கமல் வாழ்க்கை வரலாறு நூல்

Posted: Tuesday, August 31, 2010 | Posted by no-nononsense | Labels: , 0 comments

Chetan Bhagat-ன் Five point someone மற்றும் கி.லக்ஷ்மணனின் இந்திய தத்துவஞானம் ஆகிய நூல்கள் ஒரு வாரமாக என் வாசிப்பில் இருந்துவருகின்றன. இன்னொரு பக்கம் அபிதான சிந்தாமணி. ஆனால் அது கலைக்களஞ்சியம் என்பதால் கணக்கில் வராது. இவையனைத்தையும் அப்படியே ஓரம்கட்ட வைத்து விட்டு இரண்டு நாள்களாக என்னை தன்னுள் முச்சூடாக இழுத்துக் கொண்டது பத்திரிக்கையாளர் பா.தீனதயாளன் எழுதிய ‘கமல்’ என்னும் கமல்ஹாசனின் வாழ்க்கை வரலாறு நூல். கிழக்கு பதிப்பக வெளியீடு.

கமல் என்னுடைய அபிமான நடிகர் என்பது ஒருபுறம் இருந்தாலும், ஒரு ஐம்பது ஆண்டுகளாக நாம் பார்த்து வியந்து பொறாமைப்பட்டு ஆகர்ஷிக்கப்பட்டு வெளியே விமர்சித்தாலும் மனதிற்குள் பெருமைப்பட்டுக்கொள்ளும் ஒரு பன்முக ஆளுமை கமல்ஹாசன். அவர் பெயரை தாங்கியச் செய்தி ஒற்றை வரியேயாயினும் அதனை படிக்காமல் கடந்து செல்வது என்பது தமிழர்களின் வழக்கத்தில் கிடையாது.

அப்படிப்பட்டவரின் வாழ்க்கையை நுணுகி பார்த்து எழுதப்பட்ட நூல் ஒன்று கையில் கிடைக்கும்போது, அதனில் கோர்க்கப்பட்ட சம்பவங்களை மனது உடனுக்குடன் சம்மந்தப்பட்ட படங்களுடன் இணைத்து ஒரு மனச்சித்திரத்தை உருவாக்கியபடி இருக்கும்போது, அந்த அனுபவத்தை விட்டு வெளியே வருவது சினிமா ஆர்வலர்கள் யாருக்கும் எளிதன்று. அது ஒரு joyful experience!

இத்தனை வருடம் சினிமாவில் இருந்து கமல் என்ன சம்பாதித்தார் என்றால் தன்னுடைய அடுத்தடுத்த படங்களை மட்டுமே என்பதைத் தவிர, வேறு ஒன்றுமில்லை என்பதை ஒவ்வொரு சினிமா முயற்சியின் பின்னணியும் நம்மை உணர வைக்கிறது. அவர் ஈட்டிய பணமெல்லாம் சினிமாவைப்பற்றி மேலும் மேலும் படிக்க தெரிந்துகொள்ள மட்டுமே செலவளித்திருக்கிறார். எல்லா முதலீடும் சினிமாவில் மட்டுமே. முடிவாக இதுவரை கண்டதெல்லாம் நஷ்ட கணக்குதான். ஆனாலும் சிந்தனையில் எப்போதும் சூழ் கொண்டிருப்பது சினிமா மற்றும் சினிமா மட்டுமே.

நம் காலத்தின் நிஜ கலைஞன் கமல்! அதனை நாம் அவர் சினிமாவில் எப்படி போராடி தனக்கான இடத்தை அடைந்தார் என்பதை தெரிந்துகொள்ளும்போது மட்டுமே உணர்ந்துகொள்ள இயலும்.

(அவர் மீதான சினிமா விமர்சனங்கள் தனிப்பட்டவை. இந்நூல் கமல் என்னும் தனி மனிதனின் வாழ்க்கையைப்பற்றிய தரிசனம் மட்டுமே)

இதன் வாசிப்பனுபவத்தை இன்னும் விரிவாக பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன். நேரம் அனுமதிக்கும்போது நடக்கலாம். அதற்குள் வேறு எண்ண இழை எழுத்தில் குறிக்கிடாமல் இருக்கவேண்டும்.

**

சில கருத்துகளின் மீதான பதில்:


என்னுடைய விமர்சனங்களெல்லாம் கமல் சினிமாக்களின் மீதுதான். கமல் மீது தனிப்பட்ட விமர்சனங்கள் எதுவும் கிடையாது. உண்மையில் பல முற்போக்கான கருத்துக்களில் கமல் எனக்கு ஒரு ஆதர்ஷம். முக்கியமாக இருவரும் பெரியார் கொள்கைகளில் அதிதீவிர ஈடுபாடுடையவர்கள். சமூக மதிப்பீடுகளுக்கான இருவரின் முக்கியத்துவமும் ஷூ காலுக்கு கீழேதான். இப்படி அச்சொட்டாக கமலை அவதானித்து வருவதால் அவரை விமர்சிப்பதிலும் எனக்கான உரிமைகள் தனிப்பட்டே இருக்கும். அதேசமயம் ஏதோ விஜயை வாய் போன போக்கில் காமெடி செய்வதுபோல யாராவது கமலிடமும் வேலையை காட்டினால் அங்கே நான் ரௌத்திரம் பழகுவதும் தவிர்க்க இயலாதது :-) 

இதை நான் முன்பே ஒருமுறை சொல்லியிருக்கிறேன் என்று நினைக்கிறேன். 

*

பள்ளிநாள்களில் நான் பிரபு ரசிகனும் கூட. அரங்கேற்ற வேளை, மை டியர் மார்த்தாண்டன், ராஜா கைய வச்சா, சின்ன மாப்பிள்ளை போன்ற படங்கள் வந்த காலகட்டங்களில் பிரபு என் விருப்ப நடிகர். (இங்கே சின்ன தம்பியை நான் லிஸ்டில் சேர்க்கவில்லை என்பதை கவனிக்க). குறிப்பாக எனக்கு காமெடி கலந்த பிரபு படங்கள் பிடிக்கும். பிற்காலங்களில் அவர் தன் உருவத்துக்கு ஏற்ற வேடங்களை தேர்ந்தெடுத்து நடிக்காமல் ஆக்சன் வலைக்குள் அகப்பட்டுக் கொண்டார். ரசிகர்களையும் மார்க்கெட்டையும் இழந்தார். 

எனக்கு இன்னும் எம்.ஜி.ஆர், சிவாஜி, கலைவாணர் படங்களும்கூட மிகவும் பிடிக்கும். அது என்ன, ரசிகன் என்றால் யாராவது ஒருவருக்குத்தான் இருக்கவேண்டுமா என்ன?
மேலும்...

குற்றங்களும் தண்டனையும்

Posted: | Posted by no-nononsense | Labels: , 0 comments
தண்டனைகள் கடுமையாக கடுமையாகத்தான் குற்றங்களின் எண்ணிக்கை குறையும். மரண தண்டனை என்பது சட்டத்தில் இருக்கவேண்டிய தண்டனைதான் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தே இல்லை. அது இருப்பதினால் மட்டும் யாரும் கொலை செய்யாமல் இருக்கிறார்களா என்று எதிர்வாதம் வைப்பார்கள். அப்படி பார்த்தால் போலீஸ் ஸ்டேஷன் இருந்து மட்டும் என்ன குற்றம் நடக்காமலா இருக்கிறது, எதற்கு வெட்டியாக போலீஸ் ஸ்டேஷன் என்றோ, எதற்கு சிறைச்சாலை என்றோ கூட கேட்க முடியும். 

எத்தனை பேரை கொன்னாலும் தூக்கு கிடையாது. மிஞ்சி மிஞ்சி போனால் ஜெயில்லதான் போடப் போறாங்க என்றால், நீ கேஸ நடத்திக்கடா மகனே என்று வீட்டில் சொல்லிவிட்டு அறுவாளை தூக்குபவனின் எண்ணிக்கை அதிகமாகி விடும். அதே கொலை செய்தால் உயிர் போகும் என்றால் தன்னுயிர்க்கு அஞ்சுபவன் அதனை தவிர்ப்பான்.

நாம் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். Only rare of rarest cases-ல் மட்டும்தான் தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. இந்த rarest case-ல் உணர்ச்சிவயப்பட்டு செய்யப்படும் கொலைகளெல்லாம் கணக்கில் வருவதில்லை. 

இதே தலைப்பில் ஆறு வருடங்களுக்கு முன்பு வலைப்பதிவுலகில் எனக்கும் இன்றைய இணைய பிரபலம் ஒருவருக்கும் நீண்ட விவாதம் நடந்தது. ஒரு உயிரை கொல்வது மனிதமல்ல, அவர்களுக்கும் திருந்த வாய்ப்பளிக்க வேண்டும் என்னும் மாற்றுக் கருத்தை நான் மதிக்கிறேன். ஆனால் 4 வயது பெண் குழந்தையை வன்புணர்ச்சி செய்து, அதன் தலையில் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்து, துண்டு துண்டாக வெட்டி எரித்தவனுக்கும் சிறைதான், பசிக்கு பன் திருடி மாட்டினவனுக்கும் அதே சிறைதான் என்பது சமூக பாதுகாப்பு ஒழுங்குமுறைகளுக்கு ஏற்றதல்ல என்பது என் போன்றவர்களின் கருத்து.  
மேலும்...

கிடாவெட்டு

Posted: Monday, August 30, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
விர்ர்ர்ரூம்.......!

என்னதான் வண்டியில் செல்ஃப் ஸ்டார்ட்டர் இருந்தாலும் அதை ஒரு உதைவிட்டு ஸ்டார்ட் செய்து சுற்றம் அதிர முறுக்கிவிட்டு ஓட விடுவதில்தான் ஒரு கெத்து இருக்கிறது. பரமசாதுக்களாக பைக்குகளை பாவிப்பவர்களைக் கண்டால் பரிதாபமாக இருக்கும். கனரக பைக்குகள் கம்பீரமான ஆண்மையின் அடையாளம்! என்ஃபீல்டு புல்லட் சவாரிகளைப் போல!

நான் விட்டு கிளம்பிய இடம் மோகனூர் நவலடியான் கோவில். அங்கே ஒரு நண்பரை சந்திப்பதற்காக சென்று விட்டு, ஆரியூர் நோக்கி பைக்கை விரட்டிக்கொண்டு இருந்தேன். கிடாவெட்டு இருந்தது. கோவிலில் இருந்து பாதி பர்லாங்கு தூரம்கூட கடந்திருக்க மாட்டேன். ஒரு சிறிய உருவம் லிப்ட் கேட்டு கைகாட்டியது. முதுகும் சற்றே கூன் போட்டிருந்தது. அம்மனிதருக்கு இருந்தால் 45 வயது இருக்கலாம்.

பொதுவாக யார் லிப்ட் கேட்டாலும் நான் கொடுத்து விடுவது என் வழக்கம். எயிட்ஸ் ஊசி என்று ஒரு கதை முன்பு பரப்பப்பட்டபோது மட்டும் கொஞ்சம் அஞ்சியிருக்கிறேன். மற்றபடி தயங்குவதில்லை. சக மனிதர்கள் மேல் இன்னும் முற்றாக நம்பிக்கையிழக்கவில்லை.

“ரொம்ப நன்றிங்க சார். ஞாயித்து கெழம பார்த்து டூட்டியும் வெச்சிட்டாங்க சார். கோயில்ல கிடாவெட்டும் இருந்துச்சி. ரெண்டையும் விடமுடியாம ஓடிட்டு இருக்கேங்க”

“அது பரவாயில்லைங்க. எங்க இறங்கணுங்க?”

“பஸ் ஸ்டாண்டுல விட்டாங்க போதுங்க சார். மாணிக்கம் பாளையம் போய் சேரணுங்க. டூட்டியிருக்கு”

“அவ்வளவு தொலைவா.. என்ன டூட்டிங்க?”

“கம்பவுண்டரா இருக்கேங்க. 82-ல எம்ஜிஆர் பீரியடுலயே ஜாயின் பண்ணிட்டேன். டிகிரி முடிச்சதும் கெடச்சதுங்க”

நான் மௌனமாக தலையை ஆட்டியபடி வண்டியை செலுத்திக் கொண்டிருந்தேன். அவரே தொடர்ந்தார்.

“அதுல பாருங்க. எம்ஜிஆர் தான் வேலை கொடுத்தாருன்னாலும், டீயெம்கேல ஆட்சியில தான் சம்பளம் பாஞ்சாயிரம் ஆகியிருக்குங்க. முன்னைக்கு இப்ப கொஞ்சம் பரவாயில்லைங்க. அடுத்தாப்லயும் கலைஞர் வந்துட்டா மேலும் கொஞ்சம் போடுவாருன்னு சொல்றாங்க. அவர் செய்வாருங்க”

“ஓ..!” என்று தலையாட்டினேன். டிபிகல் தமிழக அரசு ஊழிய மனோபாவம்.

“நம்ம வீட்டுல இன்னைக்கு வேற விசேஷம் போயிட்டாங்கங்க. பசங்க சின்னவங்க. அதான் நாம இங்க ஓடியாறதா போச்சிங்க. டூட்டியில்லைன்னா இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணி சாப்பிட்டுருக்கலாம்”

“இருந்தாலும் டூட்டிய வெச்சிகிட்டு ஏன் இப்படி சிரமப்படணும். உங்கள பார்த்த அதிகம் அலையமுடியாதவர்ன்னு தோணுது. வர முடியலைன்னு சொல்லியிருக்கலாமே”

“அதெப்படிங்க. கிடாவெட்டுன்னா நமக்குதான் கால் நிக்காதுங்களே!”, சொல்லிவிட்டு வாய்விட்டு சிரித்தார். அதற்குள் பஸ் ஸ்டாண்டு வந்திருந்தது. குறைந்தது மூன்று முறையாவது நன்றி கூறிவிட்டு அகன்றார்.

மிஞ்சிப் போனால் இரண்டு கி.மீ கூட இருக்காது. ஐந்து நிமிட பயண தூரத்திற்குள் வெகு சகஜமாக வேலை, குடும்பம், அரசியல் என்று எத்தனை விஷயங்களை பகிர்ந்துகொண்டு விட்டார் இம்மனிதர் என்று வியப்பாக இருந்தது. வெள்ளந்தியானவராக இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன்.

சிலர் இப்படித்தான். கணநேர சந்திப்பே கூட அவர்களுக்கு போதுமானது. நீண்ட நாள் பழக்கம்போல் கடகடவென பேச ஆரம்பித்து விடுவார்கள். பஸ் பயணங்களில் அப்படிச் சிலரை அடிக்கடி சந்திக்க நேரிடுகிறது. பல மணி நேர ரயில் சிநேகிதம் கூட இல்லை; சில நிமிட பஸ் சிநேகிதங்களே அவை. ஆனாலும் ஒரு சகஜத்தை(comfort level) அவர்களிடம் உணர முடியும். அப்படி நான் பழகிய ஒரு புனே என்ஜினியரிங் மாணவன் இன்றும் என்னுடன் தொடர்பில் இருக்கிறான். என்னுடைய குணாம்சம் சட்டென்று யாரிடனும் எளிதில் பழகிவிடக் கூடியதில்லை என்றபோதிலும், இம்மாதிரி நபர்களை ஏனோ எனக்கு பிடிக்கவே செய்கிறது.

வண்டி மோகனூருக்கு முன்பாக போட்டிருக்கும் மிகப்பெரிய ரயில்வே பாலத்தை இப்போது கடந்து கொண்டிருந்தது. அநேகமாக நாமக்கல் வட்டாரத்தில் இதுதான் பெரிய பாலம் என்று நினைக்கிறேன். மணிக்கட்டை திருப்பி கடிகாரத்தைப் பார்த்தேன். மணி 2-ஐ தாண்டியிருந்தது. வண்டியின் வேகத்தை மேலும் அதிகரித்து விரைந்து ஆரியூரை அடைந்தேன். விருந்து இன்னும் ஆரம்பித்திருக்கவில்லை.

விருந்துகள் எப்போதும் ஒரு குதூகலமான மனநிலையை நம்மில் தோற்றுவிக்கின்றன. விருந்தின் தன்மைக்கேற்றவாறு சில முன்தயாரிப்புகளை நாம் செய்துகொள்கிறோம். விருந்தில் நன்றாக சாப்பிடவேண்டும் என்று முந்தைய வேளைகளில் குறைவாக உண்பவர்களும் உண்டு. விருந்தளிப்பவரின் வசதி நிலைகளை பொறுத்து சில எதிர்பார்ப்புகளை மனம் ஏற்படுத்திக்கொள்கிறது. அதை அவர் நிறைவு செய்வதை பொறுத்து அந்த விருந்தின் வெற்றியும் தோல்வியும் அமைகிறது. ஒருவகையில் அவ்விசேஷத்தின் வெற்றி தோல்வியும் என்றுகூடச் சொல்லலாம்.

கிடாவெட்டைப் பொறுத்தவரை இவை அனைத்துமே இருமடங்காக இருக்கும். கல்யாணத்தை உள்ளூரில் வைத்தால் வரும் கும்பலில் பாதிகூட அசலூரில் வைத்தால் வராது. ஆனால் கிடாவெட்டை எந்த குக்கிராம கோவிலில் கொண்டுபோய் வைத்தாலும் கண்டுபிடித்து, சென்று சேர்ந்து, உண்டு களித்து வருபவர்களே நம்மில் அதிகம். அசைவப் பெருவிருப்பம் கொண்டவர்கள் நாம். அதற்கும் காரணம் அடிப்படையில் நம் சைவ உணவுப்பழக்கம் கொண்டவர்களாக இருப்பதுதான். என்றாவது கிடைக்கும் சுவையுணவின் மீது இயல்பாக ஏற்படும் ஒரு மிகைவிருப்பம்!

என்னைப் பொறுத்தவரை அசைவ உணவுகளில் என்னுடைய விருப்பங்களெல்லாம் கோழி, மீன் ஆகியன மட்டும்தான். ஆட்டிறைச்சியை என் விருப்பப் பட்டியலில் இருந்து விட்டு விலக்கி மாமாங்கம் ஆகிவிட்டது. அதனால் கிடாவெட்டுகளில் விருந்தை முன்வைக்காமல் உறவுகளை மதித்து(!) கலந்துகொள்வதே என் விழைவாக உள்ளது. அதிலும் விசேஷங்கள் நடைபெறும் இடம் கோவில்கள் என்றால் அண்மைகாலமாக என்னை வியாபித்துள்ள சிற்ப ஆராய்ச்சி ஆர்வம் என்னை மேலும் உந்தித்தள்ளிவிடும்.

நான் சென்றடைந்தது ஆரியூர் முத்துசாமி, கன்னிமார் கோவில். சமீப காலத்தில்தான் அங்கேயுள்ள விதானங்களும், உள்ளரங்கங்களும் புதுப்பிப்பப்பட்டன போலும். பழைய சிற்பங்களுக்கெல்லாம் பெயிண்டால் கோட்டிங் வேலை நடந்து கண்ணை உறுத்திற்று. நம் பழையை சிற்ப வேலைப்பாடுகளின் தனித்தன்மையை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு முற்றிலுமாக நம்மிடமில்லை. காவல் தேவதை சிலைகள் மட்டும் இன்னும் பழையனவாகவே இருந்தன. சில போட்டோக்கள் எடுத்துக்கொண்டேன்.

இப்படி தன் போக்கில் சுற்றிக்கொண்டிந்தவனின் தோளில் ஒரு கை விழுந்தது. திரும்பினால்.. பள்ளிநாட்களில் சில இதமான பொழுதுகளை பகிர்ந்துகொண்ட பழைய நண்பன் ஒருவன் முகம் மலர நின்றிருந்தான். நடப்புகால நட்புகளை பரிசீலிக்கும்போது, இவன் போன்ற பல பால்ய தோழமைகள் இடைநின்று போனது பேரிழப்பாக சில நேரங்களில் தோன்றுவதுண்டு. இருவரும் கண்டுபேசி கணகாலம் ஆகியிருந்ததால் உபயகுசலோபரிகளை செய்துகொண்டு, பரஸ்பர தொழில் விவகாரங்களைப்பற்றி பேச்சு ஆரம்பித்தது. நண்பனுக்கும் பங்குசந்தை தொழில் உண்டு என்பதால் பேச்சு அதில் மையம் கொண்டது. வாரம் முழுவதும் அதிலேயே தோய்ந்து கிடப்பதால், வாரயிறுதிகளில் யாராவது ‘ஷேர்.. மார்க்கெட்..’ என்று ஆரம்பித்தால் காதை பொத்திக்கொண்டு காததூரம் ஓடி விடுவேன். ஆனால் சிலரிடம் அப்படி முடிவதில்லை.

சுவாரசியாமாக உரையாடல் சென்று கொண்டிருக்கையில் மனிதர்களிடையே ஒரு பரபரப்பு ஏற்பட்டதை கவனிக்கமுடிந்தது. விருந்து ஆரம்பித்து விட்டிருந்தது. நண்பன் முந்திக்கொள்ள முன்னால் நகர்ந்தான். நான் பிந்திக்கொண்டு பின்னால் வந்து பிரகாரங்களை சுற்றிப் பார்த்தபடி வலம் வந்தேன். ஒதுக்குப்புறமாக இருந்த மரத்தடியில் சிலர் வேகவேகமாக குடித்துக் கொண்டிருந்தார்கள்.

“அதெப்படிங்க. கிடாவெட்டுன்னா நமக்குதான் கால் நிக்காதுங்களே!”... என்னும் கம்பவுண்டர் வரிகளை கொஞ்சம் மாற்றிப் போடத் தோன்றியது. தலையும் நிற்காது.

கல்யாணம், கச்சேரி போன்ற மற்ற எந்த கூடுகையிலும் குற்றமாக கருதப்படும், உள்ளம் அநாவசியமாக குறுகுறுக்கும் செயலாகிய குடி, கிடாவெட்டில் மட்டும் விசேஷத்தின் ஓர் அங்கமாக கருதப்படுவது நம் சமூகத்தின் முரண்நகைகளில் ஒன்று. இதை இன்னும் மறைமுகமாக மட்டும் கொண்டாடிக்கொள்ள முடியும். பொதுவெளியில் அளவாக நாகரிகமாக குடித்து தடுமாறாமல் பேச நாம் கற்றுக்கொள்ளும் வரை அது அப்படி நீடிப்பதுதான் நல்லதும்கூட.

மணி 3 ஆகியிருந்தது. அடுத்த பந்திக்கும் சேர்த்து இப்பவே இடம்பிடித்தபடி மனிதர்கள் நின்றிருந்தார்கள். சாப்பிடும் எண்ணத்தை கைவிட்டு நகர்ந்தேன்.

உணவை விட ஞாயிறு பிற்பகல்களின் ஓய்வு எனக்கு அதிமுக்கியம். வார நாட்களில் மிகநெருக்கடியாக பொழுதுகளை கட்டமைத்துக்கொண்டு, அந்த இடைவெளிக்குள் வாழ முற்படுபவன் நான். அதற்கு அத்தியாவசியமான ஓய்வை ஞாயிறுகளின் நெகிழ்வான உறக்கம் அளிப்பதாக எப்பவும் ஓர் உள்ளுணர்வு. ஓய்வற்று ஒரு ஞாயிறு கடந்து விட்டாலும் கூட அதைத் தொடர்ந்து வரும் வாரம் முழுவதும் எவ்வளவு உறங்கினாலும் மனம் சோர்வாகவே உணரும். அது ஏன் அப்படி என்பதெல்லாம் விளக்கத்துக்கு அப்பாற்பட்ட நுண்ணுனர்வு சார்ந்த விஷயங்கள்.

விர்ர்ர்ரூம்.......!

கிளம்பி விட்டேன்.
மேலும்...

சிற்சில குறிப்புகள் (5)

Posted: Sunday, August 29, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
ஈழ நண்பர் ஒருவருடன் போர்முனையில் தற்கொலை என்பது பற்றி உரையாடிக் கொண்டிருந்தேன். பேச்சு புலிகளின் சயனைடு குப்பி மற்றும் சமுராய்களின் ஹாராக்கிரியை மையம் கொண்டு அமைந்தது. சயனைடை கடித்து நொடியில் இறப்பது என்பதை விட பாரம்பரிய ஹாராக்கிரியை செயல்படுத்த கடும்நுண்மனமுதிர்ச்சி வேண்டும் என்பது என் வாதமாக இருந்தது. காரணம் அது வயிற்றை கிழித்துக் கொண்டு குடல் சரிய விட்டு பல மணி நேர வலிக்குப் பிறகு சாவது.  அதோடு இந்த சயனைடு குப்பி சாவுக்கு முன்னோடிகளாக நாஜிக்கள் இருந்ததாக சில குறிப்புகள் படித்திருக்கிறேன். சட்டென்று தேடியெடுக்க முடியவில்லை. 


*


இரண்டு மணி நேரமாக ஒரு வாடிக்கையாளர் என்முன் அமர்ந்து இடைவெளியில்லாமல் பேசிக்கொண்டே இருக்கிறார். நான் ‘ஊம்’ மட்டும் கொட்டியபடி கேட்டுக் கொண்டிருக்கிறேன். எல்லாமே எனக்கு தேவையில்லாத தகவல்கள். பேசியதில் பிரச்னையில்லை.. என்ன இருந்தாலும் தொழில்முறையில் வேண்டப்பட்டவர்! ஆனால், சிலரால் எப்படி இப்படி முடிகிறது என்பது குறித்து கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கிறது!


*


என் மேசையின் மீதிருக்கும் இங்க் பேனாவில் அதை வாங்கியபோது போட்ட மை இன்னும்கூட தீரவில்லை. தேவைப்படும் நேரங்களில் உதறியுதறி பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். ஒரு nostalgia-க்காக! என் அழகிய கையெழுத்துதான் கர்ணகொடூரமாகி விட்டது :(


*


லெமூரியா கண்டம் பற்றி நண்பருடன் உரையாடிக் கொண்டிருந்தேன். என் வாசிப்பனுபவங்களின் அடிப்படையில் என் புரிதல்: அப்படி ஒரு கண்டம் இருக்கவேயில்லை. அது இரு ஆய்வாளர்களின் கற்பனையில் உதித்த ஒன்று. அதை தேவநேய பாவாணர் போன்ற ஆரியத்துக்கு எதிராக திராவிடத்தை முன்னிறுத்திய தமிழறிஞர்கள் குமரிக்கண்டத்துடன் முடிச்சிட்டு அதற்கு ஒரு நம்பகத்தன்மையை ஏற்படுத்தி விட்டனர். 

மேலும்...

ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்

Posted: Friday, August 27, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments

அவர் ஊரின் பிரபலமானதொரு அரசியல்வாதி. முக்கிய கட்சியின் மாவட்ட செயலாளர். சிவப்பு விளக்கைச் சுழல விட்டுச் செல்லும்படியான முக்கிய அரசு பதவிகளை வகித்தவர். உள்ளூரில் அவருக்கு போட்டியென்று ஒருவரும் கிடையாது. அந்தளவு ஆள்பலமும் செல்வாக்கும் கொண்டவர். அவரை காண காத்திருப்போர் பட்டியலைக் கண்டாலே போதும் அவரின் ‘பவர்’ தானே விளங்கும்.

இதெல்லாம் பத்தாண்டுகளுக்கு முந்தைய கதை.

நேற்று உள்ளூரின் பிரபலமான ஒரு திருமணத்திற்கு போயிருந்தேன். வண்டியை நிறுத்தி விட்டு, முன்வாசலில் வணக்கம் போட்டபடி இணைந்து செல்ல தெரிந்தவர் யாராவது வருகிறார்களா என்று நோட்டம் விட்டேன். தாட்டியான உடம்புடன் நெடிய ஓர் உருவம் ஓரமாக நின்று கொண்டிருந்தது. அவரிடம் நிற்பாரோ, பேசுவாரோ யாருமில்லை. அவரும் யாருடைய முகத்தையும் ஏறிட்டு பார்க்கிற மாதிரி தெரியவில்லை. ஏதோ யோசனையாக நின்றவர், என்னுடன் இணைந்து நடந்து வணக்கம் போட்டு உள்ளே வந்தார். சிலருடன் முகமன்கள் பரிமாறிக்கொள்ளப்பட்ட பிறகு கூட்டத்துடன் ஒரு சேரில் சிறிது நேரம் உட்கார்ந்து விட்டு உணவுக்கூடம் வந்தார். இடம் கிடைக்கவில்லை. அவரை சிறப்பாக கவனிப்போரும் யாருமில்லை. அதற்குமேல் நான் அவரை கண்ணால் பின் தொடராமல் பந்திக்கு முந்திக்கொள்ள முன்சென்று விட்டேன்.

இவரைப்பற்றி சில வருடங்களாகவே இப்படி ‘நொடிஞ்ஞிபோயிட்டார்’ செய்திகள் காதை வந்தடைந்தவண்ணம் இருந்தன. இதற்கு அர்த்தம் பணமற்று போய்விட்டார் என்பதல்ல. உச்சியில் இருந்தபோது அனைத்து தந்திரோபாயங்களையும் கையாண்டு நன்றாக சேர்த்த பணம் இன்னும் நிறையவே இருக்கிறது. உட்கார்ந்து சாப்பிட்டாலும் மூன்று தலைமுறைகள் ஆகும் அழிக்க. இங்கே அதன் அர்த்தம் ஆள் ஏவல் அதிகாரமற்று போய்விட்டார் என்பது. ஒரு பதவி சுக ருசி கண்ட அரசியல்வாதியை பொருத்தவரை இது முந்தைய துன்பங்களை விட கொடுமையானது. 

சில நாட்கள் முன்பு அவருடைய செல்ல மகனை என்னுடன் பஸ்ஸில் கடைசி சீட்டில் கண்டபோதே துணுக்குற்றேன். எங்களுக்குள் நல்ல அறிமுகம் உண்டு. இருவரும் சேர்ந்து நிறைய கிரிக்கெட் விளையாடி இருக்கிறோம். பேசிக் களித்திருக்கிறோம். ஆனால் ஏனோ அவன் என் பக்கம் திரும்பவேயில்லை. நானும் வழியச் சென்று பேச முயலவில்லை.

இழந்த பழைய அதிகாரம், ஆடம்பரம், ஏகபோகங்கள் மனிதர்களை மனதளவில் தாழ்வுமனப்பான்மை கொள்ளச் செய்கின்றன. எல்லார் கண்களும் தங்களையே பார்ப்பதாக குறுகுறுக்கிறார்கள். யாராவது அதைப்பற்றி கேட்டு விடுவார்களோ என்று ஒரு பதற்றம் அவர்களை எப்போதும் பீடித்தபடியே உள்ளது. இதற்கெல்லாம் ஒரே நிவாரணம் மீண்டும் இழந்தவைகளை திரும்பபெறுவதுதான். ஆனால் அதற்கான மனத்திண்மையை இழந்துவிட்டிருந்தால், தன்னைத்தானே சமூகப் பிரஷ்டம் செய்துகொண்டு தனிமையை நாடி பழைய நினைவுகளை அசை போட்டபடி காலம்தள்ள வேண்டியதுதான்.

ஆனால் இதெல்லாம் பத்தாண்டுகளுக்கு முன்பு கற்பனைகூட செய்து பார்த்திர முடியாத விஷயம். இன்று காந்திசெல்வனை பார்த்து இன்னும் பத்து வருசத்துல நீங்க நாதியத்து போகப் போறீங்க என்றால் அது நமக்கே எப்படி அபத்தமாக ஒலிக்குமோ, அப்படித்தான் இவரைப்பற்றிய கூற்றும் அப்போது இருந்திருக்கும். ஆனால் நடந்திருக்கிறதே!

ஏன் நடந்தது என்பதெல்லாம் அரசியல். கிட்டத்தட்ட அமைதிப்படை மணிவண்ணன் கதை என்று சொல்லலாம். அதில் மணிவண்ணன் அடிபொடியாக மாறிக்கொண்டார். யதார்த்தத்தில் இவரால் அப்படி மாறமுடியவில்லை. வேறு கட்சிகள் தாவி பார்த்துவிட்டு, போணியாகாமல் சுத்தமாக ஒதுங்கிக் கொண்டார். 

வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும். ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும் என்பது இதுதானோ!!
மேலும்...

அண்ணாவின் திராவிட அரசியல்

Posted: Wednesday, August 25, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments

இன்றைய இரவுக்கு ‘அண்ணா தம்பிக்கு எழுதிய கடிதங்கள்’ நூலை வாசித்துக் கொண்டிருக்கிறேன். காங்கிரஸ் விருட்சத்தை தன் நாவன்மையால், எழுத்தாற்றல் திறத்தால் எப்படி மெல்லென அசைத்து வீழ்த்தினார் என்பதை நுட்பமாக அவதானிக்கிறேன். 

எங்கே தொடங்கினாலும் திராவிட நாட்டில் வந்து முடிக்கிறார். தமிழர்களின் எல்லா பிரச்னைகளுக்கும் ஒரே தீர்வு திராவிடம் அடைவதுதான் என்று முழங்குகிறார். ’வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது’, ‘சோறு கேட்டால் இதோ பாரு நேரு என்கிறார் காங்கிராஸார்’ என்று இடித்துரைக்கிறார். எழுத்து நடை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுகிறது. அந்த நாட்களில் நாம் இருக்க நேர்ந்திருந்தாலும் அண்ணாவின் தம்பிகளாகியிருப்போம் என்பது எனக்கு சந்தேகமில்லை. 

ஆனால், இது எல்லாவற்றையும் பிற்காலத்தில் அவரே கைவிட்டு விட்டார் என்பதுதான் இதில் கவனிக்க வேண்டியது. அதற்குள் கட்சி ஆட்சியை பிடிக்குமளவு வளர்ந்திருந்தது. அண்ணா சாமார்த்தியமான அரசியல்வாதிகளுக்கு எல்லாம் ஒரு எடுத்துக்காட்டு. அவர் இடத்தை மதியழகன், நாவலரிடமிருந்து கருணாநிதி தட்டிப் பறித்துக் கொண்டார் என்று ஒரு குற்றச்சாட்டு உண்டு. ஆனால் நடப்புகளை கூர்ந்து கவனித்தவர்களுக்கும், இருவரின் தனித்தன்மைகளையும் புரிந்தவர்களுக்கும் அண்ணாவின் வழித்தடத்தில் முன்செல்ல கருணாநிதிக்கே தகுதி இருந்தது என்று சொல்வேன். உதாரணமாக அவருக்கு ‘தம்பி!’ கடிதப் பிரச்சாரம் என்றால், கருணாநிதிக்கு ‘உடன்பிறப்பே!’. இப்படிச் சில.

சமீபத்தில் வெளியான தமிழ்மகனின் ‘வெட்டுப்புலி’ நாவலில் திராவிட இயக்கங்களைப்பற்றிய ஒரு அழுத்தமான பதிவு இருப்பதாக விமர்சனங்கள் பதிவு செய்கின்றன. இருப்பதை முடித்து விட்டுத்தான் கையில் எடுக்க வேண்டும்.

ஆனால் இன்னும் சில மாதங்களுக்கு அதிகம் எதையும் படிக்கமுடியாதபடி சில விஷயங்கள் ஆக்கிரமித்துக்கொள்ள இருக்கின்றன. இணையத்தில் உலவுவதும்கூட இனி குறைவாகத்தான் இருக்கும்.

*

வாசிப்பு முடிந்தது. திருவிதாங்கூர் சமஸ்தான விடுதலை வேட்கையையும், அதில் சர்.சி.பி.ராமசாமி ஐயர் எடுத்துவைத்த வாதங்களையும் திராவிட நாடு கோரிக்கையுடன் சம்மந்தப்படுத்தி ஒரு இடத்தில் வலுவான ஒரு முடிச்சை போட்டிருந்தார். இதையெல்லாம் படித்துதானே இளைஞர் கூட்டம் எழுச்சி பெற்றது என்னும் எண்ணத்தை படிக்கும் வரிதோறும் மனதில் ஓடவிட்டபடி படிப்பதே ஒரு தனி அனுபவமாக உள்ளது. இதுவரை படித்தது 1961-62 காலகட்ட கடிதங்கள் மட்டுமே. இதற்கு அடுத்த 5 வருடங்கள் தான் மிக முக்கியமானவை. இந்தி எதிர்ப்பு போராட்டம் தமிழ்நாட்டில் பற்றியெரிந்த, அல்லது பற்ற வைக்கப்பட்ட கால இடைவெளிகள். ஆனால் அவை இந்த தொகுப்பில் இல்லை. அடுத்த தொகுப்பு என்னிடம் கைவசமில்லை. நூலகத்தில் தேடி பார்க்கவேண்டும். 
மேலும்...

ஸ்வர்ணலதா அஞ்சலி

Posted: Saturday, August 21, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
ஸ்வர்ணலதாவின் தொகுப்புகளை தேடியெடுத்து இசை மழையில் நனைந்து கொண்டிருக்கிறேன். வேறு நேரங்களில் கேட்டதை விட இப்போது குரலின் பாவங்களை நிதானித்து கவனித்து ரசிக்க முடிவது, இனி இந்த குரலை புதிதாக கேட்க முடியாது என்பதாலா, அல்லது அவரின் மரணம் ஏற்படுத்திய தாக்கத்தினாலா என்பது தெரியவில்லை. இரண்டும் இருக்கலாம்.


ஜானகியம்மா 50 வருடங்களும், சித்ரா 30 வருடங்களுமான ஒரு நீண்ட கேரியரை சினிமா பின்னணி பாடல்களில் கொண்டவர்கள். மாறாக ஸ்வர்ணலதா ஒரு பத்தாண்டு காலம் மட்டுமே பிரபல பாடகியாக இருந்தவர். மேலும் அந்த பத்தாண்டுகளும் கூட மேற்சொன்ன இரு நட்சத்திர பாடகிகளின் பீக் பீரியட் என்பதால், அவர்களின் புகழ் வெளிச்சங்களுக்கு இடையே ஸ்வர்ணலதாவின் புகழ் என்பது பெரிதாக பிரபலமாகாத ஒன்றாகவே இருந்துவிட்டது. 

ஆனால் கொண்டாடப்படவில்லையே தவிர எப்போதும் நல்ல பாடகியாகவே அறியப்பட்டிருக்கிறார். கொண்டாடப்படும் நிலையை அடையும்படியான ஒரு நீண்ட கேரியரை அமைத்துக்கொள்ள முடியாமல் சுகவீனம் அடைந்து விட்டார் என்று நான் நினைக்கிறேன்.

தமிழ் சினிமா பின்னணி பாடகிகள் என்று எத்தனையோ பேர் வந்து போகிறார்கள். அவர்களுக்கு இடையே குறைந்த பாடல்களை பாடிய ஜென்சிக்கு என்று என்றும் ஓர் இடம் உண்டு. என்னவானார் இவர் என்று அவரைப்பற்றி கேட்காத திரைஇசை ரசிகர்கள் குறைவு. தன்னுடைய பாடல்களின் மூலம் அப்படி ஓர் இடத்தை அவர் அடைந்திருக்கிறார். அதைவிட ஒரு மேலான ஓர் இடம் என்றும் ஸ்வர்ணலதாவுக்கு உண்டு. அந்தளவு லோ பிட்ச், ஹை பிட்ச் இரண்டிலுமே அற்புதமான பாடல்களை கொடுத்திருக்கிறார். குவியலான பாடகர்களுக்கு இடையே திறமையுள்ள சிலரால் மட்டுமே இப்படி தனித்தன்மையை அடையமுடியும். 

சில பாடகிகளின் பாடல்களை ரசிக்கமுடிவதை போல, அவர்கள் பாடுவதையும் ரசிக்கமுடியும். ஸ்வர்ணலதாவை பொறுத்தவரை அவர் பாடுவது ரசிக்க கூடியதாக இருக்காது. பாடும்போது ஒரு கையால் காதை அடைத்துக்கொண்டு முகபாவங்களில் மிகுந்த பிரயாசை காட்டுவார். ஏன் இவ்வளவு சிரமப்படுத்திக் கொள்கிறார் என்று தோன்றும். 

ஷாஜி, ஸ்வர்ணலதா மறைந்த செய்தி வெளியானதும் உடனே ஜானகிக்கு பிறகு குரலில் பாவங்களை சிறப்பாக வெளிப்படுத்திய பாடகி மறைந்து விட்டார் என்று எழுதியிருந்தார். விமர்சகர்களின் கருத்து வெகுஜன ரசனையுடன் ஒத்துபோவது இதுபோல் எப்போதாவது அரிதாகத்தான். 
மேலும்...

நயா பைஸா செலவில்லா வாழ்க்கை

Posted: | Posted by no-nononsense | Labels: , 0 comments
நான் கூட ஒரு பைசா செலவு செய்ததில்லை. அதுவும் பிறந்ததில் இருந்தே செலவு செய்ததில்லை. என்னா அதை நான் பார்த்ததும் இல்லை, அது புழக்கத்திலும்  இல்லை. 
ஹஹ்ஹஹ்ஹா.. :-)) 

இதுதான் 1 பைசா


இப்போதெல்லாம் 50 பைசாவே புழக்கத்தில் இருந்து கிட்டத்தட்ட மறைந்து விட்டது. 50 பைசாக்களில் முடிந்த பஸ் கட்டணங்களையும் கூட அண்மையில் 1 ரூபாய்க்கு round off செய்து விட்டார்கள். சில மிட்டாய்களும் முன்பு 10 பைசாவுக்கு விற்கப்பட்ட சுபாரி பாக்குகளும் மட்டுமே இன்னும் 50 பைசாவுக்கு கிடைக்கின்றன. அதற்கு கீழான பைசாக்களைப்பற்றி கேட்கவே வேண்டாம். அப்படி ஒரு விலையே இல்லை.

Jokes apart, whether living this kinda life is possible or not? தனக்கு தேவையான காய்கறிகளை விளைவித்துக்கொள்ள தனக்கென்று ஒரு நிலம் வேண்டாமா? அதுகூட இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்? அடுத்தவர் நிலத்தில் விளைவித்துக் கொள்ளலாம் என்றால் வாடகை கொடுக்க வேண்டியிருக்குமே. அதனால் பைசா செலவில்லாமல் வாழ்க்கை என்பது இயலாத காரியம். சும்மா ஒரு பிரச்சாரத்துக்காக கவனத்தை கவர செய்யலாம். 

ஆனால் மிகக் குறைவான தேவைகளை வைத்துக் கொண்டால், மிகக் குறைவான செலவில் வாழ்வது சாத்தியம்தான். அதுவும்கூட அந்த வாழ்வு ஆரோக்கியமான வாழ்வாக இருந்தால் மட்டுமே சாத்தியம். விஷத்தை உண்டு, விஷத்தை சுவாசித்து வாழும் சுற்றுச்சூழல் சீர்கேடான இந்த தலைமுறையில் நோய் நொடி என்பது எல்லா நிலை மனிதர்களிடமும் வெகு சாதாரணம். அதனால் உணவு மற்றும் ஆடம்பர தேவைகளை குறைத்துக் கொண்டாலும் கூட, மருத்துவ செலவு ஆளை கொன்று விடும். அதற்காகவாவது பணம் சேர்க்கத்தான் வேண்டும்.

இதுவும்கூட தனிப்பட்ட ஒரு மனிதனுக்கு மட்டுமே சரிவரும். குடும்பஸ்தர்களுக்கு குழந்தை வளர்ப்பு, கல்வி, அவர்களின் திருமணம் என்று அவனை சார்ந்திருக்கும் பல செலவுகள் உள்ளன. அவற்றிற்கும் சேர்த்து பொருள் ஈட்ட வேண்டியுள்ளது. 

ஆக இதையெல்லாம் காதால் கேட்டு கருத்தில் கொண்டு விவாதிக்க மட்டுமே சரிவரும். வாழ்க்கையில் பொருத்திக்கொள்ள முடியாது. இருந்தாலும் ஒரு விழிப்புணர்வு என்னும் அளவில் இவரின் உதாரண வாழ்வு பாராட்டத்தக்கது.

*

செலவு செய்யாத இம்மனிதரை போல பல வருடங்களாக தூங்கவே தூங்காத சிலரும் இருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் பாடல் எழுதிவரும் கவிஞர் முத்துலிங்கம் தான் தூங்குவதே இல்லை என்கிறார். தூக்கம் வருவதேயில்லை என்று தெம்பாக பேட்டியளிக்கிறார். அதேபோல் யோக கலையில் தேர்ச்சியான ஒரு சீனரைப் பற்றியும் சமீபத்தில் படித்தேன். அவரும் தூங்குவதே இல்லையாம். தன்னுடைய களைப்பை தியானத்தின் மூலம் போக்கிக் கொள்வதாக சொல்கிறார். மிக திடகாத்திரமான உடலைக் கொண்ட அவரின் வயது 70 என்பது கவனிக்கத்தகது. 

(இந்த இடத்தில் உள்ளத்தின் நான்கு உணர்வு நிலைகள் பற்றி நினைவுக்கு வருகிறது. ஜாக்ரத், ஸ்வப்னா, ஸஸுப்தி, துரியத், துரியாதீதம். அவற்றை பற்றி பின்னர் ஒருநாள் விரிவாக)

சிலர் சாப்பிடுவதேயில்லை. அல்லது மாற்று உணவு பழக்கங்களை கொண்டிருக்கிறார்கள். அதாவது தண்ணீர் மட்டுமே அருந்தி வாழ்வது போன்று. 

இன்னும், சுகவீனமே அடையாதவர்கள், உடலில் மின்னோட்டம் கொண்டவர்கள், நீரில் மிதப்பவர்கள் என்று விந்தையான மனிதர்களையும் அவர்களின் வாழ்க்கைமுறைகளையும் பற்றி கேள்விப்படும்போது மனித படைப்பில் மறைந்துள்ள ரகசியங்கள் அதிசயிக்க வைக்கின்றன. 
மேலும்...

இந்தியாவின் தாராளமயமாக்கம்

Posted: Thursday, August 19, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
தாராளமயமாக்கத்தை தள்ளிப் போட்டிருக்க முடியுமே தவிர தவிர்க்க இயலாத ஒன்று என்பதே நிதர்சனம். காரணம் இந்தியாவை பொறுத்தவரை அதன் சந்தை பொருளாதாரத்தை நிர்ணயிப்பது எண்ணை பொருளாதாரம்.

அப்படியாக தவிர்க்க இயலாமல் நாம் திறந்த விட்ட சந்தை பொருளாதாரம் எந்த மாதிரியான விளைவுகளை இந்தியாவில் ஏற்படுத்தியுள்ளது; மற்றும் எந்த மாதியான விளைவுகளை ஏற்படுத்த உள்ளது? 

ஆழமாக சென்று அலச வேண்டிய தலைப்பிது. யாருகாவது ஆர்வமும் நேரமும் இருந்தால் பேசலாம். முன்பாக என் சில கருத்துகள் இங்கே சுருக்கமாக.

1. சந்தை பொருளாதாரத்தின் நன்மை தீமைகள் அந்தந்த நாடுகளை பொறுத்தே அமையும். இந்தியாவை பொறுத்தவரை அதன் மக்கள் தொகை காரணமாக சந்தை பொருளாதாரம் ஏற்படுத்தி வரும் விளைவை rich get richer and poor get poorer என்னும் பழைய catch phrase எளிதில் விளக்கும். பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்ய முன்பு இருந்த வாய்ப்புகளை முற்றிலுமாக களைத்து போட்டு இந்த தாராளமயம் நம்மை முதலாளித்துவ சித்தாந்தங்களுக்குள் சிக்கவைத்து விட்டது. இதிலிருந்து வெளிவருவது என்பது தற்கால அரசியல் சூழ்நிலைகளை கணக்கில் கொண்டு பார்க்கும்போது இனி முடியாது. அதனால் இதற்குள் இருந்துகொண்டு என்ன மாதிரியான நன்மைகளை உண்டாக்கிக்கொள்ள முடியும் என்பதை ஆராய வேண்டிய காலகட்டம் இது.

2. சமூக பொறுப்புணர்வுக்கும் சந்தை பொருளாதாரத்திற்குமான தொடர்பு நிலை உறுதிபடுத்தப்பட வேண்டும். பொதுவாக தனியார் மயத்தின் தாத்பர்யம் என்பது Privatizing the Profit, Socializing the Loss என்பதாக இருப்பதை மாற்றியமைக்கும் வழிமுறைகள் ஆராயப்பட வேண்டும். இதற்கு நாம் சீனாவை உதாரணமாக எடுத்துக்கொள்ள முடியும். அங்கேயும் தற்சமயம் ஓரளவு தாரளமயமாக்கல் நடந்துகொண்டுள்ளது; ஆனால் எல்லாம் மிக கடுமையான விதிமுறைகளுக்கு உட்பட்டே. லாபத்தை மட்டும் நிறுவனங்கள் எடுத்துக்கொண்டு, பின்னர் ஏதாவது பிரச்னை என்றால் நட்டத்தை பொதுமக்களிடம் விட்டு விட்டு அங்கே எந்த தனியார் நிறுவனமும் ஓடிவிட முடியாது. அரசுக்கு இருக்கும் அந்த பிடிமானம் இங்கே இல்லை என்பது நீண்டகால நோக்கில் சாமானியர்களை பாதிப்பதாக இருக்கும்.

3. நிதி ஆதாரங்களில் ஜாம்பவானாக இருக்கும் அயல்நாட்டு நிறுவனத்திற்கு ஏற்படுத்திக் கொடுக்கப்படும் அத்தனை வியாபார வசதி வாய்ப்புகளும், சலுகைகளுடன் உள்ளூர் நிறுவனங்களுக்கும் ஏற்படுத்தித் தர வேண்டும். அப்போதுதான் சிறிய அளவிலான தொழில்முயற்சிகளில் மண்ணின் மைந்தர்கள் இறங்கமுடியும். அரபு நாடுகளை இதற்கு ஒரு முன்மாதியாக கொள்ள முடியும். (அதிலும் ஓட்டைகள் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை). 

4. முக்கியமாக, அந்நிய முதலீடு காரணமாக நடுத்தர நிறுவனங்கள் அழிந்து ஏற்படும் monopoly நிலை முற்றிலுமாக தவிர்க்கப்பட வேண்டும். இன்று அதுதான் திறந்து விடப்பட்ட எல்லா துறைகளிலும் நடந்து கொண்டிருக்கிறது. 
மேலும்...

சுட்டுவிரலை சுட்டும் முன்

Posted: Wednesday, August 18, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
நண்பர்களை பகடி செய்து எழுதியது. இந்து மதத்தை மட்டும் நான் அதிகம் விமர்சிக்கிறேன் என்பது அவர்களின் குறை :-) :

காட்சி: அண்ணன், தம்பிகளாகிய பஜேஷ், குஜேஷ் இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

பஜேஷ்: தம்பி நம்ம வீடெல்லாம் ஒரே தூசும் தும்பும் அழுக்குமா கெடக்கு. இதையெல்லாம் கொஞ்சம் ஒட்டடையடிச்சி வெச்சிக்கினா பளிச்னு ஆயிடும். சுகாதாரத்துக்கு சுகாதாரம்.. அழகுக்கு அழகு!

குஜேஷ்: டாய்.. என்ன வார்த்த சொல்லிகின நம்ம வூட்டப் பத்தி. எதிர் வூட்டுக்காரன் வூட்டுல ஏழு நாளா தண்ணி வராம யாரும் சரியா ஆய் கழுவுல.. அத்த கேட்டுகினியா நீ? பக்கத்து வூட்டுக்கார பன்னாட பாதிநாளு பல்லே வெளக்கறதில்ல.. அத்தயாவது கேட்டுகினியா நீ? நம்ம வூட்டப் பத்தி பேச வந்துட்டான். டாய்..

பஜேஷ்: அதெல்லாம் அவன் பிரச்சன பா.. நான் நம்ம வூட்டப் பத்தி பேசினுக்கீறேன். முதல்ல நம்ம வூட்ட நாம சுத்தமா வெச்சிப்போம். அப்பால அடுத்தவன பத்தி பேசலாம்.

குஜேஷ்: டாய்.. நம்ம வூட்ட்டு அழுக்கப் பத்தி மட்டும் பேசிகின, அண்ணன்னு பாக்க மாட்டேன்.. கீச்சுடுவேன்.. வகுந்துடுவேன்..டாய்.. 

பஜேஷ்: தம்பி கொஞ்சம் பொறுமை பா.. நம்ம நல்லதுக்கு தானே சொல்றேன். இப்படி குப்பையா இருக்கறதால எத்தனை நோய் நொடி அண்டுது தெரியுமா? உனக்கு வீஸீங், எனக்கு பேதி, கடேசி தம்பிக்கு காய்ச்சல்- ன்னு அடிக்கடி வருதே, அதெல்லாம் ஏன்னு கொஞ்சம் யோசிச்சி பார்த்திருக்கியா?

குஜேஷ்: யார பாத்து என்ன வார்த்த சொல்லிகின.. சுத்தமாம்ல சுத்தம். அது சோறு போட்டிருக்காடா..  சொல்ல வந்துட்டாரு டீடெயில்லு. கை கழுவாம சாப்பிட்டா கபால மோட்சம்ங்கற அந்தகார அழுக்குணி சித்தர் பாட்டு தெரியுமா உனக்கு? 

டாய்.. அவன முதல்ல ஆய் கழுவச் சொல்லு.. நான் கை கழுவறேன். அவன பல்லு வெளக்கச் சொல்லு. அப்ப நான் பாத்ரூம் கழுவறேன். 

பஜேஷ்: தம்பி, நம்ம பொழப்பே நாறி கெடக்கும்போது, அடுத்தவன் பழம நமக்கு எதுக்கு. கொஞ்சம் அறிவுப்பூர்வமா சிந்திச்சி தான் பாரேன். எல்லாம் நம்ம நல்லதுக்குதான்.

குஜேஷ்: என்னது அறிவுப்பூர்வமா சிந்திக்கறதா.. என்னை சிந்திக்கச் சொன்னவன என் தாய் தடுத்தாலும் விடேன்.. டாய்.. டாய்.. முதல்ல அவனை ஆய் கழுவச் சொல்லு... அப்புறம் இவன பல்லு வெளக்கச் சொல்லு..  (என்றுகுஜேஷ் டெர்ரிஃபிக் டெஸிபலில் கத்தியபடி டெர்ரராகி கடிக்க வருகிறார்)

சரி. இவனுக்கு விளங்க வைக்கறதும் விஜய் ரசிகனுக்கு புத்தி சொல்றதும் ரெண்டும் ஒண்ணுதான் என்று பஜேஷ் பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடி விடுகிறார். 

---

நான் எழுதியுள்ளதை கொஞ்சம் கவனமாக படித்தால் புரியும் நான் எந்த மதத்தை விமர்சித்திருக்கிறேன் என்று. என் வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்வது பற்றித்தான் எனக்கு முழுமுதல் அக்கறை. என் வீட்டு அசுத்தம் பற்றி என் குடும்பத்தில் ஒருவரே சுட்டிக்காட்டி விமர்சிக்கும்போது அதை கவனத்தில் எடுத்துக்கொண்டு திருத்திக்கொள்ள முயற்சிப்பதோ, அல்லது அவர் சுட்டிக்காட்டும் விஷயம் குறித்தான மாற்று கருத்தை சரியான விதத்தில் முன்வைப்பதோ தான் சரியான விவாத திசையாக இருக்கமுடியும். மாறாக - அவன் வீட்டை பார்த்தியா கலீஜு; இவன் வீட்டை பார்த்தியா அழுக்கு; இதில் என் அழுக்கு மட்டும் எந்த விதத்தில் இழுக்கு? - என்று சால்ஜாப்பாக மறுமொழிவது எவ்வகையிலும் ஏற்புடையதன்று.
//நம்ம ஊர்ல  வேற மதம் பத்தி பேசின//

நீ வேறு மதம் என்பது அநேகமாக இஸ்லாம் பற்றி என்று நினைக்கிறேன். இஸ்லாம் மீது விமர்சனம வைக்க இங்கே இதுவரை சூழல் அமையவில்லை. அமையும்போது பேசலாம். 

---

//ஹா! ஹா! நல்ல கற்பனை//

கற்பனையை விட கருத்துமுதல்வாதமே(idealism) இது எழுதப்பட்டதன் மையநோக்கம். பொதுவாக விமர்சன விரல் நம்மை நோக்கி நீளும்போது அது சுட்டும் பிரச்னையை விட்டு விட்டு, அந்த விரலின் நீள அகலங்களை பற்றிய விமர்சன ஆராய்ச்சிகளில் இறங்கி விடுவதையே நாம் வழக்கமாக கொண்டிருக்கிறோம். இதற்கு காரணம் எல்லாவற்றிலும் சிறந்தது என் இனமே, என் மதமே, என் மொழியே, என் கலாச்சாரமே என்னும் ஓர் ஒற்றை பரிமாண சிந்தனைப் போக்கு. அதில் உண்மை இல்லை என்பதே உண்மை. எல்லா வாழ்வியல் முறைகளிலும் நிறை குறைகள் உண்டு. அந்த விதிக்கு நாம் மட்டும் விதிவிலக்காக இருக்கமுடியாது. 

மனதை திறந்து வைத்திருக்க வேண்டும். எல்லா கருத்துகளையும் உள்வாங்கி பரிசீலிக்கும் முனைப்பு வேண்டும். மற்ற சக இன,மத,கலாச்சார விழுமியங்களை பற்றிய அறிதல்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அவரவருக்கு என்று ஓர் தெளிதலோ, அல்லது தெளிதலை நோக்கிய ஒரு குறைந்தபட்ச முயற்சியோ கூட சாத்தியம். 

மனித குலத்தின் பரிணாம வளர்ச்சியின் சிகரத்தில் இப்போது அமர்ந்து கொண்டிருக்கிறோம் என்று ஓரளவு சொல்லமுடியும். இந்த சிகரத்தை அடைய நாம் உரித்து போட்ட சட்டைகளை எண்ணி விட இயலுமா? ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு நம்பிக்கை; அஃதாகவே ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு சிந்தனை போக்கு தோன்றி அதுவரை மையமாக இழையோடிய  நம்பிக்கையை கேள்வுக்குள்ளாக்கி களைந்திருக்கிறது. அப்படி ஒரு களைதல் நிகழாமல் போனவர்களே இன்னும் பழங்குடிகளாக தொடர்கிறார்கள். நாம் முன்னிலும் மேம்பட வேண்டுமா அல்லது பழங்குடியின் பண்பாட்டு கூறுகளோடு தேங்கி விட வேண்டுமா என்பதை விமர்சன விரல்களை வெட்ட முற்படுபவர்களிடமே விட்டு விடுகிறேன். 

---


எனக்கும் உலக மதங்கள் பற்றி ரொம்ப எல்லாம் தெரியாது. எல்லாம் நுனிப்புல் மேய்ச்சல்தான். அதேபோல் பன்னாட்டு நண்பர்களும் ரொம்ப எல்லாம் கிடையாது. ஆனால் இரு பாகிஸ்தானிகளிடம் சில ஆண்டுகளாக அரசியல், மதம் குறித்து அரட்டை அடித்து வருகிறேன் என்பது உண்மை. (என்னை விட அவர்களுக்குத்தான் அதில் ஆர்வம் அதிகம். இதைப்பற்றி ஒருநாள் விரிவாக எழுத வேண்டும். சில விஷயங்கள் உண்டு) நீங்கள் தைரியம், பயம் என்றெல்லாம் உசுப்பேத்தி விட்டதால் அதை குறிப்பிட வேண்டிய அவசியம் வந்தது. 

எனக்கு இந்து மதத்தின் மீது எந்த காழ்ப்பும் கிடையாது. சில நேரங்களில் விமர்சிப்பதுண்டு. அதையும் கூட என்னுடைய நெருங்கிய நண்பர்களிடம் மட்டுமே செய்வேன். இங்கேயும் கூட சுரேஷும், மாதுவும் பேசியதால்தான் நான் மறுமொழிந்தேன். நேரில் நாம் மோதிக்கொள்வதன் நீட்சி என்று வைத்துக் கொள்ளேன். மற்றபடி மதங்களை பற்றிய விவாதங்கள் என்பது போகாத ஊருக்கு தேடப்படும் வழி என்பதை நான் நன்கு அறிவேன். அதனால்தான் பலமுறை மதங்களையும், ஜாதிகளையும் பற்றி இங்கே விவாதம் வேண்டாம் என்று சொல்லியிருக்கிறேன்.

நான் ஏன் இந்து மதத்தில் தொடர விரும்புகிறேன், இந்து மதம் எனக்கு ஏன் ஏற்புடையதாக இருக்கிறது என்பது குறித்து விரிவாக நித்தியானந்தர் இழையில் ஏற்கெனவே எழுதியிருக்கிறேன். படித்து பார்த்தால் என் நிலைப்பாடு புரியும். 

ஏன் இந்து மதம் விமர்சனத்திற்கு உரியது என்றால், அது அதனை அனுமதிக்கிறது. அதுதான் இந்து மதத்தின் அழகு(ரிஷி சொன்னானே அந்த beautiful imperfection! அது தன்னை காலத்திற்கேற்ப விமர்சனங்களின் வழியாக மேம்படுத்திக் கொண்டு வருகிறது. இதனை ராமாயணத்திலேயே காணலாம். ஜபாலி என்னும் முனிவர் நாத்திகவாதம் செய்வார். யாரிடம் - ராமனிடமே. இந்த மதச் சுதந்திரம் வேறு மதங்களில் இல்லை. 

இப்படி விமர்சனங்களை அனுமதிக்கும் மதம் என்பதால்தான் இன்று கொஞ்சம் மூர்க்கமான மத வழிபாட்டு முறைகளை கொண்ட தாந்த்ரீகம், கபாலிகம்(மயிலை கபாலீஸ்வரர்..!) போன்றவை காலாவதி ஆகிவிட்டன. இந்து மதம் தன்னை திருத்திக் கொண்டுள்ளபடியால்தான் இன்று “உடன்கட்டை” இல்லை. கணவனை இழந்த யாரும் வெள்ளையுடுத்துவதில்லை. பூவும் பொட்டும் கூட வைத்துக் கொள்கிறார்கள்.

இந்து மதம் இன்று சைவம், வைணவம், ஸ்மார்த்தம் மற்றும் மற்ற ஞானமரபுகளை எல்லாம் ஒருங்கே தன்னுள் ஏற்றுக்கொண்டு ஒருமுகமாக உலகுக்கு தன்னைக் காட்டிக்கொண்டு இருப்பது எல்லாம் அது விமர்சனங்களை எதிர்கொண்டதால்தான். முற்காலத்தில் அப்படி இல்லை. சைவர், வைணவரையும், சமணர்களையும் கழுவிலேற்றி கொன்று விடுவார்கள். 

இப்படி முற்றிலும் முற்போக்கான ஒரு மதம் உலகிலேயே இல்லை என்று சொல்லலாம். இதெல்லாம் பல காலங்களாக மாற்றங்களை தன்னுள் அது அனுமதித்ததால் மட்டுமே. அந்த மாற்றங்களுக்கான குரல் என்பது என் போன்றவர்களினுடையதே. அதை முற்றிலும் புறம்தள்ளி விட்டு துவேசமாக அடையாளப்படுத்தி விட முடியாது.

இது உங்களுக்கு தேவையான முதல் புரிதல்.

இரண்டாவது, நீ பாரா சொன்னதை மட்டும் எதிர்கொண்டிருந்தால், “எங்க பழக்கவழக்கம் அப்படித்தான் இவருக்கென்ன” என்று எதிர்ப்பு தெரிவித்திருந்தால் பிரச்னை இல்லை. மற்ற மதங்களை அநாவசியமாக இழுக்கிறாய். அவற்றிலும் மூடநம்பிக்கை இல்லையா என்கிறாய். இது ஒருவகையில் சுயவாக்குமூலம் என்றாலும், இஸ்லாம் பற்றிய உன் அடிமன வெறுப்பையே காட்டுகிறது. அதுதான் கேட்கிறேன், அம்மதத்தின் எதை நீ மூடநம்பிக்கை என்கிறாய் என்று. 

உண்மையிலேயே உனக்கு தெரியாது. இங்கே இருப்பதால் அங்கேயும் இருக்கவேண்டும் என்பது உன் எண்ணம். அதுதான் தவறு என்கிறேன். உனக்கு எது தெரியுமோ அதைத்தான் நீ பேச வேண்டும். நீ பேசவில்லை. அதனால் நீ பாராவை கோழை என்பது விமர்சனத்தை எதிர்கொள்ள இயலாமல் வெட்டி மையக்கருத்தை திசை திருப்பும் வேலை என்கிறேன். 

இன்னும் ஒன்று. எங்கேயாவது சுவற்றில் எழுதி வைக்கப்பட்டிருக்கும் நான்கு கீதை வாசகங்களை மட்டும் படித்து விட்டு ‘பாரா’யணம் செய்யாதீர்கள். இந்து மதத்தில் இருந்து வந்தால், அதனை நேசித்தால், தடுத்தாட் கொண்டால் மட்டும் போதாது. கொஞ்சமாவது அதனை தெரிந்து கொள்ளுங்கள். அதனை படியுங்கள்.நிச்சயம் வேண்டாத வாதங்களை வைக்க மாட்டீர்கள். 

பேச நிறைய உண்டு. ஆனால் அதற்கான தயாரிப்புகளையும் அடிப்படை தெளிவுகளையும் நாம் தான் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். விமர்சனம் என்பது புடம் போட்டுக்கொள்ள சமயம் அளிக்கும் வாய்ப்பு. அது இஸ்லாமில் கிடையாது. ஆனால் இந்து மதம் அனுமதிக்கிறது. அங்கேயே அது ஜெயித்து விடுகிறது. இந்த கோட்பாட்டை நீ சுட்டிக்காட்டி இருந்தாயேயானால் நீ சமர்த்தன் :-) அப்படிச் செய்யவில்லையே.

மதங்களை பற்றிய விவாதங்கள் ஆரோக்கியமான களத்தில் அமையாமல் விட்டு வெளியே இழுத்துச் செல்லப்பட்டு வேறு மதங்களையும் சந்திக்கு இழுத்து ஒரு குழாயடி சண்டை போல எல்லாம் மாறி விடுவதை கண்டதால்தான் அது வேண்டாம் என்று ஒதுங்கி விடச் சொல்கிறேன். அப்படியில்லாமல் ஆரோக்கியமாக விவாதிக்க முடியும் என்றால் பேச எவ்வளவோ உண்டு. எதையும் நாம் எப்படி அணுகுகிறோம் என்பதை பொறுத்துதான் எல்லா எதிர்விளைவுகளும். 
மேலும்...

அரசு பேருந்துகளும் தனியார் பேருந்துகளும்

Posted: Tuesday, August 17, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
அரசு பஸ்களில் சிற்சில குறைகள் இருக்கலாம். ஆனால் பலரும் நினைப்பது போல் ரொம்ப மோசம் எல்லாம் இல்லை. என்றாவது ஒருநாள் மட்டும் பயணம் செய்பவர்களுக்கு அப்படித்தான் தெரியும். என்னுடைய கடந்த நான்கு வருட பஸ் அனுபவங்களின் மூலம் நீண்ட தூர (1 மணி நேரத்திற்கும் கூடுதலான) பயணங்களுக்கு என்னுடைய தெரிவு அரசு பஸ்களே. 

தனியார் பஸ்களை பொறுத்தவரை,

அதிக டிக்கெட் ஏற்ற வேண்டும் என்று இரண்டு சீட்களுக்கும் இடையே போதிய இடைவெளி இன்றி நெருக்கடித்து சீட் போட்டிருப்பார்கள். என்னை போன்ற சற்றே ஸ்தூலமான உடம்பு கொண்டவர்களுக்கும் கால் நீளம் கொண்டவர்களுக்கும் மடக்கி உட்கார்ந்தால் முட்டி பெயர்ந்து விடும். 

எங்கே வேண்டுமானலும் நிறுத்தி டிக்கெட் ஏற்றுவார்கள். 

பெரும்பாலும் தாறுமாறான வேகத்தில் பறப்பார்கள். பயத்தில் அட்ரீனல் சுரந்து சமயத்தில் அடியோடு வற்றியும்கூட விடும்.

எனக்கு ஒரு தனிப்பட்ட பிரச்னை, பாடாவதி குத்துப் பாட்டுக்களை காது சவ்வு கிழியும் ஒரு சத்தத்தில் அலற விடுவார்கள். 

இந்த பிரச்னைகள் பெரும்பாலும் அரசு பஸ்களில் கிடையாது. சீட்களுக்கு இடையில் தாரளமாக இடைவெளி இருக்கும். அதனால் கால் இடிக்காது. சில பஸ்களில் குஷனை ஒத்த ஸ்பான்ஞ் சீட்கள் கூட போட்டிருக்கிறார்கள். டீசலை மிச்சப்படுத்த 60 என்பதை உயர்வேக அளவாக கொண்டிருக்கிறார்கள். அதனால் பயமில்லை. நிறுத்தமுள்ள இடங்களில் மட்டுமே நிற்கும். சிலமுறை பிரேக் டவுன் ஆன கதைகளும் உண்டு. ஆனால் பின்னாலே வரும் மற்ற அரசு பஸ்களில் உடனே டிக்கெட் மாற்றி விட்டு விடுவார்கள். 
மேலும்...

சிற்சில குறிப்புகள் (4)

Posted: Sunday, August 15, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
பேராசிரியர் ஞானசம்பந்தனை நடுவராக கொண்ட வழக்காடு மன்றம் ஒன்று பொதிகையில் நடந்து கொண்டிருக்கிறது. மனிதர் நகைச்சுவையை நாக்கில் தடவி, இல்லையில்லை, நாக்காகவே கொண்டிருக்கிறார். அதேசமயம் பேசுபொருளில் இருந்து விலகுவதும் இல்லை. அருமையான உரை!

*

மெகா டிவியில் எம்.எஸ்.வி.யின் இன்னிசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. தமிழின் மாபெரும் 'unsung hero' என்று இவரையேச் சொல்வேன். அந்த அதிருப்தியை கூட வெளிப்படுத்திக்கொள்ளத் தெரியாத அப்பாவி இவர். கண்ணதாசன் பெயரை உச்சரிக்காமல் ஒரு பாராவைக்கூட கடக்கமுடிவதில்லை எம்.எஸ்.வி.க்கு. எப்படி முடியும்?!

இந்த அத்யந்தம் பின்னால் வந்த இளையராஜாவுக்கும் வைரமுத்துவுக்கும் வாய்க்காமல் போனதில் நஷ்டம் அவர்களுக்கு என்பதை விட இசைக்குதான் என்பதே உண்மை. விலைமதிக்க முடியாத இழப்பு.

*

இந்த வார குமுதம் போல இவ்வளவு சொதப்பலான குமுதம் எடிசனை நான் வாசித்ததாக நினைவில்லை. பத்து நிமிட புரட்டலில் தூக்கி எறிந்து விட்டேன்.
குமுதத்தில் பங்காளி தகராறு ஏற்பட்ட பிறகு திறமையான பலர்
விலகி விட்டதாக கேள்விப்பட்டேன். அதை இதழில் உணரமுடிகிறது.

நான் பல ஆண்டுகளாக வாரா வாரம் குமுதம், ஆ.வி, துக்ளக் வாங்கி வருகிறேன். இடையில் ஒருமுறை துக்ளக் தவிர மற்ற இரண்டையும் நிறுத்தி விட்டேன். பிறகே உணர்ந்தேன் என் குடும்பத்தாரும் நண்பர்களும் அதை எவ்வளவு மிஸ் பண்ணுகிறார்கள் என்று. அவர்களுக்காக வாங்கி வருகிறேன். மாகசின்களை பொருத்தவரை நம் எதிர்பார்ப்பு வேறாக இருக்கிறது. அவர்களுக்கு வேறாக உள்ளது. ஆ.வியையும் குமுதத்தையும் தமிழ்நாட்டு குடும்பங்களில் இருந்து பிரிப்பது கடினம்.
மேலும்...

நாடி ஜோதிடம்

Posted: Saturday, August 14, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
ஜோசியத்திலேயே நாடி ஜோதிடம் தான் அதிகம் மக்களை நம்பச் செய்யக் கூடியது. அதற்கு காரணமும் வெளிப்படை - ஊர், உறவு, தொழில் எல்லாம் சரியா சொல்லிடுவாங்க. அதைக் கேட்டதும் மக்கள் அசந்து போயிடுவாங்க.

இங்கே நீ கவனிக்க வேண்டிய ஒன்று - உங்க பெயர் குமார், உங்களுக்கு இத்தனை அண்ணன், தம்பி, உங்க ஊர் நெட்டவேலம்பட்டி - அப்படின்னு பலரும் நினைக்கற மாதிரி துல்லியமா எல்லாம் சொல்லிட மாட்டாங்க. ஆனாலும் சரியாத்தான் சொல்வாங்க. எப்படிங்கறதுதான் இதில் உள்ள ட்ரிக். நிச்சயமா ட்ரிக் தான். அதில் சந்தேகமேயில்லை. எப்படிங்கறத கொஞ்சம் விரிவா எழுதணும். சுருக்கமாச் சொன்னா, ஓலையை ஒவ்வொன்றாக கழித்து கட்டுதலில் நம்மிடமிருந்தே விவரங்கள் பெறப்படும். அதை நாம் உணராவண்ணம் சூழலும், நாவன்மையும் இருக்கும். எல்லாவற்றிலும் ஒரு மேஜிக் வல்லுநனின் சாமார்த்தியம் இருக்கும். முடிவில் நாம் அவர்கள் விரும்பும் தகவலை அளித்து அவர்கள் இழுத்துச் செல்லும் மையப்புள்ளியை அடைந்து விடுவோம். 
மேலும்...

தமிழின் நகைச்சுவை படங்கள்

Posted: | Posted by no-nononsense | Labels: 0 comments
தொலைக்காட்சியில் ஓடிக் கொண்டிருக்கும் காதலிக்க நேரமில்லை படத்தை பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதில் ஓஹோ புரடக்சன்ஸ் செல்லப்பாவை நுணுக்கமாக அவதானித்துக் கொண்டிருக்கிறேன். நாகேஷ் நடிப்பில் உச்சமாக நான் கருதும் மூன்று வேடங்களில் இதுவும் ஒன்று. மற்ற இரண்டு: அன்பே வா, தில்லான மோகனாம்பாள்.

காதலிக்க நேரமில்லை, பாமா விஜயம் - இரண்டு சிறந்த இயக்குநர்களின் இரண்டு சிறந்த காமெடி படங்கள்; அமரத்துவமான படைப்புகள். அதற்கு பிறகு அவர்களாலேயே அப்படி ஒரு படத்தை இயக்கமுடியவில்லை. ஸ்ரீதரின் பிற்கால ஊட்டி வரை உறவும், கலாட்டா கல்யாணமும் சுமார் ரகம் தான்.

தமிழ் சினிமாவின் 90-க்கு முந்தைய காமெடி பட முயற்சிகள் பற்றி மனம் தொடர்ந்து அலசிக் கொண்டிருக்கிறது. சபாபதி, பலேபாண்டியா, இன்று போய் நாளை வா, காசேதான் கடவுளடா, பாமா விஜயம், காதலிக்க நேரமில்லை, தில்லு முல்லு, மணல் கயிறு, கதாநாயகன் ஆகியவற்றை ஒரு கணநேர யோசனையில் பட்டியலிட முடிகிறது. அனைத்தும் பார்க்க சலிக்காத படங்கள்.

காதலிக்க நேரமில்லையின் இன்னொரு பெரும்பலம் பாலைய்யா! நாகேஷ் சொல்லும் திகில் கதைக்கு பாலைய்யா காட்டும் முகபாவனைகள் கிளாஸிக்! திருவிளையாடலின் ஹேமநாத பாகவதரையும், தில்லான மோகனாம்பாளின் தவில் வித்வானையும் நடிப்பில் எட்டி விட இன்று வரை ஒரு கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் வரவில்லை. பிரகாஷ்ராஜ் ஓரளவு நெருங்குகிறார்.

பாலைய்யாவை குறிப்பிடும்போது சட்டென்று நினைவுக்கு வரும் இன்னொரு கேரக்டர் ஆர்ட்டிஸ்ட், எஸ்.வி.ரங்காராவ்! ரங்காராவ் தன் ஐம்பது வயதுகளிலேயே இறந்து விட்டவர். ஆனால் ஒரு மூன்று தசாம்சங்களாக முதிய பாத்திரங்களையே செய்து வந்தவர். சர்வர் சுந்தரமில் அவர் செய்த டைரக்டர் ரோல் அவருடைய பன்முக நடிப்புத் திறமையை பறைசாற்றிய ஒன்று.

டிவியில் காதலிக்க நேரமில்லை தொடர்ந்து கொண்டிருக்கிறது. நிறைய பழைய படங்களை பற்றிய நினைவலைகள் மனதில் அலை மோதுகின்றன. ஆனால் தனியே அவற்றை பற்றி பேசிக் கொண்டிருக்க போரடிக்கிறது. வீட்டிலும் சரி, என் நட்பு வட்டத்திலும் சரி, இந்த விஷயத்தில் என்னை தனியனாக உணர்கிறேன்.
மேலும்...

காதலிக்க நேரமில்லையும் நகைச்சுவைப் படங்களும்

Posted: | Posted by no-nononsense | Labels: 0 comments
ஓஹோ புரடக்சன்ஸ் செல்லப்பாவை நுணுக்கமாக அவதானித்துக் கொண்டிருக்கிறேன் (ஆதித்யா டிவி). நாகேஷ் நடிப்பில் உச்சமாக நான் கருதும் மூன்று வேடங்களில் இதுவும் ஒன்று. மற்ற இரண்டு: அன்பே வா, தில்லான மோகனாம்பாள்.

காதலிக்க நேரமில்லை, பாமா விஜயம் - இரண்டு சிறந்த இயக்குநர்களின் இரண்டு சிறந்த காமெடி படங்கள்; அமரத்துவமான படைப்புகள். அதற்கு பிறகு அவர்களாலேயே அப்படி ஒரு படத்தை இயக்கமுடியவில்லை. ஸ்ரீதரின் பிற்கால ஊட்டி வரை உறவும், கலாட்டா கல்யாணமும் சுமார் ரகம் தான்.

தமிழ் சினிமாவின் 90-க்கு முந்தைய காமெடி பட முயற்சிகள் பற்றி மனம் தொடர்ந்து அலசிக் கொண்டிருக்கிறது.

சபாபதி, பலேபாண்டியா, இன்று போய் நாளை வா, காசேதான் கடவுளடா, பாமா விஜயம், காதலிக்க நேரமில்லை, தில்லு முல்லு, மணல் கயிறு, கதாநாயகன் ஆகியவற்றை ஒரு கணநேர யோசனையில் பட்டியலிட முடிகிறது. அனைத்தும் பார்க்க சலிக்காத படங்கள்.

காதலிக்க நேரமில்லையின் இன்னொரு பெரும்பலம் பாலைய்யா! நாகேஷ் சொல்லும் திகில் கதைக்கு பாலைய்யா காட்டும் முகபாவனைகள் கிளாஸிக்! திருவிளையாடலின் ஹேமநாத பாகவதரையும், தில்லான மோகனாம்பாளின் தவில் வித்வானையும் நடிப்பில் எட்டி விட இன்று வரை ஒரு கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் வரவில்லை. பிரகாஷ்ராஜ் ஓரளவு நெருங்குகிறார்.

பாலைய்யாவை குறிப்பிடும்போது சட்டென்று நினைவுக்கு வரும் இன்னொரு கேரக்டர் ஆர்ட்டிஸ்ட், எஸ்.வி.ரங்காராவ்! ரங்காராவ் தன் ஐம்பது வயதுகளிலேயே இறந்து விட்டவர். ஆனால் ஒரு மூன்று தசாம்சங்களாக முதிய பாத்திரங்களையே செய்து வந்தவர். சர்வர் சுந்தரமில் அவர் செய்த டைரக்டர் ரோல் அவருடைய பன்முக நடிப்புத் திறமையை பறைசாற்றிய ஒன்று.

டிவியில் காதலிக்க நேரமில்லை தொடர்ந்து கொண்டிருக்கிறது. நிறைய பழைய படங்களை பற்றிய நினைவலைகள் மனதில் அலை மோதுகின்றன. ஆனால் தனியே அவற்றை பற்றி பேசிக் கொண்டிருக்க போரடிக்கிறது. வீட்டிலும் சரி, என் நட்பு வட்டத்திலும் சரி, இந்த விஷயத்தில் என்னை தனியனாக உணர்கிறேன்.
மேலும்...

சிற்சில குறிப்புகள் (3)

Posted: Friday, August 13, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
பாரதிதாசன் கவிதை:

எங்கெங்கு காணினும் சக்தியடா...தம்பி
ஏழு கடல் அவள் வண்ணமடா


கலைஞரின் உல்டா எந்திரன் வாழ்த்து கவிதை:

எங்கெங்கு காணினும் வெற்றியடா
ஏழு கடல் தாண்டியும் எந்திரன் முழங்குமடா

-----------

தற்சமயம் வீட்டில் குமுதம், ஆனந்த விகடன் இரண்டும் வாங்கி வருகிறேன். இரண்டுமே குடும்பத்தார் படிப்பதற்காக. இரண்டில் ஒன்றை நிறுத்தி விட்டு இனி கல்கி வாங்க இருக்கிறேன். ’ஞாநி’யின் ஓ பக்கங்களை படிப்பதற்காக. குமுதத்தில் கருத்துரிமை மறுக்கப்பட்ட ஞாநி இந்த வாரம் முதல் கல்கியில் எழுத இருக்கிறார். 

குமுதம் என்றதும் சாருவின் பின்வரும் கமெண்ட் தான் ஞாபகம் வருகிறது:

முரசொலி வீக்லியாக வர ஆரம்பித்து விட்டது. சினிமா செய்திகள்; கலர் படங்கள். ரகளை. பெயர்தான் குமுதம் என்று இருக்கிறது. முரசொலியே பெட்டர் இல்ல?

-----------

#இலங்கை மீனவர்களை கொல்வது யார்? செயற்கை கோள்கள் உதவியுடன் கண்டுபிடிக்க வேண்டும்!-கனிமொழி எம்.பி.-

இது என்னங்க கொடுமை? இந்தளவா மக்களை முட்டாளா நினைப்பாங்க...இவங்க? தந்தை வழியில் வீறு நடை போட்டு கிளம்பி விட்ட கவிதாயினியே நீங்கள் வாழ்க!

இலங்கை மீனவர்களை கொல்வது யார் என கண்டுபிடிக்க செயற்கை கோள் உதவியை நாடும் தங்கள் புத்தி கூர்மையை காணும் போது செம்மொழி மாநாட்டில் தங்கள் இலக்கிய திறனை ஆராய்ந்து இரண்டு ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்பிக்கப்பட்டது சரியே.

http://sathish777.blogspot.com/2010/08/blog-post_12.html

-----------
இந்தியாவுக்கு சுதந்திரம் ‘நள்ளிரவில்’ கிடைத்த கதை:

இந்திய சுதந்திர போராட்டத்தின் கிளைமாக்ஸ் காலமாகிய 1947 ஆகஸ்ட் மாத நிகழ்வுகளை படித்து கொண்டிருந்தேன்: இந்தியாவுக்கு ஆகஸ்ட் 15 அன்று சுதந்திரம் என்று அறிவித்து விட்டார்கள். விட்டார்களா நம் சாஸ்திர சாம்ராட்டுகள்.. “அந்த தேதியில் கிரஹ ஸ்தானம் சரியில்லை, நாங்கள் கணிக்கும் தேதியில்தான் சுதந்திர அறிவிப்பை வெளியிட வேண்டும்” என்று அறிக்கைகள் விட்டார்கள். ஒரு குழுவாக சென்று மௌண்ட்பேட்டனை சந்தித்தார்கள். உலகம் முழுவதும் அறிவித்த பிறகு இனி மாற்றமுடியாது என்று ஒருவழியாக உனக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம் என்று ஆகஸ்ட் 14-15 நள்ளிரவில் முறையாக அறிவித்து கொடியேற்றினார்கள். இதுதான் நள்ளிரவில் சுதந்திரம் கிடைத்த கதை.
மேலும்...

கமல் ஒரு காப்பி கேட் என்னும் விமர்சனம் குறித்து

Posted: | Posted by no-nononsense | Labels: 0 comments
நண்பர்களிடம் உரையாடியது என்பதால் நடை கொஞ்சம் நெகிழ்வாகத்தான் இருக்கும்:

http://www.youtube.com/watch?v=UPpao48pMG0&feature=related
http://www.youtube.com/watch?v=xC76hSbzpRo&feature=related


1) ஏண்டா, உங்களுக்கு ‘என்னது இந்திராகாந்தி இறந்து விட்டாரா’ங்கற மாதிரி ஒரு ....மேட்டர்தான் கெடைச்சுதா. அன்பே சிவம் மாதிரி முழுப் பட உல்டாவே இருக்கும்போது தம்மாதூண்டு மேட்டர வெச்சிகினு சதாய்ச்சிகினு இருக்கீங்க... எம் தலைவருக்கென்று ஒரு பாலிஸி உண்டு. தனியே அவருக்கென்று ஒரு குணம் உண்டு. அது:


சென்றிடுவீர் எட்டுத் திக்கும்
கலைச் செல்வம் யாவும்
கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!

இதைச் சொன்னவன் பாரதி. பாரதியின் சொல்லை வாழ்வில் கடைபிடித்து வாழ்பவரே எம் தலைவர் கமல். ஆமாம். காப்பிதான்.  உலக சினிமா கலைச்செல்வங்கள் யாவும் கொண்டுவந்து தமிழர்களுக்கு கொடுப்பதை ஒரு தவமாக செய்து வருபவரை பார்த்து இப்படி வசைமாரி பொழிகிறீர்களே..? இருந்தாலும், அண்ணா சொன்னது போல் உங்களை ‘வாழ்க வசவாளர்கள்’ என்று வாழ்த்தவே முற்படுகிறோம். காரணம் எங்களை பொறுத்தவரை பகைவனுக்கும் அருள்வோம். ‘அன்பே சிவம்’!

தமிழ்ல உருப்படியா ஒன்னு ரெண்டு படம் எடுக்கறவங்களையும் விட மாட்டீங்களே.

கமலிடம் எனக்கு ஒப்புதல் இல்லாத விஷயம்: காப்பியடிப்பார்.. வேறு வார்த்தைகளில் சொன்னால் இன்ஸ்பிரேசன் இருக்கும். ஆனால் அதை ஒத்துக்கொள்ள மாட்டார். முழுதும் தன் மூளை என்பதுபோல் பேட்டியளிப்பார். இப்படியாவது நாலு நல்ல முயற்சிகள் தமிழில் வருகிறதே என்னும் வகையில் கமலை பொறுத்தவரை எல்லாமே மன்னிக்கப்படலாம்.

--

2) கமலை எடுத்தேன் கவிழ்த்தேன் என்று விமர்சிப்பவர்களிடம் அவரை விட்டுக்கொடுத்து பேச மாட்டேன். அதே சமயம் கமல் மீது எனக்கு விமர்சனமே இல்லை என்றும் சொல்ல மாட்டேன். 

A wednesday-ன் ரீமேக் தான் தமிழில் உ.போ.ஒருவன் என்பதற்கு ஒரு ஆராய்ச்சியும் தேவையில்லை. ஆனால் நான் தொடர்ந்து படித்த, பார்த்த கமல் பேட்டிகள் அனைத்திலும் அக்கதையை தன் சொந்த சரக்காக தம்பட்டம் அடித்து பேசிக் கொண்டிருந்தார். குறிப்பான கேள்விகள் வந்தபோது கூட அது வேற; இது வேற என்றே சொன்னார். என்னதான் கமல் ரசிகன் என்றாலும், இதெல்லாம் ஆதரிக்க இயலாத குணம். 
மேலும்...

விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்

Posted: Wednesday, August 11, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான் 
விநாயகனே வேட்கைதணி விப்பான் - விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாந் தன்மையினா 
கண்ணிற் பணிமின் கனிந்து.

கபில நாய நாயனார் எழுதிய “மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை” பாசுர தொகுப்பில் இடம்பெற்ற வெண்பா இது. சினிமாவில் சீர்காழி கோவிந்தராஜன் குரலில் ஒலித்து எல்லோர் மனதிலும் இடம்பிடித்து விட்டது.

இப்பாடல் எங்கள் ஊர்ப்பகுதியில் ஒவ்வொருவரின் உணர்வலைகளையும் வருடிச் செல்லக்கூடிய ஒன்று என்று சொல்லலாம். காரணம், பால்யம் முதல் இப்பாடலைத்தான் அந்திப் பொழுதுக்கு ஒரு சமிக்ஞையாக கொண்டு வாழ்ந்திருக்கிறோம். வீட்டின் அருகேயுள்ள டூரிங் டாக்கீஸில் அனுதினமும் ஒலித்து, அந்த தியேட்டருடன் சேர்ந்து அடங்கிவிட்ட ஒரு பாடல் இது.

தினமும் ஷோ ஆரம்பிக்கவுள்ளதை அறிவிக்கும் முகமாக ஒலிபரப்பபடும் பாடல் வரிசையின் முதல் பாடலாக இப்பாடல் இருக்கும். உச்ச ஸ்தாயில் ஓங்கி ஒலிக்கத் துவங்கும் சீர்காழியின் குரல் ஒரு மனவெழுச்சியை அப்போதெல்லாம் கொடுத்திருக்கிறது. பாடலின் பொருளெல்லாம் அப்போதும் இப்போதும் பொருட்டல்ல. ஆனால் அந்த குரலும், இசையும்.. !

இதனை செவியுறும் போதெல்லாம் எனக்கு அரை டிராயருடன் அரக்க பரக்க டியூசனுக்கு ஓடியது(மாலை 6 மணி, ஃபர்ஸ்ட் ஷோ), வீட்டின் முத்தத்தில் கட்டிலில் படுத்துக்கொண்டு தூங்குவதாக அம்மாவிடம் பாவனை செய்து கொண்டிருந்தது(இரவு 10 மணி, செகண்ட் ஷோ) போன்ற நினைவுகளெல்லாம் வந்து தாலாட்டும்.

டூரிங் டாக்கீஸ் பற்றிய ஞாபக முடிச்சுகளை ஒருநாள் அவிழ்த்து ஆழ்ந்து போகவேண்டும். இன்றைய டிஜிட்டல் சினிமா அனுபவங்கள் சௌகரியமானவை என்றால் அவைகளுக்கு முற்றிலும் மாறுபட்ட அக்கால டாக்கீஸ் பட அனுபவங்கள் சிலாக்கியமானவை.
மேலும்...

எந்திரன் பகடி குறித்து சில விளக்கங்கள்

Posted: Tuesday, August 10, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
எந்திரன் பட விளம்பர தாக்குதல்கள் மீதான்  என்கடும் விமர்சனம் எழுப்பிய சர்ச்சையின் போழ்து:

1. நான் எந்திரனை விமர்சிக்கிறேன் என்று ஆரம்பம் முதலே நண்பர் புலம்பி வருகிறான். ஒரு திருத்தம்: அது விமர்சனம் அல்ல, பகடி! கேலி, கிண்டல் என்றும் வேறு வார்த்தைகளில் சொல்லலாம். படம் வராமலே எப்படி என்னால் மட்டும் விமர்சிக்க முடியும்?

2. என்னுடைய பகடிகளெல்லாம் சும்மா வெறுப்பேற்றும் நோக்கத்திலேயே செய்யப்பட்டன. ரஜினிப் படம் வெளியாகும் நேரங்களில் எல்லாம் ரஜினியின் அத்யந்த ரசிகர்களாகிய என் நண்பர்களை சீண்டி வெறுப்பேற்றுவது எனக்கு ஒரு விளையாட்டு. நம்மை நன்றாக புரிந்து கொண்டுள்ள நண்பர்களிடம் தானே நாம் விளையாட முடியும். 

3. ரஜினியின் படங்கள் எல்லோரையும் போல எனக்கும் பிடிக்கும். மாற்று சினிமாக்கள் அதிகம் வர வேண்டும் என்று பேசி வந்தாலும், அதற்காக மசாலா படங்கள் அழிய வேண்டும் என்று நினைக்கும் கட்சி அல்ல நான். இதுவும் இருக்கணும். அதுவும் வளரணும். வணிகப் படங்கள் என்னும் சிங்கம் தின்று போட்ட இரையின் எச்சங்களில் சிறு எறும்புகளாக கலைப் படங்கள் உயிர்த்திருந்தால் கூட போதும். அப்படிகூட நடக்காத சூழலின் போதுதான் நாம் மசலாக்களை விமர்சிக்க தேவை ஏற்படுகிறது.

மசாலா சினிமாக்களின் வர்த்தகத்தில் ரஜினி படங்கள் தன்னிகரவற்றவை என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதனால் பிழைப்பவர்கள் சினிமா தொழிலில் இருப்பவர்கள் மட்டுமல்ல என்பதற்கு கீழேயுள்ள ஒரு சம்பவத்தை உதாரணம் காட்ட விரும்புகிறேன்.

ரஜினி பெயர் வந்தால், அவர் பேசினால், பேசாவிட்டால் எல்லாமே நியூஸ்தான். அப்படிப்பட்டவர் ஏன் ரிஸ்க் எடுத்து சவாலான கேரக்டரில் எல்லாம் நடிப்பதில்லை?
சேலத்தில் ஒரு திரையரங்க முதலாளி தனது தியேட்டர் இருக்கும் வீதியில் காரில் நின்று கொண்டிருந்தபோது அந்த வீதியில் போண்டா , வடையைத் தள்ளுவண்டியில் வைத்து விற்றுக் கொண்டிருக்கும் ஒருவர் தனது மனைவியிடம் ‘அடுத்தவாரம் சாமான்லாம் அதிகமா வாங்கணும் புள்ள. தலைவர் படம் ரிலீஸ் ஆகுதுல்ல’ என்று சொல்லிக் கொண்டிருந்தாராம். அடுத்தவாரம் அவரது திரையரங்கில் ரஜினி படம். சேலம் விநியோகஸ்தராகவும் இருக்கும் அவர் சென்னையில் ரஜினியைச் சந்தித்தபோது இதைச் சொல்லி ‘உங்க படம் ரிலீஸ்னா வீதில வடை போண்டா விக்கிறவர் வரைக்கும் பிழைக்க முடியுது சார்’ என்றாராம். ‘இந்தக் காரணத்துனாலதான் ரிஸ்க் எதுவும் எடுக்காம மக்களுக்கு பிடிச்ச மாதிரி கேரக்டர்ஸ் மட்டும் பண்றேன்’ என்று சொன்ன ரஜினி, ‘இப்ப தயாரிப்பாளர்களுக்குத்தான் பஞ்சம். அடுத்த முறை என்னைச் சந்திக்கறப்ப ஒரு வெற்றிப்பட தயாரிப்பாளரா உங்களை நான் பார்க்கணும்’ என்றாராம் சிரித்தபடி. அதேபோல தனது இரண்டாவது படம் நல்ல வெற்றியை ஈட்ட ரஜினியைச் சந்தித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்ட அவர் கஜினி தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகரன்.
இப்படி கடைமட்டம் வரை பயன்பெறும் ரஜினி என்பவர் வெறும் நடிகர் அல்ல. ஒரு இண்டஸ்ட்ரி. இதற்கு முன் எம்.ஜி.ஆர் இப்படிப்பட்ட ஒரு இண்டஸ்ட்ரியாக விளங்கினார். இப்போது ரஜினி இருக்கிறார். அப்படிப்பட்ட ஒருவர் இரண்டு வருடத்திற்கு ஒரு படம் என்பதாக இல்லாமல் நிறைய படங்களில் நடித்தால் நிறைய ரஜினி படங்கள் ரிலீஸ் ஆகும். நிறைய பேர் பயனடைவார்கள் அல்லவா. 

மாறாக ரஜினி தன் வியாபார வெற்றிகளையும் வருமானத்தையும் மட்டுமே கணக்கில் கொண்டு செயல்படுவது எனக்கு பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. 150 கோடியில் ஒரே ஒரு படம் செய்வதால் ரஜினிக்கு சிங்கிள் பேமண்ட்டாக 25 கோடி முதல் ஐம்பது கோடி வரை கிடைக்கலாம். ஆனால் சினிமா தொழிலில் அவரால் பிழைப்பவர்களுக்கு பயன் ஒருமுறைதான். அதே அவர் கொஞ்சம் சின்ன பட்ஜெட் படங்களாக ஐந்தாறு படங்கள் செய்தால் பலருக்கும் பயனுண்டு. 

குசேலன் தோல்வியை விட பெரிய தோல்வியெல்லாம் கண்டவர் எம்.ஜி.ஆர். அவருடைய காதல் வாகனம் படம் ஒரு பாரிய தோல்வி படம். ஆனால் அது எந்த விதத்திலும் எம்.ஜி.ஆரின் சினிமா பாணியை பாதிக்கவில்லை. ஆனால் குசேலன் தோல்வி ரஜினியை இனி சின்ன பட்ஜெட் படம் செய்ய விடுமா என்று தெரியவில்லை. தோல்வியைக் கண்டு துவண்டு பெரிய பட்ஜெட் டைரக்டர்களை நாடும் ரஜினி எனக்கு ஏமாற்றம் அளிக்கிறார்.

5. தனிப்பட்ட முறையில் எனக்கு ரஜினியின் மேல் உள்ள இன்னொரு ஏமாற்றம்: இந்திய சினிமாவில் ரஜினியே புகழ்ந்ததுபோல் அமிதாப் ஒரு பாதுஷா. அவர் படங்களின் வியாபாரம் என்பது இன்றும் அதற்குரிய இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. ஆனால் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு பிறகு அமிதாப் என்ன மாதிரி படங்கள் எல்லாம் செய்து வருகிறார்? பிளாக், சீனிகும், பா..!

ஆனால் ரஜினி..? 

ஐஸ்வர்யாராயின் கால்சீட்டுக்காக காலமெல்லாம் காத்திருந்து கட்டிப் பிடித்து டூயட் பாடிக் கொண்டிருக்கிறார். எவ்வளவு ஒரு சீனியர் நடிகர், ஒரு நல்ல கதையை தேர்ந்தெடுத்து நடித்தால் அது எவ்வளவு ஒரு ஆரோக்கியமான விளைவுகளை சினிமா இண்டஸ்ட்ரியில் ஏற்படுத்தும்? நினைத்து பாருங்கள், ‘தவமாய் தவமிருந்து’ படத்தில் ராஜ்கிரண் கேரக்டரை ரஜினி செய்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்? இல்லை ‘காஞ்சிவரம்’ மாதிரி வருடத்திற்கு ஒரு படம்..? ரஜினி போய் அப்படிப்பட்ட படங்கள் எல்லாம் செய்வதா என்று சிலர் நினைக்கக் கூடும். அவர்களுக்கு ‘எங்கேயோ கேட்ட குரலை’ பார்க்க சிபாரிசு செய்கிறேன். அண்மையில் 'ப்ரமரம்’ என்ற ஒரு மலையாளப் படம் பார்த்தேன். மோகன்லாலின் நடிப்பில் லயித்து போனேன். அந்த கேரக்டரை ரஜினி அனயாசமாக செய்யக் கூடியவர் என்பது என் கருத்து. 

இதெல்லாம் காரணமாக எனக்கு ரஜினி மேல் ஒரு சின்ன வருத்தம் உண்டு. அவர் அதீத மேக்கப்பில் ஜிகினா ஜிகிடியாக கண்ணை உறுத்திக் கொடுக்கும் எந்திரன் போஸ்கள் மீது ஒரு கோபம் உண்டு. இதெல்லாம்தான் என் பகடிக்கு காரணம். மற்றபடி ரஜினி ரசிகர்களின் உணர்வை காயப்படுத்தும் நோக்கம் எதுவுமில்லை.
மேலும்...

சிற்சில குறிப்புகள் (2)

Posted: Sunday, August 8, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
  • ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ படம் பார்த்துக் கொண்டிருக்கிறேன். என்.ஆர்.ஐ வாழ்க்கைச் சூழல் அச்சமூட்டுகிறது. ஒரே தெருவில் ஒண்ணு மண்ணா பொழச்சி, ‘ஓ’ன்னு குரல் கொடுத்தா ஓடி வர ஊரே இருப்பதன் அருமை புரிகிறது.

  • Bannedthoughts.net -ல் தோழர் ஆசாத் படுகொலை குறித்த அறிக்கையை வாசித்துக் கொண்டிருக்கிறேன். மாவோயிஸ்டுகளுக்கு  என்று பிரத்யேகமாக ஒரு வலைதளம் இல்லாதது ஆச்சரியமளிக்கிறது. போராட்டங்களை டிஜிட்டல் வடிவிலும் முன்னெடுக்க வேண்டிய காலகட்டமிது.

  • முன்காலை முடிந்த
    ஞாயிறு இந்நாள்
    பின்காலை பொழுதில்
    கஷ்டம் பலபட்டு
    கண்விழித்தெழுந்து 
    காப்பிக்கோப்பையுடன்
    கபாலத்தில் ஏதேனும்
    ஏற்றிக்கொள்ளமே என
    கணினி முன்னமர்ந்தால்
    கர்மசிரத்தையாக
    கள்ளக்காதலுக்கு
    கருத்தரங்கம் நடாத்துகிறார்!
    கலாச்சாரக் காவலர்தம்
    அனாச்சார போக்குபற்றி
    காரசாரமாய் கருத்துரைக்க
    கைகள் பரபரக்கின்றன்.
    ஆனாலும்,
    கட்டினவள் அருகமர்ந்து
    கணினித்திரையில் 
    கண்பதித்திருப்பதை
    கருத்தில்கொண்டே 
    நழுவிச் சொல்கிறேன்
    “கப்சிப் கபர்தார்”!

    (கள்ளக்காதல் பற்றிய உரையாடலின் போது)
மேலும்...