ஊர்ப் புலிகளும் ஒரிஜினல் புலிகளும்

Posted: Monday, November 29, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments




இரண்டு நாள்கள் முன்பு சன் டிவியின் நிஜம் நிகழ்ச்சியில் சுந்தரவன காடுகளை ஒட்டி வாழும் கிராம மக்களின் வாழக்கையைப் பற்றி காட்டிக் கொண்டிருந்தார்கள். சுந்தரவனக் காடுகளை பற்றி நாம் பாட புத்தகங்களில் படித்திருக்கிறோம். அவை மாங்குரோவ் மரங்களை அதிகளவில் கொண்டிருக்கும் சதுப்பு நிலக் காடுகள். கங்கை நதியின் கழிமுகப்பகுதியில் அமைந்துள்ளன. 

இந்த காடுகளில்தான் அழிந்து வரும் இனமான வங்காளப் புலிகள் (Royal Bengal Tigers) வசிக்கின்றன. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை ஐம்பதுக்கும் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே இருந்த அவைகள், சுந்தரவன காடுகள் புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்ட பிறகு (Sundarban National Park)இருநூறு வரை உயர்ந்துள்ளன. இது ஓரளவு நல்ல எண்ணிக்கை என்றே சொல்லலாம். 

புலிகளின் வாழ்க்கைமுறை தனித்துவமானது. அது தனக்கென வகுத்துக்கொண்ட சுயஎல்லைகளை கொண்டது. ஒரு காட்டில் புலிகளின் எண்ணிக்கை அதிமாக இருந்தால் அதன் பல்லுயிரியம் (bio-ecology) இன்னும் பாழ்படாமல் ஆரோக்கியமாக உள்ளது என்று வேறெந்த ஆய்வுகளையும் மேற்கொள்ளும் முன்பே கூறிவிட முடியும். எப்படி என்பது தனியாக விரிவாக பேச வேண்டிய விசயம். சுவாரஸ்யமானதும் கூட. இங்கே சுந்தரவனக் காடுகளை ஒட்டி வாழும் மக்களைப்பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதால் அது வேறொரு நாள். 

காடுகளை ஒட்டி வாழும் மக்களுக்கு அக்காடுகளுக்கு உள்ளே சென்று விறகு, சுள்ளிகள் பொறுக்குவது, தேனெடுப்பது ஆகியவை முக்கிய தொழிலாக இருக்கும். குறிப்பாக தேனெடுப்பது நல்ல வருமானம் தரக்கூடியது. ஆனால் இம்மாதிரி புலிகள் வசிக்கும் காடுகளில் தேனெடுப்பது மிகவும் ஆபத்தான காரியம். ஏன் என்று சொல்ல வேண்டியதில்லை. இருந்தும் கூட்டமாக பலர் சேர்ந்து தீப்பந்தங்கள் கொளுத்திக்கொண்டு புலிகளின் கால் தடங்களை அவதானித்தபடி முன்னேறிச் செல்கிறார்கள். 

கூட்டமாக ஆட்கள் வந்தால் புலிகள் உடனடியாக தாக்காது. பதுங்கி மறைந்திருக்கும். ஏதாவது சந்தர்ப்பத்தில் கூட்டத்திலிருந்து யாராவது தனித்து நடமாடினால் மேலே பாய்ந்து விடும். பாய்வதையும் நாம் சட்டென்று உணர்ந்து விலகி ஓடி விட முடியாது. ஏனென்றால் புலிகள் எப்போதும் பின்னாலிருந்துதான் தாக்கும். 

இதனால் தேனெடுக்கச் செல்பவர்கள் என்ன செய்தார்கள் என்றால், பின்னாலும் முகம் இருக்கும்படி முகமூடி ஒன்றை அணிய ஆரம்பித்தார்கள். அதாவது முன்பக்கம் நிஜமுகம் இருக்கும். பின்னால் பார்த்தால் முகம் போன்ற முகமூடி இருக்கும். இதனால் புலிகள் குழம்பி போயின. சில காலங்களுக்கு புலிகளின் தாக்குதல் முற்றிலுமாக குறைந்திருந்தது. ஆனால் புத்திசாலி புலிகள் வெகுசீக்கிரமே அந்த தந்திரத்தை புரிந்துகொண்டு தாக்க ஆரம்பித்தன. 

புலிகளிடம் தரையில் உள்ள ஆபத்தை விட அவைகளிடம் மரத்திலோ, தண்ணீரிலோ மாட்டிக் கொண்டால் ஏற்படும் ஆபத்து அதிகம். புலிகள் மரம் ஏறும் என்பது நமக்குத் தெரியும். ஆனால் தண்ணீரிலும் அவை வேகமாக நீந்தக்கூடியன.  இதனால் அலையாத்தி காடுகளினூடே படகுகளில் செல்வோர் அடிக்கடி ஆபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். படகுகளை நோக்கி அவை நீந்தி வந்து தாக்குகின்றன. பசித்திருக்கும் புலியின் ஆவேச தாக்குதலின் முன்பு மனிதனின் ஜீவ மரணப் போராட்டம் மிகவும் பலஹீனமானது. 

இப்படி காடுகளிலும், நீரிலும் புலியடித்து இறந்தவர்களின் எண்ணிக்கை ஒருபுறம் என்றால், ஊருக்குள் புகுந்து தாக்கும் அவைகளிடம் மாட்டிக்கொண்டு இறந்தோர், அங்கமிழந்தோர் வீட்டுக்கு ஒருவராவது இருப்பார்கள் என்றார் கிராமவாசி ஒருவர். பேசிக்கொண்டே பனியனை கழற்றி அல்லையை காண்பித்தார். பாதியை காணவில்லை. பின்னாலிருந்து தாக்கி அல்லையில் கடித்த புலியை கையில் இருந்த கத்தியால் முகத்தில் குத்தவும் அது விட்டு விட்டு ஓடி விட்டது என்றார். கையில் அப்போது கத்தி இருந்ததால் மட்டுமல்ல, இதயம் உறுதியாக இருந்ததினாலும் தான் தப்பித்திருக்கிறார். புலி தாக்கி உறுமும்போதே பலருக்கும் முதுகு தண்டு சில்லிட்டு பயத்தில் உயிர் போய்விடும். 

“புலிகளின் முகம் பார்க்கத்தான் அழகாக இருக்கிறது. ஆனால் அவைகள் இரையை(மனிதர்களை) தாக்கும்போது அது மிக கொடூரமாக, மிகுந்த அச்சமூட்டுவதாக மாறி குலை நடுங்கச் செய்யும். அதைக் கண்ட அதிர்ச்சியிலேயே நிலைகுலைந்து விடுவோம். அந்த சில நொடிகள் போதும் - எல்லாம் முடிந்துவிடும்” என்றார் ஒரு கிராமவாசி. 

புலிகள் தங்களை தாக்கினாலும் ஊர் மக்கள் முடிந்தவரை அவற்றின் உயிருக்கு ஊறு செய்வதில்லை. வளைத்து பிடித்து மீண்டும் காட்டுக்குள் கொண்டு விடவே செய்கின்றனர். சரணாலய பகுதி என்பதால் கொல்வது குற்றம் என கருதலாம். அல்லது அது ஒரு மரபாகவும் இருக்கலாம். எதுவாகிலும் அவர்கள் ஆபத்துடனேயே வாழப் பழகிக் கொண்டு விட்டனர். 


இதுவரை நாம் பேசியது வனப்புலிகள் பற்றி. அவற்றினுடைய படைப்பின் இயல்பே இரையை அடித்து சாப்பிடுவதுதான். அவைகள் வாழும் பகுதியில் சென்று வாழ்வதும் நடமாடுவதும் அவைகளின் தவறல்ல; நம் தவறே. இதில் புலிகளை குற்றம் சொல்ல ஒன்றுமில்லை.

ஆனால் ஊருக்குள் சிலப் புலிகள் இருக்கின்றன. அவற்றின் இயல்பும் வேட்டையாடி உண்பதுதான். சில சமயம் வலுத்தவனுக்கு முதுகு சொறிந்தும், பல சமயங்களில் இளைத்தவனின் வயிற்றில் அடித்தும், எல்லா சமயங்களிலும் முகம் பார்க்க புன்னகை செய்து; ஆனால் முதுகுக்கு பின்னால் புறம் பேசியும்(character assassination) அவைகள் பிழைக்கின்றன. வனப்புலிகள் போலவே இவைகளும் பதுங்கி பின்னாலிருந்துதான் தாக்கும். அப்போது அவற்றின் நிஜமுகம் வெளிப்பட்டு, கோரமாக விகாரமடைந்து மேலும் மேலும் அஷ்டகோணலாவதை மனக்கண்ணில் காணமுடியும். மாறாக கண்ணை திறந்து பார்த்தால் அதன் மனிதமுகம் புன்னகைத்தபடி அப்பாவியென தோற்றம் காட்டும்.

அப்புலிகளின் கால்தடத்தை நாமும் அறிந்து நடந்துகொள்ள வேண்டுமானால் நாமும் அப்புலிகளின் இயல்பில் சிலவற்றை அறிந்து வைத்திருக்க வேண்டும். அதாவது களவும் கற்று மற என்னும் கணக்கில். கற்று மறந்து விடாமல் நினைவில் வைத்துக் கொண்டிருக்கவேண்டும். மேலும், அவற்றின் இயல்பை வெறும் உடல்மொழி மூலம் மட்டும் அறிந்துகொள்வது சுலபமல்ல. அவற்றின் நடத்தை மொழியை கூர்ந்து கவனித்து வர வேண்டும். 

அதற்காக மனித முகத்துடன் திரியும் எல்லோரையும் உஷாராக கவனித்து வருவது சாத்தியமா என்று கேட்கலாம். அம்மாதிரி அம்மாஞ்சிகளுக்கு இவ்வுலகத்தில் எள்ளளவும் இடமில்லை. அதையும் மீறி வாழ்பவர்கள் தாம் பிறவிப் பெருங்கடலை நீந்தாமல் நீந்தி தத்தளித்துக்கொண்டு இருக்கின்றனர். அது முடியாதவர்கள் பேசாமல் வனாந்திரப்பகுதியில் வசிக்கச் சென்று விடலாம். அங்கே வசிக்கும் வனப்புலிகள் குறைந்தபட்சம் நேர்மையானவை. பசித்தால் மட்டுமே இரை தேடும். அல்லது தன்வழியில் குறுக்கிட்டால் மட்டுமே தாக்கும்.
மேலும்...

நிஷ்காமிய கர்மம் - ஒரு தர்க்கம்

Posted: Friday, November 26, 2010 | Posted by no-nononsense | Labels: , 0 comments
வாலி என்றதும் அவர் இந்தவார விகடனில் எழுதியுள்ள தொடர் ஞாபகம் வருகிறது. கீதை வலியுறுத்தும், கருப்பு சட்டைக்காரர்கள் கண்டனம் செய்யும் நிஷ்காமிய கர்மத்தைப்பற்றி உயர்வுநவிற்சியாக எழுதி மகிழ்ந்திருக்கிறார். துட்டுக்கு பாட்டு என்பதை வெளிப்படையாக அறிவித்துக் கொண்டு செய்யும் அவரளவில் அதில் பிரச்னையில்லை. அதை குறிப்பிட்ட சாதியினரின் மீது ஏவி விடும்போதுதான் பிரச்னை உண்டாகிறது. உண்டாகி பல பழம் பழக்கங்கள் துண்டானதும் இப்படித்தான்.

ஒரு சில வருடங்கள் முன்பு ரஜினி ரசிகர்களுடன் ஒரு சந்திப்பு நிகழ்த்தினார். அந்த மேடையில் வைக்கப்பட்டிருந்த தட்டி பலரின் கவனத்தை ஈர்த்தது. காரணம் அதிலிருந்த, ‘கடமையை செய்; பலனை எதிர்பார்’ என்னும் வாசகம். கடமையை செய்; பலனை எதிர்பார்க்காதே என்னும் கீதை வரிகளுக்கு மாறான பொருளில் அமைந்த அது பின்னர் இந்துத்துவ கும்பல்களிடம் விமர்சனத்தையும் சம்பாதித்தது. இங்கேயும் இரண்டு தத்துவக்கோளாறுகளே காரணம். அந்த நிஷ்காமிய கர்மம், சுதர்மம் பற்றிய என் சில கருத்துகளை ஏற்கெனவே பதிவு செய்திருக்கிறேன்.
அதை விரித்து இன்னும் பேச தோன்றுகிறது.

ஆனால் இதுபோன்ற தத்துவவிசார தர்க்கமெல்லாம் தவறியும் காலை வைத்துவிட்டால் உள்ளிழுத்துக் கொள்ளும் பெரும் சுழல். உள்ளே உள்ளதெல்லாம் உண்மையென நம்பச் சொல்லும் வெறும் நிழல். உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளாக கொள்ள மட்டுமே நேரமுள்ள ஒரு நேரத்தில் உள்ளபடியே இயலாது. தொடரும் மனநிலைக்கு அது என்றுமே கூட இயலாமல் போகலாம். Who cares? :-) அவரவர் கர்மம்; அவரவர் தர்மம்.

ததாஸ்து!

-0-

எதிர்வினை:

நித்திய + காமிய + கர்ம + அனுஷ்டானம் = ===> " நிஷ்காமிய கர்மம் "
எப்பபொழுதும் + செய்யக்கூடிய + தொழிலில் + கடைபிடிப்பது

அவரவர் செய்யகூடிய தொழிலில்
நீதி , நேர்மையுடன் தொழிலை தர்மம் பிசகாமல் செய்யவேண்டும்
அதுவே நிஷ்காமிய கர்மம் ஆகும்
ஒருவர் அவருடைய செயலில் , முழு மனதோடு , ஈடுபாட்டுடன் , அர்ப்பணிப்பு , மற்றும் நீதி, நேர்மை , தர்மத்துடன் செய்யவேண்டும் என்பதே இதன் கருத்து

என்னை பெறுத்தவரை ,
இங்கு ஜாதி , மதம் இவற்ற்றை பற்றி கவலை கொள்ள தேவை இல்லை ,

சொல்லப்படும் கருத்தே முக்கியம்

வாலி எந்த மதத்தை சொல்கிறார், உயர்வாக குறிபிடுகிறார் , ஏவி விடுகிறார் என்பதை பற்றி
நாம் எடுத்துக்கொள்ள வேண்டாம்

இருத்த போதிலும் வாலி, ரகுமானை என்னய்யா பாடல் வரிகளில் கூட
(தெய்வம் vs தேவதை = நியூ படத்தில் வரும் பட்டு )
என்ன என்பதனையும் , கோபித்து கொண்டதை பற்றியும் குறிபிட்டுள்ளார்

கவிஞர் வாலி,
பல நபர்களை "நிஷ்காமிய கர்மம்" இக்கு எடுத்துகாட்டாக குறிபிட்டாலும்
அதே துறையில் இளையராஜா , ஏசுதாஸ் இவர்களை குறிபிடாமல் விட்டது
என்னக்கு பெரிய ஏமாற்றம்மே

பதில்: அக்கால அனுஷ்டான வைதீகம் முதல் இக்கால அப்டேட்டட் கார்ப்போரேட் வைதீகம் வரை இவ்வாறுதான் நிஷ்காமிய கர்மத்திற்கு பதம் பிரித்து அருஞ்சொற்பொருள் கூறி அதை அப்படியே சிரமேற்கொண்டு வாழ்வில் கடைபிடிக்க வலியுறுத்துகின்றன. அதன் லிடரல் மீனிங் என்னவோ பலரும் மேலோட்டமாக கொண்டிருக்கும் அதே ‘பலனை பற்றி கவலைப்படாமல் கடமையை செய்’ புரிதல்தான். கேட்கவும் கடைபிடிக்கவும் நன்றாக இருக்கும் இது, இக்காலத்தில் சௌகரியமாக, சாய்ந்து அமர்ந்து கொண்டு, சாயா சிப்பியபடி கணினியில் கண் பதித்து வேலை செய்பவர்களுக்காக உபதேசிக்கப்பட்டது அல்ல. சொல்லப் போனால், இவ்வாறான மேலோட்டமான நேரடி அர்த்தங்கள் தரும் புரிதல்களை விட்டு விட்டு பார்த்தால் இந்த நூற்றாண்டுக்கும் இந்த வாசகங்களுக்குமே சம்மந்தமில்லை. இதற்கான வரலாறு வேத காலத்திற்கும் பிந்தைய உபநிடதங்களுக்கு சுலோகம் இயற்றப்பட்ட காலத்தில் இருக்கிறது.

அக்காலத்தில் ஏன் அதற்கான அவசியம் ஏற்பட்டது என்பதற்கு பதில் வைதீகம் வேகமாக பரவ ஆரம்பித்ததிலும், பழங்குடியினரின் மத மாற்றத்திலும், அதற்கு அவசியமான எளிமையான புரிதல்களுக்கு இணக்கமான ஓர் உபதேசம் தேவைப்பட்ட காரணத்திலும் இருக்கிறது. அந்த வெற்றிடத்தை நிரப்ப உருவானதே கீதை. கீதையின் வரலாறு பகவானின் அருள்வாக்கில் இருக்கிறது என்று முழுமையான நம்பிக்கை கொண்டிருப்பவர்களுக்கு வரலாற்று நோக்கில் முன்வைக்கப்படும் ஆய்வு முடிவுகள் நம்ப கடினமாக இருக்கும். ஆனால் அது மட்டுமே தர்க்க ரீதியான படிநிலைகளுக்கு ஆதாரமான ஒரே அம்சம். மற்றவையெல்லாம் வெறும் நம்பிக்கை என்னும் ஒற்றை பரிமாண புலனறிவை மட்டுமே ஆதாரமாக கொண்ட கருத்தாக்கங்கள்.

நிஷ்காமிய கர்மம் மற்றும் உனக்கு விதிக்கப்பட்ட வேலையை நீயே செய்ய கடவாய் என்னும் வர்ணாசிரம சுவதர்மம் ஆகிய இரண்டும் வைதீகம் தன்னுடைய மேலாட்சியை நிலைப்படுத்திக் கொள்ள கையாண்ட சூத்திரங்கள். இது யாருக்கு விதிக்கப்பட்டது; யாருக்கு பலனளித்தது என்பதெல்லாம் அக்காலத்தில் நீ சூத்திரனாகவோ, பஞ்சமனாகவோ பிறந்திருந்தால் அனுபவத்தில் கண்டிருப்பாய். இன்று அதை பிரத்திடய்சமாக உணர்ந்து கருத்துரைப்பது தன் கருத்தியல் நிலையை வெறும் நம்பிக்கையின் மீது மட்டும் கட்டமைத்துக் கொண்டிருந்தால் சாத்தியமில்லை.

இந்த பரஸ்பர விளக்கங்கள் விவாதமாக வடிவெடுத்தால் அது மேலதிகமாக கீதையையே மையம் கொள்ளும். காரணம் இந்த உபதேசங்களின் மூலம் கீதை. ஆனால், 1) கீதையை நாம் எந்தளவு புரிந்து கொண்டிருக்கிறோம், 2) கீதை இந்திய வாழ்வியலில் கலந்தது எப்போதிருந்து, 3) பரவலாக கீதை என்னும் ஒரு நூல் அறியப்பட்டது எந்த நூற்றாண்டு முதல் 4) கீதைக்கு முதலில் வியாக்கியானம் எழுதப்பட்டது யாரால் 5) அவர் சார்ந்திருந்த சமயம் அல்லது அப்போது நிலவிய சமய சூழல் என்ன .. என்பன போன்று கிளைத்துச் செல்லும் கேள்விகளுக்கு விடை காணாமல், இன்று சலூன் கடைகளிலும், செல்போன் மெஸேஜ்களிலும் படிக்க கிடைக்கும் “எதை கொண்டு வந்தாய் அதை கொண்டு போக” என்னும் — முன்பு சொன்ன அந்த மேலோட்டமான லிடரல் மீனிங் — கீதாசாரங்களில் மட்டும் தேடிக் கொண்டிருந்தால் புரிந்து கொள்ள முடியாது.

ஆக, நாம் நிஷ்காமிய கர்மத்திற்கும் சுவதர்மத்திற்கும் மேலோட்டமான அர்த்தத்தை மட்டும் வைத்து அதன் உட்பொருளை, அது வரலாற்றில் ஏற்படுத்திய மேலாதிக்கத்தையும் வடுக்களையும் உணர்ந்து கொள்ள முடியாது என்பதே என் வாதம். இதில் வாலிக்கும் அவர் எழுதிய நாலு வரி துணுக்குகளுக்கும் சம்மந்தமில்லை.

கீதையின் இவ்விரண்டு அதிகம் விதந்தோதப்படும், அதேசமயம் விமர்சிக்கப்படும் சாரங்களையும் கடுமையாக விமர்சித்தவர், விவேகானந்தர்! விசாரங்களுக்கு பொதுவில் வேதாந்திகளால் வழங்கப்படும் தேன் தடவிய விளக்கங்களை விலக்கி உள்சென்று வரலாற்றின் ஏடுகளில் படிந்திருக்கும் உள்ளார்ந்த அரசியல் குறித்தும் ஓரளவு சிந்திந்த ஆன்மிகவாதி அவர்.

பல நபர்களை "நிஷ்காமிய கர்மம்" இக்கு எடுத்துகாட்டாக குறிபிட்டாலும்அதே துறையில் இளையராஜா , ஏசுதாஸ் இவர்களை குறிபிடாமல் விட்டது என்னக்கு பெரிய ஏமாற்றம்மே


இளையராஜா நிஷ்காமிய கர்மத்தின் வரையறைக்குள் வரமாட்டார். ஒரு வாதத்திற்காக அது உயர்வான தர்மம் என்று வைத்துக் கொண்டால், அந்த தகுதி நிலையில் இளையராஜா இல்லை. வாலி போல செய்யும் தொழிலில் தன் விருப்பு வெறுப்புகளை வெளியே நிறுத்தி ஈடுபடக் கூடியவர் அல்ல அவர்.

உதாரணத்திற்கு விகடனில் வாலி சொல்லியுள்ளதை போல: தான் ஒரு ஆத்திகராக இருப்பினும் சினிமாவுக்காக பாடல் எழுத அமரும்போது அங்கே தனக்கு பணிக்கப்பட்ட சூழ்நிலைக்கு தாள்பணிந்து ‘கடவுள் இல்லை, இல்லவே இல்லை’ என்று பாடல் எழுதினார். அந்த உயர்நிலை கர்மம் இளையராஜாவிடம் இல்லை என்பது அவரை பெரியார் படத்திற்கு ஒப்பந்த செய்ய அணுகிய போது வெளிப்பட்டது. கடவுள் இல்லை என்று சொன்னவரின் படத்திற்கு நான் இசையமைக்க மாட்டேன் என்று மறுத்து விட்டார்.

ஜேசுதாஸும் சற்று பிடிவாதக்காரர்தான் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதனால் அனுபவஸ்தரான வாலி அறிந்தே இருவரையும் சொல்லாமல் விட்டிருக்கலாம் என்றுதான் நான் நினைக்கிறேன்.
மேலும்...

வானும் மண்ணும்

Posted: | Posted by no-nononsense | Labels: 0 comments
பொழுது போகாத நேரங்களில், நூல்களும் உடன் சேர்ந்து அலுப்பூட்டும் பொழுதுகளில் இசையை கேட்பதுடன் அதன் வரிகளை கவனமாக கவனித்து ரசிப்பது எனக்கு வாடிக்கை. இக்குழுவின் whats happening சந்துமுனையில் கூட நான் அவ்வாறு பல சிந்துகளை பாடி திரிந்தது உண்டு. லய, சந்த, தாளங்களுக்கு ஏற்ப மெட்டுக்கு வார்த்தைகளை தேர்ந்தெடுத்து இட்டுக் கட்டுவது ஒரு தனி கலை. அது எல்லோருக்கும் எளிதில் கைவரக் கூடியதல்ல. கூடி வரப்பெற்றவர்களின் புகழ் எளிதில் அகலக் கூடியதும் அல்ல. 

அதனால்தான் ‘அள்ளி தந்த பூமி அன்னையல்லவா.. சொல்லி தந்த வானம் தந்தையல்லவா’ என்ற ஒரே பாடலின் மூலம் மட்டும் இன்று வரை அதை எழுதிய மதுக்கூர் கண்ணன் என் நினைவில் நீங்காமல் இருக்கிறார். (இவர்தான் பின்னாட்களில் ‘யார்’ கண்ணன் என்ற பெயரில் தொடர்ந்து பேய் படங்களாக எடுத்தவர்).

இன்று மைனா பாடல்களை கேட்டுக் கொண்டிருந்தேன். ஜிங்கிலி ஜிங்கிலி லேட்டஸ்ட் ஹிட் முடிந்து அடுத்து கேட்ட பாடல், 

’நீயும் நானும்
வானும் மண்ணும்
நெனைச்சது நடக்கும் புள்ள
வீசும் காத்தும்
கூவும் குயிலும்
நெனைச்சது கிடைக்கும் புள்ள’

பாடல் நல்ல மெல்லிசையாக கேட்க இதமாகவே உள்ளது. இருந்தாலும் பாடல் வரிகளில் பொருள் தளை தட்டுவதாக எனக்கு ஒரு சம்சயம். நீயும் நானும் எப்படி வானும் மண்ணும் ஆகமுடியும்? வானும் மண்ணும் சேரும் காலம் என்று ஒன்று கிடையாதே. வானாகி, மண்ணாகி பயனில்லை. வளியாகி, ஒளியாகி வேண்டுமானால் இணைய முடியும். மேலும், அதென்ன காதலின் உன்னதமான வேளையில் போய் மண் என்றெல்லாம் பாடிக் கொண்டிருப்பது? சகிக்கவில்லை. அடுத்த இரண்டு வரிகளும் கூட அப்படித்தான். இதே போன்ற ஒரு சூழலில் வைரமுத்துவின் பேனா எப்படி எழுதியது என்றால், 

‘நீ மழை, நான் பூமி,
எங்கு விழுந்தாலும் ஏந்தி கொள்வேன்’

கவிஞர்களும் கவியரசர்களும் வேறுபடுவது இங்கே தான். 

இளையராஜா 80-களின் பிற்பகுதியில், அதாவது வைரமுத்துவுடன் ஏற்பட்ட பிரிவுக்கு பிறகு இப்படித்தான் பல அபத்த வரிகளை பாடல்களாக ஏற்றுக் கொண்டிருக்கிறார். அவற்றுள் கேட்கும்போதெல்லாம் எனக்கு சொல்லொனா எரிச்சலை ஏற்படுத்துவது, ‘மாறுகோ மாறுகோ’ பாடல். ‘மாலையில் ஆடிக்கோ; மந்திரம் பாடிக்கோ’ என்று முடியும் அதில் ஒரு பொருளையும் நான் காணவில்லை. சும்மா மெட்டுக்கு வாயில் வந்ததை போட்டிருக்கிறார்கள். அதை எழுதியவர் வாலி என்று நினைக்கிறேன். அதிலொன்றும் ஆச்சரியமும் இல்லை. வாலி பேனா எப்படியும் வளையும். சமயத்தில் இப்படித்தான் முனை உடையும்.
மேலும்...

கார்த்திகை தீபம் - சில நினைவுகள்

Posted: Monday, November 22, 2010 | Posted by no-nononsense | Labels: , 0 comments
தீபமா அல்லது இன்னொரு தீபாவளியா என்று சந்தேகிக்கும்படியான பட்டாசு வெடிச் சத்தங்களுடன் நேற்று கார்த்திகை தீபம் ஜோராக கடந்து சென்றிருக்கிறது. ஒருநாளும் இல்லாத திருநாளாக கடைக்கு அழைத்துச் சென்று டிஸன் தேர்வு செய்து விளக்கு வாங்கிக் கொடுத்தது முதல், அதற்கு திரி திரித்து தந்து, எண்ணை ஊற்றி வைத்து, விளக்கை வைக்க வாழையிலையை கச்சிதமாக கத்தரித்து தந்து, காற்றுடன் மல்லுக்கட்டி ஒளி விளக்கை ஒழியா விளக்காக குறைந்தது 1 மணி நேரம் வரை தூண்டி விட்டு கட்டிக்காத்தது வரை.. என்னளவில் ஒருமாதிரி கொண்டாட்டமாகத்தான் போனது நேற்றைய பொழுது.

பண்டிகைகளின் பின்னுள்ள புராணகதைகளெல்லாம் எவ்வளவு அபத்த குப்பைகளாக இருப்பினும், வாழ்க்கையில் மகிழ்ந்திருக்க வகை செய்யும் harmless days, அவைகள். அவற்றை உபயோகப்படுத்திக் கொள்ள ஒரு பகுத்தறிவுவாதியாக எனக்கு ஒரு தயக்கமும் இல்லை.



6-8 விளக்கு வைத்து முடிந்ததும் 8 மணிக்கு மேல் ஊர் பிள்ளையார் கோவில்(!) முன் வைக்கப்படும் சொக்கப்பனையை(கூம்பு) பார்க்க மகளுடன் போயிருந்தேன். அது ஒரு தனி அனுபவம். அதன் மலரும் நினைவுகளை சென்ற வருட கார்த்திகை தீபம் சமயத்திலேயே எழுதி இருக்கிறேன் என்பதால், நெல்லை கண்ணனின் மகனும் டைரக்டரும், சிறந்த எழுத்தாளருமாகிய சுகா எழுதிய நெல்லைத் தமிழ் கொஞ்சும் சொக்கப்பனை பதிவை படிக்கலாம்: http://venuvanamsuka.blogspot.com/2010/02/blog-post.html
மேலும்...

பருவமழை

Posted: | Posted by no-nononsense | Labels: 0 comments
மழைக்கால மேகங்கள் தங்கள் வாடிக்கைக்கு திரும்பி விட்டனவா, அல்லது கிளைமேட் சேஞ்ச் தமிழகத்துக்கு மட்டும் அளித்துள்ள பாஸிடிவ் எஃபக்டா.., எதுவாகிலும் மேட்டூர் அணை 111 அடியை எட்டும் அளவிற்கு இந்தமுறை பருவமழை கருணை மழை பொழிந்துள்ளது. மகிழ்ச்சி! விவசாயம் செழிக்கட்டும். அதன்போதாவது உணவு பொருள்கள், குறிப்பாக காய்கறிகள் விலை குறையட்டும். 

மழை பொழியும் போதெல்லாம் என் மகள் தனக்கு தெரிந்த ஒரே மழைப்பாடலான rain rain go away-ஐ பாடுகிறாள். நானும் உடன் சேர்ந்து உற்சாகமாக பாடிக்கொண்டுதான் இருந்தேன் - மாலனின் இந்த வரிகளை படிக்கும் வரை:

....மழை என்றால் சந்தோஷமான அனுபவம் காத்திருக்கிறது என்ற மனநிலையை அந்தப் பாடல் ஏற்படுத்தியது.இன்று குழந்தைகள் Rain Rain Go away என்று பாடுவதைக் கேட்கிறேன். விளையாடுவதற்கு மழை இடையூறாக இருப்பதாக அந்தப் பாடல் சொல்கிறது. 

இயற்கை குறித்து இது எந்த மாதிரியான மனநிலைகளை குழந்தைகளிடம் ஏற்படுத்தும் என்பதை நினைத்துப் பார்த்தால் கவலையாக இருக்கிறது. ஏற்படுத்தும் என்ன, ஏற்படுத்தியிருப்பதைப் பார்க்க முடிகிறது.மனிதனுடைய 'சந்தோஷத்திற்கு' இயற்கை இடையூறாக இருக்கிறது என்ற எண்ணம் சிறுவயதிலேயே ஓர் தலைமுறைக்கு ஊட்டப்பட்டுவிட்டது.

ஈரம் படிந்த இலக்கியமாக இருந்திருக்க வேண்டிய குழந்தைகள் பீங்கான் ஜாடிக்குள் செருகிய பிளாஸ்டிக் பூக்களாகப் பரிணமித்துவிட்டார்கள்.

இந்த தேசத்திற்கு நேர்ந்த இழப்புக்களில் இது மிகப் பெரிது.

(முழுதாய் படிக்க: http://jannal.blogspot.com/2010/11/blog-post.html)

இயற்கையோடு இயைந்து வாழ நம் குழந்தைகளுக்கு நாம் கற்றுக் கொடுக்க மறக்கிறோம். அல்லது நமக்கே தெரியவில்லை. நம் இன்றைய வாழ்க்கைச் சூழலை கருத்தில் கொண்டு பார்க்கும்போது இரண்டாவது தான் பெரும்பாலும் காரணமாக இருக்க வாய்ப்புண்டு. 

வாழ்க்கையை பற்றிய கண்ணோட்டம் முதலில் எத்தனை பேருக்கு உண்டு என்பது பற்றியே எனக்கு ஐயம் உண்டு. பணம், சினிமா, டிவி, மது, மாது - முடிந்தது ரசனை! அவ்வளவு தானா உலகம். அவ்வளவுதான் உலகம் என்று நம்புபவர்கள் மனக்கிணற்றுக்கு வெளியே தலையை நீட்ட முதலில் மனம்கொள்ள வேண்டும். 

இதற்கு மேல் இதைப்பற்றி பேசினால் ஊருக்கு உபதேசமாகி விடும். பிறகு ஊருக்குதான் உபதேசம் என்று என்னை நோக்கி சொல்லும் சந்தர்ப்பத்திற்காக ஊர் காத்திருக்க வாய்ப்பாகி விடும். உபதேசம் உபன்யாசம் இரண்டையும் செய்ய ஊருக்குள் நிறைய சாமியார்கள் உண்டு. வேண்டாம் நமக்கந்த வேலை :-)

ஆனாலும் வாழ்க்கையின் ரசனையான பக்கங்களை பற்றி நினைக்கும் போதெல்லாம் எனக்கு அறை எண் 305-ல் கடவுளில் பிரகாஷ்ராஜ் பேசும் சிம்புதேவனின் வசனம் தான் நினைவுக்கு வருகிறது. ரிடையர்டு அரசு அதிகாரியான டெல்லி கணேஷிடம் வாழ்க்கையைப்பற்றிய மாறுபட்ட பார்வையை சில கேள்விகள் மூலம் கேட்பார். நான் ரசித்த ரசமான காட்சியது. அப்படம் மறுமுறை காணும்போது கவனித்து பாருங்கள்.
மேலும்...

கைபோன போக்கில் (4)

Posted: Friday, November 19, 2010 | Posted by no-nononsense | Labels: , 0 comments
தினமும் ஒரு எழுத்துப் பயிற்சியாக ஒரு மணி நேரம் எதையாவது கைபோன போக்கில் கிறுக்கித் தள்ள வேண்டும் என்று எண்ணிதான் இந்த தொடரை ஆரம்பித்தேன். ஒரு சில நாட்கள் கூட தொடர்ந்து எழுத முடியவில்லை. லௌகீகம் உள்ளிழுத்துக் கொண்டது. இன்றிலிருந்தாவது குறைந்தது ஒரு வாரத்திற்காகவது முடிகிறதா என்று பார்ப்போம்.

**

சற்று முன்பு லண்டனில் Mcjob செய்து கொண்டிருந்த நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தேன். 3 மாதமாக வேலையில்லாமல் இருக்கிறாராம். ஸ்காட்லாந்தில் ரெண்டால் நம்பர் பிஸினஸ் ஒன்றுக்கு திட்டம் தீட்டிக் கொண்டிருப்பதாகவும், இன்னும் சில நாட்களில் அங்கேயே போய்விடப் போவதாகவும் சொல்லிக் கொண்டிருந்தார். ரெண்டாம் நம்பர் பிஸினஸ் என்பதை வங்கியில் கிரெடிட் ரேட்டிங்கிற்காக செய்யப்படும் கோல்மால் வேலை என்று கொஞ்சம் எளிமைப்படுத்திச் சொல்லலாம் என்று நினைக்கிறேன். ’இவ்வளவு தூரம் வந்து வெட்டியா பொழுது போக்கிக்கிட்டு இருக்கறதுக்கு, அந்த பிஸினஸையும் செஞ்சிதான் பார்ப்போமே, மாட்டினா ஊருக்கு அனுப்பிடுவான்.. அவ்வளவு தானே’ என்கிறார். லண்டனில் உடலுழைப்பு வேலைக்காக சென்றுள்ள தமிழர்களின் நிலை இழிநிலைக்கும் சற்றும் மேல் என்பதை தவிர சொல்லிக்கொள்ளும்படியா இல்லை. இருந்தும் இன்னும் லண்டன் கனவில் சிலர் நல்ல புரோக்கரை தேடிக் கொண்டிருப்பதைக் காண்கிறேன். இது அவர்களின் இழிநிலை அன்று. இத்தேசத்தின் இழிநிலை. மண்ணின் மைந்தர்களுக்கு இன்னும் நம்மால் வேலைவாய்ப்பில் உத்தரவாதம் அமைத்துக் கொடுக்க முடியவில்லை. ஆனால் லட்சம் கோடி ஊழல் கணக்கில் கூட்டல் கழித்தல் செய்து கொண்டிருக்கிறோம். நல்ல தேசம்! நல்ல வாக்காளர்கள்!

**




ரூ. 1200 ரூபாய்க்கு FORME என்னும் ஒரு dual sim மொபைல் வாங்கியுள்ளேன். 2GB மெமரி கார்டுடன் ரூ. 1400-க்கு விலை அடக்கம் ஆனது. கைக்கு கச்சிதமாக உபயோகிக்க சுலபமாக உள்ளார்ந்த வசதிகளில் வளமாக உள்ள அது என்னை கவர்ந்து விட்டது. மலிவு விலையில் மொபைல் வாங்க விரும்புவோருக்கு என் சிபாரிசு அது. அப்புறம் இது சீன தயாரிப்பு இல்லை என்பது கூடுதல் தகவல். சென்னையில்தான் தயாரிக்கிறார்கள் என்றது இதன் வெப்சைட். சைனா மொபைலில் அதிகம் விற்பனையாகும் Gfive-ன் OS எனக்கும் பிடிக்கவில்லை.
மேலும்...

கமல் - ரஜினி மோதல் (1981)

Posted: Tuesday, November 16, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments





அது கமல், ரஜினி இருவருமே கே.பாலாஜி தயாரித்த படங்களில் நடித்துக் கொண்டிருந்த நேரம். ரஜினி திருமணமும் அப்போதுதான் நடந்து முடிந்திருந்தது. அது சமயம் திருமணத்தையொட்டி பாலாஜி சினிமா முக்கியஸ்தர்களுக்கு ஒரு விருந்து கொடுத்திருந்தார். நட்சத்திரங்களின் சங்கமத்தில் மது கரைபுரண்டோடுவது இயற்கை. மது தந்த மயக்கத்தில் தனி நபர் விமர்சனங்கள் தலை தூக்கின. அது களேபரத்தில் முடிந்தது. அடுத்த நாள் ரஜினி-கமல் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாயின. அப்போது குமுதம் லைட்ஸ் ஆனில் எழுதப்பட்ட கிசுகிசு:

ஏழுமலையான் பெயர் கொண்ட தயாரிப்பாளரின் பார்ட்டியில் இரண்டு பெரிய நடிகர்கள் மோதிக் கொண்டதை பற்றி எல்லா பத்திரிக்கையிலும் செய்திகள் வெளியாகின. அவற்றை படித்தால் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் நடைபெற்றிருப்பதாக மட்டுமே தோன்றும்.

More than that ஸ்டைல்காரர் கமலாரின் சட்டைக் காலரை பிடித்தாராம். அதுவரை பொறுமையோடு இருந்த அவர், இதற்கு மேல் இடம் கொடுக்க கூடாதென்று விட்டாராம் ஒரு குத்து. தடாரென்று விழுந்து விட்டாராம் முரட்டுக்காளை

(குமுதம் 28.05.1981)

பிறகு நடந்தவை கமலின் வார்த்தைகளில்:

ஜெய்சங்கர் குறுக்கே புகுந்து விலக்கி இருவரையும் சமாதானம் செய்தார். அதனாலேயே ஜெய் சாரை எங்கள் இருவருக்கும் பிடிக்கும். 

இந்த சம்பவம் நடந்த மறுநாள் நான் வாகினி ஸ்டூடியோவில் இருந்தேன். என்னை பார்க்க ரஜினி வேகமாக வந்து கொண்டிருந்தார். வந்த வேகத்தை பார்த்தால் தகராறு செய்வதற்குத் தான் வருகிறார் போலிருக்கிறது என்று நினைத்தேன். வரட்டும், வந்தால் இரண்டில் ஒன்று பார்த்து விட வேண்டியதுதான் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே, அருகில் வந்த ரஜினி என் கையை அழுத்தமாக பிடித்தார். அடுத்த விளைவுக்கு நான் தயாரான போது, “ஸாரி.. நேத்து நடந்ததுக்கு என்னை மன்னிச்சுடுங்க” என்றார். எனக்கு வெட்கமாகி விட்டது. அவரது பெருந்தன்மை என்னை சுட்டது. 

மறுநாள் ரஜினி தன்னோடு பேசிக் கொண்டிருந்தவர்களிடம், “கமலிடம் மன்னிப்பு கேட்க போனபோது பகை உணர்ச்சியை மறக்க மாட்டாரோ என்று நினைத்தேன். ஆனால் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டார்” என்று கூறியிருக்கிறார். அதைக் கேள்விப்பட்ட போது நாம் முந்திக் கொள்ளாமல் போனோமே என்று என்னை நொந்து கொண்டேன். 

(கமல் முழுமையான வாழ்க்கை வரலாறு நூலில்)


ரஜினி ஒரு பெருந்தன்மையான மனிதர் என்பதற்கு 30 வருடங்களுக்கு முன்பே அத்தாட்சியான சம்பவம் இது. நமக்குதான் அவர்கள் ஐகான்கள். அவர்களுக்கு அவர்கள் மனிதர்கள் தாம். சடுதியில் உணர்ச்சிவயப்படுவது எல்லா மனிதர்களுக்கும் இயல்புதாம்.

இந்த முட்டல் மோதல்களையெல்லாம் தாண்டியும், சுற்றியுள்ளவர்களின் திருகு வேலைகளுக்கு மத்தியிலும் அவர்கள் தங்களுக்கென்று ஒரு பாதை வகுத்துக் கொண்டு இவ்வளவு நாளும் நட்புடன் இருந்திருக்கிறார்கள் என்பது உண்மையிலேயே பெரிய விஷயம். 

கமல் 50-ல் ரஜினி பேசியதை கண்டு கண்கள் பனிக்க கமல் சொல்வார், ‘எவன் பேசுவான் இப்படி...?’ என்று. மனதிலிருந்து வந்த வார்த்தைகள்!

மேலும்...

மம்மி டாடி

Posted: Friday, November 12, 2010 | Posted by no-nononsense | Labels: , 0 comments
காலையில் அவசரம் அவசரமாக வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்தேன். இடையூறாக திடீரென்று வெடித்து கிளம்பியது என் மகளின் அழுகுரல். ‘ரம்பஸ்கி கடிச்சிருச்சி..’ என்று ஒரே அழுகை. அது வேறு ஒன்றுமில்லை, கொசு கடித்திருக்கிறது. உடனே எந்திரனில் வரும் ரங்கூஸ்கி கொசு அவளுக்கு ஞாபகம் வந்து விட்டது. உடனே ரோபோ போடு என்று அடுத்த அடம். ரோபோ என்றால் என்ன என்றே தெரியாது. ஆனால் படமும், ரஜினி, ஐஸ்வர்யா ராய் பெயர்களும் அவள் ரசனைக்கு அத்துபடி.

தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு நிலாச்சோறு ஊட்டிய காலம் போய் நடிகர்களை காட்டி சன்சோறு ஊட்டப்படும் காலமிது. குழந்தை வளர வளர வீட்டில் டிவி மற்றும் சினிமா சம்மந்தமான சூழலை வெகுவாக குறைத்துக் கொள்வதைப்பற்றி மனதில் பரிசீலித்து கொண்டிருக்கிறேன். இருந்தாலும் அதற்கு இன்னும் காலமிருக்கிறது. இப்போதைக்கு அவளின் குழந்தை பருவத்தை தனக்கு பிடித்த வழியில் அவள் கொண்டாடிக் கொள்ளட்டும்.

*

நேற்று வேலையில் இருந்து திரும்பிய என்னை என் மகள் அழைத்த விதம் கொஞ்சம் துணுக்குறச் செய்தது. என்றும் இல்லாத வழக்கமாக திடீரென்று வார்த்தைக்கு வார்த்தை ‘டாடி’ போட்டு பேசினாள். நீ என்னை அப்பான்னே கூப்பிடு டாடி சொல்ல வேண்டியதில்லை என்றாலும் கேட்கவில்லை. ‘டாடி தான் சொல்லணும்’ என்றாள். போலவே அம்மாவையும் மம்மி என்றே அழைத்தாள். இனி அப்பா அம்மாவை அப்படித்தான் அழைக்க வேண்டும் என்று பள்ளியில் சொல்லிக் கொடுத்திருப்பார்கள் என்று யூகிக்கிறேன். தாங்கள் குழந்தைக்கு ஆங்கிலம் சிறப்பாக கற்பிக்கிறோம் என்பதை பெற்றோர்களுக்கு உணர்த்தச் செய்ய இந்த டாடி-மம்மி அவர்களுக்கு ஒரு வழிமுறை. சில பெற்றோர்களும் இதை எதிர்பார்ப்பதால் ஒருவகையில் வாடிக்கையாளரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் ஒரு செயலாக இது அவர்களுக்கு தவிர்க்க முடியாமல் அமைந்து விடுகிறது.

அந்நியமொழி ஆங்கிலத்தை ஓர் உலகளாவிய தொடர்பு சாதனமாக, வேலைதேடலில் முன்னுரிமை பெற்றுத் தரும் ஒரு சிறப்பு தகுதியாக, அறிவுதேடலுக்கு உதவும் ஒரு மீடியமாக மட்டும் நெஞ்சில் நிறுத்தி அதை ஒரு மொழி என்னும் கண்ணோட்டத்தில் மட்டும் நன்கு கற்றறிந்தால் போதும். மேற்கொண்டு அதிலென்ன பெருமை இருக்கிறது?

ஆனால் இதையெல்லாம் எடுத்தியம்பும் வயதில் அவளோ அதற்கான மனமுதிர்ச்சியில் குடும்பத்தாரோ இல்லை. அவர்களுக்கு மம்மி-டாடி என்று குழந்தை அழைத்ததில் ஆகபெருமை. இதிலெல்லாம் நான் தலையிட போவதுமில்லை. அவள் பாட்டுக்கு அவள் ஆங்கிலத்தில் புலமை பெறட்டும். நான் தமிழிலும் தக்க ஆர்வம் அவளுக்கு ஏற்படுத்துவதில் முனைப்பாக இருந்து கொள்வேன். ஆனால் முனைப்பு மட்டும் போதாது; காலத்தே கவனமும் தேவை.

NRI-களின் குழந்தைகள் மட்டுமல்ல நானறிந்த சில ஐரோப்பிய தேசங்களில் வாழும் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கும் கூட தாய்மொழி தமிழ் எழுதப் படிக்க சுத்தமாக தெரியவில்லை. அதிலும் டச்சு நாட்டில் வாழும் ஒரு அம்மணி அங்கேயே பிறந்து வளர்ந்து படித்து வரும் தன் மகளுக்கு தமிழில் ஓரிடு வார்த்தைகளுக்கு மேல் பேசகூட தெரியாது என்று என்னிடம் வருத்தப்பட்டிருக்கிறார். நம்ப கொஞ்சம் சிரமாகத்தான் இருந்தது. சில நேரங்களில் எப்படி இவர்கள் மொழி என்னும் ஓர் இனத்தின் உயிர்நாடியான ஒரு முக்கிய நரம்பை அற்று போக அனுமதிக்கிறார்கள் என்று நினைத்தால் ஆச்சரியமாவதுண்டு.

இவர்களுக்காவது பிழைக்க/வேலைக்காக சென்ற இடத்தில் இருக்கும் survival பிரச்னையில் மொழியில் எல்லாம் கவனம் செலுத்தி கொண்டிருக்க முடியாது என்ற ஒரு எதார்த்த பிரச்னை உள்ளது. ஆனால் நம் சென்னை போன்ற மெட்ரோக்களின் மேட்டுகுடி வர்க்க குழந்தைகள் ஆங்கிலம் மட்டுமே அறியும் என்பது விளக்கங்களுக்கு அப்பாற்பட்ட வருத்தம். காரணம் அவர்களின் பெற்றோர்களும் தமிழில் பேசுவதில்லை. அப்படி ஒரு நபரையும் குழந்தையையும் நான் கோவையில் கூட சந்தித்திருக்கிறேன். என்னிடம் நல்ல தமிழில் பேசிய அவர் மனைவியும் அவரும் குழந்தையிடம் முற்றாக ஆங்கிலத்தில் மட்டுமே உரையாடினர்.

மொழிவெறி என்பது அரசியல்வாதிகள் ஓட்டுக்காக காட்டுவது. மொழியுணர்வு என்பது அடிப்படையிலேயே ஒவ்வொரு தமிழருக்கும் இருக்கவேண்டியது. தமிழ் மொழியின் தொன்மையை அறியா தமிழராயிருக்கிறோம். இது பிறமொழி போல சொற்களை கடன் வாங்கி உருவானதல்ல. இதற்கு இலக்கண நூலே (தொல்காப்பியம்) குறைந்தது 3500 - 4000 ஆண்டுகளுக்கு முன்பு உருவாகி விட்டது எனில், அதற்கு முன் இது எவ்வளவு காலமாக பேசப்பட்டிருந்தால் அது இலக்கண விதிகள் வகுக்கும் அளவிற்கு குலைந்து மெருகேறி ஒரு அழகிய வடிவத்திற்கு வந்திருக்க வேண்டும்! எண்ணிப் பாருங்கள் தமிழர்களே! அவசியம் உங்கள் குழந்தைகளுக்கு தமிழ் எழுதப் படிக்க தெரிந்திருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
மேலும்...

படித்தால் மட்டும் போதுமா?

Posted: | Posted by no-nononsense | Labels: 0 comments
மிஸ்கின் இதேபோல் உதவி இயக்குநர்களை விமர்சித்ததை இன்னொரு பேட்டியிலும் பார்த்திருக்கிறேன். புத்தகம் அதிகம் படிப்பவர்கள் அதை சொல்லி பெருமைபட்டுக் கொள்வதை விட படிப்பார்வம் இல்லாதவர்களை படிக்க ஊக்குவிப்பதிலேதான் அதிக விருபபார்வம் கொண்டிருப்பார்கள். இப்படி விமர்சிப்பதில் அல்ல. மிஸ்கினும் நிறைய படிக்கக் கூடியவர் தான். சொல்லப்போனால் இவர் அளவுக்கு இலக்கியம் படித்தவர்கள் எழுத்தாளர்களிலேயே கூட அதிகம் இருக்க மாட்டார்கள். அதற்கு அவரின் ‘மிஸ்கின்’ என்னும் புனைபெயரே அத்தாட்சி. ஆனால் அதிகம் படிப்பவர்களுக்கு இயல்பாக ஏற்படும் நிறைகுடம் தளும்பா அடக்கம் இவருக்கு இன்னும் வந்ததாக தெரியவில்லை. 


மிஸ்கின் இப்படி சொல்லி இருப்பது என்பதை விட தொடர்ந்து சொல்லிவருவது என்பதே பொருத்தம். ஒரு வருடம் முன்பு மிஸ்கின் கையில் புத்தகங்களை வைத்துக்கொண்டு லேண்ட்மார்க்கில் நின்றுகொண்டு அளித்த பேட்டி ஒன்று யூடியூபில் தேடினால் கிடைக்கலாம். அதை பார்த்தால் தெரியும் உ.இகள் பற்றி அதிலும் எவ்வளவு காட்டமாக விமர்சித்திருப்பார் என்று. 

“எதையும் படிக்காம அனுபவம் அனுபவம்னு சொல்றான். என்னடா உனக்கெல்லாம் பெரிசா அனுபவம் இருக்கப் போவுது.. ஃப்யில் ஆகி எஙகயாவது ஓட்டல்ல வேலை செஞ்சிருப்ப.. அப்பா கடங்காரனாகியிருப்பான்.. தங்கச்சி ஓடிப் போயிருப்பா.. உனக்கு லவ் ஃபெயிலியர் ஆகியிருக்கும்.. இதுதான் அனுபவமா.. புத்தகங்களை வாசிக்கணும்...” - இந்த ரீதியில் போனது அந்த பேட்டி. அப்போதே எனக்கு இவர் என்ன இப்படி பேசுகிறார் என்று புருவம் உயர்ந்தது. 

 நீ நேரடியாக ஒருவனை விமர்சிப்பது என்பது வேறு; அதை பொதுதளத்தில் பொதுப்படையாக(இன்னைக்கு வர்ற உதவி இயக்குனர்களை நினைச்சா) எல்லோரையும் செய்வது என்பது வேறு. உ.இ.களின் எதிர்வினையிலுள்ள தனிப்பட்ட தாக்குதலை நான் ஆதரிக்கவில்லை. அதேசமயம் அவர்களின் கோபக்குரலில் நியாயம் இல்லாமலில்லை என்பதுதான் என் கருத்து. குறிப்பாக சுயஇன்பமே அவர்களின் அனுபவம் என்றெல்லாம் சொன்னது யாருடைய தன்மானத்தையும் சீண்டி பார்ப்பது. எனக்கும் மிஸ்கின் படங்கள் பிடிக்கும். இயக்குநர்களின் படைப்பையும், அவர்களின் தனிப்பட்ட செயல்பாடுகளையும் ஒரே தட்டில் வைத்து பார்ப்பது சரியான பார்வையாக இருக்காது. இவரின் வாய்துடுக்கு அவருக்கே சத்ரு. 

அப்புறம் இவர் சாருவால்தான் இப்படி ஆனார் என்பதை விட இருவருக்குள்ளும் உள்ள இணக்கத்திற்கு இனம் இனத்தோட சேர்ந்த கதை காரணமாக இருக்கலாம்:-)
மேலும்...

கைபோன போக்கில் (3)

Posted: Thursday, November 11, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
ஐந்து வருடங்களாக வைத்திருந்த செல்போன் எண்ணை என் அசிரத்தையால் கோட்டை விட்டு விட்டேன் என்பது இன்றைய நாளின் சோகமான சங்கதி. திருச்சியிலிருந்து கம்பெனி மாறி தற்போது பணியாற்றும் கம்பெனியில் சேர்ந்ததும் இங்கே ஒரு சிம் பயன்படுத்தக் கொடுத்தார்கள். ஒரு மொபைல் போனே எனக்கெல்லாம் எதேஷ்டம் என்பதால் இன்னொன்றை கழற்றி வைத்து விட்டேன். இருந்தாலும் எண்ணை விட்டு விடக் கூடாதேயென அவ்வபோது இயக்கி பார்த்துவிட்டு வைத்து விடுவேன். சில மாதங்களாக அதை செய்ய மறந்து போனதில் நம்பர் கையை விட்டு போய், தற்சமயம் அதை வேறு ஒரு சகமனிதர் வாங்கி விட்டதாக அறிந்து கொண்டேன். அவர் யாராக இருந்தாலும் குறைவாக பேசி நிறைவாக வாழக் கடவது!


அதனால் நண்பர்களே என்னுடைய பழைய எண்ணை (*******) இன்னும் யாரேனும் வைத்துக் கொண்டிருந்தால் அழித்து விடவும்.

பொதுவாக நான் எண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அதிலும் குறிப்பாக நியூமராலஜி பேத்தல்களில் எல்லாம் துளியும் நம்பிக்கையில்லை. ஆனாலும் சில எண்கள் நம் வாழ்வில் கலந்து நினைவுக்கு சுலபமாகி விடுகின்றன. அவற்றை இழக்கும்போது ஏற்படும் சின்ன வருத்தம் மட்டுமே இது.

*

‘வ குவாட்டர் கட்டிங்’ படம் பற்றி படிக்கும் ரிவியூ எல்லாமே படுமட்டாக படத்தை திட்டுகின்றன. இருந்தாலும் விடப் போவதில்லை. இந்த வாரயிறுதியில் பார்த்தே தீருவது என்று முடிவு செய்து விட்டேன். இன்றுதான் கவனித்தேன் என் அலுவலகத்திற்கு எதிரேயுள்ள தியேட்டரிலேயே அப்படம் ஓடுகிறது என்பதை. கரூர் வந்த பிறகு இதுவரை ஒரு படம் கூட பார்த்ததில்லை என்னும் குறை இந்த படத்தால் தீரலாம். நல்ல படம் என்று நண்பர்கள் சிபாரிசு செய்து எத்தனையோ மரணமொக்கைகளையே பார்த்து வெந்தாகி விட்டது. மொக்கை என்று தெரிந்தே ஒரு படம் பார்த்துதான் வருவோமே (இது எனக்கு நானேயான சமாதானம்!). இரவு நேர சென்னைதான் கதைக்களம் என்பதுதான் என்னை ஈர்க்கிறது.

இன்று எதிரேயுள்ள தியேட்டரில் இன்னொரு விஷயத்தையும் கவனித்தேன். அது - மிர்ச்சி சிவாவுக்கு வைக்கப்பட்டிருக்கும் பெரிய ரசிகர் மன்ற தட்டியை. ஆனாலும் ஆச்சரியமில்லை. சிவாவின் துடுக்கான பேச்சுக்கு நிறைய ரசிகர்கள் இருப்பது புரிந்துகொள்ள கூடியதே. இல்லையென்றால் RJ ஆக இருந்திருக்க முடியுமா.

*

இரண்டு நாள்களாக மழை சிறிதும் பெரிதுமாக ஊரை நனைத்துக் கொண்டிருக்கிறது. இந்தமுறை மழைக்காலம் பருவத்தே பொழிந்து கொண்டிருப்பதாக தோன்றுகிறது. எல்லா மழையும் புயலும் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் பெய்து முடித்து சென்னையை சுத்தப்படுத்தி வைத்திருக்கட்டும். மாதக் கடைசியில் சில பல நாள்கள் அங்கே ஜாகை போட நாளது தேதி வரை திட்டத்தில் இருக்கிறேன். அதற்கு பங்கம் வராமல் இருந்தால் சரி.

*


இந்த தீபாவளிக்கு டிவிப் பெட்டியே சரணாகதியென்றானவர்களுக்கு கமல், ரஜினி என்று நல்ல நிகழ்ச்சி விருந்து. நான் கமல் கலந்துகொண்ட காஃபி வித் அனு மட்டும் பார்த்தேன். அதில் இறுதியாக கமல் இரு வெண்பாக்களை கூறுவார். இரண்டில் ஒன்றை முழுமையாக எழுத்தாக்க முடிந்துள்ளது. நானல்ல இணைத்தில் ஒருவர் செய்திருந்தார். அதை இங்கேயும் பகிர்ந்து கொள்கிறேன்.

ஆத்தமா னார்(அ)யலார் பள்ளிப் பறித்தெடுத்து
மூத்தவர்யா மெனக்கூறி அமர்ந்திருக்கும் சூத்திரத்தைச்
சொல்லின்றிக் கூறிவிடும் பழங்கோயில் கேட்டுப்பார்
கல்லும்சொல் லாதோ கதை.

‘ஆத்தமா னார் அயலவர் கூடி’ என்பதை தான் திருவாசகத்தில் இருந்து எடுத்தாண்டதாகச் சொன்னார். இந்த ‘கல்லும்சொல் லாதோ கதை’ போல ஒன்றை எழுதிப் பார்க்க முயற்சிக்கிறேன். எனக்கே திருப்தியானால் பகிர்ந்து கொள்கிறேன்.

அடிப்படையான விதிமுறைகளை தெரிந்து கொண்டு கொஞ்சம் மொழியில் சொல்லாட்சியையும் ஏற்படுத்திக் கொண்டால் வெண்பா எழுதுவது சுலபமே. (இளையராஜா வெண்பாவில் வல்லவரானது இப்படி கற்றுக்கொண்டுதான்).

முன்பு Forum hub காலத்தில் சிலவற்றை கிறுக்கி பார்த்து தளை தட்டியதால் விட்டு விட்டேன். இந்த நிகழ்ச்சி மீண்டும் என் ஆர்வத்திற்கு தூபம் போட்டிருக்கிறது.

நிகழ்ச்சி முடியும்போது கமல் கடைசியாக ஒரு கவிதை படித்தார். வார்த்தைகளிலும் பொருளிலும் சம வீரியமாக தோன்றிய அதை எழுத்தாக்கி வாசித்து பார்க்க விரும்புகிறேன். நேரம் இருக்கும்போது செய்யவேண்டும்.

*

கமல் நிகழ்ச்சியில் இன்னொன்றும் ஞாபகம் வருகிறது. அனுவிடம் ஆன்மிகம் பற்றி பேசும்போது ‘அதெல்லாம் செக்ஸ் போல ரொம்ப பர்சனல்; ஃபர்ட்ஸ்ட் நைட் முடிஞ்சி வந்தவன் கிட்ட எப்படியிருந்ததுன்னு கேட்க முடியுமா’ என்ற பொருளில் சரளமாக உரையாடிக் கொண்டிருந்தார். அனு மகள் முறை என்பதற்காகவெல்லாம் வார்த்தைகளை வடிகட்டிக் கொண்டிருக்கவில்லை என்பதில் எனக்கு கொஞ்சம் ஆச்சரியமே!
மேலும்...

கோவை என்கௌன்டர்

Posted: Tuesday, November 9, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
இரண்டு குழந்தைகள் பணத்துக்காக கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவமும், அதில் குற்றம்சாட்டப்பட்டவர் என்கவுண்டர் செய்யப்பட்டதும் குறித்துமான உரையாடல்:

செய்திமூலம்: http://www.deccanchronicle.com/chennai/kovai-kids%E2%80%99-killer-shot-dead-cops-road-811


//மக்களின் ஆதரவும் இதற்கிருப்பதாக சித்தரிப்பதில்//

சித்தரிக்கப்படுகிறது என்று சொல்லமுடியாது. கோவை மக்களின் அமோக ஆதரவு இந்த என்கௌன்டருக்கு உண்டு என்பதே நிஜம். கோவையில் வசிக்கும் என் தோழி ஒருவரிடம் சம்பவம் நடந்த அன்றும், போலிமோதல் கொலை (encounter) நடந்த இன்றும் இது குறித்து உரையாடியிருந்தேன். குழந்தைகள் கடத்தல், பெண் குழந்தை கற்பழிப்பு மற்றும் கொலை எல்லாம் கேள்விபட்டு மனோரீதியாக பாதிப்புக்குள்ளாகியிருந்தார். அதுமுதல் தினமும் குழந்தை பள்ளி வாகனத்தில் பயணமாகும் பொழுதெல்லாம் அடிக்கடி வேன் டிரைவருக்கு ஏதாவது காரணத்தை வைத்து போன் செய்து சுமூகநிலையை உறுதி செய்துகொண்டு மனசமாதானம் அடைந்து வருவதாகவும், இது முட்டாள்தனம்தான் என்று தெரிந்தாலும் அச்சம்பவம் நினைவை விட்டு அகலும் வரை தவிர்க்க முடியாதென தோன்றுவதாகவும் சொன்னார்.

இன்று நடந்த போலிமோதல் கொலையை அடுத்து அவருக்கு போன் செய்து இதுபற்றி சொன்னேன். மிக உற்சாகமான குரலில் ‘வெரி குட்’ என்றார். அதுபற்றி சில நேரம் மகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருந்ததில் அவர் மனதில் ஏற்பட்ட பயரேகையின் அடையாளங்கள் வலுவிழப்பதை என்னால் உணர முடிந்தது.

இது உண்மையிலேயே ஒரு குழப்பமான நிலை. இதன்மேல் இரண்டு பக்கங்களிலும் நின்று வக்காலத்து வாங்க முடியும். சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்ட ஒரு சமுதாய குடிமகனாக இதை நான் எதிர்க்கிறேன். அவன் குற்றவாளியேயாயினும் அவன் தரப்பை நீதிமன்றத்தில் சொல்ல அவனுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்க வேண்டும். அதுதான் நாகரிக சமுதாயத்தின் அடையாளம்.

அதேசமயம் காட்டுமிராண்டிகளுக்கு நாகரிக சட்ட திட்டங்கள் பொருந்துமா என்பது குறித்தும் யோசிக்க வேண்டும். தெளிவாக குற்றவாளி என்று தெரியும் ஒருவனை நீதிமன்ற நடைமுறைகளுக்கு உட்படுத்தினாலும் சட்டத்தின் ஓட்டைகளில் ஒளிந்துகொண்டு காலமெல்லாம் செய்த குற்றத்தின் தன்மைகேற்பில்லாத குறைந்த தண்டனையுடன் காலத்தை ஓட்டிவிட முடியும். இதைத்தான் நாம் நடைமுறையில் கண்டுவருகிறோம். அஜ்மல் கசாப்பை விட வேறு உதாரணம் இதற்கு தேவையில்லை. அவனுக்கெல்லாம் விசாரணையும் அப்பீலுக்கு அனுமதியும் தேவைதானா? ஆனால் நம் சட்டம் அனுமதிக்கிறது. அவன் ஆயுளும் நீண்டு கொண்டிருக்கிறது.

‘தண்டனைகள் கடுமையாக கடுமையாகத்தான் குற்றங்கள் குறையும்’ என்னும் வாதத்தில் நம்பிக்கை கொண்டவன் என்னும் முறையில் இந்த போலிமோதல் கொலையை மௌனமாக அங்கீரிப்பதிலும் பெரிய மனத்தடை எனக்கு இல்லை. அந்த குற்றவாளிக்கு விரைந்து அளிக்கப்பட்ட தண்டனை காரணமாக என் தோழி போன்ற தாய்மார்களின் மனஅழுத்தம் குறைந்திருக்கிறது. குழந்தைகளிடம் தவறாக நடக்க எண்ணம் கொண்டிருப்பவர்களின் காதில் அழுத்தமாக ஒரு எச்சரிக்கை மணி ஒலித்திருக்கிறது.

எனவே சமூக ஒழுங்கு நடவடிக்கையாக இதனை காண நேரும்போது இது தர்மம். வெறும் சட்ட புத்தகங்களை கையில் ஏந்திக்கொண்டு வாதிட்டால் குற்றம். அவரவருக்கான நியாயத்தின் பக்கம் அவரவர் நின்றுகொள்ளலாம். தட்டு இருவர் பக்கமும் சமமாகத்தான் இருக்கிறது. அந்த மாதிரி நேரங்களில் மனம் எந்தப் பக்கம் சாய்கிறது என்பதுதான் நிலைப்பாடை தீர்மானிக்கிறது.

நாமே நேரடியாக பாதிக்கப்படும் வரை இதுபோல் குற்றவாளிகளின் மனித உரிமைக்காக வாதிட்டுக் கொண்டிருப்போம் என்பதும் நிதர்சனம்.

o0o
o0o
o0o

இந்த சம்பவம் பற்றி படித்ததும் நான் முதலில் எழுதி பின் அழித்த கருத்து ‘சட்டம் நல்ல ஒழுங்குதான்’ என்பது. தினமும் நிறைய கொலைகள் நடக்கின்றன. கையும் கொலையுமாக நிறைய பேர் மாட்டவும் செய்கிறார்கள். அவர்கள் எல்லோரையும் இப்படி என்கௌன்டர் செய்து விட்டால் பிரச்னை முடிந்து விடுமா? நீதித்துறை என்ற ஒன்றை எதற்காக வைத்துக் கொண்டிருக்கிறோம்? இது மக்களின் உணர்வு ரீதியான பிரச்னைக்கு தீர்வு என்றால், எல்லா உணர்வு ரீதியான பிரச்னைக்கும் தனிமனிதர்கள் தாங்களே தீர்ப்பை எழுதிவிட முடியுமா? அதை இந்த சமூகம் அனுமதிக்குமா? என் அப்பனை அவன் வெட்டினான். அவனை நான் வெட்டினேன் என்றால், ‘இது உணர்வு ரீதியான கொலையல்லவா’ என்று சும்மா போக விட்டு விடுவார்களா? சட்டத்தின் முன் சமூகத்தின் முன் நீயும் ஒரு கொலைகாரன் தான் அப்போது.

ஆனால் இங்கே மட்டும் எப்படி இது நியாயம் ஆகிறது?

இங்கேதான் சமுதாயத்தின் கும்பல் மனநிலையும் அதிகாரத்தின் மறைமுகமும்(hidden face) கைகோர்க்கின்றன. நீ தனியாக செய்தால் அது கொலை. கும்பலாக சேர்ந்தால் அது கலவரம். அதுவே அதற்கு அதிகார வர்க்கத்தின் ஆதரவும் கிடைக்கும்போது என்கௌன்டர். இதனால்தான் எழுதினேன்: சட்டம், ஒழுங்கு, பாரம்பரியம், மரபு, கலாச்சாரம் இத்யாதி சமூக கட்டுப்பாட்டு உபகரணங்கள் எல்லாமே நம் சௌகரியத்துக்கு நாம் நம்மை சுற்றி போற்றிக் கொண்டிருக்கும் போர்வை போல. பொதுவாக அப்போர்வையின் நிறமே சமூகத்தின் நிறமென ஆகிவிட்டது; ஆனாலது நிஜமன்று. சட்டத்தரணி அவையினரை விட துப்பாக்கி ரவைகள் பேச அனுமதிக்கப்படும் விதி விலக்கான இப்படி சில நேரங்களில் அப்போர்வை கிழி(க்கப்)படும்போதுதான் நம் உண்மை தோலின் நிறம் நமக்கேகூட தெரியவரும்.

இந்த கொலையையே ஒரு பெரும் பணக்காரரின் பிள்ளையோ, அரசியல்வாதியின் உறவினனோ செய்திருந்தால் - அங்கே மக்களின் உணர்வுநிலை கொந்தளித்தபோதும் - இப்படி ஒரு என்கௌன்டர் நடந்திருக்குமா என்னும் கேள்வியை நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும். ஏன் அப்போது மட்டும் வெகுஜன உணர்வுக்கு அதிகார வர்க்கம் செவிசாய்க்கவில்லை? அப்போது எங்கே போகிறது சட்டத்துக்கு அப்பாற்பட்ட தர்மம்?

உதாரணமாக, சமீபத்தில் வீரபாண்டி ஆற்முகத்தின் தம்பி மகன் கொலை வழக்கில் வலுவான ஆதாரங்களுடன் கைது செய்யப்பட்டார். அவர் அடாவடியான பேர்வழியென்றும் தற்போது சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் பத்திரிக்கைகள் எழுதுகின்றன. அங்கேயெல்லாம் சைலேந்திரபாபுவின் துப்பாக்கி ஒலிக்குமா? குறைந்த பட்சம் சாட்டை?

இங்கே மோகன்ராஜ் என்னும் கேட்பாரற்ற ஒரு சாமானியன் குற்றவாளி என்றதும் என்கௌன்டர் விளையாட்டை விளையாடி மக்களின் உணர்வை பயன்படுத்தி பெயர் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். சட்டம் நல்ல ஒழுங்குதான்.

நியாயம், தர்மம், சட்டம் ஒழுங்கு, நீதி எல்லாமே அன்றாடங்காய்ச்சிக்குத்தான். நியாய கத்தி பாய தயாராக இருப்பதுவும் அவன் தலைக்கு மேலே மட்டும்தான். எவன் கேட்கப் போகிறான்?

போலி ஜனநாயகத்தில் போலியான சமூக கட்டுபாட்டுக்குள் போலி மனிதர்களாக உலா வந்து கொண்டிருக்கிறோம். இதில் சரியென்ன? தவறென்ன?

o0o
o0o
o0o

டெல்லி அருகே ஒரு தொழிலதிபர் சின்ன சின்ன பிள்ளைகளாக பிடித்து வன்புணர்ந்து கொலை செய்து சாக்கடையில் வீசிய சம்பவத்தில் இன்னும் கூட தண்டனை நிறைவேற்றப்படவில்லை.

சரி, அதெல்லாம் இருக்கட்டும். இன்னொரு கேள்வி இங்கே எழுகிறது. அது எல்லா கொலைகளும் ஒரே மாதிரி அணுகப்பட வேண்டியவை தானா என்பது.

கொலைகளை - கொலை, கொடூரகொலை என்று பிரித்துக் கொண்டால், அவையவை அதனதன் தன்மைக்கேற்ப தண்டனையளிக்கப்பட வேண்டியவை என்றாகிறது. அதை ஓரளவு கோவை சம்பவத்துடன், அங்கே பாதிக்கப்பட்ட தாய்மார்களின் மனநிலையுடன் ஒப்பிட்டு ஏற்றுக் கொண்டாலும்கூட அந்த கொடூரகொலைகளுக்கான கொடூர தண்டனை ஏன் மோகன்ராஜ்களுக்கு மட்டும் என்பதுதான் சமரசம் உலாவும் நாடு இஜ்ஜனநாயக நாடு என்னும் அரசியல் சட்ட பிரிவின் (அ) மக்களின் கும்பல் மனநிலையின் முன் நம் கேள்வி!

o0o
o0o
o0o

//writerpara: வன்முறைக்கு பதில் வன்முறையே சரியான தீர்ப்பென்று மக்களனைவரும் முடிவு செய்துவிட்டதைப் புரிந்துகொள்ள முடிகிறது. நீதிமன்ற நடவடிக்கைகளின் நிதானம் எல்லை கடந்துவிட்டதன் விபரீத விளைவு மட்டுமே இது //

நியாயமான கருத்து. நீதிமன்ற நடவடிக்கைகளில் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள் என்பதும் என்கௌன்டர்களுக்கு கிடைக்கும் ஆதரவுக்கு முக்கிய காரணம்.

o0o
o0o
o0o

//ஜனநாயகம் , அடிப்படை உரிமை , மனித உரிமை என பேசினால்
நாம் இன்னும் பல நூற்று ஆண்டுகளாக இவ்வாறு பேசிக்கொண்டே இருப்போம்//

அதில் தவறு இருப்பதாக நான் நினைக்கவில்லை. எளிய மனிதர்களுக்கு அரசியல் சட்டம் அளித்திருக்கும் அடிப்படை உரிமைகள் அவசியம் பாதுகாக்கப்பட வேண்டும். இல்லையென்றால் ஒருநாளும் நீயும் நானுமேகூட அதற்கு பலியாக நேரிடலாம்.

முக்கியமாக போலீஸ் இவ்வளவு வெளிப்படையாக சட்டத்தை தன் கையில் எடுத்துக்கொள்ள அனுமதிப்பதும் அகம் மகிழ்வதும் பெரும் ஆபத்தான முன்னுதாரணம் ஆகிவிட கூடும்.

முதலில் சட்டத்தின் பிடிக்குள் அகப்படாத, குற்ற நடவடிக்கைகளையே தம் தொழிலாக கொண்டிருந்த ரௌடிகளை மட்டும் என்கௌன்டர் செய்து கொண்டிருந்தார்கள். இப்போது சட்டத்தின் முன் நிறுத்தி அதிகபட்ச தண்டனை வாங்கிக் கொடுக்க முடிகிற குற்றவாளியையும் போலிமோதல் கொலை செய்திருக்கிறார்கள். அதை கொண்டாடுவது சாமானிய மனிதர்களின் பலவீனத்தை கொண்டாடுவதற்கு சமம்.

o0o
o0o
o0o

இறுதியாக
இந்த இழையின் முதல் மடலில் எழுதப்பட்டுள்ள என் ஆதரவு கருத்துகளை இப்போது நான் கைவிட்டு விட்டேன் என்பதையும் சொல்லிக்கொள்கிறேன்.
மேலும்...