காதலிக்க நேரமில்லையும் நகைச்சுவைப் படங்களும்

Posted: Saturday, August 14, 2010 | Posted by no-nononsense | Labels:
ஓஹோ புரடக்சன்ஸ் செல்லப்பாவை நுணுக்கமாக அவதானித்துக் கொண்டிருக்கிறேன் (ஆதித்யா டிவி). நாகேஷ் நடிப்பில் உச்சமாக நான் கருதும் மூன்று வேடங்களில் இதுவும் ஒன்று. மற்ற இரண்டு: அன்பே வா, தில்லான மோகனாம்பாள்.

காதலிக்க நேரமில்லை, பாமா விஜயம் - இரண்டு சிறந்த இயக்குநர்களின் இரண்டு சிறந்த காமெடி படங்கள்; அமரத்துவமான படைப்புகள். அதற்கு பிறகு அவர்களாலேயே அப்படி ஒரு படத்தை இயக்கமுடியவில்லை. ஸ்ரீதரின் பிற்கால ஊட்டி வரை உறவும், கலாட்டா கல்யாணமும் சுமார் ரகம் தான்.

தமிழ் சினிமாவின் 90-க்கு முந்தைய காமெடி பட முயற்சிகள் பற்றி மனம் தொடர்ந்து அலசிக் கொண்டிருக்கிறது.

சபாபதி, பலேபாண்டியா, இன்று போய் நாளை வா, காசேதான் கடவுளடா, பாமா விஜயம், காதலிக்க நேரமில்லை, தில்லு முல்லு, மணல் கயிறு, கதாநாயகன் ஆகியவற்றை ஒரு கணநேர யோசனையில் பட்டியலிட முடிகிறது. அனைத்தும் பார்க்க சலிக்காத படங்கள்.

காதலிக்க நேரமில்லையின் இன்னொரு பெரும்பலம் பாலைய்யா! நாகேஷ் சொல்லும் திகில் கதைக்கு பாலைய்யா காட்டும் முகபாவனைகள் கிளாஸிக்! திருவிளையாடலின் ஹேமநாத பாகவதரையும், தில்லான மோகனாம்பாளின் தவில் வித்வானையும் நடிப்பில் எட்டி விட இன்று வரை ஒரு கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் வரவில்லை. பிரகாஷ்ராஜ் ஓரளவு நெருங்குகிறார்.

பாலைய்யாவை குறிப்பிடும்போது சட்டென்று நினைவுக்கு வரும் இன்னொரு கேரக்டர் ஆர்ட்டிஸ்ட், எஸ்.வி.ரங்காராவ்! ரங்காராவ் தன் ஐம்பது வயதுகளிலேயே இறந்து விட்டவர். ஆனால் ஒரு மூன்று தசாம்சங்களாக முதிய பாத்திரங்களையே செய்து வந்தவர். சர்வர் சுந்தரமில் அவர் செய்த டைரக்டர் ரோல் அவருடைய பன்முக நடிப்புத் திறமையை பறைசாற்றிய ஒன்று.

டிவியில் காதலிக்க நேரமில்லை தொடர்ந்து கொண்டிருக்கிறது. நிறைய பழைய படங்களை பற்றிய நினைவலைகள் மனதில் அலை மோதுகின்றன. ஆனால் தனியே அவற்றை பற்றி பேசிக் கொண்டிருக்க போரடிக்கிறது. வீட்டிலும் சரி, என் நட்பு வட்டத்திலும் சரி, இந்த விஷயத்தில் என்னை தனியனாக உணர்கிறேன்.

0 comments:

Post a Comment