வெள்ளை காலர் புரட்சிவாதிகள்!

Posted: Thursday, April 29, 2010 | Posted by no-nononsense | Labels: , 0 comments
இணையத்தின் எட்டு திக்கிலும் எங்கெங்கு நோக்கினும் சமூகத்தை பற்றிய புலம்பல்களும் அரசியல் குறித்த அரற்றல்களும் அறச்சீற்றம் குறித்த அறிவுரைகளுமாக.. அப்பப்பா!

ஏன் சமூகம் இப்படி இருக்கிறது? ஏன் மக்கள் இப்படி இருக்கிறார்கள்? ஏன் ஊழலுக்கு எதிராக லஞ்சத்துக்கு எதிராக அரசியல்வாதிக்கு எதிராக அவனின் சுரண்டலுக்கு எதிராக ஜாதீயத்துக்கு எதிராக எவனும் தெருவில் இறங்கி போராட மாட்டேன் என்கிறார்கள்? அது ஏன் அப்படி? இது ஏன் இப்படி?

— என்று கேட்பவனெல்லாம் வெளிநாட்டில் வெள்ளை காலர் வேலையில் இருக்கிறான். அவனுக்கு குறைந்தது அடுத்த பத்தாண்டுகளுக்கு பணத்தைப் பற்றிய பிரச்னை இல்லை.

அவதிப்படுபவனோ அடுத்த மாத சம்பளத்திற்காக அனுதினமும் அல்லாடிக் கொண்டிருக்கிறான். இதில் புரட்சியாம், போராட்டமாம், கிளர்ச்சியாம்!

அட போங்கடா டே!
மேலும்...

கண்டக்டர்களும் மனிதர்களே!

Posted: | Posted by no-nononsense | Labels: 0 comments
மனிதர்கள் ஏறும் போதும், இறங்கும் போதும் பெரும்பாலும் அந்த நடத்துனர் மனிதர்களாக பார்க்கவில்லையென்றே தோன்றியது. "ஏய் ஏறி வா, ஏறி வா, ஏறி வா!!!, சீக்கிரம், சீக்கிரம், சீக்கிரம் இறங்கு" என்று அனிச்சையாய் வார்த்தைகள் கோப நெருப்பை எச்சிலாய் மனிதர்களின் மனதில் உமிழ்ந்து கொண்டிருந்தது. அதை உள்வாங்கி உணரும் நிலையில் பயணிகள் என அழைக்கப்படும் மனிதர்கள் இல்லை

பல நாட்களாக இதைப்பற்றி எழுத வேண்டும் என்று எண்ணியிருக்கிறேன். கடந்த மூன்று ஆண்டுகளாக வாரத்தின் பெரும்பாலான நாட்களில் பஸ்ஸில் பயணம் செய்த அனுபவத்தில் சொல்கிறேன்: கண்டக்டர் வேலை அப்படி ஒன்றும் எளிமையானது இல்லை. பொதுவில் கண்டக்டர்களை பற்றி இருக்கும் — எடுத்தெறிந்து பேசி எரிச்சல் படும் நபர்கள் — என்னும் பிம்பமும் சரியானது இல்லை.

ஒரு முனையில் இருந்து மறுமுனைக்கு டிக்கெட் அடித்து திரும்புவதற்குள் அவர்கள் படும் சிரமம் நாம் பட சம்மதியோம். அதிலும் வேலூருக்கு 7 ரூ டிக்கெட்டுக்கு எல்லோரும் 10 ரூ, 20 ரூ, 50 ரூ என்று எடுத்து நீட்டி மீதி சில்லைரையை நயா பைசா சுத்தம் அவசியம் கேட்டு செய்யும் அழிச்சாட்டியம் உண்மையில் ஓர் அராஜகம். அந்த நேரத்தில் மகாத்மா காந்தியே கண்டக்டராக இருந்தாலும் மடாரென்று மண்டையை பார்த்து ஒன்று போட்டால்தான் என்ன என்றுதான் அவருக்கும் கூட தோன்றும்.

எத்தனை தடவை ’டிக்கெட் டிக்கெட்’ என்று கத்தினாலும் பராக்கு பார்த்துக் கொண்டிருந்து விட்டு, பின்னர் அவர் ஒன்றுக்கு மூன்று முறை தலைகளை எண்ணி பார்த்து, கடைசியாக சீட்டுகளை காட்டச் சொல்லும் போது பல்லிளித்து பணத்தை எடுத்து நீட்டும்போது, எவ்வளவு மகா பொறுமைசாலி என்றாலும் வரும் கோபத்தில் தத்தகாரங்கள் போட்டு தாறுமாறாக திட்டத்தான் தோன்றும்.

இருவர் அமரும் சீட்டுகளில் நூல் பிடித்தார் போல எல்லோரும் ஜன்னலோரம் சென்று ஓரொருவராக அமர்ந்து கொண்டு எழ மாட்டேன்று என்று செய்யும் அடத்தை, அறியாமை என்றோ அப்பாவித்தனம் என்றோ அப்படியெல்லாம் எளிதாக எடுத்துக் கொண்டு விட முடியாது. அந்த இடத்தில் கண்டக்டரானப்பட்டவர் கத்தினால்தான் வேலை நடக்கும்.

முன்னால் டிரைவருக்கு இணையாக ஒரு சீட்; பின்னால் கட்டங் கடைசியாக ஒரு சீட் என்று இரண்டு இருந்தாலும், பெரும்பாலும் பயணிகளுக்கு ஒதுக்கி விட்டு நின்றபடியே வரும் கண்டக்டர்கள்தான் எண்ணிக்கையில் அதிகம்.

எப்போதடா தவறு நடக்கும்; கூட்டத்தோடு கூட்டமாக கும்ம வாய்ப்பு கிடைக்கும் என்று கழுகு கண்களோடு கண்டக்டர் மீது பொதுவில் ஒரு வன்மத்தோடு பயணிகள் காத்திருக்கிறார்கள். சில்லரையில்லா காரணத்தால் ஐம்பது பைசா கொடுக்கவில்லை என்றாலோ, இல்லை இந்த பஸ்ஸூக்கு இங்கே ஸ்டாப் கிடையாது என்றாலோ, அல்லது P2P என்பதால் 1 ரூபாய் அதிகமாக வசூலித்தலோ வாயிலிருந்து வரும் வசவுகளை காது கொடுத்து கேட்பவரின் தோல் தடிமனாக இல்லாது போனால் கூனி குறுகி வாழ்க்கை வெறுத்து போக வேண்டியிருக்கும்.

(@#$% மவனே... %$#@ பயலே... உன் பொண்டாட்டி புள்ளைங்க &^#$..., இதெல்லாம் நேற்று ஒரு 1 ரூபாய் பிரச்னையில் கண்டக்டர் ஒருவர் கேட்க நேர்ந்த தூசணங்கள்)

இன்னும் -

உள்ளே நிற்க இடம் இருந்தும் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பம்மாத்து காட்டியபடிதான் வருவேன் என்னும் கல்லூரி இளைஞர்கள்,

போலீஸ்காரர்கள், வக்கீல்கள் போன்ற ஓசி கிராக்கிகள்,

’சார், ரொம்ப ஸ்டிரிக்ட்!’ டிக்கெட் பரிசோதகர்கள்,

நக்ஸல்பாரிகளை விட மோசமான மப்(பு)ஸல்பாரிகள்...,

என்று அனுதினமும் டிரிப் முடித்து கணக்கு முடிப்பதற்குள் கண்டக்டர்கள் சந்திக்கும் பிரச்னைகள் இவ்வளவுதான் என்று இல்லை.

அவர்கள் எல்லாவற்றையும் சமாளிக்கிறார்கள். முடிந்தவரை பொறுமையாக இருக்கிறார்கள். முடியாத பட்சத்தில் இறைஞ்சுகிறார்கள். அதற்கும் மீறி விட்டால் அமைதியாக பஸ்ஸை நிறுத்தி விட்டு இறங்கிக் கொள்கிறார்கள். அதற்கு மேல் அவர்களால் செய்யமுடியக்கூடியது ஒன்றும் இல்லை.

அப்படியென்றால் அநாவசியமாக கத்தி ஏறுக்கு மாறாக பேசுபவர்கள் யாரும் இல்லையா என்றால், இருக்கிறார்கள். ஆனால் நாம் அந்த மாதிரி நபர்களை மட்டுமே குறித்து வைத்துக் கொண்டிருக்கிறோம்; ஆனால் அவர்கள் பத்துக்கு இருவர் மட்டுமே. மற்றவர்களை நாம் கவனிக்க தவறுகிறோம்.

மேலும், இதெல்லாம் அடிக்கடி பயணம் செய்பவர்களால் மட்டுமே அவதானிக்க முடியக் கூடிய சில விஷயங்கள். மற்றவர்களுக்கு என்றைக்கோ பார்த்த சம்பவம் மட்டுமே என்றென்றும் பிம்பமாக இருக்கும்.

இது கண்டக்டர்களுக்கு மட்டுமன்று, எல்லா துறையினருக்கும் பொருந்தும்.


ம‌னித‌னாக‌ இருக்கும் வ‌ரை சுக‌மே.... கனவுகளின்றி ஆழ்ந்து தூங்கும் போது ம‌னித‌னாகவே இருக்கிறோம், அதுதான் நிஜ‌முகமும் கூட‌.

தவறு. மனிதனின் நிஜமுகம் அதுவன்று. விழித்திருக்கும் நிலையில் இன்பம், துன்பம், கோபம், குரோதம், விரோதம், இத்யாதி இத்யாதி உணர்ச்சி நிலைகளுக்கு ஆட்பட்ட நிலையில் நிகழும் அவனின் செயல்களே மனிதனின் நிஜ முகம். அது சிலருக்கு சாந்தமாக இருக்கலாம். சிலருக்கு குரூரமாக இருக்கலாம். ஆனால் அதுதான் உண்மையான மனித முகம்.

இந்த உணர்ச்சிகள் நீக்கப்பட்ட - ஒரு கோமா நிலையில் - இருக்கும் ஒருவனை முழுமையான மனிதன் என்று மருத்துவமே ஏற்றுக் கொள்வதில்லை எனும்போது, இம்மாதிரி தத்துவ விசாரங்களைப் பற்றியெல்லாம் அதிகம் அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை. இது தவறான கருதுகோள்.

- எழுதப்பட்ட இடத்தின் மூலம் தெரியவில்லை. இதனை முன்வைத்து நண்பர்களுடன் நடந்த உரையாடலில் என் கருத்து.
மேலும்...

ஆங்கிலம் மட்டும்தான் அமைச்சருக்கு தகுதியா?

Posted: | Posted by no-nononsense | Labels: 0 comments
அழகிரி நாடாளுமன்றத்தில் துரை விவாதங்களில் பங்கெடுத்துக் கொள்ளாமல் இருப்பது குறித்த விவாதத்தில்:

அழகிரியை முதலில் தமிழில் பேச அனுமதியுங்கள். பிறகு ஏன் பாராளுமன்றத்தில் பேசவில்லை என்று கேளுங்கள். அதுவரை வேற்றுமையில் ஒற்றுமை என்பதெல்லாம் வெற்று கோஷமேயன்றி வேறல்ல.

நமது அரசியல் சட்டம் அனுமதித்துள்ள தகுதிகளின் படியே அழகிரி அமைச்சராகி இருக்கிறார். இருந்தும் ஆங்கிலம் தெரியாது என்னும் ஒரு காரணத்தினால் மட்டுமே அவரால் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பங்கு பெற முடியாமல் இருப்பது, நமது நிர்வாக அமைப்பியலுக்குத்தான் இழுக்கு. அழகிரிக்கு அல்ல.

அவர் விமானத்தில் அதிகமுறை பறந்தார் என்பதன் புள்ளி விவரங்கள் எல்லாம் சரிதான். இதேபோல் எல்லா அமைச்சர்களுக்கும் வெளியிடப்பட்டால்தான் பட்டியலில் அழகிரி எந்த இடத்தில் இருக்கிறார் என்று சொல்லமுடியும்.

உள்ளூர் அமைச்சர் ஒருவர் நாளொரு நவீன கழிப்பிடம் பொழுதொரு பொட்’டீ’க்கடை என்று எதையாவது திறந்து வைத்துக்கொண்டு எப்போது பார்த்தாலும் இங்கேயே வட்டமடித்து சுற்றித் திரிகிறார். எந்த சந்து பொந்தில் திரும்பினால் அவரை வரவேற்றுத்தான் போஸ்டர்கள்! பெரும் அலர்ஜியாக இருக்கிறது. அவரெல்லாம் கடைசியாக எப்போது டெல்லி சென்றார்; அங்கே என்ன இதுவரை பேசியிருக்கிறார் என்பதெல்லாம் அவருக்கே வெளிச்சம். இதுபோல் நெப்போலியன், வாசன் என்று உள்ளூரிலேயே எத்தனையோ பேர். இருந்தும் அழகிரி ஒரு தற்குறி என்பதாலேயே அதிகம் விமர்சிக்கப்படுகிறார்.

அவரை விமர்சிக்க இதனை தாண்டி எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன. அதையெல்லாம் பேச மீடியாக்களுக்கு முதுகெலும்பு இல்லை. இதனை பெரிதுபடுத்துகிறார்கள்.
மேலும்...

கண்ணதாசனின் ஆளுமை விதந்தோதத் தக்கதா?

Posted: Sunday, April 25, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
கடவுளர்களின் லீலா விநோதங்களின் முன்னால் கண்ணதாசனின் காதல் கதைகளெல்லாம் சாதாரணம். அதனால் தன்னை இறைவன் என்று அவர் சொல்லிக் கொண்டதினால் மட்டுமே இழுக்கு நேர்ந்து விட்டதாக கருத வேண்டியதில்லை. மேலும், அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையைப்பற்றி அவருடைய குடும்பத்தாரிடமிருந்தோ அல்லது அவர் பெருந்தலைவராக இருந்த காதல் பெண்களிடமிருந்தோ(நான் காதல் பெண்களின் பெருந்தலைவன்!) எந்த புகாரும் இல்லாத நிலையில், அதை கடுமையான விமர்சனத்திற்கு உட்படுத்துவது அநாவசியம்.

அவர் வாழ்ந்த வாழ்க்கைமுறை, சிலர் வகுத்துக் கொண்டிருக்கும் வாழ்வியல் ஒழுக்க கோட்பாடுகளுக்கு ஒவ்வாததாக இருக்கலாம். அதற்காக அவருடைய பன்முக ஆளுமையை வியக்காமல் விதந்தோதாமல் இருக்க இயலாது. இங்கே டாக்டர் அவர்களும் அதனைத் தான் குறிப்பிடுகிறார்கள்.

எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதிய ‘ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்’ நூலை வெகு அண்மையில்தான் வாசித்து முடித்தேன். அதில் கண்ணதாசனுடனான தன் அனுபவங்களை மட்டும் சில அத்தியாயங்களுக்கு விரித்து எழுதியிருக்கிறார். ஜெயகாந்தனின் பட்டவர்த்தனமான விமர்சனங்களை நாம் அறிவோம். அவருக்கு சரியென்று படுவதையும் தவறு என்று தோன்றுவதையும் முகதாட்சண்யம் இன்றி முழங்கி விடுவார். அவரும் கூட அதில் கண்ணதாசனின் ஆளுமையை போற்றியே எழுதியிருக்கிறார். அதில் சில வரிகளை மேற்கோள் காட்ட விரும்புகிறேன்.

“கவிஞர் கண்ணதாசன் சதா நேரமும் கனவுகளில், கற்பனைகளில், கவிதா சன்னிதானத்தில்தான் இருப்பார் என்று எவரேனும் நினைத்தால் அதைவிடத் தப்பபிப்ராயம் வேறு இருக்க முடியாது.

அவர் எப்போதும் ஏதேனும் திட்டங்கள் போட்டுக் கொண்டிருப்பார். பொருளாதாரப் பிரச்சினைகளில் மூழ்கியிருப்பார். வியாபாரச் சள்ளைகளில் சிக்கிக் கொண்டிருப்பார். அவை அரசியல், சினிமா, பத்திரிக்கை சம்பந்தப்பட்டதாகவும் இருக்கும்.

இந்தச் சூழல்களில் இருந்து தப்பித்துக்கொள்ள அவருக்கு துணையாய் இருந்தது மது மயக்கந்தான்.

கவிதை எழுதுவதுகூட அவருக்குத் துணையாய் இருந்ததில்லை”

“...இப்படிப்பட்ட வாழ்க்கைப் பிரச்சினைக்கு இரையாகிப் போன ஒரு மனிதரிடத்துத் தமிழும் கவிதையும் வந்து தங்கி இளைப்பாறியது எனக்குப் பேராச்சரியத்தைத் தந்தது.

இவருக்கு நிலையான, உயர்வான, உன்னதமான வாழ்க்கை அமைய வேண்டும்’ என்ற நல்லெண்ணத்தால் இவருக்காக நான் பிரார்த்தனை செய்ததும் உண்டு. வேறென்ன செய்ய?

இதையெல்லாம் நான் அவரிடம் நான் குறையாகவோ குற்றமாகவோ காணவில்லை. ஒரு மனிதனிடம் இத்தகைய இயல்புகள் இருக்க காரணமாய் அமைவது ஒரு சமூகத் தன்மையின் விளைவுதான்”

இப்படி அவருடைய நல்வாழ்க்கை குறித்த கவலைதான் ஜெயகாந்தனுக்கும் இருந்தது. கண்ணதாசனின் அரசியல் நிலைப்பாடுகள் என்று நிரந்தரமாக இருந்ததில்லை என்ற போதிலும், கண்ணதாசனைப் பொறுத்தவரை அவரைப்பற்றிய நூல்களைப் படிக்கும்போது அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொண்ட மாதிரி தெரியவில்லை. அவருடைய அசட்டுத்தனங்களையும் தாண்டிய ஆளுமையே எல்லோரையும் வசீகரித்திருக்கிறது.

- கண்ணதாசனின் தனிப்பட்ட பழக்கங்களை முன்வைத்த விவாதத்தில் என் வாதம்: அகத்தியர் குழுமம்
மேலும்...

தற்கால தமிழ்வழிக் கல்வி - சில எண்ணங்கள்

Posted: | Posted by no-nononsense | Labels: 0 comments
அகத்தியர் - யாஹூ குழுமத்தில் எழுதியது:

மதிப்பிற்குரிய திரு.இராமகி அய்யா குறிப்பிடுவது போல அதை எழுதியவர் ஒரு தமிழ்நாட்டு தமிழராய் இருந்தாலும், அதில் ஆச்சரியப்பட ஏதும் இல்லை.

இங்கே தமிழ்நாட்டில் எல்லோரும் தத்தம் குழந்தைகளை LKG -ல் சேர்க்க எந்த மெட்ரிகுலேசன் பள்ளி உகந்தது என்றுதான் பரிசீலிக்கிறார்களே தவிர, தமிழ்ப் பள்ளிகளைப் பற்றி யாரும் யோசிப்பது கூட இல்லை. அப்படி தமிழ்ப் பற்று என்று சொல்லிக்கொண்டு தப்பித்தவறி தன் குழந்தையை கொண்டுபோய் தமிழ்வழிக் கல்வியில் சேர்க்கும் ஓரிருவரும் கேலிப் பொருள் ஆகிறார்கள். அவர்களுடைய குழந்தையின் எதிர்காலத்தை அவர்களே வீணடிப்பதாக பயமுறுத்தப்படுகிறார்கள். (அதில் அர்த்தம் இல்லாமலும் இல்லை என்பதுதான் சொல்லப் போனால் எதார்த்தமும் கூட)

வேறு வழியில்லை, ஆங்கிலப் பள்ளிகளின் கட்டண விகிதங்களை ஈடுகட்ட தம்மால் முடியாது என்பவர்கள் மட்டுமே தமிழ்ப் பள்ளிகளில் குழந்தைகளை சேர்த்து படிக்க வைக்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் சமுதாயத்தின் அடித்தட்டு மக்கள். அவர்களால்தான் அரசுப் பள்ளிகள் உள்ளிட்ட தமிழ்ப் பள்ளிகள் தற்காலத்தில் இயங்கி வருகின்றன. ஆனாலும் அவற்றில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையும் கூட நாளுக்கு நாள் குறைந்தே வருகிறது.

தொடர்பு எல்லைக்கு அப்பாலுள்ள ஓரிரு விதிவிலக்கான இடங்களைத் தவிர, இன்று தமிழ்நாட்டின் எந்த கிராமத்திற்குச் சென்றாலும் அங்கே குறைந்தது ஓர் ஆங்கிலப்பள்ளியாவது செம்மையாக இயங்கி வருவதை காணலாம். ஆங்கிலக் கல்வி வியாபாரம் என்பது கடந்த இருபது வருடங்களில் தமிழகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் விருட்சமென வேர் விட்டிருக்கிறது. தேவை அந்தளவு இருப்பதாலேயே வியாபாரமும் நடக்கிறது.

இதற்கெல்லாம் கழக அரசுகள் தான் காரணமா, இல்லை காங்கிரஸ் அரசு நீடித்திருந்தாலும் இதேதான் நடந்திருக்குமா என்பதெல்லாம் அரசியல் பொருளாதார அறிஞர்கள் ஆராய்ந்து கொள்ளட்டும் என விட்டு விட்டு, இன்னும் மூன்று மாதங்களில் குழந்தையை பள்ளியில் கொண்டுபோய் சேர்க்க வேண்டிய நிலையில் உள்ள ஒரு தகப்பனாக என் முன்னுள்ள வாய்ப்புகளை மட்டும் கொஞ்சம் பரிசீலிக்க விரும்புகிறேன்.

தமிழ், ஆங்கிலவழிக் கல்வியின் பலாபலன்களை மனதிற்குள் ஒப்பீடு செய்து பார்க்கிறேன். இன்றோ, நாளையோ அவள் என்ன மதிப்பெண் பெறப் போகிறாள் என்பதல்ல நம் நோக்கம். +2 முடித்த பிறகு அவள் கற்க போகும் கல்வி என்னவாக இருக்கும்; இப்போது எந்தவழிக் கல்வியில் சேர்த்தால், பின்னால் அது அவளுக்கு வழிகளை திறப்பதாக இருக்கும் என்னும் தொலை நோக்கு தான் மனதில் ஓடுகிறது.

தமிழ்வழியில் +2 வரை சிரமமின்றி படிக்கலாம். கூடவே ஆங்கிலம் ஒரு பாடமாக தொடரும். அதற்குப் பிறகு பொறியியலோ, மருத்துவமோ, கணினியியலோ அல்லது உயர் மேலாண்மை படிப்போ எதுவாக இருந்தாலும், அதை அவள் ஆங்கிலவழியில் படித்து முடிப்பதே பின்னால் அவளுக்கு நல்ல வேலையை பெற்றுத் தரும் என்று தோன்றுகிறது. காரணம் இன்று எல்லா வேலை வாய்ப்புகளிலும் ஆங்கிலத்திற்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

தமிழ்வழியில் படிப்பை முடித்த பல பட்டதாரிகளும் வேலை வாய்ப்பில் ஒரு தகுதியை வேண்டி இன்று ஸ்போக்கன் இங்கிலீஸ் வகுப்புகளின் படியேறி இறங்கிக் கொண்டிருப்பது வெள்ளிடை மலை. காரணம் இங்கே அனைத்து நிறுவனங்களின் நிர்வாகங்களும், அவற்றின் தகவல் பரிமாற்றங்களும், பணியாளர்களுக்கிடையான உரையாடல்களும், சந்திப்புகளும் ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெறுகின்றன. இன்னும் இருபது வருடங்கள் கழித்து வரும் காலத்தில் இதனுடைய வீச்சு இன்னும் அதிகமாக இருக்குமே தவிர குறையாது.

இவ்வாறு இருக்கப் போகும் பணிச்சூழலில், ஆங்கிலம் ரத்தத்தில் ஊறாது போனால் வேலைச்சந்தையில் அவள் பின்தங்க நேரிடும் என்பது எனக்கு பிரத்தியட்சமாக தெரிகிறது. தெரிந்தும், என் தனிப்பட்ட தமிழ் உணர்வு காரணமாக அவளை தமிழ்வழிக் கல்வியில் சேர்த்து பின்னால் பின்தங்க விடத்தான் வேண்டுமா என்னும் கேள்வி எழுகிறது. தானாகவே என் தமிழ் உணர்வு பின்தங்கி நடைமுறை எதார்த்தத்தை ஒட்டி நானும் ஆங்கிலப் பள்ளியின் கதவைத் தட்ட நேர்கிறது.

நமக்கு குழந்தை பிறந்தால் அதை தமிழ்வழிக் கல்வியில் தான் சேர்க்க வேண்டும் என்று நெடுங்காலமாக நான் கொண்டிருந்த லட்சியம், இன்று உண்மையாகவே குழந்தையை பள்ளியில் சேர்க்கப் போகும் ஒரு நாளில் ஒவ்வாத ஒன்றாக மாறித் தெரிகிறது. சிந்தனைவயப்பட்ட நேரங்களில் சரியென்று பட்ட சித்தாந்தம், வாழ்ந்து பார்க்க முனையும்போது பொருந்தா பொருளையே தருகிறது.

என்னைப் போலவேதான் பெரும்பாலான தமிழ்நாட்டு தமிழர்களும் என்று சொல்லமுடியும். மற்றபடி, சில பட்டிமன்றங்களில் நகைச்சுவைக்காக கூறப்படுவதைப் போல குழந்தை “டாடி” ”மம்மி” என்று கூப்பிட்டால்தான் பெருமை என்பதிலெல்லாம் உண்மையில்லை.

குழந்தையை ஆங்கிலவழிக் கல்விக்கு அனுப்புவது தவறு அல்ல. அவள் தமிழ் தெரியாமல் வளர்வதை அனுமதிப்பதுதான் தவறு என்று நான் நினைக்கிறேன். அதற்கான பொறுப்பு அதன் பெற்றோரையே சார்ந்தது. இன்றைய தலைமுறையின் இவ்விதநிலைக்கு அவர்களை மட்டுமே பொறுப்பாக்குவது நம் தவறை நாம் மறுபரிசீலனை செய்துகொள்ளாமல் விடுவதற்குச் சமம்.

இராமகி அய்யா அவர்கள் புலம்பெயர் தமிழர்களின் தமிழ் அக்கறைப் பற்றி விதந்து கூறியிருந்தார்கள். எனக்கிருக்கும் புலம்பெயர் நண்பர்களைப் பொறுத்து யோசிக்குபோது, அங்கேயும் நிலை மாறி வருவதாகவே தோன்றுகிறது. இலங்கையிலிருந்து அண்மை காலத்தில் வெளியேறிய தலைமுறையினர் மட்டுமே தமிழுடன் வாழ்கிறார்கள். அவர்களுக்கு புலத்தில் பிறக்கும் குழந்தைகளோ தமிழைத் தடுமாற்றத்துடன் பேச மட்டும் செய்துகொண்டு, உள்ளூர் பாஷையில் எழுதவும் படிக்கவும் செய்கிறார்கள். இத்தலைமுறையில் குறைவாக இருக்கும் விகிதாச்சாரம், அடுத்த தலைமுறையில் தமிழ்நாட்டு தமிங்கில தமிழரை எட்டிப் பிடிக்கலாம்.

தமிழில் படிப்பவர்களுக்கு வேலை வாய்ப்புகளில் பிரச்னை இல்லை எனும் நிலை வரும்போதுதான் இன்றைய நிலை மாறும். ஆனால் அதற்கான புறவயச் சூழல் புத்திக்கெட்டியவரை பிரகாசமாக இல்லை. இருப்பினும், கல்விக்கும் அப்பாற்பட்டு நம் பிள்ளைகளுக்கு தமிழ் உணர்வூட்டி, அதை அவர்கள் அடுத்தடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்ல வைப்பதே இன்றையச் சூழலை முன்னிறுத்தி யோசிக்கும்போது ஒரு தமிழராக நம்முடைய தலையாயக் கடமை என்று தோன்றுகிறது. செய்யமுடியக் கூடிய இதையாவது நாம் செய்வோமாக.
மேலும்...

மொழியால் மட்டும் ஒற்றுமை சாத்தியமா?

Posted: Monday, April 19, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
நாம் தமிழர் இயக்கம் ஏன் என்னும் சீமானின் உரையை முன்வைத்து:

சீமானின் இந்த உரையை மிக ஆர்வமுடன் கேட்டேன். மீண்டும் பெருத்த ஏமாற்றம். ஈழம்.. ஈழம்.. ஈழம்..! என் அண்ணன் பிரபாகரன்.. பிரபாகரன்.. பிரபாகரன்..! இதைத் தவிர தமிழ்நாட்டு தமிழர்களின் அவலநிலை குறித்து இவர் வாய் ஒரு வார்த்தை கூட உதிர்ப்பதில்லை.

இன்று இவர் பேசும் பிரிவினைவாதமெல்லாம், இவரை விட இளைஞர்களை அதிகம் கவர்ந்து வைத்திருந்த அண்ணா ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே மேடைக்கு மேடை பேசி சலித்ததுதான்.

இவராவது ஈழத்தை மையப்படுத்தி பேசுகிறார். ஆனால் அண்ணா தமிழ்நாட்டை மையப்படுத்தி ‘திராவிட நாடு திராவிடருக்கே’ என்று பிரச்சாரம் செய்தார். 60-களில் அப்படி நடத்தப்பட்ட ஒரு திராவிட நாடு விடுதலை விழா மாநாட்டிற்கு 3 லட்சம் பேர் திரண்டார்கள். இதற்காக நடத்தப்பட்ட போராட்டங்களில் பல இளைஞர்கள் கைதானார்கள். பலர் தீக்குளித்தனர். பின்னர் நடந்த தேர்தலில் அண்ணா எம்.பியாகி நாடாளு மன்றத்தில் தான் ஆற்றிய முதல் உரையிலேயே திராவிட நாடு கோரிக்கையை முன்வைத்தார்.

எல்லாம் இளைஞர்களை கவர்ந்து ஓட்டு பெறுவதற்காக. அந்த நோக்கம் வெற்றி பெற்றதும் அந்த கோரிக்கையையே பின்னாட்களில் கைவிட்டு, கோஷத்தையும் ‘மத்தியில் கூட்டாட்சி. மாநிலத்தில் சுயாட்சி’ என்று மாற்றிப் போட்டார்.

பிறகு 70-களில் தனித் தமிழ்நாடு கோரிக்கையை வலியுறுத்தி கம்யூனிச ஆயுதப் போராட்டங்கள் ’தமிழ்நாடு விடுதலைப் படை’ என்னும் பெயரில் நடந்தன. (பெண்ணாடம் கலியபெருமாள் என்பவர் அப்போது இதில் இளைஞர்களிடையே பிரபலம்). அதுவும் பெரிய அளவில் இளைஞர்களை ஈர்க்கவில்லை. காரணம் இங்கே தனித் தமிழ்நாட்டிற்கான வாழ்வியல் காரணங்கள் இல்லை.

இந்த துரு பிடித்து உளுத்து போன பழையை தோல்வியடைந்த கோஷத்தைத்தான் சீமான் தற்போது ஈழத்துக்காக தூசி தட்டி கையில் எடுத்திருக்கிறார். ஈழப் பிரச்னையில் தமிழ் மக்களிடம் எப்போதும் அனுதாபம் உண்டு. அவர்களின் கோரிக்கைக்கு ஆதரவும் உண்டு. முடிந்த உதவியும் செய்ய எல்லோரும் தயார்தான். ஆனால் அதற்காக தங்கள் அடிப்படை பிரச்னைகளான குடிநீர் தட்டுப்பாடு, வேலையில்லா திண்டாட்டம், மின்வெட்டு, இத்யாதி இத்யாதிகளையெல்லாம் பின் தள்ளி விட்டு, ஈழத்திற்காக களமாட முன்வருவார்கள் என்பது வெறும் கற்பனையே. அப்படி நம்ப சொல்வது சீமானின் ஏமாற்று வேலை.

சீமான் இளைஞர்களின் உணர்ச்சியை தூண்டி விட்டு போகாத ஊருக்கு வழி தேடுகிறார். அல்லது வழி தேடும் பாவனையில் ஆதாயம் அடைய பார்க்கிறார். ’உறவுகளே’ ‘ரத்தங்களே’ ‘ ஒரு தாய் வயிற்று பிள்ளைகளே’ என்னும் வார்த்தை ஜாலம் இருக்கும் அளவிற்கு இவரிடம் விஷயம் இல்லை. தலைமைக்கான பண்புநலன்கள் இல்லை.

ஜெயராம் மன்னிப்பு கேட்ட பிறகும் அவர் வீட்டை அடித்து நொறுக்கியது இவருடைய இயக்கம். ஆனால் கடைசி வரை அதை கண்டிக்காமல், குறைந்த பட்சம் ஒப்புக்கொள்ளக் கூட செய்யாமல் தாங்கள் இல்லை என்று மறுத்தே வந்தார். இதுதான் சீமானின் அண்மைகால நேர்மை மற்றும் இளைஞர்களை வழி நடத்தும் பாதை.

ஈழம் வேறு. தமிழ்நாடு வேறு. மொழியால் மட்டுமே தமிழன் ஒற்றுமையா இருந்து விடுவான் என்றால், அந்த காலத்தில் தமிழ் மன்னர்களாகிய சேரன், சோழன், பாண்டியனெல்லாம் ஒருவருக்கு ஒருவர் ஜென்ம விரோதிகளாக தங்களுக்குள் அடித்துக் கொண்டது ஏன்?

மொழியில் ஒற்றுமை என்பது இரு சமுதாயத்தினரிடையே சில இணக்கங்களை ஏற்படுத்தும் என்பது உண்மையானாலும், வாழ்வியல் பிரச்னைகள் என்று வரும்போது, அப்போது பிரச்னைதான் முன் நிற்குமே தவிர, மொழி அல்ல.

‘ஏற்கெனவே அவங்க ஊருக்கும் நம்ம ஊருக்கும் வாய்க்கா சண்டை இருக்கு’ என்னும் வசனங்களெல்லாம் உரைப்பது என்ன? பக்கத்து ஊர் குடிநீருக்காக ஆயிரம் அல்லல்கள் பட்டாலும், நம்ம ஆள் தானே; நம்ம தமிழன் தானே என்று எவனும் மதகை சுலபத்தில் திறந்து விட்டு விடுவது இல்லை. அதனால் இரு ஊர்களுக்கிடையே வெட்டு குத்து, பகை என்பதெல்லாம் இங்கே சகஜம் தான். சின்ன ஊருக்கு சின்ன சின்ன காரணங்கள். பெரிய நிலபரப்புக்கு பெரிய காரணம் உண்டாகும்.

மொழியை வைத்து மட்டும் ஒற்றுமை என்றால் இன்று தெலுங்கர்கள் ‘தனித் தெலுங்கானா’ கேட்டு மாநில நிர்வாகத்தையே ஸ்தம்பிக்கச் செய்ய வேண்டிய அவசியமே இல்லையே!

அதனால் சீமான் முன்வைக்கும் தமிழர்கள் ஒன்று பட்டால், தனித் தமிழ்நாடு பிறந்தால், தமிழன் வாழ்வே சுபிட்சம் ஆகும் என்பது அர்த்தமற்ற வாதம். இவரை அப்படியே அலேக்காக தூக்கிக் கொண்டு போய் பாக்ஜலசந்திக்கு அந்தப் பக்கம் கடாசி விட்டு வந்து விடுவதுதான் தமிழ்நாட்டின் பொது அமைதிக்கும் இளைஞர்களின் எதிர்காலத்திற்கும் நல்லது.

*

சீமானைப்பற்றி ஏற்கெனவே விரிவாக இரு மடல்கள் எழுதியிருக்கிறேன். இன்றும் எழுத காரணம் சிலரைப்பற்றி நாம் தெளிவான தீர்மானங்களுடன் இருப்பது நல்லது. காரணம் அவர்களின் பேச்சு திறமை வசீகரமானது. அதில் மயங்கி வீணில் ரத்தத்தை கொதிக்க விட்டு குழம்பி விடக்கூடாது என்பதற்காகத்தான். இதைப்பற்றி மேலும் விரிவான விவாதத்திற்கும் நான் தயாராக இருக்கிறேன்.

*

”நாம் தமிழர்” என்னும் பெயருக்கு உரியவர் தினத்தந்தியின் நிறுவனர் ஆதித்தனார் தான். இப்பெயரில் அவர்தான் முதலில் கட்சி நடத்தி வந்தார்.
மேலும்...

சுட்டெரிக்கும் வெம்மையிலும்..

Posted: Tuesday, April 6, 2010 | Posted by no-nononsense | Labels: 2 comments
விளிம்புநிலை மனிதர்கள் என்னும் இலக்கிய முலாம் பூசின வார்த்தைகளை விட ‘அன்றாடங் காய்ச்சிகள்’ என்றால் சிலருக்கு சட்டென்று புரியக்கூடும். அதைவிடவும் ஒரு புகைப்படம் இன்னும் அர்த்தப்பூர்வமாக விளங்க வைக்கும்.


மண்டையை பிளக்கும் உச்சி வெயிலுக்கு பயந்துகொண்டு இருக்கும் இடங்களை விட்டு வெளியே வராமல் இருந்துகொள்ள, எல்லோருக்கும் சௌகரியப்படுவதில்லை. வெயிலை தவிர்க்க முடியாத ஓர் உலகமும் வெளியே இயங்கிக்கொண்டேதான் இருக்கிறது.

அலுவலகத்தின் வாசலில் இருந்து கண் பார்வையை வீசினால் எதிரே கரூர் பஸ் நிலையம் தொட்டு விடும் தொலைவில் தெரியும். மெதுவாக நடந்தாலும் எட்டி விட பத்து நிமிடத்திற்கு மேல் ஆகாது. ஆனால் அதற்கே இன்று எனக்கு மயக்கம் வருவது போல் ஆகிவிட்டது. இந்த கோடை வெயிலின் தாக்கத்தை ஜூவாலைகளின் அனலுடன் மட்டும்தான் ஒப்பிட முடியும். ஆனால் இந்த பெண்மணியெல்லாம் நாள் முழுக்க வெயிலில் நின்றபடியே வியாபாரம் செய்கிறார். (இடம்: கரூர் பஸ் நிலையம்)

வயிற்றுப்பாடு என்று ஒன்று வந்தால்தான் வாழ்வின் உண்மையான கஷ்டம் உறைக்கும் என்று நினைக்கிறேன். அதற்கு இவர் போன்றவர்கள் எல்லாம்தான் அத்தாட்சிகள்.

2010-லின் வெயிலே இப்படி. நாம் எப்படியும் இன்னும் ஒரு முப்பது வருடங்களாவது உயிருடன் இருப்போம் என்று நம்பலாம். அப்படியானால் 2040-ன் வெயில் எல்லாம் எப்படி இருக்கும்??

மேலும்...

சிவசங்கரியின் “புதிய கோணங்கள்” நூலை முன்வைத்து

Posted: | Posted by no-nononsense | Labels: 0 comments

Sivasankari

சிலர் சில விஷயங்களுக்காக பொதுவில் பிரபலமாக இருப்பார்கள். அவர்களின் மற்றொரு முகம் பெரும்பாலும் அறியப்படுவதில்லை. எழுத்தாளர் கல்கியின் சரித்திர நாவல்கள் பிரபலமடைந்த அளவிற்கு அவருடைய கட்டுரைகள் பிரபலமில்லை. ஆனால் அவைதான் என்னைப் பொருத்தவரை அதிக சுவாரஸ்யமானவை. குறிப்பாக அவருடைய “மூன்று மாத கடுங்காவல்” மற்றும் “ஏட்டிக்கு போட்டி” ஆகிய இரண்டும் அளிக்கும் எழுத்து விருந்துக்கு இணையான ஒரு சுவையை இன்று வரை நான் கடக்கவில்லை.

அதேபோல்தான் எழுத்தாளர் சிவசங்கரியின் பயணக் கட்டுரைகள். புரிந்துகொள்ள மிக எளிமையான நடையில், செல்லும் இடங்களைப் பற்றிய பொதுவான தகவல்களுடன் மாறுபட்ட நுணுக்கமான பல குறிப்புகளையும் பதிவு செய்தவண்ணம் இருப்பார். ஆனால் அவர் கதைகள் பிரபலமான அளவிற்கு இவருடைய பயண எழுத்து படிக்கப்படவில்லை. இப்படி வெட்டவெளிதனில் கொட்டிக் கிடக்கும் எழுத்துக்கள் எண்ணிலடங்கா.

அண்மையில் அவருடைய “புதிய கோணங்கள்’ என்னும் கட்டுரை தொகுப்பிலிருந்து நேபாள பயண அனுபவங்கள் படிக்க கிடைத்தன. வழக்கம் போலவே விறுவிறுப்பான நடையில் சிறப்பான காட்சிப் படுத்தல்கள் நிறைந்த எழுத்துக்கள். ஆனால் இங்கே நான் எழுத முனையும் விஷயம் அது அல்ல. அதே கட்டுரை தொகுப்பில் எம்.டி.வாசுதேவன் நாயரின் (கேரளத்தின் முக்கியமான எழுத்தாளர்) நேர்காணல் ஒன்றும் வெளியாகியிருந்தது. அதன் கருபொருள்தான் என்னை ஈர்க்கிறது.


அதாவது எம்.டி.வி “இரண்டாம் மூழா” என்னும் நூலை எழுதியிருந்தார். இரண்டாம் மூழா என்றால் ”இரண்டாவது ஸ்தானம்” (Second in line) என்று பொருள். மகாபாரதம், பாண்டவர்களில் இரண்டாவது மகனாகிய பீமனுக்கு உரிய முக்கியத்துவம் தரவில்லை என்பதுதான் அப்புத்தகத்தின் வழியாக அவர் வைக்கும் குற்றச்சாட்டு.

அவர்களின் உரையாடலின் சாராம்சம்:

மகாபாரத போரின் வெற்றிக்கு ஆரம்பத்திலிருந்து முக்கிய பங்காற்றிய பீமனுக்கு, அவனுக்குரிய தர்மருக்கு அடுத்த இரண்டாவது ஸ்தானமும் மரியாதையும் அளிக்கப்படவில்லை. மாறாக அந்த இடத்தையும் முக்கியத்துவத்தையும் பீமனின் தம்பி அர்ஜூனனுக்கே மகாபாரதம் அளிக்கிறது.

போரில் அர்ஜூனனின் மகன் அபிமன்யூ இறக்கிறான். பாண்டவர்கள் பரிதவித்து போகிறார்கள். ஆனால் போரில் பல வீர தீரங்கள் புரிந்த பீமனின் மகன் கடோத்கஜன் இறக்கும்போது “ஏன் அழுகிறீர்கள், ஒரு ராட்சஸன் இறந்தது சந்தோஷமான விஷயம் தானே’ என்கிறான் கண்ணன்.

கதையின் இறுதியில் எல்லோரும் மகாநிர்வாணத்தை, அதாவது மோட்சத்தை நோக்கிச் செல்லும்போது, பீமன் மட்டும் “எனக்கு ராட்சஸி (இடும்பி) ஒருத்தியும், பகைவன் (அஸ்வத்தாமா) ஒருவனும் காத்திருக்கிறார்கள் என்று மோட்சத்தை மறுத்து விடுவதாக வருகிறது. இது பீமனுக்கு செய்யப்பட்ட அநியாயமாக கருதுகிறார் ஆசிரியர்.

மகாபாரதத்தின் எத்தனையோ சம்பவங்களில் எல்லோரும் அறிந்த ஒரு சம்பவம்: வஸ்திராபகரணம். அதாவது திரௌபதிக்கு கண்ணன் சேலை அளித்து மானம் காத்த அந்த சம்பவம். மகாபாரதத்தின் ஆதிப் பிரதிகள் எவற்றிலும் அப்படி ஒரு சம்பவம் இடம்பெறவே இல்லை; அது ஒரு இடைசெருகல் என்கிறார் எம்.டி.வி. அதற்கு ஆதாரமாக குறிப்பிடத்தக்க சில வெளியீடுகளை காட்டுகிறார். கதையின் அந்த இடத்தில் அவள் மாதவிலக்காகவும், ஒற்றை சேலை அணிந்தபடியும் மட்டுமே இருந்திருக்கிறாள்.

ஆதிநாட்களில் மகாபாரதத்திற்கு ’ஜெயா’ என்று பெயர். மகாபாரதத்தின் மூல நூலில் இருந்தவை இருபதிலிருந்து நாற்பதினாயிரம் ஸ்லோகங்கள் மட்டுமே. பிறகு ஏற்பட்ட இடைசெருகல்கள் காரணமாக அது லட்சத்து இருபதினாயிரம் ஸ்லோகமாக ஆகிவிட்டது.

உண்மையில் வியாசர் என்றால் எடிட்டர் என்றுதான் அர்த்தம். அதன்படி பல நூறு ஆண்டுகளாக பல நூறு எடிட்டர்கள் திறமை காட்டிய தொகுப்பே மகாபாரதம்.

இவற்றையெல்லாம் ஏழு வருடங்களாக ஆராய்ச்சி செய்து அறிந்துகொண்டதாக எம்.டி.வி உரையாடலின் போது குறிப்பிடுகிறார்.

இந்தியாவின் இருபெரும் இதிகாசங்களாகிய ராமாயணமும் மகாபாரதமும் திறமையாக புனையப்பட்ட புதினங்களே என்னும் நாள்பட்ட விமர்சனத்தை எம்.டி.வி என்னும் மாபெரும் எழுத்தாளரின், இந்த ஆராய்ச்சி குறிப்புகள் உறுதி செய்வதாக அமைந்துள்ளன.

ஆனால் எவ்வளவுதான் தர்க்க ரீதியாக நிரூபணம் செய்தாலும் மாறுபாடான கருத்துக்களை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளும் மனப்பக்குவம் இந்தியாவைப் பொருத்தவரை கிடையாது. அதனால்தான் இன்றும் - பாபர் மசூதி பிரச்சினைக்கும், ராமர் பால விவகாரத்திற்கும் மக்கள் தங்கள் ஜீவாதார பிரச்னைகளை விட அதிக முக்கியத்துவம் தருபவர்களாக இருந்துவருகின்றனர்.

*

இதேபோல வால்மீகி ராமாயணத்திலிருந்து கம்பராமாயணம் எப்படியெல்லாம் வேறுபடுகிறது என்பதையும் எழுத உத்தேசம். குறிப்புகள் எடுத்து வைத்து பல காலமாக கிடப்பில் கிடக்கின்றன.
மேலும்...

தமிழ் தேசியம் - சில கருத்துக்கள்

Posted: Friday, April 2, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
தமிழ் தேசியத்தை ஆதரித்த நண்பனின் கருத்துக்கு பதிலாக:

தமிழ் தேசியம் என்பது ஒரு கானல் நீர்; மாயை; அக்கரை பச்சை. இப்போது இருக்கும் unity in diversity -க்கும் அதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கப் போவதில்லை.

ஒரு பேச்சுக்கு தமிழ்நாடு என்று ஒரு தனிநாடு உதயமாகிறது என்றே வைத்துக் கொள்வோம். அப்போது மட்டும் பிராந்திய பேதம் இருக்காது என்று உன்னால் உறுதியாகச் சொல்லமுடியுமா?

இப்போது வட இந்தியா, தென்னிந்தியா என்று பேதம் இருந்தால், அப்போது வட தமிழ்நாடு, தென் தமிழ்நாடு என்று இருக்கும். சென்னையும் அதை சுற்றியுள்ள இடங்களும் தான் வளர்ச்சியடைகின்றன. தென் தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறது என்று ஒரு கோஷ்டி கிளம்பும். ஏற்கெனவே அப்படி ஒரு குரல் ராமதாஸ் போன்றவர்களால் எழுப்பப்பட்டு வருகிறது. அதையும் பிரிப்போமேயானால், இன்னும் கொங்கு தேசம், நாஞ்சில் நாடு என்று தனித்தனியாக பிராந்திய புறக்கணிப்பு கோஷம் எழும்பும். குறிப்பிட்ட ஜாதி அதிகம் இருக்கும் இடங்கள் மட்டுமே அதிக திட்டங்களைப் பெறுகின்றன; எங்கள் ஜாதி மக்கள் அதிகம் வசிக்கும் இடங்கள் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்தப்படுகின்றன என்று இன்னும் ஒரு ஜாதி அரசியல் பிராந்திய போர்வை போர்த்திக்கொண்டு போராட்டம் நடத்தும்.

பேதம் பெரும்பாலும் சுயநலத்திலிருந்துதான் பிறக்கிறது. சுயநலம் என்பது மொழியையோ இனத்தையோ பொறுத்தது அல்ல. மனித மனத்தை பொறுத்தது.

அதனால், இந்தியாவிலிருந்து தமிழ்நாடு பிரிய வேண்டும்; ஏனென்றால் நாமெல்லாம் தமிழர்கள்; இந்தியர்கள் இல்லை, என்பதெல்லாம் சும்மா உணர்ச்சிவய கோஷமாக வேண்டுமானால் பயன்படலாம். நடைமுறைக்கு ஒத்துவராது.

இந்தியாவில் நாம் இப்போது இருப்பது போலவே ஒற்றுமையாக இணைந்திருப்பதன் நன்மைகளை அவசியத்தை இங்கே ஏற்கெனவே வேறோர் இழையில் நான் எழுதியிருக்கிறேன். அதை மறுத்து பேசும் கருத்துக்கள் வந்தால் இன்னும் விரிவாக இதன்மீது விவாதிப்போம்.
மேலும்...

பிளடி இண்டியன்ஸ்

Posted: Thursday, April 1, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
“சார்.. ப்ளீஸ் என்ன ஸ்டேட்டஸ்னு மட்டும் சொன்னா போரும். நேக்கு மெட்ராஸ் யாரும் இல்ல சார்”

“ஏன் எங்களை தொந்தரவு பண்றீங்க. உங்க ஆபீஸை கேட்டுக்க வேண்டியதுதானே. உங்கள மாதிரி இங்க எத்தன அப்ளிகேஷன் தெரியுமா”

“சார் அப்படி சொல்லக் கூடாது. ஆபீஸ்ல கேட்டா உங்க ஆபீஸதான் காண்டக்ட் பண்ண சொல்றா. PRO நம்பர்க்கு போன் பண்ணா சரியா ரெஸ்பான்ஸ் இல்ல. அதான்..”

“இப்ப என்னதான் உங்களுக்கு வேணும்”

”சார்.. அப்ளிகேஷன் ஸ்டேட்டஸ் சொன்னா போரும். இங்கே நாமக்கல்ல இருந்துகிட்டு யாரை காண்டக்ட் பண்றதுன்னு தெரியல. நீங்கதான் ஹெல்ப் பண்ணனும்”

“நீங்க நம்பர் மட்டும் சொல்லுங்கோ”

“199524/45”

சொன்ன அடுத்த கணமே..

“ரெண்டு செக் ரைஸ் ஆகியிருக்கு. நோட் பண்ணிக்கோங்க... இன்னும் பத்து நாள்ல செக் உங்க பேங்கல இருக்கும்”

- மேற்கண்ட உரையாடல் என் நண்பருக்கும் சென்னையிலுள்ள EPF (Provident Fund) அதிகாரி ஒருவருக்கும் நடந்தது. நண்பர் கெஞ்சியதும் பேசியதும் எனக்காக.

இதற்கு முன் நான் பணிபுரிந்த நிறுவனத்திலிருந்து சென்ற ஜுனுடன் வெளியே வந்தேன். அதிலிருந்து மூன்று மாதங்கள் கழித்து PF-க்காக விண்ணப்பித்தேன். அதுதான் விதிமுறை. 90 நாட்கள் கழித்துதான் விண்ணப்பிக்க முடியும்.

விண்ணபித்த நாள் முதலாய் அலுவலகம் வந்ததும் தினமும் முதல் வேலை அப்ளிகேஷன் ஸ்டேட்டஸ் பார்ப்பதுதான். அதற்கென ’கடனே’ என்று ஒரு இணையதளம் இயங்குகிறது. ஒரு மாதம் கழித்து அதில் ஸ்டேட்டஸ் அப்டேட் ஆகியது - விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என்று.

நிராகரிக்கப்பட்ட தேதியிலிருந்து ஒரு மாதம் கடந்தும் எனக்கோ என் பழைய அலுவகத்திற்கோ அது வந்து சேரவில்லை. ஒருவழியாக அது வந்து சேர்ந்ததும் பிழைதிருத்தி அனுப்பி விட்டு சென்ற நவம்பர் முதல் இப்போது வரை தினமும் ஸ்டேட்டஸ் பார்த்துக் கொண்டிருந்தால், அது தொடர்ந்து நிராகரிக்கப்பட்டதையே சொல்லிக்கொண்டிருந்தது. E-governance என்பதெல்லாம் சும்மா பெயரளவில்தான்.

நான்கு மாதங்களாக அடிக்கடி சென்னை PF ஆபீஸுக்கு போன் செய்வதும், அது ஒன்று எடுக்கப்படாமலோ அல்லது தட்டிக்கழிக்கும் பதிலை பெறுவதுமாகவோ கழிந்து விட்டது. திருத்தியனுப்பிய விண்ணப்பம் கையில் கிடைத்ததா என்றுகூட சொல்ல அங்கே ஆளில்லை. அதிலும் ஒருமுறை போனை எடுத்த ஒரு பிரகஸ்பதி,”உங்க PF நம்பருக்கும் உங்க பேருக்கும் சம்மந்தமில்லையே. வேற பேரில்ல வருது’ என்று வயிற்றில் புளியை கரைத்துவிட்டு போனை வைத்து விட்டது.

இந்நிலையில்தான் என் நண்பர் ஒருவர் உதவிக்கு வந்தார். என்னோடு பணிபுரிந்து என்னுடனே ராஜினாமாவும் செய்த அவர் அப்படி இப்படி என்று ஆள் பிடித்து அவரின் பணத்தை வாங்கி விட்டார். எனக்கும் எங்கேயோ விசாரித்து மேலே உரையாடலில் கண்ட அதிகாரியின் போன் நம்பர் வாங்கித் தந்தார். அந்த நம்பருக்கு போன் செய்தால், ஒருமுறையும் ‘ம்’ என்று கூட கேட்டதில்லை. ஆரம்பிக்கும்போதே கட் செய்யப்படும்.

மீண்டும் நண்பரே களம் இறங்கினார். ”நீ பேசுவதுபோல ஃபார்மலா எல்லாம் பேசினா வேலைக்காகாது. ஆளுக்கு தகுந்த மாதிரி பேசணும். நானே பேசுறேன்” என்று அவர் பாஷை கலந்து அவர் பேசியதுதான் மேலே உள்ளது.

”நம்பர் சொல்லுங்கோ’ என்று கேட்டு நம்பர் சொன்ன மறுகணமே, ஆம், மறுகணமே கணினியைத் தட்டி ஸ்டேட்டஸ் சொல்லி விட்டார் அந்த அதிகாரி.

ஆச்சரியமாக இருந்தது.

”இதற்குத்தானய்யா இத்தனை தடவையும் நான் உமக்கு போன் செய்தேன்” என்று ஆத்திரமும் வந்தது. சாமானியர்களின் ஆத்திரம் சல்லிகாசுக்கும் பிரயோசனமில்லாதது என்பதால், ஏதோ இப்பவாச்சும் தெரிந்ததே என்று கொஞ்சம் பெரிய மூச்சாக விட்டுக்கொண்டேன்.

நமக்கு உதவ நண்பர் இருந்தார். அவர் இல்லையென்றாலும் தடாலடியாக ஏதாவது செய்ய தைரியம் இருக்கிறது. அப்படியில்லாத அப்பாவிகளின் நிலையைப் பற்றித்தான் எனக்கு கவலை. நமக்கு பாத்தியப்பட்ட பணத்தை பெறவே நாய் படாத பாடு படவேண்டியுள்ளது.

ஏன் அரசு வழிமுறைகள் இவ்வளவு கடினமாக உள்ளன?

ஏன் அரசு ஊழியர்கள் இப்படி இருக்கிறார்கள்?

ஏன் அவர்கள் நம் கவலையை, அவசரத்தை, அவசியத்தை ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டேன் என்கிறார்கள்?

இதெல்லாம் என்று மாறும்?

பிளடி இண்டியன் சிஸ்டம்ஸ்!

-என்று மனம் கொந்தளித்தாலும், புத்திக்கு உறைக்கிறது ‘இதெல்லாம் என்றும் மாறாது’ என்று.

ஏன்?

பிகாஸ் வி ஆர் பிளடி இண்டியன்ஸ்!
மேலும்...

Some guys just can't handle Vegas

Posted: | Posted by no-nononsense | Labels: 0 comments
ஒருவழியாக மார்ச் 31 தலைவலிகள் முடிந்து கைகளை நெட்டி முறித்துக்கொண்டு வழமையான வாழ்க்கைக்கு திரும்பியிருக்கிறேன். புது நிதியாண்டு; புதிய இலக்குகள். அதைமுன்னிட்டு என் சக ஊழியர்களுக்கு நான் அனுப்பிய குறும்பு குறுஞ்செய்தி: இந்த வருடமாவது குறைவான வாடிக்கையாளர்களின் குடிகெடுவதாக!

இதென்ன அமங்கலமான பேச்சு என்று தோன்றலாம். உள்ளிருந்து உழலுபவர்களுக்கே அவ்வாழ்த்திலுள்ள மங்கலம் விளங்கும். 'The Hangover' படத்தில் லாஸ்வேகாஸ் பற்றி ஒரு நல்ல quote உண்டு: “Some guys just can't handle Vegas” என்று. அதைப்போல்தான் பங்குச்சந்தையும். இங்கே முதலீடு செய்பவர்கள் வளமுடன் வாழ்வர். விளையாட்டுத்தனமாக அணுகுபவர்கள் விபரீதத்தைத்தான் சம்பாதிக்க வேண்டியிருக்கும். சுருக்கமாக இவ்வளவு போதும்.

The Hangover என்றதும் அப்படத்தில் வரும் இன்னொரு quote ஞாபகம் வருகிறது: “you're gonna start dying just a little bit every day". பேச்சிலர் பார்ட்டிக்கு அழைத்துச் செல்லும் நண்பனைப் பார்த்து ஏற்கெனவே மணமான அவனின் நண்பன் இப்படிச் சொல்கிறான். வெள்ளைக்காரனோ, இல்லை வெறும் இலைதழையை உடுத்தியலையும் பழங்குடியோ, மணமானவனின் மனநிலை உலகெங்கும் ஒரே மாதிரிதான் இருக்கும் போலும்! :-)

மேலும்...