விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கைதணி விப்பான் - விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாந் தன்மையினா
கண்ணிற் பணிமின் கனிந்து.
கபில நாய நாயனார் எழுதிய “மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை” பாசுர தொகுப்பில் இடம்பெற்ற வெண்பா இது. சினிமாவில் சீர்காழி கோவிந்தராஜன் குரலில் ஒலித்து எல்லோர் மனதிலும் இடம்பிடித்து விட்டது.
இப்பாடல் எங்கள் ஊர்ப்பகுதியில் ஒவ்வொருவரின் உணர்வலைகளையும் வருடிச் செல்லக்கூடிய ஒன்று என்று சொல்லலாம். காரணம், பால்யம் முதல் இப்பாடலைத்தான் அந்திப் பொழுதுக்கு ஒரு சமிக்ஞையாக கொண்டு வாழ்ந்திருக்கிறோம். வீட்டின் அருகேயுள்ள டூரிங் டாக்கீஸில் அனுதினமும் ஒலித்து, அந்த தியேட்டருடன் சேர்ந்து அடங்கிவிட்ட ஒரு பாடல் இது.
தினமும் ஷோ ஆரம்பிக்கவுள்ளதை அறிவிக்கும் முகமாக ஒலிபரப்பபடும் பாடல் வரிசையின் முதல் பாடலாக இப்பாடல் இருக்கும். உச்ச ஸ்தாயில் ஓங்கி ஒலிக்கத் துவங்கும் சீர்காழியின் குரல் ஒரு மனவெழுச்சியை அப்போதெல்லாம் கொடுத்திருக்கிறது. பாடலின் பொருளெல்லாம் அப்போதும் இப்போதும் பொருட்டல்ல. ஆனால் அந்த குரலும், இசையும்.. !
இதனை செவியுறும் போதெல்லாம் எனக்கு அரை டிராயருடன் அரக்க பரக்க டியூசனுக்கு ஓடியது(மாலை 6 மணி, ஃபர்ஸ்ட் ஷோ), வீட்டின் முத்தத்தில் கட்டிலில் படுத்துக்கொண்டு தூங்குவதாக அம்மாவிடம் பாவனை செய்து கொண்டிருந்தது(இரவு 10 மணி, செகண்ட் ஷோ) போன்ற நினைவுகளெல்லாம் வந்து தாலாட்டும்.
டூரிங் டாக்கீஸ் பற்றிய ஞாபக முடிச்சுகளை ஒருநாள் அவிழ்த்து ஆழ்ந்து போகவேண்டும். இன்றைய டிஜிட்டல் சினிமா அனுபவங்கள் சௌகரியமானவை என்றால் அவைகளுக்கு முற்றிலும் மாறுபட்ட அக்கால டாக்கீஸ் பட அனுபவங்கள் சிலாக்கியமானவை.
0 comments:
Post a Comment