உன்னைப் போல் ஒருவனை முன்வைத்த அரசியல்

Posted: Tuesday, December 29, 2009 | Posted by no-nononsense | Labels: 1 comments
In reply to Pamaran's review on Unnai pol oruvan:

இந்த முழு கடிதமும் ஒரு திராபை. படித்து முடிப்பதற்குள் தாவு தீர்ந்துவிட்டது. பாமரனின் எழுத்து நடை வர வர நொண்டியடிக்கிறது. அதனால்தான் குமுதத்தில் இவர் எழுதிவந்த பத்தியை தூக்கிவிட்டார்கள் போலும்.

கமல் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல. ஆனால் உன்னைப் போல் ஒருவனை முன்வைத்து கமலை விமர்சிப்பது வெட்டி வேலை. காரணம் “மர்மயோகி’ டிராப் ஆனதால் விழுந்த கால்ஷீட் இடைவெளியை நிரப்ப, கமல் பாலிவுட் கடையிலிருந்து வாங்கிப் போட்டுக் கொண்ட ரெடிமேட் சட்டைதான் இந்த உ.போ.ஒ. நடிகர் ஒருவர் பாதுகாப்பு கேட்கும் அந்த தமாசு காட்சி தவிர, சகலமும் சீன் பை சீன் அப்படியே ஹிந்தியின் ரீமேக். அதனால் இந்த விமர்சர்கள் வறுத்தெடுக்க வேண்டியதெல்லாம் இதன் ஒரிஜினல் கதாசிரியர்களைத்தான். அதை ஹிந்தி விமர்சகர்கள் ஏற்கெனவே செய்து மாமாங்கம் ஆகிவிட்டது.

இஸ்லாமியர்களை தொடர்ந்து தீவிரவாதிகளாக காட்டி படம் எடுப்பது தவறு என்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் செயல். அதுவும் 26/11 mumbai atrocity-க்கு பிறகும்கூட எப்படி இப்படியெல்லாம் இவர்களால் உண்மையை புறம்தள்ளி பேச முடிகிறது என்றுதான் எனக்கு தெரியவில்லை. இஸ்லாமிய தீவிரவாதம் நம்மை நாலாபுறமும் சூழ்ந்து அச்சுறுத்துகிறது. அது இந்தியாவுடன் ஒரு அறிவிக்கப்படாத போரை தொடங்கி வெகுகாலம் ஆகிவிட்டது. அதற்கு துணை போகுபவர்கள் உள்ளூர் இஸ்லாமியர்கள்தான். அதற்கு அவர்கள் ஆயிரம் காரணம் சொல்லலாம். ஆனால் நடக்கிறதா இல்லையா என்பதுதான் கேள்வி. நடக்கிறது என்றால் அதை படமாக்கினால் மட்டும் ஏன் இந்த குய்யோ முறையோ கூச்சல்?

நாளை வேறு ஒருவர் ஹிந்து தீவிரவாதத்தை, உதாரணத்திற்கு சிவசேனா-ராஜ்தாக்கரே வகையறாக்கள் மும்பையில் சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக மேற்கொண்டுவரும் அடக்குமுறை அச்சுறுத்தலைப் பற்றி இதேபோல் சினிமா படம் எடுத்தால், அப்போது மட்டும் உள்ளதைத்தானே சொல்கிறார்கள் என்று அதை சிரமேற்கொண்டு ஆதரிப்பார்கள் இந்த pseudo intellectuals. காரணம் அதில் குற்றவாளிகளாக சித்தரிக்கப்படுவது சிறுபான்மையினர் அல்லவே. அதையும் எதிர்த்து எழுதினால் இவர்களின் so-called நடுநிலை முகமூடி டரியல் ஆகிவிடுமே! அதனால் அப்போது மட்டும் கள்ள மௌனம் சாதிப்பார்கள் இவர் போன்றவர்கள். இன்றைய இந்தியச் சூழலில் சிறுபான்மையினரின் அனைத்து அபத்த செய்கைகளுக்கும் சப்பை கட்டு கட்டுவதுதான் நடுநிலைத்தன்மை என்று ஆகிவிட்டிருக்கிறது. இரண்டு பக்கமும் சம அளவில் தவறுகள் இருக்கின்றன. இரண்டுமே களையப்பட வேண்டியவை.

தீவிரவாதத்தை தீவிரவாதத்தால் எதிர்கொள்ள ஒரு காமன்மேன் கிளம்புவது தமிழ் சினிமாவுக்கு ஒன்றும் புதிதல்ல. காலம் காலமாய் ரவுடியிஸத்தை ரவுடியிஸத்தால் தான் நம் வண்ணத்திரை நாயகர்கள் அழித்துக் கொண்டிருக்கிறார்கள். சென்னையிலுள்ள ரவுடிகள் அனைவரையும் ஒழித்துக் கட்ட திருப்பாச்சியில் கிளம்பிய விஜய் இன்னும் வீடு திரும்பவில்லை என்று வேட்டைக்காரன் பார்த்ததவர்கள் சொல்கிறார்கள். அதையெல்லாம் பெரிது படுத்தி யாரும் எழுதியதாகத் தெரியவில்லை.

கமல்கூட தன் ரசிகர் மன்றங்களை நற்பணி மன்றங்களாத்தான் வைத்திருக்கிறார். ஆனால் விஜய் அவர்களை வைத்து அரசியல் ஆதாயம் காணும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். அதனால் விஜய் இந்த மாதிரி வன்முறை படங்கள் தருவது அவர் பின்னால் திரளும் இளைஞர்களை தவறாக வழிநடத்தும் என்று கண்டித்து இந்த பாமரனோ அல்லது வேறு விமர்சகர்களோ எழுதி நான் இதுவரை பார்த்ததில்லை. கமலை மட்டுமே அவர்கள் பேனா கிழித்து தள்ளும். காரணம் காய்ந்த மரம் தான் கல்லடி படும். கமலைப் பற்றி எழுதினால்தான் அது கவனிக்கப்படும். எடுத்துக்காட்டாக எங்கேயோ பாமரன் எழுதியது இப்போது நம்மை வந்து அடைந்து விவாதிக்க வைக்கவில்லையா? அதுதான் இந்த பாமரன் போன்ற விமர்சகர்களின் நோக்கம். அவர்கள் விரும்பிடும் அவர்கள் எழுத்துக்கான வெற்றியும் இதுவே. அதனால் இவர்களுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுத்து விவாதித்து மண்டையை உடைத்துக் கொள்ளாமல் நிராகரித்து நகர்ந்துவிடுவதே நல்லது.
மேலும்...

நீச்சல் கற்ற அனுபவமும் உயிர் தப்பிய கதையும்

Posted: Monday, December 28, 2009 | Posted by no-nononsense | Labels: 0 comments
நண்பர்களுடன் தொடரும் மடலாடல்:

பாஸ்கரும் நானும் ஒன்றாக சேர்ந்தே நீச்சல் கற்றுக் கொண்டோம். எப்படியென்றால், வீட்டிலிருந்து ஒரு தாம்பு கயிறு எடுத்துக் கொண்டு கொசவம்பட்டியில்(சேந்தமங்கல ரோடு) இருந்த ஒரு கிணற்றுக்குச் செல்வோம். அங்கே கயிற்றை முதலில் ஒருவன் வயிற்றில் கட்டிக் கொண்டு கிணற்றினுள் இறங்கி நீச்சலடிக்கும் போது மேலேயிருந்து மற்றொருவன் அதை கையில் பிடித்துக் கொள்வோம். இப்படியே ஒரு மாதம் விடாமல் அலைந்து கற்றுக் கொண்டோம்.

அதன் ஆகப்பெரும் பயனை விரைவிலேயே அடைந்தேன். ஒரு ஆடி 18-க்கு மோகனூர் ஆற்றில் நானும் குமரேசனும் (சயின்ஸ் குரூப்) குளித்துக் கொண்டிருந்தபோது இடுப்புவரை இருந்த நீர்மட்டம் திடீரென்று கழுத்துவரை உயர்ந்து, காலுக்கு கீழே தரை நழுவியது. நடப்பது இன்னதென உணர்வதற்குள் ஒரு பத்தடிக்கு வெள்ளம் இழுத்துச் சென்றிருந்தது. நாங்களும் எதிர் நீச்சல் போட்டுக் கொண்டே இருக்கிறோம்; ஒரு அடி கூட இருந்த இடத்தில் இருந்து முன்னேற முடியவில்லை. கரையிலிருந்த ஆட்கள் “குறுக்கால அடிங்க’ என்று கூச்சல் போட்டபடி இருந்தார்கள். பிறகு குறுக்கு நீச்சல் போட்டு கரை சேர்ந்து, அடித்து போட்டது போல அரைமணி நேரம் கிடந்தோம். அப்போது கரையில் இருந்து இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் எங்களுடன் வந்த பாஸ்கரும், பூபதியும். (பூபதி ஒரு வருடம் ஜூனியர் பையன். ஆனால் மற்ற எல்லா விஷயங்களிலும் எங்களுக்கு பல வருடங்கள் சீனியர் :-) )

மறக்க முடியாத அனுபவம்.

பாஸ்கர்-நான்-குமரேசன் சேர்ந்து சுற்றியதற்கு கணக்கே இல்லை.
மேலும்...

2009 - கற்றதும் பெற்றதும்

Posted: | Posted by no-nononsense | Labels: 0 comments
ஒவ்வொரு வருடமும் வருட இறுதியில் கொஞ்சம் ஆயாசமாக சாய்ந்தமர்ந்து இந்த ஒரு வருடத்தில் நடந்தவைகளை பரிசீலித்துக் கொள்வதையும் திருத்த வாய்ப்புள்ளவைகளை குறித்துக் கொள்வதையும் ஒரு வழக்கமாகவே செய்துவருகிறேன். கேட்பதற்கு சம்பிரதாய செய்கை போல தோன்றலாம். முழுமையாக இல்லாவிடினும், ஓரளவு இதனால் பலனுண்டு என்பதே இதுவரையான என் அனுபவம். நமது நாளையைப் பற்றி எப்போதும் ஒரு திட்டத்துடன் இருப்பது வாழ்க்கையைப் பற்றிய ஒரு குறைந்த பட்ச தெளிவை கொடுக்கிறது. கால் போன போக்கில் விட்டேத்தியாக வாழ்ந்து நிதமும் விதியை நொந்து சோர்ந்தவர்களின் தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்தால் கிடைக்கும் விடை இதுவாகவே இருக்கும்.

2009 பிறந்தபோது நான் திருச்சியில் வேலையில் இருந்தேன். உறையூரில் மேன்சன் வாழ்க்கை. வாரம் இரண்டு நாட்கள் மட்டும் நாமக்கல் விஜயம். என் பிற்கால வாழ்வில் நான் மிகவும் விரும்பி தேடிய தனிமை எனக்கு அங்கேதான் கிடைத்தது. கிட்டத்தட்ட solitary. இருந்தும் கொண்டாட முடியாதபடி - தத்தி நடக்க ஆரம்பித்து, மழழையில் திக்கி பேச ஆரம்பித்து, ஓய்வாக கிடைப்பது ஒரு அரை நாளாக இருப்பினும், அதையும் கூட அவளுடனே செலவளிக்கும்படி அவளை நோக்கி ஈர்த்துக் கொண்டாள் என் அன்பு மகள். குழந்தையின் இந்த பருவத்தை தவறவிடக்கூடாது என்ற நோக்கில் மூன்று மணி நேரம் பயணம் செய்து அடிக்கடி நாமக்கல் வந்துபோனதில் பயணங்களே வாழ்க்கை என்றாகிப் போனது.

ஒரு கட்டத்தில் திருச்சிக்கே போய்விடலாம் என்று சுந்தர் நகரில் வீடு பார்த்து அட்வான்ஸ் கொடுத்துவிட்ட நிலையில், ரிசசனில் பங்கு சந்தை வீழ்ந்ததினால் ஏற்கெனவே நொண்டியடித்துக் கொண்டிருந்த என் கம்பெனி, dollar hedging-இலும் கை வைத்து நன்றாக சுட்டுக் கொண்ட செய்தி வந்தது. இனி இது நீண்ட நாட்கள் தேறாது என்பது அவர்களின் பேலன்ஸ் ஸீட்டை கவனித்துவரும் யாருக்கும் வெள்ளிடைமலை. திருப்பூர், மதுரை போன்ற சில கிளைகள் மூடப்பட்டு பிங்க் ஸ்லிப் கொடுக்கப்பட்டது வயிற்றில் புளியைக் கரைத்தது. பயந்தபடி ஒரு நாள் திருச்சி கிளையும் மூடப்பட்டது.

எனினும், ஒரே கம்பெனியில் ஆறு வருடங்கள் பணியாற்றியதன் ஆகப்பெரும்பயனாக எனக்கு வேலை போகவில்லை. ஆனால், சென்னை கார்ப்போரேட் ஆபீஸுக்கு மாறிக் கொள்ளும்படி கேட்க ஆரம்பித்தார்கள். சென்னை என்ற பெயரைக் கேட்டதும் வேப்ப எண்ணையாக கசந்தது. ஓரிரு நாட்களுக்கு மேல் சென்னையை ரசிக்க கொண்டாட சென்னைக்கு வெளியே பிறந்தவர்களால் முடியாது. குறைந்த பட்சம் என்னால் முடியவில்லை. மதுரை, சேலம் பிறகு திருச்சி என்று சற்றே பெரிய ஊர்களில் இதற்குமுன் வாசம் செய்திருக்கிறேன். சொந்த ஊர் இல்லை என்பது தவிர, ஒருநாளும் அவை மாறுபாடாக தெரிந்ததில்லை. இன்னும் சொல்லப் போனால் நாமக்கல்லுக்கு அடுத்து திருச்சி எனக்கு ரொம்ப பிடித்த ஊராகிப் போனது. மாறாக வேலை, பயணம், பிழைத்தல் என்று எல்லா அம்சங்களிலும் சென்னை வாழ்க்கையை பெருமளவு இயந்திரத்தனமானதாகவும், பிரயத்தனங்கள் நிறைந்ததாகவும் கருதுகிறேன். சென்னை, பணம் இருப்பவனின் சொர்க்கம்; பணத்தை துரத்துபவனின் நரகம். எனவே மாறுதலுக்கு மறுப்பு தெரிவித்துவிட்டேன்.

சரியாக அதே நேரத்தில் கரூரிலிருந்து வேலை வாய்ப்பு ஒன்று கதவைத் தட்டியது. பல வருடங்கள் ஒரே நிறுவனத்தில் பணியாற்றுவதால் அதனுடன் உண்டாகும் பிணைப்பு(bond) எளிதில் விடுவித்துக் கொள்ள இயலாதது. இதைவிட்டு போனால் எதிர்காலம் என்னாகுமோ என்று கழுத்துக்கு மேலே எப்போதும் கத்தி தொங்குவது போல ஒரு உணர்வு உறுத்தும். வேலை மாறுவதும் ஒரு விதத்தில் சாகசம் தான். தற்கால இந்தியச் சூழலில் அதற்கு நிறைய துணிபு தேவைப்படுகிறது. ஒருவேளை புதிய வேலை சரிவரவில்லை எனில் செய்ய ஏதுவாக ஒரு மாற்றை கையில் வைத்துக் கொள்ளாமல் துணியக் கூடாது. அப்படி ஒரு மாற்று தொழிலை ஏற்பாடு செய்து கொண்ட பின்பே கம்பெனி மாறினேன். (பேசாமல் துணிந்து அந்த தொழிலிலேயே இறங்கியிருக்கலாம் என்று இப்போது தோன்றுவது மனித மனதின் oxymoron)

இது நடந்து இப்போது ஆறு மாதங்கள் கடந்துவிட்டன. இன்றுவரை வியாபாரத்தில் ஏற்படும் சிற்சில சுணக்கங்கள் தவிர புதிய வேலை பிரச்னை இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. சீரான சாலையில் ஒரு மணி நேர பயணமே என்பதால், நாமக்கல்லை விட்டு நீங்க வேண்டிய அவசியமும் இல்லை. வேலையைப் பற்றிய ஒரு நிச்சயமின்மையுடன் துவங்கிய 2009, எனக்கு நல்லதொரு வேலையை கொடுத்திருக்கிறது. இருப்பினும், சுய தொழில் செய்ய வேண்டும் என்னும் என் கனவு மாற்றமில்லாமல் தொடர்கிறது.

குழந்தை பேசி விளையாட ஆரம்பித்த பிறகு தனிப்பட்ட வாழ்க்கையில் முன் எப்போதையும்விட சந்தோசங்கள் கூடியிருக்கின்றன. அடுத்த வருடம் பள்ளியில் சேர்க்க வேண்டும். இன்னும் சில தனிப்பட்ட குடும்ப பொறுப்புகள் தோளேற காத்திருக்கின்றன.

அடிப்படையில் நான் ஒரு introvert. இருந்தும் நண்பர்கள் கூடி வருகிறார்கள். அதனால் வாழ்க்கையும் கூட நிறம்கூடி தெரிகிறது. அதேசமயம் படிக்க சுகிக்க கிடைத்துவந்த நேரம் சுருங்கிவிட்டது. எண்ணிப் பார்க்கையில் உருப்படியாக படித்த மொத்த புத்தகங்களின் எண்ணிக்கை இரண்டு கை விரல்களைக் கூட தாண்டாது. படித்ததில் பொ.வேல்சாமியின் “பொற்காலங்களும் இருண்ட காலங்களும்” மிக முக்கியமானது. கவிதாசரணில் அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாகிய இந்நூல் ஆழ்ந்தாய்தளிக்கும் கருத்துக்கள் அறிவுதளத்தில் வைத்து விவாதிக்க உகந்தவை. இலக்கிய விமர்சக தளத்தில் மதிப்பு மிக்க பொ. வேல்சாமி நாமக்கலில்தான் குடியிருக்கிறார். ஆனால் இன்றுவரை அவரைப் போய் சந்திக்க முயலவில்லை என்பது என் மேல் எனக்கேயுள்ள கோபம். இதற்கு முன் சில எழுத்தாளர்களை சந்தித்தது அவர்கள் எழுத்துக்களைப் போல் உவப்பாக இல்லாததால் ஏற்பட்ட மனத்தடை இன்னும் நீடிக்கிறது.

ஆங்கிலத்தில் படித்ததில் best narrative novel என்று புகழப்படும் ’Papillon" என்னை, என் சிந்தையை, என்னுடைய எல்லா ஓய்வு நேரங்களையும் சில மாதங்களுக்கு வெகுவாக ஆக்கிரமித்துக் கொண்டது. ஒரு பழைய புத்தகக் கடையில் 12 ரூபாய்க்கு வாங்கிய இதனை பாதி படித்த நிலையில் ஒரு பஸ் பயணத்தில் தொலைத்துவிட்டு, பிறகு எத்தனை நூறு ரூபாய் ஆனாலும் எங்கே கிடைத்தாலும் வாங்க தயாராக இருந்தேன். அதிர்ஷ்டவசமாக அதன் ebook இணையத்தில் கிடைத்தது. பத்து பத்து பக்கமாக பிரிண்ட் எடுத்து படித்துமுடித்தேன். இனியும் பலமுறை மீள்வாசிப்பு செய்வேன் என்றே தோன்றுகிறது. அந்தளவு ஒரு adventurous நாவல். தமிழில் இதன் மொழிபெயர்ப்பு “பட்டாம்பூச்சி’ என்ற பெயரில் ரா.கி.ரங்கராஜனால் எழுதப்பட்டு இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் குமுதத்தில் தொடராக வெளிவந்தது. இதன் டிவிடியை டோரண்ட்களில் தேடி எடுத்தேன். ஆனால் நாவல் அளித்த வாசிப்பனுபவத்தை அதன் காட்சிப் படமோ அல்லது இதன் sequel ஆன “Banco" -வோ அளிக்கவில்லை.

சேகரித்து வைத்திருக்கும் சில நல்மாணிக்கங்கள் இன்னும் புரட்டப்படாமலே கிடக்கின்றன. அடுத்த மூன்று மாதங்களில் படித்து முடிக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.

”The Shawshank Redemption” உள்ளிட்ட சில கிளாஸிக்குகள், டோரண்ட்களில் கிடைக்கும் Kim -ki-duk இன் சில படங்கள் ஆகியவற்றை பார்க்க சேர்த்துவைத்து கைபடாமலே கிடக்கின்றன. இந்த நான்கு நாள் விடுமுறையில் சிலவற்றை பார்த்துமுடித்தேன். மற்றவற்றையும் அடுத்துவரும் மூன்று நாள் விடுமுறையில் பார்த்துவிட எண்ணுகிறேன். நண்பர் ஒருவர் பலமாக சிபாரிசு செய்யும் சில ஈரானிய சினிமாக்கள் இப்போதே கவனத்தை கவர்கின்றன. இம்மாதிரி சில Connoisseur-களின் சங்காத்தம் கிடைத்ததிலிருந்து வாழ்க்கையில் ரசனையின் வீச்சு கூடியிருக்கிறது. ஈடு கொடுக்கத்தான் முடியவில்லை. பாற்கடலை நக்கி குடிக்க நினைக்கும் பூனையின் நிலையில் நிற்கிறேன். எல்லாவற்றையும் அறிந்து அனுபவித்திட மனம் துடித்திட்டாலும் இந்த ஜென்மத்தில் முடியாது.

அலுவலகம் சார்ந்த பயணங்களைத் தவிர வேறு தனிப்பட்ட பயணம் எதுவும் மேற்கொள்ளாதது இந்த வருடத்தின் பெரும் குறை — எனக்கு மட்டுமல்ல என் குடும்பத்தினருக்கும். (இதில் பழநிக்கு மொட்டை போட போனதெல்லாம் கணக்கில் வராது). அதை அடுத்த வருடத்திலாவது நிவர்த்தி செய்ய வேண்டும்.

2000-ம் புத்தாண்டு அன்று சிகரெட் பழக்கத்தை விட்டு விடுவதாக புத்தாண்டு சங்கல்பம்(resolution) எடுத்துக் கொண்டேன். அத்துடன் விட்டும் விட்டேன். அதற்கு பிறகு அதுபோன்ற மனதை உறுத்தும் பெரும் பழக்கம் எதுவும் இன்றுவரை கிடையாது என்பதால், சங்கல்பத்திற்கு தேவை ஏற்பட்டதில்லை. ஆனால் ஒவ்வொரு வருடமும் இந்த வருடமாவது நாள் தவறாமல் ஒழுங்காக டைரி எழுத வேண்டும் என்று நினைப்பேன். 1998-க்கு பிறகு அது சாத்தியப்படவே இல்லை. ஒரு பத்து நாள் எழுதுவதோடு சோம்பேறித்தனம் கவ்விக் கொள்கிறது. எனக்கு பயன்படும் என்று பல வருடங்களாக எனக்கு புத்தாண்டு பரிசாக டைரி கொடுத்துவருகிறான் நண்பன் மணிகண்டன். அவனுக்காகவாவது எழுத வேண்டும்.

முக்கியமாக வரும் ஆண்டில் இருக்கும் பழைய வீட்டை புதுபித்துக் கொள்ள எண்ணியிருக்கிறேன். அதை முன்வைத்தே கடுமையாக உழைத்தும் வருகிறேன். பங்கு சந்தையில் புழங்குவதன் ஒரு சௌகரியம் சில முதலீட்டு வாய்ப்புகளை முதலில் நாம் அறிந்து கொள்ள முடிவது. அப்படி சிலவற்றை பயன்படுத்திக் கொண்டதில் கணிசமான லாபம் கிடைத்தது. என் சிறிய முதலீட்டை கொஞ்சம் பெருக்கவும் முடிந்தது. அதுபோல இன்னும் சில வாய்ப்புகள் கிடைத்தால் என் புது வீடு கனவு நிஜமாகும். உறு மீனுக்காக காத்திருக்கிறேன்.

இந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க நிகழ்வாக நான் கருதுவது — இங்கே உங்கள் அனைவருடன் எனக்கு ஏற்பட்டிருக்கும் இந்த தொடர்புகள்; அதன் காரணமாக புதுப்பிக்கப்பட்டிருக்கும் சில நட்புகள். அதற்கு வித்திட்ட பாலகுமார், சிங்காரவேலுக்கு நன்றி. குறிப்பாக தனி மடல்களில் மட்டும் உரையாடிக் கொண்டிருந்த என்னை இந்த பொதுதளத்திற்கு இழுத்துவந்து நிறைய எழுத வைத்து விட்டான் பாலா. இந்த குழுவை ஆக்டிவாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் உரையாட ஆரம்பித்து, பல வருடங்கள் விட்டு போயிருந்த எழுத்து மீண்டும் என்னை ஆகர்ஷித்துக் கொண்டுவிட்டது. எனினும் எப்போதும் நான் அடிப்படையில் வாசகன் மட்டுமே. அதை மேல்தாண்டிவரும் தகுதியை இன்னும் அடையவில்லை. எனக்கு ஆர்வமும் கொஞ்சம் அறிதலும் இருக்கும் துறைகள் அரசியல், மதம், கலை, இலக்கியம், சமூகம், வரலாறு. இவற்றைத் தவிர எனக்கு நிர்தாட்சண்யமாக தெரியாத விஷயங்கள் எதிலும் நான் கருத்து தெரிவிப்பதில்லை. மேலதிகமாக மேற்கண்டவையே இங்கு அடிக்கடி விவாதப் பொருள் ஆகிவருவதால் என் பங்களிப்பு மிகுதியாக தெரிகிறது. பிழை இருப்பின் பொறுப்பீராக!

இன்னும் சில மாதங்களுக்கு சில அலுவலக துறைசார் கல்விகளில் என்னை ஈடுபடுத்திக் கொள்ள இருப்பதால் இப்போது போல இனி அடிக்கடி இங்கே உரையாடல்களில் பங்கெடுத்துக் கொள்ள முடியாமல் போகலாம். எனினும் முடிந்தவரை தொடர்பில் இருக்க முயற்சிக்கிறேன்.

அனைவருக்கும் முன்கூட்டிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
மேலும்...

நாமக்கல்லின் இலக்கிய முகம் (1)

Posted: Sunday, December 27, 2009 | Posted by no-nononsense | Labels: , 0 comments
எனக்கு நாஞ்சில் நாடு என்று அழைக்கப்படும் கன்னியாகுமரி மாவட்டத்தின் மீது ஒரு விஷயத்தில் மாளாத பொறாமை உண்டு. அன்று முதல் இன்றுவரை சுந்தரம் ராமசாமி, நாஞ்சில் நாடன், ஜெயமோகன், அ.கா.பெருமாள் போன்ற பல இலக்கிய எழுத்தாளர்களை தமிழுக்கு நல்கிய மாவட்டம் அது. இந்த வரிசையில் உள்ள முதல் மூன்று பெயர்களை தவிர்த்து நவீன தமிழ் இலக்கியத்தின் வரலாற்றை எழுதுதல் சாத்தியமில்லை. என் மனதுக்கு நெருக்கமான கவிஞர் தொ.சூசைமிக்கேலும் அதே மாவட்டத்துக்காரர் தான்.

அது போல், நாமக்கல்லின் இலக்கிய முகம் யாது என்று சிந்தித்துப் பார்த்திருக்கிறேன். புத்தகப்பிரியர்களான சில நண்பர்களை வினவியும் இருக்கிறேன். நாமக்கல் கவிஞரை தாண்டி வேறு ஒருவரை சுட்டிக்காட்ட ஒருவராலும் இயலவில்லை. நாமக்கல் கவிஞர் தீவிரமான இலக்கியப் பணி ஆற்றியது சுதந்திரப் போராட்ட கால கட்டத்தில் - கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கு முன்பு. அதற்கு பிறகு நாமக்கல்லில் இலக்கியம் படைக்க
ஒருவருமே இல்லையா என்பதுவே என் ஆரம்ப கால தேடலாக இருந்தது. சோகம் என்னவென்றால், அங்கொன்றும் இங்கொன்றுமாக குமுதத்திற்கு காமாசோமா ஒருபக்க கதைகள் எழுதிவிட்டு இலக்கிய அந்தஸ்துக்கு துண்டு போட்டு காத்திருக்கும் ஒரு சிலரைத் தவிர, காத்திரமான இலக்கிய படைப்பாளி என்று சொல்லிக் கொள்ள ஒருவருமே இல்லை என்பதுதான் நிதர்சனமாக இருக்கிறது. சிலம்பொலியார் இருக்கிறார் என்றாலும், அவரும்கூட பழந்தமிழ் இலக்கியத்தில் திறனாய்வு செய்தவரே தவிர, படைப்பிலக்கியமாகிய புனைவில் ஈடுபட்டவர் அல்ல என்றே நினைக்கிறேன்.

எனினும், இரண்டு எழுத்தாளர்கள் மட்டும் தமிழக இலக்கிய அரங்கில் நம் மானத்தை காத்துவருகின்றனர். ஒருவர், கு.சின்னப்ப பாரதி. மற்றொருவர், பெருமாள் முருகன். ’கூளமாதாரி’ என்னும் வட்டார வழக்கு நாவல் எழுதி புகழ்பெற்ற பெருமாள் முருகன் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்தவர். நாமக்கல் அரசு ஆண்கள் கலைக் கல்லூரியில்(கரட்டு காலேஜ்) விரிவுரையாளராக பணியாற்றுகிறார். அவரை பற்றி இன்னொரு நாள். இப்போது நான் சொல்லவந்தது, கு. சின்னப்ப பாரதி பற்றி.

கு. சின்னப்ப பாரதி (பரமத்தி)வேலூர் வட்டம் பொன்னிரிப்பட்டியை சேர்ந்தவர். கொங்கு வேளாள கவுண்டர். இங்கு இனத்தைப் பற்றி வலிந்து நான் சொல்லக் காரணம் அவர் அதையெல்லாம் உதறித் தள்ளி பொதுவுடமைவாதியாக (கம்யூனிஸ்ட்) காலமெல்லாம் வாழ்ந்துவருபவர் என்பதால்தான். நாமக்கல் மாவட்ட மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஆனிவேராக இயங்கியவர்களில் ஒருவர் அவர். அதுமட்டுமன்றி, இயக்கத்தின் பிரபலமான செம்மலர் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றி இருக்கிறார். அவருடைய கம்யூனிச இயக்க செயல்பாடுகளின் இடையே ஒரு தீவிர படைப்பிலக்கியவாதியாகவும் பரிணமித்து சில அற்புத புதினங்களை தமிழுக்கு தந்திருக்கிறார். இடதுசாரி இலக்கியத்தில் முக்கியமானதாக பெரும்பான்மையான விமர்சகர்களால் சுட்டிக்காட்டப்படுவது அவரது தாகம் மற்றும் சங்கம் ஆகிய நாவல்கள் ஆகும். ஏனையவை, தலைமுறை மாற்றம், சர்க்கரை, பவளாயி, சுரங்கம். இவற்றில் நான் தாகம் தவிர மற்றவற்றை இன்னும் படிக்கவில்லை என்பதால் படைப்பை முன்வைத்து கருத்துகூற முடியவில்லை. இருந்த போதிலும், படைப்புகளைப் படித்த ஜெயமோகன் போன்ற மற்ற படைப்பாளிகளிடம் உரையாடிய வகையில் கு. சின்னப்ப பாரதியின் எழுத்துக்கள் பெற்றுள்ள மரியாதையை உணர்ந்து கொள்ள முடிகிறது.

இவரை நான் முதலும் கடைசியுமாக சந்திந்தது, நாமக்கல்லின் பிரபல இடதுசாரி சிந்தனையாளரும் என் உறவினருமான கே.பழனிசாமியின் மொழிபெயர்ப்பு நூல் வெளியீட்டு விழாவில். குழுமியிருந்த கூட்டத்திற்கு இடையில் பெரிதாக பேச சந்தர்ப்பம் கிடைக்கவில்லை எனினும், கொல்லிமலையில் 1950 வாக்கில் நடைபெற்ற கந்துவட்டி எதிர்ப்பு போராட்ட அனுபவங்கள் பற்றி சிறிது மட்டும் கேட்டு அறிந்தேன். வரலாறு தெரியாதவர்களால் கம்யூனிஸ்ட்கள் என்றால் ஏதோ தெருமுக்கில் நின்று கோஷமிடும் கோமாளிகள் மாதிரி பார்க்கப்படுகிறார்கள். அவர்கள் சமூகத்திற்கு ஆற்றியுள்ள பணிக்கு நிகராக இன்னொரு இயக்கத்தை யாராலும் சுட்டிக் காட்ட முடியாது. நான் மேற்சொன்ன அந்த கொல்லிமலை சம்பவத்தை குறிப்பாக நான் கேட்டறிய காரணம் - உழைப்பதும் அதைக்கொண்டு பிழைப்பதும் அன்றி வேறொன்றும் அறியாத ஒரு பழங்குடி இனத்தின் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறை, அடக்குமுறை பற்றிய ஒரு காலகட்டத்தின் உண்மை வரலாற்றை அறிந்து கொள்ளும் நோக்கத்தில்தான். நம்மை சுற்றி பல நூறு வரலாறுகள் பனி மறைக்கும் பார்வையாக காலத்தால் மறைக்கப்பட்டு கிடக்கின்றன. அவற்றை அறிதலின் மூலம் நாம் நம் உண்மையான வரலாற்றை மீட்டெடுப்பது, காலம் காலமாக நம் முன்னால் பரப்பப்பட்டுவரும் பொய்யுரைகளை கட்டுடைக்க உதவும். இதனால்தான் நான் தீராத சரித்திர காதலனாக இருக்கிறேன். பார்வை நாளுக்கு நாள் தெளிவடைந்து வருகிறது.

அந்த ஒருமுறைக்குப் பிறகு வேறு எந்த இலக்கிய கூட்டங்களிலும் கலந்து கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. சந்தர்ப்பம் கிடைத்தாலும் சந்தர்ப்பவாத முகஸ்துதிகள் மட்டுமே இலக்கிய உரைகளாக பொழியப்படும் இடத்தைவிட்டு அகன்றே வருகிறேன். இதனால் கு. சின்னப்ப பாரதி அவர்களை பிறகு சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இன்று இணையத்தை மேய்ந்து கொண்டிருந்த போது கு. சின்னப்ப பாரதிக்கு சென்னையில் நடைபெற உள்ள புத்தக கண்காட்சியில் கலைஞர் பொற்கிழி விருது அளிக்கப்பட உள்ளது என்று அறிந்தேன். எத்தனையோ செய்திகள் நம்மை கடந்து போகின்றன. நமக்கு சம்மந்தமுள்ளது என்று அறியாமலே அவற்றில் எத்தனையோ பெயர்களை நாம் கடக்கிறோம். அப்படிப்பட்ட ஒரு பெயராகவே கு. சின்னப்ப பாரதியினுடையதும் நாமக்கல்வாசிகளால் கடந்து செல்லப்படுகிறது. அவர்களுள் நாமும் ஒருவராக இல்லாமல் குறைந்த பட்சம் அவரை பற்றி தெரிந்து கொள்ளவாவது செய்யலாமே என்ற நோக்கத்தில்தான் இதனை எழுதினேன். வேறு சந்தர்ப்பங்களில் மற்றவர்களைப் பற்றியும் எழுதுகிறேன்.
மேலும்...

சொர்க்கமே என்றாலும்..

Posted: | Posted by no-nononsense | Labels: 0 comments
நண்பர்களுடனான மடலாடலின் ஓரிடத்தில் விகுதியில் ஒற்றுமை கொண்டு ஒன்றை புதிதாக முயற்சித்து பார்த்தேன். இன்னும் பயிற்சி தேவை என்பது எனக்கே புரிகிறது:
செய்தி 1: இந்த வார ஜூ.வி:
கூலாகச் சிரித்த கழுகார், "உம்மையும் வாசகர்களையும் விட்டு நான் எங்கே போகப் போகிறேன். ஆனால், இடைத்தேர்தல் வெற்றிச் செய்தி வந்த களிப்போடு முதல்வர்தான் பெங்களூரு கிளம்பிவிட்டார். அங்கேகூட ஓய்வெல்லாம் கிடையாதாம். 'பொன்னர் சங்கர்' திரைப்படத்தின் கதை - வசனத்தை வேகமாக முடிக்கப் போகிறாராம். ஒரு வாரம் தங்குகிறார். முதல்வருக்கு முன்பாகவே அவரது துணைவி ராஜாத்தி அம்மாள் ஹாங்காங்கிளம்பி விட்டார். முதல்வரின் பேரன் உதயநிதி ஸ்டாலின் ஜோர்டான்பறந்துவிட்டார். முதல்வரின் நிழலான உதவியாளர் சண்முகநாதனோ தன் மகளைப் பார்க்க மலேசியா சென்றிருக்கிறார். தலைமைச் செயலாளர் ஸ்ரீபதியும்கூட, முதல்வர் இல்லாத நேரம்தான் தனக்கும் சற்று ரிலாக்ஸ் என்று எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு சுற்றுலா போயிருக்கிறார். தயாநிதி மாறனும், கலாநிதி மாறனும்கூட குடும்பத்தோடு புத்தாண்டைக் கொண்டாடுவது வெளிநாட்டில்தானாம்!"

செய்தி 2:
TPN மதுரை போய்விட்டார். சரவணன் நாமக்கல் போய்விட்டார். மாது கோவைபோய்விட்டார். காவியம் படைக்கும் நோக்கில் அன்பு காவியனின் தந்தை (சி.சக) அடிக்கடி காணாமலே போகிறார். அநேகமாக அண்ணன் ஜெய்குமார் கூட குமாரகம் போனாலும் போவார் (இந்த வருசம் புத்தாண்டு கொண்டாட பிரிட்னி ஸ்பியர்ஸ் அங்கேதான் வர்றாராமே.. hee hee).

“ஏண்டா செக்குமாடாட்டம்
சுத்தி சுத்தி வாராட்டி
நீயும் எங்கிட்டாச்சும்
கெளம்புனாதான் என்ன?”

“அட போ மக்கா..
அங்கிட்டு இங்கிட்டு
எங்கிட்டு சுத்தினாலும்
கால் ஓஞ்சதும் - மாடு
கட்டுதாரைக்குத்தான்
வந்தாவணும்
கருக்கல்ல எழுந்துபுட்டு
காபிதண்ணி குடிச்சிபோட்டு
கிரிக்கெட் விளையாடிபோட்டு
ஆத்துதண்ணில முக்கிபுட்டு
அம்மா-கையில தின்னுபுட்டு
கம்ப்யூட்டர்ல மொக்கைபோட்டு
பி.டி-ல ரூமபோட்டு
பீர்புட்டிய தூக்கிபோட்டு
கூடி கும்மாளம்போட்டு
புரோட்டாவ சைடிஷ்போட்டு
கைநக்க தின்னுபுட்டு
வெத்தலைய வாயில்போட்டு
நல்லபிள்ள வேஷம்போட்டு
நாத்தத்தை தொரத்திபுட்டு
பொறவாசல்ல கட்டில்போட்டு
”சொர்க்கமே என்றாலும்....”
இளையராஜா பாட்டபோட்டு
கண்மூடி தூக்கம் போட்டு - இப்படி
சொந்தஊர்ல போட்டுபோட்டு
தாக்கற இந்த ஜாலிஜாட்டு
பீட்டர் மேல பீட்டர் உட்டு
துட்டு மேல துட்டுபோட்டு
வேகேஷன் உதார் உட்டு
போற எடத்துல கெடைக்குமாலே
என் செவத்தமூதி கைநாட்டு!”


(நீதி: ஆடமாட்டாத சிறுக்கிக்கி மேட கோணலாம்)
மேலும்...

பாலியல் எழுத்துக்கள் ஒரு பார்வை

Posted: Saturday, December 26, 2009 | Posted by no-nononsense | Labels: 0 comments
பாலியல் கதைகள் குறித்து நண்பனுடனான உரையாடலின் ஒரு பகுதி:

எந்த புத்தகம் என்று கேட்பதிலிருந்து நீ ஏராளமாகப் படித்திருக்கிறாய் என்பது புலனாகிறது. ஏதோ முன்பு ஒருமுறை ஜேப்பியார் பற்றி பேச்சு வரும்போது நண்பர் ஒருவர் சொன்ன தகவலைத்தான் பகிர்ந்து கொண்டேன். அதற்காக புள்ளி விவரமெல்லாம் கேட்பது அநியாயம் ;-))

எனக்கு இந்த வகையறாவில் மருதம் என்கிற ஒரு புத்தகத்தின் பெயர் மட்டுமே ஞாபகம் இருக்கிறது. ஏனென்றால் அதுதான் நான் படித்த முதல் புத்தகம். அதற்கு பிறகு உன்னைப் போல ஏராளமாக இல்லாவிட்டாலும், தாராளமாக நானும் கொஞ்சம் படித்து தள்ளியதில், பெயரெல்லாம் மறந்துவிட்டது. அம்மாதிரி புத்தகங்களுக்கு பெயரா முக்கியம்? மேலும், வாங்கியதும் முதலில் செய்வதே அட்டையை கிழித்து எறிவதுதான். அவ்வளவு கலர்ஃபுல்லாக அட்டை இருக்கும். தூரத்திலிருந்து பார்த்தால் கூட கண் அவிந்துபோகும்!

இதெல்லாம் பதின்ம வயதில். பின்னர் எழுத்தில் படித்த நாயகர்களை விட எகிடு தகிடான scandalists சிலரை நண்பர்களாக வாய்க்க பெற்றபின், காம கதை புகழ் சரோஜாதேவியெல்லாம் சாதாதேவியாகவே தெரிகிறார்.

கமல் ஒருமுறை கவிதை எழுதினாராம்,

எந்த பெண்ணை
தொட்டாலும்
அம்பரீஷ் வாசம்
அடிக்கிறதே!

- என்று. திரையுலகில் கமல் ஒரு காஸனோவா என்றால் அம்பரீஷ் ஒரு ரஸ்புடின். இவர்களெல்லாம் ஜூஜூபி என்னும்படியாக எனக்கு ஒரு நண்பன் இருந்தான். பார்க்க பரமசாதுவாக இருந்தவனுடன் ஒருமுறை பைக்கில் திருச்செங்கோடு வரை பயணிக்க நேர்ந்தது. உள்ளே கொஞ்சம் உற்சாக பானம் சென்றிருந்ததால் -மனதளவில் என்ன பிரச்னையோ- உன்மத்தம் பிடித்து ஒவ்வொரு அனுபவமாக உளற ஆரம்பித்தான். காதில் புகைவர நொந்து நூலாகி அன்று விட்டதுதான், அதற்கு பிறகு கற்பனை செக்ஸ் கதைகளை தொடவே இல்லை. கேள்விப்படும் ரியல் கதைகளை விட ரீல் கதைகளுக்கு சுரத்து குறைவுதான்.

ஆங்கிலத்தில் erotica literature என்று இலக்கிய வகையே உண்டு. அதில் மட்டுமே புகழ்பெற்று விளங்கும் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். இங்கே போல், அங்கே அது நாலாந்தரமாக பார்க்கப்படுவதில்லை. நம் ஊரில் அப்படி ஒரு எழுத்தாளரை சொல்ல வேண்டுமானால் சாரு நிவேதிதாவை சொல்லலாம். அவருடைய ஜீரோ டிகிரி, காம ரூப கதைகள், மதுமிதா சொன்ன பாம்பு கதைகள் எல்லாம் அந்த வகைதான். தமிழில் அதிக ஹிட்ஸ் கிடைப்பதும் அவர் தளத்திற்குத்தான்.

பழந்தமிழ் இலக்கியத்தில் காமம் தொட்டு எழுதியவர்களில் என்னைப் பொருத்தவரை எழுத்தின் தரத்தில், சுவை நயத்தில் விரத தாபம் மேலிடும் ஆண்டாளின் சில பாடல் வரிகளுக்கு அருகில் நிற்க கூட இன்றுவரை ஆள் கிடையாது என்பேன். (இது தெரியாமலேத்தான் மார்கழி முழுவதும் கோவில்களில் திருப்பாவையையும் திருமொழியையும் பஜனை செய்து கொண்டிருக்கிறார்கள் நம் ஊர் பெண்கள்). உதாரணம்:

1. குற்றமற்ற முலைதன்னைக்
குமரன் கோலப்பணைத்தோளோடு
அற்றகுற்றம் அவைதீர
அணைய அமுக்கிக்கட்டீரே!

2. பொங்கிய பாற்கடல் பள்ளிகொள்வானைப்
புணர்வதோர் ஆசையினால் என்
கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதுகலித்
தாவியை ஆகூலம் செய்யும்!

- ஆண்டாளின் நாச்சியார் திருமொழி

அவருக்குப் பிறகு கம்பர் மட்டுமே கண்ணுக்கு தெரிகிறார். கம்பராமாயணம் பற்றி எழுத வேண்டுமானால் நாளெல்லாம் எழுதிக் கொண்டே இருக்கலாம். நாம் ’அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள்’ என்று படித்திருக்கிறோம். பயன்படுத்தியும் வருகிறோம். ஆனால் அண்ணல் எங்கே நோக்கினான்; அவள் எங்கே நோக்கினாள் என்பதை கம்பராமாயணம் கற்று அறிக.


பி.கு: நேரம் இப்போது 8.55 AM. காலையில் பேப்பர் படிக்கலாம் என்றுதான் கம்ப்யூட்டர் முன்னால் அமர்ந்தேன். என்னை கிளறிவிட்டு, பாக்ஸிங் டே அன்று பாலியல் எழுத்து பற்றி பாராயணம் செய்ய வைத்ததற்கு அருமை நண்பர்கள் நீங்களே பொறுப்பு!

ஈஸ்வரோ ரக்‌ஷது!
மேலும்...

தண்டட்டி கருப்பாயி

Posted: Tuesday, December 22, 2009 | Posted by no-nononsense | Labels: 0 comments
அந்திசாய இன்னும் நேரம் இருந்தது. இருந்தும் ஏனோ இன்று சீக்கிரமே இருட்டிவருவது போல ஒரு உணர்வு. மெல்ல கதவுக்கு வெளியே தலையை நீட்டியவன் மழை வருமா என்று அன்னாந்து வானம் பார்த்தேன். மனைவி, குழந்தை சகிதம் வெளியே செல்ல வேண்டியிருந்தது. செஞ்சாந்தை அள்ளி தெளித்தாற் போல சிவந்திருந்தது கீழ்வானம். இப்போதைக்கு தூறலுக்குகூட வாய்ப்பில்லை.

“மேல மட்டும் பாத்தா பத்தாது. அக்கம் பக்கமும் கழுத்த திருப்பி பாரு. அந்த கொள்ளி கண்ணு கெழவி கண்ணுல உழாமப் போனாலே எல்லாம் நல்லா நடக்கும்”

என்னடா இது இன்னும் ஆரம்பிக்கவில்லையே என்று நினைத்தேன். ஆரம்பித்துவிட்டது. நாங்கள் வெளியே செல்கிறோம் என்றாலே அம்மாவுக்கு அங்கங்க வெட்டிப் போட்டிருக்கும் பாதாள சாக்கடை குழிகளை விட எங்க தெரு கருப்பாயியின் விழிகளைப் பற்றித்தான் அதிக கவலை. ’என் ஊட்டு மேலயே எப்ப பாரு அவளுக்கு கண்ணு’ என்று அந்த ஆயாவை எப்பவும் வையும்.

காரணம் இல்லாமலும் இல்லை. எங்கள் வீட்டருகில் வசிக்கும் கருப்பாயி ஆயா அந்த தெருவுக்கே சட்டாம்பிள்ளை மாதிரி. காதில் தண்டட்டி ஆடியபடி பேசுவதால் அதற்கு ’தண்டட்டி ஆயா’ என்று பட்ட பெயர். யார் எங்கே போனாலும் அதுக்கு தெரிஞ்சே ஆகணும். நாம் சொல்லாவிட்டாலும் கேட்கவெல்லாம் வெட்கமேப் படாது. “அப்பறம்.. கெளம்பிட்டாப்லருக்கு” என்று அது இழுத்தாலே எல்லோரும் எதையாவது ஒரு காரணத்தை சொல்லிவிட்டு நகர்ந்துவிடுவார்கள். இல்லையென்றால் இன்னும் குறைந்த பட்சம் பத்து கேள்விக்காவது பதில் சொல்ல வேண்டியிருக்கும்.

இதைப் பார்த்தாலே அம்மாவுக்கு பற்றிக் கொண்டு வரும். இருந்தாலும் உறவுமுறை பெரிசுகளில் போனதுபோக இன்னும் எஞ்சி இருப்பது இது ஒன்றுதான் என்பதால் முகதாட்சண்யத்துக்காக காதுபட ஒன்றும் சொல்லாது.

எனக்கு கண்ணு வைக்கிறதுன்னா என்ன என்று இன்றுவரை புரிவதில்லை. வீட்டில் குழந்தை கொஞ்சம் சிணுங்கினாலும் கண்ணுபட்டு போச்சி என்று அம்மா கரித்துக் கொட்டி மிளகாய் சுத்திப் போடுவதைக் காணும்போது வேடிக்கையாக இருக்கும்.

வண்டியை வெளியே எடுத்து ஸ்டாண்ட் போட்டுவிட்டு தண்டட்டி ஆயா எப்போதும் இருக்கும் திண்ணையைப் பார்த்தேன். வெறிச்சோடிக் கிடந்தது. இதென்ன உலக அதிசயம் என்று மனதினுள் எண்ணியவாறே அம்மாவிடம் திரும்பி “எங்கம்மா ஆயாவ காணோம்?” என்றேன்.

“ஏன் இருந்து கண்ணு வெக்கறதுக்கா? கெளம்புங்க சீக்கிரம்” உறுமினாள் மனைவி.

கிளம்பிவிட்டேன். இப்படி நான் வெளியே கிளம்புவதைக் கண்டால் சில சமயம் “ராசா.. மணிகூண்டு பக்கம் போனா வெட வெடன்னு இருக்கறதா பாத்து ஒரு கெவுளி வாங்கியாடா’ என்று சொல்லி வெத்தலை வாங்க பணம் எடுத்து நீட்டியிருக்கும். மற்றவர்கள் வாங்கி வருவதில் அதற்கு திருப்தி இருந்ததில்லை. கடைவீதியை கடந்து போகும்போது எதற்கும் இருக்கட்டும் என்று ஒரு கவுளி வாங்கிக் கொண்டேன்.

சென்ற வேலை முடிந்து வீடு திரும்பும்போது மணி ஒன்பது ஆகிவிட்டிருந்தது. தெருவிளக்கு விட்டு விட்டு எரிந்தது கண்ணை உறுத்தியது. அரைகுறை தூக்கத்தில் இருந்த குழந்தையை பற்றிய நினைவில் தெருவை பராக்கு பார்க்காமல் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே சென்றுவிட்டேன்.

அடுத்த நாள் காலை வேலைக்குச் செல்லும்போது கவனித்தேன் - இன்னும் திண்ணை காலியாகவே இருந்தது. கடைசி நேரம்வரை நீட்டி நெளித்துவிட்டு பஸ் வர ஐந்து நிமிடமே இருக்கும்போதுதான் அரக்க பரக்க வீட்டை விட்டு ஓடுவது என் வழக்கம்.

“பொழுதோட போனானான் பொன்னான் மவன். அளுக்கி குலுக்கி ஓடுனானான் ஆம கிறுக்கன்” என்று நான் ஓடுவதைப் பார்த்து இரண்டு நாளுக்கு ஒருமுறையாவது ஏசும் தண்டட்டி ஆயா.

வேலை முடிந்து வரும்போதும் இப்படித்தான் சீக்கிரமோ தாமதமோ ஆளை நிறுத்தி விசாரிக்காமல் விடாது. சில நாள் வேலூர் மாமரத்து செட்டியார் கடையில் புகையிலை வாங்கிவந்து தருவேன். அப்போது பார்க்க வேண்டுமே வாயெல்லாம் பொக்கையை!

அடுத்தடுத்த நாட்கள் ஆனபோதும் ஆயாவைக் அதன் இடத்தில் காணவில்லை. சரிதான்.. கெழவி, மக வீட்டுக்கு போயிடுச்சி போல என்று முதலில் எண்ணிக் கொண்டு நடையைக் கட்டிவந்தேன்.

”எப்போதாவதுதான் போகும். போனாலும் பொழுது சாய வந்திடும். மருமகனோட ஒண்ணு மண்ணா பழகாது. ரோசக்கார கிழவிக்கு என்ன பிணக்கோ.. கேட்டாலும் சொல்லாது. பெரிசுக்கு இந்த விஷயத்துல மட்டும் வாய் கெட்டி” பக்கத்து வீட்டு குப்பன் ஒருமுறை சொன்னது நினைவில் வந்துபோனது.

நேற்றுதான் தெரியவந்தது, ஆயா மக வீட்டுக்கு போன இடத்தில் நலுங்கிக் கொண்டதென்று.

இரவு உணவு முடித்து, கையில் குழந்தையை தூக்கிக் கொண்டு காத்தாட வெளியே வந்தேன். அக்கம் பக்கத்து அக்காமார்கள் தெரு முக்கில் கொட்டிக் கிடந்த மணற் பரப்பில் உட்கார்த்து அடிக்கும் அரட்டை சத்தம் காதில் கேட்டது. தெருமுனையில் வீடு இருப்பதில் இது பல நேரங்களில் தொல்லை என்றால், அண்டை வீட்டு நடப்பை தெரிந்து கொள்வதில் சில நேரங்களில் சௌகரியம்.

“ஆஸ்பத்திரியில் சேர்த்து குளுகோஸ் போட்டதில் இப்ப பரவாயில்லையாம். ஆனால் இனிமே இங்க தனியாவிட மாட்டாங்களாம்”

“போயிடும்னு பார்த்தேன்.. பொழச்சிகிச்சே” இன்னொரு அக்கா விசனப்பட்டாள். ஓரியாக பிறந்து ஓரி வீட்டில் வாழ்க்கைப்பட்டவள் அவள்.

”இப்போதைக்கு போயிடுமா என்ன.. கெழவி கடுங்கட்டையப்பா. அந்த காலத்தில சும்மாடு போட்டு எத்தனை கட்டு தூக்கியிருக்கும் எத்தனை வெள்ளாம கண்டுருக்கும்”

நீட்டி முழக்கியபடி நீண்டு சென்ற பேச்சு ஆயாவை விட்டு விலகி அடுத்தடுத்த வீடுகளை அலசி ஆராய ஆரம்பித்ததும், அங்கிருந்து அகன்றேன். மொத்தத்தில் இனி கருப்பாயி ஆயா இங்கே வராது என்பது புரிந்துவிட்டது.

நாட்கள் சென்றன. எப்பொழுதும்போல் இப்பவும் அடிக்கடி குடும்பத்துடன் வெளியே சென்று வருகிறேன். ஆனால் “எங்கியாம்..’ என்று இப்போதெல்லாம் யாரும் தெருவில் கேட்பதில்லை. காலையில் இன்னும் அதே கடைசிநேர பரபரப்புதான். ”தொங்குனு ஓடாதடா தொங்கியான்..’ என்று திட்ட யாருக்கும் தைரியமில்லை. அன்றொரு நாள் ஓடும் பஸ்ஸிலிருந்து குதித்ததில் கால் வலி ஏற்பட்டு நொண்டியபடி வந்தேன். ”ஏண்டா பயலே.. எங்கிட்டாட்டம் உழுந்த..” என்று அருகில் அழைத்து வாஞ்சையுடன் தடவி கொடுத்து வைத்தியம் சொல்ல நாதியில்லை.

எல்லோரும் ஏதாவது சீரியலில் முடங்கி வீட்டினுள்ளே கிடக்கிறார்கள். சில சமயம் பல பேர் புழங்க தெரு நிறைந்து கிடந்தாலும் ஆள் அரவமற்ற தனிமை என்னை சூழ்ந்திருப்பது போல் உணர்கிறேன். யாருக்கும் யாரிடமும் பேச பெரிதாக விஷயமில்லை. பேசினாலும் எதையும் பல கூட்டல் கழித்தல்களுக்கு உட்படுத்தி கணக்கு போட்டு பேசும் கூட்டத்தினிடையே இயல்பான மனிதர்களை தேடித் தேடி சலிக்கிறேன். வெள்ளந்தியான மனசும் மனிதர்களும் அரிதாகி வருகிறார்கள். பணமும், படித்த மேட்டுகுடி நாகரிகமும் மனிதர்களுக்கு தரும் இந்த நாசூக்குத்தனம், மனதில் வெறுமையை மட்டுமே ஏற்படுத்துகிறது. தண்டட்டி போல இருக்கும் ஒன்றிரண்டு பெரிசுகளும் போய்விட்டால் இந்த தெருவும் உலகமும் இனிமேல் இப்படித்தான் இருக்கும் என்று தோன்றுகிறது.

எண்ணச் சுழலில் சிக்கிய மனதை மீட்க எண்ணி நகரும்போது அன்று ஒருநாள் அதற்காக வாங்கிவந்த வெற்றிலையின் காய்ந்த மிச்சம் தொட்டிமேல் இன்னமும் கொஞ்சம் எஞ்சி கிடப்பது கண்ணில்பட்டது.

“ஏம்மா.. ஒரு எட்டு போயி அந்த தண்டட்டிய பாத்துட்டு வரவா?” அம்மாவிடம் கேட்டேன்.

”அட ஏண்டா.. நான் போனப்பவே என்ன ஏதுன்னு ஊட்டு வெவகாரம் முச்சூடும் கேட்டு தொன தொனத்துது.. உன்ன பாத்தா பழம புடிச்சிக்கும். அப்புறம் வெரசுல போக உடாது”

என் முகத்தில் புன்முறுவல் பூத்தது.

“எனக்கு வேண்டியதும் அதுதானம்மா!” மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.
மேலும்...

நடிகர்களின் அரசியல் ஆசை

Posted: Sunday, December 20, 2009 | Posted by no-nononsense | Labels: , 0 comments
பாகவதர் / எம்ஜிஆர் / ரஜினி / விஜய் / அஜித் -- என்று எல்லா காலத்திலும் யாருக்காவது இப்படிப்பட்ட பக்தர்கள்(can't call them just fans) இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள். இனியும் இருப்பார்கள் என்றுதான் தோன்றுகிறது. நம் நாட்டில் மட்டும்தான் என்றில்லை, மேலை-கீழை நாடு என்று அனைத்து நாட்டு கலாச்சாரத்திலும் இருப்பதுதான். கட் அவுட்டும் பாலாபிஷேகமும் தான் நம்மை கொஞ்சம் வித்தியாசப்படுத்துகிறது.

நடிகராக இருக்கும்வரை எல்லாமே சரிதான். ஆனால் அரசியல் என்று வரும்போது நிறைய eligible criteria's முளைத்துவிடும். உதாரணமாக ஒருவேளை நாளை விஜய் அரசியலில் இறங்கினால் அப்போது விஜய் - ஜோஸப் விஜய் ஆக மத ரீதியான கண்ணாடி கொண்டு பார்க்கப்படும் நிலை உருவாகலாம். இப்போது தன்னுடைய ஒவ்வொரு பட ரிலீஸிற்கும் முன்பாக அவர் வேளாங்கண்ணி மாதா கோவில் செல்வது அப்போது இந்துக்களிடையே பெரிய அளவில் விமர்சனம் செய்யப்படலாம். நிறைய இருக்கிறது. இன்றைய தேதிக்கு ரஜினிக்கு கூட அரசியலில் எதிர்காலம் இல்லை. ஒரே ஒருமுறை அந்த வாய்ப்பு 1994 இல் வந்தது. அதை அவர் தவறவிட்டு விட்டார். அத்துடன் ரசிகர்களையும் தாண்டி பொதுமக்களிடமும் அவர் குறித்து இருந்த அரசியல் எதிர்பார்ப்பும் செல்வாக்கும் மறைந்துவிட்டது.

இப்போது அரசியலில் இருக்கும் விஜய்காந்த் இப்படியே இன்னும் இரண்டு தேர்தல்களில் கூட்டணி இன்றி தனியாக போட்டியிட்டால், இப்போது கிடைக்கும் 10% ஓட்டுகூட கிடைக்காமல் போய்விடும். விஜய்காந்த் யாருடனாவது கூட்டணி வைப்பதுதான் அவர் கட்சியின் எதிர்காலத்திற்கு நல்லது. உண்மையில் விஜய்காந்த் உறுமீனாக காத்திருப்பது ஜெயலலிதாவிற்கு பிறகு ஏற்பட இருக்கும் அரசியல் வெற்றிடத்தை நிரப்புவதற்காக. அதுவரை கட்சி இருக்க வேண்டுமானால் அது ஏதாவது கூட்டணியில் இருந்தே ஆகவேண்டும்.

இந்த நடிகர்கள் எல்லாம் அரசியல் முன்னோடியாக கருதுவது எம்ஜிஆர் அடைந்த அரசியல் வெற்றியை. பார்க்க தவறுவது அதிமுகவுக்கு முந்தைய எம்ஜிஆரின் அரசியல் சரித்திரத்தை.

கான மயிலை கண்டாடும் வான் கோழிகள்!
மேலும்...

டிக்கெட் எடு.. கொண்டாடு..!

Posted: Friday, December 18, 2009 | Posted by no-nononsense | Labels: , 0 comments
எங்கள் அலுவலகத்தில் உதவியாளராக 21 வயது நிரம்பிய இளைஞன் ஒருவன் இருக்கிறான். அவனுடைய சின்சியாரிட்டி காரணமாக அவன்மேல் எனக்கு எப்போதும் தனிப் பிரியம் உண்டு. என்னுடைய மேஜையில் இருந்து அலுவலகத்தில் பணியாற்றும் அனைவரின் நடவடிக்கைகளையும் எளிதாக கவனிக்க முடியும். இன்று காலையில் இருந்து பார்க்கிறேன், இவன் மட்டும் கொஞ்சம் பதட்டமாக, ஜன்னலில் ஒரு கண்ணும், sms இல் ஒரு கண்ணுமாக காணப்பட்டான். கூப்பிட்டதைக்கூட இரண்டொருமுறை கவனிக்கவில்லை.

அடுத்தமுறை அவன் ஜன்னலில் நின்று நோட்டம் விடும்போது நானும் அருகிலிருக்க நேர்ந்ததால் என்னவென்று எட்டிப் பார்த்தேன். விஷயம் புரிந்துவிட்டது.

எங்கள் அலுவலகத்தின் எதிரில் இருக்கும் ’அஜந்தா’ சினிமா தியேட்டரைத்தான் பார்த்தபடி இருந்திருக்கிறான். அதில்தான் இன்று வேட்டைக்காரன் ரிலீஸ் ஆனது. காலையில் இருந்து அவ்வப்போது சரவெடிகளின் ஓசை காதைப் பிளந்து கொண்டிருக்கிறது.

மெல்ல அவனிடம் பேச்சுக் கொடுத்தேன்.

“என்ன சதீஷ்.. வெடியா கொளுத்துறானுங்க பசங்க.. படம் ஹிட்டு போல?”

“ஆமாங்க சார்.. சூப்பரா இருக்காம். கில்லிக்கு அப்பறம் இதுதான்னு ஃப்ரெண்ட்ஸ் சொல்றாங்க சார்”

டீ வாங்க வெளியே செல்லும்போது விசாரித்திருக்கிறான் போலிருக்கிறது.

“நானும் அப்படித்தான் கேள்விப்பட்டேன். உனக்கு விஜய் பிடிக்குமா?’

‘சார்.. ரொம்ப பிடிக்கும் சார். காலேஜ் படிக்கும்போது திருப்பாச்சியே கட் அடிச்சி கட் அடிச்சி 60 தடவை பார்த்திருக்கேன் சார்”

”ஆறா? அறுபதா?.. சரியா சொல்லு, கேட்கலை”

“60 தடவைங்க சார். கூடதான் இருக்கும். கம்மியா இருக்காது” கண்கள் விரிய சொன்னவனை கண் இமைக்காமல் பார்த்தேன்.

”ம்ம்.. திருப்பாச்சியே 60 தடவைன்னா.. இந்த படம்?”

‘எப்படியும் 10 தடவையாவது பார்த்துருவேன் சார். படம் ஃப்ர்ஸ்ட்ல இருந்து கடைசி வரை ஃபாஸ்டா போகுதாம். தலைவர் கலக்கறாராம்.. “

இவன் குடும்பம் எவ்வளவு ஏழ்மையில் இருக்கிறது என்று எனக்கு தெரியும். இவனே இன்னொருவர் வீட்டில்தான் தங்கி படித்தான். அதனால் 60 தடவை என்று - இவன் சொன்னதுதான் ஆச்சரியமாக இருந்ததே தவிர, இப்படி ஒரே சினிமாவை பல தடவை பார்க்கும் பலரை சந்தித்திருக்கிறேன். முன்பு என்னுடன் வேலை செய்த பூபதி என்னும் விஜயகாந்த் ரசிகன், கேப்டன் பிரபாகரனை ஐம்பது தடவைக்கும் மேல் பார்த்ததாக சொன்னது மட்டுமல்லாது, அந்த கடைசி கோர்ட் சீன் முழுவதையும் ஒரு வக்கீல் போல நடந்தபடியே பேசியும் காண்பிப்பான்.

‘அவ்வளவு ரசிகன்னா இந்த படத்த நீ ஃபர்ஸ்ட் ஷோ பார்த்திருக்க வேண்டாமா?”

“எப்படிங்க சார்.. ஆபீஸ் இருக்கே”

நேற்று இரவு போன் செய்து இவன் இன்றைக்கு லீவு கேட்டதன் காரணம் இப்போது புரிந்தது. வேறு ஒருவரும் லீவில் இருந்ததால் கொடுக்கவில்லை. காரணமும் வலுவாக இல்லை.

“கவலைப்படாத.. இன்னைக்கு டிரேடிங் முடிந்ததும் 3.30க்கே நீ கிளம்பலாம்’

நான் சொன்னதைக் கேட்டு நம்ப முடியாமல் பார்த்தான். வழக்கமாக இவன்தான் கடைசியாக ஆபீஸ் பூட்டிவிட்டு போக வேண்டும்.

‘நிஜமாத்தான் சொல்றேன்.. Go and enjoy!. பட், நாளைக்கு உண்மையான ரிசல்ட் சொல்லணும். ஓகே”

இப்போது மணி 3.55 PM. சற்று முன்னர்தான் மகிழ்ச்சியுடன் விடை பெற்றுச் சென்றான்.

இதையெல்லாம் கடந்து தானே நாமும் வந்திருக்கிறோம்?
மேலும்...

நேற்று இல்லாத மாற்றம்

Posted: Thursday, December 17, 2009 | Posted by no-nononsense | Labels: , 0 comments
ஒரு காலத்தில் பஸ்ஸில் பயணிப்பது(நன்றி: சுஜாதா) என்றால் எட்டிக்காய் கசப்புதான். அருகில் இருக்கும் பரமத்தியில் மேட்ச் என்றாலேகூட ’பைக்கில் அழைத்துச் சென்றால்தான் ஆச்சு’ என்று ஜபர்தஸ்த் காட்டுவேன். ஆனால் கடந்த நான்கைந்து ஆண்டுகளாக பஸ் பயணங்கள் வாழ்வின் ஓர் அங்கமாக ஆகிவிட்டன. காலப் போக்கில் பழகியும் விட்டன. எந்த ஒரு பயணத்திலும் உற்று நோக்க ஒரு நூறு விஷயங்களாவது இருக்கின்றன என்பது என் அனுபவம். அது சுற்றியுள்ள மனிதர்களாக இருக்கலாம்; அல்லது ஜன்னலுக்கு வெளியே கடந்து செல்லும் காட்சிப் பொருள்களாகவும் இருக்கலாம், எல்லாமே ஏதோ ஓர் உள்ளுறை செய்தியின் சமிக்ஞைகள் தாம். அதை புரிந்து கொள்ளும் கலையை வளர்த்துக் கொள்வதில்தான் ரசனையின் சூட்சமம் அடங்கி இருக்கிறது.

சில நாட்கள் முன் சதீஷ்கண்ணனுடன் பேசிக் கொண்டிருந்தபோது, பயணத்தைப் பற்றிய ஒரு மாறுபட்ட கண்ணோட்டத்தைக் கூறினான். அன்றாட அச்சு பிச்சுகளில் இருந்து விலகிப் போய் தனிமைப்பட்டு சிந்திக்க அவனுக்கு பயணங்களே உதவுகின்றன என்றான். அதை நானும் பலமாக ஆமோதித்தேன். திருச்சிக்கும் நாமக்கல்லுக்கும் அலைந்து கொண்டிருந்த நேரங்களில் முடிவெடுக்க முடியாமல் ஒத்திப் போட்டுவந்த எத்தனையோ விஷயங்களைப் பற்றிய தெளிவுகள், பஸ் பயணங்கள் ஏற்படுத்திக் கொடுத்த தனிமையில் எனக்கு கிடைத்திருக்கின்றன.

இருப்பினும், ஒரே ஒரு விஷயத்திற்காக நம் ஊர் பஸ் பயணங்களை நான் வெறுக்கிறேன். அது சுகாதார கேடு.

பெரும்பாலும் ஏதாவது கைப்பிடியைப் பிடித்துக் கொண்டே தான் பயணம் செய்ய வேண்டியுள்ளது. அதை இதற்கு முன் யார் யாரெல்லாம் தொட்டார்களோ; என்ன வியாதிக்கான என்ன மாதிரி ஜெர்ம் அதில் ஒட்டிக் கொண்டிருக்கிறதோ என்று எப்போதும் ஓர் அருவெறுப்பு மனதின் ஓரத்தில் இருந்து கொண்டே தான் இருக்கிறது.

ஒருவரோடு ஒருவர் செருகிக் கொண்டு பயணம் செய்ய நேரும் சில நேரங்களில், நம் எதிரே நிற்கும் மனிதர் நம் முகத்திற்கு நேரே தும்முவார். இரண்டு கைகளும் இருபுறமும் எதையாவது பேலன்ஸ்க்காக பற்றிக் கொண்டிருக்கும் நிலையில், முகத்தை திருப்பிக் கொள்ளக் கூட அவகாசம் இருக்காது. அவர் வெளியேற்றுவதை நாம் சுவாசித்தே ஆக வேண்டிய நொம்பலத்தில் அகப்பட்டு விடுவோம். நம் முன்னோர்கள் மக்கள் தொகையை பெருக்கித் தள்ளியதற்கான தண்டனையை, ஏதாவது வியாதி ரூபத்தில் இன்று நாம் அனுபவிக்க நேரிடும்.

இந்த ஒரு காரணத்திற்காகவே வீடு கட்டியதும் கார் வாங்க விரும்புகிறேன். மற்றபடி இந்திய சாலைகளில் கார் பயணங்களை விட பஸ், ரயில் பயணங்களே பாதுகாப்பானவை என்பது என் கருத்து.

*

அண்மைகாலமாக சக பெண் பயணிகளின் மனோபாவத்தில் புரட்சிகரமான ஒரு மாற்றத்தைக் காண்கிறேன். அதுவும் குறிப்பாக இளம்பெண்களிடம். எங்கே உட்கார இடம் கிடைத்தாலும், சங்கோஜப்படாமல் சென்று அமர்ந்து கொள்கிறார்கள். அது மூன்று பேர் நெருக்கியடித்து அமரும் இருக்கையாகவும் இருக்கலாம்; தயங்குவதில்லை.

அன்று ஒரு நாள் ஒரு சம வயது பெண், பார்க்க கல்லூரி ஆசிரியை போன்ற தோற்றம்; கையில் ஜெஃப்ரி ஆர்ச்சரின் ‘Not a Penny More, Not a Penny Less’ இன் தமிழ் மொழிபெயர்ப்பு; நான் நிற்பது கண்டு அழைத்து தன் அருகே அமர்த்திக் கொண்டார். பிறகு புத்தகத்தில் மூழ்கிவிட்டார். எனக்குத்தான் பட்டும் படாமல் பக்கத்தில் அமர்ந்து பயணிப்பது படு அவஸ்தையாக இருந்தது. பாரதி கனவு கண்ட புதுமை பெண்களில் ஒருவர் போலும் என்று நினைத்துக் கொண்டேன். ஆனால், பிறகு அது போன்ற அமர்வுகள் சகஜமாகி விட்டன. பெரிதாக எடுத்துக் கொள்வதும் இல்லை.

எனினும், நேற்று சட்டென்று என் அருகில் அமர்ந்து கொண்ட பெண்ணைக் கண்டதும் கொஞ்சம் துணுக்குற செய்தேன். காரணம், அவர் ஓர் இளம் இஸ்லாம் பெண்! இரண்டு சீட்டுகள் தள்ளி அவர் கணவரும் அமர்ந்திருக்கிறார் என்பதையும் கவனித்தேன். இஸ்லாம் சமூக கட்டுப்பாடுகள் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை என்பதால், அப்பயணம் நிறைவுறும்வரை எனக்கு ஆச்சரியம் நீடித்தபடியே இருந்தது.

ஆண்-பெண் பேதம் தரும் அநாவசிய கூச்ச நாச்சங்கள், மதங்களை கடந்துமே கூட, குறைந்து வருவதாகவே தோன்றுகிறது.

எனினும், நம் பேரிளம் பெண்கள் இன்னும் அப்படியேத்தான் இருக்கிறார்கள் என்பது, சொல்லித்தான் தெரிய வேண்டும் என்றில்லை.
மேலும்...

படிப்பதும் படிக்க விரும்புவதும்

Posted: Wednesday, December 16, 2009 | Posted by no-nononsense | Labels: 0 comments
இரண்டு நாட்களாக க.நா.சு வின் ’பொய்த்தேவு’ கையில் தவழ்ந்து கொண்டிருக்கிறது. க.நா.சுவின் விமர்சன கட்டுரைகளை நிறைய படித்துள்ளேன். கணையாழியில் அவர் போட்டுவந்த டாப் டென் நூற் பட்டியல்களை சேகரித்து வைத்துள்ளேன். ஆனால், அவர் புதினங்கள் எதையும் இதுவரை வாசித்ததில்லை. பொதுவாக என் வாசக தேர்வுகள் அபுனைவாகவே(non-fiction) இருக்கும். அதில் படிக்க குறித்து வைத்துள்ளதையே இன்னும் படித்துமுடிக்க முடியாமல் இருப்பதால், புனைவுகள் பக்கம் நான் செல்வதே இல்லை. என்றாலும், பாலாஜி போன்ற தீவிர புனைவிலக்கிய ஆர்வலர்களுடன் உரையாட நேரும்போது புதின ஜூரம் நம்மையும் இயல்பாக தொற்றிக் கொண்டு விடும். அவனுடைய சிபாரிசின் பேரில் பொய்த்தேவை நூலகத்தில் இருந்து எடுத்து வந்துள்ளேன். இரண்டொரு பக்கங்களை தாண்டுவதற்குள்ளாகவே க.நா.சு வின் எழுத்து நடை வசீகரித்து விட்டது. அதற்காகவே முழுதும் படித்து முடித்து விடுவேன் என்று நினைக்கிறேன்.

க.நா.சு போல இன்னொரு விமர்சக ஜாம்பவான் சி.சு.செல்லப்பா. அவரின் ’வாடிவாசல்’, நான் படிக்க குறித்து வைத்துள்ள must read புதினங்களில் ஒன்று.

*



க.நா.சு வின் மருமகன் பாரதிமணி ஓர் அனுபவ களஞ்சியம். டெல்லியில் பெரிய நிறுவனங்களில் உயர் பதவிகள் வகித்து ஓய்வு பெற்றுவிட்ட அவர், உயிர்மை இதழில் அவ்வப்போது எழுதிவரும் கட்டுரைகளுக்கு பெரும் வாசகர் கூட்டம் உண்டு. அவைகள் தொகுக்கப்பட்டு ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ என்ற பெயரில் புத்தகமாக வெளியாகியுள்ளது. நான் வாங்க குறித்து வைத்துள்ள அந்த புத்தகத்தை உங்களுக்கும் பலமாக சிபாரிசு செய்கிறேன்.

பாரதிமணியை பல படங்களில் முதலமைச்சராக, நீதிபதியாக, அப்பாவாக பார்த்திருக்கலாம். பாரதி திரைப்படத்தில் பாரதியாரின் அப்பாவாக நடித்ததினாலேயே மணி, பாரதிமணி ஆனார்.

*

நேரம் கிடைக்கும்போது இனி இதுபோல் பார்த்த, கேட்ட, படித்த விஷயங்களை இங்கே பகிர்ந்து கொள்ள எண்ணியுள்ளேன். எல்லாவற்றுக்கும் நேரம் துணை செய்ய வேண்டும்.

மற்ற நண்பர்களும் அவர்களின் வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொண்டால் உபயோகமாக இருக்கும். தமிழில்தான் என்று இல்லை. ஆங்கிலத்திலும் எழுதலாம். அது ஆங்கில புத்தகமாகவும் இருக்கலாம்.

“The things I want to know are in books; my best friend is the man who'll get me a book I ain't read.”
- Abraham Lincoln
மேலும்...

புதுப் படங்களின் ஓபனிங் மற்றும் வசூல் வியூகம்

Posted: Sunday, December 13, 2009 | Posted by no-nononsense | Labels: 0 comments
Excerpts from a conversation with my friend on Cinema release and collection strategy:

ஒரு நடிகரின் படம் வெளியாவதற்கு முன்பே அது நக்கலுக்கும், நையாண்டிக்கும் ஆளாவது டி.ராஜேந்தருக்கு பிறகு விஜயின் படங்கள் தான் என்று நினைக்கிறேன். விஜய் romantic comedy மட்டும் செய்து கொண்டிருந்தவரை இந்நிலை இல்லை (விஜயின் ‘வசீகரா’ எனக்கு மிகவும் பிடித்தப் படம்).

சன் டிவியின் விளம்பர பலத்தில் வேட்டைக்காரன் ஓரளவு லாபகரமாக ஓடிவிட வாய்ப்பிருக்கிறது. அதை நம்பித்தான் ரெகார்டு பிரேக் விலைக்கு (ரூ 20.4 லட்சம்) நாமக்கல்லிலே கூட பெட்டி எடுக்கப்பட்டுள்ளது. ரஜினியின் சிவாஜியே 16 லட்சம் தான் என்கிறான் நம்ம ’பிலிம்நியூஸ்’ சுரேஷ்.

இப்போதெல்லாம் ஒரே சமயத்தில் நிறைய தியேட்டர்களில் வெளியிட்டு முதல் வாரத்திலேயே கலெக்சன் பார்த்து விடுவது தான் விநியோகஸ்தர்களின் வியூகம். சிவாஜி நாமக்கல்லில் மட்டும் இரண்டு தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது. ஒரு டிக்கெட்டின் விலை சராசரியாக ரூ. 100. இரண்டு தியேட்டரிலும் சேர்த்து ஒரு காட்சிக்கு 750 டிக்கெட் வீதம் நான்கு காட்சிகளை ஒரு நாளுக்கு ஓட்டினால், ஒரு நாள் கலெக்சன் = 3,00,000 (100*750*4* = 3,00,000). ஒரு வாரம் இப்படி ஓட்டினாலே கூட 21 லட்சம் வசூலாகி, லாபமாக ஐந்து லட்சம் மீதி நிற்கும். இப்போதெல்லாம் பெரிய படங்களின் லாப கணக்கு இதுதான். இதை அபிராமி இராமனாதன் ஒரு துக்ளக் பேட்டில் அருமையாக விளக்கியிருந்தார். இந்த கணக்கின்படிதான் கந்தசாமி வெற்றிப் படம் என்கிறார்கள் விநியோகஸ்தர்கள். அதனால் முன்புபோல் நூறு நாள் ஓடினால்தான் ஒரு படம் வெற்றிப் படம் என்று இல்லை.

ஆனால் இந்த வியூகம் நல்ல ஓபனிங் கிடைக்கும் நடிகர்களின் படங்களுக்குத்தான் செல்லுபடியாகும். நல்ல ஓபனிங் கிடைக்க ஒரு நடிகனின் பின்னால் பெரிய ரசிகர் கூட்டம் இருக்க வேண்டும். நல்ல கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகனை ரசிகர் கூட்டம் சீந்துவதில்லை. கமர்சியல் மசாலா ஐட்டங்களை சேர்த்து ஆக்சன் ஜிகினா ஜிகிடி காட்டும் நடிகனைத்தான் ’தலைவனாக’ நம் ஊர் குஞ்சு குளுவான்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். விக்ரம் போன்ற நல்ல நடிகர்கள் ’காசி’ இல் இருந்து ‘கந்தசாமி’ ஆக பரிணாமம் கண்டதற்கு எல்லாம் இதுதான் காரணம். அதனால் ரசிகர்களின் ரசனையில் மாற்றம் தேவை என்பதும் ஒருவகையில் உண்மை தான்.
மேலும்...

ஊழலை ஒழித்தல் மற்றும் ஒரு நல்ல தலைவரின் தேவை

Posted: Friday, December 11, 2009 | Posted by no-nononsense | Labels: 0 comments
My comment in a discussion on curruption in Indian politics:

நிச்சயமாக ஓரிரவில் ஒரு சட்டம் போட்டு இதையெல்லாம் ஒழித்துவிட முடியாதுதான். அப்படி முடியுமென்றால் ஏற்கெனவே இருக்கும் சட்டங்களும், அதைக் கட்டிக்காக்க இருக்கும் லஞ்ச ஒழிப்புத் துறையும், அதன் போலீஸார்களுமே போதுமே. ஆனால் இதில் கொடுமை என்னவென்றால் அவர்கள்தான் அதிகம் வாங்குகிறார்கள் என்பதுதான். இங்கு வேலியே பயிரை மேய்கிறது.

இதற்கெல்லாம் என்ன காரணம்?

லஞ்சம் வாங்குபவனுக்கு, நான் ஒருவன் திருந்துவதனால் இந்த உலகம் திருந்திவிடப் போகிறதா என்னும் அலட்சிய மனோபாவம். அதில் உண்மையும் இல்லாமலில்லை. அம்மணமாக திரிபவன்கள் ஊரில் கோவணம் கட்டினவன் கோமாளி என்பதற்கேற்ப, அப்படி நேர்மையாக இருப்பவனின் வாழ்க்கை பிழைக்கத் தெரியாதவன் என்று பரிகாசத்துக்குள்ளாகிறது.

லஞ்சம் கொடுப்பவன், தன் வேலை சீக்கிரமாக முடிய வேண்டும் என்றோ, அல்லது தனக்கு தகுதியில்லாத நிலையிலும் ஒன்றை அடைந்துவிடும் பேராசை காரணமாகவோ, பணத்தைக் கொடுத்து எதையும் சாதிக்க நினைக்கிறான்.

இதில் பாதிக்கப்படுவதெல்லாம் லஞ்சம் கொடுக்க முடியாத ஏழைகள் தான்.

மாற்றத்தை மனோபாவத்தில் கொண்டு வர வேண்டும். வாங்குபவர்கள் நிறுத்திக்கொண்டால் கொடுப்பவனும் நிறுத்திக் கொள்வான். இல்லையில்லை, கொடுக்கிறதினாலத்தானே அவன் வாங்குகிறான் என்பதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. வாங்குகிறவன் என்று ஒருவனிருந்தால், நாம் கொடுக்கவில்லை என்றாலும் வேறு ஒருவன் கொடுத்து காரியத்தை சாதித்துக்கொண்டு போய்விடுவான். அதனால் லஞ்சம் வாங்குகிறவர்கள் தான் திருந்த வேண்டும்.

எப்படி திருத்துவது?

காலம் காலமாக இருந்துவரும் அதே இரண்டு வழிகள் தான் - ஒன்று விழிப்புணர்ச்சியால் நடக்க வேண்டும். அல்லது ’புரட்சியால் நடக்கும்’.

விழிப்புணர்வு உண்டாக மக்கள் அனைவரும் கல்வியறிவு பெற வேண்டும். அதன் காரணமாக பகுத்தறிவு வளர வேண்டும். முக்கியமாக நாம் பின்பற்றிச் செல்லத் தக்க மக்கள் பொதுநலனில் அக்கறை கொண்ட நேர்மையான தலைவர்கள் உருவாக வேண்டும். தமிழ்நாட்டில் காமராஜருக்குப் பிறகு குறிப்பிட்டு சொல்லத்தக்க ஒரே ஒரு தன்னலமற்ற தலைவர் கூட உருவாகவில்லை என்பது நமது சாபக்கேடு. இருக்கிற திருடனிலேயே சின்ன திருடன் யாரென்று தான் தேர்ந்தெடுத்து ஓட்டுப் போட வேண்டியுள்ளதே தவிர, இவர் நல்லார் என்று நம்மால் ஒருவரையும் சுட்டிக்காட்ட முடியவில்லை. வைகோ போன்ற சில நீர்குமிழிகள் சில நேரங்களில் தோன்றி பொது வாழ்வில் தூய்மை என்று முழங்கினாலும், நிலைப்பதில்லை.

இந்திய விடுதலைப் போராட்டம் எப்படி வெற்றி பெற்றது? ராவ் பகதூர், திவான் என்றெல்லாம் வெள்ளைக்காரன் கொடுத்த பட்டங்களை பெருமிதம் பொங்க வாங்கிக்கொண்டு, ‘துரைமார்’, ‘துரைசாணிமார்’ என்று அவனுக்கு சலாம் போட்டுக்கொண்டிருந்த ஆட்டுமந்தைக் கூட்டம் தன் கையில் கத்தியில்லாத, ஆனால் தான் ரத்த சிந்த தயாரான ஒரு மனோதிடத்தைப் பெற்றது எங்ஙனம்? அன்றிருந்த தூய்மையான காந்தி போன்ற தலைவர்களால் தான். ஏன் ஜின்னா போல காந்தி இந்தியாவின் அரியணையில் ஏறவில்லை என்ற ஒரு விஷயத்தை சிந்தித்திப் பார்த்தாலே எல்லாம் விளங்கும். அவர்களுக்கு மக்களின் நலனில் மட்டுமே அக்கறை. அதற்காக போராட்டங்கள் நடத்தினார்கள். அதில் தாங்களே முன்னின்று தங்களை வருத்திக்கொண்டார்கள். வெள்ளையனுக்கு எதிராக ஒரு போராட்டத்தை அறிவித்துவிட்டால் காந்திதான் அதில் முன்னிற்பார். அதற்காக பல நாட்கள் உண்ணாவிரதம் இருப்பார். அதை காணும் மக்களும் அவர் பின்னால் அணி திரள்வார்கள். எத்தகைய சோதனைக்கும் தயாராக இருப்பார்கள். போராட்டம் வெற்றி பெற்றது. லட்சியம் நிறைவேறியது. (ஒரே ஒரு காந்தியவாதியையாவது லஞ்சம் வாங்க-கொடுக்க வைத்துவிட முடியுமா? அதுதான் காந்தியிஸத்தின் தாக்கம்!)

ஆனால் இன்று? உண்ணாவிரதங்கள் போலி பாசாங்குகள். ஈழத் தமிழர் பிரசிச்னையில் கருணாநிதி நடத்திய உண்ணாவிரதத்தை விட ஒரு கேவலம் இன்றுவரை நான் பார்க்கவில்லை. இப்படிப்பட்ட தலைவர்கள் இருக்கும்போது, சீனத்தில் மாவோவும், ரஷ்யாவில் லெனினும் நிகழ்த்திக் காட்டிய சமுதாய மாற்றம் எங்கிருந்து வரும்?

அதற்கு மக்கள் தயாராக இருக்கிறார்களா என்றால், மக்கள் எப்பொழுதும் தயாராகத்தான் இருக்கிறார்கள். 1970களில் ஜெய பிரகாஷ் நாராயண் பின்னால் திரண்ட மாணவர் கூட்டம், சமுதாய புரட்சியை அமைதியான முறையிலும் கூட ஸ்தாபிக்க முடியும் என்பதற்கு அண்மை கால உதாரணம். இப்பொழுதும் கூட ஆலையில்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை என்பதைபோல் அப்துல் கலாமை ஆதர்ஷமாக கொண்டுள்ள இளைஞர் கூட்டம் சுட்டிக் காட்டுவதெல்லாம், நாங்கள் பின்பற்ற தேவை ஒரு நல்ல தலைவர் என்பதுதான்.

அப்படியொரு மிதவாதி தலைவர் ஜனநாயக ரீதியில் மாற்றங்களை உருவாக்க உருவாகவேயில்லையென்றால், அடுத்து புரட்சி தான் வெடிக்கும். அது சமுதாய சீர்கேடுகளை துப்பாக்கி முனையில் தகர்த்தெறியும். வரலாற்றில் ஏடுகளில் காண கிடைக்கும் புரட்சியெல்லாம் உரைப்பது மிதவாத முயற்சிகளின் தோல்வியைத்தான். இதற்கு அண்மைகால உதாரணம் நேபாளம்.

இன்று நக்ஸலைட்டுகளை மிக மோசமான சமூக விரோதிகளாக சித்தரித்து கூப்பாடு போடுவதெல்லாம் இன்றைய மக்களின் சீரழிவுக்கு காரணமாக அரசியல்வாதிகளும், அதை வைத்து பணம் பார்க்கும் நாலாந்தர ஊடகங்களும் தானே தவிர, அங்கே இருக்கும் மக்கள் அல்ல. நக்ஸலைட்டுகளின் மிகப் பெரிய சக்தி, மக்கள் ஆதரவு. மக்கள் ஏன் ஆதரிக்கிறார்கள் என்பதை லால்கரிலும், ஜார்கண்டிலும் சென்று அறிந்து கொள்ள எத்தனித்தால் அப்போது விளங்கும்.

சின்ன கமெண்டாக எழுத ஆரம்பித்து பெரிதாக வளர்ந்துச் செல்கிறது. நான் சொல்ல வருவது இதைத்தான்.. நல்ல தலைவர்கள் உருவாகி, அவர்களினால் மக்கள் மனநிலையில் தாக்கம் பெறுவதும், கல்வியறிவும் மற்றும் அதன் காரணமாக பகுத்தறிவு மேம்படுவதும், இவற்றின் தொடர்ச்சியாக பெருமளவில் தனிமனித ஒழுக்கம் மிகுவதுமே இதையெல்லாம் சரி செய்யும். ஒரு நாள் நடக்கலாம். நம்பிக்கை தானே வாழ்க்கை!
மேலும்...

நாமக்கல் கலெக்டரின் பணிகளில் பங்கெடுத்தல் - ஓர் பார்வை

Posted: Wednesday, December 9, 2009 | Posted by no-nononsense | Labels: , 0 comments
My viewpoints on helping collectors initiatives by funding it and so on:

ஊருக்கு உபகாரம் செய்ய ஒருவர் இருக்கிறார் என்றதும் அவருக்கு தோள் கொடுக்க ஓடோடி வரும் நல்லுள்ளங்களுக்கு என் வந்தனங்கள். இக்கடிதத்தை படித்ததிலிருந்து நாமக்கல் கலெக்டர் தேசத்தின் எல்லைகளைத் தாண்டியும் கூட செய்தியாகி இருக்கிறார் என்பது தெரிகிறது. நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு பெய்யென பெய்யும் மழை என்பது இதுதானோ?!

நிற்க. நீங்கள் துவங்க நினைக்கும் இயக்கத்தின் முதன்மை நோக்கம் என்ன என்பது முதலில் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டியது அவசியம். உங்கள் கடிதத்தின் தொனியில் இருந்து அது — கலெக்டர் அவர்களின் நற்பணிகளுக்கு துணை நிற்பது மற்றும் கலெக்டர் அவர்களின் பணிக்கு இடமாற்றம் நேராமல் காப்பது — என்பதாக உங்களின் வார்த்தைகளின் வாயிலாகவே அறிகிறேன். அப்படியாகின், இவற்றில் கலெக்டர் இடமாற்றம் ஆகாமல் காப்பது என்பது எந்த விதத்திலும் சாத்தியமில்லை என்பதுவே நடைமுறை யதார்த்தம். நல்ல கலெக்டர்களை / காவல்துறை அதிகாரிகளை கழக ஆட்சிகள் ரொம்ப நாட்கள் பணியில் நீடிக்க அனுமதித்ததில்லை. ஏதாவது வாரியப் பணிக்கு தூக்கியடித்து விடுவார்கள். அதுவும் நம் ஊரிலுள்ளது போன்ற ஆதிக்கமும், செல்வாக்கும், அதிகாரமும் நிறைந்த மத்திய அமைச்சர் உள்ள மாவட்டத்தில், எந்த நல்ல கலெக்டருக்கும் ஆயுசு அல்பம்தான். மாநில அரசால் மேற்கொள்ளப்படும் கலெக்டர்களின் இடம் மாறுதலை தடுத்து நிறுத்த நீதிமன்றங்களுக்கே அதிகாரம் கிடையாது எனும்போது, நம்மால் மட்டும் என்ன செய்துவிட முடியும்? கொஞ்சம் பேர் கூட்டம் கூடி கோஷம் போடலாம். அல்லது முதல்வரின் தனி செல்லுக்கு பெட்டிஷன் போடலாம். அடுத்தநாள் பத்திரிக்கைகளில் பெட்டி செய்தியாக அது வெளியாவது மட்டுமே நாம் காணப்போகும் பலனாக இருக்கும்.

அடுத்தது, கலெக்டரின் சமுதாயப் பணிகளுக்கு நம்மாலான உதவிகளை நல்குவது.

ஒரு கலெக்டரின் அதிகாரத்திற்குட்பட்டுத்தான் மாவட்டத்தின் அனைத்து முக்கிய நிர்வாகங்களும் நடைபெறுகின்றன (இதனுடன் இணைக்கப்பட்டுள்ள புகைப்படத்தைக் காண்க). இத்தகு வானளாவிய அதிகாரம் கொண்ட கலெக்டர், தன் அதிகார எல்லைகளுக்கு உட்பட்டு தானே பல சிறப்பான காரியங்களைச் செய்ய முடியும். அதைத்தான் சகாயம் போன்ற சிறப்பாக ‘செயல்படும்’ கலெக்டர்களும் செய்கிறார்கள். பெயரும் கிடைக்கிறது. என்றாலும், இவர்களை ஊக்கப்படுத்தி அவர்களின் திட்டங்களில் நம்மாலியன்றவரை நாமும் துணை நிற்கலாம் என்று தன்னார்வத்துடன் முன்வருவது நல்ல விசயம் தான். மாற்று கருத்தே இல்லை. ஆனால் அவர்கள் முன்னெடுக்கும் திட்டங்களின் ஆயுசு, அவர்களின் பதவி காலத்தைப் போலவே குறுகியதாக இருப்பதையே நாம் இதுவரைக் கண்டுவருகிறோம்.

சில காலம் முன்பு ஜூவியில் ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது. கலெக்டர், எஸ்பி போன்ற மாவட்டத்தின் முக்கியப் பொறுப்பில் நியமிக்கப்படும் அதிகாரிகள் தங்கள் பதவிகாலத்தில் தனிச்சிறப்புடன் செயல்படுத்திய திட்டங்கள், அவர்கள் மாறுதலாகிய பிறகு எவ்வாறு நலிவடைகின்றன என்பதுதான் அக்கட்டுரையின் சாராம்சம். அவர்களுக்கு பின்னர் பதவிக்கு வருபவர் தன் பெயர் பிரபலமடையும் வகையில் தன்போக்கில் தனியாக திட்டங்களை வகுத்துக் கொள்கிறாரே தவிர, தனக்கு முன்னாள் பதவியிலிருந்தவர்கள் செயல்படுத்திய திட்டங்களின் மேல் ஆர்வம் காட்டுவதில்லை என்பது அக்கட்டுரையின் கருத்து. ஒருவேளை நாளை இந்த கலெக்டர் மாறுதலாகிறார் என்றே வைத்துக் கொள்வோம், அப்பொழுதும் இவர் உதவியுடன் நாம் செயல்படுத்தி வரும் திட்டங்கள் தங்கு தடையின்றி தொடருமா? தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் உதவி அதற்கு கிடைக்குமா? - என்பதெல்லாம் அதிகாரிகளின் பின்னால் அணிவகுப்பதற்கு முன்பு கவனத்தில் கொள்ள வேண்டிய விசயங்கள்.

மேலும், கலெக்டரிடம் பேசியதன் சாராம்சமாக குறிப்பிடப்படும் விசயங்களில்,

>> 1 ) கிராமங்களின் முன்னேற்றம்
2 ) நகரமயமாக்களை தடுத்து கிராமங்களை அழகிய கிராமங்களாகவே இருக்க விடுவது - நகரத்தின் வசதிகளை கிராமங்களுக்கு கொண்டு செல்வது <<


நாற்பது வருடங்களுக்கு முன், அதாவது 1961 இல் நாமக்கல் மக்கள் தொகை 8.9 லட்சம். 2001 கணக்கெடுப்பின்படி 15 லட்சம். கிட்டத்தட்ட இருமடங்கு. அதற்கு பிறகு இப்பொழுது 9 வருடங்கள் கடந்திருக்கிறது. தொகையில் இன்னும் சில லட்சங்கள் கூடி இருக்கும். இங்ஙனம் வளர்ந்து வரும் மக்கள் பெருக்கத்தினிடையே கிராமங்கள் நகரமயமாதல் என்பது தவிர்க்க இயலாதது. இந்நிலையில் ’நகரமயமாதலை தடுத்தல்’ என்பது இங்கே என்ன பொருளில் கூறப்படுகிறது என்பது குறித்து விளக்கம் தேவைப்படுகிறது.

சொல்லப் போனால் நாமக்கல் இன்னும் கூட விரிவடைய வேண்டியுள்ளது. அவ்வளவு போக்குவரத்து நெருக்கடிகளுக்கு தினமும் ஆளாகி வருகிறோம். ஐம்பது வருடங்களுக்கு முன்பிருந்த அதே சாலை வசதி. ஆனால் இரு மடங்காகி நிற்கும் மக்கள் தொகை. அத்தனை பேரிடமும் ஆளுக்கொரு டூ வீலர். பஸ் ஸ்டாண்டை இடம் மாற்றுவதும், ரிங் ரோடு அமைப்பதும் உடனடி தேவை. அப்போது தான் நகரம் இன்னும் விரிவடைந்து இன்று இருக்கும் deadly traffic குறையும். ஊரில் வாழ்பவர்களுக்கு நான் சொல்வது நன்கு புரியும்.

நகரத்தின் வசதிகளை கிராமங்களுக்கு கொண்டு செல்வது என்பது, சாலை போடுதல். பள்ளிகள் கட்டுதல், மருத்துவ வசதி உண்டாக்கித் தருதல் போன்ற அதன் அடிப்படை வசதிகளை முதலில் நிறைவு செய்வதாக இருக்கும். அதாவது கிராமங்களை தத்தெடுத்தல் என்றும் இதனைக் குறிப்பிடலாம். இதற்கெல்லாம் பெரும் நிதியும், அரசு அனுமதியும் தேவைப்படும். அரசு அனுமதி வாங்கி விடலாம். பெரும் நிதி சுமையை தாங்கும் அளவிற்கு இந்த இயக்கம் பெருமளவு கொடையாளர்களைக் கொண்டிருக்க வேண்டும் என்பது கருத்தில் கொள்ளத்தக்கது.

>> நீர்நிலைகளை சுத்தப்படுத்தி நீர் வளம் பெருக்குதல் <<


ஏரி குளம் குட்டைகளை தூர் வாற ஒவ்வொரு நிதியாண்டும் நிறைய பணம் ஒதுக்கப்படுகிறது. அத்தனையும் வேலை நடந்ததாக கணக்குக் காட்டி ஏப்பம் விடப்படுகின்றன. குறிப்பாக ஊராட்சி தலைவர்களின் முக்கிய வருமானமே இது தான். என்னுடைய நண்பன் ஒருவன் ஊராட்சி தலைவராக ஆன உடனே அவன் செய்த முதல் காரியமே ஒரு புக்ளின் வாகனம் வாங்கியதுதான். அதனால் ஒதுக்கப்படும் நிதி முறையாக செலவிடப்பட்டாலே இக்குறை நீங்கும் என்பதால் கலெக்டர் தான் இதில் கவனம் கொள்ள வேண்டும்.

நீர்நிலைகளை தூர் வாறுவதில் நாம் எவ்விதம் உதவ முடியும்? அரசாங்கத்தைப் போலவே நாமும் நிதியளிக்கலாம் அல்லது நாமே களத்தில் இறங்கி தூர் வாறலாம். ஆனால் இது ஏதோ ஒருமுறை மட்டும் செய்து விட்டு விட்டுவிடும் விசயம் அல்ல என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

அதற்கு பதில், நீர்வளம் பெருக மழைநீர் சேகரிப்பு மிக அவசியம் என்பது குறித்து விழிப்புணர்ச்சி ஏற்படுத்தலாம். கண்காணித்து வரலாம். பயன் இருக்கும். (இதுபற்றி முன்பு இண்டியன் எஸ்பிரஸில் ஒரு அருமையான கட்டுரைப் படித்தேன். ராஜஸ்தானில் நிலத்தடி நீர் வரண்டு போன ஒரு கிராமத்தை மழைநீர் சேகரிப்பின் மூலம் எப்படி மீட்டெடுத்தார்கள் என்பது குறித்து விரிவாக எழுதப்பட்ட கட்டுரை. தேடிப் பார்க்க வேண்டும்)

>> கழிவறை திட்டம் <<

பயனுள்ள யோசனை

>> விளையாட்டு துறையில் சிறந்த இடத்தை அடைவது <<


இன்னும் இரண்டு கலெக்டர் இவர் போல வந்தாலும் நாமக்கல்லில் உள்ள இளைஞர்கள் விளையாட என்று ஒரு பொது மைதானம் அமையாது போலிருக்கிறது. இருக்கும் ஒரே ஒரு சவுத் ஸ்கூல் கிரவுண்டிலும் பெரும்பாலான நாட்களில் விளையாட அனுமதி கிடையாது. முதலில் விளையாட இடம் தேவை. பிறகு விளையாட்டு துறையில் சிறந்த இடத்தை அடைவதைப் பற்றி யோசிக்கலாம். இதற்கு கலெக்டர் தான் ஆவண செய்ய வேண்டும்.

>> காடு வளர்ப்பு மற்றும் மரங்கள் நடுவது <<

இதுவும் நல்ல யோசனை. பொறுப்பேற்று பராமரித்து வரக் கூடிய சாத்தியக்கூறு கொண்டது.

மற்ற யோசனைகளில் கிராமங்களில் கணினி என்பது மட்டுமே பரிசீலனைக்கு உகந்தது என்பது என் கருத்து. வார இறுதிகளில் கிராமங்களுக்குச் சென்று அங்கேயுள்ளவர்களுக்கு கணினி பயிற்சி அளிக்கலாம்.

ஒரு மாவட்டத்தின் முழு அதிகாரத்தை கையில் வைத்துள்ள கலெக்டரால் இந்த லிஸ்டில் உள்ள அளவுக்கு பரந்துபட்ட காரியங்களில் ஈடுபட முடியும். அதுதான் அவரது அன்றாட வேலையும் கூட. ஆனால் ஒரு தன்னார்வ இயக்கத்தால் இவற்றில் ஏதாவது சிலவற்றில் மட்டுமே கவனம் கொள்ள முடியும் என்பது என் கருத்து. அது எதுவென இனம் காணுவது மிக முக்கியம்.

அரசுடன் / கலெக்டருடன் இணைந்து செயல்படும் தன்னார்வ குழுக்களை அவர்கள் எப்படி பயன்படுத்திக் கொள்வார்கள் என்றால், மரம் நடு விழாக்கள் நடத்தினால் நாமும் அங்கே மரக்கன்றுகளுடன் சென்று பங்கு பெற வேண்டும். போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு அவர்கள் போய் விடுவார்கள். பிறகு நட்டு பராமரித்து வருவது அனைத்தும் நம் முயற்சி தான். மேலும், மாதிரி கிராமத் திட்டப் பணிகளில் அரசு அதிகாரிகளுக்கு அடிபொடியாக இருக்க அழைப்பார்கள் (மாதிரி கிராம பணிகள் என்பது என்ன என்று அறிந்து கொள்ள இங்கே சுட்டுங்கள்: http://tinypaste.com/b4429). இதுபோலத்தான் அரசுடன் இணைந்து செயல்படும் தன்னார்வ குழுக்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதுவும் பெரும்பாலும் அவர்களின் வேலை நேரமாகிய வார நாட்களில் தான் இம்மாதிரி திட்டப்பணிகள் நடைபெறும். அதில் என்னைப் போன்ற தனியார் நிறுவன ஊழியர்கள் பங்குபெறுவது சாத்தியமில்லை.

சுருக்கமாக என் கருத்து என்னவென்றால், சகாயம், நாமக்கல் கலெக்டராக இருக்கும்வரை அவர் பணியை அவர் செய்யட்டும். நாம் நம் ஊருக்கு செய்ய வேண்டுமென்று நினைப்பதை உரிய செயல்திட்டங்கள் வகுத்துக் கொண்டு நாமே செவ்வன செய்யலாம். அரசு இயந்திரத்தை நம்பி அதன் பின்னால் செல்வது நம் ஊரைப் பொறுத்தவரை நல்ல வழி அல்ல என்பது என் கருத்து. நல்ல நோக்கத்திற்காக செலவழிக்கப்படும் பணமும், நேரமும், உழைப்பும் இறுதியில் விழலுக்கு இறைத்த நீராக ஆகிவிடக் கூடாது என்பது இக்கருத்தின் பின்னுள்ள என் கரிசனை.

நவலடி, நீ என்னிடம் பேச நினைத்தது இதுபற்றித்தான் என்பது என் யூகம். அவரின் கடிதத்தைப் படித்ததும் எனக்கு தோன்றிய கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன். மற்றபடி ஆர்வத்தை தடை செய்வது என் நோக்கமல்ல. உங்களின் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்.

*

நண்பர் ஒருவரின் கருத்துக்கு என் மறுமொழி:

சிங்காரவேலு,

நாமக்கல்லில் பாப்பு ரெட்டியார் அறக்கட்டளை என்று ஒன்று செயல்படுகிறது. ஊரறிந்த பணக்காரர் ஒருவர்தான் அதன் ஸ்தாபகர் மற்றும் டிரஸ்டீ. கருப்பை வெள்ளையாக்க இப்படி ஒரு டிரஸ்ட் வைத்து நடத்துகிறார்கள் என்று ஊரில் பேச்சு உண்டு. அது நமக்கு தேவையில்லை. அவர்கள் செய்யும் பணி என்ன என்பதுதான் நாம் கவனிக்க வேண்டியது.

1) பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி. பயிற்சி முடிந்ததும், பயிற்சி பெற்றவர்களில் ஏழைப் பெண்களுக்கு தையல் மிஷின் இலவசமாக கொடுக்கிறார்கள். மற்றவர்களில் சில குறிப்பிட்ட பெண்களை தேர்ந்தெடுத்து 1000 ரூ மட்டும் பெற்றுக் கொண்டு அவர்களுக்கும் தையல் மெஷின் கொடுக்கிறார்கள்.

2) பெண்களுக்கு இலவசமாக கம்ப்யூட்டர் பயிற்சி. இலவசம் என்றதும் சும்மா MS.Office தான் பயிற்சி என்றில்லாமல், TALLEY வரை சொல்லி கொடுக்கிறார்கள்.

3) ஏழை எளியவர்களின் பிணங்களை தகனம் செய்ய உதவுகிறார்கள். அதாவது நகராட்சி சுடுகாட்டில் பிணத்தை புதைக்க ரூ. 600ம், எரிக்க ரூ. 1200ம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதனை இவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்.

4) கல்விக்கு உதவுகிறார்கள்.

இப்படி பல நல்ல காரியங்களை அந்த டிரஸ்ட் செய்து வருகிறது. அதன் டிரஸ்டீ ஒருவேளை நாளை ஏதாவது எலெக்‌ஷனில் நிற்பாரேயானால் ஊர் பெண்களின் ஓட்டெல்லாம் அவருக்குத்தான் என்று சொல்லும் அளவுக்கு பெண்கள் அதனால் பயன் பெற்றிருக்கிறார்கள்.

இந்த டிரஸ்ட் பின்னால் எந்த கலெக்டரும் இல்லை. அப்படியொருவரின் தேவையும் இவர்களுக்கு கிடையாது. இவர்களிடம் தெளிவான செயல் திட்டம் இருக்கிறது. அது மகளிர் மேம்பாடு. அதற்கு ஆவண செய்ய வேண்டியதை வெகு சிறப்பாக செய்து வருகிறார்கள்.

நவலடி முன்மொழியும் டிரஸ்ட், இதுபோன்ற ஒன்றாக இருப்பதே அதிக பயன் தருவதாக இருக்கும் என்பதே என் கருத்து. அதை விடுத்து கலெக்டர் பின்னால் அலைவதில் ஒருவேளை நான்கு அதிகாரிகளின் அறிமுகம் கிடைக்கலாமே தவிர, வேறு ஆகப்பெரும் பயன்பாடு இருக்கும் என்று தோன்றவில்லை. எல்லா நேரங்களிலும் உன் லைனில் கலெக்டர் வரவும் மாட்டார். கலெக்டர் பி.ஏ உள்ளிட்ட அரசு அதிகாரிகளுடன் தான் நீ புழங்க வேண்டியிருக்கும். நம் அதிகாரிகளின் லட்சணம் எப்படி இருக்கும் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. உதவி செய்ய போய் உபத்திரப்பட்டுத்தான் திரும்ப வேண்டியிருக்கும்.

இளைஞர் நற்பணி மன்றங்கள், தன்னார்வ குழுக்கள் போன்றவை கறிவேப்பிலையாத்தான் பயன்படுத்திக் கொள்ளப் படுகின்றன. அவர்களின் ’மாதிரி கிராம திட்டத்தில்’ (http://tinypaste.com/b4429) நாம் பங்களித்து செய்யக்கூடிய காரியம் ஏதாவது இருக்கிறதா? அவருக்கு கீழே இருக்கும் ஒவ்வொரு துறையின் பணிகளும் ஒரே சமயத்தில் ஒரு குறிப்பிட்ட கிராமத்தில் ஒருங்கிணைக்கப்படுகின்றன. சுருக்கமாகச் சொன்னால் அவ்வளவுதான் அத்திட்டம். மேலும், அவரின் ஒருகோடி மரக் கன்றுகள் நடும் திட்டம், கிராம தோப்பு திட்டம், உழவர் உணவகம் ஆகியவற்றில் மரம் நட்டு பராமரித்து வர மட்டுமே நாம் உதவ முடியும். மற்றவற்றில் அதிகாரிகளின் உதவியாளர்களாக அலைவதே களப்பணியாக இருக்கும்.

இனி உன் கடிதத்துக்கு வருகிறேன்.

>> நவலடி மெயிலில் நல்ல விஷயங்கள்- தனித்தனியாக சிறு குழுக்களாக செய்ய நினைப்பதை ஒருங்கிணைத்து செயல்பட நினைப்பது ஒன்று <<

இதற்கான பதிலை நீயே இறுதியாக சொல்லிவிட்டாய். ’அடிச்சாலும் புடிச்சாலும் அண்ணன் தம்பி நீயும் நானும் டோய்’ என்பது போல நானும் நீயும் சேர்ந்து செய்வதன் சௌகரியமே வேறு. புதிதாக இன்னொரு குழுவுடன் இணைந்து செயல்படுவதில் தயக்கங்கள் அதிகம் இருக்கின்றன. இருவரின் அலைவரிசையும் வேறு வேறாக இருந்துவிட்டால் தன்னார்வமே சுத்தமாக போய்விடும் அபாயமும் இருக்கிறது.

>> ஒரு டிரஸ்ட் ஆக உருவாக்கும் போது கலெக்டர் போன்ற ஒருவரின் அனுமதியும், அவரது ஈடுபாடும் இதன் நம்பகத்தன்மையை மற்றும் reach ஐ அதிகரிக்கும்.<<

மேற்கண்ட அறக்கட்டளையின் செயல்பாடுகளை உற்று நோக்கும்போது, நம்பகத்தன்மை மற்றும் ரீச் என்பதை சேவைதான் தீர்மானிக்கிறது என்பதை அறிந்துகொள்ளலாம். மேலும், டிரஸ்டை சாரிடபிள் கமிஷனரிடம் உரிய ஆவணங்களை சமர்பிக்கும் எவரும் பதிந்து கொள்ளலாம் எனும் நிலையில், கலெக்டரின் அனுமதியெல்லாம் அதற்கு அவசியமே இல்லை.

கலெக்டரின் ஈடுபாடெல்லாம் நிதியை திரட்டும் வரைதான் இருக்கும் என்று நான் நம்புகிறேன். அதையும் தாண்டிய அளவிற்கு அது செல்ல காரணங்கள் குறைவு என்றே நினைக்கிறேன்.

இம்மாதிரியான சந்தேகங்களை நிவர்த்தி செய்யும்படியாக, தெளிவான திட்ட அறிக்கை ஒன்றை இவர்கள் பெற்றுத் தந்தால் அப்போது பரிசீலிக்கலாம். இல்லையென்றால், பாப்பு ரெட்டியார் அறக்கட்டளைப் போன்று நாமும் நம் போக்கில் குறுக்கீடுகளின்றி செயல்படலாம்.

சுரேஷிடம் நாமக்கல்லில் செயல்படும் அறக்கட்டளைகள் மற்றும் தன்னார்வ குழுக்களின் விவரங்களை திரட்டித் தரக் கேட்டிருக்கிறேன். ஓரிரு நாட்களில் ஏற்பாடு செய்வதாக கூறியிருக்கிறான். அதனைக் கொண்டு விவாதிப்பதன் மூலம் நம் யோசனைகளை இன்னும் சிறப்பாக செதுக்கிக் கொள்ள முடியும் என்று நம்புகிறேன்.
மேலும்...

கழைக்கூத்து

Posted: Monday, December 7, 2009 | Posted by no-nononsense | Labels: , 0 comments
”வயிற்றுக்காக மனுசன் இங்கே
கயிற்றில் ஆடுறான் பாரு
ஆடி முடிச்சி இறங்கி வந்தா
அப்புறந்தாண்டா சோறு..”

நல்லநேரம் திரைப்படத்தில் எம்ஜிஆர் கழைக்கூத்தாடியபடி ஆடிப்பாடும் இப்பாடல் என் குழந்தைக்கு ரொம்பப் பிடிக்கும். அதில் வரும் யானைகள் காட்டும் வித்தையையும் நாகேஷின் சேஷ்டைகளைக் காட்டி பமுறை சோறு ஊட்டியிருக்கிறோம்.

குழந்தைகளுக்கு மட்டுமா, கழைக்கூத்து நமக்கும் கூட பிரமிப்பைத் தரவல்லது. கயிற்றில் பேலன்ஸ் செய்து நடப்பதும், சிறிய வளையம் ஒன்றில் இருவர் உள்ளேச் சென்று வெளியே வருவதும் எல்லோராலும் எளிதில் செய்யக் கூடிய காரியம் அல்ல. எனக்கு இதைப் பார்க்கும்போதெல்லாம் இப்படி கஷ்டபட்டு வித்தைக் காட்டி தட்டு நீட்டி எவ்வளவுதான் இவர்களெல்லாம் சம்பாதித்துவிட முடியும் என்று ஆச்சரியமாக இருக்கும். காரணம், பார்க்கும்வரை நன்றாகப் பார்த்துவிட்டு காசுக்குத் தட்டு நீட்டப்படுவது தெரிந்ததும் கம்பி நீட்டிவிடும் ஆட்கள்தான் நம்மில் அதிகம். இதைவிட ரோட்டோரம் ஒரு சலூன் கடை போட்டாலும் கூட நன்றாக பிழைக்க முடியும்.

இந்த மாதிரி கழைக்கூத்தாடிகளை நான் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் அடிக்கடி பார்த்திருக்கிறேன். வடக்கத்திய சாயல் படிந்த முகங்களே பெரும்பாலும் தென்படும். அவர்களிடம் கம்பி வளையத்தில் புகுந்து வெளிவர என்றே ஐந்து வயது மதிக்கத்தக்க குழந்தை ஒன்று நிச்சயம் இருக்கும். இதற்காகவே பெற்றுக் கொள்வார்களோ என்று கூட சமயத்தில் தோன்றும். ஊர் ஊராகச் சென்று கும்பல் கூடும் இடங்களில் வித்தை காட்டி பிழைப்பதே இவர்களின் வாழ்க்கைமுறை என்று நினைக்கிறேன்.

இவர்களிடம் ஒரு நேர்மை இருக்கிறது. தங்களை வருத்திக்கொள்வதன் மூலம் பார்வையாளர்களுக்கு பிரமிப்பைத் தந்து பணம் பெறுகிறார்கள். எந்த பயமுறுத்தலும், வற்புறுத்தலும் இல்லை. ஆனால் வேறு சில வித்தைகாட்டிகள் இருக்கிறார்கள். அதாவது கண்கட்டு வித்தை; மோடி மஸ்தான் வேலை. பாம்புக்கும் கீறிக்கும் சண்டை விடுறேன் என்று சொல்லிக் கொண்டே இருப்பான். விடவே மட்டான். ஓர் ஆளைப் படுக்க வைத்து போர்வையால் மூடி வெளியே கூட்டத்தில் இருப்பவர்களின் சட்டைப் பையில் இருப்பதையெல்லாம் சரியாக சொல்ல வைப்பான். எல்லாமே செட்டப் என்பது தெரியாதவாறு நம் கவனத்தை அவன் பேச்சில் கட்டி வைத்திருப்பான். பணம் தராமல் செல்பவர்கள் ரத்தம் கக்கி சாவார்கள் என்று பயமுறுத்துவான். திரைப்படத்தில் தற்சமயம் நகைச்சுவைக்காக வைக்கப்படும் இக்காட்சிகள் நிஜத்திலும் நடந்தவைதான்.

இம்மாதிரி கும்பல் ஒன்றால் பல நாட்கள் நான் பேஸ்தடித்து பயந்து கிடந்த அனுபவம் ஒன்று உண்டு.

சரியாக நினைவில்லை, ஆறாவதிலிருந்து எட்டாவதற்குள் இருக்கலாம். கோட்டை ஸ்கூலின் பின்புறம் நேதாஜி சிலை அருகில் ஒருநாள் மதிய இடைவேளையில் நானும் ராஜன்பாபுவும் எதற்கோ திரிந்து கொண்டிருந்தோம். ஓரிடத்தில் கும்பலாக இருக்கவும் வழக்கம்போல் சென்று எட்டிப் பார்த்தோம். ஒருத்தன் மோடி மஸ்தான் வித்தைக் காட்டிக் கொண்டிருந்தான். அடிக்கடி ’சைத்தான்’ கலந்து பேசிய அவன் குரலே கரகரவென்று அச்சம் தருவதாக இருந்தது. ஒரு பையனை கீழேப் படுக்க வைத்து போர்வையால் மூடி நீண்ட நேரம் கூட்டத்தை நோக்கிப் பேசிக் கொண்டிருந்தவன், ஒரு கண நேரத்தில் சரேலென்று கத்தியை கீழே கிடந்தவனின் வயிற்றில் பாய்ச்சினான். போர்வையின் மேற்பரப்பில் ரத்தம் கசிந்தது சிவப்பாக தெரிந்தது. என்னென்னவோ பேசியபடி மீண்டும் அவன் கத்தியை உருவியபோது குடல் அதனோடு ஒட்டிக் கொண்டு வெளியே வந்தது. பயந்து அலறியடித்து ஓடி வந்து விட்டோம். அதற்கும் பிறகும் பல நாட்கள் அக்காட்சி கண் முன்னால் வந்து பீதியைக் கிளப்பியபடியே இருந்தது என்னால் என்றும் மறக்க முடியாதது. சமீபகாலமாக இம்மாதிரி ஆட்கள் யாரையும் காண முடியவில்லை. அநேகமாக எல்லோரும் அரசியலில் புகுந்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன் :-)

சனிகிழமையன்று திருச்செங்கோடு ரோடு - சேலம் ரோடு முனையில் நான் கண்ட ஓர் காட்சிதான் இன்று என் சிந்தனையை இவர்களைச் சுற்றிச் சுழல வைக்கிறது. ஒரு நீண்ட சற்றே மொத்தமான மூங்கில் கழியில் ஏறி பேலன்ஸ் செய்தபடி ஒரு மனிதன் நிற்பதையும், பிறகு குதித்து குதித்து செல்வதையும், அவனைச் சார்ந்த பெண்ணொருவர் ஒரு கையில் குழந்தை மற்றும் இன்னொரு கையில் தட்டுடனும் பணம் கேட்டு அலைவதையும் கண்டேன். எங்கே பேலன்ஸ் தவறி விழுந்து விடுவாரோ என்று பார்ப்பவர் மனம் பதறும்படி குச்சியில் நிற்கும் அம்மனிதனை ஒட்டி உரசியபடியே கனரக வாகனங்கள் கடந்து சென்றவண்ணம் இருந்தன. வித்தைகள் பலவகை என்றால் இது ஒரு வகை போலும்.

மீண்டும் மீண்டும் என்னைக் குடைவது இந்த ஒரு கேள்விதான் - கொஞ்சமாக தட்டில் விழும் சில்லறைக்காகவா இவ்வளவு ரிஸ்க்? வேறு எந்த வேலைக்குச் சென்றாலும் இதைவிட அதிகம் சம்பாதிக்க முடியுமே?

அடுத்தமுறை சந்தர்ப்பம் கிடைத்தால் கேட்க வேண்டும்.

அக்காட்சியின் வீடியோ: http://www.dailymotion.com/video/xbem1w_pole-player-at-namakkal_creation
புகைப்படம்: http://i45.tinypic.com/fmjvdf.jpg
மேலும்...

"Paa" வேட்டைக்காரன் | மோகனூர் - வேலூர் காவிரி கரைகள்

Posted: Friday, December 4, 2009 | Posted by no-nononsense | Labels: , 0 comments
So, ‘Paa’ proves to be an excellent film and you’ll surely enjoy watching it.

Verdict: Highly recommended
- ‘பா’ படத்திற்கு இப்படி விமர்சனம் எழுதியிருக்கிறது ஒரு இணையதளம் (IndiaGlitz). தேடிப் படித்த அனைத்து விமர்சனங்களுமே படத்தை பாராட்டித் தள்ளி இருக்கின்றன. டிவிடி கிடைக்க எப்படியும் இன்னும் ஒரு வாரம் ஆகுமென நினைக்கிறேன். எதற்கும் டோரண்ட்களில் தேடிப் பார்க்க வேண்டும்.

அமிதாப் கடந்த பத்தாண்டுகளில் நடித்துள்ள வித்தியாசமான காதா பாத்திரங்களில் ஒன்றையாவது ஏற்று நடிக்க நம் ஊர் சூப்பர் ஸ்டார்கள் முன் வருவார்களா என்பது சந்தேகமே. இத்தனைக்கும் பிளாக், சீனிகும், பா எல்லாமே கமெர்சியலாகவும் ஹிட் என்பதால் ஆர்ட் மூவி என்றும் சொல்லி தப்பித்துக் கொள்ள முடியாது.

இன்னும் படமே வரவில்லை. அதற்குள் இந்த வேட்டைக்காரன் விளம்பரம் படுத்தும் பாடு தாங்க முடியாததாக இருக்கிறது. ஒரு வாரமாக சன் டிவியை திருப்பவே முடியவில்லை. இத்தொல்லை எப்படியும் இன்னும் சில மாதங்கள் வரையாவது நீடிக்கும் என்பதால் என் அறையில் இருக்கும் டிவியில் சன் டிவியே வராமல் செய்துவிட்டேன். ஏதோ என்னால் முடிந்தது. சன் டிவி மீது வன்கொடுமை வழக்கு தொடர யாராவது தயாராக இருந்தால் அதற்கு வக்காலத்து ஃபைல் பண்ண நான் தயார். ஒன்று இவர்கள் படம் வாங்குவதை நிறுத்த வேண்டும். அல்லது நாம் சன் டிவி பார்ப்பதை நிறுத்தி விட வேண்டும். இரண்டில் ஒன்று நடந்தாலொழிய சன் டிவி நமக்கு கொடுக்கும் டார்ச்சரில் இருந்து தப்பிக்க வழியே இல்லை.

oo-oo oo-oo oo-oo


பரமத்தி வேலூர் காவிரி பாலத்திலிருந்து என் மொபைலில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது. நமது வண்டியிலேயே கரை வரைச் சென்று, வண்டியை ஓரங்கட்டி நிறுத்திவிட்டு இறங்கி குளிக்க வசதியான விசாலமான ஆற்றங்கரை ஒன்றை இதைப் போல வேறு நம் ஊர் அருகில் எங்கும் நான் பார்த்ததில்லை. மோகனூரில் சுடுகாட்டு கரை ஒன்று இதுபோல் இருந்தது. மோகனூர் ஆறு தொடர்பான சுகந்தமான நினைவுகள் அனைத்தும் எனக்கு அக்கரை சம்மந்தமானதுதான். உங்களுக்கும் அப்படித்தான் என்று நினைக்கிறேன். சரியாக அதே இடத்தில்தான் இப்போது மோகனூர் - வாங்கல் இணைப்புப் பாலம் பிரம்மாண்டமான தூண்கள் பதிய வேலையாகிக் கொண்டிருக்கிறது. அந்த இடமே வடிவம் மாறி குளிக்க உகந்ததான நிலையில் இல்லை. அதனால் இப்போது மோகனூர் ஆறு என்றால் கோவில் வாசல் படித்துறை மட்டுமே. அதற்கு பதில் இனி இங்கேச் செல்லலாம் என்று சிபாரிசு செய்கிறேன்.

வரும் வாரஇறுதிகள் ஒன்றில் அங்கேச் சென்று குளியல் போட்டு புதிதாக வேலூரில் திறக்கப்பட்டுள்ள ’நம்ம கடை’ என்னும் வாத்து கறி கடையில் சிரம பரிகாரம் செய்து வர எண்ணியுள்ளேன். இணைந்து கொள்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள் :-)

மேலும்...

கார்த்திகை தீபம் - சில நினைவுகள்

Posted: Tuesday, December 1, 2009 | Posted by no-nononsense | Labels: 0 comments
இன்று கார்த்திகை தீபம் என்று நினைவேயில்லை. வேலை முடிந்து ச.பே.புதூரில் பஸ்ஸை விட்டு இறங்கி நடக்க நடக்கத்தான் வீடெங்கும் ஏற்றப்பட்டிருந்த தீபங்களின் அணிவகுப்பைக் கண்டேன். ஒருவேளை தீபாவளியே தானோ என்னும் அளவிற்கு அவ்வப்போது பட்டாசு சத்தங்கள் கேட்டபடியே இருந்தன. வீட்டிற்கும் வந்ததும் என் வருகைக்காக தயாராக இருந்த என் மகளுடன் தீபாவளி முடிந்து மிச்சம் மீதியிருந்த பட்டாசுகளை கொளுத்தி முடித்தேன். இப்பொழுது என்னைத் தவிர அனைவரும் விளக்குப் போட கோவிலுக்குச் சென்றிருக்கிறார்கள்.

கார்த்திகை தீபத்தை நம் ஊரில் கூம்பு என்றுதான் பொதுவாக அழைப்பார்கள். ச.பே.புதூர் பிள்ளையார் கோவில் முன்பு கூம்பு எனப்படும் பெரிய நெருப்புக் கொளுத்தப்படும். கூம்பில் கொண்டு போய் போடு என்று கூறி என் ஆயா என்னிடம் சோளக்கட்டு வருடா வருடம் கொடுத்து விடுவார். அப்படியொருமுறை கூம்பில் வீச சோளக்கட்டு எடுத்துச் செல்லும்போது விளையாட்டாக அதனுள் இரண்டு ஊசி பட்டாசையும் மறைத்து வைத்து கொண்டு போட்டுவிட்டேன். சிறிய பட்டாசுதான் என்பதால் வெடி சத்தம் மட்டுமே கேட்டது. நெருப்பு பொறியெல்லாம் பறக்கவில்லை. ஆனால் சரியாக அடையாளம் கண்டுபிடித்து மணி வாத்தியார், பிடித்து வைதுவிட்டார். கூட படித்த பெண்கள் முன் அச்சம்பவம் நடந்ததால் பெரிய இன்சல்ட் ஆகி அவரை பல நாள் பழிவாங்க நினைத்திருந்தேன். பிறகு மறந்துவிட்டது.

கூம்பு கொளுத்துமிடத்தில் ச.பே.புதூரின் இளவட்டங்கள் அனைவரும் கூடுவார்கள். அவனவனுக்கென்று ஓர் ஆள் இருக்கும். அவள் பின்னால் சுத்துவதும், ஆளில்லாதவன் அவனுக்கு கம்பெனி கொடுப்பதும் வழக்கமான ஒன்று. (சரவணனும், நானும் அப்படி திரிந்திருக்கிறோம். ஆனால் யார் பின்னால் என்றெல்லாம் கேட்கக் கூடாது. பெயர்கள் நீங்கள் அறிந்தவைதான் என்பதால் பரம ரகசியம் ).
கூம்பு முடிந்ததும், அங்கிருந்து கிளம்பி செகண்ட் ஷோ சினிமா போவோம். பெரும்பாலும் சிவசக்தி அல்லது முருகனாகத்தான் இருக்கும். (சேலம் ரோட்டு தியேட்டர்களுக்கு சினிமா போவது எல்லாம் அப்போது பெரிய விஷேஷமான ஒன்று. அடிக்கடி நடக்காது). அதில் ஓடுவது ஏதாவது பழையப் படமாகத்தான் இருக்கும். ஆனால் தியேட்டர் நிறைந்து விடும். எந்த போரான படமாக இருந்தாலும் இடைவேளை நேரம் ஜாலியாக இருக்கும். வெளியே கிடைக்காத சில தின்பண்டங்களெல்லாம் இந்த மாதிரி டூரிங் டாக்கீஸில் தான் கிடைக்கும். இடைவேளைக்கு பிறகு சில நேரம் தியேட்டரிலேயே தூங்குவதும் நடக்கும்.

படம் முடிந்து இரண்டு மணியளவில் பதுங்கி பதுங்கி வீடு திரும்பினால், பல்லைக் கடித்துக்கொண்டு அப்பாவா அல்லது பாவமாக அம்மாவா, யார் கதவைத் திறக்கப் போகிறார்கள் என்று மனதிற்குள் பட்டிமன்றமே நடக்கும். பெரும்பாலும் அம்மாதான் திறப்பார் என்பதால், பெரிய பிரச்சினை வந்ததில்லை. ஆனால் அடுத்தநாள் காலை 6 மணிக்கே மணி சார் டியூஷன் வைத்திருப்பார். அதற்கு எந்த வகையிலும் டிமிக்கி கொடுக்கவே முடியாது. காரணம் அவர்தான் இரவு நாம் போட்ட ஆட்டத்தையெல்லாம் குறித்து வைத்திருக்கிறாரே..! எப்படியோ தூங்கி வழிந்து டியூஷன் சென்று சமாளித்து, இரவு பார்த்த சைட்களின் ஆடை அலங்காரங்களைப் பற்றி வெளியூர் நண்பர்களிடம் கதைத்து கலாய்த்து காலம் கடத்திய அந்த நாட்களெல்லாம், போயே போச்சு!!
மேலும்...