கைபோன போக்கில் (3)

Posted: Thursday, November 11, 2010 | Posted by no-nononsense | Labels:
ஐந்து வருடங்களாக வைத்திருந்த செல்போன் எண்ணை என் அசிரத்தையால் கோட்டை விட்டு விட்டேன் என்பது இன்றைய நாளின் சோகமான சங்கதி. திருச்சியிலிருந்து கம்பெனி மாறி தற்போது பணியாற்றும் கம்பெனியில் சேர்ந்ததும் இங்கே ஒரு சிம் பயன்படுத்தக் கொடுத்தார்கள். ஒரு மொபைல் போனே எனக்கெல்லாம் எதேஷ்டம் என்பதால் இன்னொன்றை கழற்றி வைத்து விட்டேன். இருந்தாலும் எண்ணை விட்டு விடக் கூடாதேயென அவ்வபோது இயக்கி பார்த்துவிட்டு வைத்து விடுவேன். சில மாதங்களாக அதை செய்ய மறந்து போனதில் நம்பர் கையை விட்டு போய், தற்சமயம் அதை வேறு ஒரு சகமனிதர் வாங்கி விட்டதாக அறிந்து கொண்டேன். அவர் யாராக இருந்தாலும் குறைவாக பேசி நிறைவாக வாழக் கடவது!


அதனால் நண்பர்களே என்னுடைய பழைய எண்ணை (*******) இன்னும் யாரேனும் வைத்துக் கொண்டிருந்தால் அழித்து விடவும்.

பொதுவாக நான் எண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அதிலும் குறிப்பாக நியூமராலஜி பேத்தல்களில் எல்லாம் துளியும் நம்பிக்கையில்லை. ஆனாலும் சில எண்கள் நம் வாழ்வில் கலந்து நினைவுக்கு சுலபமாகி விடுகின்றன. அவற்றை இழக்கும்போது ஏற்படும் சின்ன வருத்தம் மட்டுமே இது.

*

‘வ குவாட்டர் கட்டிங்’ படம் பற்றி படிக்கும் ரிவியூ எல்லாமே படுமட்டாக படத்தை திட்டுகின்றன. இருந்தாலும் விடப் போவதில்லை. இந்த வாரயிறுதியில் பார்த்தே தீருவது என்று முடிவு செய்து விட்டேன். இன்றுதான் கவனித்தேன் என் அலுவலகத்திற்கு எதிரேயுள்ள தியேட்டரிலேயே அப்படம் ஓடுகிறது என்பதை. கரூர் வந்த பிறகு இதுவரை ஒரு படம் கூட பார்த்ததில்லை என்னும் குறை இந்த படத்தால் தீரலாம். நல்ல படம் என்று நண்பர்கள் சிபாரிசு செய்து எத்தனையோ மரணமொக்கைகளையே பார்த்து வெந்தாகி விட்டது. மொக்கை என்று தெரிந்தே ஒரு படம் பார்த்துதான் வருவோமே (இது எனக்கு நானேயான சமாதானம்!). இரவு நேர சென்னைதான் கதைக்களம் என்பதுதான் என்னை ஈர்க்கிறது.

இன்று எதிரேயுள்ள தியேட்டரில் இன்னொரு விஷயத்தையும் கவனித்தேன். அது - மிர்ச்சி சிவாவுக்கு வைக்கப்பட்டிருக்கும் பெரிய ரசிகர் மன்ற தட்டியை. ஆனாலும் ஆச்சரியமில்லை. சிவாவின் துடுக்கான பேச்சுக்கு நிறைய ரசிகர்கள் இருப்பது புரிந்துகொள்ள கூடியதே. இல்லையென்றால் RJ ஆக இருந்திருக்க முடியுமா.

*

இரண்டு நாள்களாக மழை சிறிதும் பெரிதுமாக ஊரை நனைத்துக் கொண்டிருக்கிறது. இந்தமுறை மழைக்காலம் பருவத்தே பொழிந்து கொண்டிருப்பதாக தோன்றுகிறது. எல்லா மழையும் புயலும் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் பெய்து முடித்து சென்னையை சுத்தப்படுத்தி வைத்திருக்கட்டும். மாதக் கடைசியில் சில பல நாள்கள் அங்கே ஜாகை போட நாளது தேதி வரை திட்டத்தில் இருக்கிறேன். அதற்கு பங்கம் வராமல் இருந்தால் சரி.

*


இந்த தீபாவளிக்கு டிவிப் பெட்டியே சரணாகதியென்றானவர்களுக்கு கமல், ரஜினி என்று நல்ல நிகழ்ச்சி விருந்து. நான் கமல் கலந்துகொண்ட காஃபி வித் அனு மட்டும் பார்த்தேன். அதில் இறுதியாக கமல் இரு வெண்பாக்களை கூறுவார். இரண்டில் ஒன்றை முழுமையாக எழுத்தாக்க முடிந்துள்ளது. நானல்ல இணைத்தில் ஒருவர் செய்திருந்தார். அதை இங்கேயும் பகிர்ந்து கொள்கிறேன்.

ஆத்தமா னார்(அ)யலார் பள்ளிப் பறித்தெடுத்து
மூத்தவர்யா மெனக்கூறி அமர்ந்திருக்கும் சூத்திரத்தைச்
சொல்லின்றிக் கூறிவிடும் பழங்கோயில் கேட்டுப்பார்
கல்லும்சொல் லாதோ கதை.

‘ஆத்தமா னார் அயலவர் கூடி’ என்பதை தான் திருவாசகத்தில் இருந்து எடுத்தாண்டதாகச் சொன்னார். இந்த ‘கல்லும்சொல் லாதோ கதை’ போல ஒன்றை எழுதிப் பார்க்க முயற்சிக்கிறேன். எனக்கே திருப்தியானால் பகிர்ந்து கொள்கிறேன்.

அடிப்படையான விதிமுறைகளை தெரிந்து கொண்டு கொஞ்சம் மொழியில் சொல்லாட்சியையும் ஏற்படுத்திக் கொண்டால் வெண்பா எழுதுவது சுலபமே. (இளையராஜா வெண்பாவில் வல்லவரானது இப்படி கற்றுக்கொண்டுதான்).

முன்பு Forum hub காலத்தில் சிலவற்றை கிறுக்கி பார்த்து தளை தட்டியதால் விட்டு விட்டேன். இந்த நிகழ்ச்சி மீண்டும் என் ஆர்வத்திற்கு தூபம் போட்டிருக்கிறது.

நிகழ்ச்சி முடியும்போது கமல் கடைசியாக ஒரு கவிதை படித்தார். வார்த்தைகளிலும் பொருளிலும் சம வீரியமாக தோன்றிய அதை எழுத்தாக்கி வாசித்து பார்க்க விரும்புகிறேன். நேரம் இருக்கும்போது செய்யவேண்டும்.

*

கமல் நிகழ்ச்சியில் இன்னொன்றும் ஞாபகம் வருகிறது. அனுவிடம் ஆன்மிகம் பற்றி பேசும்போது ‘அதெல்லாம் செக்ஸ் போல ரொம்ப பர்சனல்; ஃபர்ட்ஸ்ட் நைட் முடிஞ்சி வந்தவன் கிட்ட எப்படியிருந்ததுன்னு கேட்க முடியுமா’ என்ற பொருளில் சரளமாக உரையாடிக் கொண்டிருந்தார். அனு மகள் முறை என்பதற்காகவெல்லாம் வார்த்தைகளை வடிகட்டிக் கொண்டிருக்கவில்லை என்பதில் எனக்கு கொஞ்சம் ஆச்சரியமே!

0 comments:

Post a Comment