ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்

Posted: Friday, August 27, 2010 | Posted by no-nononsense | Labels:

அவர் ஊரின் பிரபலமானதொரு அரசியல்வாதி. முக்கிய கட்சியின் மாவட்ட செயலாளர். சிவப்பு விளக்கைச் சுழல விட்டுச் செல்லும்படியான முக்கிய அரசு பதவிகளை வகித்தவர். உள்ளூரில் அவருக்கு போட்டியென்று ஒருவரும் கிடையாது. அந்தளவு ஆள்பலமும் செல்வாக்கும் கொண்டவர். அவரை காண காத்திருப்போர் பட்டியலைக் கண்டாலே போதும் அவரின் ‘பவர்’ தானே விளங்கும்.

இதெல்லாம் பத்தாண்டுகளுக்கு முந்தைய கதை.

நேற்று உள்ளூரின் பிரபலமான ஒரு திருமணத்திற்கு போயிருந்தேன். வண்டியை நிறுத்தி விட்டு, முன்வாசலில் வணக்கம் போட்டபடி இணைந்து செல்ல தெரிந்தவர் யாராவது வருகிறார்களா என்று நோட்டம் விட்டேன். தாட்டியான உடம்புடன் நெடிய ஓர் உருவம் ஓரமாக நின்று கொண்டிருந்தது. அவரிடம் நிற்பாரோ, பேசுவாரோ யாருமில்லை. அவரும் யாருடைய முகத்தையும் ஏறிட்டு பார்க்கிற மாதிரி தெரியவில்லை. ஏதோ யோசனையாக நின்றவர், என்னுடன் இணைந்து நடந்து வணக்கம் போட்டு உள்ளே வந்தார். சிலருடன் முகமன்கள் பரிமாறிக்கொள்ளப்பட்ட பிறகு கூட்டத்துடன் ஒரு சேரில் சிறிது நேரம் உட்கார்ந்து விட்டு உணவுக்கூடம் வந்தார். இடம் கிடைக்கவில்லை. அவரை சிறப்பாக கவனிப்போரும் யாருமில்லை. அதற்குமேல் நான் அவரை கண்ணால் பின் தொடராமல் பந்திக்கு முந்திக்கொள்ள முன்சென்று விட்டேன்.

இவரைப்பற்றி சில வருடங்களாகவே இப்படி ‘நொடிஞ்ஞிபோயிட்டார்’ செய்திகள் காதை வந்தடைந்தவண்ணம் இருந்தன. இதற்கு அர்த்தம் பணமற்று போய்விட்டார் என்பதல்ல. உச்சியில் இருந்தபோது அனைத்து தந்திரோபாயங்களையும் கையாண்டு நன்றாக சேர்த்த பணம் இன்னும் நிறையவே இருக்கிறது. உட்கார்ந்து சாப்பிட்டாலும் மூன்று தலைமுறைகள் ஆகும் அழிக்க. இங்கே அதன் அர்த்தம் ஆள் ஏவல் அதிகாரமற்று போய்விட்டார் என்பது. ஒரு பதவி சுக ருசி கண்ட அரசியல்வாதியை பொருத்தவரை இது முந்தைய துன்பங்களை விட கொடுமையானது. 

சில நாட்கள் முன்பு அவருடைய செல்ல மகனை என்னுடன் பஸ்ஸில் கடைசி சீட்டில் கண்டபோதே துணுக்குற்றேன். எங்களுக்குள் நல்ல அறிமுகம் உண்டு. இருவரும் சேர்ந்து நிறைய கிரிக்கெட் விளையாடி இருக்கிறோம். பேசிக் களித்திருக்கிறோம். ஆனால் ஏனோ அவன் என் பக்கம் திரும்பவேயில்லை. நானும் வழியச் சென்று பேச முயலவில்லை.

இழந்த பழைய அதிகாரம், ஆடம்பரம், ஏகபோகங்கள் மனிதர்களை மனதளவில் தாழ்வுமனப்பான்மை கொள்ளச் செய்கின்றன. எல்லார் கண்களும் தங்களையே பார்ப்பதாக குறுகுறுக்கிறார்கள். யாராவது அதைப்பற்றி கேட்டு விடுவார்களோ என்று ஒரு பதற்றம் அவர்களை எப்போதும் பீடித்தபடியே உள்ளது. இதற்கெல்லாம் ஒரே நிவாரணம் மீண்டும் இழந்தவைகளை திரும்பபெறுவதுதான். ஆனால் அதற்கான மனத்திண்மையை இழந்துவிட்டிருந்தால், தன்னைத்தானே சமூகப் பிரஷ்டம் செய்துகொண்டு தனிமையை நாடி பழைய நினைவுகளை அசை போட்டபடி காலம்தள்ள வேண்டியதுதான்.

ஆனால் இதெல்லாம் பத்தாண்டுகளுக்கு முன்பு கற்பனைகூட செய்து பார்த்திர முடியாத விஷயம். இன்று காந்திசெல்வனை பார்த்து இன்னும் பத்து வருசத்துல நீங்க நாதியத்து போகப் போறீங்க என்றால் அது நமக்கே எப்படி அபத்தமாக ஒலிக்குமோ, அப்படித்தான் இவரைப்பற்றிய கூற்றும் அப்போது இருந்திருக்கும். ஆனால் நடந்திருக்கிறதே!

ஏன் நடந்தது என்பதெல்லாம் அரசியல். கிட்டத்தட்ட அமைதிப்படை மணிவண்ணன் கதை என்று சொல்லலாம். அதில் மணிவண்ணன் அடிபொடியாக மாறிக்கொண்டார். யதார்த்தத்தில் இவரால் அப்படி மாறமுடியவில்லை. வேறு கட்சிகள் தாவி பார்த்துவிட்டு, போணியாகாமல் சுத்தமாக ஒதுங்கிக் கொண்டார். 

வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும். ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும் என்பது இதுதானோ!!

0 comments:

Post a Comment