சகோதர யுத்தம்

Posted: Wednesday, October 27, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
நெடுமாறன்: ஈழத்தில் போராளிகளுக்குள் மோதல் ஏற்பட்டது. இந்தியஅரசின் 'ரா' உளவுத் துறைதான் அதற்குக் காரணம். 'டெலோ' இயக்கத்துக்கு ஏராளமான ஆயுதங்களைக் கொடுத்து, புலிகளுடன் மோதும்படி தூண்டிவிட்டது 'ரா'. அதன்படி, அவர்கள் ஆங்காங்கே விடுதலைப் புலிகளை சுட்டார்கள். சிலரைப் பிடித்துக்கொண்டு போனார்கள். அப்போது விடுதலைப் புலிகளின் சார்பில் இது குறித்து 'டெலோ' தலைவர் சிறீசபாரத்தினத்துடன் பேச்சு நடத்த கேப்டன் லிங்கம் அனுப்பிவைக்கப்பட்டார். அந்த லிங்கத்தின் இரு கண்களையும் தோண்டி எடுத்து, அவரைக் கொடூரமாகக் கொலை செய்தார் சிறீசபாரத்தினம். இதற்கு பதிலடியாகத்தான் புலிகளின் தாக்குதல் நடந்தது.

நெடுமாறனின் இந்த கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு. ஈழத்தின் ஆரம்ப கால அரசியலில் RAW-ன் பங்கு பெருமளவு இருந்ததாக கூறப்படுகிறது. 

அதை விடவும் புலிகளின் எதேச்சதிகார மனோபாவம்தான் மற்ற சக போராட்ட குழுக்களை அழித்தது என்பதும் உண்மைதான். குறிப்பாக TELO தலைவர் சிறீசபாரத்தினத்தை புலிகள் கொன்றதற்கு சகோதர யுத்தம்தான் காரணம். அதைப்பற்றி ‘ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்’ புத்தகத்தில் சி.புஸ்பராஜா (EPRLF) விரிவாக எழுதியுள்ளார். 

புலிகளுக்கு பயந்து புகையிலை தோட்டத்தில் ஒளிந்து கொண்டிருந்த சிறீசபாரத்தினத்தை புலிகள் சூழ்ந்து கொண்டனர். அப்போது தான் புலி தலைமையுடன் பேச விரும்புவதாகவும் தன்னை கொல்ல வேண்டாம் என்றும் அவர் கேட்டிருக்கிறார். ஆனால் புலிகள் கொஞ்சமும் இரக்கம் காட்டிக் கொள்ளவில்லை. கிட்டுவின் கையில் இருந்த ஏ.கே.47 துப்பாக்கியில் இருந்து வெளியேறிய குண்டுகள் சிறீயின் உடம்பில் 20 இடங்களில் துளைத்தெடுத்தன. தமிழீழ போருக்கு தன்னை ஒப்புக் கொடுத்த வீரனின் உயிர் எதிரியால் போகவில்லை. இன்னொரு சக போராட்டக்காரனாலேயே போனது வருத்தத்துக்குரிய விஷயம்.

ஏன் சிறீ அவ்வளவு முக்கியத்துவம் கொண்டவராக கருதப்படுகிறார்?

பிரபாகரனுக்கு அடுத்து மக்களின் ஆதரவை பெற்று இரண்டாம் நிலையில் இருந்தவர்கள் சிறீயும்(TELO) பத்மநாபாவும்(EPRLF). அவர்களில் சிறீ, ஒரு நெடிய போராட்ட வரலாற்றை தன் பின்னால் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

சீறீ படுகொலையை புரிந்துகொள்ள ஒரு எளிமையான உதாரணமாக ஸ்டாலினை அழகிரி போட்டுத்தள்ளிவிட்டால் என்ன மாதிரி ஒரு அதிர்ச்சி அலை எழும்புமோ, அப்படித்தான் அப்போதும் நிகழ்ந்தது. 

பின்னாட்களில் பத்மநாபாவும் புலிகளால் சென்னையில் கொல்லப்பட்டு விட்டார். 

புலிகளின் சகோதர யுத்தம் பற்றி நிறைய எழுதலாம். ஆனால் முடிவாக அவர்கள் அதில் அடைந்த பலன் பூஜ்ஜியம் என்பதை நெஞ்சில் நிறுத்தி பார்க்கும்போது, எதையும் பேசவோ எழுதவோ தோன்றுவதில்லை.

* * *

சிறீயை லிங்கம் சந்திக்கச் சென்றது தொடர்பான தொடர்பான ஈழவேந்தனின் விரிவான கட்டுரை ஒன்றை நாம்தமிழர் இணையதளத்தில் படித்திருக்கிறேன். தேடினால் கிடைக்கக் கூடும்.
மேலும்...

வேதகால பிராமணர் திராவிடரா?

Posted: | Posted by no-nononsense | Labels: , 0 comments
வேதங்களை பற்றி பின்னர் எழுதுகிறேன் என்று கூறியிருந்தேன். இப்போது அவ்வாறாக சில கருத்துக்களை பரிமாறிக்கொள்ள விரும்புகிறேன்.

முதலில் வேதம்தான் ultimacy என்று நினைப்பதும், அவற்றை அடிப்படையாக கொண்டு வரலாற்றை புரிந்துகொள்ள முயலுவதுமே தவறான அணுகுமுறை. இங்கே குறிப்பிட்டுள்ளதை போல அவை ஒன்றும் 6000 ஆண்டுகள் எல்லாம் பழமையானவை அல்ல. அப்படியெல்லாம் ஒரு ஆதாரமும் கிடையாது. வேதங்களில் பழமையானதுவான ரிக் வேதம் கி.மு.1200 - 1500 ஆண்டுகளில் தொகுக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. தீவிர இந்துத்துவ நூல்களே அவ்வாறுதான் குறிக்கின்றன. அப்படியானல் மற்ற வேதங்களெல்லாம் அதற்கும் பிறகே ஏற்பட்டவை என்பதால் 6000 ஆண்டுகளெல்லாம் ரொம்பவே மிகையான கணக்கு. 

வேதங்களின் காலம் தொட்டே நாட்டில் இனங்களிடையே சமூகவியல் வாழ்க்கைமுறைகளில் ஒரே அடையாளமும் சமத்துவம் நிலவி வந்தது என்பது புத்தரை மறுப்பதற்கு ஒப்பு. பார்ப்பனீயம் என இன்று அடையாளப்படுத்தப்படும் மேல்சாதி மேலாதிக்கமாகிய வைதீகத்தை எதிர்த்து உருவானதே புத்த மதம். ஒருவகையில் வைதீகத்திற்கும் புத்த/சமண சமயங்களுக்கும் இடையே சென்ற ஆயிரம் ஆண்டுகள் வரை ஒரு சமரே நிலவி வந்தது எனலாம்.

ஆதி வேதத்தின் காலமே கிமு 1500 தான் எனும்போது அவற்றை மட்டுமே அடியொட்டி பாரத பண்பாட்டு தளங்களை கட்டமைத்துக் கொள்வதும், வேதங்கள் தாம் சாஸ்வதம் என்று நம்புவதும் நம்மை அவற்றோடு தேங்கச் செய்து, அதற்கு முன்னும் பின்னுமுள்ள சமூகவியல் சித்தாந்தங்கள் குறித்த அறிதலை கிடைக்காமல் செய்து விடுகிறது. வேதங்கள் அல்டிமசியோ, சாஸ்வதமோ அல்ல. அவை மனிதர்களால் வழி வழியாக சுலோகங்களின் மேல் சுலோகங்களாக உரைக்கப்பட்டு செவி வழி மரபாக குருவிடமிருந்து சிஷ்யர்களுக்கு கடத்தப்பட்டு, கிமு 100 முதல் 300 க்குள்ளாகத்தான் எழுத்து வடிவை பெற்றிருக்கின்றன. ஆனால் யாருடைய மரபின் வழியாக அவை ஓதப்பட்டனவோ, அவர்களே அதைக்கொண்டு பிழைப்பு வேலை செய்து கொண்டனர். 

யார் யார் ரிஷிகள் பெயரையெல்லாம் குறிப்பிட்டு அவர்களெல்லாம் தென்னாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதாக கூறி அதனால் ஆரியர்களும் திராவிடர்களே என்று ஒரு வாதம் செய்துள்ளாய். ஒரு ராஜஸ்தான் லேவாதேவி சேட்டு குடும்பம் ஒன்று இரண்டு மூன்று தலைமுறைகளாக தமிழ்நாட்டில் வாழ்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதனால் மட்டுமே அவர்களும் தமிழர்கள் தாம் என்று நாளை வரலாற்றில் ஒருவன் எழுதினால் அது உண்மையாகி விடுமா? அந்தண ரிஷிகள் தென்னாட்டில் வாழ்ந்ததால் மட்டுமே அவர்களும் திராவிடர்களே என்னும் வாதம் முற்றிலும் ஏற்புடையது அன்று. 

வைதீக வாழ்க்கைமுறை வேதங்களில் இருந்து தொடங்க வில்லை. அது வேதங்களுக்கும் முற்பட்டது. அதுபோதே அது நெடுங்காலமாக பாரதத்தின் பல இடங்களிலும் வேர் விட்டிருந்தது. ஆரியர்களின் வருகை கிமு 2000 ஆண்டுகளில் நடந்திருக்கலாம் என்று சரித்திர ஆசிரியர்களால் கருதப்படுகிறது. அதனால் தென்னாட்டில் வாழ்ந்த ரிஷிகள் பற்றி வேதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதில் ஆச்சரியமில்லை. அதனால் மட்டுமே இரு பண்பாடுகளும், முக்கியமாக இரு இனமும் ஒன்றுதாம் என்பது முற்றிலும் தவறான புரிதல் நிலை. 

ஆரியம் இந்திய வாழ்க்கைமுறையுடன் தொடர்பற்ற என்பதை எப்படி புரிந்துகொள்வது என்றால், ரிக் வேதம் வலியுறுத்தும் சடங்கு முறைகள் எதுவும் அதற்கு முந்தைய பாரத பண்பாட்டில் முற்றாக கிடையாது என்பது ஆய்வு ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மை. அதற்கு பிறகே வேதங்கள் புனிதமானவை என்று பிரச்சாரம் செய்யப்பட்டு, அவற்றின் சடங்கு முறைகள் உள்ளூர் வேளாள மற்றும் பழங்குடி இன வழக்குகளில் இரண்டற கலந்தன.

மேலும் அன்றைய ஆரியர்கள் தாம் இன்றைய பார்ப்பனர்கள் என்பதும் தவறான கருதுகோள்தான். நிஜமான ஆரிய மரபு இந்தியருடனான இனக்கலப்பின் காணாமல் போய் விட்டது. இன்று இருக்கும் பார்ப்பனர்களெல்லாம் இந்தியருடனான கலப்பினம் தான். நேரடிய ஆரிய மரபு இன்னும் தொடர்வதாக கூறப்படுவது கோவில் குருக்கள் குலத்திலும், கேரள நம்பூதிரி மரபிலும் என்று ஒரு மரபியல் ஆய்வு தெரிவிக்கிறது. 

இன்னொரு பக்கம் திராவிடன் என்பன யார், அவனின் வாழ்க்கைமுறை வேதங்களின் திணிப்புக்கு பிறகு எங்ஙனம் மாறுபாடு கண்டது என்பதெல்லாம் விரிவான அலசலுக்கு உரிய விஷயங்கள். அவற்றையும் ஆய்ந்து இன்னொரு தட்டில் சீர்தூக்கு பார்க்கும்போது மட்டும் வேறுபாடு விளங்கும். 

இங்கே மையமான பிரச்னையாக நான் காண்பது - வேதங்களை மட்டுமே மையப்படுத்தி வரலாறை புரிந்துகொள்ள முற்படுவது. அந்த புள்ளியில் மட்டும் சரியான அணுகுமுறைக்கு மாற்றிக்கொண்டு விட்டால், அல்லது other side of the coin ஐ ஆவது ஒரு பரிசீலனைக்கு உட்படுத்த முயன்றால் வரலாற்றின் உண்மை நிலையும், சில சங்கர மட ஸ்பான்சர்டு அந்தணர்களின் திரிபு வாதமும் விளங்க வாய்ப்புண்டு. 

சென்ற மடலில் நான் இறுதியாக கூறியதையே மீண்டும் கூற விழைகிறேன். 

சரித்திரத்தின் பக்கங்களை ஓரிரு நூலை மட்டும் கொண்டு ஆராயாமல், ஆர்வம் இருப்பின் பல நூல்களையும் கருத்தாக்கங்களையும், கோட்பாட்டு ரீதியான ஆய்வுநிலைகளையும் பரிசீலித்து தமக்கான கருத்தை உருவாக்கிக் கொள்வது வரலாற்றின் நிர்தாட்சண்யமான பக்கங்களை நாம் விளங்கிக்கொள்ள உதவுவதாக அமையும்’


*


படித்து தெரிந்துகொள்ளவும் விவாதித்து புரிந்துகொள்ளவும் கடலளவு விஷயங்கள் இருக்கின்றன. தேவை முன்முடிவற்ற திறந்த மனநிலை மட்டுமே. 

இந்த விவாதத்தின் தொடக்கப்புள்ள தீபாவளி பண்டிகை. தீபாவளியை கொண்டாட கூறப்படும் புராண காரணத்தை நான் நிராகரிக்கும் அதேவேளை அந்தநாளின் மக்களின் மகிழ்ச்சியை மிகவும் ஆதரிக்கிறேன். தீபாவளி மட்டுமல்ல, மக்களை மகிழ்ச்சிப்படுத்தும் எந்த ஒரு கொண்டாட்டத்தையும் ஆதரிக்கிறேன். 

வருடம் முழுவதும் துன்புறும் அன்றாட அல்லல்களில் இருந்து ஒரு இளைப்பாறுதலை தருவது பண்டிகைகள் மட்டுமே. அவற்றின் பின்னாலுள்ள பழங்காரணம் என்னவாக இருந்தாலும், அவற்றை முன்னிருத்தாமல் கொண்டாட்டத்தை மட்டும் மையப்படுத்தி மகிழ்ச்சியை பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக்கொள்ளும் வரையில் அதை ஆரியக்கூத்தாக பார்க்க வேண்டிய அவசியமில்லை என்பது என் கருத்து.

என் குழந்தையோ, மனைவியோ அதை ஒரு நரகாசுரவதமாக எண்ணி மகிழவில்லை. அவர்களுக்கு அது ஒரு மகிழ்ச்சிக்குரிய தினம். அவர்களின் மகிழ்ச்சியே என் மகிழ்ச்சியாக ஆகிவிட்ட ஒரு வாழ்க்கையில் இயல்பாக எனக்கும்தான்...
மேலும்...

கல்சா

Posted: Tuesday, October 26, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
சீக்கிய மதகுருமார்களுக்கும் முகலாய அரசர்களுக்கும் இடையே நிலவி வந்த நட்பையும் பூசலையும் பற்றிய வரலாற்று குறிப்புகளை இன்று காலை வாசித்துக் கொண்டிருந்தேன். சுவாரசியமாக இருந்தது. 

இந்திய வரலாற்றில் சீக்கிய மதத்தின் தோற்றமும் வளர்ச்சியும் முகலாய ஆட்சியின் தோற்றமும் வளர்ச்சியும் சமகாலத்தியவை. முகலாய சாம்ராஜ்ஜியம் ஸ்தாபிக்கப்பட்ட ஆரம்ப காலங்களில், அதாவது அக்பர் காலம் வரை ஒரு சுமூகமான நல்லுறவில் இருவரும் இருந்து வந்திருக்கின்றனர். ஜகாங்கீர் காலத்தில்தான் மோதல் வந்திருக்கிறது. அது ஔரங்கசீப் காலத்தில் சீக்கியர்கள் ஒரு தீரம் மிக்க தனிப்படை தங்களுக்கென உருவாக்கிக்கொள்ளும் அளவிற்கு சென்றிருக்கிறது. அதுதான் ’கல்சா’. 

முகலாயர்களுக்கு எதிராக குருகோவிந்த் சிங் உருவாக்கிய ‘கல்சா’ ஜப்பானிய சமுராய் வாழ்க்கைமுறையை கிட்டத்தட்ட ஒத்ததாக உள்ளது. மத குருமார்களையும் அவர்களின் கோட்பாடுகளையும், ஆதிகிரந்தத்தின் அருமைகளையும் கட்டிக் காக்கும் பொருட்டு மிக கட்டுக்கோப்பான வரைமுறைகளுடன் அமைக்கப்பட்டிருந்த படை அது. 

கல்சா பற்றிய மேல்விரங்களுக்காக உள்ளூர் நூலகத்தில் முத்துக் குளித்து பார்த்தேன். தகுந்த தகவல் நூல்கள் கண்ணில் படவில்லை. இங்கே மேலதிகமாக அடைத்துக் கொண்டிருப்பதெல்லாம் புத்தகங்கள் என்னும் பெயரில் குப்பை கூளங்கள்தாம். அவையும் தலைப்பு வாரியாக அடுக்கப்பட்டிருக்காது. அங்கே நான் பட்ட அல்லல்களை தனியாக ஒரு காலம் எழுதலாம். பிரிட்டிஷ் லைப்ரரி போன்றவை இருக்கும் சென்னை போன்ற பெருநகரங்களில் வாழ நேர்பவர்கள் பொறாமைக்குரியவர்கள்.

* * * 

கல்சா பற்றி தெரிந்துகொள்ளலாமே என்று இணையத்தை ஆராயும் கிடைத்தப் படம் இது. கல்சா கடைபிடிக்கும் சீக்கியர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய Five K's பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். அவை என்னென்ன என்பது பற்றிய விளக்கப்படம்.





நேற்று என் அலுவலகத்திற்கு வந்த சீக்கியனிடம் இந்த Five k's பற்றி வினவினேன். அதெல்லாம் கோவிலில் இருப்பவர்கள்தான் வைத்திருப்பார்கள் என்றதுடன் முடித்துக் கொண்டான்.

இங்கே எனக்கு சிம்ரஞ்சித் சிங் மான் நினைவுக்கு வருகிறார். சந்திரசேகர் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட 1989 தேர்தலில் வெற்றி பெற்ற மான், இந்த Five K உடன் பாராளுமன்றத்தில் நுழைய முற்பட்டபோது kirpan என்னும் உடைவாளுக்கு மட்டும் அனுமதி மறுக்கப்பட்டது. என் மத அடையாளங்களுடன் தான் நுழைவேன் இல்லையென்றால் பாராளுமன்றத்தில் என் கால் பதியாது என்று அவர் அந்தமுறை உள்ளே செல்லவேயில்லை. அப்போதுதான் இந்திரா காந்தி கொலை வழக்கில் சிறை சென்று மீண்டிருந்தார். பஞ்சாபை பொறுத்தவரை அவர் ஒரு பெரிய வீரனாக கருதப்பட்ட காலம் அது.

சிம்ரஞ்சித் சிங்கின் கால் பாரளுமன்றத்தில் பதியாமலே போய் விட்டதா என்றால், அதுதான் இல்லை. மான் மீண்டும் 1999-ல் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தமுறை kirpan-ஐ பாங்காக கழற்றி வைத்து விட்டு மக்கள் சேவையாற்றி தன் கடமை நிறைவு செய்தார். முன்பு தடுத்தாட்கொண்டது வீரம் என்றால், பத்து வருடங்கள் கழித்து அவருக்கு வந்திருந்தது விவேகம். 10 வருட அரசியல் கற்றுத் தந்த பதவி பாடம்!
மேலும்...

இக்கரைக்கு அக்கரை பச்சை

Posted: Monday, October 25, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments


வாரமலர், குடும்பமலர், வாரக்கதிர் போன்றவற்றில் சினிமா செய்திகளுக்கு பிறகு நான் விரும்பிப் படிப்பது திண்ணை போன்ற தொடர்களைத்தான். நாம் பல நூல்களை தேடிப் படித்து அறிந்துகொள்ளக்கூடிய விஷயங்களையெல்லாம் பல வருடங்களாக தொகுத்து வழங்கி வருகிறார்கள்.

இந்த வாரம் வாரக்கதிரில் இடம்பெற்றுள்ள கண்ணதாசனின் கீழ்காணும் பாடல் வரிகள் என்னை ஆழ்ந்து சிந்திக்க வைத்தன.

“இக்கரைக்கு அக்கரை பச்சை
அக்கரைக்கு இக்கரை பச்சை

கடல் மீது விழுந்தவர்கள் நீந்துங்கள்
கனி மீது விழுந்தவர்கள் உண்ணுங்கள்
வழிச்சாலை கண்டவர்கள் செல்லுங்கள்
போகவழி தவறியவர்கள் நில்லுங்கள்”

Take life as it comes - என்னும் ஆங்கிலப் பழமொழியை நினைவுபடுத்திக் கொண்டால் மேலுள்ள வரிகளில் வழியும் தத்துவம் எளிதில் புரியும்.

இதே கருத்தை ‘யாரும் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சௌக்கியமே’ என்று வேறு வரிகளிலும் சொல்லக்கூடிய கவிஞரே, ‘வாழ நினைத்தால் வாழலாம்’ என்றும் ஆறுதல் சொல்வார். எல்லாம் கதைகளின் அந்தந்தச் சூழ்நிலைகள் வேண்டிக்கொண்ட வரிகள். கால தேச வர்த்தமானங்களைக் கடந்து அவை எல்லா காலங்களுக்கும் எல்லோருக்குமான வார்த்தைகளாக அமரத்துவம் பெற்றிருப்பதுதான் ஒரு கவியரசனின் சிறப்பு.

கண்ணதாசனின் பெருமையைச் சொல்வது கடல் நீரை கையால் மொண்டு அளப்பதற்கு ஒப்பு. மனம் கனமாக உணரும் வேளைகளில் எல்லாம் நான் அடைக்கலமாகும் ஓரிடம் அவனிடம்.
மேலும்...

நிகழ்த்து கலைகள்: தேவராட்டம் ஒயிலாட்டம்

Posted: Sunday, October 24, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
// http://www.youtube.com/watch?v=QsVJFQEXS2k இது ஒயிலாட்டம் என நினைக்கிறேன். சரியா//

இல்லை. இதுவும் தேவராட்டம் தான். ஒயில்லாட்டம் என்றால் பின்னணியில் பாடல் இருக்கும்.

தேவராட்டத்திற்கும் ஒயிலாட்டத்திற்கும் என்ன வேறுபாடு என்றால் தேவராட்டத்தில் தேவதுந்துபி அல்லது ஏதேனும் தோலிசைக்கருவி இசைக்கப்பட அதன் ரிதத்துக்கு ஏற்ப ஆட்டம் மெதுவாக ஆரம்பித்து உச்சக்கட்டத்தில் வேகம் சூடுபிடிக்க முடிவடையும். இசை மட்டுமே; பாடல் இருக்காது.

ஆனால் ஒயிலாட்டத்தில் பாட்டும் அதற்கு பின்பாட்டும் இருக்கும். ஒயிலாட்டி(இவர் தான் ஆட்டத்திற்கு ஆசிரியர்) பாடும் பாட்டிற்கு ஆட்டக்காரர்கள் பின்பாட்டு பாடிக்கொண்டே முன்னும் பின்னும் சென்று பலவகையில் ஆடுவர். ஒயிலாட்டத்தில் பெரும்பாலும் ராமாயண காதையே பாடலாக பாடப்படும். (ஆனால் இப்போதெல்லாம் சினிமா பாடலை ஒலிக்க விட்டு அதற்குகூட ஆடுகின்றனர்)  கையில் கைக்குட்டையும் காலில் சலங்கையும் அநேகமாக கட்டாயம்.

(இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன் 
தயாரித்து இயக்கி நடித்து ஒயிலாட்டம் என்றே ஒரு படம் கூட வந்ததே. அவருடைய முழுநேர நடிப்பு கேரியருக்கு அதுதான் பிள்ளையார்சுழி)
தேவராட்டம், ஒயிலாட்டம் இரண்டையுமே கற்றுக்கொள்வதும் ஆடுவதும் சுலபம் தான்.  தேவராட்டத்தை ஆரம்பத்தில் கம்பளத்து நாயக்கர் என்னும் சமூகம் மட்டுமே ஆடி வந்ததார்கள் என்று கீற்றில் ஒரு கட்டுரையை வாசித்திருந்தேன். இப்போது அப்படிப்பட்ட வரைமுறை எதுவும் இல்லை. பலரும் ஒரு கிராமியக் கலையாக ஆடுகின்றனர்.

தென்மாவட்டங்களில் குடும்ப நிகழ்ச்சிகளில் கூட இவை ஆடப்படுவதுண்டு - எப்படி இங்கே திருவிழாக்களில் விரலை மடக்கி வாயில் வைத்து விசில் அடித்துக்கொண்டு ‘ஒத்தையடி’ ‘ரெட்டையடி’ என்று மேளக்காரனிடம் கேட்டு வாங்கி ஆடுகிறோமோ அப்படி அங்கே இவை சட்டென்று கூடியிருப்பவர்களால் சேர்ந்து ஆடப்படும். அதுபற்றி தென்மாவட்டத்தை சேர்ந்த என் பழைய சகா ஒருவன் சொல்லக் கேள்வி.

அது எப்படியென்றால், 1997-ல் மதுரை அருகேயுள்ள ஆண்டிப்பட்டி பங்களா என்னும் குக்கிராமத்தில் சிண்டிகேட் வங்கியின் சுயதொழில் பயிற்சிக்காக (RUDSET) சில மாதங்கள் பல மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்களுடன் தங்கியிருந்தேன். அப்போது பெரியகுளத்தை சேர்ந்த ஒருவனும், சோழவந்தானைச் சேர்ந்த ஒருவனும் சேர்ந்து இதனை எங்களுக்கு ஆடிக் காண்பித்ததுடன், சில நிமிடங்கள் மட்டுமே ஆடக்கூடிய நடன அசைவுகளை சொல்லியும் கொடுத்தனர். அதெல்லாம் அப்போது ஒரு fun.

அங்கே நான் இருந்தவரை இருந்த இருப்பும், கிடைத்த அனுபவமும் அலாதியானது. தனியே ஒருநாள் எழுத வேண்டும்.
மேலும்...

திரைக்கதையின் துணிபு, இது நம்ம ஆளு!

Posted: Friday, October 22, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments



‘அம்மாடி இதுதான் காதலா
அட ராமா இது என்ன வேதமோ’ 

பேருந்தில் கேட்டதிலிருந்து இப்பாடல் வாயில் ஒட்டிக் கொண்டு விட்டது. கேட்டதிலிருந்து என்பதை விட பார்த்ததிலிருந்து என்றுச் சொல்லவேண்டும். வழக்கமான பாடாவதி படங்களுக்கு பதிலாக இன்று ‘இது நம்ம ஆளு’ ஓடிக் கொண்டிருந்தது. கண்கள் நிலைகுத்த ரசித்து பார்த்தபடி பயணித்து வந்தேன்.

தமிழின் சிறந்த படங்கள் என்று ஆளுக்கொரு பட்டியல் வைத்திருப்பார்கள். ஆனால் இது நம்ம ஆளு யாருடைய பட்டியலிலும் இருக்காது. உண்மையில் இந்தப் படம் தமிழில் வந்த ஆக்கங்களில் மிக முக்கியமானவைகளில் ஒன்று. இப்படி ஒரு சிக்கலான சப்ஜெக்டை எடுத்துக்கொண்டு ஒரு படம் பண்ணவே பெரிய தைரியம் வேண்டும்.

என்ன சிக்கல்?

ஒரு ஆச்சார திலகமான பிராமண குடும்பத்துப் பெண்ணை தாழ்த்தப்பட்ட இளைஞன் ஒருவன் மணம் புரிந்து, அதன் தொடர்விளைவான நிகழ்ச்சிகளிலின் வாயிலாக வர்ணாசிரம பேதங்களை அக்குடும்பத்தாரின் மனதிலிருந்து விலக்குகிறான். 

நாலு வரியில் எழுதமுடிகிற இதன் கதைச் சுருக்கத்தை சுவாரசியம் குறையாமல் இரண்டரை மணி நேரத்திற்கு சினிமாவா எடுப்பது அவ்வளவு சுலபமா என்ன? அதுவும் கலைப்படமாக இல்லாமல் மாஸ் ஆடியன்ஸை சென்றடையும் ஒரு கமர்சியல் படமாக! பாக்கியராஜின் திரைக்கதை திறமை ஏன் மெச்சப்படுகிறது என்பதற்கான ஆய்வை இந்த ஒரு படத்தின் சம்பவக்கோர்வைகளை பரிசீலிப்பதன் மூலமாக மட்டுமே எட்டிவிட முடியும். 

இப்படத்தை தூக்கி நிறுத்துவது பொருத்தமான பாத்திரத் தேர்வு. ஆச்சார பிராமணன் வேடத்திற்கு சோமையாஜூலுவின் தேஜஸ் போல வேறு யாருக்கும் அமையாது. போலவே நாயகியாக ஷோபனாவின் தேர்வு. அழகும் அறிவும் மிக்க பிராமண பெண்ணை அட்சர சுத்தமாக கண்முன் நிறுத்தியிருப்பார். மிகச் சிறந்த நடிப்பு படத்தில் இவருடையதே. இந்த மாதிரி முக்கிய பாத்திரங்கள் மட்டுமல்லாமல் படத்தில் லௌகீக பிராமண பாத்தித்தில் பாக்கியராஜின் ஆலோசகராக வரும் நபர் உள்பட அனைவரும் கச்சிதமான நடிப்பை வழங்கியிருப்பார்கள். 

இது நம்ம ஆளு படத்தை பாக்கியராஜ் இயக்கியிருந்தாலும் படத்தின் டைட்டிலில் பாலகுமாரன் இயக்கியதாகத்தான் பெயர் வரும். பிராமணீய தாத்பரியங்களை விமர்சிக்கும் ஒரு படத்தை பிராமணரல்லாத பாக்கியராஜ் இயக்குவதன் பின்னால் எழ சாத்தியமுள்ள சர்ச்சைகளை தவிர்க்கவே அந்த ஏற்பாடு. இருந்தும் படம் வெளியான சமயத்தில் கடுமையான எதிர்ப்பை சம்பாதித்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன். மேல் விவரங்களை இதுவரை கடக்கவில்லை. 

இப்படத்தில் கவனிக்க வேண்டிய இன்னொரு அம்சம்: பாக்கியராஜின் இசை. சிறப்பான இசை என்றுச் சொல்லமுடியாது. ஆனால் அந்த படத்திற்கு என்ன தேவையோ அதை கொடுக்கமுடிந்ததே சாதனைதான். குறிப்பாக அதில் வரும் போட்டிப் பாடலில் அடிக்கப்பட்டிருக்கும் லூட்டியை வித்வத்துவ இசையமைப்பாளர் ஒருவரைக் கொண்டு போட்டிருக்க முடியுமா என்பது சந்தேகமே. லூட்டிக்கு மத்தியிலும் அதில் இழையும் வாணிஜெயராமின் குரல் தனித்து ரசிக்க வைப்பது. மற்ற எல்லா பாடல்களும்கூட ஓகே ரகம் தான். 

இப்படத்தின் இசையை பாக்கியராஜூக்காக போட்டுக் கொடுத்தவர் ‘சுந்தர காண்டம்’ படத்திற்கு இசையமைத்து காணாமல் போன தீபக் என்பார்கள். (அதில் வரும் பூங்குருவி பாடடி என் விருப்பப் பாடல்).

படத்தின் கிளைமாக்ஸில் சோமையாஜூலு தன்னை நெருப்பிலிட்டுக் கொள்ள முயலும்போது, அதைத் தடுத்து பாக்கியராஜ் பேசும் வசனங்களை கேட்பதற்குள் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்து விட்டது. 

வர்ண பேதங்களைப்பற்றிய அறிதலோ, அந்த பரப்பின் மீதான தனிப்பட்ட சிந்தனையோ கருத்துக்களோ இல்லாத முதிர்ச்சியற்ற இளமை பருவத்தில் தான் அதை கடைசியாக பார்த்தது. இன்றைக்கு மீண்டும் அதைப் பார்ப்பது வேறு மாதிரியான ஒரு புரிதலை தரும் என்று நம்புகிறேன். காரணம், சதுர்வேதி பிராமணரை சமரச சன்மார்க்கத்தை உணரச் செய்யும் வசனங்கள் காத்திரமாக இருக்கவேண்டிய அதேசமயம் அது சி சென்டர் ஆடியன்ஸுக்கும் புரிவதாக இருக்கவேண்டும். 

எவ்வளவு நுட்பமான வார்த்தைச் சிக்கல்! 

இதை எவற்றைகொண்டு நிரப்பி ஜெயித்தார்கள் என்பதை அருகிப் பார்த்து ரசிக்கும் ஒரு குறுகுறுப்பில் இருக்கிறேன். வீடு சென்றதும் யூடியூபில் தேடிப் பார்க்கவேண்டும். அலுவலகத்தில் வழியில்லை.
மேலும்...

யாகாவாராயினும் நாகாக்க

Posted: Wednesday, October 20, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
நண்பர் பேச பேச எனக்குள் நரம்புகள் முறுக்கேறிக் கொண்டிருந்தன.

மானசீகமாக மனதிற்குள் எத்தனையோவாவது முறையாக அதே சபதத்தை மீண்டும் எடுத்துக் கொண்டிருந்தேன்.

இந்தமுறை கண்டிப்பாக ஜெயித்துக் காட்ட வேண்டும் என்று ஒரு வெறி மனதிற்குள் குடி கொண்டது.

அதே எண்ணத்துடன் தூங்கப் போனவன், அதிகாலை அலாரம் வைத்து எழுந்து விறுவிறுவென தகுந்த உடைகளை உடுத்திக் கொண்டு பள்ளி மைதானம் நோக்கி விரைந்தேன்.

மனதிற்குள் எப்போதோ படித்த உதயமூர்த்தி வந்து ‘தம்பி! உன்னால் முடியும் தம்பி!’ என்று உச்சஸ்தாயில் உரக்கச் சொல்லிக் கொண்டே இருந்தார்’. உந்துதல் கூடி நாடி கூடுதலாக துடிக்கத் தொடங்கியது.

ஒருவழியாக நெற்றி வியர்வை நிலத்தில் சொட்ட அங்கங்கே அல்லும் சில்லும் விட்டுப் போக வெற்றிகரமாக நடந்து முடித்து வீடு வந்தேன்.

உள்ளே நுழையும்போதே கமகம சாம்பார் மணம். இந்த அம்மாவின் கைப்பக்குவம் இப்போது பார்த்துதானா இவளுக்கு கைவர வேண்டும் என்று கருவிக் கொண்டே குளித்து வந்தேன்.

அதற்குள் சாப்பாட்டு மேசையில் நான்கு தோசைகள் நன்றாக எண்ணை ஊற்றி சுடப்பட்டு முறுவலாக காத்திருந்தன.

‘இதெல்லாம் இனி நான் சாப்பிடப் போறதில்லை. எண்ணை தடவாம ரெண்டே இட்லி போதும்’

‘க்ஹூம்.. சுட்டத என்னா பண்றதாம்..’ என்று மென்மையாக தொடங்கிய மண்டகப்படி உச்சிகால பூஜையை அடைவதற்குள் அத்தனை தோசையும் என் வாயினுள் அடைக்கலம் ஆகியிருந்தன.

ஆரம்பமே ஜெர்க் அடிக்குதே என்று நினைத்தபடி அலுவலகம் சென்றடைந்தவனை வரவேற்றன ஆம வடைகள்.

பஜ்ஜிக்கு அப்புறம் ஒரு வடையில் ஒரு அவுன்ஸ் அளவுக்கு எண்ணையை பிழிந்தெடுக்க முடிந்ததை இன்றே கண்டேன். ஏதோ இலாபம் என்று ஒரு ஏமாளி க்ளையண்ட் வாங்கி கொடுத்திருக்கிறார்.

‘ஏன் சார்.. வாங்கித்தர வேற எதுவும் கிடைக்கலையா’... மனதிற்குள்தான் கேட்டுக்கொள்ள முடிந்தது. படியளக்கும் உபதெய்வம் அல்லவா!

இரவு நரம்புகளை முறுக்கேற வைத்த நண்பரிடம் மனதிற்குள் மன்னாப்பு கேட்டுக்கொண்டு சாம்பிளுக்கு இரண்டை மட்டும் லபக்கினேன்.

‘என்னா சார் இப்படி பல்லுபடாம சாப்பிட்டுக்கிட்டு.. நீங்கதான் எதுவும் வாங்கி தரதில்ல, நாங்க வாங்கி தரதாச்சும் தாராளமா சாப்பிடுங்க’ என்றபடி முரட்டுத்தனமாக தட்டை என் பக்கம் தள்ளியவர் எதிரமர்ந்து கொண்டு,

‘அப்புறம் அந்த கோல் இண்டியா ஐபிஓ வருதில்லைங்களா..’ என்று ஆக்ஸாபிளேடை கழுத்தி வைக்கத் தொடங்கினார்.

வடைகளும் வழக்கமான பாடாவதி டீயும் உள்ளே சென்று வயிற்றின் அனைத்து டிரைனேஜ்களையும் அடைத்துக் கொண்டு விட்டதில் பசி என்பது ருசிக்கும் இல்லை. மணி 3.30 ஆனது.

இன்னொரு க்ளையண்ட் ஒருவருடன் தவிர்க்க முடியாமல் இரண்டு விதமான சொதியுடன் ஒரு குஸ்கா, ஐஸ்கிரீம் - பிஸினஸுக்காக கம்பெனி கொடுக்க என்று ஸ்வாகா ஆனது.

‘இத்தோடு எல்லாத்தையும் நிறுத்திக்குவோம்’ என்று மனதிற்குள் முந்தைய தின சபதங்களையும் மீண்டும் உதயமூர்த்தியையும் ஒலிக்க விட்டபடி வீடு வந்து சேர்ந்தவனை வருக வருகவென்றது மீன் மணம்!

நன்கு மொறுவலாக பொறிந்து வரக்கூடிய முரல் மீனை ஃப்ரை செய்து வைத்திருந்தார் சகதர்மினி :(

நான் விரும்பி வாடியபோதெல்லாம் என் வாயை கூடாமல் போன இந்த முரல், தேகம் கூடி ஆடி அடங்கி அகஸ்தமாக வீரம் வந்து வாயை கட்ட பார்க்கும் வேளையில் தேடி வந்து நாசியை தீண்டும் திமிரென்ன என்று வந்த கோபத்தில்......... அதை அப்படியே வாயில் போட்டு சாப்பிட்டு விட்டு மொபைலை ஸ்விட்ச் ஆஃப் செய்து விட்டு அமர்ந்து கொண்டேன்.

இல்லையென்றால் நேற்று ஆயிரம் அறிவுரை வழங்கிய அந்த அபூர்வ டயடீசியன் நண்பர் அழைத்து நான் இன்று என் சபதத்தை கட்டிக் காத்ததன் வீர பிரதாபங்களை ஆவலுடன் கேட்பார். நல்ல நண்பர் என்பதால் நாளை சமாளித்துக் கொள்ளலாம்.

ஆ! இதென்ன, குழந்தை கையில் காட்பரீஸுடன் திரிகிறாள்.

‘ஏ பாப்பா.. நேத்து நைட்டுதானே இதெல்லாம் சாப்பிடக் கூடாதுன்னு சொன்னேன். ஒண்ண சாப்பிடப்படாதுன்னா படாதுதான்.. you should stick to your words ma.. கொண்டா இப்படி’

லபக் !!!
மேலும்...

பயத்தால் விழையும் ஒழுக்கம்

Posted: Monday, October 18, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
எரியும் வீடு 
இந்தியில்ராஜ்கமல் சௌத்ரி,
தமிழில்:சொ. பிரபாகரன்
(http://www.nisaptham.com/2005/05/blog-post.html)

என்னுடைய இன்றைய நாளை சிறப்பு செய்தது இந்த சிறுகதை. it made my day என்பார்களே அப்படி.

எயிட்ஸ் என்னும் பெருநோய் பற்றிய விழிப்புணர்வு இல்லாவிடில் இதுபோன்ற தேவடியாகுடிகளில் நாம் தொலைத்திருக்கக்கூடிய பணம் எவ்வளவு இருக்கும்? இப்போது எப்போதாவது மோதிக்கொள்ளும் கண்ணாடி கோப்பைகளின் ‘க்ளிங்’ சத்தத்தின் பின்னால் மறைந்துள்ள போதையில் மீது கொண்டிருக்கும் பிரேமை போல, சில பேதைகளின் மீது பிரேமை கொண்டு நாடி கிடந்திருப்போம். பீர் பாட்டில்களில் என் பிராண்ட் என்பதுபோல அதிலும் இருந்திருக்கும். ‘நோய் நாடி நோய் முதல் நாடி’ பயத்தால் வாடி அநேகமாக மைனர் வாழ்க்கையில் தேவடியாகுடி சகவாசம் கிட்டத்தட்ட இல்லாமலே போய்விட்டது.

இது, நமது இன்றைய வாழ்க்கைமுறை பற்றிய ஒரு சிறு பரிசீலனை மட்டுமே.

அகநானூறு, பரிபாடல் போன்ற சங்க இலக்கியங்களில் காணப்படும் காட்சிகளில் ஆண்கள் பரத்தையரையும் பொதுமகளிரையும் நாடிச் செல்வது ஒரு பொதுவான சமூக வழக்கமாக இருந்திருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் கணிகையர், பரத்தையர், வரைவின் மகளிர் போன்ற சொல்லாடல்கள் இல்லையென்றால் அகநானூறில் பாதி பாடல்களே இல்லை. பிற்காலத்திலும் புறம்பான ஒரு சமூகமாக ஏற்படுத்தப்பட்ட தேவரடியாள்களும், பொட்டு கட்டி விடப்பட்ட தாசிகளும் சமூகத்தின் ஓர் அங்கமாக சமூக கோட்பாடுகளுக்கு உட்பட்டு வாழ்ந்து வந்திருக்கின்றனர். (தஞ்சை பெரிய கோவிலில் மட்டும் 400 தேவரடியார்கள் இருந்திருப்பதாக கல்வெட்டுகள் கூறுகின்றன. It means it was normal and office then). அப்போதெல்லாம் ஆண்களின் தனிமனித ஒழுக்கங்களை வரையறுத்து வந்தது சுயகட்டுப்பாடுகள் தானே தவிர பாலியல் நோய்கள் அல்ல.

ஆனால் ஓரிரு நூற்றாண்டுகளாக கதையே வேறு. STD, AIDS போன்ற நோய்களே தனிமனித ஒழுக்கத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் காரணிகளாக உள்ளன. புள்ளிராஜா, தில்லு துரைகளின் பயமுறுத்தல்கள் இல்லாவிட்டால், எந்த பெண்ணிடம் போனாலும் எந்த நோயும் வராது என்றால் இங்கே ஏகபத்தினி விரதனாக இருப்போர் எத்தனை பேர் தேறுவார்கள். நிச்சயமாக நான் தேற மாட்டேன். நோய்கள் பற்றிய பயமே என்னுடைய இளமையில் என்னை பரத்தையரை நாடாமல் வைத்திருந்தது.

நமது ஜென்டில்மேன் முகமூடியை கழற்றி வைத்துவிட்டு பேச ஆரம்பித்தால் ஆழ்மனதின் ஆசை - நிராசைகள், கையறுநிலைகள் பற்றி நிறைய உரையாட முடியும். ஆனால் அந்த முகமூடியை கழற்றுவது எல்லோருக்கும் அவ்வளவு சுலபமல்ல.
மேலும்...

உடற்பயிற்‘சீ’

Posted: Friday, October 15, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
மேற்கத்திய நாகரிகத்திடமிருந்து எதைக் கற்றுக்கொண்டாலும் தினசரி உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை மட்டும் கற்க மறுக்கிறோம். வேலை செய்யும் கம்பெனியிலேயே காசு கொடுத்து போகச் சொன்னாலும் வாய் காரணத்தை முணுமுணுக்கிறதே தவிர, உடம்பு வளைவதில்லை. நம் பிள்ளைகளுக்காவது அந்தப் பழக்கம் வாய்ப்பதாக.

மேலும், நமக்கு பாடிபில்டிங்கிற்கும் உடற்பயிற்சிக்கும் வித்தியாசம் தெரிவதில்லை. ஜிம்முக்கு போவது உடம்பை தேத்த என்றுதானே பேசிக் கொண்டிருக்கிறோம். 

இதெல்லாம் பள்ளிகளில் இருந்து பழக்கமாக வேண்டும். அங்கே சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். மாணவர்கள் பிடி பீரியடில் கல் பொறுக்கிக் கொண்டும் செடி வெட்டிக் கொண்டும் இருக்கும் வரை இதன்பேரில் ஒரு முன்னேற்றமும் வராது. 

இப்படி உடற்பயிற்சியை பற்றி வியாக்யானம் பண்ணி விட்டு நான் என்ன செய்யப்போகிறேன்? 12 மணி வரை கொட்ட கொட்ட விழித்திருந்து விட்டு 7 மணி நேர தூக்க கணக்கிற்கு 7 மணி வரை கவுந்தடித்து தூங்குவேன். இப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறது பிழைப்பு. டிபிகல் இந்தியன் அல்லவா!
மேலும்...

சிற்சில குறிப்புகள் (7)

Posted: Tuesday, October 12, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
துரோகி என்று ஒரு படத்தின் டிவிடியை அண்டை வீட்டுக்காரர் வலிய வந்து பார்க்க கொடுத்து சென்றிருக்கிறார். இப்படி இவர் கொடுத்தே அநேகமாக அண்மை காலத்தில் வந்த எல்லா படங்களையும் பார்க்க வைத்துவிட்டார். இதன் பின்னாலுள்ளது நல்நோக்கமா அல்லது யாம் பெற்ற இன்ப உள்நோக்கமா என்பது பற்றி ஒரு சம்சயம்!

*

ஹோமோசெக்ஸ், ஓரல்செக்ஸ் மாதிரி அதென்ன பெயர் வைத்திருக்கிறான் சென்செக்ஸ் என்று — என்று இன்று ஒருவர் சீரியஸாக கேட்டார். ரொம்ப 'சிரி'யஸ் ஆகிவிட்டேன். :D

*

தம் இஷ்டப்படி நள்ளிரவில் தொழில்முறை பணிகளை வைத்துக்கொள்ள முடிபவர்கள் பூர்வஜென்ம புண்ணியாத்மாக்கள்! ஓசைகளற்ற அமைதியும் யாருமற்ற தனிமையும் பிக்கல்களற்ற கவனகுவிப்பும், செய்யும் வேலை மீதான ஆர்வத்தை தக்கவைக்கின்றன. இதே பகற்பொழுதாயின் எல்லாம் பாழாய் போகும்!

*

காதல் அணுக்கள் பாடலை விஸூவலாக பார்த்ததில் இருந்து மிகவும் பிடித்து போய்விட்டது. அடிக்கடி பார்க்கிறேன். இது ரஹ்மான் எஃப்க்டா? ஷங்கர் எஃப்க்டா?

இசை என்பது செவிநுகர் ரசனை என்பதை சினிமா பாடல்கள் சில சமயம் பொய்யாக்கி விடுகின்றன.

*

//அன்பார்ந்த தமிழீழ மக்களே, அன்பார்ந்த தமிழ்பேசும் மக்களே//
இரண்டுக்கும் இடையே உள்ள அர்த்த வேறுபாட்டில்தான் ஈழத்துயருக்கான விடை எங்கோ ஒளிந்து கொண்டிருந்தது. இன்று அதுவும் இல்லை. :(

http://viduthalaipulikal.net/index.php?option=com_content&view=article&id=57:tamileela-women-day-2010&catid=28:report&Itemid=2

*

இப்போதெல்லாம் டெண்டுல்கர் ஏதாவது ரெக்கார்டு செய்தால், அதை மௌனமாக மட்டுமே அனுசரிக்க முடிகிறது. அவர் ஆர்பரிப்பான பாராட்டுதல்களின் எல்லைகளை அநேகமாக கடந்து விட்டார்.

*

ஏதேது செய்திடுமோ பாவி விதி ஏதேது செய்திடுமோ
ஏதேது செய்து எனை மோசஞ் செய்யுமோ
மாதவஞ் செய்து மனுவாகச் செய்யுமோ (ஏதேது)
சற்று நல்லறிவற்று மாடாகச் செய்யுமோ
சாகாவரம் பெற்று காடேகச் செய்யுமோ
கற்றறி மூடர்கட் கீடாகச் செய்யுமோ
கற்பின் குணங்குடி வீடாகச் செய்யுமோ (ஏதேது)

- குணங்குடியார்

http://nanjilnadan.wordpress.com/2010/07/24/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D10%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF/
மேலும்...