ஸ்வர்ணலதா அஞ்சலி

Posted: Saturday, August 21, 2010 | Posted by no-nononsense | Labels:
ஸ்வர்ணலதாவின் தொகுப்புகளை தேடியெடுத்து இசை மழையில் நனைந்து கொண்டிருக்கிறேன். வேறு நேரங்களில் கேட்டதை விட இப்போது குரலின் பாவங்களை நிதானித்து கவனித்து ரசிக்க முடிவது, இனி இந்த குரலை புதிதாக கேட்க முடியாது என்பதாலா, அல்லது அவரின் மரணம் ஏற்படுத்திய தாக்கத்தினாலா என்பது தெரியவில்லை. இரண்டும் இருக்கலாம்.


ஜானகியம்மா 50 வருடங்களும், சித்ரா 30 வருடங்களுமான ஒரு நீண்ட கேரியரை சினிமா பின்னணி பாடல்களில் கொண்டவர்கள். மாறாக ஸ்வர்ணலதா ஒரு பத்தாண்டு காலம் மட்டுமே பிரபல பாடகியாக இருந்தவர். மேலும் அந்த பத்தாண்டுகளும் கூட மேற்சொன்ன இரு நட்சத்திர பாடகிகளின் பீக் பீரியட் என்பதால், அவர்களின் புகழ் வெளிச்சங்களுக்கு இடையே ஸ்வர்ணலதாவின் புகழ் என்பது பெரிதாக பிரபலமாகாத ஒன்றாகவே இருந்துவிட்டது. 

ஆனால் கொண்டாடப்படவில்லையே தவிர எப்போதும் நல்ல பாடகியாகவே அறியப்பட்டிருக்கிறார். கொண்டாடப்படும் நிலையை அடையும்படியான ஒரு நீண்ட கேரியரை அமைத்துக்கொள்ள முடியாமல் சுகவீனம் அடைந்து விட்டார் என்று நான் நினைக்கிறேன்.

தமிழ் சினிமா பின்னணி பாடகிகள் என்று எத்தனையோ பேர் வந்து போகிறார்கள். அவர்களுக்கு இடையே குறைந்த பாடல்களை பாடிய ஜென்சிக்கு என்று என்றும் ஓர் இடம் உண்டு. என்னவானார் இவர் என்று அவரைப்பற்றி கேட்காத திரைஇசை ரசிகர்கள் குறைவு. தன்னுடைய பாடல்களின் மூலம் அப்படி ஓர் இடத்தை அவர் அடைந்திருக்கிறார். அதைவிட ஒரு மேலான ஓர் இடம் என்றும் ஸ்வர்ணலதாவுக்கு உண்டு. அந்தளவு லோ பிட்ச், ஹை பிட்ச் இரண்டிலுமே அற்புதமான பாடல்களை கொடுத்திருக்கிறார். குவியலான பாடகர்களுக்கு இடையே திறமையுள்ள சிலரால் மட்டுமே இப்படி தனித்தன்மையை அடையமுடியும். 

சில பாடகிகளின் பாடல்களை ரசிக்கமுடிவதை போல, அவர்கள் பாடுவதையும் ரசிக்கமுடியும். ஸ்வர்ணலதாவை பொறுத்தவரை அவர் பாடுவது ரசிக்க கூடியதாக இருக்காது. பாடும்போது ஒரு கையால் காதை அடைத்துக்கொண்டு முகபாவங்களில் மிகுந்த பிரயாசை காட்டுவார். ஏன் இவ்வளவு சிரமப்படுத்திக் கொள்கிறார் என்று தோன்றும். 

ஷாஜி, ஸ்வர்ணலதா மறைந்த செய்தி வெளியானதும் உடனே ஜானகிக்கு பிறகு குரலில் பாவங்களை சிறப்பாக வெளிப்படுத்திய பாடகி மறைந்து விட்டார் என்று எழுதியிருந்தார். விமர்சகர்களின் கருத்து வெகுஜன ரசனையுடன் ஒத்துபோவது இதுபோல் எப்போதாவது அரிதாகத்தான். 

0 comments:

Post a Comment