இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் மீட்டெடுத்த காமிக்ஸ் நினைவுகள்

Posted: Saturday, May 8, 2010 | Posted by no-nononsense | Labels: ,
இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் படத்தை இன்று மாட்னி ஷோ பார்த்தேன்.

படம் பற்றி நான் படித்தனவற்றுள் இந்த பதிவரின் விமர்சனம் (http://digs.by/boFQGX ) எனக்கு வரிக்கு வரி உடன்பாடாக இருப்பதால், தனியாக நானும் ஒன்றை எழுத வேண்டிய அவசியமில்லை என்று விட்டு விடுகிறேன்.

இருந்தாலும் சுருக்கமாக: சிம்புதேவனிடம் அதிகம் எதிர்பார்த்து செல்பவர்களுக்கும், மெக்கனாஸ் கோல்டு புதையல் வேட்டை வகையறாக்களை ஏற்கெனவே பார்த்து விட்டவர்களுக்கும் இப்படம் சலிப்பை தரலாம். மற்றவர்களுக்கு தமிழில் இது ஒரு புது அனுபவமாக இருக்கும். இம்சை அரசன் அளவிற்கு நான் ஸ்டாப்பாக இல்லையெனினும் அவ்வப்போது சிரிப்புக்கு உத்தரவாதம் உண்டு.

*

படம் பார்க்கும்போது சிறு வயதில் படித்த கௌபாய் காமிக்ஸ்களின் கதையோட்டமும் காட்சிகளும் கண்முன் வந்து போனபடி இருந்தன. கௌபாய் கதாநாயகர்களில் டெக்ஸ் வில்லரின் பரம ரசிகன் நான். இப்படம் பார்த்தது முதல் அவருடைய ஒரு புத்தகத்தையாவது மீள்வாசிப்பு செய்ய ஆர்வமாக உள்ளது. (அவருடைய ’தலை வாங்கி குரங்கு’ எனும் புத்தகம் ஒரு கிளாஸிக்!)

ஆனால் தற்சமயம் கைவசம் காமிக்ஸ் என்று ஒன்று கூட இல்லை. ஒரு காலத்தில் குறைந்தது ஒரு நூறு புத்தகங்கள் இருந்தன. எல்லாவற்றையும் முறையாக பராமரிக்க இயலாமல் செல்லரிக்க விட்டு விட்டு வருத்தப்பட்டு கொண்டிருக்கிறேன்.

நாமக்கல்லில் காமிக்ஸ்களை ஒரு பொக்கிஷமாக பாதுகாத்து வரும் இரண்டு இளைஞர்களை நான் அறிவேன். விலை கொடுத்து வாங்க முன்வந்தாலும் விற்க தயாராக இல்லாத, காமிக்ஸ்களுடன் ஓர் அத்யந்த ஈடுபாடு கொண்டவர்களாக அவர்கள் இருந்து வருகின்றனர். எங்கேயாவது சந்திக்க நேரும்போது எங்கள் பேச்சின் பெரும்பாலான நேரத்தை ஆர்ச்சியும், இரும்புக் கை மாயாவியும், மந்திரவாதி மாண்டிரேக்கும், ஸ்பைடர் மேனும், மாடஸ்டி பிளைஸியும், லக்கி லுக்கும் எடுத்துக் கொள்வார்கள். அப்படி ஒரு நாள் குளக்கரை திடலில் மாலையில் பேச ஆரம்பித்து வந்த வேலையை மறந்து முன்னிரவு வரை அங்கேயே பேசியபடி இருந்து விட்டேன்.

இன்றும் பல காமிக்ஸ்கள் புத்தகங்கள் வருகின்றன. அவற்றில் பழைய லயன், முத்து காமிக்ஸ்களும் உண்டு. ஆனால் எல்லாம் லோக்கல் கேரிகேச்சர்களாக இருக்கின்றன. பழைய மேற்கத்திய காமிக்ஸ்களின் தரமும் சுவாரஸ்யமும் மருந்துக்கும் இவற்றில் இல்லை.

பழைய காமிக்ஸ்களை இப்போது மீண்டும் திரட்ட ஆரம்பித்திருக்கிறேன். அந்த இளைஞர்களிடமும் ’எதிர்காலத்தில் என் குழந்தை படிப்பதற்காக அவைகள் தேவைப்படும். எனவே என்னை கேட்காமல் யாருக்கும் கொடுத்து விட வேண்டாம்’ என்று வேண்டுகோள் வைத்திருக்கிறேன். நாம் சுவைத்த ரசமான வாசக அனுபவங்கள் எல்லாம் நம்முடனே முடிந்து விடக்கூடாது. அவற்றை நம் குழந்தைகளுக்கும் அறிமுகப்படுத்த வேண்டும். அவற்றின் நீட்சி நம் எல்லா கலாரசனைகளிலும் இருப்பது மேலும் சிறப்பு.

சிம்புதேவனின் படம் இன்று என் சிந்தனையை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்று விட்டது.

0 comments:

Post a Comment