வார்கள். அப்படி ஒரு நாள் குளக்கரை திடலில் மாலையில் பேச ஆரம்பித்து வந்த வேலையை மறந்து முன்னிரவு வரை அங்கேயே பேசியபடி இருந்து விட்டேன்.

இன்றும் பல காமிக்ஸ்கள் புத்தகங்கள் வருகின்றன. அவற்றில் பழைய லயன், முத்து காமிக்ஸ்களும் உண்டு. ஆனால் எல்லாம் லோக்கல் கேரிகேச்சர்களாக இருக்கின்றன. பழைய மேற்கத்திய காமிக்ஸ்களின் தரமும் சுவாரஸ்யமும் மருந்துக்கும் இவற்றில் இல்லை.

பழைய காமிக்ஸ்களை இப்போது மீண்டும் திரட்ட ஆரம்பித்திருக்கிறேன். அந்த இளைஞர்களிடமும் ’எதிர்காலத்தில் என் குழந்தை படிப்பதற்காக அவைகள் தேவைப்படும். எனவே என்னை கேட்காமல் யாருக்கும் கொடுத்து விட வேண்டாம்’ என்று வேண்டுகோள் வைத்திருக்கிறேன். நாம் சுவைத்த ரசமான வாசக அனுபவங்கள் எல்லாம் நம்முடனே முடிந்து விடக்கூடாது. அவற்றை நம் குழந்தைகளுக்கும் அறிமுகப்படுத்த வேண்டும். அவற்றின் நீட்சி நம் எல்லா கலாரசனைகளிலும் இருப்பது மேலும் சிறப்பு.

சிம்புதேவனின் படம் இன்று என் சிந்தனையை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்று விட்டது.
மேலும்...