கீதை

Posted: Thursday, December 30, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
ஒன்றை தேடப் போய் சில சமயம் பல நாள்களாக தேடி சலித்த வேறு ஒன்று அகப்படும். இன்று அப்படியாக ஒரு பழைய ரசீதை தேடி என்னுடைய அலமாரியில் முத்து குளித்துக்கொண்டிருந்த பொழுது கீதை சம்மந்தப்பட்ட என்னுடைய பழைய குறிப்புகள் சில அகப்பட்டன. தேடியதை விட்டு விட்டு கிடைத்தவற்றை படித்துக்கொண்டிருந்தேன். அந்தக் குறிப்புகளின் காலம் குறைந்தது ஆறு வருடங்கள் இருக்கலாம். கீதையை மிகத் தீவிரமாக வாசித்துக்கொண்டிருந்த ஒரு காலகட்டம் அது.

கீதையை பொறுத்தவரை அது மகாபாரதத்தில் உபதேசமாகும் இடம் மட்டுமன்றி கீதையின் உள்ளடக்கமான பல பரிமாணங்களையும் கருத்தில் கொண்டு பரிசீலிக்கும்போது அது நிச்சயமாக ஒரு இடைசெருகலே என்றுச் சொல்ல முடியும். ஆனால் ஒரு அழகிய இதிகாசத்தின் சுவாரசியத்துக்கு வலு சேர்க்கும் ஓர் அங்கம் அது என்னும் கருத்து மிகையானதில்லை. அது ஒரு அழகிய ஆபத்து. அதே நேரம் பாம்பின் விஷம் மருந்தாவது போல உள்ளத்தின் தெளிவுக்கும் அது ஒரு ஔஷதம் என்பதுதான் அதன் சிறப்பு.

கீதையை தன்னுள் தாளப் பொறுத்திக்கொண்டுள்ள மகாபாரதம் போன்ற இதிகாசங்களை பொறுத்தவரை எஸ்.ரா சொல்வது போல அவை இயல்பும் அதீதமும் கலந்தவை. அந்தக் கலப்பில் எது இயல்பு எது அதீதம் என்றெல்லாம் கண்டறிந்து கொள்வது கடினம். அவ்வாறாக கண்டறிந்து கொள்ள இயலாத ஒன்றுக்கு ஒட்டுமொத்தமாக ஒரு வடிவம் தந்து பார்க்க நினைப்பதும் ஒரு குறிப்பிட்ட தத்துவார்த்த விளக்க வகைமைக்குள் அதனை அடையாளப்படுத்த நினைப்பதும், தர்க்க ரீதியாக தோல்வியை சந்திக்க கூடிய ஒரு முயற்சியாக இருந்துவருகிறது. ஆனால் அதனைத்தான் வெற்றிகரமாக வேதாந்திகளின் மரபு செய்துவந்துள்ளது. அவர்களின் வெற்றியின் அடித்தளம் மறுபுறமுள்ள மக்களின் அறியாமையில் உள்ளது.

இதனைப் பற்றி விரிவாக எழுதுவது பல நூற்றாண்டு கால வேதாந்த மரபை பற்றிய ஆய்வாக மாறிவிடக்கூடிய ஒன்றாக ஆகிவிடும். பணத்தின் பின்னால் அலைவது ஓய்ந்து வாசிப்பதற்காக மட்டும் அமரும் ஒரு காலம் கைகூடினால் இவற்றை தர்க்கரீதியாக அணுகி தன்னளவில் விளங்கிக்கொள்ள சித்தம் கொண்டிருக்கிறேன். பார்ப்போம்.
மேலும்...

எல்லே இளம்கிளியே

Posted: | Posted by no-nononsense | Labels: 0 comments
எல்லே இளம்கிளியே

மார்கழித் திங்கள் 15ஆம் நாளில் பக்தர்கள் பாடி மகிழும் ஆண்டாள் திருப்பாவையின் கீழ்காணும் 15ஆம் பாடல் ஓர் அற்புதம்! ஒரு சிறிய அழகிய நாடகமே அதில் அடங்கியுள்ளது. பக்தியோடு தமிழின் செழுமைக்காகவும் பக்தி இலக்கியங்களை படியுங்கள் தோழர்களே.

எல்லே இளம்கிளியே இன்னம் உறங்குதியோ
சில்என்று அழையேன்மின் நங்கையீர் போதருகின்றேன்
வல்லைஉன் கட்டுரைகள் பண்டேஉன் வாய்அறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக
ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார்போந்து எண்ணிக்கொள்
வல்ஆனை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்.

(உறங்கிக்கொண்டிருப்பவளை தட்டியெழுப்பி பெருமாளை பாட அழைக்கிறாள் ஒருவள். அதற்கு மறுமொழி தருகிறாள் மற்றவள்)

இன்று அதிகாலை
செய்திதாளில்
இப்
பாடலையும் பொருள் விளக்கத்தையும் படித்ததில்
இருந்தே இதைத்தான்
வாய் முணுமுணுத்துக்கொண்டு இருக்கிறது.

பொருள்:

எழுப்புவோர்: ஏண்டி! இளங்கிளி போல் மிழற்றும் குமரிப் பெண்ணே, இன்னமும் உறங்குகின்றாயே!

தூங்குபவள்: பெண்களே! 'சில்' என்று கத்தி கூப்பிடாதீர்கள்! இதோ வந்து விடுகின்றேன்.

எழுப்புவோர்: நீ மிகவும் கெட்டிக்காரி! பசப்பு வார்த்தைக்காரி! உன்னுடைய பேச்சுவன்மையை நாங்கள் முன்பே அறிவோம்! உன் வாயையும் நாங்கள் அறிவோம்!

தூங்குபவள்: கெட்டிக்காரிகள் நீங்களா? நானா? நானே ஆனாலும் சரி.

எழுப்புவோர்: சீக்கிரம் எழுந்து வா! இந்த கெட்டிக்காரத்தனத்தைத் தவிர வேறு என்ன வைத்திருக்கின்றாய்!

தூங்குபவள்: நம் தோழியர்கள் அனைவரும் வந்து விட்டனரா?

எழுப்புவோர்: வந்து விட்டார்கள்! சந்தேகம் இருந்தால் நீயே வந்து எண்ணிப் பார்த்துக் கொள். குவாலயாபீடம் என்ற யானையை கொன்ற கண்ணனை, பகைவரின் செருக்கை அழிக்க வல்லவனை(வல்லானை) மாயக்கண்ணனின் புகழைப் பாடலாம் சீக்கிரம் வாடி.


மேலும்...

அதிதி தேவோ பவ

Posted: Wednesday, December 29, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
எல்லா மலேசிய தமிழர்களுக்கும் ஒரு கனவு இருக்கும். என்றாவது ஒரு நாள் தமிழக மண்ணை மிதித்து ஊர் சுற்றிப் பார்த்துவிட்டு வர வேண்டும் என்னும் ஆசைதான் அது. தங்களுடைய மூதாதையர்களின் பூமி என்பதுடன் இதுவரை சினிமாவிலும் தொலைக்காட்சிகளிலும் மட்டும் கண்டு களித்து வரும் இடங்களை நேரிலும் பார்க்கும் ஒரு ஆர்வம் என்றும் சொல்லலாம்.

காலக்கிரமத்தில் இந்த ஆசை என்னுடைய மலேசிய தோழி ஒருவருக்கும் வந்து சேர்ந்தது. அவர் என்னுடைய நெருங்கிய நட்பு வட்டத்தை சேர்ந்தவர் என்பதால் அவருடைய குணநலன்கள் எனக்கு நன்கு தெரியும். தமிழ் கலாச்சாரத்தை அடியொட்டிய சிந்தனைகளை கொண்டவர். கடவுள் பக்தி அதிகம். தமிழ்நாட்டின் புண்ணிய ஷேத்திரங்களுக்கு செல்ல வேண்டும் என்பது அவருடைய நீண்ட நாள் விருப்பம். தொழில்முறையில் ஆசிரியர்.

இந்தியாவில் இருப்பது போன்ற கல்வியாண்டு மலேசியாவில் கிடையாது. அங்கே ஜனவரியில் பள்ளிகள் தொடங்கி நவம்பரில் முடிந்துவிடும். டிசம்பர் முழுக்க பள்ளி விடுமுறை நாட்கள். அதனால் டிசம்பரில் தமிழ்நாட்டு கோவில் குளங்களில் அதிகமாக மலேசிய தமிழர்களை காணமுடியும்.

தோழியும் அவ்வாறாக டிசம்பரில் கிடைத்த விடுமுறையில், இஷ்ட மித்ர பந்துக்களுடன் ஒரு குழாமாக தமிழகம் வந்து சேர்ந்தார். நிச்சயம் தமிழ் மண்ணை மிதிக்கும்போது அவருக்கு மெய் சிலிர்த்திருக்கும் என்றுச் சொல்லமுடியும். இங்கே வரும் தன் விருப்பம் பற்றி என்னிடம் அவ்வளவு பேசி இருக்கிறார்.

கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு நேரடி விமானம் உண்டு. அதில்தான் பெரும்பாலும் மலேசிய தமிழர்கள் வருவார்கள். திருச்சி, அங்கே ஸ்ரீரங்கம், பின்னர் தஞ்சை பெரியகோவில், ராமேஸ்வரம், மதுரை என அவர்களுக்கு என்று ஒரு சுற்றுலா வழித்தடம் உண்டு. ஊரிலேயே சொல்லி அனுப்புவார்கள் போலும்.

அந்த வழியிலேயே ஆரம்பமானது தோழியின் யாத்திரையும். பயணத்தின் தொடக்கத்தில் உற்சாகமாக பேசி வந்தவரிடம் ஓரிரு வாரங்கள் போனதும் மெல்ல ஆர்வம் குன்றுவதை என்னால் உணர முடிந்தது. நாள் செல்ல செல்ல கோவில் குளம் பற்றிய தன் பேச்சை முற்றிலுமாக குறைத்துக்கொண்டு தாங்கள் ஷாப்பிங் சென்ற கதை, வழியில் கண்டது கேட்டது என அவருடைய வழக்கத்திற்கு மாறாக பேச ஆரம்பித்தார்.

இருவரின் அவசர குறு உரையாடல்களுக்கிடையே ஒருநாள் கிடைத்த ஆசுவாசமான உரையாடலின் போதுதான் காரணம் புரிந்தது. அந்த உற்சாகமின்மைக்கு காரணம் சில கோவில்களில் கிடைத்த கசப்பான அனுபவம் தான் என்று தெரிந்தது.

உதாரணமாக, பழநி மலையில் கோவில் உள்ளே தனி வழி மூலம் அழைத்துச் செல்ல என்றே புரோக்கர்கள் சுற்றிக்கொண்டிருப்பார்கள். இது நாம் அறிந்ததுதான். முகத்தில் இந்தியக்கலை தெரிபவர்களிடம் அதிகம் சீந்த மாட்டார்கள். ஆனால் ஆளை பார்த்தால் மலேசியா, சிங்கப்பூர் மாதிரி தெரிந்தால் (அதான் அந்த குழுவில் இருக்கும் பெரியம்மா கைலி கட்டி இருப்பாரே..) உடனே மொய்த்துக்கொண்டு கெஞ்ச ஆரம்பித்து விடுவார்கள்.

அப்படி இவர்களிடம் மொத்தமாக 500 ரூ என பேரம் பேசி உள்ளே அழைத்து சென்ற நபர் 1200 தந்தால்தான் ஆச்சு என்று மிரட்ட ஆரம்பித்து விட்டாராம். அங்கேயிருந்த காவலர் உட்பட யாரும் அதைக் கண்டு கொள்ளவில்லையாம். இந்த முன்னுக்குப் பின் முரணான பணம் பறிக்கும் வேலை கண்டு முகம் எல்லோருக்கும் பேஸ்தடித்துவிட்டது. பணம் கூட பிரச்னையில்லை. ஆனால் இறைவனின் சந்நிதானத்தில் எப்படி இப்படியெல்லாம் ஏமாற்று வேலைகள் கிட்டத்தட்ட அஃபிஷியலாக அனுமதிக்கப்படுகின்றன என்று வருத்தப்பட்டார்.

அதேபோல மதுரையில் வெளியே முந்நூறு ரூபாய் கொடுத்து வாங்கிச் சென்ற மாலையை அம்மன் கழுத்தில் சாற்ற தனியாக நூறு ரூபாய் கேட்டார்களாம். சாற்றுவதற்கு எதற்கு காசு; அதான் அர்ச்சனைக்கும் உள்ளே அழைத்துச் செல்வதற்கு ஏற்கெனவே கொடுத்துவிட்டோமே என்று சொல்லிப் பார்த்து பலன் இல்லை என்றார். இதெல்லாம் அவருக்கு பெரிய அதிர்ச்சி.

‘நீங்கள் வேண்டுமானால் மலேசியாவின் எந்த கோவிலுக்கு வேண்டுமானாலும் வந்து பாருங்கள், இப்படியெல்லாம் ஒரு இடத்திலும் கிடையாது’, என்று புலம்பினார்.

‘இப்போது புரிகிறது நீங்கள் ஏன் கோவில், தெய்வம் போன்றவற்றின் மீது பற்றில்லாமல் இருக்கிறீர்கள்’, என்று சொல்லி சிரித்தார். ஆனால், என்னால்தான் அந்த சிரிப்பில் கலந்துகொள்ள முடியவில்லை. போவது தமிழனின் மானம் அல்லவா!

‘கோவில்கள் போகட்டும். இங்கே சந்தித்த பிரச்னை என்று வேறு எதுவும் உண்டா’ என்றதற்கு அவர் பகிர்ந்து கொண்ட அதிருப்திகளில் முதலிடம் பெறுவது நம் ஊரின் கலீஜான பொது கழிப்பிடங்கள். மேலும் திறந்த வெளியில் மல ஜலம் கழித்தபடி அமர்ந்திருப்பது, எல்லா சுற்றுலா தளங்களிலும் குவிந்து கிடக்கும் பிச்சைக்காரர்கள், போலவே அர்ச்சனை தட்டை வாங்கிக்கொள்ள சொல்லி சூழ்ந்துகொண்டு துரத்தும் கோவில் வாசல் கடைக்காரர்கள் என்றுபோன்ற விஷயங்கள் விரும்பத்தகாத அனுபவங்களாக இருந்ததாக சொன்னார். எல்லாம் வழக்கமாக நாம் கேட்கும் புகார்கள் தாம்.

இவற்றையெல்லாம் தாண்டி மனதில் நினைத்து வழிபட்ட தெய்வங்களின் வாசல்களை மிதிக்க முடிந்தது மிகவும் மனநிறைவாக இருப்பதாகவே சொன்னார். இந்த நிறைவுதான் மீண்டும் மீண்டும் பக்தர்களை தமிழக கோவில்களை சுற்றி வரச் செய்கிறது. அடுத்தமுறை வரும்போது இன்று கசப்பான அனுபவமாக தெரிவதெல்லாம் இவருக்கும் நம்மை போலவே பழகியிருக்கும். சுலபமாக எதிர்கொண்டு விடுவார்.

இங்கே பிடித்திருந்தது என்றால்: சரவணபவன் சாப்பாடு (அங்கே மலேசியர்கள் அதிகம் அசைவமே எடுத்துக்கொள்கிறார்கள்), அடையாறு ஆனந்தபவன் பலகாரம், மூட்டையாக துணிகளை கட்டிச்செல்லும்படியான ரெங்கநாதன் தெரு - பாண்டி பஜார் ஷாப்பிங் என்று வழமையாக கீழைநாட்டுத் தமிழர்கள் சுகித்து மகிழ்ந்து பாராட்டும் விஷயங்களே இவரையும் கவர்ந்திருந்தன. ஆனால் இவைகளுக்கும், அவர் எதிர்பார்த்து வந்திறங்கிய பண்பாட்டு அடையாளங்களுக்கும் ப்ராப்தி இல்லை என்பதை என்னால் சொல்லிக்கொள்ள முடியவில்லை.

அவர் விடை பெற்றுக்கொண்ட பிறகு சுற்றுலா பயணிகளை நமது தேசம் எதிர்கொள்ளும்விதம் பற்றி மனதில் வெகுநேரம் அசை போட்டுக்கொண்டு இருந்தேன். அதிதி தேவோ பவா என்னும் அளவிற்கு கடவுளாக விருந்தினரை உபசரிக்கவில்லை என்றாலும்கூட அவர்கள் முகம் சுழிக்கும்வண்ணம் பணம் பறிக்கும் வேலை செய்யாமல் இருக்கலாம். அதற்கென இருக்கும் அமைப்புகள் அவற்றை கண்காணிக்கலாம்.

ஆயிரம் சிறப்புகள் கொண்ட தேசமாக பாயிரம் ஆயிரம் பாடி வைத்துக்கொள்வது மட்டுமே ஒரு தேசத்தின் அடையாளம் ஆகிவிடாது. அது உண்மையில் இங்கேயுள்ள மனிதர்களிடம் இருக்கிறது.
மேலும்...

கமல் பற்றி மேலும் ...

Posted: Tuesday, December 28, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
தான் ஒரு சகலகலா வல்லவன் என்று மற்றவர்கள் புகழ்வதை நம்பி கமல் எதிலும் நீக்கமற நிறைந்திருக்க நினைக்கிறார். நடிக்க மட்டும் செய்தால் நல்லது.

எந்த மாதிரி வேண்டுமானாலும் நவரசங்களை வெளிப்படுத்தி நடிக்கட்டும். ஆனால் சமீபமாக ”இதோ, கமல்ஹாசன் நடிக்கிறேன், பார்” எனும்படி கன்னக்கதுப்புகளில் வித்தக கர்வத்தை தேக்கி வைத்துக்கொண்டு நடிக்கும் நடிப்பு வேண்டாம். இது கமல்ஹாசனின் இயல்பு அல்ல. எல்லோரும் அவரை ஒரேடியாக புகழ்ந்து புகழ்ந்து அவரும் முகஸ்துதிகளை விரும்பி ஏற்றுக்கொண்டு அதை நடிப்பில் வெளிப்படுத்திக் கொள்ள தொடங்கி விட்டாரோ என்று சந்தேகமாக உள்ளது. 70-களில் சிவாஜி கணேசனை இப்படித்தான் பாழ்படுத்தினார்கள். இப்போது கமல் முறை.

ரஜினியையும் சூப்பர் ஸ்டார். எளிமையான மனிதர்.. அப்படி இப்படி என்று உச்சி குளிர வைக்கிறார்கள். ஆனால் அவை யாவும் அவருடைய தனிப்பட்ட குணாம்சங்களை பற்றிய கருத்துக்கள்; பாராட்டுக்கள். அதனால் அவர் அதைக் காப்பாற்றிக்கொள்ள மேலும் மேலும் எளிமையான மனிதராகவும், பெருந்தன்மையானவராகவும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்கிறார். இது ஒரு மனிதரை புகழ்வதன் பாஸிடிவான விளைவு. ஆனால் கமலை புகழ்பவர்கள் எல்லோரும் உலக நாயகனே, அறிவுகடலே, சகலகலாவல்லவனே என்று அவரின் திறமையை வாய் வலிக்க புகழ்கிறார்கள். அதனால் அவர் தன் அறிவுஜீவித்தனத்தை தன்னுடைய அத்தனை திரைப்பரிமாணங்களிலும் காட்டிவிட முயற்சிக்கிறாரோ என்று தோன்றுகிறது. அது ஒவ்வாமையையே விளைவாக தருகிறது.

ஒரு நகைச்சுவைப் படம் எடுக்கிறோம் என்றால் கிரேசி மோகன் இல்லாத கமலை முன்பெல்லாம் பார்க்க முடியாது. இன்று அதையும் அவரே எழுத நினைக்கிறார். ஹாஸ்யம் எழுவதற்கு அதீத திறமை வேண்டும். எல்லோராலும் இயலக்கூடிய காரியம் அல்ல. அவருடைய எல்லா பாடல்களையும் அவரே பாடி கஷ்டப்படுத்துகிறார். ஒரு வாதத்திற்காக ரோபோவில் கமல் நடித்திருந்தால் அதன் பாடல்களையெல்லாம் குரலை மாற்றி மாற்றி அவரே பாடியிருப்பார் என்றுச் சொல்ல முடியும். அதற்காக கமலுக்கு பாடத் தெரியாது என்று அர்த்தமில்லை. இன்றைய அவர் வயதுக்கு ஏற்றபடி மாற்றம் கண்டிருக்கும் குரலுக்கு தகுந்த பாடல்களை பாடலாம்.

இப்போது நடிப்புடன், கதை-திரைக்கதை-வசனம் எழுதி, டம்மியாக ஒரு டைரக்டரை போட்டு தானே டைரக்சனும் செய்து, பாடல் எழுதி - அதை தானே பாடி பெரும் பிரயத்தனப்பட்டு... முடிவாக சொதப்பிக் கொண்டிருக்கிறார். இதிலிருந்து விடுபட்டு தன்னுடைய பழைய இயல்பான நடிப்புக்கு திரும்புவது அவருக்கும் நல்லது; நமக்கும் நல்லது.

உதாரணமாக வசூல்ராஜா MBBS எடுத்துக்கொள்ளலாம். டைரக்சன் சரண், வசனம் கிரேசி, கதை ஏற்கெனவே வெற்றி பெற்ற கதை. கமலுக்கு வேலை அந்த பாத்திரத்தை அழகாக செய்து கொடுத்துவிட்டு போவது. என்ன அருமையாக செய்திருந்தார். இப்போது பார்த்தாலும் ரசிக்க முடிகிறது. அந்த மாதிரி கமல்தான் தேவை.
மேலும்...

அவலை நினைத்து உரலை

Posted: Sunday, December 26, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
"மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்"
(ஆண்டாள் திருப்பாவை)

நீராடப் போதுவீர்.... ! ஹ்ம்ம்ம்....., இன்று எந்த கன்னிமார் அறிவார் அந்த பாவை நோன்பு?!

திருப்பாவை போடு; திருப்பள்ளியெழுச்சி பாடு; ஈரம் சொட்ட சொட்ட மாரியம்மன் கோவிலுக்கு ஓடு. என்ன செய்கிறோம் என்பதைப்பற்றியெல்லாம் என்ன கவலை. அந்தக் கவலை வந்து விட்டால் கோவில் குளம் பக்கமெல்லாம் பிறகென்ன வேலை?

பட் ஐ லைக் திஸ் பண்டல்டு ஹிந்து பீபிள். இன்னோசண்ட் ஃபெல்லோஸ். ஓ பிதாவே.. இவர்களை ரட்சியும். இவர்கள் தாங்கள் செய்வது இன்னதென்று அறிந்தாரில்லை. ஆமென்! (மார்கழி மாசத்துல கிறிஸ்துமஸும் வருதே!)

-0-

//பட் ஐ லைக் திஸ் பண்டல்டு ஹிந்து பீபிள்//
:) :)

உண்மையில் இந்த என்னுடைய பகடிக்கு பின்னால் சமரச சன்மார்க்க தத்துவமே உள்ளது. ஏனென்றால் திருப்பாவைக்கும் மாரியம்மனுக்கும் ஒரு சம்மந்தமும் இல்லை. இந்து மதத்தில் திருப்பாவை வைணவ மரபின் வழியான தெய்வத்தின் மீது மையல் கொண்டு பாடியது. ஆனால் நம் இந்து மக்கள் என்ன செய்கிறார்கள் என்றால் அதை வீட்டில் ஒலிக்க விட்டு தலைக்கு குளித்து மாரியம்மன் கோவிலுக்குச் செல்கிறார்கள். ஆண் தெய்வக் காதல் பாட்டை அறவே புரிந்து கொள்ளாமல் பெண் தெய்வம் குறித்த பக்தியுணர்வாக உணர்கிறார்கள். சிலர் பிள்ளையார் கோவில். இன்னும் சில சிவன். இவை எல்லாமே வேறு வேறு இந்து மதப் பிரிவுகள். ஒருவரை ஒருவர் ஏற்காமல் கழுவிலேற்றிக்கொண்ட காலங்களும் உண்டு. இன்று எல்லாம் ஒரு பண்டலாகி விட்டன என்பதுவே நான் கிண்டலடித்தக் காரணம்.

கைபோன போக்கில் எழுதுகிறேன் என்பதற்காக போகிற போக்கில் வாய்போன போக்கில் எல்லாவற்றையும் சொல்லி வைக்கிறேன் என்று யாரும் நினைத்துவிடக் கூடாது அல்லவா :-)

-0-

நம்ப ஆளுங்களுக்கு (most of the people i guess) இது எல்லாம் மேட்டரே இல்ல... எல்லாம் சாமி பாட்டு தென். எல்லாம் கலந்து கட்டி சாமி என்கிற பெயரில் கும்பிட்டு கிட்டு போய் கிட்டு இருக்கற ஆளு. அதுல ஒண்ணும் தப்பும் இல்லைன்னு நான் நினைக்கிறன்..தனிப்பட்ட கருத்து.


ஆனால் தோழர், அவலை நினைத்துக்கொண்டு உரலை இடிப்பதால் பயன் கிடைக்காமல் போய்விடுமே ;-) உங்கள் கடவுள் நம்பிக்கை சரிதானா, நீங்கள் கடைபிடிக்கும் மார்க்கம் அறிவுப்பூர்வமானதா என்னும் கேள்விகளுக்குள் நான் செல்லவில்லை. குறைந்த பட்சம் தாங்கள் செய்வது இன்னது என்றாவது தெரிந்து செய்ய வேண்டாமா என்னும் வருத்தம் தான் ஏசுவிடம் உங்களுக்காக ரட்சகம் கேட்டது ;-) உங்கள் கலந்து கட்டலில் அவர் இல்லை எனபதால் இந்த பஞ்சாயத்துக்கு அவர் neutral observer. அப்புறம் ஏசுவை எப்படி எங்கள் விஷயத்தில் மூக்கை நுழைக்க வைக்கலாம் என்றெல்லாம் அப்பாவித்தனமாக கேட்கக்கூடாது. ஏசுவும் கிருஷ்ண அவதாரமும் ஒன்று என்றும் ஒரு நம்பிக்கை உண்டு. எல்லாம் நீ இப்ப சொன்ன மாதிரி ஒரு கலந்து கட்டல் நம்பிக்கைதான். அதனால் ஒரு கலந்து கட்டல் இன்னொரு கலந்து கட்டலை மறுக்க முடியாது. அப்புறம் உங்க லாஜிக் தான் அடி வாங்கும்.. என்ன நான் சொல்றது.. ஹாஹா ;-)))
மேலும்...

தேகம்

Posted: | Posted by no-nononsense | 0 comments
இரண்டு நூல்களை தற்சமயம் வாசித்துக் கொண்டிருக்கிறேன். ஒன்று முன்பே சொன்னது போல பல்லவி ஐயரின் சீனா-விலகும் திரை. அதை ஒரே நாளில் படித்து முடித்துவிட வேண்டும் என்னும் என் முயற்சி ஜெயமாகவில்லை. என் நேரம் என்னுடையதாக மட்டும் இல்லாமல் இருப்பதுதான் காரணம்.

மற்றொன்று என்னுடைய சென்னை நண்பன் எனக்கு படிக்க கொடுத்திருக்கும் ‘தேகம்’.


இந்த தேகம் நாவல் தான் சாருநிவேதிதா அண்மையில் எழுதி வெளியிட்டு சர்ச்சைக்குள்ளானது. சர்ச்சை நாவலை சுற்றி அல்ல, அந்த வெளியீட்டு விழாவைப் பற்றி என்பதுதான் வேடிக்கை. வேடிக்கை சாருவுக்கு வாடிக்கை. அது ஒருபுறம் இருக்க, எனக்கு இந்த நாவலை கொண்டு வந்து கொடுத்திருக்கும் சென்னை நண்பன் ஒரு அத்யந்த சாரு ரசிகன். ரசிகன் என்று சொல்ல காரணம் எழுத்தாளர்களுக்கு பொதுவாக வாசகர்கள்தான் இருப்பார்கள். சாரு நிவேதிதாவுக்கு ரசிகர்களும் உண்டு. குறிப்பாக அனைவரும் இளைஞர்கள். எவ்வாறு அப்படி என்பதற்கு விளக்கங்கள் அநாவசியம். அவருடைய எழுத்துக்களை படித்தாலே விளங்கும்.

இவ்வாறாக சாருவின் நூலை கொண்டு வந்து கொடுத்து அது குறித்து என் கருத்தை எதிர்பார்ப்பதில் அவனுக்கு ஒரு ஆர்வம். எனக்கு உண்மையில் சாருவின் நூல்கள் மற்றும் அவருடைய வசீகர எழுத்து நடை குறித்தெல்லாம் எப்போதும் தாழ்வான அபிப்ராயம் கிடையாது. என்னை போன்ற பலருடைய விமர்சனங்களும் அவருடைய குழாயடி அரசியல் மீதுதான். ஒரு கவன ஈர்ப்புக்காக தடாலடியாக யாரையாவது வசைமாரி பொழிவது அவருடைய வழக்கம். எங்கே அடிதடி என்றாலும் அங்கே சென்று வேடிக்கை பார்க்க ஆர்வம் கொண்ட ஒரு கூட்டம் இருக்கும். அப்படி ஒரு கூட்டம்தான் இண்டர்நெட்டில் அவருடைய இணையதளத்தை மொய்த்துக்கொண்டு இருக்கிறது. அவருடைய இணைய எழுத்து மட்டுமே அவருடைய எழுத்துக்கான மதிப்பீடு அல்ல. சரி எழுத்துக்கு வருவோம்.

எழுத்துக்களில் பலவகை உண்டு. காமம் விரவிய erotica-வும் அதில் ஒன்றுதான். மேலும் பலரும் தொடத் தயங்கும் வாழ்க்கையின் பகுதிகளை, நிகழ்வுகளை எழுத என்று யார்தான் முன்வருவது? அந்த வேலையை செய்பவைதான் சாருவின் எழுத்துக்கள். அதில் ஒன்றும் பாதகமில்லை. போலியான மதிப்பீடுகளை வாழ்க்கையின் வழிகாட்டிகளாக கொண்டு வாழ்ந்து வரும் சமுதாயத்தில் இந்த மாதிரி எழுத்துக்கள் ஹராம் என்று ஒதுக்கப்படுவது இயல்பு. அதை இழப்பவர்களுக்கு அதன் அருமை தெரிய இன்னும் ஒரு நூற்றாண்டு ஆகலாம். அல்லது ஆச்சாரம் மேலும் வளர்ந்து தெரியாமலே போகலாம்.

ஆனால் இலக்கிய வாசிப்பின் வழி நீ என்ன மாதிரி அனுபவங்களை தரிசிக்க எண்ணுகிறாய் என்பதுதான் ஒரு வாசகனாக நீ தீர்மானித்துக்கொள்ள வேண்டிய விசயம். எனக்கான தீர்மானங்களில் ஹராம் எதுவும் கிடையாது என்பதால் எல்லா எழுத்துக்களும் எனக்கு ஏற்புடையவையே. சாருவை பொறுத்தவரை இணையத்தில் எழுதப்படும் வசை கட்டுரைகளை மட்டும் படிக்காமல் அவருடைய புனைவு எழுத்துக்களையும் வாசித்தால் தான் நான் கூறுவதை உணர முடியும்.

தேகம் நாவலை ஓரிரவுக்குள் முடித்து விட வேண்டும் என்று சங்கல்பம் செய்துகொண்டு அதன்படி கிட்டத்தட்ட முடிவை நெருங்கி விட்டேன். மோசமில்லை. வதைகளை பதிவு செய்யும் எழுத்து. இதன் ஆரம்பம் அத்யாயம் எனக்கு apocalypto -வின் ஆரம்பக் காட்சிகளை நினைவு படுத்தியது. ஆனாலும் இது அசல் லோக்கல் வெர்சன். முழுவதும் முடித்ததும் சின்னதாகவாச்சும் ஒரு மதிப்புரை எழுத உத்தேசம். இன்ஸா அல்லாஹ்!
மேலும்...

2010 இல் பிடித்தப் படங்கள்

Posted: Saturday, December 25, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
2010-ல் நான் பார்த்த படங்கள் குறைவு. படம் நன்றாக இருக்கிறது என்று கிடைக்கும் செய்திகளை அடியொட்டியே என் படத் தேர்வுகள் அமைந்தன. அவற்றில் எனக்கு பிடித்திருந்தவை:

  • களவாணி
  • ஆயிரத்தில் ஒருவன்
  • நான் மகான் அல்ல
  • எந்திரன்
  • பாஸ் எ பாஸ்கரன்

மைனா, மதராசாபட்டினம் - நல்ல படங்கள் என்று கேள்வி. ஆனால் நான் இன்னும் பார்க்கவில்லை.

பார்த்ததில் சுமாரான படங்கள்

  • தமிழ்ப் படம்
  • இரும்புகோட்டை முரட்டு சிங்கம்
  • நந்தலாலா
  • அங்காடித்தெரு
  • சிங்கம்

பார்த்து நொந்தவை

  • கோவா
  • ராவணன்
  • சுறா
  • மாஞ்சா வேலு
  • ஜக்குபாய்
மேலும்...

டி.ஆர் பற்றி

Posted: | Posted by no-nononsense | Labels: 0 comments
”இது குழந்தை பாடும் தாலாட்டு” பாடலை கேட்டு விட்டு இவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று கண்ணதாசன் பெரிதும் பாராட்டினாராம். அது வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷிக்கு சமம். ஒரு பாடலாசிரியராக டி.ஆருக்கு நான் மிகப் பெரிய ரசிகன்.

நாம் என்னதான் எள்ளி நகையாடினாலும் ராஜேந்தர் வாழ்க்கையில் வெற்றி பெற்றவர். எடுத்துக்கொண்ட துறையில் அவர் காலத்தில் கொடிகட்டிப் பறந்தவர். ஒரு தாயின் சபதம் படத்திற்கு கிடைத்த ஓபனிங் எல்லாம் எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. தான் மட்டுமல்ல திட்டமிட்டு அடித்தளமிட்டு தன் மகனையும் வெற்றி பெற வைத்தவர். அதையெல்லாம் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

மற்றபடி இந்த காமெடி பீஸ் விவகாரம் அவர் அறிந்தே செய்கிறார். அவரால் எதையாவது செய்யாமல் இருக்க முடியாது. யார் எப்படி கிண்டலடித்தாலும் எத்ற்கும் மனிதர் அசருவதில்லை. நாமும் பார்த்து சிரிக்கிறோம். முடியலை என்று சொல்லிக்கொண்டே தொடர்ந்து செய்கிறோம். இருவருக்கும் பொழுது போகிறது.
மேலும்...

ராகுல் காந்தியின் அரசியல்

Posted: Thursday, December 23, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
ராகுலை விமர்சிக்க என்ன இருக்கிறது இவர்களுக்கு? வெறும் அர்த்தமற்ற பிதற்றல்கள். அவர் இளைஞர் காங்கிரஸூக்கு அடித்தளமிடும் பாணி, தமிழ்நாட்டுக்கு எத்தனை முறை வந்தாலும் ஒருமுறைகூட கருணாநிதியை சந்தித்து மரியாதை நிமித்தம் முதுகு சொறியாத குணம் இதெல்லாம் அவருக்கென்று அரசியலில் ஒரு தனிப்பாதை இருப்பதையே காட்டுகிறது. அண்மையில் இந்து தீவிரவாதம் பற்றி அவர் பேசியுள்ளதை காணும்போது பொதுபுத்திக்கு தன்னை அவர் ஒப்புக்கொடுத்துவிட வில்லை என்பதையும் உணர முடிகிறது. இதே போக்கில் அவர் தன்னை தகுதிப்படுத்திக் கொண்டால் பிற்காலத்தில் ஒரு நல்ல அரசியல் தலைவராக உருவாக வாய்ப்புண்டு. அவர் பயணம் நெடியது. பொறுத்திருந்து பார்ப்போம்.

ஆனா மகனே உங்க குடும்பத்துக்கு காந்தினு பேரு இருக்குறது மட்டும் மகாத்மா காந்திக்கு தெரிஞ்சுச்சு, தடியாலயே உங்கள அடிச்சு போட்டுட்டு கரண்ட் கம்பிய புடிச்சு தொங்கிருவாரு.

அது ஒரு தனி கதை. இந்திரா தான் தன் பெயருடன் முதலில் காந்தி என்று பயன்படுத்த ஆரம்பித்தார். அந்த பெயரை அவர் இரவல் பெற்றுக் கொண்டது தன் கணவர் குடும்பத்திடமிருந்து. (ஆனால் கணவருடன் இணைந்து வாழ்ந்த காலம் மிகக் குறைவு). கணவர் பெயர் ஃபெரோஸ் காந்தி (Feroze Gandhy). நேரு குடும்ப வாரிசுவின் பெயருடன் (மாஹாத்மா) காந்தியின் பெயரும் இணைந்தவுடன் அதன் ரீச் பொதுமக்களிடம் பெரிதாக இருந்தது. அதுதான் இன்று வருண் காந்தி வரை தொடர்கிறது. ஓட்டும் பெற்றுத் தருகிறது.
மேலும்...

இது பணக்காரர்களுக்கான தேசம்

Posted: | Posted by no-nononsense | Labels: , 0 comments
நடப்பை நிர்தாட்சண்யமாக வெளிச்சம் போட்டுக் காட்டும் கட்டுரை. இதில் முதல் குற்றவாளி நம்மை ஆளும் அரசுகளே. இந்த மாதிரி அலட்சிய போக்குகளையெல்லாம் படிக்க படிக்க இந்தியனாக பிறக்க மாபாவம் செய்திருக்க வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. குடிமக்களின் மீது அக்கறை கொள்ளாத அரசாங்கம். கொண்டு வரப்படும் எல்லா திட்டங்களும் ஓட்டுக்களை குறிவைத்து மட்டுமே. எல்லாவற்றிலும் ஊழல்கள். ஆனால் அவற்றை கண்டித்து ஒரு பொதுநல கிளர்ச்சியும் இங்கே கிடையாது. பொதுவாகவே காலம் காலமாக இந்தியர்களிடையே ஒற்றுமை கிடையாது. அதனால்தான் வியாபாரம் செய்யவந்த கம்பெனியார் நாட்டை கைப்பற்றிக்கொள்ள முடிந்தது.

இந்தியா நிச்சயமாக சொர்க்கம்.. ஆனால் பணம் உள்ளவனுக்கு மட்டும்.
நடுத்தர வர்க்கத்தில் அவதிப்படுபவனுக்கு கடனையும், விளிம்பு நிலையில் வாழ்பவனுக்கு முடிவற்ற துயரத்தையும் வாதைகளுடன் கூடிய மரணத்தையும் மட்டுமே அளிக்கும் இந்த தேசம் போலியான ஜெய் ஹிந்த் கூச்சல்களுடன் என்றென்றும் இப்படியேதான் இருக்கும். காரணம் சுரணையை முனை மழுங்கிய மக்கள். சாலையில் விபத்தை உருவாக்கிக்கொண்டு இடைஞ்சலாக இருக்கும் ஒரு கோவிலை இடித்தால் உடனே கொதிப்பான்; ஆர்பரிப்பான். ஆனால் ஒரு ஊரையே அடித்து உலையில் போட்டுக்கொண்டால் கூட நானாச்சு என் லௌகீகம் ஆச்சு என்று டிவி முன்னால் தவம் கிடப்பான். இந்த மனோபாவம் என்றென்றும் உருப்படாது. Comparatively okay தான்பா என்பவர்களுக்கு இருக்கும் வளத்தைக்கொண்டு comparatively இன்னும் எவ்வளவு better ஆக வாழ முடியும் என்பது குறித்து ஒரு அறிவும் இல்லை.
என்னுடைய இந்த எல்லா அக்கறையும் வாழ முடியாத குடிமக்களின் மீது இந்த தேசம் காட்டும் அலட்சியம் பற்றி. வெட்டுவதை வெட்டி தள்ளுவதைத் தள்ளி வாழ முடியக்கூடிய வசதியானவர்கள் வாயார உரக்கச் சொல்லுங்கள் ’பாரத் மாதா கி ஜே!’
மேலும்...

கண்ணோடு கண்ணை கலந்தாளென்றால்

Posted: Tuesday, December 21, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
கமல் யாருடைய கட்டாயத்தின் காரணமாக நீக்கியிருந்தாலும் அது நல்ல முடிவு. இனி மக்களின் கவனம் படத்தின் மீது மட்டும் இருக்கும். அநாவசிய சர்ச்சைகளின் மீது இருக்காது.

வாய் நாற்றம், காமக் கழிவு போன்ற வார்த்தைகள் வெகுசனவெளியில் பயன்படுத்தத் தக்கன அல்ல. இதையே கமல் ஒரு நூலாக வெளியிட்டு அதில் தன் கருத்துகளை கவிதைகளாக்கி இருந்தால், அங்கே வார்த்தைகளைப்பற்றிய வாதங்களுக்கு இடமில்லாமல் கருத்துக்களை மட்டும் முன்வைத்து விவாதிக்கலாம். ஆனால் சினிமா என்பது U சான்றிதழ் பார்த்து குழந்தைகளை அழைத்துச் செல்லும் இடம். கொஞ்சம் கவனம் தேவைதான். செக்ஸ் கல்வி அவசியம்தான் என்றாலும் அதற்கும் ஒரு வயது வரம்பு இருக்கிறதல்லவா.

ஆனால் கவிபாடியதே குற்றம் என்னும் கூக்குரல்களின் அறியாமை பற்றி முன்பே சொன்னதுபோல் பரிதாபம் தான் உண்டாகிறது. அங்க அவயங்களையும் கொங்கைகளையும் பற்றி பழந்தமிழ் பாடல்களில் இல்லாத வார்த்தையாடல்களையா இனி வரும் கவிஞர்கள் பாடிவிட முடியும்? ஆண்டாளின் பாடல் ஒன்றை இதற்கு முன்பே வேறு ஒரு உரையாடலில் உதாரணம் காட்டியிருக்கிறேன். கமல் பாடியதும் பரமன் குறித்துதான்; ஆண்டாளும் செய்தது அதுவேதான். அறியாதவர்கள் கூச்சலிடுகிறார்கள். அறிந்தவர்கள் அடுத்த வேலையை பார்க்கிறார்கள்.

நேற்று ஒரு புராணக் கதை படித்தேன். சிதம்பரத்தில் நடராஜர் ஆனந்த தாண்டவம் புரிந்த ரகசியம் குறித்தான ஆகம குறிப்பு அது. கதையைப் படித்து முடித்தவுடன் கண நேரத்துக்கு கண் அவிந்து போனது. ஈஸ்வரோ ரக்ஷது!

-0-

வாலி, வைரமுத்தெல்லாம் இப்படி பொட்டிலறைந்தாற் போல பொசுக்கென்று வார்த்தை போட்டு எழுதி வம்பில் மாட்டிக்கொள்ள மாட்டார்கள். அவர்களுக்கு தெரியும் இவற்றை எப்படி தேன் தடவித் தரவேண்டும் என்று. அவர்கள் பாடலிலேயே முன்னுதாரணங்களும் உண்டு.

கமலை பொறுத்தவரை, அவர் மீது இருக்கும் பகுத்தறிவு அடையாளம் காரணமாக அவர் என்ன செய்தாலும் பேசினாலும் பக்தர்கள் உலகம் உற்று பார்க்கிறது. வாதத்தால் வீழ்த்த இயலாது என்பதால் உணர்வுரீதியான மோதல்களை முன்னெடுக்கிறது. இப்படி ஒரு திறமைசாலி, ஒரு அறிவுஜீவி கடவுள் இல்லையென்று நம் நம்பிக்கைக்கு எதிராக பேசுகிறாரே என்னும் கவலையில் அவர்களுக்கு உள்ளூர குரல் கம்முகிறது. அதை மறைத்துக்கொண்டு கண்ணில் விளக்கெண்ணை விட்டுக் கொள்கிறார்கள்.

-0-

இங்கே கருத்து சுதந்திரத்தை விஞ்சி நிற்பது மத மேலாதிக்கம். அமெரிக்காவில் ஏசுவை விமர்சித்து சினிமா எடுத்துவிட முடியும். இங்கே ஒரு வசனம் கூட அதிகப்படியாக வைத்துவிட முடியாது. எதையும் தர்க்கரீதியாக அணுகும் போக்கு ரத்தத்திலேயே கிடையாது. அது சாமியோ, சாமியாரோ, அல்லது நடிகரோ.. கண்கள் மூடிக்கொள்ளும்; கரம் ஷேவிக்கும்.

மேலும்...