’தமிழ்ப் படம்’ - விமர்சனம் & தியேட்டரில் IPL போட்டிகள்

Posted: Saturday, January 30, 2010 | Posted by no-nononsense | Labels: , 0 comments
’தமிழ்ப் படம்’ பார்த்துவிட்டேன். பெரிதாக சொல்லிக்கொள்ள ஒன்றுமில்லை. எதற்கு சிரிக்கிறோம் என்று தெரியாமலே படம் நெடுக சிரித்துக்கொண்டிருந்தோம். என்னதான் படம் கிச்சு கிச்சு மூட்டினாலும் கதை என்று ஒன்றும் இல்லாததால் இரண்டாம் பாதியில் திகட்டி நெளிய வைக்கிறது. ஒரு பத்து லொள்ளு சபா எபிஸோடுகளை ஒருசேர பார்த்த உணர்வு. அவ்வளவுதான்.

*

வரும் IPL போட்டிகளை தியேட்டரில் நேரடி ஒளிபரப்பு செய்யப் போவதாக இடைவேளையில் விளம்பரம் காட்டினார்கள். நல்ல ஐடியாவாக தோன்றுகிறது. வீட்டில் சின்னத் திரையில் தனிமையில் பார்ப்பதைவிட தியேட்டரில் பெரிய திரையில் ஒரு பெரிய கூட்டத்துடன் பார்ப்பது கொண்டாட்டமான அனுபவமாக இருக்கும். எனினும் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கேற்ப ஆட்டத்தின் போக்கு அமையும்வரை எல்லாம் சுபம்தான். இல்லையென்றால்தான் அதை எப்படி எடுத்துக்கொள்வார்கள்; அதை பணம் கொடுத்து பார்க்கும் தியேட்டரினுள் எப்படி வெளிப்படுத்துவார்கள் என்று தெரியவில்லை.

(எனக்கெல்லாம் என்னுடைய கலைஞர் டிவியே போதும் Free Laughing Smileys)
மேலும்...

ஒற்றைப் பரிமாண நகைச்சுவை ரசனை

Posted: | Posted by no-nononsense | Labels: 0 comments
கோவா படம் பார்க்க ஆர்வமாக இருந்தேன். ஆனால் அதைவிட ’தமிழ்ப்படம்’ நல்ல நகைச்சுவைப் படம் என்று இணைய விமர்சனங்கள் சொல்கின்றன. அதிலும் ஒருவர் “தட்டித் தட்டி கையும், சிரித்துச் சிரித்து வயிறும் வலித்தபடியேதான் வரவேண்டியிருக்கிறது” என்று ஆஹா ஓஹோ என்று பாராட்டித் தள்ளியிருப்பது எதிர்பார்ப்பை எகிறச் செய்கிறது. இன்று அதைப் பார்த்துவிட உத்தேசம்.

சமீபமாக காமெடிப் படங்களை பார்க்க எத்தனிக்கும் ஒவ்வொருமுறையும் நினைவுக்கு வரும் ஒரு கசப்பான அனுபவம் ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ சார்ந்தது. கனடாவைச் சேர்ந்த எங்கள் குடும்ப நண்பராகிய இலங்கை தமிழ்ப் பெண்மணி ஒருவர் எங்கள் வீட்டுக்கு விஜயம் செய்திருந்தார். இப்படி யாராவது வரநேரிட்டால் நாமக்கல்லில் வாழ்வதிலுள்ள ஆகப்பெரும் சங்கடம் - இங்கே அழைத்துச் சென்று காட்ட, சற்று உலாவிவிட்டு வர ஆஞ்சநேயர்-நரசிம்மர் கோவில் தவிர வேறு ஒரு இடமும் இல்லை என்பதே. நாமக்கல் மலை மேலே செல்லலாம்தான்; ஆனால் அவர் வயது ஐம்பதை தாண்டியது என்பதால் அந்த ரிஸ்கை எடுக்க வேண்டாமே என்று மும்பை எக்ஸ்பிரஸ் அழைத்துச் சென்றோம்.

சும்மா சொல்லக்கூடாது.. கண்ணில் நீர் வர வாய்விட்டு சில காட்சிகளில் சிரித்தோம். நல்ல டைமிங் சென்ஸ் உள்ள பல காமெடிகள் அந்த படத்தில் உண்டு. ஆனால் ஒரு விசித்திரம், அன்று படம் பார்த்துக் கொண்டிருந்த ஐம்பது பேரில் நாங்கள் மூன்று பேர் உட்பட ஒரு ஏழெட்டு பேர்தான் அப்படி சிரித்துக்கொண்டிருந்தோம். மற்றவர்களெல்லாம் ஏதோ சீரியல் பார்ப்பதுபோல முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு படம் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

நாம்தான் அநாவசியமாக சிரிக்கிறோமோ என்று அடுத்தமுறை சிரிப்பு வரும்போது சரிபார்த்துக்கொண்டேன். நிச்சயம் இயல்பாக நகைச்சுவை உணர்வை தூண்டும் டைமிங் சென்ஸ் டயலாக் டெலிவரி கொண்ட அட்டகாசமான காட்சி. ஆனால் உடல்மொழியோ(body language) அடிதடியோ காமநெடியோ இல்லாததால் அதை காமெடியாக அங்கீகரிக்க நம் மக்கள் தயாராக இல்லை என்று தெரிந்தது. இப்படி ஒற்றை பரிமாண ரசனையில் உலவி திரிவதுதான் பல கலை வடிவங்களை புரிந்துகொள்வதில் நம் மக்கள் சந்திக்கும் பிரச்சினை. அன்று அப்படம் முழுவதும் தனிமைப்பட்டு உணர்ந்தோம். இப்படம் அப்படி இருக்காது என்று நம்புகிறேன். ஏனென்றால் spoof comedy-ல் பரிட்சார்த்த முயற்சிகளுக்கு வேலை இருக்காது. மேலும் ஏற்கெனவே பலரும் பாராட்டுகிறார்கள் என்பதால் இம்முறை ஊருடன் ஒத்து சிரிக்கலாம்.
மேலும்...

கேரள பாரம்பரிய ஆடை

Posted: | Posted by no-nononsense | Labels: 0 comments

Reply to my friend's comment on Kasavu mundu:


yenakum கசவு முண்டும் yendral theriyum
புத்தகத்தின் உள்ளடக்கத்தைப் பற்றி கேட்டால் அதன் உறையை நான் பார்த்திருக்கிறேன் என்று பதிலளிக்கும் உன் நுண்ணறிவைக் கண்டு பிரமித்து நின்றேன். நான் குறிப்பிட்டது வேறு ஒன்றைப் பற்றி..

1. கசவு முண்டு என்பது உண்மையில் இப்போது இருக்கும் ஆடை வடிவம் அல்ல. பழசிராஜாவில் கனிகா உடுத்தியிருப்பதுதான் நிஜமான கசவு முண்டு. மேலும் அது இப்போது கேரள பெண்கள் உடுத்துவது போல சேலை வடிவத்தில் இருக்காது (இப்போதையதை செட்-சாரி என்பார்கள்). வேஷ்டி மாதிரி இருக்கும். வேஷ்டிதான் முண்டு. ஆண்கள் கட்டினால் முண்டு. பெண்கள் கட்டினால் அது கசவு முண்டு. இடுப்பிலிருந்து கீழே கால்வரை இருக்கும் அது ஒன் சைடு ஓபனாக இருக்கும். ஆனால் அதை பெண்கள் வேஷ்டி மாதிரி கட்ட மாட்டார்கள். கசவம் (நம்மூரில் கொசுவம்) மடித்து மடித்துதான் கட்டுவார்கள். எவ்வளவு மடிப்பு இருக்கிறதோ அவ்வளவு கசவம் வைத்து கட்டுவது என்று கணக்கெல்லாம் உண்டு.

2. கீழேயுள்ள கசவு போல மேலேயுள்ள ஆடையின் பெயர் நேரியதும். நம்மூர் முந்தானை போன்றது, என்றாலும், அது தனியாக இருக்கும். கசவு முண்டுடன் இணைந்து இருக்காது. இது ஓரிரு நூற்றாண்டுகளாகத்தான் வழக்கத்தில் உள்ளது. அதற்குமுன் மேலே ரவிக்கை மட்டும்தான்.

3. மூன்றாவது மார்பை மறைத்து கட்டிக்கொள்ளும் கசவு ரவிக்கை. ஆனால் அது நம்மூர் ஜாக்கெட் போல தைக்கப்பட்டதாக இருக்காது. ஒரு சிங்கிள் துணியைதான் மார்பு கச்சையாக அணிந்துகொள்வார்கள்.

4. நான்காவதை நேரில்தான் சொல்வேன் என்று ஏற்கெனவே இங்கு வாக்கு கொடுத்துவிட்டதால் நிலுவையில் விடுகிறேன்.

கேரளத்தின் பாரம்பரிய ஆடையாகிய இந்த செட்-கசவு போல தமிழ் பெண்களின் பாரம்பரிய ஆடை வடிவம் எது? இப்போது போல அப்போதும் சேலை(புடவை) தானா???

நேரம் அனுமதிக்கும்போது தொடர்ந்து பேசுவோம்....




*
பிற்சேர்க்கை: 
இணையத்தில் உலாவிக் கொண்டிருந்தபோது பின்வரும் விளக்கப் படங்கள் கண்ணில் சிக்கின. அவற்றை இங்கே சேர்ப்பது பொருத்தமாக இருக்குமென சேர்க்கிறேன்.


KARA: colored lines or stripes which run along the edges of the wrap or weft. Kambi, puliyla, mandi, belt, vettu and sada are the main karas in vogue.



DHARA: Thin line or lines running alongside the kara. Can be either of colored thread or kasavu, in patterns like Vakunna and katti.



CHUTTI: The flag marks at the extreme of the kara. Variously classified as sada, salla, vari, katti, kasavu etc.

MUNDU: The main garment which covers the body from waist downwards
NERYTHU: Length of finer cloth draped over the shoulder to cover the upper torso .



PARIVATTOM :Full length, jeried ornamental cloth worn high around the
upper torso leaving the arms free and shoulders uncovered. Used only by royalty
 .



KACHAMURI : Worn by Christian ladies from the waist downwards, artfully pleated
at the back like a fan


ONNARA: Half length under garment worn by women inside the mundu



KASAVU :Consists of a silk core and a spiraling of silver around it coated with gold, woven in to form the chutti and kara at the edges
நன்றி: http://www.kasavukadaonline.com
மேலும்...

மாற்றங்களை மறுக்கும் தமிழ்த் திரை ரசனை

Posted: Sunday, January 24, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
Reply to my friends question on reasoning the mystic scenes in AO:

அப்பனே..! மேஜிக் என்ற பிறகும் அதன் மாயையான காட்சிகளுக்கு எல்லாம் லாஜிக் கேட்டுக்கொண்டிருந்தால் எப்படி பதில் சொல்ல முடியும்? அவர்களுக்கு அப்படியெல்லாம் தோன்றுகிறது. ஆனால் எதுவுமே உண்மையில்லை. எனக்கு தெரிந்த எளிமையான மொழியில் சொன்னால் அவ்வளவுதான்.

ஏவி விடப்பட்ட மாந்த்ரீகம் உண்டாக்கும் மன மயக்கங்களை காட்சிப்படுத்தும்போது, அதை அப்பாத்திரங்களின் கண்ணோட்டத்தில்தான் சொல்ல முடியும். வேறு மாதிரி கோணத்தில் சொன்னால் அது நாடக பாணியில் இருக்குமே தவிர, நவீனத்துவ சினிமாவுக்கான முயற்சி அங்கே அடிபட்டு போகும்.

செல்வராகவன் அந்த காட்சியை இப்படி எடுத்திருந்தால் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்: கார்த்திக், ஆண்ட்ரியா, ரீமா மூவரும் ஆடிப்பாடும்போது அதை மறைவான இடத்தில் ஒளிந்திருந்து மந்திரவாதி பார்ப்பதை கேமரா காட்டுகிறது. அடுத்தக் காட்சியில் தன் மடிப்பையிலிருந்து ஒரு கைப்பிடி விபூதியை அவர் எடுக்கிறார். கண்ணைமூடி நெற்றியின் மத்தியில் வைத்து ‘ஓம் க்ரீம். ஜாலராகினி மாயமோகினி மொட்டக்கோபுரமுனி க்ரீம் க்ரீம்’ என்று மந்திரம் போட்டு, விபூதியை மூவரும் இருக்கும் திசை நோக்கி எறிகிறார். உடனே அவர்கள் அந்த மந்திரத்தின் வசியத்துக்கு கட்டுப்பட்டு பித்துகுளியாக நடந்துகொள்கிறார்கள். அதையெல்லாம் கேமரா மந்திரவாதியின் முதுகுக்கு பின்னாலிருந்து காட்டுகிறது.

இப்படி வாழைப்பழத்தை உரித்து வாயில் வைத்தால்தான் புரியும் என்றால், உஸ்ஸ்.. அப்பா.. எனக்கு கண்ணை கட்டுகிறது.

*

இங்கே எதையுமே பூடமாக சொல்ல முடியவில்லை. எல்லாவற்றையும் நாடக பாணியில் prompting செய்ய வேண்டியுள்ளது. இன்றுவரை ஒரு பாத்திரத்தை டாக்டர் என்று காட்சிபூர்வமாக விளக்கிவிட முடிவதில்லை. “அதோ டாக்டரே வர்றாரே” என்று ஒருவர் சொல்ல வேண்டும்; அப்போது வெள்ளை கோட் அணிந்து, கழுத்தைச் சுற்றி ஸ்டெதாஸ்கோப் போட்டபடி - சில சமயம் கையில் கண்ணாடியை கழற்றியபடி - டாக்டர் வருவார். பெரும்பாலும் இப்படித்தான். போலீஸ் என்றால் கையில் லத்தியை வைத்து உருட்டிக்கொண்டிருக்க வேண்டும். அந்த இடம் ஏதாவது பர்த்டே பார்ட்டியாக கூட இருக்கலாம்.

பத்து பக்க வசனங்களாலும், வர்ணனைகளாலும் விளக்கிவிட முடியாததையெல்லாம் நுணுக்கமான சின்ன சின்ன காட்சியமைப்புகளின் மூலம் புரியவைத்துவிடக்கூடிய சாத்தியம் கொண்ட visual media-தான் சினிமா என்பது இன்னும் இங்கே உணரப்படவேயில்லை. தமிழ் சினிமா சந்தைக்கடை போல எப்போதும் சத்தம் நிறைந்து காணப்படுகிறது. இன்றுவரை இங்கே சிறந்த நடிப்பு என்பது கட்டபொம்மனில் சிவாஜி கண்ணை உருட்டியபடி நாபி கமலத்தின் நரம்புகள் தெறிக்க கத்திப் பேசும் அந்த ஒரே வசனம்தான். இல்லையென்றால் பராசக்தியின் ‘ஓடினாள் ஓடினாள்...”. இவற்றை தாண்டி அடுத்த கட்டத்துக்கு தமிழ் சினிமாவை கொண்டுபோக யாராவது முயற்சி செய்தால் ஒன்றுமே புரியவில்லை என்று காட்டு கூச்சலாக இருக்கிறது. தயவு செய்து கொஞ்சம் உலக சினிமா பக்கமும் பார்வையை திருப்புங்கள். தேங்கியே கிடக்காதீர்கள்.
மேலும்...

சோழர்கள், இலங்கை மற்றும் ஆயிரத்தில் ஒருவன் - சில எண்ணங்கள்

Posted: | Posted by no-nononsense | Labels: , 0 comments
இலங்கையின் பூர்வகுடி திராவிடர்களாக (தமிழர்கள்) இருக்கவே வாய்ப்பு அதிகம் என்பது அங்கே கடந்த முப்பது ஆண்டுகளில் நடந்த அகழ்வாய்வுகளின் மூலம் அறிய முடிகிறது. அதில் கிடைத்த பழங்கால ஆயுதங்கள், நாணயங்கள் தென்னிந்தியாவின் திராவிட நாகரிகத்துடன்தான் ஒத்துப் போகிறதே தவிர, தங்களை ஆரியர்களாக அடையாளப்படுத்தி வரலாற்றை திரித்து வைத்திருக்கும் சிங்களவர்களின் புரட்டுடன் பொருந்திப் போகவில்லை. அங்கே கிடைத்த முதுமக்கள் தாழியில் இங்கே போலவே தமிழ் எழுத்துக்கள் காணப்படுப்படுவதே இதற்கு அத்தாட்சி.

சிங்களவர்களின் வரலாற்று நூலாக கருதப்படும் மகாவம்சத்தில் கூட சிங்களவர்களின் முதல் அரசன் விஜயன் இலங்கையில் குடியேறும்போது அங்கே பூர்வகுடி பெண் ஒருத்தியை எதிர்கொண்டு அவளையே மணம்புரிந்துகொண்டதாக கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் சிங்களர்களின் குடியேற்றத்துக்கு முன்பே அங்கே ஒரு இனம் நிலைபெற்று வாழ்ந்து வந்துள்ளது அவர்கள் புனைந்து வைத்த புராணத்தின் மூலமாகவே அறிய முடிகிறது.

இதன்மேல் இன்னும் நிறைய எழுத முடியும். முன்பு பல விவரங்கள் சேகரித்து வைத்திருந்தேன். இப்போது நிறைய மறந்துவிட்டது. என்றாலும், ஒன்று மட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். ஈழத்தின் தமிழ் இனம் என்பது அதன் பூர்வகுடி தானே தவிர, சிங்களவன் சொல்வது போல பிழைப்புக்காக வந்தேறியது அல்ல. அதற்கு அங்கே நடப்பது முற்றிலும் அநியாயம். படு பாதகம். அதன் நீண்ட கால தீர்வு தனி ஈழமாகத்தான் இருக்க முடியும். அவசியம் ஏற்பட்டால் இன்னும் விரிவாக அலசலாம்.

*

ஆயிரத்தில் ஒருவன் படத்தின் கதையை இதனுடன் என்னால் சம்மந்தப்படுத்த முடியவில்லை. ஆனால் சோழர்களுக்கும் இலங்கைக்கும் ஒரு சம்மந்தம் உண்டு. அதன் சில சம்பவங்கள் இந்த படத்தின் சில காட்சிகளுடன் - சில முரண்பாடுகள் இருப்பினும் - ஒத்துப்போவது கொஞ்சம் சுவாரசியம்தான்.

மன்னர்களின் பெயர்கள் மறந்துவிட்டன. இருந்தாலும் சொல்ல துணிகிறேன்.

சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இடையே மூண்ட ஒரு போரில் தோற்றுப் போகும் பாண்டிய மன்னன், தன்னுடைய குலப் பெருமை மிக்க அரச முடி, அரசியின் முடி மற்றும் இந்திரஹாரம் ஆகியவை சோழர்களின் கையில் கிடைக்காமல் இருக்க தன்னுடன் நட்பில் இருந்த இலங்கை மன்னன் மகிந்த வசம் ஒப்படைக்கிறான். அதனை கைப்பற்றுவது சோழர்களின் கௌரவ பிரச்னையாக இருக்கிறது. அதற்காகவே தொடர்ந்து சோழர்கள் இலங்கை மீது படையெடுக்கிறார்கள். அந்த நோக்கம் பின்னால் இராஜேந்திர சோழன்(இராஜராஜன் மகன்) காலத்தில்தான் நிறைவேறுகிறது. இலங்கை முழுவதையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டுவரும் இராஜேந்திரன், அநுராதபுரத்தை தலைமையிடமாக கொண்டு ஆண்டதாக வரலாறு.

உண்மையான வரலாற்றின் படி பாண்டியனின் குலப்பெருமைகள் சிங்களவர்களிடம் சிக்கிக்கொள்ள, அதனை கைப்பற்ற சோழர்கள் தான் இலங்கை மீது படையெடுக்கிறார்கள். ஆனால் சினிமாவில் சோழர்கள் மீது படையெடுப்பு நடத்தப்படுகிறது. இந்த முரண்நகை தவிர வேறு சம்மந்தம் இருக்க வாய்ப்பில்லை.
மேலும்...

எதிர்மறை பதிவர்களை எதிர்கொள்வது எப்படி?

Posted: Tuesday, January 19, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
My reply on the topic of taking up the bloggers who are characterized by habitual skepticism:

நண்பர்களே.. இங்கே பிரச்னை பகலவன் பகிர்ந்து கொள்ளும் செய்திகள் என்பதை விட அதை அவர் வழங்கும்விதம் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். அவர் சின்னதாக ஓரிரு வரிகளில் சொல்லிச் செல்லக்கூடியதைக்கூட இரண்டு மூன்று பாராக்களுக்கு இழுக்கிறார். அதற்காக அதை ஊதி பெரிதாக்க வேண்டியிருக்கிறது. இந்த அவரின் எழுத்து நடைதான் அச்செய்தியை உள்வாங்கிக்கொள்வதில் இடைஞ்சலாக இருக்கிறது.

உதாரணமாக காவிரி ஆற்றின் மழை நீர் வீணாக கடலில் கலப்பது பற்றி பல அணைகளின் படங்களுடன் ஒரு பதிவு போட்டிருந்தார். உண்மையைச் சொன்னால் அது ஒரு உப்பு பெறாத பதிவு. உள்ளே தெரிந்து கொள்ள ஒரு தகவலும் உருப்படியாக கிடையாது. ஆனால் பார்க்க பெரிய ஆய்வு போன்று தோற்றம் அளிக்கும். இந்த பதிவு போதைதான் இணையவெளியின் முக்காலே மூணு வீசம் பதிவர்களை ஆட்டி வைக்கிறது. காலையில் எழுந்ததும் அன்றைய செய்திதாளை விரித்து வைத்துக்கொள்கிறார்கள். சமூகத்தையும் அரசாங்கத்தையும் குறைகூறி பதிவு எழுதி தங்கள் மேதமையை நிரூபித்துக்கொள்ளத்தக்க செய்திகளை குறித்துக்கொள்கிறார்கள். நீட்டி முழக்கி போடுக ஒரு பதிவு என்று பொட்டியைத் தட்டித் தள்ளுகிறார்கள்.

எல்லோரும் எழுத்தாளர் அவதாரமெடுக்கும் பேரண்டச்சுதந்திரவெளி இது. இங்கே நாம்தான் நீரை விலக்கி பாலை உண்ண பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும். அது பகலவனின் பதிவுகளுக்கு மட்டும் அல்ல. இங்கே பகிர்ந்துகொள்ளப்படும் தெரிவிக்கப்படும் அனைத்து கருத்துக்களுக்கும் பொருந்தும்.
மேலும்...

ஆயிரத்தில் ஒருவன் - மேலும் சில கருத்துக்கள்

Posted: | Posted by no-nononsense | Labels: 1 comments
ஆயிரத்தில் ஒருவன் பல மட்டங்களிலும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளதை இணையத்திற்கு உள்ளேயும் வெளியேயும் காண முடிகிறது. வசூல் நிலவரங்களை ஒதுக்கி வைத்துவிட்டு சிந்திக்கும்போது என்னைப் பொருத்தவரை இப்படம் ஏற்படுத்தியுள்ள இத்தகைய தாக்கம்தான் அந்த படத்தின் உண்மையான வெற்றி என்று சொல்வேன். இது தமிழ் திரைச்சூழலில் மிகவும் தேவையான ஒன்று.

இங்கே மாற்று சினிமா என்பதே கிட்டத்தட்ட கிடையாது என்று சொல்லலாம். அப்படியே எடுத்தாலும் காஞ்சிவரம் போல அவார்டுக்காகவே எடுக்கப்பட்டு அது குறுகிய வட்டத்தில் மட்டும் ரசிக்கப்பட்டு பெட்டிக்குள் சென்றுவிடுகிறது.

மக்கள் தங்களின் ஒற்றைப் பரிமாண ரசனை ஜாடியில் இப்படத்தைப் போட்டு குலுக்க முற்படுவதுதான் இந்த படத்தை புரிந்துகொள்வதில் உள்ள மிகப் பெரிய பிரச்னை. படத்தின் விஷயகனம் தாங்காது ஜாடி உடைய நேரிடுகிறது. எல்லா கணக்குகளையும் ஒரே சூத்திரத்தைக்கொண்டு விளங்கிக்கொள்ள முடியாது. ரசனையின் பன்முகத்தன்மை என்பதை நாம்தான் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

இப்படம் ஒரு fantasy genre. அந்த கண்ணோட்டத்தில் அதை எடுத்துக்கொள்ளாமல் லிடரலாக logicalize செய்ய முயன்றால் படம் த்ராபையாகத்தான் தெரியும். என் பேனாவில் நானும் லாஜிக் மையை நிரப்பி எழுதினால் இவர்கள் எல்லோரையும்விட பல மடங்கு அதன் கிழித்து தொங்கவிட்டுவிடுவேன். ஆனால் இது fantasy என்பதை உணர்ந்தே படத்தில் அமர்ந்திருந்தேன் — எப்படி ஒரு காமெடி படத்திற்கு, ஒரு ஹாரர் படத்திற்கு மனதளவில் தயாரான நிலையில் இருப்போமோ அப்படி. அதனால் எனக்கு இக்கதையை உள்வாங்கிக்கொள்வதிலும் ரசிக்க முடிந்ததிலும் எந்த பிரச்னையும் இல்லை.

Fantasy, science-fiction படங்களையெல்லாம் லாஜிக் பார்த்தால் ரசிக்க முடியுமா? ”Pandora கிரகமாவது ஒண்ணாவது யாரிடம் கதைவிடுகிறாய்? எங்கே லாஜிக்?” என்று முதலில் இவர்கள் avatar-ஐத்தான் நிராகரித்திருக்க வேண்டும். ஆனால் உலகில் அதிகம் வசூல் செய்த படமாக அதுதான் ஓடிக்கொண்டிருக்கிறது. ”சோழர்களாம் தனி தீவில் வாழ்கிறார்களாம். நல்ல கதை’ என்று சிரிப்பவர்கள் யாரும் ஜூராஸிக் பார்க் படம் வந்தபோது ”டைனோஸராவது; தனி தீவாவது; அதில் மீண்டும் உயிர்பெறுவதாவது” என்று சொல்லி சிரிக்கவில்லை. விழுந்தடித்து ஓடி ஓடிப் பார்த்தார்கள். ஏனென்றால் அவையெல்லாம் ஆங்கிலப்படங்கள். இது தமிழ்ப்படம். தமிழ்ப்படம் என்றால் அதை நாம் பார்க்கும் கண்ணோட்டமே வேறாக இருக்கிறது. ஆயிரத்தில் ஒருவனை அப்படியே ஆங்கில நடிகர்களை வைத்து ஆங்கிலத்தில் எடுத்து அதை தமிழில் டப்பிங் செய்து வெளியிட்டிருந்தால் பாராட்டியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். இதைவிட பல மொக்கை டப்பிங் படங்கள் இங்கே கேள்வியின்றி நன்றாக ஓடியிருக்கின்றன.

என்னிடம் இப்படம் புரியவில்லை என்று சொன்னவர்களிடமெல்லாம் எந்த இடத்தில் என்று கேட்டு தெரிந்து கொண்டதில் அவர்கள் அதனுடன் தொடர்புடைய முந்தைய காட்சியை ஊன்றி கவனிக்கவில்லை என்பதே புரிந்தது. அதை நான் விளக்கியதும் ‘அட ஆமால்ல’ என்று சொன்னவர்களே அதிகம். இதற்கு உதாரணாக சொல்ல வேண்டுமானால் இடைவேளைக்கு முன்பு வரும் பித்து பிடித்த நிலையையும், கைதிகளைக்கொண்டு நடத்தப்படும் gladiatorial contest-ஐயும் சொல்லலாம். இதற்கெல்லாம் காரணங்கள் கதைக்குள்ளேயே இருக்கின்றன. ஆனால் கவனிக்க தவறுகின்றனர். இதனால் அக்காட்சி சம்மந்தமே இல்லாமல் புகுத்தப்பட்டது போல தோன்றுகிறது. தவறு அவர்களுடையதேயன்றி படத்தினுடையது அல்ல.

இருப்பதிலேயே பெரிய வேதனை இடைவேளைக்கு பின்பு வரும் பழந்தமிழை ஏதோ தமாஷ் காட்சி போல பலரும் கமெண்ட் அடித்துக்கொண்டிருப்பதும்; அப்படி அடிப்பவர்களெல்லாம் தமிழர்களாக இருக்க நேர்வதும்தான். இத்தனைக்கும் அது அப்படியொன்றும் கடினமான மொழிநடை என்று சொல்லமுடியாது. அப்படி இருந்தாலும் பிறமொழி கலப்பற்றதாகிய அதுதான் நம் மொழியின் தொன்மை எனும்போது, அதில் நாம் பரிகசித்து சிரிக்க என்ன இருக்கிறது? அவர்களை நினைத்து நான் வெட்கப்படுகிறேன்.

நான் இப்படத்தை மிகவும் விதந்தோதி ஆதரிக்க காரணம் தமிழில் எப்போதாவதுதான் இதுபோன்ற அரிய முயற்சிகள் செய்யப்படுகின்றன. அதையும் நாம் நிராகரித்துவிட்டால் இழப்பு நமக்குத்தானே தவிர மற்றவர்களுக்கு அல்ல.
மேலும்...

இந்திய தேசியம் மீதான விமர்சனங்களை எதிர்கொள்ளல் மற்றும் தமிழ் தேசியம்

Posted: Saturday, January 16, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
My reply to my friend's comment on criticizing Indian social political happenings:

பாலா, எப்போது பார்த்தாலும் குற்றம் குறை ’மட்டும்’ சொல்லிக்கொண்டிருக்கும் ஒருவர் மீது ஏற்படும் அலுப்புதான் உன் கருத்துக்கு காரணம் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். நான் சொல்லவருவது என்னவென்றால் அப்படி சொல்லும் விஷயத்தில் பொய்யும், திரிபும் இல்லாதவரை அதில் பிரச்னை இல்லை என்பதை.

அதிகார வர்க்கத்தின் அத்துமீறல்கள், அலட்சியங்கள் தொடர்ந்து யாராலாவது கவனப்படுத்தல்களுக்கு உட்படுத்தப்படுவது மிக அவசியம். எங்கேயாவது ஒரு மூலையில் இருந்தாவது ஒரு கலக குரலாவது தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருப்பது, சமூகம் தன்னை மறுபரிசீலனை செய்துகொள்ளுதலுக்கு தேவையான ஒன்று.

நான் தினத்தந்தியை திருப்ப மாட்டேன். அதில் எப்போது பார்த்தாலும் வெட்டு குத்து, கள்ளகாதல் செய்திகள்தான் வருகின்றன என்று ஒருவன் சொல்லுவது அவனுடைய தேர்வு. ஆனால் சமூகத்தின் நிகழ்வுகள் அப்படி இருக்கும்போது செய்தியும் அப்படித்தான் வர முடியும். இதை நான் பகலவனின் எழுத்துக்களை மட்டும் முன்வைத்து சொல்லவில்லை. பொதுவாக இதுபோன்ற விமர்சன எழுத்துக்களை நாம் அணுகவேண்டியவிதத்தைப் பற்றி கூறுகிறேன்.

மேலும் இந்தியாவைப் பற்றி நெகடிவ்வான இமேஜை புதிதாக யாரும் கட்டமைக்க வேண்டியதில்லை. சுதந்திர இந்தியாவின் உள்நாட்டு அரசியலை உற்று நோக்கும் எவருக்கும் அது மார்தட்டி சொல்லிக்கொள்ளும் சமநீதி, இறையாண்மை என்பனவற்றுடன் கடுமையான கருத்துவேறுபாடு தோன்றும் அளவிற்கு நிகழ்வுகள் இருந்துவருகின்றன. அது நம் தாத்தா அப்பாக்களை பாதிக்கவில்லை என்பதால் உனக்கும் எனக்கும் அதன் வலி உறைக்கவில்லை. ஆனால் எல்லோருக்கும் அதேமாதிரி என்று சொல்ல முடியாது.

1947-க்கு முன்பு இந்தியா என்று ஒரு தேசம் கிடையாது. பிரிட்டிஷ் எதிர்ப்பை முன்வைத்துதான் ‘இந்திய தேசியம்’ என்னும் கருத்தாக்கமே அறிவுதளத்திலும், தலைவர்கள் பேச்சிலும் உருவாக்கப்பட்டது. அது அப்போது மக்களை ஒன்று திரட்ட ஒரு ஊன்றுகோலாக உதவியது. இதில் நீ பகவத்கீதை போன்ற இந்துத்துவ மேற்கோள்களின் பங்கையும் சேர்த்துக்கொள்ளலாம். (பகவத்கீதை வலியுறுத்தும் பிற்போக்குத்தன ‘நிஷ்காமிய தர்மம்’, ’சுதர்மம்’ இந்தியாவில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் பற்றி பிறகு ஒருநாள் விரிவாக எழுத எண்ணம்). அப்படி முன்னெடுக்கப்பட்ட இந்திய தேசியம் அதன் நோக்கமான சுதந்திரத்தை அடைந்ததற்கு பிறகு கண்டுள்ள பரிணாமம், மக்களிடம் பிரச்சாரம் செய்யப்பட்ட கனவு தேசத்திற்கு எதிரானதாக அமைந்து, இந்திய தேசியத்தை ஒரு விலக்கிவிடமுடியாத மாயையாக மட்டும் ஆக்கிவிட்டிருக்கிறது. இதனுள் நீ வாழும்வரை வாழலாம். ஆனால் இது நிஜம் அல்ல.

இங்கே காஷ்மீரியும், மங்கோலிய முகம் கொண்ட அஸ்ஸாமியும், நாகாவும் தன்னை ஒருபோதும் இந்தியனாக ஏற்றுக்கொள்வதில்லை. இருந்தும் அவர்களையெல்லாம் இன்னும் பிடிக்குள் வைத்திருப்பது ராணுவத்தின் துப்பாக்கிமுனை தானே தவிர இந்திய தேசியத்தின் மீதான தேசபக்தி அல்ல. மற்ற பிரதேசங்களில் (கன்னியாகுமரி முதல், ஜம்மு வரை) மக்களின் ஒரே மாதிரியான வழிபாட்டு முறையும், சினிமாவும், கிரிக்கெட்டும் அந்த பணியை செய்து வருகின்றன. (இதனை கருபொருளாகக் கொண்டு அருமையான தீஸிஸ் தயார் செய்ய முடியும். Phd-க்கு நல்ல சப்ஜெக்ட்!).

இங்கே ஒரு வட இந்தியன் ஆஸ்திரேலியாவில் கொல்லப்படுகிறான் என்றாலுமேகூட வெளியுறவு துறையின் உச்சி மயிர் நட்டுக்கொள்வதையும், வட இந்திய ஊடகங்களின் குய்யோ முறையோ கூப்பாடுகளையும் தாங்க முடியவில்லை. ஆனால் எத்தனையோ தமிழ் மீனவர்கள் தொடர்ந்து கொல்லப்பட்ட போதும் அதற்கொரு தீர்வை நோக்கி அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதில்லை. அதைபற்றி ஊடகங்களிலும் எந்த விவாதமும் இல்லை.

இந்தியாவின் பாரம்பரிய பழங்குடியின மக்களின் வாழிடங்கள் அதன் தாதுவளம் காரணமாக வேதாந்தா(சட்டீஸ்கர்), போஸ்கோ(ஒரிஸ்ஸா) போன்ற பன்னாட்டு கம்பெனிகளுக்கு பங்கு போடப்படுகின்றன. எதிர்க்கும் அம்மண்ணின் மைந்தர்கள் மீது ’ரெட் காரிடார்’ என்று முத்திரை குத்தி ’ஆபரேசன் கிரீன் ஹண்ட்’ என்ற பெயரில் ஐம்பதாயிரம் ராணுவத்தினர் ஏவிவிடப்படுகின்றனர். (ஆப்கானிஸ்தானில்கூட மூவாயிரம் அமெரிக்க துருப்புகள்தான் போரிட்டு வருகின்றன). காஷ்மீரில் பத்து மீட்டருக்கு ஒரு வீரன் பாரா பார்த்துக் கொண்டிருக்கிறான். இந்திய தேசியத்தை நாம் இப்படித்தான் தக்கவைத்து வருகிறோம்.

இங்கே நான் லஞ்சம், ஊழல் ஆகியவற்றை கணக்கில் சேர்க்கவில்லை.

இப்படி சுயமுரண்களின் முழுவடிவமாக திகழும் இந்திய தேசியத்தின் மீது விமர்சனங்கள் எழுவது தவிர்க்க இயலாதது. அதை நாம் நெகடிவ் அப்ரோச் என்னும் விதத்தில் எதிர்கொள்ள வேண்டியதில்லை. உண்மையை ஏற்றுக்கொண்டு நமக்கு அதில் ஏதேனும் செய்தி இருந்தால் அதை மட்டும் உள்வாங்கிக்கொண்டு கடந்து போக வேண்டியதுதான்.

*

இங்கே நான் இந்திய தேசியத்தை விமர்சனம் செய்திருந்தாலும் ஒரு சில தமிழின பற்றாளர்களால் முன்வைக்கப்படும் ‘தனி தமிழ் தேசியத்தை” நான் முற்றும் முழுதாக நிராகரிக்கிறேன். இந்தியா இன்றிருக்கும் இதே கூட்டாட்சி தத்துவ முறையில் இன்னும்கூட ஒற்றுமையாக உறுதிபடுவதும், அதில் தமிழகம் தொடர்ந்து நீடித்து வருவதும் அரசியல், பொருளாதார, சமூகவியல் காரணிகளை முன்வைத்து சிந்திக்கும்போது தமிழகத்துக்கு மிக அவசியமான ஒன்று என்பதை உணரலாம்.

தமிழகம் எந்த வகையிலும் சுயசார்பு கொண்ட பிரதேசம் அல்ல. இந்தியாவின் மொத்த வரியின வருவாயிலிருந்து அதற்கு கிடைக்கும் பங்கு தொகை அதன் பொருளாதார நலன்களுக்கு மிக முக்கியமானது.

அவசியம் நேர்ந்தால் இதன்மீது இன்னும் விரிவாக பேசலாம்.
மேலும்...

ஆயிரத்தில் ஒருவன் விமர்சனம்

Posted: | Posted by no-nononsense | Labels: 0 comments
ஆயிரத்தில் ஒருவன் படம் குறித்து நண்பர்களிடமிருந்து தொடர்ந்து எதிர்மறையான விமர்சனங்களையே பெற்றுக்கொண்டிருந்த நிலையில் என்னை படம் பார்க்க தூண்டியது பவித்ரா ஸ்ரீநிவாசனின் இந்த ரிடீஃப் விமர்சனம். பவித்ரா எனக்கு பொன்னியின் செல்வன் மின் மடல் குழுவில் பழக்கம் என்பதால் வரலாற்று துறையில் அவருடைய ஈடுபாடு மற்றும் களப்பணிகள் குறித்து எனக்கு கொஞ்சம் அறிதல் உண்டு. சோழ, பாண்டிய வரலாற்று பின்னணி கொண்ட இப்படத்தின் கதைக்கு அவர் விமர்சனம் எழுதியது மிகப் பொருத்தமானது என்பதால் எதிர்மறை விமர்சனங்களை மீறி பவித்ராவின் சிலாக்கியமான விமர்சனம் காரணமாக இப்படத்தை பார்க்க துணிந்தேன்.

படம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. சிலருக்கு இப்படம் ஏன் பிடிக்காமல் போனது என்பதையும் புரிந்துகொள்ள முடிந்தது. படத்தின் இரண்டாவது பாதியை ஊன்றி கவனிக்காதவர்களால், அதன் கதைப்போக்கில் வரும் பழந்தமிழையும் அரசர் வாழ்க்கை முறையையும் காட்சி விவரணைகளையும் புரிந்துகொள்வதில் பிரச்னை உள்ளவர்களால் திரைக்கதையை சரியாக பின்தொடரமுடியவில்லை என்று நினைக்கிறேன். இதன் சங்கிலித் தொடர் போன்ற ஒன்றுடன் ஒன்று பின்னியமைந்த காட்சியமைப்புகளில் ஓரிடத்தில் இழை அறுந்திருந்தால் கூட படத்தின் சுவாரஸ்யம் கெட்டிருக்க வாய்ப்புண்டு. அது இரண்டாம் முறை பார்க்கும்போது புரியக்கூடும்.

ரீமாசென்னின் பிளாஸ்பேக் போன்ற சில இடங்களில் லாஜிக் குறைவாக இருந்தாலும் என்னைப் பொருத்தவரை அவை கன்வின்ஸிங்காகவே இருந்தன. தமிழ் திரைப்பட வரலாற்றில் குறிப்பிடத்தக்க மேக்கிங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. புதுப்பேட்டையில் நான் கண்டு வியந்த செல்வராகவன் இந்த படத்தின் மூலம் இன்னும் பல படிகள் உயர்ந்திருக்கிறார். இந்த படத்தை தோல்விப்படமாக்கி அவரையும் ஒரு மசாலா டைரக்டராக நம் ரசிகர்கள் ஆக்கிவிடாமல் இருந்தால், புது புது கதைக்களன்களில் இன்னும் பல நல்ல படங்கள் அவரிடமிருந்து நமக்கு கிடைக்கும் என்று உறுதியாக நம்பலாம்.

படத்தில் எல்லோரும் மெச்சும்படியான உழைப்பை கொட்டியிருக்கிறார்கள். பருத்தி வீரனில் எல்லோருக்கும் பிடித்த கார்த்திக்கின் நடிப்பு என்னை ஏனோ கவர்ந்திருக்கவில்லை. ஆனால் அந்த குறை இப்படத்தின் மூலம் தீர்ந்தது. ஹீரோயிஸம் இல்லாத இந்த மாதிரி underplay கேரக்டர்கள் பண்ண கார்த்திக் மாதிரியான புதுமுக நடிகர்களால்தான் முடியும். ரீமாசென் இப்படத்தின் மிகப்பெரிய பலம். பார்த்திபனுக்கு நிச்சயம் பெயர் சொல்லும்படியான கதாப்பாத்திரம்.

இப்படம் தமிழின் ஆகச்சிறந்த படம் அல்ல. இப்படம் அழகியல்கள் நிறைந்த படம் அல்ல. ஆனால் உங்களை வித்தியாசமான ஒரு களனுக்குக் கொண்டு போய் வழக்கமான தமிழ் படங்களுக்கு இடையில் புதிதான ஒரு அனுபவத்தை தரக்கூடிய ஒன்றாக நிச்சயம் இருக்கும்.

படத்தின் கதையினுள் நான் சென்று விளக்காததன் காரணம், அந்த அனுபவத்தை நீங்களும் அடைய வேண்டும் என்ற நோக்கில்தான். நிச்சயமாக தியேட்டரில் பார்க்க வேண்டியப் படம்.

படத்திற்கு டிக்கெட் விலை 50 ரூபாய். இதைப்போல ஐந்து மடங்கு கொடுத்திருந்தாலும் தகும்.
மேலும்...

நாமக்கல் ஓசை

Posted: Thursday, January 14, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments

நேற்று நாமக்கல் ச.பே.புதூர் முனையில் ‘நாமக்கல் ஓசை’ எனும் விளம்பரத்தையும், இது சம்மந்தமான சில போஸ்டர்களையும் கண்டேன். பொங்கலை முன்னிட்டு சென்னையில் 17 இடங்களில் வெகு ஜோராக நடந்துவரும் 'சென்னை சங்கமம்" கலை நிகழ்ச்சிகளைப் போல இங்கேயும் "நாமக்கல் ஓசை" என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சியை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்கிறார்கள் என்று தெரிகிறது. நிச்சயம் வரவேற்கத்தக்க முடிவு. இதேமாதிரி மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டால் அது மெல்ல மறைந்துவரும் தமிழ் மரபுசார் கலை வடிவங்களை மீட்டெடுப்பதாக இருக்கும்.

மதிய நாய் கண்காட்சி மற்றும் மாலை நேர கலை நிகழ்ச்சிகளுக்கு செல்லலாம் என்று இருக்கிறேன். உள்ளூர் நண்பர்களை அங்கே சந்திக்க முடிந்தால் மகிழ்ச்சி. செவிக்கின்பம் போக கூடுதலாக என் செலவில் லிச்சி ஜூஸும் கிடைக்கும்.
மேலும்...

NAMAKKAL SHOULD BE REDISCOVERED - தொடரும் உரையாடல்

Posted: Tuesday, January 12, 2010 | Posted by no-nononsense | Labels: , 0 comments
மாது: எனக்கு தெரிந்தவரை மாரியம்மன் கோவிலுக்கு அருகே ஒரு ஈஸ்வரன் கோவில் உள்ளது அது காமட்சியம்மன் கோவில் என்றும் சொல்வார்கள்,
மலையின் பெயரே நாமகிரி தாயார் என்று வந்துள்ளது.
திருத்தம் ராஜா தியேட்டர் இப்பொழுது MGM என்று பெயர் மாற்றம் அடைந்துள்ளது

புஷ்பராஜ்:
வள்ளிபுரத்தில் சில வருடங்களாக செழித்தோங்கும் ஈஸ்வரன் கோவிலையும் உன் லிஸ்டில் சேர்த்துக்கொள்ளலாம். இவையெல்லாம் மிக சமீபமாக கட்டப்பட்டவை. இவற்றின் பின்னால் ஒரு நூறு, வேண்டாம், ஒரு ஐம்பது வருட வரலாறு கூட கிடையாது. அதனால் பழம்பெருமையில்லாத இவற்றை சைவ சமயத்தின் தாக்கத்தால் எழும்பியவை என்று சொல்ல முடியாது. நாமக்கல்லை சுற்றியுள்ள ஊர்களில் உள்ள மற்ற சிவதலங்களுடன் ஒப்பிடுவதன் மூலம் இதனை நீ அறியலாம்.

உதாரணமாக சேலம் சுகவனேஸ்வரர் குறைந்தது ஐநூறு வருடங்கள் பழமையானது. திருச்சியின் திருவானைக்கோவில் நாயன்மார்களால் பாடப்பெற்ற பெருமைக்கொண்ட பஞ்சபூத சிவதலம். ஈரோடு மாவட்டத்தில் பல பழமையான கோவில்கள் உண்டு. அவற்றுள் ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில் குறிப்பிடத்தக்கது. கொல்லிமலையின் அறப்பளீஸ்வரர் கூட பழமையான கோவில்தான். பாடப்பெற்ற ஸ்தலம் என்றும் நினைக்கிறேன்.

இம்மாதிரி ஒரு சிவன் கோவிலும் நாமக்கல் பகுதியில் கிடையாது. பரமத்தி-வேலூர் நன்செய் இடையாறில் இருக்கும் ஒரு கோவில் மட்டும்தான் இங்கே சுற்றுபுறத்தில் பழமையான கோவில். பெயர் எனக்கு நினைவில்லை.

நாமக்கல் இதற்கு முன்பு பெரிய ஊர் கிடையாது என்பதால் மற்ற பெரிய ஊர்களுடன் இதை ஒப்பிட முடியாது என்பதை ஒரு வாதத்திற்காக ஒப்புக்கொண்டாலும் கூட, இங்கே நாமக்கல் மலையில் மட்டும் மேலொன்றும், இடம் வலம் இரண்டாக மொத்தம் மூன்று பெருமாள் கோவில்கள் இருப்பது இடிக்கிறது.

இவற்றையெல்லாம் ஒப்புநோக்கும்போது இந்த பகுதியில் சைவத்தை விட வைணவத்தின் தாக்கம் அதிகம் இருந்திருப்பதாக தெரிகிறது.

நாமக்கல்லின் பழம் வரலாறு குறித்து ஆராய முற்படுவதன் தொடக்கப் புள்ளி சேலத்தின் வரலாற்று ஏடுகளை புரட்டுவதில்தான் ஆரம்பிக்கிறது. காரணம் பண்டைய காலம் முதல் இதனை சேலத்தின் ஒரு பகுதியாக வகை பிரித்தே ஆண்டு வந்திருக்கிறார்கள்.
மேலும்...

பொதுபுத்தியின் எஸ்கேபிஸம் - தொடரும் வாதங்கள்

Posted: | Posted by no-nononsense | Labels: 0 comments
தொடரும் விவாதத்தில் என்னை எதிர்கொண்ட நண்பனின் கருத்துக்கான என் பதில்:

மன்னிக்கவும் பரந்தாமா, நான் எழுதியவற்றில் எங்கேயும் நடந்த அச்செயல்களுக்கு நியாயம் கற்பிக்கவில்லை. ஒரு பரபரப்பான சம்பவத்தை மீடியாக்கள் எப்படி மிகைப்படுத்தி செய்தியாக தருகின்றன என்பதைத்தான் என் கருத்தின் ஆரம்பத்தில் கோடிட்டு காட்டியிருந்தேன். செய்தியை செய்தியாக மட்டும் தராமல் அதனுடன் மிகை கற்பனை மசாலாவையும் சேர்த்து தடவி தரும் டேபிள் ஜர்னலிஸத்தை நான் தொடர்ந்து கண்டித்து எழுதிவருகிறேன். இந்த இடம் புதுசு என்பதால் அதன் subversive meaning -ற்கு எதிராக எடுத்துக்கொள்ளப்பட்டுவிட்டது.

மக்களின் நல்வாழ்வுக்கு பொறுப்பேற்றிருக்கும் அமைச்சர்களும் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளும் ஒருங்கே குவிந்திருந்த ஓரிடத்தில் அவர்களின் கண் முன்னே ஒரு உயிர் துள்ள துடிக்க சாகவிடப்பட்டிருக்கும் கொடுமையை என்ன வார்த்தை கொண்டு கண்டிக்க? இந்த மனிதாபிமானமற்ற செய்கையை இயல்பான மனிதன் எவனாலும் பொறுத்துக்கொள்ள முடியாது எனும்போது, என்னால் மட்டும் எப்படி ஆதரிக்க முடியும். ஒரு வாதத்திற்காகக்கூட அதை நியாயப்படுத்தும் செய்கையில் என்னால் ஈடுபடமுடியாது.

இந்த கண்டனத்திற்குரிய சம்பவம் பற்றிய செய்திகள் வெளியானதும் நடப்பது நல்லாட்சியாக இருந்திருந்தால் என்ன நடந்திருக்கவேண்டும்? இந்நேரம் அவர்கள் அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். அல்லது குறைந்த பட்சம் விசாரணைக்காவது உத்தரவிடப்பட்டிருக்க வேண்டும். அப்படி எதுவும் நடக்காததைக் கண்டித்து இந்நேரம் பத்திரிக்கைகளாவது கடுமையான கண்டனத்தை தெரிவித்திருக்க வேண்டும்.

ஆனால் நடப்பது என்ன?

இரண்டு நாள் கழித்து நிதானமாக ’அருகே வெடிகுண்டு வெடிக்காமல் கிடந்தது; அதனால் காத்திருந்தோம்’ என்று ஒரு காரணத்தை கண்டுபிடித்து தருகிறார்கள். அதையும் விமர்சனம் எதுவுமின்றி அப்படியே வெளியிட்டுவிட்டு, அத்துடன் தங்கள் பணி முடிந்துவிட்டதாக கையைத் தட்டியபடி கள்ளமௌனம் சாதிக்கிறார்கள் முன்பு இச்செய்தியின் பரபரப்பில் பணம் பார்த்த ஊடகங்கள். (இந்த இடத்தில் வடக்கே ருசிகா தற்கொலை வழக்கில் ஊடகங்கள் செய்துவரும் வாதங்களையும் அது ஏற்படுத்திய தாக்கங்களையும் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம்)

எதிர்வரும் தேர்தலுக்கான கூட்டணி கணக்குகளை கூட்டிக்கழித்துக்கொண்டிருக்கவே நேரம் போதாத நிலையில், இதையெல்லாம் கவனிக்கவோ கண்டிக்கவோ இங்கே எதிர்கட்சிகள் யாருக்கும் பெரிதாக அக்கறை கிடையாது. வழக்கம்போல ஜெயலலிதா ஒரு அறிக்கை விட்டார். முடிந்தது கடமை. இன்னொரு பக்கம், அண்மையில் தன்னைத்தானே தமிழக மக்களின் மீட்பராக அறிவித்துக் கொண்ட விஜயகாந்தும் ஒரு அறிக்கை வெளியிட்டார். என்னவென்று பார்த்தால், யாருடன் வேண்டுமானாலும் நாங்கள் கூட்டணிக்கு தயார் என்று ஒரு அறிவிப்பு. அதுதான் அந்த அறிக்கையின் உள்ளடக்கம். இவர்களைப் போன்றவர்களைத்தான் அரசியல் மாற்றாக கருதிக்கொண்டு காலம் தள்ளும் நிலையில் நாமெல்லாம் இருக்கிறோம்.

இவற்றையெல்லாம் கண்டு வெகுண்டு எழ வேண்டிய மக்களின் கவலையோ தங்கள் தொகுதி எம்.எல்.ஏ-க்கு எப்போது அல்பாயுசு வாய்க்கும்; இடைத்தேர்தல் வந்து எப்போது தங்கள் வீட்டுக் கதவை பணக்கவர் தட்டும் என்பதில்தான் இருக்கிறது.

இப்படி எட்டு திக்கும் குற்றவாளிகளை கொண்டிருக்கும் ஒரு சமுதாயத்தில் ஏழு காலத்தில் கண்டனம் தெரிவித்து எழுதிதான் என்ன ஆகப்போகிறது — என்னும் ஒரு ஆயாசமான மனநிலையை நான் எப்போதோ எட்டிவிட்டேன். காரணம், ரொம்ப யோசித்தால்; ரொம்ப உணர்ச்சிவசப்பட்டால் எங்கே நானும் ஒரு நக்ஸலைட் ஆகிவிடுவேனோ என்று பயமாக இருக்கிறது.

அதனால் கண்டு கண்டு சலிப்புற்றிருக்கும் அரசியல் / நாட்டு நடப்புகளின் மீது அதீதமாக எதிர்வினை புரிவதை சமீபகாலமாக நிறுத்திவிட்டேன். அதையும் மீறி மனம் கோபம் கொள்ளும் நேரங்களிலெல்லாம் சுட்டு விரலை என்னை நோக்கியே திருப்பிப் பார்க்கிறேன். அது மேலே குறிப்பிட்ட உதவாக்கரை சமூககோபம்போல் இல்லாமல் உள்மனசுத்திகரிப்புக்கு கொஞ்சம் உதவியாக உள்ளது.

இதனை அடிப்படையாகக் கொண்டதே என்னுடைய முந்தைய விமர்சனம்.

நம் முன்னே ஒரு மனிதர் இம்மாதிரி அடிபட்டோ குத்துபட்டோ கிடந்தால் நடுத்தர மனோபாவம் மேவி நிற்கும் நானும் நீயும் அக்கணத்தில் அதற்கு எப்படி react செய்வோம்? நேர்மையான பதிலை அளிக்க வேண்டும் என்றால் அவர் நமக்கு தெரிந்தவராக இல்லாத பட்சத்தில் நாம் வெகு சீக்கிரமாக அந்த இடத்தைவிட்டு அகன்றுவிடவே பார்ப்போம். நான் அப்படியில்லை என்று யாராவது சொன்னால் உள்ளபடியே மகிழ்ச்சிதான். சிலர் ஓடோடி உதவுகிறார்கள் என்பதும் உண்மைதான். ஆனால் மிகப்பெரும்பான்மை அப்படியில்லையே என்பதுதான் கவலை.

நானும் நீயும் சேர்ந்த நாமின் மடங்குகள்தான் இச்சமுதாயமாக விரிகின்றது எனும்போது, இதுபோன்ற கேள்விகளை அடிக்கடி நாம் நம் மனசாட்சியை நோக்கி எழுப்பிக்கொள்வது எதிர்கால சமுதாய நலனில் அக்கறைக்கொண்ட எவருக்கும் மிக அவசியமானதாகவே கருதுகிறேன். மற்றபடி எனக்கு உங்கள் அனைவரின் கருத்துநிலையில் இருந்து எவ்விதத்திலும் எதிர்கருத்துநிலை கிடையாது.

நீ group-a சென்றால் உனக்கு helping tendency இருக்கோ இல்லையோ, உன்னுடன் வந்தவர்களுக்காவது நீ ஒரு positive step எடுத்து வைப்பாய்
மேற்காணும் உன் நன்னம்பிக்கைக்கு என் வந்தனங்கள். நீ தொடர்ந்து துரைமார் தேசத்திலேயே வாழ்வது இந்திய சமுதாயத்தைப் பற்றி இவ்விதமாக நீ கொண்டிருக்கும் குறைந்தபட்ச நல்லெண்ணங்களுக்கு நல்லது.

தனியாக தவிர்த்துவிட்டு வந்தாலாவது மனசாட்சி உறுத்தும். அதையே கும்பலோடு கும்பலாக செய்யும்போது ’நான் மட்டுமா செய்தேன்? மற்றவர்களும் அப்படித்தான்’ என்னும் சுயசமாதானத்திற்கே அது வழிவகுக்கும். இங்கே ஏற்கெனவே கும்பல் வன்முறையைப் பற்றி உரையாடியிருக்கிறோம் என்று நினைக்கிறேன். அது வேறு பொருளில் என்றாலும்கூட இரண்டின் அடிப்படை உளவியலும் ஒன்றுதான்.
மேலும்...

International Poultry Expo & Conference - சில குறிப்புகள்

Posted: Sunday, January 10, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments

அண்மையில் டெல்லியில் நடந்த Auto Expo 2010 -ஐ நான் இரண்டு காரணங்களுக்காக பின்தொடர்ந்து வந்தேன். முதல் காரணம் ஆனந்த் மகிந்த்ரா. எக்ஸ்போ நடப்புகளை தொடர்ந்து ட்விட்டி வந்தார். அதற்கேற்ப ஆட்டோ செக்டார் பங்குகளில் அந்த குறிப்பிட்ட நாட்களில் சிறப்பாக வர்த்தகம் செய்ய முடிந்தது. (கொஞ்சம் லாபம் பார்க்கவும் முடிந்தது. Thanks to that 140 word phenomenon, called Twitter!). இரண்டாவது காரணம் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தில் பணியாற்றும்போது எனக்கு அறிமுகமான நண்பர் ஒருவர் அதில் கலந்து கொண்டிருந்ததுடன் அதுபற்றி அடிக்கடி என்னுடன் பேசியும் வந்தார். கார்களை அடிக்கடி மாற்றுவது அவருக்கு வாடிக்கை. நாம் ஆடம்பரமாக நினைப்பது சிலருக்கு ஆதர்ஷமாக பெரும் கனவாக இருக்கிறது.

என்னுடைய அந்த நண்பர் பல விஷயங்கள் குறித்து என்னிடம் நிறைய உரையாடுவார். அவை பெரும்பாலும் புது புது தொழில்முறைகள் மற்றும் அதன் எதிர்கால சாத்தியக்கூறுகள் பற்றியதாக இருக்கும். எனக்கும் நிறைய சிபாரிசு செய்வார். எல்லாம் என் காலுக்கு அகலக் காலாக இருந்ததால் துணிந்து இறங்க முடிந்ததில்லை. சமீபத்தில் கோவையில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவுக்கு கூட அந்த நண்பர் என்னை அழைத்திருந்தார். இருக்கும் இடத்தை விட்டு எங்கும் நகரும் நிலையில் நான் இப்போதைக்கு இல்லை என்பதால் அதையும் தவறவிட்டுவிட்டேன். நிறைய வாய்ப்புகளும் தொடர்புகளும் பணியிட கடமைகளால் கண் முன்னே பறிபோகின்றன. சுயதொழில் புரிபவர்கள் புண்ணியவான்கள்!

இச்சூழ்நிலையில் உள்ளூரிலிருந்து ஒரு எக்ஸ்போவுக்கான அழைப்பு வந்தது. நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி ”International Poultry Expo & Conference” என்ற பெயரில் மூன்று நாட்கள் நடத்திய பன்னாட்டு கோழியின கண்காட்சிதான் அது. அதில் நமது நண்பர்கள் சதீஷ்கண்ணனும் மாதும் பங்குபெற்று ஸ்டால் போட்டிருந்தனர் என்பதால் அது நம் கவனத்தையும் கவர்ந்திருந்தது.

சதீஷ்கண்ணன் அந்த துறையில் இருப்பதால் அதில் பங்கு பெற்றதில் ஆச்சரியமில்லை. ஆனால் அதில் மாதுவையும் அவன் பங்குபெற வைத்ததுடன் கோழியின ஆர்வலர்களிடம் நல்ல அறிமுகத்தையும் ஏற்படுத்தி தந்திருக்கிறான். இந்த கண்காட்சியின் ஹைலைட்டே மாதுவின் பேன்ஸி கோழிகள்தான் என்றால் மிகையில்லை. எப்போதும் அங்கேதான் கூட்டம் மொய்த்தபடி இருந்ததாக தகவல். அதன் காரணமாக மாதுவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டான். இந்த தொடர்புகள் சாத்தியங்கள் எல்லாம் இங்கே நாம் இணையத்தில் இணைந்ததன் ஆகப்பயன் என்பதால் அதில் நமக்கும் மகிழ்ச்சிதான்.


இந்த இடத்தில் மாதுவின் பறவைக் காதல் பற்றி கொஞ்சம் குறிப்பிட்டாக வேண்டும். கடந்த வருடம் வரை மீன்கள் வளர்ப்பதில் தான் அவனுக்கு நாட்டம் இருந்தது. ஆனால் எங்கிருந்து பறவைகளின் மீது ஆர்வம் தொற்றியது என்று தெரியவில்லை, கடந்த ஒரு வருடமாக பல இன கோழிகள் மற்றும் வித விதமான பறவைகளை சேகரிப்பதிலும் பராமரிப்பதிலும் முழுவீச்சாக இறங்கிவிட்டான். அதற்காக நீண்ட பயணங்களை மேற்கொள்ள நேர்ந்தாலும் சளைப்பதில்லை. குறுகிய காலத்திலேயே தமிழக அளவிலான பறவை ஆர்வலர்களின் நெட்வொர்க்கில் குறிப்பிடத்தக்க இடத்தை அடைந்திருக்கிறான். எல்லாமே அசுர வேகத்தில் நடந்தது. ஒரு காரியத்தில் ஈடுபாடு கொண்டு விட்டால் அதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வது அவனுக்கு இயல்புதான் என்பதால் எனக்கு அதில் ஆச்சரியமில்லை.

வெள்ளி கிழமை முதல் இக்கண்காட்சி நடந்து வந்தாலும் இன்றுதான் எனக்கு போக நேரம் கிடைத்தது. மனைவி குழந்தை சகிதம் கிளம்பினேன். உடன் நண்பர்கள் சுரேஷ் மற்றும் சதீஷ் (வக்கீல்) இணைந்து கொண்டனர். 12.30 அளவில் அரங்கினுள் நுழைந்தோம்.

பெயர்தான் சர்வதேச கோழியின கண்காட்சி. ஆனால் அங்கே இருந்த ஸ்டால்கள் அனைத்தும் பவுல்டரி வர்த்தக நிறுவனங்களின் விற்பனைப் பொருட்களின் காட்சிதான். அது கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. அதை ஈடு செய்யும் விதமாக ஈமு கோழிகளின் காட்சி இருந்தது. உருவத்தில் பிரம்மாண்டமான அக்கோழிகள் குழந்தைகளை வெகுவாக கவர்ந்தன. அதைவிட்டால் மாதுவின் கோழிகள் தான் என்பதால் அதை நான் அவன் வீட்டு பண்ணையிலேயே பார்த்திருந்ததால் மற்ற ஸ்டால்களில் அதிகம் கவனம் செலுத்தினேன்.

நுட்பம் மேம்பட்ட பல பவுல்டரி உபகரணங்கள் புதிதாக சந்தைக்கு வந்திருந்தன. என்னுடைய கவனம் ஏதேனும் சிறுதொழில் வாய்ப்பு குறித்து தகவல் கையேடு, புத்தகம் கிடைக்குமா என்பதில் இருந்தது. ஆடு வளர்ப்பு, கலர் மீன் வளர்ப்பு, உவரி மீன் வளர்ப்பு குறித்து சில புத்தகங்கள் கிடைத்தன. எல்லாமே TANUVAS வெளியீடுகள். அதைத்தவிர வேறு உருப்படியாக ஒன்றும் இல்லை. இதுபோன்ற கருத்தரங்குகள் வணிக நோக்கத்தில் மட்டும் நடத்தப்படாமல் தொழில்முனைவோருக்கும் உபயோகமாக தகவல் கையேடுகள் மற்றும் விளக்க காட்சிகளுடன் நடத்தப்பட்டால் பயனாக இருக்கும்.

சதீஷ்கண்ணன் ஸ்டால் மிக ஜோராக இருந்தது. அதன் வடிவமைப்பில் செய்நேர்த்தி இருந்தது. என் பாராட்டுக்களை அவனிடம் சொல்லி சிறிது நேரம் அங்கே செலவிட்டுவிட்டு, மாது ஸ்டாலை வலம் வந்தோம். பெரிய இடத்தை அவனுடைய கோழிக் காட்சிக்காக ஒதுக்கியிருந்தார்கள். டிசைன் டிசைனான கோழிகள் நிறைந்திருந்தன. அவற்றின் இனம் குணம் பற்றியெல்லாம் எனக்கு ஸ்நான ப்ராப்தியும் இல்லை என்பதால் அருகில் இலவசமாக சாப்பிடக் கொடுத்த அவித்த முட்டைகள் சிலவற்றை உள்ளே தள்ளி, அங்கிருந்து நகர்ந்து ரொம்ப நேரமாக நாசியை தீண்டிக் கொண்டிருந்த சிக்கன் பிரியாணி உணவுக்கூடம் நோக்கிச் சென்றோம். அங்கே தயிர் சோறையும் மோர் மிளகாயையும் பஃபே போட்டு பங்கு வைத்துக் கொண்டிருந்தனர். சிக்கன் எல்லாம் டெலிகேட்ஸுக்குத்தானாம். கிடைத்ததை கொஞ்சம் ருசி பார்த்துவிட்டு (அய்யா ச.க, இப்படி பருப்பில்லாமல் கல்யாண சாப்பாடு போட்டது நியாயமா?) நண்பர்களிடம் விடை பெற்று வீடு வந்தோம்.

அங்கே எடுத்த சில புகைப்படங்களை கீழ்காணும் ஆல்பத்தில் காணலாம்.

மேலும்...

பொதுபுத்தியின் எஸ்கேபிஸம்

Posted: Saturday, January 9, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
இச்செய்தியை முன்வைத்து நடந்த உரையாடலில் என் கருத்து:

கொஞ்சம் புகைமூட்டம் அடங்கட்டும் கருத்துக்கூறலாம் என்று நினைத்தேன். பல நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு பேசி பிறகு அச்சம்பவத்தின் பின்னுள்ள உண்மை வேறாக இருக்க கண்டிருக்கிறேன். இதிலும் கூட கிட்டத்தட்ட அப்படித்தான். முதலில் அரை மணி நேரம் வேடிக்கைப் பார்த்தார்கள் என்றார்கள். பிறகு 20 நிமிடம்; இன்றைய செய்தியில் 10 நிமிடம் என்று சம்பவத்தை நிமிட வாரியாக தினமலரில் விளக்கியிருக்கிறார்கள்.

வெடிகுண்டு வீசப்பட்டதால் அருகில் செல்ல பயந்ததாகச் சொல்கிறார்கள் சம்மந்தப்பட்டவர்கள். பயந்தவர்கள் காவல்துறையினர் என்பதுதான் இதில் வேடிக்கை. இம்மாதிரி குண்டுகள் வீசப்பட்டால் அதை சமாளிப்பது எப்படியென சிறிதும் பயிற்சியில்லாத காவலர்களே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர் என்பது வேதனையான உண்மை.

சட்டம் ஒழுங்கு எல்லாம் இந்தியாவைப் பொருத்தவரை ஒரு போங்கு. சிவப்பு விளக்குச் சுழல செல்பவர்களைத் தவிர இங்கே யாருக்கும் குறைந்த பட்ச பாதுகாப்பு என்பது கிடையாது.

நடந்த இச்சம்பவமுமே கூட கேமிராவில் சிக்கியதாலும் அதில் அமைச்சர்களும் அதிகாரிகளும் சம்மந்தப்பட்டிருந்ததாலும் தான் வெளியே கசிந்து பரபரப்பாகி இருக்கிறது. இதுபோல அன்றாடம் சாமானியர்களை நோக்கி அதிகாரத்தில் இருப்பவர்களால் காட்டப்படும் அலட்சியம் கணக்கில் அடங்காதது. கணக்கில் வராதது. நேரில் பார்க்க வேண்டும் என்றால் சில நாட்கள் போலீஸ் ஸ்டேசன் பக்கமும் ஜி.எச் பக்கமும் சென்று வாருங்கள். தெரியும்.

*

இந்த சம்பவத்தில் இவர்கள் அனைவரின் செயல்பாடுகளும் ஒட்டு மொத்த வெகுஜன மனோபாவத்தின் ஒரு குறியீடு மட்டுமே. இவர்களை விமர்சிக்கும் நேர்மை நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது என்பது அவரவர் தங்கள் மனசாட்சியிடம் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி. ரோட்டில் அடிபட்டு கிடப்பவரை வேடிக்கைப் பார்த்தவாறே கவனமாக விலகி கடந்து போகும் மனிதாபிமானமற்ற ஒரு வித சுயநல மனோபாவம்தான் நம்மில் பெரும்பாலானோரிடம் இருக்கிறது. மாறாக அந்த கணத்தின் எல்லா கமிட்மெண்ட்களிலும் இருந்து தன்னை கத்தரித்துக்கொண்டு உடனே களம் இறங்கி உயிரை காப்பாற்ற முனைபவர்களை இந்தியச்சூழலில் காண்பது அரிது.

மும்பை 26/11 தீவிரவாத தாக்குதலின் போது குண்டடிப்பட்ட தீவிரவாத தடுப்பு படை தலைவர் ஹேமந்த் கார்கரே மற்றும் உடனிருந்த இரு அதிகாரிகள் கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் அடிபட்ட இடத்திலேயே இதேபோல் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்திருக்கின்றனர். அதன் பிறகே ஆம்புலன்ஸ் வந்திருக்கிறது. அதுவரை மக்கள் வழக்கம்போல் அவர்களை வேடிக்கை மட்டும் பார்த்திருக்கின்றனர்.

அந்நியன் படத்தில் விபத்தில் அடிபட்டவரைச் சுற்றி கூடிய கூட்டத்தார் “யாராவது ஆம்புலன்ஸுக்கு போன் பண்ணுங்களேப்பா.. யாராவது ஹெல்ப் பண்ணுங்களேப்பா” என்று கூறும் காட்சி இங்கே நினைவுக்கு வருகிறது.

*

சென்ற வருடத்தில் ஒருநாள் திருச்சியில் நான் தங்கியிருந்த உறையூரிலிருந்து பஸ் பிடித்து வேலைக்குச் சென்று கொண்டிருந்தேன். திருச்சியின் உள்ளூர் பஸ் போக்குவரத்து என்பது சத்திரம் பஸ் ஸ்டாண்டில் தொடங்கி ஒரு ஒரு மணி நேரத்தில் மீண்டும் அங்கேயே முடியும்படியான ஒரு வட்ட வடிவ வழித்தடம் கொண்டது. இடையில் எங்கேயாவது டிராபிக் ஜாம் ஆனால் கிட்டத்தட்ட நகரமே ஸ்தம்பித்து போகும். அப்படி ஒரு டிராபிக் ஜாமில் மாட்டி அன்று பாதி வழியிலேயே இறங்கி அலுவலகம் நோக்கி நடக்க ஆரம்பித்தேன். வழியில் திருச்சி கோர்ட் காம்பவுண்ட் சுவரை ஒட்டி நீளும் பிளாட்பாரத்தில் ஒரு வயதான மனிதர் மயங்கிய நிலையில் வலியால் முனகியபடி கிடந்தார். பார்க்கும் எவருக்கும் மனம் பதை பதைக்கும்படி அவர் நிலை இருந்தது. இருந்தும் நெரிசலில் சிக்கி பிளாட்பாரத்தில் நடக்க ஆரம்பித்திருந்த பலரும் ஒரு கணம் கண்ணை உயர்த்தி பார்த்து விட்டு கடந்து போய்க்கொண்டே இருந்தனர். அவர்களில் நானும் ஒருவன்.

ஆனால் அதன் பின்னர் நாள் முழுவதும் அந்த குற்ற உணர்வு என் நெஞ்சை அழுத்திய வண்ணம் இருந்தது. உடன் பணிபுரிவோரிடம் பகிர்ந்து கொண்டபோது அவர்களில் ஒருவர் கூட அதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளாததோடு இதுபோல் அவர்கள் கடந்து சென்ற சம்பவங்களை கோர்வைப் படுத்த ஆரம்பித்தனர். அடுத்த நாள் உள்ளூர் செய்திகளில் தேடிப் பார்த்தேன். குறிப்பான செய்திகள் எதுவுமில்லை. அவர் யாராலாவது காப்பாற்றப்பட்டிருக்கலாம் என்று நம்பிக்கொள்கிறேன். எஸ்கேபிஸ பொதுபுத்தி கொண்டிருக்கும்வரை வேறுவழி?
மேலும்...

NAMAKKAL SHOULD BE REDISCOVERED

Posted: Friday, January 8, 2010 | Posted by no-nononsense | Labels: , 0 comments


சென்னையில் நடந்து வரும் புத்தக கண்காட்சியை திறந்து வைத்து கலைஞர் பேசும்போது “சென்னை மறுகண்டுபிடிப்பு” என்னும் புத்தகம் பற்றி சில மாறுபாடான கருத்துகளை கூறியிருந்தார். அதன் தொடர்ச்சி இந்த வார துகளக் வரை சர்ச்சையை கிளப்பிய வண்ணம் உள்ளது. நாம் அதனுள் நுழைய வேண்டாம்.

அப்புத்தகம் எஸ். முத்தையா எழுதிய "Madras rediscovered" என்னும் ஆங்கிலப் புத்தகத்தின் தமிழ் பதிப்பு. அதன் ஆங்கில மூலம் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக மறுபதிப்பு கண்டு வருகிறது. இன்றைய சென்னையின் முற்கால மெட்ராஸ் ராஜ்தானி வரலாற்றை தெளிவான ஆய்வுக்குட்படுத்தி தொகுக்கப்பட்ட அந்த நூலைப்பற்றி படிக்கும் போதெல்லாம், நாமக்கலுக்கும் ஏன் இப்படி ஒரு கால வரிசைப்படுத்தப்பட்ட வரலாற்று ஆய்வு நூல் இல்லை என்ற கேள்வியே மனதில் தொக்கி நிற்கிறது.

இங்கேயும் எத்தனையோ முனைவர்களும் ஆய்வாளர்களும் மண்ணின் மைந்தர்களாக தோன்றியிருக்கிறார்கள். எவரிடமிருந்தும் குறைந்த பட்சம் மேலோட்டமான ஒரு வரலாற்று நூல் கூட உருவானதாகத் தெரியவில்லை. அப்படி ஒரு ஆய்வு நூல் இருந்திருந்தால் வெறும் யூகங்களை (என்னென்ன என்பதை கீழே எழுதியிருக்கிறேன்) மட்டுமே வரலாறாக கொண்டு வாழ்ந்து வர வேண்டியதில்லை.

எனக்கு தெரிந்த தகவல்களின் அடிப்படையில் நாமக்கல்லை ஒரு குறுக்கு வெட்டுக்கு உட்படுத்தி யோசிக்கும் போது மனதில் கீழ் காணும் கேள்விகளும் சிந்தனைகளும் தோன்றுகின்றன.

  • நாமக்கல் நகரின் மையமாகத் திகழும் நாமக்கல் மலைக்கு ’நாமகிரி’ என்று பெயர் வந்தது எப்படி? நாமகிரி தாயார் காரணமாக நாமகிரி மலையா (அ) மலை காரணமாக நாமகிரி தாயாரா?
  • இப்பெயர் பெறும் முன் இம்மலையின் பெயர் என்ன?
  • மலையின் மேலுள்ள மலைக்கோட்டையை சிலர் திப்பு சுல்தான் கட்டியிருப்பதாகச் சொல்கிறார்கள்; சிலர் மதுரை திருமலை நாயக்கர் அரசாட்சியை சேர்ந்த ராமசந்திர நாயக்கர் கட்டியதாகச் சொல்கிறார்கள். உண்மையில் யாரால் கட்டப்பட்டது? அது சம்மந்தமான கல்வெட்டு, செப்பேடு ஏதேனும் உள்ளதா?
  • மலையை திப்பு சுல்தான் தான் கட்டினான் என்றால் மலை மீதுள்ள வரதராஜ பெருமாள் கோவிலும், முகப்பிலுள்ள ஹிந்து சின்னங்களும், நாமமும் எப்படி வந்தன?
  • மலை மீதுள்ள இஸ்லாமிய தர்கா (அ) சமாதி (அ) கட்டிடத்தின் பின்னுள்ள வரலாறு என்ன? எப்படி இந்து-முஸ்லிம் சமய சின்னங்கள் ஒரே இடத்தில் நிறுவப்பட்டன?
  • நரசிம்மர் - நாமகிரி அம்மன் கோவிலின் சிற்ப வேலைப்பாடுகளும், குகை குடைவரை கட்டிடக்கலை முறையும் அப்படியே திருமயம் கோவிலை ஒத்திருப்பதால் இவையும் மகேந்திரவர்ம பல்லவனால் கட்டப்பட்டிருக்கலாம் என்று சொல்கிறார்கள். நாமக்கல்லை பல்லவர்கள் ஆண்டதாக எங்கேயும் பதிவு இல்லாதபோது எப்படி பல்லவ முறையில் கோவில்கள் கட்டபட்டன?
  • நரசிம்மர் கோவிலை நோக்கி கைகூப்பி நிற்கும் ஆஞ்சநேயர் கோவிலின் ஸ்தல வரலாறு என்ன?
  • நாமக்கல் சேர மன்னர்களின் ஆட்சியின் கீழ் அதிக காலம் இருந்ததாக தெரிகிறது. பிறகு சோழர்கள், நாயக்கர்கள், பீஜப்பூர் - கோல்கண்டா - மைசூர் சுல்தான்கள், அவர்களுக்குப் பிறகு நிஜாம் மன்னர் ஆகியோரின் ஆட்சியின் கீழ் இருந்ததாக தெரிகிறது. பிறகுதான் மற்ற இடங்களையும் போலவே இதுவும் ஆங்கிலேயரின் கீழ் வந்துள்ளது. இவை எல்லாமே மேலோட்டமான தகவல்களாகவே ஆங்காங்கே பதியப்பட்டுள்ளன. கால வரிசைப்படுத்தப்பட்ட முறையான தரவுகள் இல்லை.
  • நாயக்க ஆட்சியின் கீழ் பிரிக்கப்பட்ட 72 பாளையங்களில் நாமக்கல் எந்த பாளையத்தில் அடக்கம்?
  • அரசு ஏடுகளிலோ அல்லது அருகிலுள்ள சேலம், ஈரோடு மாவட்ட ஆய்வு ஏடுகளிலோ நாமக்கலின் பண்டைய வரலாறுபற்றி ஏதேனும் குறிப்புகள் இருக்கிறதா?
  • ஈரோடு மாவட்டத்தில் கபாலிகம்(சைவ மதத்தின் ஒரு பிரிவு) பரவலாக பின்பற்றப்பட்டிருந்தும் நாமக்கல்லில் வைணவம் மட்டும் கோவில் கண்டது எப்படி? (நாமக்கல்லில் ஒரு ஈஸ்வரன் கோவில்கூட கிடையாது)
  • கி.பி 1 முதல் 4 வரை தமிழகத்தில் தழைத்தோங்கியிருந்த புத்த சமண சமயங்களின் பாதிப்பு எந்தளவு இங்கே இருந்தது?
  • நாமக்கல் மணிக்கூண்டு யாரால் கட்டப்பட்டது? அதற்கு தொட்ட்ண்ணா பெயர் வைக்கப்பட்டது ஏன்? யார் எந்த தொட்டண்ணா?
  • சுதந்திரப் போராட்டத்தில் நாமக்கல்லின் பங்கு என்ன? (கவிஞர் ராமலிங்கம் பிள்ளையைத் தவிர்த்து)
  • 1933-ல் காந்தியை நாமக்கல் அழைத்து வந்து குளக்கரையில் பொதுக்கூட்டம் நடத்தியவர் யார்? அக்கூட்டத்தின் உரை அல்லது அதைப்பற்றிய செய்தி குறிப்புகள், நூல் பதிவுகளின் சேகரம் உள்ளதா?
  • நாமக்கல் மக்களின் பிரதான தொழிலாக வேளாண்மை இருந்திருக்கிறது. இங்கே என்ன மாதிரியான பயிர் வகைகள் பயிரிடப்பட்டன? என்ன மாதிரி விவசாய முறைகள் பின்பற்றப்பட்டன?
  • பொய்யேரி போன்ற சிறு சிறு வாய்க்கால்கள் இருந்திருக்கின்றன. அவற்றின் நதிமூலம் யாது? நாமக்கல்லில் பின்பற்றப்பட்ட பாசனமுறைகள் யாவை?
  • லாரி, கோழிப்பண்ணை தொழில்கள் முதலில் யாரால் மேற்கொள்ளப்பட்டன? அவை எப்படி வேறூன்றின?
  • நாமக்கல்லின் ஜாதிவாரியான மக்கள் தொகை கணக்குகள் என்ன?
  • தமிழகத்தின் கலை அரசியல் பண்பாட்டியலில் நாமக்கல்லின் பங்கு என்ன?
  • துறையூர் ரோட்டில் நியூ பேலஸ், மோகனூர் ரோட்டில் காந்தமலை, ச.பே.புதூரில் செல்வி, சேலம் ரோட்டில் ராஜா தியேட்டர் ஆகிய சினிமா கொட்டகைகள் இருந்துள்ளன. இவற்றில் செல்வி சிவசக்தியாகவும், ராஜா கே.எஸ் ஆகவும் பெயர் மாற்றம் கண்டன. (ரமேஷ் தியேட்டர் நமக்கே தெரியும்). இதுபோல் கூத்து, நாடக மன்றங்கள் இருந்தனவா? அப்படியானால் எம்மாதிரி கூத்துகள் நடத்தப்பட்டன? இவையெல்லாம் குறித்த முழுமையான தகவல்கள் தேவை.
  • தமிழகத்தில் வறட்சி மற்றும் சாதி கலவரங்களால் ஒருபோதும் பாதிக்கப்படாத ஒரு சில இடங்களில் நாமக்கல்லும் ஒன்று என்கிறார்கள். இத்தகவல் எந்தளவு உண்மை?
  • நாமக்கல்லில் எந்த மாதிரி பஞ்சாயத்து அமைப்பு முறைகள் இருந்தன? அதில் எந்த தகுதியின் அடிப்படையில் பொறுப்புகள் வழங்கப்பட்டன? நீதி வழங்கல் அப்பஞ்சாயத்துகளில் நடைமுறையில் இருந்ததா?
  • நாமக்கல்லின் வரலாற்றில் தடம் பதித்த குறிப்பிடத்தக்க மனிதர்கள் யார் யார்? நாமக்கல் பகுதியின் கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், அறிஞர்கள் குறித்த தரவுகள்?
  • நாமக்கல் பகுதியிலிருந்து ஏதாவது பெரு/சிறு பத்திரிக்கைகள் வெளியானதுண்டா? அப்படியானால் அதன் பின்புலம், தாக்கம்பற்றிய தகவல்கள்?
  • நாமக்கல் வட்டார வழக்கு யாது? அப்படி ஒன்று இருப்பின் அதன் தனித்துவமான வார்த்தைகளின் தொகுப்பு உருவாக்கப்படுதல் அவசியம்.
  • சுதந்திர இந்தியாவின் தமிழக சட்டமன்ற, பாராளுமன்ற ஆட்சியியலில் நாமக்கல் தொகுதி உறுப்பினர்களின் பங்களிப்பு

பிடித்து இழுக்க இழுக்க நீளும் மந்திரவாதியின் தொப்பி கயிறு போல நாமக்கல் வரலாறு குறித்த கேள்விகளும் முடிவில்லாமல் நீண்டு கொண்டே செல்கின்றன. இவை அனைத்தையும் திரட்டி தொகுக்க முடிந்தால் நமக்கும் ஒரு மறுகண்டுபிடிப்பு நூலும், பிறந்த மண்ணின் வரலாறும் கிடைக்கும். ஒருவகையில் பிறந்த மண்ணின் வரலாறு கூட பிறப்பித்த தந்தையின் பெயருக்கு ஒப்பாக தோன்றுகிறது. எதை வேண்டுமானாலும் தந்தை பெயராக எப்படி சொல்லிவிட முடியாதோ, அதுபோல யூகங்களை மட்டுமே என் ஊர் வரலாறாக சொல்லிக்கொண்டு வாழ முடியாது.
மேலும்...

கொல்லிமலை - தொடரும் விவாதம்

Posted: Thursday, January 7, 2010 | Posted by no-nononsense | Labels: , 0 comments
(கொல்லிமலை குறித்து நண்பர்களுடன் மின்மடலில் நடந்த விவாதத்தின் ஒரு பகுதி)

மாது மஹா ப்ரபோ! ஒரு வேலை செய்வீராக! நேரே கூகுள் சென்று kolli hills tour / trip / road trip / trekking என்பது போன்ற குறிச்சொற்கள் கொண்டு தேடுவீராக! அப்போது தெரியும் நாலா திசைகளிலும் இருந்து எத்தனைப் பேர் கொல்லிமலைக்கு வந்து போயிருக்கிறார்கள்; அவர்கள் அதை எந்தளவு அனுபவித்து எழுதியிருக்கிறார்கள் என்று.

சென்ற வருடத்தில் ஒருநாள் அதிகாலையிலேயே கிளம்பி திருச்சியிலிருந்து ஊர் திரும்பிக் கொண்டிருந்தேன். முசிறி தாண்டியுள்ள மணமேடு அருகே பஸ் பழுதாகி நின்றுவிட்டது. அந்த தடத்தில் ஒரு பிரச்னை என்னவென்றால் பத்துக்கு ஒன்பது பஸ்கள் படிக்கட்டுகளையும் தாண்டி பிதுங்கிக்கொண்டுதான் பயணம் செய்யும். கிட்டத்தட்ட முக்கால் மணி நேரமாகியும் வேறு பஸ் மாறமுடியவில்லை. அப்போது ஜோடி ஜோடியாக பைக்கில் பயணம் வந்த இளைஞர்கள் சிலர், நான் நின்றிருந்த இடம் அருகேயுள்ள டீக்கடையில் ஓரம் கட்டுவதைப் பார்த்தேன். ஒரு பைக் மட்டும் ஒத்தையில் வந்திருந்தது. அவர்கள் பயணம் நாமக்கல் திசை நோக்கி இருந்ததால் அவர்களிடம் சென்று லிப்ட் கேட்டேன். மகிழ்ச்சியுடன் சம்மதித்தனர். பேசிக் கொண்டிருந்ததில் அவர்களெல்லாம் திருச்சியில் கல்லூரியில் படிக்கும் இளைஞர்கள் என்றும், பைக்கிலேயே கொல்லிமலைக்கு போய்க் கொண்டிருக்கிறார்கள் என்றும் தெரிந்தது. அதுகுறித்து அவர்கள் உற்சாகமாக காணப்பட்டார்கள். அவர்களில் ஒரு இளைஞன் இதுபோல் தான் பலமுறை பைக்கில் வந்து போயுள்ளதாகச் சொன்னான். பிறகு அவர்களுடன் நாமக்கல் வரை வந்து சேர்ந்தேன்.

நாமக்கல்லிலிருந்து சுமார் 55 கி.மீ தான் மொத்த தொலைவும். பைக்கில் சென்றாலுமேகூட ஒரு ஒன்றரை மணி நேரத்தில் உச்சிக்கே போய்விடலாம். இருந்தும் போகாததற்கு வித்தாரமாக வியாக்யானம் பேசிக் கொண்டிருக்கிறாய்.

உள்ளூரிலேயே வெண்ணையை வைத்துக்கொண்டு ஏனடா பிளாக்தண்டர், அதிசயம் என்று ஊரெல்லாம் தொண்ணையை தூக்கிக்கொண்டு நெய்க்கு அலைகிறீர்கள்; ஒருமுறை உள்ளூர் சரக்கையும் சுவைத்துத்தான் பாருங்களேன் என்றால், சொன்னதில் பொருளை விட்டுவிட்டு என் சொல்லில் மட்டும் குற்றம் காணும் உன் திறம் கண்டு வியக்கிறேன். போகாதது தேசிய குற்றம் ஒன்றும் இல்லைதான்; ஆனால் உன் தேடலில் குற்றம் என்கிறேன். சும்மா வாய் பேசாமல் நாங்கள் போகும்போது உடன் வந்துவிட்டு சொல், என் சொல் எப்படி என்று. சரியா?

(இப்படியெல்லாம் பில்டப் கொடுத்தாலாவது வர்றீங்களான்னு பார்க்கலாம்)

*

இதை எழுதும்போது இன்னொரு சம்பவம் நினைவுக்கு வருகிறது.

ஒருமுறை நானும் மணிகண்டனும் சோளக்காடுவரை ஒரு வேலையாக சென்றிருந்தோம். திரும்பிவரும்போது இயல்பாகவே மிதமான சுபாவம் கொண்ட அவனை கலவரப்படுத்த எண்ணி, வளைவுகள் தவிர்த்து மற்ற இடங்கள் அனைத்திலும் நான் வண்டியை கையை விட்டுவிட்டு ஓட்டி வந்தேன். அது கைனடிக் ஸபாரி வண்டி. டிவிஎஸ்ஸை விட நல்ல பாலன்ஸ் கிடைக்கும் என்பதால் பிரச்னை இல்லை. கீழே செக்போஸ்ட் வரும்வரை நான் செய்த அலும்புகளால் முகம் பேஸ்தடித்துப் போனதை மணி இன்னும் மறந்திருக்க மாட்டான்.

அப்போது அதெல்லாம் சாகஸம். இப்போது நினைக்கும்போதுதான் ரிஸ்க் புரிகிறது. சொல்லப் போனால் சாகஸத்துக்கும் ரிஸ்கிற்கும் இடையில்தான் இளமையின் த்ரில் இருக்கிறது.


மேலும்...

ஹரி மாமியின் ஹரிகதா & சாஹித்ய சங்கீதம்

Posted: Monday, January 4, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
சென்னையின் சபாக்களில் சங்கீத சீசன் கன ஜோராக நடந்துவருகிறது. அதையொட்டி பத்திரிக்கைகளின் பக்கங்களும் வண்ணமயமான படங்களுடன் படபடக்கின்றன. மாமாக்களும் மாமிக்களும் தொடைத் தட்டி ரசிக்கும் கர்நாடக சங்கீதத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளும் நெஞ்சம் மேலிட்ட ஆர்வத்தில் உடன் பணிபுரிந்த சங்கீதம் கற்றிருந்த ஸ்ரீரங்க நண்பர் ஒருவரை படுத்தி எடுத்ததில், அடிப்படையான சில விஷயங்களை புரியவைத்து ராகங்களை பகுத்தறியும் பயிற்சியும் சொல்லிக் கொடுத்தார். பிறகு வழக்கம் போல வேறுவேறு விஷயங்களில் ஆர்வம் சென்று மற்ற பல விஷயங்களையும் போலவே இதை பாதியில்விட்டுவிட்டேன். அந்தளவில் அது சங்கீதத்திற்கு நல்லதாகிப் போனது.

அண்மை காலமாக ஒவ்வொரு சீசனிலும் நான் எதிர்பார்த்திருப்பது இரண்டு விஷயங்களை. ஒன்று சஞ்சய் சுப்ரமணியனின் கச்சேரி. இரண்டாவது விசாகா ஹரியின் கதாகாலட்சேபம். மாமியின் உபன்யாசத்தில் ஹரி கதா, ஆண்டாள் திருக்கல்யாணம், தியாகராஜ சரிதம் என்று எதைக் கேட்டாலும் அது திகட்டாத தெள்ளமுது. சனி மாலை ஜெயா டிவியில் மாமியின் மார்கழி மஹா உற்சவ உபன்யாசம் கேட்டதிலிருந்து மீண்டும் பழைய கச்சேரிகளையெல்லாம் நேற்று முழுவதும் தேடியெடுத்துக் கேட்டுக் கொண்டிருந்தேன். குறிப்பாக ஆண்டாள் திருக்கல்யாணத்தில் கோதை மாலை சூட்டும் அழகை இதைவிட வேறு யாராவது அழகுபட பாடி விளக்கமுடியுமா?

மாலை சாற்றினாள்! கோதை மாலை மாற்றினாள்!
மாலடைந்து, மதிலரங்கன், மாலை அவர்தம் மார்பிலே,
மையலாள், தையலாள், மாமலர்க் கரத்தினாள்,

ரங்க ராஜனை, அன்பர் தங்கள் நேசனை,
ஆசி கூறி, பூசுரர்கள் பேசி மிக்க வாழ்த்திட,
அன்புடன், இன்பமாய், ஆண்டாள் கரத்தினாள்,

மாலை சாற்றினாள்! கோதை மாலை மாற்றினாள்!
பா-மாலை சாற்றினாள்! பூ-மாலை மாற்றினாள்!

*

சாஹித்யம் இல்லாத சங்கீதத்தையே தான் விரும்புவதாக குமுதத்தில் இந்தவாரம் ஞாநி எழுதியுள்ளார். சாஹித்யங்கள் சினிமா பாடல்களுக்கு வேண்டுமானால் சில சமயம் பொருத்தமாகவும் ரசிக்க கூடியதாகவும் இருக்கிறது. ஆனால் சாஸ்திரிய சங்கீதத்திற்கு அது பெரும்பாலான நேரங்களில் திணிப்பாகவே இருக்கிறது என்பதுதான் என் கருத்தும். மேலும், ஞாநி குறிப்பிடுவது போல கர்நாடக சங்கீதத்தைவிட ஹிந்துஸ்தானி இசை அதிக வரவேற்பைப் பெற்றதற்கு காரணம் அதன் குறைவான சாஹித்யம் மற்றும் நெக்குருக வைக்கும் விஸ்தாரமான ஆலாபனைகள்(ஹிந்துஸ்தானியில் ’ஆலாப்’). ராகங்களும் குறைவே. அதனுடன் ஒப்பிடும்போது கர்நாடக சங்கீதம் பத்து, பதினைந்து ராக உருப்படிகளை ஒன்று சேர்த்துக் கட்டிய பண்டல் போல காணப்படுகிறது.

அதைவிட அதை வெகுஜன ரசனையில் இருந்து விலக்கி வைப்பது அதன் தெலுங்கு கீர்த்தனைகள். கிட்டத்தட்ட இரு நூற்றாண்டுகளாக சென்னை கர்நாடக இசையின் மையப் புள்ளியாக இருந்துவந்தாலும் இன்னும் தமிழிசையின் பக்கம் தலை சாய்க்க நம் வித்வான்கள் மனம் ஒப்பவில்லை. கேட்டால் இந்த சாஹித்யங்கள் எல்லாம் கர்நாடக இசைக்காகவே அர்பணிக்கப்பட்டவை; புனிதமானவை; தெய்வீகமானவை என்கிறார்கள். கர்நாடக இசையின் மும்மூர்த்திகள் வாழ்ந்ததும் இக்கீர்த்தனைகளை இயற்றியதும் 18 மற்றும் 19-ஆம் நூற்றாண்டுகளில். இவர்கள் இயற்றிய தெலுங்கு கீர்த்தனைகள்தாம் இன்றளவும் தெய்வீகமாக கருதப்பட்டு பாடப்படுகிறது. அப்படியானால் இவர்களின் காலத்திற்கும் முன் இருந்த சாஹித்ய வடிவம் யாது? அது சமஸ்கிருதம் என்றால் அதன் தெய்வீகத்தன்மை மற்றும் புனிதத்தை இம்மும்மூர்த்திகள் கெடுத்ததாக ஆகாதா? அதனால் இசையின் அடிப்படை கூறுகள் மாறாமல் ராகத்திற்குள் பொருந்தக்கூடியதாகப் போடப்படும் எல்லா சாஹித்யங்களும் சிறப்பானவையே என்பதுதான் உண்மை.

உன்னால் முடியும் தம்பியின் ஒரு காட்சியில் இளையராஜா இதனைக் கோடிட்டு காட்டியிருப்பார். கச்சேரிக்குப் போகும் வழியில் விபத்தில் மாட்டிய ஒருவருக்கு உதவ சென்றதால் கமல் தாமதமாக கச்சேரிக்கு வருவார். இதனால் கோபமுற்ற தன் தந்தையைப் பார்த்து வழக்கமான சங்கதிகளைத் தவிர்த்து கமல் பாடும் ‘மானிட சேவை துரோகமா” என்பது எந்த இடத்திலும் பிசிறு தட்டாத முயற்சி.

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தமிழிசையை முன்னெடுக்க என்றே அண்ணாமலை செட்டியார், கல்கி, இராஜாஜி போன்றோரைப் புரவலராகக் கொண்டு தமிழிசை சங்கம் துவங்கப்பட்டது. ஆனால் அவர்கள் காலத்திற்குப் பிறகு அம்மாதிரி முயற்சிகளில் தீவிரம் காட்டப்படவில்லை. சில வருடங்கள் முன்பு இராமதாஸ் பொங்குதமிழ் பண்ணிசை பெருமன்றம் என்று ஒன்றை முன்னிலைப்படுத்தி தமிழிசை கச்சேரிகள் நடத்தினார். அதன் இன்றைய நிலை என்னெவென்று தெரியவில்லை. தனியாக கேஸட்களில் தமிழிசைப் பாடி வெளியிடும் நம் புகழ்பெற்ற சங்கீத வித்வான்கள்கூட சபா கச்சேரி என்று வந்துவிட்டால் தமிழை தீண்ட தகாததாக பார்க்கும் நிலை இன்றுவரை மாறவில்லை. தமிழிசைக்கான புரவலர்கள் அதிகரித்து, அது தன்னை பக்திக்குள் சிறைப்படுத்திக் கொண்டிருப்பதிலிருந்து வெளிவரும் ஒரு நாளில் இது மாறலாம்.
மேலும்...

தமிழகத்தின் எல்லை தாவாக்கள் & கொல்லிமலை ஒரு சிறு பார்வை

Posted: Sunday, January 3, 2010 | Posted by no-nononsense | Labels: , 0 comments
கொல்லிமலையை ஒட்டி வேறு எந்த மாநிலத்தின் எல்லையாவது இருந்திருந்தால் இப்போது நாம் கற்பனையாக பேசிக் கொண்டிருப்பது நிஜமான விவாதப் பொருள் ஆகியிருக்கும்.

குமரியை கேரளாவும், கோவையை கர்நாடகாவும், கிருஷ்ணகிரியை ஆந்திராவும் உரிமை கொண்டாடுவது போல தமிழ்நாடு அக்கம் பக்கம் மாநிலத்தின் ஏதாவது இடத்தைப் பற்றி சர்ச்சை கிளப்பி இருக்கிறதா? அவ்வப்போது திருப்பதி போச்சே என்று பெருமூச்சு விடுவதோடு சரி. ஆனால் இது தகப்பன் வீடு மாதிரி. மெட்ராஸ் ஸ்டேட்டில் இருந்து பாகப் பிரிவினை செய்து கொண்டுபோன பிள்ளைமார்கள்தான் நம் அண்டை மாநிலங்கள் எல்லாம். எனக்கு கொடுத்த பாகம் மறு கண் சுண்ணாம்பு என்று குறைபட்டுக் கொண்டேதான் இருப்பார்கள். மனித இயல்பு.

இதையாவது பங்காளி தகராறு என்று விட்டுக்கொடுத்துப் போகலாம். ஆனால் கச்சதீவை தாரை வார்த்ததைவிட ஒரு இளிச்சவாய்த்தனம் இன்னொன்று இல்லை. கருணாநிதி செய்த தவறு இன்று மீனவர்களை துப்பாக்கி குண்டுகளுக்கு காவு கொடுத்துக் கொண்டிருக்கிறது. அசல் முட்டாள்தனம்!

*

கொல்லிமலை இன்றுவரை ஒரு மாசுபடாத மலைப்பிரதேசமாக நீடிக்கிறது. அதற்கு அதன் 72 கொண்டை ஊசி வளைவுகள்தான் கவச குண்டலம். மாற்று வழி போடப்பட்டுவிட்டால் (அ) கொண்டை ஊசிகள் அகற்றப்பட்டுவிட்டால், வரும் பத்தாண்டுகளில் நிலைமை மாறலாம்.

இன்றுவரை மேலே எந்த பெரிய நகரமும் கிடையாது. அப்படியொன்று உருவாக்கப்பட்டு கொல்லிமலை சுற்றுலாதளமாக promote செய்யப்படும் நாள் அதன் அழிவின் தொடக்க நாள். நகர் விரிவாக்கம், மக்களின் அதீத குடியேற்றம் ஆகியன நிகழுமாயின் அங்கேயுள்ள மரங்கள் வெட்டப்பட்டு கானகத்தின் பரப்பளவு குறையும். அதன் விளைவாக நாமக்கல் மழை மறைவு பிரதேசமாகி வறண்டு போகக்கூடும். ஆகவே கொல்லிமலை அதன் இன்றைய வனப்புடன், அறியப்படாத மர்மங்களுடன் தொடர்ந்து அப்படியே நீடிப்பதுதான் நல்லது. ஏற்காடு, ஊட்டி, கொடைக்கானல் ஆகியவற்றின் அன்றைய இன்றைய நிலைமைகளை ஒப்பிட்டுப் பார்த்தால் இக்கூற்றின் பின்னாலுள்ள உண்மை புரியும்.

கொல்லிமலையின் அருமை நாமக்கல் மக்களால் இன்றுவரை உணரப்படவேவில்லை என்றே சொல்வேன்.
மேலும்...

காப்பி-பேஸ்ட் கலைப் படைப்புகள்

Posted: Friday, January 1, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
ஐரோப்பாவில் மையம் கொண்டிருந்த இரண்டாம் உலகப் போரின் போர் மேகங்கள் ரஷ்யாவை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த நேரமது. அவர் ஒரு ரஷ்ய ராணுவ அதிகாரி. பெயர் வாஸ்கோவ். ஊரிலிருந்து வெகுதூரத்திலிருக்கும் கானகத்தை ஒட்டிய பகுதியில் ஐந்து இளம்பெண்களைக் கொண்ட குழுவுக்கு துப்பாக்கி பயிற்சி அளித்துக் கொண்டிருக்கிறார். அனைவரும் கட்டுப்பாடுகளைப் பற்றி கவலைப்படாத சுட்டிப் பெண்கள். அவர்களை கட்டி மேய்ப்பதற்குள் அவருக்கு போதுமென்றாகிறது.

பயிற்சியின் போது ஒருநாள் அவர்கள் தாங்கள் இருக்கும் காட்டுப்பகுதியில் இரு ஜெர்மானிய நாஜி படைவீரர்களின் நடமாட்டத்தை அவதானிக்கின்றனர். ரஷிய படைக்கலன்களை அழிக்கவே இந்த ஊடுறுவல் என்று வாஸ்கோவ் கணிக்கிறார். ஒளிந்திருந்து கவனித்ததில் அவர்கள் இருவரல்ல; மொத்தம் 18 பேர் என்று தெரிகிறது. எப்படியாவது அவர்களை தடுத்து நிறுத்த திட்டமிடுகிறார். தங்களில் ஒருவரை மட்டும் உதவிக்கு படையை அழைத்து வர திருப்பி அனுப்பிவிட்டு, நாஜிக்கள் கடக்க நினைக்கும் ஓடைக்கு எதிராக மற்ற நான்கு பெண்களுடன் முகாமிட்டு, ஆட்கள் நடமாட்டம் அதிகம் இருப்பது போல சலசலப்புகளை ஏற்படுத்துகிறார். அதனைக் கண்ட நாஜிக்கள் பின்வாங்கி சலசலப்புகள் அடங்க காத்திருக்கின்றனர். இதற்கிடையில் தகவல் சொல்ல திரும்பிச் சென்ற பெண் சேற்றுக் குளத்தில் சிக்கி உயிரிழக்கிறாள்.


இதற்கும் மேல் கதைச்சொல்லவேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன். அதேதான். பேராண்மை படத்தின் கதையேதான். ஆனால் இது அதன் ரஷிய மூலப் படமாகிய “A zori zdes tikhie”. வழக்கமாக ஆங்கிலப் படங்களை சுடுவதுதான் நம் தமிழ் டைரக்டர்களின் வழக்கம். ஜனநாதன் ரஷ்யாவிலிருந்து உருவியிருக்கிறார். ஆனால், அவரின் இடதுசாரி பின்னணியை வைத்து பார்க்கும் போது இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஒரு பொதுவுடமைவாதி முதலாளித்துவ கடைச்சரக்கை நாடியிருந்தால்தான் ஆச்சரியம்.

பேராண்மையை அதன் பின்பாதியின் தெளிவான தமிழ் வசனங்களுக்காக ரசித்துப் பார்த்திருந்தேன். அவசியமில்லாத எந்த ஓர் இடத்திலும் நாயகன் ஆங்கிலம் கலந்து பேசியிருக்கமாட்டான். பேசினாலும் அது ஒரு உறுத்தலாக இல்லாமல் தவிர்க்க இயலாததாக இருக்கும். படமெங்கும் ஒரு தூவலாக காணப்படும் இடதுசாரி சிந்தனைகளும் கருத்துக்களும் இத்தகு லகுவான மொழி காரணமாக பாமரரையும் சென்றடைந்தது என்பதை அப்படம் குறித்து சக நண்பர்களுடன் நிகழ்ந்த சில உரையாடல்களின் போது கவனிக்க முடிந்தது.
குறிப்பாக “எதை கத்துக்கிட்டாலும் எதைப் படிச்சாலும் சர்வதேச அரசியலைப் படியுங்க. பொதுவுடமை அரசியலைவிட சிறந்தது வேற எதுவுமே இல்ல’ என்னும் வசனம் சிலரின் சிந்தனையையாவது தூண்டி, பொதுவுடமை என்றால் என்ன என்று அறிந்துகொள்ள அவர்களில் ஒரு சிலராவது முயல்வார்கள் என்று உறுதியாக நம்பலாம். அந்த ஒரு காரணத்திற்காக ஜனநாதனின் இந்த காப்பி-பேஸ்டையும்கூட மன்னிக்கலாம்.

-o0o-

தமிழில் இப்படி பிறர் மூளையை கடன் வாங்கி அதன்மேல் தன் லேபிளை ஒட்டிக்கொள்ளும் கலாச்சாரத்திற்கு நெடிய வரலாறு உண்டு. அதை ஒப்புக் கொள்ளும் நேர்மை பெரும்பாலானோருக்கு இருப்பதில்லை. கமல் பெரும்பாலும் இந்த மாதிரி வேலைகளை நிறைய செய்வார். உ.போ.ஒருவனின் பேட்டிகள், புரோமோக்கள் எதிலுமே அவர் இது ஹிந்தியின் ரீமேக் என்று சொல்லிக் கொள்ளவே இல்லை. தன்னுடைய சுய சிந்தனையில் உதித்திட்ட கதைக் கரு போலவே காட்டிக் கொண்டார். (உடனே கமல் ரசிகர்கள் மல்லுக்கு நிற்க வேண்டாம். இதனை நிரூபிக்கும் வீடியோ ஆதாரங்கள் யூடியூபில் நிறைய உண்டு. மேலும் தமிழில் எந்த ஒரு சினிமா நுண்கலையைப் பற்றி பேச நேர்ந்தாலும் கமலை மேற்கோள் காட்ட நேர்வது எந்த விமர்சகனுக்கும் தவிர்க்க இயலாதது. தமிழ் சினிமாவில் கமல் அடைந்துள்ள இடம் அத்தகையது). இது அவரின் மற்ற சில படங்களுக்கும் பொருந்தும்.

சில மாதங்களுக்கு முன்பு ”Planes, Trains and Automobiles” என்னும் ஆங்கிலப்படம் பார்த்தேன். அன்பே சிவம் படத்தின் ஒரிஜினல் அதுதான். படம் முடிந்து சில நிமிடங்கள் ஆகியும்கூட என்னுடைய தன்வயப்பட்ட நிலையில் இருந்து என்னால் மீளமுடியவில்லை. வலுக்கட்டாயமாக என் மனைவியை அழைத்து நிறுத்தி அப்படம் குறித்து பேசிக் கொண்டிருந்தேன். John candy-இன் மிகையில்லா நடிப்பு மற்றும் கதையை காட்சிப்படுத்திய விதம் படத்துடன் ஒன்றிப் போகச் செய்தது. கதையின் ஹைலைட்டான அம்சமே நாயகர்கள் இருவருக்கும் இடையில் படம் நெடுக தொடரும் முரண்பாடுகளும் வாக்குவாதங்களும்தான். அத்துடன் நூலிழை போல் திரைக்கதை முழுவதும் பின்னிவரும் நகைச்சுவை படத்தை நொடிப் பொழுதும் தொய்வில்லாமல் எடுத்துச் செல்லும்.

ஆனால் அதையே தமிழில் எடுக்கும் போது கதாநாயகனுக்கு காதலி, டூயட், பழிவாங்கல், காதலியின் மணவாளன் தனக்கு நண்பன் என்னும் அனைத்து டிபிகல் தமிழ் மசாலாத்தனங்களும் தேவைப்படுகின்றன. இது மாதிரி உள்ளூர் சூழலுக்கு ஏற்ப செய்யப்படும் localization மூலக்கதையோடு ஒட்டாமல் போய் கருவை சிதைக்கின்றன. இதற்கு பதிலாக, அங்கே கிறிஸ்துமஸ் என்றால் இங்கே தீபாவளி என்பது போன்ற பொருத்தமான - கதையை சிதைக்காத மாறுதல்களை மட்டும் செய்துவிட்டு, மூலக்கதையை அப்படியே இங்கேயும் சொல்லிவிட்டு போகலாம். ஆனால் அதற்கும் ஒரு வித்வத்வம் தேவைப்படுகிறது. இல்லையென்றால் அமீரின் ’யோகி’ போல சொதப்பல் ஆகிவிடும்.

பரவலாக பற்பல குறைகள் இருந்தும் இங்கே பல ரீமேக்குகள் பெரிய வரவேற்பையும் போற்றுதலையும் பெறுகின்றன. நல்ல கதைகள் மீது ரசிகர்களுக்கு இருக்கும் ஆர்வத்தையும், தீராத தேடலையும் இதன் மூலம் அழுத்தமாக உணரமுடிகிறது. எனினும், திறமை இருந்தும் தற்காலத்தின் நுகர்வு கலாச்சாரச் சூழலில் சொந்த சரக்குக்காக மூளையை கசக்கும் பிரயத்தனங்களில் பெரும்பாலும் யாரும் ஈடுபடுவதில்லை. அதற்கு அவர்களின் daily callsheetகலாச்சாரமும் ஒத்துவருவதில்லை. ஒருநாள் வீட்டில் இருந்தாலுமேகூட அந்த ஒருநாளின் கால்ஷீட் சம்பாத்தியமாகிய சில லட்சங்கள் இழப்பு கணக்கில் சேர்க்கப்படுகின்றன. கணக்கு வழக்குகள் இங்ஙனம் கரன்சியை அடியொற்றி தொடரும்வரை பெரிய கலைப் படைப்புகளையோ காவியங்களையோ எதிர்பார்க்கமுடியாது. களவாடிய கதையில் லேபிள் ஒட்டும் கலாச்சாரம்தான் குறையாமல் தொடரும்.

நமது விமர்சனங்கள் ஒரு பக்கம் தொடர்ந்தாலும், தமிழ்ச்சாயம் பூசப்பட்டு விற்கப்படும் சினிமா நல்ல சினிமாவாக இருக்கும்வரை அதில் நமக்கும் பிரச்சினையில்லை. இதுவும் இல்லையென்றால் குப்பனும் சுப்பனும் ஹீரோயிச ஜிகினா ஜிகிடிகளையே சினிமாவாக பார்க்க நேரும் அவலம் காலமெல்லாம் தொடரக்கூடும். அந்த வகையில் அன்பே சிவம், பேராண்மை வகையறாக்கள் தங்களுக்குரிய இடத்தை தமிழ் சினிமாவில் நிர்ணயித்துக் கொண்டுள்ளன.
மேலும்...