சுயநிவாரண முயற்சியும் யோகமும்

Posted: Monday, January 31, 2011 | Posted by no-nononsense | Labels: , 0 comments
தலைவலி வந்தால் எல்லோரும் என்ன செய்கிறார்கள் என்று எண்ணிப் பார்க்கிறேன். சிலர் போர்த்தி படுத்துவிடுகிறார்கள். சிலர் ஜண்டு பாம், விக்ஸ், டைகர் பாம் என்று வித விதமாக தைலம் தேய்த்துக்கொள்கிறார்கள். நானறிந்த சிலருக்கு தலைவலியே வந்ததில்லையோ என்றும் தோன்றுகிறது. அவர்கள் ஒருநாளும் தலைவலிப்பதாக குறைபட்டு நான் கண்டதில்லை. ஆனால் எனக்கு சில காலமாக அடிக்கடி வருகிறது. கண்களை சுற்றிய ஓரங்களிலும் பொட்டிலும்தான் அதிகம் உணர்வேன். கணினி முன்னால் தவம் கிடப்பதால் தான் இப்படி என்று வீட்டில் குறைபடுவார்கள். அது உண்மையாகவும் இருக்கலாம். என்னைவிட ஐ.டி மக்கள் தான் அதிகம் கிடக்கிறார்கள். இனி இதெல்லாம் தவிர்க்க முடியாதது.

அப்படி தலைவலி வந்தால் உடனடி வலி நிவாரணியாக நான் நாடுவது
நோவால்ஜின் மாத்திரைகளையே. இது அந்த நேரத்திற்கான தாற்காலிக நிவாரணமாக தொடங்கி பின்னர் ஒரு பழக்கமாக என்னை பீடித்துக் கொண்டுவிட்டது. ஒரு கட்டத்தில் நானே அதை உணர்ந்து, அதற்கு பிறகு வலிக்கும் நேரங்களில் உடனடியாக எல்லா வேலைகளையும் ஒத்தி வைத்துவிட்டு கண்களை மூடி முடிவற்ற ஓய்வை நாடி தூங்கி விடுகிறேன். எனக்கான காரணம் எப்போதும் சரியான தூக்கமின்மை என்பதால், தூக்கம் எனக்கு நிவாரணம் தருகிறது. அதன்மூலம் பழைய மாத்திரை பழக்கத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்துவிட்டேன் என்றும் சொல்லலாம்.

(யோசித்து பார்த்தால் இது என் பெற்றோரிடம் இருந்து எனக்கு வந்த பழக்கம் என்று தெரிகிறது. என் வீட்டில் சின்ன வயதில் இருந்தே இந்த மாத்திரைகள் ஒரு முழு அட்டையாக தயாராக இருக்கும். அக்கம் பக்கம் வீடுகளுக்கு கூட மாத்திரை சப்ளை நடக்கும்).

பயன்படுத்துவதை குறைத்துக்கொண்டுவிட்ட போதிலும் நான் எப்போதும் கைவ்சம் தலைவலி மாத்திரை வைத்துக்கொண்டிருப்பதையே பாதுகாப்பாக உணர்வேன். வீட்டிலும் அலுவலகத்திலும் என் மேஜையில் அது எப்போதும்
என்னுடன் இருக்கும். ஒரு வாரம் முன்பு அலுவலக நேரத்தில் தலை பாரமாகி கனக்க துவங்க, கைகள் மாத்திரையை தேடின. சுத்தமாக தீர்ந்திருந்தது. பக்கத்து மெடிக்கல் கடையில் ஆள்விட்டு 4 மாத்திரை வாங்கி வரச்சொன்னேன். 4 மாத்திரை 7 ரூபாய்.

*

நாமக்கல்லில் கோட்டை ரோட்டில் கொங்கு கூட்டுறவு மருந்துக்கடை என்ற ஒன்றை துவங்கி இருக்கிறார்கள். அங்கே மருந்துகள் நியாயமான விலையில் கிடைப்பதாக ஊருக்குள் பேச்சு உண்டு. அது உண்மைதான் என்பதை என் தந்தையும் - சீதா மெடிக்கல்லில் 70 ரூபாய்க்கு வாங்கிய மருந்தை இங்கே 10 ரூபாய் குறைவாக 60 ரூபாய்க்கு வாங்கியதற்கான இரு பில்களையும் காட்டி - என்னிடம் நிரூபித்திருந்தார்.
நேற்று அந்த கடைக்கு அம்மாவுக்கான சில மருந்துகள் வாங்கச் சென்றிருந்தேன். அதனுடன் எதற்கும் இருக்கட்டும் என்று 4 நோவால்ஜின் வாங்கினேன். 3 ரூபாய்.

ஆச்சரியத்துடன் அட்டையில் இருந்த MRP பார்த்தேன். ஒரு மாத்திரை தோராயமாக 70 காசுகள். 4 மாத்திரையும் ரூ. 2.80 வருகிறது. ரவுண்ட் ஆஃப் செய்து 3 ரூ வாங்கியிருக்கிறார்கள்.

ஒரே கம்பெனி தயாரிக்கும் ஒரே மாத்திரை கரூரில் 7 ரூபாய். நாமக்கல்லில் 3 ரூபாய் !
இது பெரும்பாலும் உதிரியாக வாங்கப்படும் மாத்திரைகளின் விஷயத்திலேயே நடக்கிறது என்று நினைக்கிறேன். அதிலும் சிறிய அளவில் வைத்திருக்கும் மருந்துக்கடைகளில்தான் அதிகம் நடக்கிறது.

மருந்துக்கடைகளின் விற்பனைப் பொருட்களின் மீது வைக்கப்படும் மார்ஜின் பற்றி கிசுகிசுப்புகள் எப்போதும் உலவுவதுண்டு. ஆனால் அதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தது இம்முறைதான். மருந்துக்கடைகளின் லாபவிகிதங்களை ஆராய முற்பட்டால், மயக்கத்தைத் தெளிய வைக்கும் மருந்தை தேடி ஓட வேண்டியிருக்கும் என்று நினைக்கிறேன்.

-0-

மைக்ரேன் தாக்குதலை கண்கூடாக கண்டிருக்கிறேன். அவர் எங்கள் குடும்ப நண்பராகிய 50 வயது பெண்மணி. கனடாவாசி. விடுமுறையில் இங்கே சுற்றுலா வந்திருந்தார். வந்த இடத்தில் வெயிலின் கடுமை ஒத்துக்கொள்ளவில்லை. தலைவலி, வாந்தி, மயக்கம் என்று ஒருநாள் முழுவதும் மிகவும் சிரமப்பட்டுவிட்டார். ஆனால் முன்னெச்சரிக்கையாக மைக்ரேனுக்கான மாத்திரைகளை கையோடு வைத்திருந்ததால் உள்ளூரில் டாக்டர் தேடி அலையவேண்டியிருக்கவில்லை.

இங்கே அது ஒரு பெரிய பாடு. பிரசவத்திற்கும், எலும்பு முறிவிற்கும், காது-மூக்கு-தொண்டை-கண்ணுக்கும் தெருவுக்கு தெரு டாக்டர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஒரு காய்ச்சல், தலைவலி என்றால் யாரிடம் செல்வது என்று பெரிய குழப்பமாக இருக்கிறது. இதில் என்ன குழப்பம் என்று படிக்கும்போது தோன்றலாம். நாமக்கல்லில் அனுபவபூர்வமாக அதை வாழ்ந்து பார்க்கும்போதே உணர முடியும். ஒரே மாத்திரையை வேறு வேறு பிராண்ட் நேம்களில் பிரிஸ்க்ரைப் செய்தபடி சில பழம்பெரிசு டாக்டர்கள்
பொழுதுபோகாமல் இன்னும் ’பிராக்டிஸ்’ செய்துகொண்டுள்ளன. அவர்கள்தான் இதற்கெல்லாம் இப்பவும் ஒரே அடைக்கலம்.

-0-

யோகம் கற்றுக்கொள்ள பெருவிருப்பமாகத்தான் இருக்கிறது. ஆனால் அதை ஆன்மிக பம்மாத்துக்கள், ‘ஜெய்குருதேவ்’ கோஷங்கள் இல்லாமல் கற்றுத்தரும் ஆசிரியரைத் தேடிக்கொண்டிருக்கிறேன். துரதிர்ஷ்டவசமாக அப்படி ஒரு குழுவை என்னால் இதுவரை கண்டடைய முடியவில்லை. ஈஷா யோகாவில் அப்படியெல்லாம் கிடையாது என்று நீ உறுதி கூறுவாயானால் அவசியம் கலந்துகொள்கிறேன். அதாவது யோகம் மற்றுமே கற்றுத்தர வேண்டும். ஆன்மிக பஜனை பாடுவது, ஊடாக ஜக்கி புகழ் பாடுவது போன்ற வேலைகள் இருக்கக்கூடாது.

இருந்தால் என்ன என்றால் அந்த ’பழத்துக்கு புகைபோடும் வேலையை’ கண்டு எனக்கு கடும் எரிச்சலாக இருக்கும். மன அமைதி கெடும். அந்த அமைதி போனால் கற்றுக்கொள்வதில் நாட்டமும் போய்விடும். இடம், பொருள், ஏவல் பார்க்காமல் எனக்கு ஒவ்வாத இடங்களில் இருந்து உடனடியாக வெளிநடப்பு செய்துவிடுவது என் இயல்பு. அது அநாவசிய சங்கடம். அதனால்தான் தொடர் அழைப்பு இருந்தாலும் எனக்கு ஒத்து வராது என்று தோன்றும் இடங்களில் நான் உள்நுழைவதில்லை. இதில் சில நட்பு வட்டங்களும் அடங்கும்.

ஆனால் ஜக்கியின் உரையை கேட்பதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. நான் தொடர்ந்து எப்போதும் ஜக்கி, நித்தியானதா போன்ற சிலரின் உரைகளை கேட்கிறேன். முக்கியமாக ஓஷோவின் உரைகளை (யூடியூபில் கிடைக்கின்றன). வாழ்க்கைக்கு தேவையான பல விஷயங்கள் உட்பொதிந்துள்ளவை அவை. நேற்று கூட மனிதர்களின் அறிவுஜீவித்தனத்தைப் பற்றிய நித்தியானதாவின் உரையை மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொண்டிருந்தேன். அற்புதம்!

அவர்களின் பிசங்கங்கள் வேறு
. பிஸினஸ் வேறு. ஆனால், பிரசங்களில் தாங்கள் மனிதர்களிடம் விதைக்கும் தம் மீதான ஈர்ப்புதான் தங்களின் ஆன்மிக பிஸினஸுக்கே அடிப்படை என்பதை அவர்கள் அறிந்து வைத்துள்ளார்கள். அதை நாமும் அறிந்துகொள்ளும்போது பிரச்னை அகல்கிறது. அவர்களின் பேச்சையும் எழுத்தையும் ஒரு சுயமுன்னேற்ற நூல் போன்று உள்வாங்கிக் கொண்டால் போதும்.

எதையும் ஒருமுறை பரிசீலித்து பின்னர் சேர்த்தலும் விலக்கலும் ஒரு மனப் பயிற்சியாக இருப்பது நல்லது. எளிய உதாரணத்தில் சொல்லப் போனால் அன்னம் போல.

-0-

//வராமல் எதுவும் பேசக்கூடாது சரியா//

வராமலே எப்படி ‘ஜெய்குருதேவ்’ சொல்ல முடியும்? ஈஷா யோகாவை பக்கம் தலைகாட்டவில்லை என்றால் நான் வேறு எங்குமே சென்று முயற்சிக்கவில்லை என்று நீ நினைப்பது உன் சொந்தக் கற்பனை. Art of living வகுப்பில் சென்று அமர்ந்து இது சரிவராது என்று திரும்பி வந்த கதையை வைத்துதான் சொல்கிறேன். அங்கேதான் இந்த ஜெய்குருதேவ் பஜனை.

யோகம் என்பது ஒரு கலை. அந்தக் கலையை கற்றுத்தர அவசியம் ஒரு குரு தேவைதான். அந்த குருவை வணங்கி கற்றுக்கொள்வதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் அவர் வெறும் உருவப்படமாக இல்லாமல் எனக்கு கற்றுத்தரும் ரத்தமும் சதையுமான ஆசிரியராக இருக்கவேண்டும். மாறாக சுவரில் இருக்கும் படத்தை காட்டி அவர்தான் கற்றுத்தருகிறார்.. நாங்களல்ல.. இங்கே கற்றுக்கொள்; அங்கே பார்த்து வணங்கு; அவர்தம் பஜனை பாடு என்றால்.. அதைதான் புகைபோடும் வேலை என்று சொன்னேன்.

சென்னை போன்ற பெருநகரங்களில் இந்த சாமியார்களின் துணை இல்லாமலே யோகா கற்றுத்தரும் நிறைய இடங்கள் இருக்கின்றன. அங்கேயெல்லாம் யோகா மாஸ்டர்கள் இருக்கிறார்கள். அம்மாதிரி மாஸ்டர்களை வணங்கி மரியாதை செலுத்தி அவர்களிடம் கற்றுக்கொண்டு தினமும் வீட்டில் பயிற்சி செய்வதுதான் காலம் காலமாக இக்கலையின் அடிப்படை வழிமுறையாக இருந்திருக்கிறது. இப்போதுதான் இதனுடன் ஆன்மிகம், சுயமுன்னேற்ற பிரசங்கம் எல்லாவற்றையும் கலந்து பண்டலாக விற்கிறார்கள்.

ஈஷா யோகாவைப் பற்றி அதில் கலந்து கொள்ளாமலே நான் அவதூறு பேசிவிட்டேன் என்று நினைப்பாயேயானால் அங்கே நடப்பது என்ன என்று விரிவாகத்தான் எழுதேன். நீயும் கிளாஸிற்கு ரொம்ப நாளாக அழைத்துக் கொண்டிருக்கிறாய். என்னாலும் கரூரில் வேலை செய்துகொண்டு கலந்துகொள்ள முடியாமல் இருக்கிறது. அதை நீயும் அறிவாய். இன்னும் ஓரிரு மாதங்களில் நான் கலந்துகொள்ளக்கூடிய நிலையில் நாமக்கல்லிலேயே இருப்பேன். அதற்குமுன் எனக்கு இருக்கும் மனத்தடையை அகற்ற வேண்டியது உன் கடமை.


அப்புறம் ஒரு தனிப்பட்ட வேண்டுகோள்: தயவுசெய்து அடுத்தமுறை ஏதாவது பேசும்போதாவது இந்த ‘சேற்றில் செந்தாமரை’ உவமையை மாற்றி வேறு ஏதாவது சொல்லவும். ரொம்ப போர் அடிக்கிறது. எனக்கு ஏன் செந்தாமரை வேண்டும்? சேற்றில் மலராத எத்தனையோ நல்ல மலர்கள் இருக்கின்றன. அவைகளை பறித்து சுடர்கொடியிடம் சூடிக்கொள்ள கொடுத்தால் மலரும் மனமும் மணக்காமலா போய்விடும்?

இதைத்தான் masochism என்பது. உற்றது அற்றது அறிந்திருந்தும் தன் மனதின் திசையில் தன்னை இயங்கவிட்டு தன்னைத்தானே துன்புறுத்திக் கொள்வது. ஏழு கடல் தாண்டி ஏழு மலை தாண்டி விண்ணை முட்டி நிற்கும் மரத்தின் உச்சியிலுள்ள பொந்தின் உள்ளே சென்றால் எதிர்படும் அரக்கர்களை வீழ்த்தி கிடைக்கும் கூண்டின் உள்ளிருக்கும் கிளியின் இதயத்துக்குள்தான் நம் உயிரை காக்கும் மருந்து இருக்கிறது என்றால்... வேறு வழியில்லை, அத்தனை சேறு ஆறு கடல் மலைகளையும் தாண்டிச் சென்று வென்று வந்து நீ சொன்ன மாதிரி கரையேறி கால் கழுவிக்கொள்ள வேண்டியதுதான். ஆனால், அவ்வளவு எல்லாம் முக்கியமில்லை, அல்டர்நேட் இருக்கிறது என்றால் ஏன் வீணே நம்மை நாமே வருத்திக்கொள்ள வேண்டும்? ஒன்று
masochist ஆக இருக்கவேண்டும். இல்லையென்றால் வீட்டில் முடங்கிக் கிடப்பதாக அர்த்தம். நல்ல கொள்கைதான் ;-)

மேலும்...

அரசியலா ஆளை விடு

Posted: Wednesday, January 19, 2011 | Posted by no-nononsense | Labels: 0 comments
1996

ஐயகோ..ஊழல்.. அராஜகம், பெண் வடிவில் ஒரு ஹிட்லர், வீட்டுக்கு ஆட்டோ வருது, வீரப்பன் பேட்டி: ‘அவ எவளோ சசிகலாவோ புசிகலாவோ.. ஹஹ்ஹஹ்ஹா!..’

வீரத்தமிழன் வீரப்பனே சொல்லிட்டார்.. இனி பொறுப்பதற்கில்லை, ஜெயலலிதாவை தோற்கடிக்க கருணாநிதிக்கு போடு ஓட்டு -

*

2001

உழவர் சந்தை, மினிபஸ்.. இத்யாதி இத்யாதி எல்லாம் போரா இருக்கு.. கையில் பணப்புழக்கமே இல்லை. இந்த ஆள் வந்தாலே இப்படித்தான். சரி, ஒரு சேஞ்சுக்கு மாத்திப் போடுவோம்.

இப்ப,
கருணாநிதியை தோற்கடிக்க ஜெயலலிதாவுக்கு போடு ஓட்டு.

*

2006

ம்ம்..அரசு ஊழியர்கள் வேலை நீக்கம்/சேர்ப்பு. கலர் கலரா ரேசன் கார்டு, மழைநீர் சேமிப்பு.... எல்லாம் சுத்த பேஜாரா கீது.

ஆ!.. கருணாநிதி கெலிச்சா இலவச டிவி கெடைக்குமாமே..! அப்ப,
ஜெயலலிதாவை தோற்கடிக்க மறுபடியும் கருணாநிதிக்கு போடு ஓட்டு

*

2011

இது இன்னாபா ஸ்பெக்ட்ரம்ன்ரான்.. லட்சம் கோடின்றான். விஞ்ஞான ஊழல்ன்றான்.. எல்லாமே வெலை ஏறி கடைசியா வெங்காயமும் வெலை ஏறிப்போச்சி. சரி, மாத்தி ஜெயலலிதாவுக்கு போட்டுப் பாப்போம்

கருணாநிதியை தோற்கடிக்க ஜெயலலிதாவுக்கு போடு ஓட்டு.

அல்லது,

எவன் எவ்வளவு அடிச்சா நமக்கென்ன.. நமக்கு கிடைச்சிது என்ன, அத பாரு.

கண்ணை மூடிக்கிட்டு கருணாநிதிக்கே போடு ஓட்டு

*

2016

மீண்டும்... மீண்டும்...

*

இப்படியே தன்னை நிரூபித்துக் கொண்டிருப்பான் தமிழன். இதில் திமுக, அதிமுக கூட்டணி அரசியல் பேசி ஆகப்போவது என்ன?

இலவசங்களும் பணமும் தான் இனி தேர்தலை தீர்மானிக்கும். உன் ஊழலில் என் பங்கு எவ்வளவு - இதுதான் இனி வாக்களர்கள் நிலை. அந்தளவு கெடுத்து வைத்துவிட்டதுதான் இந்த ஆட்சியின் மிகப்பெரிய சாதனை. அடுத்த ஆட்சி விட்டதை பிடிக்க இதுபோல் இன்னும் வேறு சாதனை செய்யும். இதில் வெக்கங்கெட்ட கூட்டணிகளைப் பற்றி வெட்டி விவாதம் என்ன!

புரட்சி பேசணும்னா வாங்க. வெட்டி அரசியல் பேசணுமா... லால் சலாம்..! ஆளை விடுங்க!
மேலும்...

சிதறல் மொழிகள்

Posted: Tuesday, January 18, 2011 | Posted by no-nononsense | Labels: 0 comments
மரணத்தின் வெகு அருகில் சென்று மீளும்போது அது வாழ்க்கையைப் பற்றிய நம் பார்வையை முற்றிலுமாக புதுப்பித்துவிடும். புதிய சில ஞானங்கள் பிறக்கும். முன்பை விட மனம் முதிர்ச்சியடைந்துவிட்டதாக தோன்றும். எல்லாமே ஒரு அனுபவம் தான். எஞ்சியிருக்கும் நாட்களை எப்படி கழிக்கப் போகிறோம் என்பதற்கு அதிலிருந்து ஏதாவது பாடம் கிடைத்திருந்தால் நன்று.
மேலும்...

மனதின் சமநிலை குறித்து ஓர் உரையாடல்

Posted: Sunday, January 16, 2011 | Posted by no-nononsense | Labels: 0 comments
நான்: என் மனநிலையை சமநிலையில் வைத்திருக்க உதவக்கூடிய உன்னதமான மனிதர்கள் குறித்தான தேடலை அநேகமாக என்னிடம் அப்படி ஒன்று இருக்கவே வாய்ப்பில்லை எனும்படியான என்னை அவதானிப்போரின் நினைப்புகளுக்கிடையே செய்துவருகிறேன். புத்தகத்தின் உறையை மட்டுமே பார்த்து உள்ளடக்கத்தை முடிவு செய்யும் உலகைப்பற்றி ஒருநாளும் எனக்கு கவலையில்லை.

தோழர்: மனதை சமநிலையில் வைத்துக்கொள்ள மனிதர்களின் வரலற்றை விட இன போராட்டங்கள் பற்றிய வரலாறு சரியான தேர்வாக இருக்கும் என்பது என் கருத்து.

நான்: மன சமநிலைக்கு தேவை மன அமைதி. அந்த அமைதிக்குத் தேவை உள்ளத்தை எழுச்சி கொள்ளச் செய்யும் விஷயங்களில் இருந்து விலக்கு. அதற்கு இனப் போராட்டங்களின் வரலாறு சரியான தேர்வாக இருக்காது என்பது என் கருத்து. இனப் போராட்ட வரலாறுகள் ஒருவித மனவெழுச்சியை அளிக்க வல்லன.

போராட்டங்கள் என்றாலே அரசியல் தாம். போராட்டங்களையும் அவற்றைச் சுற்றி நிலவும் அரசியலையும் வேறுபடுத்திப் பார்க்கமுடியாது. அவற்றின் நெடுக ஊடுபாவி வருவது துரோகமும் துவேஷமும். உதாரணமாக ஈழம் அல்லது பாலஸ்தீன போராட்டங்களை எடுத்துக்கொண்டால் இரண்டிலும் இன அழிப்பு நடந்தாலும், பாலஸ்தீனம் பற்றி உலகம் கொள்ளும் அக்கறையில் ஒரு பாதிகூட உள்ளூர் தமிழர்களிடையே ஈழம் குறித்து கிடையாது. ஈழத் தமிழர்களிடமும்கூட முழுமையாக கிடையாது. இது நம் ஊர் இனப் போராட்ட கதை.

யூதர்கள் ஹிட்லரிடம் எதிர்கொண்ட இன அழிப்பையும், அதிலிருந்து கண்ட மீட்சியும் பெரும் கண்ணீர் கதை. உலகம் உள்ள வரை நினைவில் வைத்திருக்கப் போகும் சரித்திரம். 1948-ல் இஸ்ரேல் உருவாகிறது. ஒரு இன அழிப்பையும், அதற்கு எதிரான ஓட்டத்தையும் போராட்டத்தை எதிர்கொண்ட ஒரு இனம் அதற்குப் பிறகு தாங்கள் சென்று ஆக்கிரமித்துக் கொண்ட வேறு ஒரு இனத்தின் நிலத்தில் நடந்துகொண்ட விதம் தான் என்ன? அதே இன அழிப்பு - நிலத்துக்காக!

இனங்களின் செயல்பாடுகள் அனைத்துமே சுயநலமானவை. இனம் → மதம் → சாதி என்று ஒவ்வொன்று ஒவ்வொரு அடுக்காக செயல்படுகின்றன. இவற்றின் பொதுவான ஒரு தொடர்பு சங்கிலி வர்க்க பேதம் எனலாம். மேலடுக்காக செயல்படும் இனங்கள் ஒவ்வொரு கால கட்டங்களிலும் ஒரு போராட்டத்தை தங்களின் இருப்புக்கான ஆதார தேவைகளை உறுதி செய்துகொள்ள சில போராட்டங்களை செய்திருக்கின்றன. இன்று ஈழத்தில் சிங்களவனுக்கு எதிராக நடக்கும் இனப் போராட்டத்தின் ஆதிகால வரலாறு மகாவம்சத்திலிருந்தே தொடங்குவதாக கொள்ளலாம்.

இனப் போராட்டங்களின் தென்படும் அர்ப்பணிப்பு உணர்வு என்பது குறுகிய எல்லைகளையும் ஆகிருதிகளையும் கொண்டது. ஒருவித மூர்க்கம்தான் போராட்டத்தை தக்கவைக்கிறது. அந்த மூர்க்கம் அஹிம்சை, ஆயுதம் என்று இருவழிகளிலும் இருக்கலாம். இரண்டுமே அதனதன் விதத்தில் படிக்க ஹிம்சைதான்.

போராட்ட வரலாறுகளை எல்லாம் படிக்குங்கால், சுயநலங்களையும் துரோகங்களையும் நினைத்து மனம் குலையவோ அல்லது ஒடுக்குமுறைகளை சினந்து எழுச்சிகொள்ளவோ செய்யுமே தவிர மனம் சமநிலையை அடையாது.
இதில் மாற்று கருத்துகள் இருப்பின் உரையாடலை மேலும் வளர்த்தெடுக்கலாம்.
மேலும்...

வால்கா முதல் கங்கை வரை

Posted: Wednesday, January 12, 2011 | Posted by no-nononsense | Labels: 0 comments
”வால்கா முதல் கங்கை வரை” புத்தகத்தின் 600 பக்கங்களில் 400 வரை படித்தாகிவிட்டது

சொன்னபடியே நிற்கிறாய் அதற்குத் தக. மிக்க மகிழ்ச்சி..! நூலை முழுமையாக வாசித்த பிறகு மீண்டும் ஒரு முழுமையான கருத்துரையை உன்னிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.

சாதி பாகுபாடு சாதி பாகுபாடு மற்றும் புரோகிதம் போன்ற ஆரியர்களின் இன்றைய பழக்கவழக்கங்கள் அவர்களால் தோற்றுவிக்கப்பட்டதல்ல அவற்றை அவர்கள் இந்திய தொல்குடிகளிடமிருந்தே (ஹரப்பா மற்றும் மொகஞ்சாதாரோ காலகட்டத்தில்) பெற்றுக்கொண்டார்கள் என்ற செய்தி எனக்கு புதியது.

இந்த நூல் அடிப்படையில் ஒரு புனைவு என்பதால் ஆரியர் குறித்து ராகுல்ஜி கொடுத்துள்ள சித்திரம் அப்படியே உண்மையென கொள்ளத்தக்கதல்ல என்பது என் கருத்து. காரணம் ஹரப்பா, மொஹஞ்சதாரோ மக்கள் குறித்த படிமங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. அவர்களின் வாழ்க்கை முறை குறித்து ஆராயத்தக்கதாக எதுவும் கிடைக்கவில்லை. அதனால் அவர்களின் சமூக வாழ்க்கை மற்றும் சாதிய அமைப்பு குறித்த கருத்துக்கள் எல்லாம் அடிப்படையில் அவரவர் மனசாய்வுக்கேற்றபடி யூகமானவை மட்டுமே. மேலும் இந்த நூல் வேதங்களையும் உபநிடதங்களையும் புராணக்கதைகளையும் அடியொட்டியே இயற்றப்பட்டதாக படித்திருக்கிறேன். அதனால் அதன் பாதிப்பு காரணமாகவும் ஆரியர் குறித்த இத்தகைய கருத்தாக்கத்தை ஆசிரியர் ஏற்படுத்திக் கொண்டிருக்கலாம்.

நான் இன்னும் அந்த நூலை வாசித்ததிலை என்பதால் இதன்மேல் முழுமையாக கருத்துரைக்க முடியாது. நீ முடித்து விட்டு கொடு. ஒரு ஓய்வற்ற முழுவாசிப்பில் முடித்து விட்டு மேற்கொண்டு உரையாடலை தொடர்வோம்.
மேலும்...

முடிவற்ற முடிவான இலக்கு

Posted: Monday, January 10, 2011 | Posted by no-nononsense | Labels: 0 comments
இலக்கின்றி ஓர் பயணம் - ஓர் இடத்தில் இப்படி ஒரு வரியை படித்த கணம் முதல் அதைச் சுற்றியே சிந்தனை மையம் கொள்கிறது.

இலக்கு இல்லாமல் பயணங்கள் சாத்தியமா? இல்லை என்றே தோன்றுகிறது. ஒன்று இலக்கை நீ நிர்ணயிக்கிறாய். அல்லது அப்பயணமே நிர்ணயித்து, காட்டாற்றின் வெள்ளத்தில் மிதந்து செல்லும் தக்கையென உன்னையும் தன்னுடன் பயணிக்க வைக்கிறது. எல்லோருக்கும் முடிவான முடிவே அதன் முடிவு. வேறு வார்த்தையில் சொல்லப் போனால் இலக்கு. புரியாதவர்களுக்கு இன்னும் எளிமை படுத்திச் சொல்ல வேண்டுமானால் ‘மரணம்’.

மரணத்தை ஒன்று நீ தழுவுகிறாய் அல்லது அது உன்னைத் தழுவுகிறது. எல்லா வகையிலும் இறுதியான இலக்கு அதுவே. எந்த விதமான சமரசங்களுக்கும் பரிகாரங்களுக்கும் ஆட்படுத்திவிட முடியாத ஒரே சாஸ்வதம்.

இதைத்தான் ஆன்மிகவாதி மாயை என்று அழைத்து யாரும் அறியாத ஒன்றை புரியவைப்பதாகச் சொல்லி தன் தலைக்குப் பின்னால் ஒளிவட்டம் காட்ட முயலுகிறான். ’ப்ரஹ்ம்ம ஸத்யம் ஜகன் மித்யா’ (பஜகோவிந்தம்)என்றெல்லாம் தேவபாஷையில் ஸ்லோகம் சொல்லி பிரம்மம் ஒன்றே சாஸ்வதம் என்கிறான். அதை மேலும் பகுத்தறிந்து கொண்டு போனால் இறுதியில் கிடைக்கும் இலக்கு மேற்சொன்னதில் இருந்து வேறுபட்டதல்ல.

ஆனால் அதை அறிந்துகொள்ள சுயசிந்தனையை வளர்த்துக் கொள்ள வேண்டும். உண்மையில் மனிதகுலத்தை பீடித்திருக்கும் மாயை என நம் சிந்தனையில் கவிழ்ந்திருக்கும் சோம்பலை சொல்லலாம். அதை விரட்டாமல் ஒளிவட்டங்களின் உண்மைத்தன்மையை உணரும் திறன் என்றும் வாய்க்காது.

மரணம் தான் இலக்கு. அறிவியல், ஆன்மிகம் இரண்டினாலும் தவிர்க்க இயலா ஒரே நிகழ்வு. இலக்கு உறுதியான பிறகும் ஏன் வாழ்க்கையை கண்டு இவ்வளவு பயம்? வாழ்க்கையை கண்டு பயமா அல்ல்து தற்காலிகமான சுகபோகங்களை அடைய இடையே இருக்கும் சிரமங்கள் தரும் ஏக்கமா?

‘உண்பது நாழி உடுப்பது இரண்டே’ என்று வாழ என்ன மனத்தடை? தடையது லௌகீக கயிறு பிணைத்து வைத்திருக்கும் பந்தங்களில் இருக்கிறது. அதற்காக பந்தங்களை உதறித் தள்ளிவிட முடியுமா? எந்த மார்க்கம் ஏற்றுக்கொண்டாலும் அவை எல்லாம் இட்டுச் செல்லும் ஒரே இலக்கு எதுவென தெரிந்தவன் செய்ய வேண்டியது என்ன?

இறக்கும் வாழ்க்கையிது இலக்கை அடையும் வரை தடுக்கும் தடைகளை தவிர்க்கும் மார்க்கம் தேடி வீணில் அலையாமல் உவப்புடன் எதிர்கொண்டு உள்ளச் சிறப்புடன் வாழ்ந்து முடிப்பதே உத்தமோத்தமமான ஒரே வழி. மறுக்க முடியுமா? மறுப்பதும்கூட மறுமை போன்ற மாற்று மார்க்கங்களையே விடையாகத் தருகிறது எனும்போது அந்த மறுப்பு வலுவிழக்கிறது.

மரண பயம் மனிதர்களின் மனதில் தோற்றுவிக்கும் எண்ணங்கள் தான் எத்தனை எத்தனை விசித்திரமானவை. அந்த விசித்திரமானவைகளைப் பற்றிய வெகுமனசித்திரம் என்னும் நூல்புரி இட்டுச் செல்லும் பாதையின் சிக்கல்களை சிடுக்கெடுத்தபடிச் சென்றால், அது எண்ணிலடங்கா மதங்களின் வரலாற்றை அக காட்சிப்படுத்துவதாக அல்லவா அமைகிறது.

அந்த அக காட்சியை கண்டு தெளிய தேவை - சுயசிந்தனை. நம் மக்களுக்கு எட்டிக்காயாக கசக்கும் ஒரு சொல் இதுவன்றி வேறிருக்க முடியாது. சிந்தனையின்றி தர்க்கங்கள் சாத்தியமில்லை. தர்க்கிக்காமல் மனத்தெளிவு சாத்தியமில்லை. மொத்தத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இங்கே அவை எதுவுமே முற்றிலும் சாத்தியமாக இல்லை. ஆனாலும் பயணம் தொடர்கிறது ஓரிருவரின் தெளிவின் ஒளியை தனதாக்கிக் கொண்டு ஒரு முடிவற்ற முடிவான இலக்கை நோக்கி.
மேலும்...

எது சுற்றுலா?

Posted: Saturday, January 8, 2011 | Posted by no-nononsense | Labels: 0 comments
அது ஒரு தனியாத ஆசை ஒரு வித்தியாசாமான சூழலில் நண்பர்களுடன் நீண்ட நேரம் செலவிட வேண்டும்(மது அருந்திக்கொண்டு)

உங்கள் பயணம். உங்கள் விருப்பம். உங்கள் ஆசை - இதில் நான் யார் கருத்துச் சொல்ல. இருந்தாலும், அவ்வளவு தூரம் சென்று ஆகும் மட்டையை இங்கேயே ஆகிக்கொள்ளலாமே?

கூட்டம் சேர்ந்து போய் ரூம் போட்டு ரம் போட்டு சைட் ஸீயிங் போய் நோட்டம் விட்டு பராக்கு பார்ப்பதுதானா சுற்றுலா? சுற்றுலா எப்படிச் செல்ல வேண்டும்?

எந்த ஊருக்குப் போகிறோமோ அதனுடைய வரலாற்று முக்கியத்துவம் என்ன, அங்கே வரலாற்றின் சாட்சிகளாக இன்னும் மீதம் இருக்கும் தடயங்கள், சிற்பங்கள், கல்வெட்டுக்கள், புராதன சின்னங்கள் என்னென்ன என்பது குறித்த அறிவுடன், அவற்றை நித்தியமாக மனதில் உள்வாங்கிக் கொள்ளக்கூடிய திறந்த மனநிலையுடன் போய் இறங்கி அச்சூழலுடன் இரண்டற கலக்கவேண்டும். அங்கேயுள்ள உள்ளூர் மனிதர்களுடன் தான் தங்க வேண்டும். அம்மக்களின் பிரத்யேக உணவு வகைகளையே உண்ண வேண்டும். அம்மண்ணின் பண்பாட்டு அடையாளங்களை அறிந்து கொள்ளும்படியான நிரல்களை திட்டமிட்டுக்கொள்ள வேண்டும். எந்த ஒரு நாளும் வீணாகக்கூடாது.

பிலோ இருதயநாத் கேள்விப்பட்டதுண்டா? தமிழில் பல பயணக்கட்டுரைகளை எழுதியவர். குறிப்பாக பழங்குடியினரை நேரில் சந்தித்து அவர்களுடன் தங்கி நூல்கள் எழுதியவர். அவர் எல்லா இடங்களுக்கும் சைக்கிளேலேயே பயணம் செய்தார். தன்னை தனித்து அடையாளப்படுத்திக் கொள்ளும் எந்தவித சௌகரியங்களையும் அவர் ஏற்படுத்திக்கொள்ளா ஒரு அசல் யாத்ரீகர். இத்தனைக்கும் அவர் ஒரு பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றிக்கொண்டே இவற்றையெல்லாம் செய்தார். அவரெல்லாம் இவ்வகையில் ஒரு முன்னோடி.

நான் சமீபத்தில் நம் நண்பர்கள் இருவருடன் பெங்களூர் சென்றிருந்தேன். செல்வதற்கு முன்பாக பார்க்க வேண்டிய இடங்கள் என்று சில இடங்களை குறித்து வைத்துக்கொண்டு, அவற்றின் சரித்திரம் குறித்த தகவல்களை மனதில் அசை போட்டபடி சென்று இறங்கினேன். அவற்றில் நான் செல்ல விரும்பிய முக்கியமான இடம் திப்பு சுல்தானின் சம்மர் பேலஸ். உடையார் மன்னர்களில் தொடங்கி, ஹைதர் அலி, அவனின் செல்ல பிள்ளை திப்பு வரையிலான ஒரு சுவையான வரலாறை படித்திருந்ததின் ஆர்வம் உந்தித்தள்ள அங்கே எங்களை வரவேற்ற நண்பனிடம் இடங்களின் பட்டியலை வாசித்தால் அவன் திருதிருவென விழித்து தத்தளித்து தண்ணீர் குடிக்க ஆரம்பித்துவிட்டான். சரி வேண்டாம் சிரமமென்று சித்தன் போக்கு சிவன் போக்கென்று மற்ற நண்பர்களின் போக்கிலேயே விட்டுவிட்டேன்.
மேலும்...

அமைதிப் பூங்கா தானோ!

Posted: Tuesday, January 4, 2011 | Posted by no-nononsense | Labels: , 0 comments
இன்று வேலை முடிந்து வீடு வந்து சேர்ந்து வழக்கம்போல் செய்திகளின் குவியல்களை அகழ ஆரம்பித்தவனின் கவனத்தை மூன்று கொலைகள் கவர்கின்றன.

1. சற்று முன்னர் ரிஷி இங்கே பகிர்ந்து கொண்டிருந்த - மனு வாங்கிக் கொண்டிருந்த பீகார் எம்.எல்.ஏ ஒரு பெண்ணால் குத்திக் கொல்லப்பட்ட செய்தி. இது பாலசந்தரின் அச்சமில்லை அச்சமில்லை படத்தை எனக்கு நினைவுபடுத்தியது. அதிலும் இதேபோலத்தான் தன்னை ஏமாற்றிய அரசியல்வாதி கணவன் ராஜேஷை சரிதா மனு வாங்கும் கூட்டத்தில் குத்திக் கொல்வார்.


2. இரண்டாவது, பாகிஸ்தானிலுள்ள பஞ்சாபின் கவர்னர் சல்மான் தஸீரின் கொலை. இந்த கொலையும்கூட ஒரு வகையில் எனக்கு இந்திரா காந்தி படுகொலை சம்பவத்தை நினைவு படுத்துவதாகவே அமைகிறது. அவரைப் போலவே இவரும் தன்னுடைய பாதுகாவலரால்தான் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்.

Salmaan Taseer

இவரை நான் கடந்த ஒரு வருடமாக ட்விட்டரில் பின் தொடர்ந்தும் படித்தும் வருகிறேன். பாகிஸ்தானிய அரசியல்வாதிகளுக்கிடையே சற்று விவரம் தெரிந்த ஆசாமி இவர். சமயம் கிடைக்கும் போதெல்லாம் காத்திருந்தது போல இந்தியாவின் மீது கறாரான விமர்சனங்களை வைப்பார். அதை நாம் ஏற்றுக் கொள்கிறோமா இல்லையா என்பதல்ல பிரச்னை. அவரின் வாதங்களிலுள்ள அறிவுத்திறன் வியக்கும்படி இருக்கும். பாகிஸ்தானின் சற்று முற்போக்கான அரசியல்வாதி என்றும் அவரைச் சொல்லலாம். அந்த முற்போக்குத்தனம் தான் அவர் உயிரையும் காவு வாங்கியுள்ளது.

இவர் கொல்லப்பட்டதன் காரணம் இஸ்லாமிய அடிப்படைவாத சட்டங்களில் மாறுதல் கொண்டுவர முயற்சி செய்து கொண்டிருந்தார். இஸ்லாமிய கோட்பாடுகளின் பெயரால் பலரும் தண்டிக்கப்படுவதை எதிர்த்தார். அது போதாதா அவர் மேல் ரகசிய பட்வா வந்திறங்க!


3. மூன்றாவது கொலை ஆந்திராவில் நடந்திருக்கிறது. ஆந்திராவின் இரண்டு பிரபலமான ரவுடிகளின் கதையைத்தான் ரத்தசரித்திரம் என்று சினிமாவாக எடுத்தார்கள். அதன் நாயகன் பரிதாலா ரவி ஏற்கெனவே இறந்துபோனது பழைய கதை. ரவியின் கொலைக்கு காரணமாக ஒருமித்த குரலில் சொல்லப்பட்ட அவனின் எதிர்கோஷ்டி தலைவன் சூரியை இன்று கொன்று விட்டார்கள்.


இந்த பலி வாங்கும் படலத்தின் அடுத்த பலியாக ஜெகன்மோகன் ரெட்டி இருக்க அதிக வாய்ப்புண்டு என்று சொல்கிறார்கள் !

ஏன் என்பதன் முன்கதைசுருக்கத்தின் முழு விவரங்களையும் கீழேயுள்ள சுட்டிகளை சுட்டித் தெரிந்து கொள்ளலாம். உண்மைத்தமிழன் என்னும் பதிவர் விரிவாக எழுதியுள்ளார்.



இதையெல்லாம் படிக்கும்போது நம்ம ஊர் ரவுடியிஸம் எவ்வளவோ தேவலாம் என்றிருக்கிறது. ஒருவேளை தமிழ்நாடு உண்மையிலேயே அமைதிப் பூங்கா தானோ!
மேலும்...

மல்டி லெவல் மார்க்கெட்டிங் (MLM)

Posted: | Posted by no-nononsense | Labels: 0 comments
quality product doesn't need this kind of cheap(cheat) marketing...
I haven't used any amway products so far:-) so I cannot talk about the quality...
I had very bad experience(pestering) from this kollai kumbal in US..Here is my experience..
I was in the retail store(Walmart) to purchase some items , talking with my friend in tamil....
One person slowly came to me with smile and asked "Are you from chennai and studied in this college?" if I am talking in tamil, obviously I must be some where from tamil nadu...
I said "No, I am from namakkal, but studied computer course in chennai". His face became bright and immediately said, oh...yeah, I also studied some where near...May be you are not that person...then he started the conversation,
Nice to meet you....My name is ...etc....we introdoced ourselves..then he said "We should meet some time".....I was like, oh....yes, we should meet...
Note: I was new to USA, this was my second day and I didn't know anyone there except my one friend....
I thought people are so nice and I got one friend there....Then he asked our ph #s...My friend was telling wrong # and slowly moving away from that place...
I corrected my friend's ph # in front of that person and my friend's face became red, I didn't know why.....I gave correct ph # with out realising after effect.....
After I came out from the store, my friend told me about this amway thing....oh.god...
Then I used to get call from this person very often(some times I won't pick up) and he starts talking to me about the business plan....He didn't explain to me that time but promised that he will talk to me about this in detail later(when we meet) I didn't want to openly say that I am not interesed and cut that person as I thought that was very harsh....
One day he called me and said we are having get together...why don't you come? I didn't want to go there so I said "I don't have car". He said he will pick me up and drop me after that meet...I have talked to this person hardly once(5 min)...How nice he is:-)..Some how I escaped and didn't go to that MLM get together..
I said once that I am not interested. Even after that he called me several times and tried to explain about the business plan.......I ran out of patience and burst out...then he stopped calling me...
I have met several such people...Even if you openly say that you are not interested or you shout at them , they will still smile and try to explain the business plan:-) Not only guys...even their wife's also do this...
After that whenever some one comes near to me with smile, I will move away from that place quickly....
I am not sure why Amway is marketing like this...Is it their marketing startegy? or our people are spoiling this....no idea...


பாஸ்கரின் அனுபவம் இங்கக்கிம் அங்கக்கிம்
புள்ள புடிக்கிற மாதிரி ஆள்பிடிக்கிறதில் ஒரு வித்தியாசமும் இல்லை என்பதை உணர்த்துகிறது. MLM ஆசாமிகளை கடக்காமல் இந்தியாவில் யாரும் வாழ்ந்து கொண்டிருக்க முடியாது.

எனக்கு இணையத்தில் அறிமுகமான ஒரு பெங்களூரு IT பெண் - அறிமுகமென்றால் ஹாய், ஹெல்லோவோடு சரி - திடீரென்று மிகவும் நட்பு பாராட்டி நேசக்கரம் நீட்டினார். பெண்களின் மென்கரத்தை நிராகரிக்கும் அளவுக்கு பாழும் மனம் இன்னும் நிர்மலமாகவில்லையே! பிடித்தது சனியன். மெல்ல இதே ஆம்வே பற்றி ஆரம்பித்து பிளேடு போட ஆரம்பித்தார். நட்பு கெட்டுவிடக் கூடாதே என்று நானும் ஊம் கொட்டிக் கொண்டிருந்தேன். நாள் செல்ல செல்ல ஆளை பார்த்தால் ஆஃப் லைன் போகும் அளவிற்கு நிலைமை ஆனது.

ஒருநாள் மடல் ஒன்றில் நெளிந்து குலைந்து நேரில் சந்தித்து பேசவும் தயார் என்றெல்லாம் சீராடினார். அதெப்படி முன்பின் அதிகம் அறிமுகமில்லாத ஆணுடன் இவர் சந்திக்க தயாராக இருக்கிறார் என்று என்னால் அதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவரைப்பற்றி குடும்ப பின்புலம் வரை எனக்கு தெரியும் என்பதால் கேரக்டர் தவறு என்று நினைக்கவில்லை. ஆனால் பிஸினஸுக்காக இவர்கள் எந்தளவு வேண்டுமானாலும் இறங்க தயாராக இருக்கிறார்கள். அவர்கள் மூளை அவ்வாறாக சலவை செய்யப்படுகின்றன. அந்த மடலுடன் அவரை ப்ளாக் செய்ததுதான். இன்றுவரை பேஸ்புக், ஆர்குட் என்று அவர் அழைப்பு விடுத்தும் ஏற்றுக்கொள்ளவில்லை. நல்லப் பெண். MLM குறுக்கிடாமல் இருந்திருந்தால் நல்ல நட்பு சாத்தியமாகி இருக்கும். அது கெட்டுப் போனதில் இன்னும் எனக்கு வருத்தமுண்டு.

இதேபோல் இன்னொரு லோக்கல் நண்பரும் நட்பை கெடுத்துக்கொண்டார். ஆனால் அவர் மார்க்கெட் செய்யமுயன்றது Conybio.

முன்பெல்லாம் பணத்தை மட்டும் கட்டிவிட்டால் போதும் அதிர்ஷ்டம் கூரையை பிய்த்துக்கொண்டு கொட்டும் என்று ஆசைக்காட்டிய ஒரு MLM இருந்தது. அதாவது 5000 ரூ கட்டிவிட்டு கூட ஒரு மூன்று பேரை சேர்த்துவிட்டால் போதும். மாசா மாசம் 5000-க்கு செக் வரும் என்றார்கள். அதையும் நம்பி ஆள்பிடிக்க ஊருக்குள் குப்பன் சுப்பனெல்லாம் கடன் வாங்கி (9 வருடங்களுக்கு முன் 5000 என்பது சின்ன தொகை அல்ல) போட்டுவிட்டு அலைந்தார்கள். அதன் பெயர் skyways. அதன் கவர்ச்சிகரமான ஒரு இலவச பொருள் அதில் சேருவோருக்கு கம்பெனி சார்பாகஆளுக்கொரு ஈமெயில் அட்ரஸ் இலவசமாக கிடைக்கும் :-) என்னிடம் அதைச் சொல்லி மார்க்கெட் செய்த ஆசாமி என்னிடமிருந்து கிடைத்த வசையை இன்னும்கூட சந்திக்கும்போதெல்லாம் சொல்லுவார். பெரும்பணம் அவர் அதில் கட்டும்போதே எச்சரித்தேன். கடைசியில் பெரிய மோசடியாக முடிந்து பணம் கட்டிய எல்லோரும் தலையில் துண்டை போட்டுக்கொண்டார்கள்.

சமீப வருடங்களில் கூட காந்தப்படுக்கை, தங்க காசு என்று நிறைய MLM மோசடிகள் வெளியாகின. ஆனாலும் புதிது புதிதாக முளைத்துக்கொண்டுதான் உள்ளன.

இப்படி மக்கள் MLM-ல் ஏமாற பிரதானமாக இருக்கும் காரணம் நோகாமல் நோம்பி கும்பிட்டு பணத்தை மூட்டை கட்டிவிட வேண்டும் என்னும் பேராசை தான். எவ்வளவு மோசடிகள் வெளிப்பட்டாலும் ஆம்வே, கோனிபையோ போன்ற நிறுவனங்கள் இன்னும் நிலைக்க காரணம் பணத்தை மட்டும் வாங்கிக்கொள்ளாமல் அதற்கு சில பொருட்களையும் தலையில் கட்டிவிடும் தந்திரமே. தரமான பொருட்கள் என்னும் பிரச்சாரம் மக்களிடையே அதற்கு ஒரு அடையாளத்தையும் அதன் விலைக்கு ஒரு நியாயத்தையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. வெளிசந்தையிலும் அதே விலையில் அல்லது இன்னும் குறைவாகவே தரமான பொருட்கள் கிடைக்கின்றன. ஆனால் இங்கே தொடர்ந்து செய்யப்படும் பிரச்சாரம்தான் எடுபடுகிறது. காந்தப் படுக்கையின் மருத்துவ சக்தி மாதிரி !!

இப்படி இங்கே ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருக்கும். சென்ற வருடம் MLM பற்றிய ஒரு அருமையான மடல் இங்கே பகிர்ந்துகொள்ளப்பட்டது. அதாவது அவர்கள் எப்படி இயங்குகிறார்கள், பணம் குவிக்கிறார்கள்.. அதன் பின்னாலுள்ள working / business strategy என்ன என்பது பற்றிய ஒரு கட்டுரை. அதை மீண்டும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

-------


மலைச்சரிவு

இப்படியெல்லாம் நடக்கும் என்று நான் நினைத்திருக்கவே இல்லை. நன்றாகப் பழகிக்கொண்டிருக்கும் நண்பர்களை திடீரென ஏதோ அற்பகாரணங்களுக்காக இழக்க உங்களுக்கு மனம் வருமா?

இது என்ன கேள்வி என்கிறீர்களா? வாழ்க்கையில் பல நண்பர்களை நான் அப்படி இழந்திருக்கிறேன். நீங்களும் பல நண்பர்களை இப்படி இழந்திருப்பீர்கள். இழப்பதற்குக் காரணமாகவும் இருந்திருப்பீர்கள். அப்படிப்பட்ட அற்பகாரணங்கள் பல இருக்கலாம் ஆனால் அவைகளில் முக்கியமானது மல்டி லெவல் மார்க்கட்டிங் எனும் வியாபாரம் சம்பந்தமாக உங்கள் நண்பர் உங்களை வற்புறுத்தி, அதை நீங்கள் மறுத்து அதனால் ஏற்படும் சங்கடம் ஆகும்.

மல்டி லெவல் மார்க்கட்டிங் என்றால் என்ன? ஒரு சட்டை வாங்குங்கள் உங்கள் நண்பர்களில் நான்கு பேரை அறிமுகப்படுத்துங்கள் உங்களுக்கு பணம் வரும். ஆயுள் காப்பீடு எடுங்கள், உங்கள் நண்பர்களில் இருவரை அறிமுகப்படுத்துங்கள் உங்க்ளுக்கு பணம் வரும். மாதமாதம் கைநிறைய சம்பாதிக்கலாம். இப்படியெல்லாம் கவர்ச்சிகரமாய் விளம்பரம் செய்வார்கள். வேண்டாம் என்று சொன்னாலும் விடமாட்டர்கள். இந்தக் கொடுமையைப் புரியவைத்து மாட்டிவிட ஓரிடத்தில் கூட்டம் வேறு நடத்துவார்கள். நான் இப்படிப்ப்ட்டவர்களிடம் இந்தமாதிரி பலவற்றைப்பார்த்திருக்கிறேன். இதில் இவ்வாறு குறைகள் இருக்கின்றன என்றால் அது வேறு இது வேறு நீங்கள் ஒருமுறை மீட்டிங் வந்து பாருங்கள் என்பார்கள். எனக்கு இந்தமாதிரி நண்பர்களைப் பிடிக்க நேரமில்லை என்றாலும் விடமாட்டர்கள். நீங்க உங்களை இணைத்துக் கொள்ளுங்கள் மற்றபடி நண்பர்களைப் பிடிப்பதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்பார்கள்.

இப்படி தன் அரசாங்க, உயர்பதவிகளைத் தொலைத்தவர்கள் கணக்கிலடங்காதவர்கள். உழைப்புக்கு இருக்கும் மரியாதையை கேவலமான ஆள்காட்டி வேலை செய்து சோம்பேறிகளாகவும் தாந்தோன்றிகளாகவும் மக்களை ஆக்கும் முயற்சிதான் இந்த மல்டி லெவல் மார்க்கட்டிங். இது இந்தியாவில் எனக்குத் தெரிந்து அறிமுகமானது ஆம்வே எனும் அமெரிக்க நிறுவனத்தால்.

ஆனால் இது உலகில் எந்த மூலையில் தோன்றியது தெரியுமா? புரட்சிக்கு முற்பட்ட இரஷ்யாவில் சில நிறுவனங்கள் சராசரித் தரமுள்ள தமது பண்டங்களை விற்பதற்கு இந்தச் சாதுரியமான வழியைக் கையாண்டன. அதிகமாக விற்பனை ஆகும் செய்தியேடுகளிலும் இதழ்களிலும் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் வெளியிடப்படும். உதாரணத்துக்கு, ஒரு மிதிவண்டி 50 ரூபிள் என்று விற்ற காலத்தில் 10 ரூபிளுக்கு உங்களுக்கு மிதிவண்டி வேண்டுமா? நாங்கள் தருகிறோம். மேலும் விபரங்களுக்கு தொடர்புகொள்க, இவ்வாறு விளம்பரம் செய்தால் யார்தான் மயங்க மாட்டார்கள். உண்மையில் 10 ரூபிளுக்கு அந்த நிறுவனம் ஒருவருக்கு அளிப்பது மிதிவண்டி அல்ல. நான்கு சீட்டுக்கள். இந்த நான்கு சீட்டுக்களையும் அந்த மனிதரின் நான்கு நண்பர்களுக்கு தலா 10 ரூபிளுக்கு விற்கவேண்டும். பின் அந்த 40 ரூபிளை அந்நிறுவனத்திடம் கொடுத்தால் அவர்கள் மிதிவண்டியைக் கொடுப்பார்கள். அந்த மனிதர் கையிலிருந்து செய்த செலவு 10 ரூபிள்தான் ஆனால் அவருக்கு 40 ரூபிளுக்கான மிதிவண்டி கிடைத்தது. அதேபோல அவரின் அந்த நான்கு நண்பர்கள் அவர்களின் இதர நான்கு நண்பர்களுக்கு விற்க வேண்டும். இவ்வாறு 10ரூபிளுடன் அவர்வர்களின் நான்கு நண்பர்களையும் சேர்த்து விற்று வந்த காசில் அவர்கள் மிதிவண்டி வாங்கிக்கொள்கிறார்கள்.

இதில் மோசடி எதுவுமில்லை என்றே தோன்றுகிறதல்லவா? விளம்பரம் செய்த நிறுவனமும் அதன் வாக்கை நிறைவேற்றுகிறது. நிறுவனத்துக்கும் இழப்பு எதுவுமில்லை. இதை சோவியத் இரஷ்யாவில் மக்கள் மலைச்சரிவு என்றே அழைத்தார்கள். சரி ஒன்று நான்கானது புரிகிறது. நான்கு எவ்வளவாகும், 4 x 5 = 20 ஆகும். அவர்கள் நான்கு நான்கு பேரை இந்த சரிவில் தள்ளிவிடுவதாய் வைத்துக்கொண்டால் 20 x 5 = 100 ஆகிறது எண்ணிக்கை. ஆக மொத்தம் 1 + 4 + 20 + 100 = 125 புதிய ஆட்கள் இந்த மலைச்சரிவில் உருண்டுவிழுந்து விட்டார்கள்.

மொத்தம் மிதிவண்டி வாங்கிய 25 நபர்கள் போக ஏனைய 100 பேருக்கு மிதிவண்டி வாங்கலாம் என்ற நம்பிக்கை மட்டுமே கிடைக்கிறது. மலைச்சரிவு நண்பர்க்ளது குறுகிய வட்டத்தை உடைத்துக்கொண்டு நகரெங்கும் பெருகிப் பரவுகிறது. ஆனால் ஒவ்வொருவரும் சீட்டுவாங்கக் கூடிய புதிய ஆட்களைத் தேடிப் பிடிக்க மிகுந்த சிரமத்துக்குள்ளாக வேண்டிவருகிறது. இந்த வியாபாரத்தில் இழுக்கப்பட்டு மலைச்சரிவில் உருண்டு விழுவோரின் எண்ணிக்கை அசுர வேகத்தில் அதிகரித்துச் செல்கிறது. 1, 4, 20, 100, 500, 2500, 12,500, 62,500 இப்படியாக விரல்விட்டு எண்ணக்கூடிய 8 அடுக்கினில் அறுபதாயிரம் அப்பாவிகளைத் தாண்டிச் செல்கிறது. அடுத்த அடுக்கில் எத்தனை பேர் தெரியுமா? மூன்று இலட்சத்திற்கும் மேல். இதில் வாங்க விருப்பமில்லாதவர்கள், இந்தக்கட்டுரையைப் படித்து சுதாரித்துக்கொண்டவர்கள் என ஒரு கூட்டம் பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓட இந்தக்கூட்டம் பெருகும் வாய்ப்பை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து இப்போது முழுக்க தன் வளர்ச்சியை இழந்து நிற்கும். அப்போது ஏமாந்து போனவர்களின் எண்ணிக்கை ஐந்தில் நான்கு பங்காய் இருக்கும். இன்னொரு உண்மை என்னவென்றால் மோசடிவேலையை ஆரம்பித்த நிறுவனத்துக்கு இப்போது முழுக்க இலாபமே. ஏனென்றால் 10 ரூபிள் மட்டும் கட்டி அட்டை வாங்கியவர்கள் மீதம் நாற்பது ரூபிளுக்கு ஆள் கிடைக்காமல் ஆப்பு வைக்கப்படும்போது அவர்கள் கட்டிய தலா 10ரூபிளை இந்த நிறுவனமே சுவாகா செய்து கொள்ளும். தாங்கள் காசு கொடுத்து வாங்க முடியாத பண்டத்தைப் பெற ஒவ்வொரு மனிதனும் தன் நண்பரைப் பணயமாக வைத்து வாங்கிக்கொள்ள நண்பர்களே கிடைக்காதவர்கள் தலையில் நாமம் போட்டு திருப்பதி போய் மொட்டை போடக் காசுகூட இல்லாத நிலைக்கு வர காரணமாய் அமைந்து விடுகிறார்கள். இரஷ்யாவின் பிரபல எழுத்தாளர் இந்தக் கூத்தினை “பரஸ்பர மோசடியின் பெரும் பெருக்கு” என்று குறிப்பிடுகிறார்.

ஆம்வே ஆரம்பித்த மோசடியில் பல நிறுவனங்களும் குதித்தன. ஒருகாலத்தில் இது பெருகி வரும் அபாயம் உணர்ந்து இதனை இந்திய அரசாங்கம் தடை செய்திருந்தது. ஆனால் காசால் அரசாங்கத்தையே விலைக்கும் வாங்கும் நிறுவனங்களால் இந்தச் சட்டம் என்னவானதென்றே தெரியாமல் போனது. மக்களைப் பாதுகாக்க அரசாங்கத்துக்குள்ள பொறுப்புகளை அரசியல்வாதிகள் தங்கள் சுயலாபத்துக்காக அழித்து மக்களை விலைபேசத்துணிந்திருப்பார்கள் என்பதில் நம் யாருக்கும் சந்தேகமில்லை.

இந்த மோசடியில் காப்பீட்டு நிறுவனமாகக் காலடி வைத்துள்ள பஜாஜ் அலயன்ஸ் நிறுவனமே ஈடுபடுகிறது. ஆயுள் காப்பீடு வேண்டுமா நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள். ஏன் இன்னொருவரை நான் கட்டாயப்படுத்த வேண்டுமென்றால், உங்களுக்கு இலட்சலட்சமாய்ப் பணம் வருகிறது என்று சொல்கிறது. இப்போது இதை பைனரி மார்க்கட்டிங் என்று பெயர்மாற்றம் செய்துவிட்டனர்.

ஆதாவது நான்குபேருக்கு பதில் இருவரை அறிமுகப்படுத்துவது. எதுவாயினும் மோசடி மோசடிதான். கடைசியில் நண்பர்களை அறிமுகப்படுத்த முடியாதவர்கள் கட்டிய பணம் அமுக்கிக் கொள்ளப்படும்போது அவர்களின் சாபம் நம்மைச் சும்மா விடாது. இது அப்பட்டமான உண்மை காப்பீடே தேவைக்கு அதிகமாகப் போகும் போது அது வெட்டிச் செலவு ஆகும். LIC, UTI போன்ற அரசு நிறுவனங்களில் காப்பீடு செய்வது நமக்குப் பாதுகாப்பு. சமீபத்தில் ஒரு வங்கி திவாலான போது பொதுத் துறை நிறுவனமான LIC அதன் வாடிக்கையாளர்களுக்கு பணத்தைத் திரும்ப அளித்தது. மியூட்சுவல் பண்டு எனும் பரஸ்பர நிதிகளில் கவர்ச்சி விளம்பரங்களைக் காட்டிவிட்டு விளம்பரத்தின் கடைசியில் வேகமாகப் புரியாத அளவுக்கு கசமுசா கசமுசா என்று ஒருவன் பேசக் கேட்டிருப்பீர்கள். அதை உன்னிப்பாகக்கேட்டால் “மியூட்சுவல் பண்டுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை முதலீடு செய்யும் முன் பங்குப் பத்திரத்தைக் கவனமாப் படிக்கவும்” என்பது விளங்கும். ஏன் அதை நிறுத்தி நிதானமாய்ச் சொன்னால் என்ன? அப்போ எவனாவது அதைப் பார்க்காமல் வாங்கி ஏமாறமாட்டானா என்று அவர்கள் ஏங்குகிறார்கள் என்றுதானே அர்த்தம். உழைத்த காசே நிலைக்காத இந்தக்காலத்தில் ஏமாற்றி பெருக்கும் காசு எம்மாத்திரம்.

நல்ல நண்பர்களை இந்தமாதிரி மோசடிகளால் இழந்திருப்பீராயின் அதற்காகக் கவலைப்படாதீர்கள். அப்படிப்பட்டவர்கள் நல்ல நண்பர்கள் இல்லை. நம்மை விற்க நாம் ஒத்துக் கொள்ளாததால் இலாபத்தை இழந்து புத்திமாறிப்போன இவர்கள் நமக்கு நண்பராகவே இருக்கலாகாது. மலைச்சரிவு என்று இந்த மல்டி லெவல் மார்க்கட்டிங் முறைக்குப் பெயரிட்டது முற்றிலும் சரி. ஆனால் அந்தச்சரிவு ஒன்றில் நீங்கள் யாரும் விழுந்துவிடாமல் இருக்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

மேலும்...