கைபோன போக்கில் (4)

Posted: Friday, November 19, 2010 | Posted by no-nononsense | Labels: ,
தினமும் ஒரு எழுத்துப் பயிற்சியாக ஒரு மணி நேரம் எதையாவது கைபோன போக்கில் கிறுக்கித் தள்ள வேண்டும் என்று எண்ணிதான் இந்த தொடரை ஆரம்பித்தேன். ஒரு சில நாட்கள் கூட தொடர்ந்து எழுத முடியவில்லை. லௌகீகம் உள்ளிழுத்துக் கொண்டது. இன்றிலிருந்தாவது குறைந்தது ஒரு வாரத்திற்காகவது முடிகிறதா என்று பார்ப்போம்.

**

சற்று முன்பு லண்டனில் Mcjob செய்து கொண்டிருந்த நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தேன். 3 மாதமாக வேலையில்லாமல் இருக்கிறாராம். ஸ்காட்லாந்தில் ரெண்டால் நம்பர் பிஸினஸ் ஒன்றுக்கு திட்டம் தீட்டிக் கொண்டிருப்பதாகவும், இன்னும் சில நாட்களில் அங்கேயே போய்விடப் போவதாகவும் சொல்லிக் கொண்டிருந்தார். ரெண்டாம் நம்பர் பிஸினஸ் என்பதை வங்கியில் கிரெடிட் ரேட்டிங்கிற்காக செய்யப்படும் கோல்மால் வேலை என்று கொஞ்சம் எளிமைப்படுத்திச் சொல்லலாம் என்று நினைக்கிறேன். ’இவ்வளவு தூரம் வந்து வெட்டியா பொழுது போக்கிக்கிட்டு இருக்கறதுக்கு, அந்த பிஸினஸையும் செஞ்சிதான் பார்ப்போமே, மாட்டினா ஊருக்கு அனுப்பிடுவான்.. அவ்வளவு தானே’ என்கிறார். லண்டனில் உடலுழைப்பு வேலைக்காக சென்றுள்ள தமிழர்களின் நிலை இழிநிலைக்கும் சற்றும் மேல் என்பதை தவிர சொல்லிக்கொள்ளும்படியா இல்லை. இருந்தும் இன்னும் லண்டன் கனவில் சிலர் நல்ல புரோக்கரை தேடிக் கொண்டிருப்பதைக் காண்கிறேன். இது அவர்களின் இழிநிலை அன்று. இத்தேசத்தின் இழிநிலை. மண்ணின் மைந்தர்களுக்கு இன்னும் நம்மால் வேலைவாய்ப்பில் உத்தரவாதம் அமைத்துக் கொடுக்க முடியவில்லை. ஆனால் லட்சம் கோடி ஊழல் கணக்கில் கூட்டல் கழித்தல் செய்து கொண்டிருக்கிறோம். நல்ல தேசம்! நல்ல வாக்காளர்கள்!

**




ரூ. 1200 ரூபாய்க்கு FORME என்னும் ஒரு dual sim மொபைல் வாங்கியுள்ளேன். 2GB மெமரி கார்டுடன் ரூ. 1400-க்கு விலை அடக்கம் ஆனது. கைக்கு கச்சிதமாக உபயோகிக்க சுலபமாக உள்ளார்ந்த வசதிகளில் வளமாக உள்ள அது என்னை கவர்ந்து விட்டது. மலிவு விலையில் மொபைல் வாங்க விரும்புவோருக்கு என் சிபாரிசு அது. அப்புறம் இது சீன தயாரிப்பு இல்லை என்பது கூடுதல் தகவல். சென்னையில்தான் தயாரிக்கிறார்கள் என்றது இதன் வெப்சைட். சைனா மொபைலில் அதிகம் விற்பனையாகும் Gfive-ன் OS எனக்கும் பிடிக்கவில்லை.

0 comments:

Post a Comment