மணிரத்னம் - முன்முடிவான சில மதிப்பீடுகள்

Posted: Sunday, June 20, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
மணிரத்னம் பற்றிய ஒரு குழு உரையாடலின் மீதான என் கருத்துகள்:

மணிரத்னம் படங்களை ரோஜாவுக்கு முன், ரோஜாவுக்கு பின் என்று பிரித்து பேச வேண்டும். இன்னும் எத்தனை நாளுக்கு நாயகன், மௌனராகம், தளபதி என்று சொல்லிக்கொண்டு இருக்கப் போகிறீர்கள்? அதனால்தான் அன்று கேட்டேன், 2000-க்கு பிறகு வந்த மணிரத்னம் படங்களில் சிறந்த படமாக ஒன்றை கூறமுடியுமா என்று. அலைபாயுதே படம் ஒன்று மட்டும் தேறுகிறது. ஆனால் அதன் வெற்றிக்கு காரணம் 'அன்னகிளி’ ஆர்.செல்வராஜின் கதை வசனமும் ரஹ்மானின் இசையும்தான்.

ரோஜாவுக்கு பிறகு மணிரத்னத்தின் கண்ணெல்லாம் அகில இந்திய சினிமா மார்க்கெட் மீதுதான். ஹிந்திக்கும் தமிழுக்கும் பொருந்துகிறார் போன்ற கலவையான ஒரு பேக்கேஜை எடுத்து கொடுத்து வருகிறார். அது தாமரை இலை தண்ணீர் போன்று ரசிகனின் மனதில் ஒட்டியும் ஒட்டாமல் கடந்து சென்று கொண்டிருக்கின்றன.

தமிழ் சினிமா கொண்டாடிய மணிரத்னம், பாம்பே படத்திற்கு பிறகு ஹிந்தி ரத்னம் ஆகி, முழுவதுமாக விலகிச் சென்று விட்டார். இருந்தும் மேட்டுக்குடி அவரை இன்னும் கொண்டாடி வருவது அவர் எடுக்கும் ஒயிட் காலர் படங்களுக்காக. அவர் அழுக்கையோ வியர்வையையோ தரையில் கால் பாவி நடக்கும் மனிதர்களின் வாழ்க்கைமுறையையோ இதுவரை படங்களில் காட்டியதில்லை. அப்படி காட்டப்படும் காட்சிகளும் நுனிப்புல் மேய்ந்ததாக, அதிலும் ஒரு ஒயிட் காலர் நாசூக்குத்தனம் கொண்டதாகவே இருக்கும்.

அவர் தன் படங்களில் சுஜாதா, செல்வராஜ், ரஹ்மான், வைரமுத்து, சந்தோஷ் சிவன், ஸ்ரீராம் என்று தத்தம் துறைகளில் ஜீனியஸாக இருக்கும் நபர்களை பயன்படுத்தி காட்சிகளை சிறப்பித்துக் கொள்கிறார். கதைக்கு இருக்கவே இருக்கிறது இந்திய புராணங்களும் இதிகாசங்களும் அதுவும் போக திருபாய் அம்பானி, எம்ஜிஆர் போன்றவர்களின் வாழ்க்கை வரலாறுகளும்.

மணிரத்னத்தின் படைப்பு திறமை நீர்த்து போய், அவர் ஒரு தேர்ந்த வியாபாரி ஆகிவிட்டார் என்பது எங்களின் குற்றசாட்டு அல்ல; ஆதங்கம்! அதை புரிந்துகொள்ளாமல் இன்னும் 15 (அ) 20 வருடங்களுக்கு முன்பு வந்த அவரின் படங்களின் காட்சிகளை எடுத்து போட்டுக்கொண்டு அவருக்கு கட்சி கட்டிக்கொண்டு இருப்பது எதார்த்தத்தை விலக்கிய ஒரு முன்வரிசை ரசிக மனோபாவத்தையே காட்டுகிறது. அதை விடுத்து, படைப்பை முன்வைத்து அதை விதந்தோதுவதும் விமர்சிப்பதும்தான் அப்படைப்புக்கும் அவரவர் ரசிப்புத் தன்மைக்கும் செய்துகொள்ளும் நியாயமாக இருக்கும்.

இன்று மணிரத்னம் என்ன மாதிரி படைப்புத் திறன்களுடன் பரிமளிக்கிறார் என்பதுதான் பிரச்னை. எனக்கு பாலசந்தரின் 45 வருடங்களுக்கு முன்வந்த நாணல் படம் முதற்கொண்டு 90-கள் வரையான அவரின் பல படங்கள் பிடிக்கும் என்பதற்காக அவர் பிற்காலத்தில் எடுத்த, கல்கி, பார்த்தாலே பரவசம், பொய் போன்ற த்ராபைகளை எல்லாம் சிரமேற்கொண்டு கொண்டாட முடியாது. அந்த காலகட்டங்களில் அவர்கள் யார் என்பதை பொறுத்தே அவரவருக்கான தகுதி நிர்ணயம் ஆகிறது. இதனை கண்களை அகல திறந்து மணிரத்னத்தின் அத்யந்த ரசிகர்களும் எடை போட்டு பார்க்க முயன்றால், அவர்களுக்கும்கூட புரியக்கூடும்.

மணிரத்னம், பக்கம் பக்கமான வசனங்களுடன் நாடகத்தனமாக இருந்த தமிழ் சினிமாவை, குறைவான வசனங்களுடன் கதையை காட்சிப்பூர்வமாக விளக்கச் செய்து மற்றவர்களுக்கு ஒரு முன்னோடியாக தன்னை நிறுவிக்கொண்டவர். அதற்கு இக்காட்சியே நல்ல ஒரு உதாரணம்.

அப்படிப்பட்டவரின் படைப்பாளுமை பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றையும் இதிகாச கதைகளையும் சமகால நிகழ்வுகளையும் மலினப்படுத்தி படம் எடுத்து மார்க்கெட் செய்யும் உத்தியாக எதிர்மறையாக பரிணாமம் கண்டிருப்பதை எப்படி விமர்சிக்காமல் இருக்கமுடியும்? அவர் படங்களில் தொட்டுக்காட்டப்படும் சமூக அவலங்கள் எந்த வகையிலும் அதற்கான தீர்வை நோக்கிய முன் நகரலாக இருந்ததில்லை. காட்சியில் கொஞ்சம் காரத்தைக்கூட்ட பயன்படுத்தப்பட்டவையாகவே இருந்து வந்துள்ளன.

இங்கே பகிர்ந்துகொள்ளப்பட்டுள்ளது போல அங்கொன்றும் இங்கொன்றுமான முத்திரை பதிக்கும் காட்சிகளால்தான் மணிரத்னம் இத்தனை பெயரையும் ரசிகர்களையும் பெற்றார். பெற்றதை தக்கவைத்துக் கொள்ளும்படியான படைப்புகள் தொடர்ந்து அவரிடம் இருந்து வெளியாகவில்லை. ராவணன் விமர்சனங்களை காணும்போது இதுவும் அப்படித்தான் ஆகிவிட்டதாக தோன்றுகிறது.

இவை சுமார் பத்தாண்டு கால மணிரத்னம் படங்களைப்பற்றிய என்னுடைய மதிப்பீடு மட்டுமே. இக்காலகட்ட படங்களில் தனித்தனியாக சில காட்சிகள் சிறப்பாக கையாளப்பட்டிருக்கிறதே தவிர, ஒட்டு மொத்தமாக ஒரு படைப்பாளியாக அவர் தோல்வியடைகிறார் என்பதே என் கருத்து.

ராவணன் படம் இன்னும் நான் பார்க்கவில்லை. பார்க்கக்கூடாது என்று எந்த சங்கல்பமும் இல்லை. பார்த்துவிட்டு என் நேர்மையான கருத்துகளை பகிர்ந்துகொள்கிறேன்.
மேலும்...

இளையராஜா, தும்பி வா தும்பக்குடத்தின், சங்கத்தில் பாடாத கவிதை மற்றும் அகத்தூண்டல் பற்றி ஒரு பார்வை

Posted: Friday, June 18, 2010 | Posted by no-nononsense | Labels: 2 comments
சங்கத்தில் பாடாத கவிதையின் ஒரிஜினல் வெர்சனோட லிரிக்:

தும்பி வா தும்பக்குடத்தின் துஞ்சத்தாய் ஊஞ்ஞால் இடாம்
தும்பி வா தும்பக்குடத்தின் துஞ்சத்தாய் ஊஞ்ஞால் இடாம்

படம்: ஓலங்கள்

http://www.youtube.com/watch?v=l1lBbkWx0Dk

ஓலங்கள், பாலுமகேந்திரா, இளையராஜா கூட்டணியில் உருவான மலையாளப் படம். இதே டியூனை சமீபத்தில் இந்தி ‘பா’ படத்தில் கூட இளையராஜா பயன்படுத்தி இருக்கிறார். கேட்கும் யாரையும் வசீகரிக்கும் ஓர் இன்னிசை அது.

ஆனால் அந்த அற்புதமான டியூனை எங்கே இருந்து ராஜா எடுத்திருக்கிறார் என்றால்: http://www.youtube.com/watch?v=vankaSlfSr0
(Song: Istanbul, Not Constantinople)

இருந்தாலும், வருத்தப்பட வேண்டியதில்லை. இதை இளையராஜவுக்கு கிடைத்த inspiration என்றே நாம் எடுத்துக்கொள்ளலாம்.

காரணம், Copy - inspiration-க்கு இடையே என்ன வேறுபாடு என்றால், ஒரு கலை படைப்பின் மூலத்தை அப்படியே எடுத்து பயன்படுத்தி அதில் தன் பெயரை போட்டுக்கொள்வது copycat வேலை. ஆனால் அதையே அதன் மூலத்திலிருந்து 10 மடங்கு சிறப்பாக வெளிப்படும்படி தன் திறமையை காட்டி இழைத்து, முன்னிலும் ஒரு ஆகச்சிறந்த படைப்பை உருவாக்குவது நிச்சயம் copycat வேலை கிடையாது. அதுதான் inspiration (அகத்தூண்டல்).

இளையராஜாவின் ’தும்பி வா தும்பக்குடத்தின்’ அதன் மேற்கத்திய மூலப் பாடலில் இருந்து முற்றிலும் மேம்பட்ட ஒரு படைப்பு என்பதை அதை கேட்கும், அதன் இசை ஆக்கிரமிக்கும் இசையின் நுட்பங்களில் நுண்ணறிவில் பரிட்சயம் இல்லாத எந்த ஒரு சாதாரண ரசிகனாலும் சொல்லமுடியும்.

தமிழில் இந்த மாதிரி மேம்பட்ட மறுஆக்கங்களுக்கு எப்போதும் ஒரு பெரும் தேவை இருந்துவருகிறது. அதை கமல், இளையராஜா மாதிரி ‘கலைஞர்களின் கலைஞர்கள்’ தான் நிறைவு செய்து வருகிறார்கள். Planes, Trains and Automobiles - படத்திலிருந்து பிறந்ததாகவே இருக்கட்டுமே - அன்பே சிவம். அதை தமிழ்ச்சூழலுக்கு ஏற்ற வகையில் கமல் கையாண்ட விதத்தில் இன்று அது எத்தனை தமிழர்களின் ஆதர்சமாக இருக்கிறது. அப்படம் ஒருவேளை தமிழில் வராமலே போயிருந்தால் இன்று அதன் இடம் எவ்வளவு பெரிய வெற்றிடம் என்பதை நம்மால் உணர முடியும். கலைஞர்களின் கலைஞர்கள் அதை எடுத்தாள்வதற்கு முன்பே உணர்ந்து விடுகிறார்கள். அவ்வளவுதான் வேறுபாடு.
மேலும்...

பழசு என்றும் புதுசு: தேடினேன் வந்தது

Posted: | Posted by no-nononsense | Labels: 0 comments
யாருக்கும் மனதில் நினைத்ததை அடைந்து விட்டால் ஆனந்தம்தான். அந்த ஆனந்தத்தை வெளிப்படுத்த ஆடிப் பாடுவதை விடவும் களிப்பு தரும் வேறு ஒரு வழி உண்டோ இவ்வுலகில்?

அதிலும் ஆடுவது அழகு நங்கையாக இருந்து, ஆட்டமும் அற்புதமாக அமைந்து விடும் போது, அதைக் காணும் கண்களுக்கு பரவசம் விருந்துதான்...!

--

சும்மா, FM ரேடியோ ஸ்டைலில் எழுதிப் பார்த்தேன்.

டைரக்டர் ஸ்ரீதர், சிவாஜியுன் இணைந்து எடுத்த காமெடி படம்: ஊட்டி வரை உறவு. விஸ்வநாதன் இசை!

இப்படத்தில் அனைத்து பாடல்களுமே ஹிட், என்றாலும், எனக்கு அவற்றில் ’தேடினேன் வந்தது’ முக்காலத்து விருப்பப் பாடல். இப்பாடலின் நடன அசைவுகள் அக்காலத்தில் பிரபலமான ஒன்று. ஆடலை ரசித்தபடி அலட்டல் இல்லாமல் அஸால்டாக சிவாஜி கொடுக்கும் போஸ்கள் - இதன் அழகுக்கு அழகு!

”என் மனத்தில் ஒன்றைப் பற்றி
நான் நினைத்ததெல்லாம் வெற்றி
நான் இனிப் பறிக்கும் மலர் அனைத்தும்
மனம் பரப்பும் சுற்றி”

என்ன ஒரு சந்தம்! கண்ணதாசனைத் தவிர இவ்வளவு எளிமையான வார்த்தைகளில் குதூகலத்தை இட்டு நிரப்ப யாரால் முடியும்!

‘பெண் என்றால் தெய்வமாளிகை திறந்து கொள்ளாதோ’ என்று சுசீலா உச்ச ஸ்தாயில் பாடும்போது உடன் இசையை ரசிக்கும் அத்தனை உதடுகளும் அந்த ராகத்துடன் இணைந்து முணுமுணுக்க ஆரம்பித்து விடுகின்றன.

http://www.youtube.com/watch?v=8dhDt0Q7e8w


படம் : ஊட்டி வரை உறவு
பாடல் : தேடினேன் வந்தது, நாடினேன் தந்தது
பாடியவர்: சுசீலா


தேடினேன் வந்தது, நாடினேன் தந்தது
வாசலில் நின்றது, வாழவா என்றது

(தேடினேன்)

என் மனத்தில் ஒன்றைப் பற்றி
நான் நினைத்ததெல்லாம் வெற்றி
நான் இனிப் பறிக்கும் மலர் அனைத்தும்
மனம் பரப்பும் சுற்றி
பெண் என்றால் தெய்வ மளிகை
திறந்து கொள்ளாதோ...ஓஹோ...
ஓஹோ. ஓஹோஹோ...

(தேடினேன்)

இனி கலக்கம் என்றும் இல்லை
இதில் விளக்கம் சொல்வதுமில்லை
இனி உறக்கம் உண்டு விழிப்பதுண்டு
மயக்கம் உண்டு நெஞ்சே
பெண் என்றால் தெய்வ மாளிகை
திறந்து கொள்ளாதோ...ஓஹோ...
ஓஹோ. ஓஹோஹோ...
மேலும்...

Gulf Oil Spill பற்றிய இருட்டடிப்பு மற்றும் இந்திய ஏமாளித்தனம்

Posted: Thursday, June 17, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
இதை எழுதுவதற்கு முன்புகூட ஒருமுறை தினமலரை கடைசிப் பக்கம் வரை புரட்டிப் பார்த்தேன், ம்ம் ஹூம்..! இதைப்பற்றி ஓபாமா டிவியில் தோன்றி சிறப்பு உரையாற்றிய பின்னரும்கூட இங்கே அது பேப்பரில் வரவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

ஆளும்கட்சி பற்றிய செய்தியாக இருந்தால்கூட புரிந்துகொள்ள முடியும். ஆனால் அமெரிக்க செய்தி ஒன்றுக்கு ஏன் இந்த இருட்டடிப்பு என்பதுதான் புரியவில்லை.

அப்படி இதை அமெரிக்க செய்தி என்று மட்டுமே ஒதுக்கி விட்டு விட முடியுமா என்ன? சூழியலுக்கே எவ்வளவு பெரிய சீர்கேடு இது. Oil spill, எண்ணை முழுதும் தீர்ந்தால்தான் நிற்கும் போலிருக்கிறது. BP-யே திவால் ஆகிவிடும் போலுள்ளது. இதெல்லாம் நம்மூர் பத்திரிக்கைகளுக்கு செய்தியாக தெரியவில்லை என்பது வாசகனை ஏமாற்றும் வேலை. இதனால்தான் இன்று எல்லாவற்றுக்கும் இணையத்தையே சார்ந்திருக்க வேண்டியுள்ளது.

()

போபால் விஷயத்தில் 3.3 பில்லியன் டாலர் நஷ்ட ஈடு கேட்டதற்கு, 450 மில்லியன் டாலர் மட்டுமே இந்தியாவுக்கு தர ஒப்புக்கொண்ட அமெரிக்கா, பிரச்னை அவர்கள் தேசத்தில் என்றதும் BP-யை முழு பொறுப்பாக்குகிறது.

அமெரிக்காவுக்கு ஆமாம் சாமி போடும் அரசாங்கம்தான் அன்றும் இன்றும் இந்தியாவில் இருந்துவருகின்றன. நம் மன்மோகன் சிங் தான் அதில் நம்பர் ஒன். அணுசக்தி ஒப்பந்த விஷயத்தில் ஒரு புதிய ஷரத்து சட்ட வடிவு பெற தயாராக உள்ளது. அதன்படி எவ்வளவு பெரிய அணு விபத்து ஏற்பட்டாலும், குறிப்பிட்ட அளவுக்கு மேல் அமெரிக்கா நஷ்ட ஈடு தராது. Only a fixed compensation. இதை எப்படியாவது நிறைவேற்றிவிட மன்மோகன் சிங் பிரம்ம பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறார். எவன் செத்தால் பொழைச்சால் அவருக்கென்ன. அவர் காலம் முடிந்தது. அவர் பிள்ளை அமெரிக்காவில் இனி நன்றாக இருந்தால் போதும். ஆண்டானியா மைனோவுக்கு அமெரிக்காவுடன் நல்லுறவு நீடித்தால் போதும்.

இந்த மாதிரி சமூக விரோத, தேச விரோத, மனித விரோத செய்திகளை எல்லாம் படிக்க படிக்க இருப்பின் மீதே வெறுப்பு உண்டாகிறது. பேசாமல் இணையம், பத்திரிக்கை, செய்திகள், அரசியல் இத்யாதி இத்யாதிகளையெல்லாம் ஒட்டு மொத்தமாக ஏறக்கட்டிவிட்டு, சமூகம், சிந்தனை, விவாதம், வெட்டி பேச்சுக்களை எல்லாம் மூட்டைக்கட்டிவிட்டு, சராசரி இந்தியனாக மாறினால்தான் என் BP-க்கு (இது வேற BPங்னா..) சேதாரம் செய்கூலி(டாக்டருக்கு) இல்லாமல் இருக்கும் என்று தோன்றுகிறது.
மேலும்...

பழ.கருப்பையாவின் ‘குற்றவாளிகளின் சொர்க்கம் இந்தியா’ கட்டுரயை முன்வைத்து

Posted: | Posted by no-nononsense | Labels: 0 comments
பழ.கருப்பையாவின் ‘குற்றவாளிகளின் சொர்க்கம் இந்தியா’ கட்டுரயை முன்வைத்து:

பழ.கருப்பையாவின் அனல் தெறிக்கும் இன்னொரு அருமையான கட்டுரை. அத்தனையும் சத்தியம். ‘பேய்கள் அரசாளும் நாட்டில் பிணம் தின்னும் சாத்திரங்கள்’ என்று ஒரு கூற்று உண்டு. பேய்கள் என்னும் வார்த்தைக்கு பதில் ஜனநாயகம் என்று போட்டாலும்கூட பொருத்தமாகவே இருக்கும். இது தோல்வியடைந்த ஜனநாயகம்.

சுற்றுப்புற சூழல் சீர்கேடுகளில் இருந்து இந்த உலகம் தப்பிப் பிழைத்து கிடந்தால், நம் மக்கள் ஏதாவது ஒரு நூற்றாண்டில் முழுமையாக நாகரிகம், கல்வி, சுயமரியாதை, அரசியல் தெளிவு பெறக்கூடும். அன்று இதையெல்லாம் எதிர்க்கும்/கண்டிக்கும்/கழுத்தை பிடித்து பதவியிலிருந்து வெளியே தள்ளும் சுரணை வந்தாலும் வரக்கூடும்.

*

இன்று ஏனோ என்னை வந்தடைவதெல்லாம் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும் செய்திகளாக, கட்டுரைகளாகவே உள்ளன. கசாப்புக்கடையில்தான் வாழ்க்கை என்றால், அச்சூழ்நிலைக்கு ஏற்ப மனதை தகவமைத்துக் கொள்ளாவிடில் வீணில் புருவம் சுருக்கி, நகம் கடித்து, பெருமூச்சு விட்டு நம்மை நாமே சுயவதை செய்துகொண்டுதான் வாழ வேண்டியிருக்கும்.

இனி, எது நடந்தா எனக்கென்ன.. எவனா இருந்தா எனக்கென்ன.. என் பர்ஸில் இருப்பதென்ன.. என்று வாழ்ந்தால்தான் வாழமுடியும் போலிருக்கிறது.
மேலும்...

ஞாநி - என் நோக்கில்

Posted: | Posted by no-nononsense | Labels: 0 comments
சமகாலத்தின் சமூக கோபங்களின் அடையாளம்; பக்க சாய்வற்ற விமர்சனத்தின் சின்னம் - ஞாநி. இவருடய பல கருத்துகளில் எனக்கு மாறுபாடு உண்டு. அதற்காக அவருடைய விமர்சனத்தின் நேர்மையை சந்தேகிக்க முடியாது. தமிழ்நாட்டில் கருணாநிதியை இவர் அளவுக்கு கறாராக விமர்சித்தவர் யாரும் கிடையாது. அதனாலேயே விகடனில் இருந்து துரத்தப்பட்டார். அதனால் மட்டுமே இவர் பேனாவின் கூர்முனை மழுங்கியதில்லை. எங்கே எழுதினாலும் ஒரே டெசிபலிலான குரல்தான்.

ஞாநியின் ‘தீம்தரிகிட’ தான் எனக்கு சமூகத்தின் மீதான மாற்று பார்வையை கற்றுத் தந்தது. அச்சிறுபத்திரிக்கை சில வருடங்கள் முன்பு நின்று விட்டது. அதற்கு பிறகு வேறு எங்கும் முலாம் பூசாத கருத்துகளை நான் படிக்கவில்லை.

சென்னையில் தங்க நேரும் நாட்களில் அடுத்தமுறை நான் சந்தித்து சிறிது நேரமாவது அளவளாவ விரும்பும் ஆளுமைகளில் ஒருவர் ஞாநி. இன்னொருவரை ஏற்கெனவே புக் பண்ணி வைத்து விட்டேன். அவர், பாரதி மணி. (இவரைப்பற்றி ஏற்கெனவே இங்கே எழுதியிருக்கிறேன்).
மேலும்...

பழசு என்றும் புதுசு: ஓடும் மேகங்களே

Posted: Friday, June 11, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
பழைய பாடல் ரசிகர்கள் என்னையும் தவிர்த்து வேறு யாராவது ஒருவராவது இருப்பார் என்னும் நம்பிக்கையில் weekend list-ல் பழைய பாடல்களையும் இனி சேர்க்க இருக்கிறேன்.

http://www.youtube.com/watch?v=DAleVIM18Cw


நாடாளும் வண்ணமயில்
காவியத்தில் நான் தலைவன்
நாட்டிலுள்ள அடிமைகளில்
ஆயிரத்தில் நான் ஒருவன்
மாளிகையே அவள் வீடு
மரக்கிளையில் என் கூடு
வாடுவதே என் பாடு இதில் நான்
அந்த மான் நெஞ்சை நாடுவதெங்கே கூறு

மேட்டுக்குடி காதலை மறுப்பதைக்கூட இவ்வளவு கவிநயத்துடன் செய்யமுடியுமா? விசுவநாதன் ராமமூர்த்தியின் இசையும், கண்ணதாசனின் பாடல் வரிகளும் இணைந்து அதை செய்து காட்டும் ஜாலம் வார்த்தைகளால் விவரிக்க இயலாதது.

ஊரெல்லாம் தூங்கையிலே
விழித்திருக்கும் என் இரவு
உலகமெல்லாம் சிரிக்கையிலே
அழுதிருக்கும் அந்த நிலவு
பாதையிலே வெகுதூரம்
பயணம் போகின்ற நேரம்
காதலியா மனம் தேடும் இதில் நான்
அந்த மான் நெஞ்சை நாடுவதெங்கே கூறு

பாடல் வரிகளை உள்வாங்கிக்கொண்டு இசையுடன் கரைந்து என்னால் சொல்லமுடிவதெல்லாம் அற்புதம் என்னும் ஒரு வார்த்தையை மட்டும்தான்.

ஆயிரத்தில் ஒருவனில் வரும் எல்லா பாடல்களும் என்னுடைய விருப்பப் பட்டியலில் உண்டு.
மேலும்...

உள்வாங்கிக்கொள்வதா, அழிய விடுவதா, எது globalization?

Posted: Sunday, June 6, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
பாரம்பரிய இசையை அழிய விடுவது குறித்த இளையராஜாவின் வருத்தத்தின் மீதான இணைய குழும விவாதம் ஒன்றில் என் கருத்து:

ஹிந்தி படங்களுக்கு இசையமைப்பது என்ன பெரிய குற்றமா? அதற்கு ஏன் அவர் காரணம் தேடி அலையப் போகிறார்? இளையராஜா, ஹிந்தியில் அவ்வளவு பிஸியாகவா இருக்கிறார்?

2007-ல் சீனி கும், 2009-ல் பா, சல் சலே என்று இந்த மூன்று வருடங்களில் மொத்தமே மூன்று படங்களுக்குதான் ஹிந்தியில் இசையமைத்திருக்கிறார். அதனால் உன் கருத்து ஏற்புடையது அல்ல.

இளையராஜா மேடையில் மைக் பிடித்தால் பொதுவாக ஆன்மா, ஜீவன், இசை, கடவுள் என்று அவருக்குமே மட்டுமே புரிந்த மொழிநடையில் உளறிக்கொட்டுவது வழக்கம்தான். ஆனால் இங்கே பேசியுள்ளது அர்த்தப்பூர்வமானது. தமிழ் கலாச்சாரம், தமிழ் பாரம்பரியம் என்று குஷ்பூவின் மீது கல்லெறிந்த கூட்டம், தமிழர்களின் தனிச் சிறப்பான பாரம்பரிய கலை வடிவங்கள் அழிவதைப் பற்றி ஒருநாளும் குரல் எழுப்பியதில்லை. நாம் தமிழர்கள் என்று கோஷம் போட்டு வேஷம் போடுபவர்களும் கல்லெறியத்தான் சொல்லெறிகிறார்களே தவிர, தமிழர்களின் கலாச்சாரத்தின் வேர்களை மீட்டெடுப்பதில் ஒரு துரும்பையும் அசைக்கவில்லை.

எந்த ஒரு இனமாக இருந்தாலும், அதற்கு தன் மொழியின் மீதும், கலாச்சாரத்தின் மீதும் ஒரு குறைந்த பட்ச அக்கறை இருக்கவேண்டும். தமிழர்களிடம் அது கிஞ்சித்தும் கிடையாது. இருந்திருந்தால் கல்லூரிகளில் ‘கல்சுரல்ஸ்’ என்ற பெயரில் அடிக்கப்படும் கூத்துகள், வெறும் சினிமா நடிகையை அழைத்து வந்து அவர்களுடைய ‘மச்சான்ஸ்’ தமிழை கேட்டு கிறுகிறுத்து போவதாக மட்டும் இருந்து வராது.

Globalization என்பது மேற்கத்திய பாரம்பரிய இசையை உள்வாங்கிக்கொள்வதா? அல்லது அதற்கு நம் பாரம்பரிய இசையையும் கலையையும் காவு கொடுப்பதா?

இ.ரா: மயிலாட்டம், ஒயிலாட்டம், பொம்மலாட்டம், தேவராட்டம், கோலாட்டம், பாவைக் கூத்து, உடுக்குப் பாட்டு, கும்மிப் பாட்டு என நம்மிடம் 300 வகையான கிராமியக் கலைகள் இருந்தன. இப்போது அங்கொன்றும் இங்கொன்றுமாக 50 கலைகள் மட்டும் ஒரு சிலரின் சொந்த முயற்சியில் உயிர் வாழ்கின்றன.

இளையராஜா குறிப்பிடும் இந்த 50-ஐயும் விட்டு விடுவோம்; மேலே குறிப்பிட்டுள்ள முக்கியமான எட்டு கலைகளில் நாம் அறிந்து வைத்துள்ளது எத்தனை? அறிந்துகொள்ள விழைபவர்களுக்கு அறிய கிடைப்பது எத்தனை?

ஹே.. அதெல்லாம் சுத்த போரிங்பா.. என்பாயேயானால் இனியும் தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம் என்பது பற்றியெல்லாம் எங்கும் மூச்சு விடக்கூடாது.

இளையராஜாவினுடையது, விளிம்பு நிலையில் இருந்து கிளைத்து வந்து, நாட்டுப்புற செவ்வியல் இசைகளில் கரைகண்ட ஒரு கலைஞனின் உண்மையான ஆதங்கம். அதை கொச்சைப்படுத்தி விமர்சிப்பது, சொல்வது இளையராஜா என்பதால் செய்யப்படுவது. இதையே ரஹ்மான் சொல்லியிருந்தால் உங்களின் விமர்சன பேனா வேறு இங்க் கொண்டு எழுதியிருக்கும்; எழுதிய பக்கம் பாராட்டு மழையால் நனைந்திருக்கும். காரணம் இப்போது அவர் காட்டில் அல்லவா பரிசு மழை!

சென்னையில் கனிமொழியின் பங்களிப்பில் நடத்தப்பட்டு வரும் சென்னை சங்கமம் ஒரு முன்மாதிரியான நிகழ்ச்சி என்று பார்த்த பலரும் பாராட்டுகிறார்கள். அதேபோல் பொங்கல் சமயத்தில் சகாயம் நடத்திய நாமக்கல் ஓசை நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக குளக்கரை திடலில் ஏற்பாடு செய்யப்பட்ட பாரம்பரிய கலை வடிவங்களின் மேடை நிகழ்ச்சியை நீ கண்டிருக்க வேண்டும். அந்த இசையும் நடனமும் உன்னுடைய உணர்வுகளில் புரிந்த ஜாலங்களில் நாம் எவ்வளவு சிறப்பான ஒன்றை இழந்து கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்திருப்பாய்.

சாதாரண ரசிகர்களுக்கே இப்படி என்றால் இளையராஜா போல் நாட்டுபுற செவ்வியல் இசையில் ஊறித் திளைத்த, அதன் தாத்பர்யங்களில் வித்வத்துவம் பெற்ற ஒருவருக்கு, அது வழக்கொழிந்து வருவதை காணும்போது எழும் ஆதங்கத்தையும் ஆவேசத்தையும் மதிக்க வேண்டும். தாமாக ஒரு காரணம் கற்பித்துக்கொண்டு இகழக்கூடாது.
மேலும்...