மகாவம்சம்

Posted: Thursday, July 22, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
மகாவம்சத்தின்படியான இலங்கையின் வரலாற்றை மீள்வாசிப்பு செய்து கொண்டிருக்கிறேன். காப்பியங்கள் என்றாலே காதில் பூச்சுற்றும் வேலை தானே. இதுவும் அப்படித்தான். 

மகாவம்சத்தின்படி சிங்களவர்களின் பிறப்பே incest ஆக இருக்கிறது. இதை வைத்துக்கொண்டு எப்படி உயர்குடி என்று சாதிக்கிறார்கள் என்று தெரியவில்லை.

அது ஒரு புறமிருக்க, என்ன தைரியத்தில் விஜய் ‘வங்கக் கடல் எல்லை நான் சிங்கம் பெத்த பிள்ளை’ என்று பாடினார்? இந்த ஈழ விரோத வரிகளை எப்படி சீமான்கள் கவனிக்காமல் விட்டார்கள்?!
மேலும்...

தமிழின காவலர் விஜய்!

Posted: | Posted by no-nononsense | Labels: , 0 comments

நண்பர்: 
//இங்ஙனம் வருங்கால தமிழனக் காவலரை நீ அவமதிக்கிறாய்//
யாரு விஜய்யா? அடப்பாவி இதை சொல்ல உன்னால் முடிந்தது.அதுவும் நன்றாக தமிழ் அறிவு,கவிதை,கதை,இப்படி பல தமிழ்பற்றிய விசயம் தெரிந்த நீ இப்படி சொல்வது கண்டனத்திற்க்குறியது.இதை நான் இரும்புககரம் கொண்டு வன்மையாக கண்டிக்கிறேன்.அவர் மேடையில் ஒரு பக்கம் தடுமாறாமல் தமிழில் பேசட்டும் அப்புறம் நாம் உயிரோடு இருந்தால் பார்ப்போம்....
(தமிழனக் காவலரை) 
அப்படி ஒரு நிலை வந்தால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன்.சத்தியம்

இதற்கு இவ்வளவு உணர்ச்சிவசப்பட வேண்டுமா? தமிழறிவுக்கும் தமிழினக் காவலர் ஆவதற்கும் என்ன தொடர்பு? இது ஸ்டாலினையும், அழகிரியையும் ஏன் ஜெயலலிதாவையுமே கூட அவமதிக்கும் சொல். பின்னே, கருணாநிதிக்குப் பிறகு இவர்களில் ஒருவர் தானே அடுத்த தமிழினக் காவலராக வரப் போகிறார்கள். அல்லாமல் சீட் காலியாகவா இருக்கப் போகிறது??

தமிழ்தான் பிரச்னையென்றால் ஒரு செம்மொழி மாநாடு நடத்தி அடிபொடி கவிஞர்களை விட்டு கவிபாட செய்து விட்டால் போச்சு. “நீ தமிழ்த்தாய்க்கே தமிழப்பா, தமிழ்க்கடவுளின் தாத்தா” என்றெல்லாம் பாடி பட்டம் தந்துவிட மாட்டார்களா? ஜெயலலிதா தஞ்சையில் நடத்திய உலகத்தமிழ் மாநாட்டின் பரப்புரைகளைத் தேடி படித்து பார். அப்போதே அவர் தமிழினக் காவலராக ஆகிவிட்ட கதையெல்லாம் தெரியும்.

அப்புறம் விஜய்....,

விஜய் ஏன் வரமுடியாது என்று நினைக்கிறாய்? நேற்று களவானி படம் பார்க்க போயிருந்தேன். அருமையான அப்படத்துக்கு மொத்தம் 15 பேர் தான் வந்திருந்தார்கள். இதே விஜயின் ஏதோ ஒரு மாஹாக் கடிப் படமாக இருந்திருந்தாலும்கூட கூட்டம் 50-க்கும் கீழே குறைந்திருக்குமா? அதுதான் தமிழர் போற்றும் விஜய்யின் மகத்துவம். தமிழக அரசியலில் நாளை வெற்றிடம் ஒன்று ஏற்படுமானால் இந்த மகத்துவம் நாளை மகசூலாக மாறி ஓட்டுக்களை அள்ளாமல் போய் விடுமா என்ன? 


தமிழனை நாடாள சினிமாக்காரனை விட்டால் ஏது கதி? ரஜினி, விஜயகாந்த், விஜய், சீமான் போன்ற சினிமாக்காரர்கள் தானே தமிழர் உரிமைக்கு கடைசிப் புகழிடம்? ரஜினி வாய்ஸ் என்றால் என்ன என்று நீ பார்த்ததில்லையா? தமிழனுக்கு ஒரு பிரச்னையா.. ரஜினி என்ன சொல்லப் போகிறார், கமல் என்ன முற்போக்கு கருத்து வைத்திருக்கிறார் என்று தெரிந்துகொள்ளாமல் தமிழனுக்கு தூக்கம் தான் வந்துவிடுமா? நேற்று எம்ஜிஆர், இன்று ரஜினி, நாளை விஜய். இப்படி யாராவது நடிகர்கள் நம்மை இந்த மாபாவியான மானுட ஜென்மத்திலிருந்து கடைத்தேற்ற கட்டாயம் தேவை. நடந்தவைகளையும் நடப்பவைகளையும் பரிசீலித்து பார். சாத்தியங்கள் புரியும்.

சுரேஷ், உன் அரசியல் அறிவு அவசியம் அப்டேட் செய்துகொள்ள வேண்டிய நிலையில் உள்ளது. கவனிக்க.

அப்புறம் தற்கொலை அது இது என்று என்னவோ சொல்லியுள்ளாய். அதைத்தானே விடாமல் பாடாவதி சினிமாக்களாகப் பார்த்து அடிக்கடி செய்து வருகிறாயே, இன்னும் என்ன? யார் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் நடப்பது நடந்து கொண்டுதான் இருக்கும். அதற்கெல்லாம் சாக வேண்டும் என்றால் எத்தனை முறை சாக?

உளவியல் ரீதியாக உனக்கு ஏன் இந்த எண்ணம் வந்தது என்று கொஞ்சம் சிந்தித்து பார்த்தேன். உனக்கு இன்னும் கல்யாணம் ஆகாததால்தான் தற்கொலை எண்ணம் வந்திருக்கிறது. கல்யாணம் செய்து விட்டாயேயானால் பிறகு வரவே வராது. ஏன், எப்படி என்றெல்லாம் இடக்காக கேட்டுக் கொண்டிருக்கக் கூடாது. அதெல்லாம் கணவன்மார் ரகசியம். செய்து பார். தன்னால் விளங்கும். வாழ்த்துகள். 
மேலும்...

பழைய பாடல்களும் நானும்

Posted: Tuesday, July 20, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
கேள்வி: அந்த பழைய பாடல்கள் எல்லாம் இப்போது தான் ( ஒரு குறுப்பிட வயதுக்கு பின்) உன்னால் ரசிக்க முடிகிறது என்பதை ஒப்புகொள்வாயா? 
இல்லை. சிறு வயது முதலே விரும்பி கேட்கிறேன். அதற்கு நான் என் அம்மாவுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும். அவருடைய இசை ரசனைதான் எனக்கும் தொற்றிக் கொண்டது. எங்கள் வீட்டில் எப்போதும் ஏதாவது பாடல், கேஸட்டுகளிலோ ரேடியோவிலோ ஒலித்தபடியே இருக்கும். எல்லா காலைகளும் ஆல் இண்டிய ரேடியோ திருச்சியின் வர்த்தக ஒலிபரப்புடன் தான் விடியும். அதனால் இயல்பாகவே நல்ல பாடல்கள் என்னால் உள்வாங்கப்பட்டுக் கொண்டே இருந்திருக்கின்றன. 

பின்னர் பதின்மங்களில் எனக்கென்று ஒரு ரசனை உருவானபோது சமகால இளையராஜா, ரஹ்மான் இசையால் வசீகரிக்கப்பட்ட அதேவேளை, பழைய பாடல்களையும் தேடி தேடி கேட்டிருக்கிறேன். தேடி என்று இங்கே நான் சொல்லக் காரணம் நாமக்கல்லில் கிடைக்காத சில பாடல்களை பதிவு செய்துகொள்வதற்காக சேலம் லீ பஜார், பழைய பஸ் ஸ்டாண்ட் எல்லாம் அலைந்து திரிந்திருக்கிறேன். அவற்றில் ஒன்று ஜெயகாந்தனின் ‘பாதை தெரியுது பார்’ படத்தில் வரும் ‘தென்னங்கீற்று ஊஞ்சலிலே’ என்னும் பி.பி.ஸ்ரீனிவாஸ் குரலில் இழையும் பாடல். ஓர் அற்புதமான மெலடி. 

நாமக்கல்லில் பழைய பாடல்களின் இசைத்தட்டுக்களை(ரெகார்டு) வைத்திருந்தவர்கள்  வளையப்பட்டியை சேர்ந்த பழனி என்பவரும், மேட்டுத்தெரு அமுதா ரெகார்டிங் சென்டரின் ஓனராகிய பெரியவர் ஒருவரும்தான். அவர்களை நான் படுத்திய பாடு அரும்பாடு. காரணம் ரெகார்டை எடுத்து ஓடவிடும் பிளேயர் அடிக்கடி மக்கர் செய்யும். அதை சரிசெய்து அதில் ஓடவிட்டு, அதனுடன் இணைந்திருக்கும் அடாப்டர் மூலம் கேஸட் ரெகார்டரில் பதிவு செய்ய வேண்டும். சிரமமான இந்த வேலையை செய்து கொண்டிருப்பதற்குள் நாலு கேஸட்டுகளை பதிவு செய்து கொடுத்து விடலாம். இருந்தாலும் தொந்தரவு தாங்காமல் செய்வார்கள். 

அப்படியெல்லாம் திரவியமாகத் தேடிக் கேட்ட பாடல்களில் 1940-களில் திருச்சி லோகநாதன் தொடக்கம், சுப்பையா நாயுடு, ஏ.எம்.ராஜா, பின்னர் விஸ்வநாதன் காலம் முதல் 70-களின் வி.குமாரின்(எஸ்.பி.பி.க்கு பல நல்ல மெலடிகள் கொடுத்த அதிகம் வெளியே தெரியவராத இசையமைப்பாளர்) மெல்லிசை வரை அடங்கும். எல்லாமே கேஸட்டுகளில் பதிவானவை. பதிவு செய்யப்பட்ட காலகட்டங்களும் 1995 - 2000 வரை இருக்கும்.

அப்போது என் வீட்டுக்கு வரும் நண்பர்களுக்கு பல வயர்களும் பல வடிவங்களில் ஸ்பீக்கர்களும் இணைக்கப்பட்ட என்னுடைய மியூஸிக் டேபிள் ஒரு கண் நிறைந்த காட்சியாக இருக்கும். 

இப்படியெல்லாம் அலைந்து திரிந்து பதிவு செய்து கேட்ட நூற்றுக் கணக்கான பாடல் கேஸட்டுகளையெல்லாம் இரு வருடங்கள் முன்பு எடுத்து எறியும்படி ஆனது. 2003-க்கு பிறகு வந்த MP3-களின் காலத்துக்கு பிறகு கேஸட்டுகளையும், கேஸட் பிளேயர்களையும் பாரமரித்து பாதுகாக்க முடியவில்லை. அதுவும் 2004-ல் கம்ப்யூட்டர் வாங்கிவிட்ட பிறகு கேஸட் பிளேயர் இடத்திற்கு இடைஞ்சலாகிப் போனது. இயல்பாகவே கேஸட்டுகளும் ஒரு இருட்டு மூலையில் போடப்பட்டு, கரையான் ஏறி கெட்டுப் போயின. ஒருநாள் மனம் வலிக்க எடுத்தெறிந்தேன்.

கேஸட்டுகளின் கதை இப்படி என்றால், சிறு வயது முதலே நான் ரேடியோக்களின் ரசிகன். அதிகாலை 5.30-க்கு தென் கிழக்காசிய நேயர்களுக்காக ஒலிபரப்பாகும் ‘திரைகடலாடி வரும் தமிழ்நாதம்’ என்னும் ஆல் இண்டிய ரேடியோ ஒலிபரப்பு முதல், பின்னர் 6.15-க்கு பிலிப்பைன்ஸில் இருந்து ஒலிபரப்பாகும் ரேடியோ வேரிதாஸ் ஏஸியா, ரேடியோ பீஜிங், முக்கியமாக சிங்கப்பூரின் ஒலி 96.8 - எல்லாவற்றின் வாசக அமைப்புகளிலும் உறுப்பினனாக பதிவு செய்திருந்தேன். கடிதங்கள் தவறாமல் எழுதுவேன். அப்படியாக ரேடியோ வேரிதாஸில் பணியாற்றிய பாதிரியார் ஜெகத் கஸ்பருடன்(இன்று தமிழ் முழக்க மேடைகளில் பிரபலமாக இருக்கும் கனிமொழியின் நண்பர்) கடிதத் தொடர்பில் இருதேன். (இரவில் 9.15-க்கு தவறாமல் பிபிசியின் தமிழோசை கேட்கும் வழக்கமும் இருந்தது. ஆனால் அதில் பாடல்கள் இடம்பெறாது).

இதுபோக இலங்கை ஒலிபரப்பு கூட்டுஸ்தாபனத்தின் ஒலிபரப்புகள்(சிலோன் தமிழை கற்றது அதன்மூலம்தான்), சக்தி எஃப்.எம் என்று இன்னும் சில. என் மாமா துபாயிலிருந்து எனக்காக வாங்கி வந்து தந்திருந்த ஜப்பான் ரேடியோ ஒன்றுதான் இவை அனைத்திற்கும் எனக்கு துணை. கையில் தூக்கி வைத்துக்கொண்டு காதை ஸ்பீக்கரில் வைத்து நாபை திருகியபடியே இருப்பேன். மேலதிகமாக என்னுடைய சஞ்சாரங்கள் அனைத்தும் சிற்றலை வரிசைகளில்தான் இருக்கும். அங்கே நான் விரும்பிக் கேட்ட சில ஆங்கில ஒலிபரப்புகளும் இருந்தன. எல்லாம் serendipitous ஆக கண்டுபிடித்தவை. இன்னும் நிறைய இருக்கின்றன. எல்லாவற்றையும் எழுதினால் போரடிக்கும். ஏற்கெனவே சிறியதாக எழுத ஆரம்பித்து நீண்டுவிட்டது. 

இப்படி என்னை தேடியும் நான் தேடியும் பழைய நல்ல பாடல்கள் என்னை வந்தடைந்தபடியே இருந்தன. அவையெல்லாம் என் வாழ்வின் வசந்த காலங்கள். கிரிக்கெட், பாடல், புத்தகம், காதல் என்று இளமையின் வானில் உயரே உயரே சிறகடித்து திரிந்த நாட்கள். இனி நினைத்து பெருமூச்சு விட்டபடியே இருக்க வேண்டியதுதான்.
மேலும்...

சிலைகளின் தேவை என்ன?

Posted: | Posted by no-nononsense | Labels: 0 comments
சிலைகளால் என்ன பயன்? தலைவர்களின் சிலைகளை விட அவர்கள் விட்டு சென்ற சித்தாந்தங்களே இன்றைய தேவை. இந்தியாவை பொருத்தவரை சிலைகளின் அரசியல் பிற்கால கலவரத்துக்கு போடப்படும் அச்சாரம். காரணம் இங்கே மறைந்து விட்ட எல்லா தலைவர்களையும் ஜாதிக்கட்சிகள் சுவீகாரம் செய்து கொண்டுள்ளன. பெரியாரும் காமராஜரும் நாயக்கரும் நாடாருமாக முழங்கப்படுவது காலக் கொடுமை.

மேலும்...

வளைகுடா நாடுகளின் கொத்தடிமைத்தனம்

Posted: Monday, July 19, 2010 | Posted by no-nononsense | Labels: , 0 comments
அரபு நாடுகளில் கொத்தடிமைகளாக வாழும் இந்தியர்களை பற்றிய விவாதத்தில் என் கருத்து:

நம் அரசாங்கத்துக்கும் சௌதி அரேபியாவின் கொத்தடிமைத்தனத்துக்கும் ஒரு சம்மந்தமும் இல்லை. இது அவரவராக விரும்பி ஏற்றுக்கொள்ளும் பாடு. நம் அரசாங்கம் செய்ய வேண்டியது தன் குடிமக்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்கச் செய்யும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது. சும்மா பெயரளவில் இல்லாமல் அதன் பயன் கடைமட்டம் வரை சென்று சேரும்படியான ஒரு திட்டம். அல்லது அதை நோக்கிய நடவடிக்கைகள். அவ்வளவு துன்பங்களைச் சுமந்து சம்பாதிக்கும் 10 முதல் 15 ஆயிரம் ரூபாய், இங்கேயே கிடைக்கும் என்றால் யாரும் போக மாட்டார்கள்.

இன்னொரு கவனிக்க வேண்டிய விஷயம், துபாய் போயிட்டா(எல்லா அரபு நாடுகளும் நமக்கு துபாய் தான்) நல்லா பிழைச்சிக்கிடலாம் என்னும் மாயை மற்றும் ஏஜெண்டுகளின் மிகையான தகவல்களை நம்பி செல்பவர்கள் தான் அதிகம். அங்கே போனாலும் சொற்பத் தொகைதான் கிடைக்கும் என்பது தெரிந்திருந்தால் இங்கேயே இருந்து விடுவார்கள்.

மேலும், இங்கே எழுதப்பட்டுள்ளது லேபர்கள் எனப்படும் கூலித் தொழிலாளிகளைப் பற்றி. தொழில்நுட்பம், பொறியியல் போன்றவற்றில் அனுபவமும் கல்வித் தகுதியும் கொண்டிருப்பவர்கள் அரபு நாடுகளில் நல்ல வேலை மற்றும் வாழ்க்கைத் தரத்துடன் இருப்பதும் நாம் கண்டு வருவதுதான்.

இந்த விஷயத்தில் நம் அரசாங்கத்தால் மேலதிகமாக செய்யக்கூடியதெல்லாம் ஏஜெண்டுகளை முறைப்படுத்தி கண்காணிப்பதுதான். ஆனால் பதிவுசெய்து கொண்டு இயங்குபபர்களை விட பதிவு செய்துகொள்ளாமல் ஆள் பிடித்து அனுப்பி கமிஷன் சம்பாதிப்பவர்களே அதிகம் என்பதால், பெரிதாக எந்த வேலை தரம், உறுதி, பாதுகாப்பு உத்தரவாதங்களையும் பெற முடியாது.

இந்தியாவில் அம்பானிகள் உருவாகியிருக்கலாம். ஆனாலும் இது அன்றும் இன்றும் ஏழை நாடுதான். அன்று ஃபிஜி, மொரீஸியஸ், கரீபியன் கரும்புத் தோட்டங்களுக்கும் இலங்கையின் தேயிலை தோட்டங்களுக்கும் கொத்தடிமைகளாக சென்றார்கள் என்றால், பிற்காலத்தில் அரபு நாடுகளுக்கும் கீழை நாடுகளுக்கும் சென்றார்கள். காலம் மாறினாலும் காட்சி மாறவில்லை. ஏழையின் வாழ்க்கைத் தரம் மாறவில்லை.

ஆனால் எப்போதாகிலும் நாம் ஒரு ஐரோப்பியனோ, அமெரிக்கனோ, ஆஸ்திரேலியனோ லேபர் வேலைக்கு கப்பல் ஏறியதாகப் படித்திருக்கிறோமா? இதற்கான காரணங்களை பட்டியலிட்டால் அது சமூக பொருளாதாரத்தின் அத்தனை கூறுகளை அடியொட்டி ஆராய்வதாக அமையும். ஒன்றிரண்டு என்பதாக இருக்காது. மேலை நாடுகளில் அரசாங்கம் தன் குடிமகனுக்கு கைகொடுத்து உதவுகிறது. இங்கே உன் பெற்றோர் உதவுகிறார்கள். அதனால் இந்தியா போன்ற நாடுகளில் குடிமகனாக அவதரிப்பதில் ஆகமுக்கியம் - ஏழைக்கா? பணக்காரனுக்கா? நீ யாருக்கு மகனாக பிறக்கிறாய் என்பதைப் பொறுத்தது.

ஏழையின் மகன், ஒடுக்கப்பட்ட ஜாதியின் பிள்ளை, பழங்குடியினத்தில் பிறப்பு என்றால் அதற்கேற்ப இங்கே அமைந்திருக்கும் சமூகத்தடைகளை தகர்த்து எறிந்து வர ஒரு போராட்டம் தேவைப்படுகிறது. சமூகப் போராட்டங்களின் முடிவாக வாழ்பவர்களை விட வீழ்பவர்களின் எண்ணிக்கையே அதிகமாக இருப்பதுதான் வரலாறு நமக்கு காட்டுவது. அப்படிப்பட்டவர்களில் சிலர்தான் இப்படி கொத்தடிமைகளாக தங்களை வருத்திக்கொண்டு தன் குடும்பங்களை வாழ வைக்க போராடுபவர்கள்.
மேலும்...

தலையாடி

Posted: Saturday, July 17, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
காத்திருந்து புலர்ந்தப் பொழுதில் பதமான 
தேங்காயாக தேடிப் பிடித்து,
நாரை தேய்த்து தலையை சிரைத்து, 
மொழுமொழுவென்ற வழுக்கையில்
அதன் முக்கண்ணை துளைத்து, 
இனிப்பை திணித்து, சருகுகள் குவித்து 
நெருப்பை எரித்து - அதில் 
கருமை மிகாமல் எட்டி நின்றபடி 
எட்டி நீட்டி வேகவைத்து, 
மகளை அழைத்து கையில் கொடுத்து, 
அவள் விளையாட்டு தோழர்களுடன் 
ஊர்வலம் சென்று, பிள்ளையார் தரிசித்து, 
பெருத்த அவர் தொந்தியில் அவர் பாகம் படைத்து, 
எட்டுமேல் எட்டு வைத்து வீடு வந்து 
எம்பாகம் உடைத்து, எச்சிலூறிய நாக்கில் சுவைத்து, 
ஒருவழியாக முடிந்தது தலை ஆடி; 
தேங்காய் சுடும் நோம்பி!!
நண்பர்காள், இப்போது சொல்லுமீர்,
சுட்ட தேங்காய் வேண்டுமா?
சுடாத தேங்காய் வேண்டுமா?
மேலும்...

தட்டிக் கேட்பதை தட்டிக் கழிப்பார்

Posted: Friday, July 16, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
இந்தப் பதிவை முன்வைத்து:

வலியோர் சிலர் எளியோர் தமை
வதையே புரிகுவதா?
மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?
உலகாள உனது தாய்மிக
உயிர்வாதை யடைகிறாள்;
உதவாதினி ஒரு தாமதம் உடனே
விழி தமிழா!

இப்படி பாரதிதாசனை போல எனக்கும் சில நேரங்களில் ரத்தம் கொதிக்கிறது. அடுத்த கணமே என் குடும்பம் மொத்தமும் கண்முன் வந்து கொதிப்பை அடக்குகிறது. குடும்ப பந்தங்களை உதறி வெளியே வந்தால் மட்டுமே தவறுகளை தட்டிக் கேட்பது நடைமுறையில் சாத்தியம். இல்லையென்றால் அந்த போலீஸ்காரனோ, அரசியல்வாதியோ போகிற போக்கில் ஒரு கேஸை போட்டு விட்டு போய் விட்டால் என் குடும்பம் தான் தெருவில் நிற்கும். தெருவில் நிற்பதும் போர்டிகோவில் நிற்பதும் அவரவர் பொருளாதார வசதி நிலையை பொறுத்தது. பரிதவித்து நிற்பது என்னவோ நிதர்சனம். 

Common man வாழ்க்கையில் இதற்கெல்லாம் தீர்வே கிடையாது என்பதை புரிந்துகொண்டு நடையைக் கட்டுவதுதான் இதன் ஒரே தீர்வு.

செக்கிழுத்த செம்மலின் கதையை செல்லூலர் ஜெயிலில் அவர் செக்கிழுக்கும் வரை மட்டும் காட்டி முடித்துக் கொண்டார்கள். ஜெயிலிலிருந்து வெளியே வந்த அந்த கப்பலோட்டிய தமிழன் கப் சாயாவுக்கு நாய் பட்ட பாட்டை வரலாற்றின் ஏடுகளில் தேடிப் படித்து பாருங்கள். எந்த தேசத்துக்காக சமூகத்துக்காக பாடுபட்டாரோ, அதுவே அவரை முடிந்தவரை அலைக்கழித்து சாகடித்தது. 

சமூகத்தின் எளிய அங்கத்தினன் என்பவன் ஒன்று தொடர்ந்து அப்படியே வாழலாம். அல்லது தன்னை பொது நன்மைக்காக காவு கொடுத்துக் கொள்ளலாம். அது அவரவர் தனக்காக வகுத்துக் கொண்டிருக்கும் கோட்பாட்டு வாழ்க்கைமுறையை பொறுத்தது. 
மேலும்...

உள்மன சித்திரம் ஒன்றின் குறிப்பு

Posted: Saturday, July 10, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
அப்போது நான் சேலத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறேன். ஒரு வேலை நாளில் ஒரு அலுவலாக வெளியே கிளம்பும்போது ஓரிடத்தில் அவரை காண்கிறேன். அவர் என் பால்ய கால சிநேகிதர். என்னை விட வயதில் மூத்தவர். பெயர், பாலு. அவ்வளவு அந்நியோன்யமாக சிறு வயதில் சேர்ந்து சுற்றியிருக்கிறோம். மீசை முளை விட்ட பருவத்தில் சில லௌகீக விஷயங்களின் உட்பொருள்களை அவர் வாயிலாகவே அறிந்து கொண்டிருந்தேன். பிறகு காலம் வேறு வேறு திசைகளில் இருவரையும் கரை சேர்த்து விட்டது. நீண்ட நாள் கழித்து கண்டதும் மகிழ்ச்சியுடன் பல விஷயங்களை இருவரும் பேசிக் கொள்கிறோம். இத்தனை ஆண்டுகளில் வாழ்க்கை என்னை எப்படியெல்லாம் புடம் போட்டு வருகிறது என்பதை சம்பவ கோர்வையுடன் அவர்க்கு விலாவரியாக விளக்குகிறேன்.

பேசிக்கொண்டே அவருடைய சைக்கிளில் இருவரும் ஒரு ஒதுக்குப்புறமான டீக்கடைக்குச் செல்கிறோம். அக்கடையின் முன்னால் விநோதமான ஒரு ஸ்டேண்ட் L-ஐ கவிழ்த்து போட்டது போல் இருக்கிறது. அவர் சென்று அதில் தன் சைக்கிளை பாதுகாப்பாக கப்ளிங் போட்டு இணைக்கிறார். இதென்ன சைக்கிளை பூட்டிச் செல்ல புதுமுறையாக இருக்கிறதே என்று வியக்கிறேன். உள்ளே சென்று டீ சாப்பிடுகிறோம். அக்கடை, நண்பருக்கு ஏற்கெனவே பழக்கமான கடை போல தெரிகிறது. டீக்கும் கடைக்கும் சம்மந்தமில்லாத தடி தடியான ஆள்கள் உள்ளே ஒருபுறம் அமர்ந்திருக்கிறார்கள். பார்க்க புதுப்பேட்டை பட ரவுடிகள் போன்று ஒரு தோற்றம். அவர்களைக் கண்டதும் நண்பர் என்னிடம் இங்கே வேண்டாம், நாம் போகலாம் என்று அவசரப்படுத்துகிறார்.

வெளியே வருகிறோம். அதற்குள் எங்களை கவனித்து விட்ட அந்த ரவுடிகள், வெளியே வந்து நண்பருடன் மல்லுக்கு நிற்கிறார்கள். ஏதோ பழைய பிரச்னை என்று புரிகிறது. அவருக்கு பரிந்து பேசிய என்னை இன்னும் பேசினா இப்பவே வெட்டி விடுவேன் என்கிறான் கரடு முரடான முக லட்சணம் கொண்ட ஒரு ரவுடி. எனக்கு உதறல் எடுக்கிறது. தான் பேசி விட்டு வருவதாகவும் என்னை சைக்கிளை எடுத்துக்கொண்டு போகவும் நண்பர் சொல்கிறார். சாவியுடன் வெளியே வரும் நான், வெளியே அந்த L வடிவ கப்ளிங் பூட்டை திறக்க முயற்சிக்கிறேன். மக்கர் செய்கிறது. தொடர்ந்து போராட்டம்; ம்ம்ஹூம், எதுவும் வேலைக்கு ஆகவில்லை. உள்ளே சென்று அவரையே அழைத்து வந்து திறந்து தரச் சொல்லலாம் என்றால் உள்ளே செல்லவும் பயம். அவர்கள் மிரட்டிய தொனி அப்படி. கொலை வெறியை கண்களில் கண்ட பிறகே பயந்து வேகமாக வெளியே வந்திருக்கிறேன்.

அப்போது உள்ளே இருந்து தள்ளுமுள்ளு, அலறல் சத்தங்கள். எனக்கு முதுகு தண்டு சில்லிட ஆரம்பிக்கிறது. இனி சைக்கிளை நம்பி பிரயோஜனம் இல்லை என்று நடக்க எத்தனிக்கும்போது, கடையின் பக்கக் கதவு திறந்துகொண்டு ஒரு மீன்பாடி வண்டி வெளியே வருகிறது. அதில் வெட்டபட்டு உயிரிழந்த நிலையில் நண்பர் உட்பட நான்கு பிணங்கள். நான் நடுநடுங்க ஆரம்பித்து விட்டேன். இன்னும் கிளம்பாமல் நின்று கொண்டிருக்கும் என்னை கண்டவர்கள், பிணத்தை பார்த்து விட்டதால் அவனையும் வெட்டுங்கடா என்று என்னையும் துரத்த ஆரம்பிக்கிறார்கள். ஓட்டம்.. ஓட்டம்.. மரணபயம் தந்த அசுர ஓட்டம். எனக்கும் அவர்களுக்குமான இடைவெளி குறைந்தது அரை கிலோ மீட்டர் இருக்கும்படியான தொலைவில் இருக்கும்போது இனியும் என்னால் ஓட முடியாது என்று சோர்ந்து ஒளிந்துகொள்ள இடம் தேடும்போது, அங்கே ஓர் இடத்தில் பந்தல் போட்டு கும்பலாக ஒரு இழவு வீடு தெரிந்தது. அங்கே சென்று கும்பலில் கலக்க முடிவுசெய்கிறேன். அருகில் சென்று பார்த்த பிறகே தெரிந்தது அது ஒரு பாய் வீட்டு வஃபாத் (முஸ்லிம் இழவு). அதை பொருட்படுத்தாமல் அங்கே சென்று கலந்து விடுகிறேன்.

இங்கேயிருந்து எப்படி தப்பிக்க.. கிலி பிடித்து ஆட்டிக்கொண்டிடுருக்கும் அந்த வேளையில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் வஃபாத் வீட்டுக்கு அருகிலுள்ள வீடுகளின் முன்னாள் நிறுத்தப்பட்டிருந்த டூவீலர்களை எல்லாம் உதைத்து பார்க்கிறேன். எதுவும் ஸ்டார்ட் ஆகவில்லை. சுற்றும் முற்றும் பார்த்தால் மெயின்ரோடை தவிர்த்து குறுக்காக செல்லும் சிறிய ரோடு ஒன்று கண்ணில் படுகிறது. அங்கே சென்று நின்று, போகும் வரும் வண்டிகளில் எல்லாம் லிஃப்ட் கேட்கிறேன். ஒரு பயலும் நிறுத்தவில்லை. கொஞ்சம் ஒதுங்கி நிற்கவில்லை என்றால் வெட்டுபட்டு போக இருந்த உயிர் அடிபட்டு போய்விடும் என்று பயந்து விலகிவந்து வேறு என்ன செய்யலாம் என்று யோசிக்கிறேன். அப்போதுதான் என் பாக்கெட்டில் இருந்த செல்போன் நினைவுக்கு வந்தது. அதை எடுத்து பார்த்தால் சிக்னல் பிரச்னையில் டவர் விட்டு விட்டு ஒளிர்ந்தது. அருகிலிருந்த வீட்டின் மாடிக்கு ஏறி என் அலுவலகத்திற்கு போன் செய்து என் பணியாளரிடம் இடம் சொல்லி சீக்கிரம் வந்து அழைத்து போகச் சொல்கிறேன். பைக் வரும் வரை இனி காத்திருக்க வேண்டும். இப்போதைக்கு இந்த மொட்டை மாடியே பாதுகாப்பு; ஆசுவாசம்; அப்படியே கால்களை மடக்கி பால்கனி சுவர் ஓரமாக உட்கார்கிறேன். அங்கேயிருந்து பார்த்தால் ரோடு தெரியும். நாம் தெரிய மாட்டோம். ஓ.. இதென்ன.. நான் சாய்ந்துள்ள மொட்டை மாடி சுவர் அப்படியே சாய்கிறதே.. அய்யய்யோ விழுகிறேனே..!

0 0

நன்கு ஸ்கிரிப்ட் எழுதப்பட்டது போல தோன்றும் இந்த சம்பவம் அல்லது கதை அல்லது கற்பனை உண்மையில் இன்று அதிகாலை நான் கண்ட கனவு. சுவர் சாய்வதுபோல் உணர்ந்ததும் ‘ஆ..வ்வூ..ஊ..’ என்று பயத்தில் நாக்கு குழற விநோதமாக கத்திக்கொண்டு எழுந்த என்னை என் மனைவி தூக்கத்திலிருந்து தலையை தூக்கி விசித்திரமாக ஒரு பார்வை பார்த்து விட்டு மீண்டும் படுத்துக் கொண்டார். எனக்கு போன தூக்கம் போனதுதான். புரண்டு புரண்டு பார்த்தும் பிறகு தூக்கமே வரவில்லை. சிறிது நேரம் அந்தக் கனவையே எண்ணிப் பார்த்துக் கொண்டிருந்தேன். பல விஷயங்கள் அதில் விசித்திரமாக இருந்தன. பாலு, என்னும் அந்த அண்ணனை நான் கடந்த பத்தாண்டுகளில் சிலமுறையே சந்தித்திருக்கிறேன். ஆனால் எல்லாமே அவசரகதியில். அவர் தற்சமயம் ஆட்டோ ஓட்டுகிறார் என்பதால் அவசரமாக சில சமயங்களில் அவரிடம் சென்று ஆட்டோ சொல்வேன். நிறைய பேசணும், அப்புறமாக வர்றேன் என்று அப்போது சொல்வேன். ஆனால் அந்த அப்புறம் அவருக்கும் எனக்கும் பிறகு வரவேயில்லை. இன்று கனவில்தான் வந்திருக்கிறது. அவர் ஆட்டோ ஓட்டுவதும்கூட உள்ளபடியே சேலத்தில் அல்ல நாமக்கல்லில்தான்.

அந்த டீக்கடை இருப்பதாக கனவில் வந்த இடம் சேலம் ஜான்சன்பேட்டை சினிமா தியேட்டர் ஒன்றின் எதிர்புறமுள்ள குறுக்கு சந்து. பதிமூன்று வருடங்களுக்கு முன்பு அங்கே சிலமுறை உலவியிருக்கிறேன். அந்த தியேட்டரில் என்னை காண சேலம் வந்த மணிகண்டன், பண்டாரி நண்பர் குழாமுடன் ஏதோ பாடாவதி சினிமா பார்த்த ஞாபகம் இருக்கிறது. அதற்கு பிறகு அந்த ஏரியாவுக்கும் எனக்கும் ஸ்நான ப்ராப்தியும் இல்லை. ஆனால் கனவில் ஸ்கெட்ச் போட்ட மாதிரி துல்லியமாக அந்த இடங்கள் அப்படியே வந்தன.

அந்த L -ஐ கவிழ்த்து போட்ட ஸ்டாண்டிங் லாக் - சைக்கிளை பிணைத்து பூட்டி வைக்க அது ஒரு நல்ல யோசனை. ஆனால் அப்படி ஒன்றை இதற்குமுன் நான் எங்கேயும் கணடதில்லை.

அதெப்படி நான்கு பிணங்கள்?!

இந்த கனவின் நீளம் எவ்வளவு இருக்கும்? காலை 5.30-க்கு எழுந்தேன். சிறிது நேரம் நியூஸ் வெப்சைட்களை மேய்ந்து விட்டு சில பாடல்களை டவுன்லோடு போட்டு விட்டு, ஒரு குட்டி தூக்கத்துக்காக 6 மணியளவில் மீண்டும் படுத்து தூங்கினேன். திடுக்கிட்டு எழுந்தபோது சுவர் கடிகாரத்தின் முள் 7-ஐ நெருங்கிக் கொண்டிருந்தது. ஒரு மணி நேரத்திற்குள் ஆழமான தூக்கத்தை எட்டி, கச்சிதமான சம்பவகோர்வைகளுடன் இப்படி ஒரு கனவா? வியக்கிறேன்!

இப்படி சில கனவுகள் எப்போதாவது திடுக்கிட்டு எழச் செய்கின்றன. ஒரு கணநேர சிந்தனைக்கு பிறகு போர்வையுடன் சேர்த்து அதுபற்றிய நினைவையையும் இழுத்து மூடிவிடுவோம். இதையாவது பதிவு செய்து வைப்போமே என்றுதான் பல் விளக்கியபடியே இதனை தட்டச்சிக் கொண்டிருக்கிறேன்.

ஒருவேளை விழிக்காமல் இருந்திருந்தால் கனவில் தொடர்ச்சி எவ்வாறு இருந்திருக்கும்?

சாய்ந்து சரிந்த அந்த சுவரிலிருந்து ஏதாவது அதிசயம் நடந்து கீழே விழாமல் தப்பியிருப்பேனா?

அப்படி தப்பியிருந்தாலும் என்னை துரத்தி வந்தவர்கள் கையில் அகப்படாமல் நீடித்திருப்பேனா?

உண்மையில் என்னை துரத்தி வந்தது ரவுடிகளா, இல்லை Final Destination-ல் வருவது போல் மரணமா?

சொப்பன சாஸ்திரம் சொல்வதுபோல் எல்லா கனவுகளும் எதையோ சொல்லத்தான் முயற்சிக்கின்றன என்றால், இக்கனவு எனக்கு முன்சொல்வது என்ன? என்னை துரத்த போகும் மரணத்தையா?

ஐயகோ, என் இன்ஸூரன்ஸ் புதுப்பிக்கப்பட்டு விட்டதா, இல்லை எப்பவும்போல் மறந்து விட்டேனா? எதுவும் உடனே ஞாபகம் வர மறுக்கிறதே.. அதன் நாமினியைகூட இன்னும் மனைவி பெயருக்கு மாற்றவில்லையே..

முகவரியற்று போன என் முதல் காதலியின் முகம் ஏன் சட்டென்று இப்போது ஞாபகம் வர வேண்டும்? அட, இன்னும் மனதில் எங்கேயோ ஒட்டிக் கொண்டிருக்கிறாள் போலுள்ளதே!

லௌகீகத்தை லவலேசம் தானே இதுவரை அனுபவித்திருக்கிறோம். அரே பாப்ரே.. அதற்குள்ளே சாவா..

எனக்கு அடுத்து பிறக்க இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா? அதை தெரிந்துகொள்ளாமல் இறந்து விடுவோமா?

என்னை துரத்தும் மரணம் எதில் காத்திருக்கிறது. ஒருவேளை பஸ்ஸில் இருக்குமா? இனியும் இந்த பேய் வேக பஸ்களில் தினமும் போகத்தான் வேண்டுமா? காவிரி பாலத்தில் பஸ் ஓவர் டேக் ஆகும்போதெல்லாம் ஈரக்குலையை பிடிக்கிறதே.

0 0

”ஏங்க.. அப்படி என்னதான் எப்ப பாரு லொட்டு லொட்டுனு தட்டுவீங்களோ.. வீட்ல இருக்க அன்னைக்காவது கூடமாட ஏதாவது செஞ்சா என்ன..”

OOPS!.. விநாடி பொழுதில் நிஜத்திற்கு திரும்புகிறேன். இன்னும் கொஞ்ச நேரம் சொப்பன சாஸ்திரத்தை ஆராய்ந்து கொண்டிருந்தால் சமையலறையிலிருந்து ஏதாவது அஸ்திரம் வந்து தாக்க வாய்ப்புள்ளது என்பதாலும், அதை நினைக்கும்போது ஏற்படும் கலக்கம், கனவு ஏற்படுத்திய அச்சத்தை விட அதீதமானது என்பதாலும், தாற்காலிக அச்சத்தை விலக்கி நிரந்தர அச்சத்துக்கு செவிசாய்த்து தலைவணங்கி தாள்பணிய எழுந்து கொள்கிறேன்.


புஷ்பராஜ்
8.10 AM
மேலும்...

அரசியல் சீர்கேடுகள் - தொடரும் உரையாடல்

Posted: Wednesday, July 7, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
நண்பர்: காசு கொடுத்து விட்டு தோற்று விட்டால் அடுத்த பார்ட்டி நிறைய கொடுத்திருக்கான்னு  அர்த்தம். காசு வாங்கிய மக்களை மிரட்டுதல் நடந்து கிட்டு தான் இருக்கு.  இவங்க aim  பண்றது மகளிர் சுய உதவி குழுக்கள் போன்ற மக்களை ...


நிச்சயமாக அதுவும் நடக்கத்தான் போகிறது. இப்போதே கவுன்சிலர் எலக்சன் முடிவுகளின் போது அதுபோன்ற தாக்குதல்கள் நடக்கின்றன. ஓட்டு, வியாபாரம் ஆகும்போது பணம் கொடுத்தவன் சண்டைக்கு வராமலா போவான்? 

பொதுப் பணத்த எவ்வளவோ கொள்ளையடிக்கிறானுங்க, அதுல நமக்கும்தான் கொஞ்சம் செலவு பண்ணட்டுமே - என்று ஓட்டுக்கு பணம் வாங்குவதைப்பற்றி பொதுவில் மக்கள் ஒரு சமாதானம் சொல்கின்றனர். வாக்களிப்பதுதான் ஒரு ஜனநாயக ஆட்சிமுறையின் பிரம்மாஸ்திரம்; கடைசி அஸ்திரமும்கூட, அதைத்தான் விலைபேசிக் கொண்டிருக்கின்றோம் என்னும் பிரக்ஞை சிறிதும் இன்றி. வருத்தமாக இருக்கிறது. 

திங்கட்கிழமை அன்று பெட்ரோல் விலையேற்றத்தைக் கண்டித்து பாரத் பந்த் நடைபெற்றது. அது தங்களின் நலனுக்காகத்தான் நடத்தப்படுகிறது என்னும் உணர்வின்றி அதை ஒரு விடுமுறை நாளாக பலரும் கொண்டாடிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். சிலர் எதிர்கட்சிகளை திட்டிக்கொண்டும் இருந்தனர். அவர்களுக்கு தெரியாது, பெட்ரோலிய பொருட்களின் மீது விதிக்கப்படும் மறைமுகமான வரிவிதிப்புகளின் மூலமாக மட்டும் தாங்கள் எந்தளவு கொள்ளையடிக்கப்படுகிறோம் என்று. இந்திய பெட்ரோலிய சந்தையில் தனியாரை(அம்பானி, எஸ்ஸார், ஷெல்) அனுமதித்த பிறகே பெட்ரோல் விலை அடிக்கடி விலை உயர்வு காண்கிறது என்பதை. 

Petrol & Diesel Prise Rise - NDLF Poster

மக்களுக்கு குறைந்தபட்ச ஜனநாயக சுரணை - அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் இருப்பதைப்போல - என்று வருமோ தெரியவில்லை. ஆனால் அதனை நோக்கிய செயல்பாடுகள் அறிவுதளத்தில் மிக அவசியம். அதில் சோர்ந்துவிடக் கூடாது. 
மேலும்...

அரசியல் சீர்கேடுகளுக்கு எதிராக நாம் செய்யக்கூடியது என்ன?

Posted: | Posted by no-nononsense | Labels: 0 comments

//எத்தனை உதாரணங்கள் கொடுத்தும் எவ்வளவு அப்பட்டமாகவும், மறைமுகமாகவும், நக்கலாகவும், நகைச்சுவையாகவும் திரும்ப திரும்ப எழுதினாலும் அடிப்படை செய்தி என்னவென்றால்  நம்மை ஆளுகிற மற்றும் அதற்கு மாற்றாயிருக்கிற யாருக்கும் மக்கள் நலனில் எந்த அக்கறையும், தொலை நோக்கு பார்வையும் இல்லை என்பதே. இதற்கு நாமெல்லாம் என்ன செய்ய தயாராக இருக்கிறோம் அல்லது தயாராக இருக்கிறோமா என்பதே கேள்வி//

இதற்கு நாமெல்லாம் என்ன செய்ய தயாராக இருக்கிறோம்

உடனடியாக ஒன்றும் செய்யமுடியாது. அதற்காக எதையும் செய்யாமலும் இருந்துவிடக் கூடாது. 

கருணாநிதி-ஜெயலலிதா போன்ற அரசியல் வியாபாரிகளின் ஊழல், ஆடம்பரம், துக்ளக்தனமாக ஆட்சிமுறை பற்றியெல்லாம் மக்களிடம் போதுமான விழிப்புணர்ச்சி இல்லை என்பதே இவை அனைத்திற்கும் காரணம். ஒரு புரட்சிக்கு/மாற்றத்துக்கு வித்திடும் விழிப்புணர்ச்சியை நோக்கி தொடர்ந்து கருத்துக்கள் மொழியப்பட்டுக்கொண்டே இருக்கவேண்டும். விமர்சனங்கள் தைரியமாக முன்வைக்கப்பட வேண்டும். சோர்ந்துவிடக் கூடாது. பேசிப் பேசி என்ன ஆகப்போகிறது என்று சலிப்படையக் கூடாது. 

இது தொடருமானால், இந்த தலைமுறையில் கைகூடாத அரசியல் தூய்மை அடுத்தடுத்த தலைமுறைகளில் எட்டப்படலாம். அதற்கு நம் இன்றைய விமர்சனங்கள் அடித்தளமாக அமைந்து உதவலாம். இதற்கெல்லாம் சரித்திரம் நெடுக பல முன்னுதாரணங்கள் உள்ளன. அதையெல்லாம் எழுதி போரடிக்க விரும்பவில்லை.

சுருக்கமாக: நம்மை போன்ற சமூகத்தின் மேல் அக்கறை கொண்டவர்கள் நம்பிக்கை இழக்காமல் தொடர்ந்து இயங்க வேண்டும். களத்தில் முடியாவிட்டாலும் விமர்சன தளத்திலாவது. 

அல்லது தயாராக இருக்கிறோமா என்பதே கேள்வி

நடப்புகள் மீது விமர்சனப்பூர்வமான கருத்துக்கள் கொண்டவர்கள் நிச்சயமாக தயாராக இருக்கவேண்டும். தெருவில் இறங்க வேண்டாம், கொடி பிடிக்க வேண்டாம், கோஷம் போட வேண்டாம், ரத்தம் சிந்த வேண்டாம். ஆனால் அப்படி ரத்தம் சிந்தி பொதுநன்மைக்காக போராட முன்வருபவர்களுக்கு நம்முடைய ஆதரவை இருந்த இடத்தில் இருந்துகொண்டே நல்கவாவது தயாராக இருக்கவேண்டும். இது ஒரு சிந்திக்க தெரிந்த மனிதராக நம்முடைய கடப்பாடு. 
மேலும்...

அண்ணா நடத்திய உலகத் தமிழ் மாநாடு பற்றி பெரியார்!

Posted: Tuesday, July 6, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
அண்ணா நடத்திய உலகத் தமிழ் மாநாடு பற்றி பெரியார்!



உலகத் தமிழ் மாநாடாம்! வெங்காய மாநாடாம். இது எதற்கு?கும்பகோணம் மாமாங்கத்துக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் இருக்கப் போகிறது. காங்கிரசைவிடஇந்த மந்திரிசபை தேவலாம் என்கிறார்கள். இந்த நேரத்தில் ஏன் இந்த கூத்துகனம் அண்ணாதுரை 1972 இல் பதவிக்கு வரமாட்டேன் என்று சொல்லிவிடட்டும்உலகத் தமிழ்மாநாடு கூடிக் கலைந்த பின் சூத்திரன்சூத்திரனாகத் தானே இருக்கப் போகிறான்இழிவு ஒழியப் போகிறதாகண்ணகி சிலையும் கம்பன் சிலையும் எதற்குஇவர்கள் நமது இனப் பெருமையை ஒழித்தவர்கள் அல்லவா?

பெரியார் விடுதலை’ 15.12.1967
மேலும்...

அம்பேத்கர் திரைப்படம்

Posted: Monday, July 5, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
ஜூவி கட்டுரையை முன்வைத்து:


அவசியம் படிக்கப்பட வேண்டிய, ஆனால் அதிகம் புறக்கணிக்கப்பட்ட எழுத்துக்கள்/ஆளுமை அம்பேத்கருடயவை. பெரியாரும், அம்பேத்கரும் படிக்காமல் தேசியமும், சமூக நீதியும் பேசவரும் யாரும் கூரை ஏறியே வைகுண்டம் பார்த்து விட்டதாக கூச்சலிடுபவர்கள் என்பது மறுதலிக்க முடியாத உண்மை.

அம்பேத்கர் படம் வெளியிட விடாமல் முடக்கி வைத்துள்ளதன் பின்னுள்ள அரசியல் குறித்து நீண்ட நாட்களாக பொதுவுடமை சிந்தனையாளர்கள் குரல் எழுப்பி வருகிறார்கள். இப்போதுதான் அதை ஒரு மெயின் ஸ்ட்ரீம் பத்திரிக்கையில் கேட்கிறேன். 


பிற்சேர்க்கை: டிசம்பரில் இப்படம் வெளியாவதாக அறிகிறேன்.
மேலும்...

சாரு நிவேதிதாவின் விகடன் தொடர்

Posted: | Posted by no-nononsense | Labels: 0 comments
சாரு நிவேதிதா மீண்டும் விகடனில் எழுதத் தொடங்கியுள்ளார். இம்முறையாவது பாதியில் கதவை காட்டும்படி எழுதாமல் தப்பிக்கிறாரா என்று பார்க்கலாம். இம்முறை எழுதுவார். காரணம், 10 வருடங்களுக்கு முன்பு கேட்ட சாருவின் கலகக்குரல், கானகத்தின் ஏதோ ஒரு மூலையில் பெரும் குரலெடுத்து ஒலித்து தேய்ந்து மறைந்தே போய் விட்ட கர்ஜனையாக மாறி பலகாலம் ஆகிவிட்டது. இன்று மிஞ்சி இருப்பதெல்லாம் ஆபாசமும், பிழைப்புவாதமும் மட்டுமே. 

ஆனாலும்,

இன்னும் தவிர்க்க முடியாத எழுத்து அவருடையது என்பதில் மாற்றமில்லை. பரிசுத்த வேதாகாம வேதாந்திகளாக வேஷம் கட்டுபவர்கள் அவரை திட்டிக்கொண்டே விடாமல் படித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
மேலும்...

ஒத்த இசையமைவு பாடல்கள்

Posted: Friday, July 2, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
பாடல்களில் சில ஒரே மாதிரி ஒலிப்பதால் மட்டுமே அவைகளை காப்பியடிக்கப்பட்டவை என்று கூறிவிட முடியாது. தென்னிந்திய சினிமா இசையமைப்பு பெரும்பாலும் கர்நாடக ராகங்களை அடிப்படையாகக் கொண்டவை. அதனால் ஒரே ராகத்தை பயன்படுத்தி போடப்பட்ட பாடல்களெல்லாம் ஒரே மாதிரிதான் ஒலிக்கும்.

உதாரணமாக,

  1. ஆச அதிகம் வச்சி மனச
  2. தென்றல் வந்து தீண்டும்போது
  3. கல்யாண மாலை கொண்டாடும்
  4. மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான்
இவையெல்லாமே சிந்துபைரவி ராகத்தைக் கொண்டு மெட்டமைக்கப்பட்டவை. ஆரோகணம், அவுரோகணத்திற்கேற்ப சுதிகளில் ஏற்ற இறக்கங்கள் இருக்கலாமே தவிர, அடிப்படையில் ஒரே ஓசை நயங்களைக் கொண்டவை. மேலும், சிந்துபைரவியை எடுத்துக்கொண்டு, அதனுடன் வேறு சில ராகங்களை மிக்ஸ் பண்ணியும் போடப்பட்டவையாக இருக்கும். அதற்காக இவையெல்லாம் ஒன்றையொன்று காப்பியடித்து போட்டவை என்று சொல்லமுடியாது. 

மேலும் ஒரு உதாரணம்,

ராகம்: சுத்த தன்யாசி

  1. மாலையில் யாரோ மனதோடு பேச
  2. நான் காணும் உலகங்கள் யார் காணக்கூடும்
  3. பாராமல் பார்த்த நெஞ்சம் ஜம்ஜஜம்ஜம்ஜம்
இப்படி கூறிக்கொண்டே போகலாம்.

இளையராஜாவின் பெரும்பாலான பாடல்கள் இப்படி கர்நாடக இசையை அடிப்படையாகக் கொண்டவை தாம். அவற்றில் ராஜா புரிந்துள்ள ஜாலங்களைப்பற்றி எழுத ஆரம்பித்தால் எழுதிக்கொண்டே போகலாம். 

ஆனால் சில இளவட்ட, தேங்காமூடி இசையமைபபாளர்கள் மேற்கத்திய பாடல்களை அப்படியே உருவி அதன் சட்டையை மட்டும் மாற்றி இங்கே தன் பெயரில் போட்டுக்கொண்டு விடுகிறார்கள். அதனைத்தான் இசைத் திருட்டு என்பது. 

இதேபோல் இளையராஜாவின் பலப் பாடல்கள் ஹிந்தியில் காப்பியடிக்கப்பட்டன என்று கேள்விப்பட்டிருக்கிறேன். எனக்கு வடக்கத்திய இசைப்பற்றி ஞானம் குறைவு. எனக்கு அதில் ஆர்வமும் இல்லை. காரணம், சாஹித்யம்(lyric) புரியாத எந்த இசையையும் பெரும்பாலும் நான் ரசிப்பதில்லை. சொற்கள் புரியாத ஆலாபனைகளில் உயிரோட்டமில்லை என்பது என் கருத்து.

ஹிந்துஸ்தானி மட்டும் அதில் விதிவிலக்கு. அங்கே மொத்தமே இரண்டு மூன்று வரிகள் தான் சாஹித்யம். மற்றதெல்லாம் சஞ்சாரங்கள் தாம்.

இசையைப்பற்றி நான் கற்றுக்கொண்டிருந்தது இடையில் தடைப்பட்டு விட்டது. எப்படியாவது அதற்கும் ஒரு நேரத்தை கண்டுபிடித்து மீண்டும் தொடர வேண்டும். சில காலமாக பிபி ஏறிக்கொண்டிருப்பதாக உணர்கிறேன். அதை இசை மட்டுமே சமனில் வைத்திருக்க முடியும்.

இன்னொரு விஷயம், நான் இங்கே இசையைப்பற்றி குறிப்பிடுவதெல்லாம், அதனை எப்படி ரசனைப்பூர்வமாக கேட்டு அனுபவிப்பது என்பது பற்றி மட்டுமே. நான் பாடவெல்லாம் முயற்சி செய்வதில்லை என்பதே இத்தமிழ்கூறும் நல்லுலகிற்கு நான் உரைக்கும் நற்செய்தி!
மேலும்...