அரசியல் சட்ட திருத்தங்கள்

Posted: Wednesday, March 9, 2011 | Posted by no-nononsense | Labels:
நமது அரசியலமைப்பு சட்டங்களில் நிறைய திருத்தங்கள் தேவைப்படுகின்றன. நிறைய காலத்திற்கேற்ற புதிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டியுள்ளன. ஆனால் நாடாளுமன்றம் நடந்தால் தானே... தலைபோகிற பிரச்னை போல எதையாவது கிளப்பி கூச்சலிட்டு 'house adjourned' என்று சொல்ல வைத்து வெற்றி வீரர்களாக காண்டீனில் கிடைக்கும் சகாய பண்டங்களை சுவைக்க சென்று விடுகின்றனர்.

எல்லா கட்சிகளிலும் வக்கீல்கள் அணி உள்ளன. அவற்றின் வேலை இது மாதிரி தேவைப்படும் சட்டத் திருத்தங்களை முன்மொழிவதும், புதிய ஷரத்துக்களை பரிந்துரைப்பதுமாக ஒரு காலத்தில் இருந்தது. ஆனால் இன்று தங்கள் கட்சித் தலைவர் மீதுள்ள வழக்குகளை சமாளிப்பதுவே அதற்கு பெரிய வேலையாக உள்ளது. ஜெயலலிதா மீதும் சசிகலா மீதும் 15 வருடங்களாக வழக்குகள் நடக்கின்றன. ஆனால் ஒருநாளாவது அவர்கள் கோர்ட் வாசல் மிதித்திருப்பார்களா? ஒரு சாமானியனால் இது முடியுமா?

பணம், பதவி, செல்வாக்கு, அதிகாரம் மிக்கவர்கள் முன் வாலை ஆட்டும் நாய் போல தான் இன்று சட்டம் உள்ளது. அதன் ஓட்டைகளை அடைத்து சீர்திருத்தி செம்மையாக்க மீண்டும் ஒரு அரசியலமைப்பு ஆய்வுக் குழு காலத்தின் தேவையாக உள்ளது. ஆனால் JPC-கள் தான் கட்சிகளின் அதிகபட்ச தேவையாக உள்ளது. தங்களை, தங்கள் வாரிசுகளை பாதிக்கும் எந்த திருத்தத்தையும் அரசியல்வாதிகள் செய்யமாட்டார்கள்.

இதோ வருகிறது; அதோ வந்தேவிட்டது என்று லோக்பால் மசோதாவை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் வரவில்லையே. அது பிரதமர் உட்பட பொது ஊழியர்கள் அனைவருக்கும் எதிரான ஊழல் புகார்களை விசாரிக்கத் தேவையான அதிகாரங்களை கொண்டதாக இருக்கிறது. அதனாலேயே ஆளும் கட்சி, எதிர்கட்சி என ஒருவரும் அதைக் கண்டு கொள்வதில்லை. இன்றைய எதிர்கட்சி நாளைய ஆளும்கட்சி அல்லவா!

0 comments:

Post a Comment