இன்றைய இரவுக்கு ‘அண்ணா தம்பிக்கு எழுதிய கடிதங்கள்’ நூலை வாசித்துக் கொண்டிருக்கிறேன். காங்கிரஸ் விருட்சத்தை தன் நாவன்மையால், எழுத்தாற்றல் திறத்தால் எப்படி மெல்லென அசைத்து வீழ்த்தினார் என்பதை நுட்பமாக அவதானிக்கிறேன்.
எங்கே தொடங்கினாலும் திராவிட நாட்டில் வந்து முடிக்கிறார். தமிழர்களின் எல்லா பிரச்னைகளுக்கும் ஒரே தீர்வு திராவிடம் அடைவதுதான் என்று முழங்குகிறார். ’வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது’, ‘சோறு கேட்டால் இதோ பாரு நேரு என்கிறார் காங்கிராஸார்’ என்று இடித்துரைக்கிறார். எழுத்து நடை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுகிறது. அந்த நாட்களில் நாம் இருக்க நேர்ந்திருந்தாலும் அண்ணாவின் தம்பிகளாகியிருப்போம் என்பது எனக்கு சந்தேகமில்லை.
ஆனால், இது எல்லாவற்றையும் பிற்காலத்தில் அவரே கைவிட்டு விட்டார் என்பதுதான் இதில் கவனிக்க வேண்டியது. அதற்குள் கட்சி ஆட்சியை பிடிக்குமளவு வளர்ந்திருந்தது. அண்ணா சாமார்த்தியமான அரசியல்வாதிகளுக்கு எல்லாம் ஒரு எடுத்துக்காட்டு. அவர் இடத்தை மதியழகன், நாவலரிடமிருந்து கருணாநிதி தட்டிப் பறித்துக் கொண்டார் என்று ஒரு குற்றச்சாட்டு உண்டு. ஆனால் நடப்புகளை கூர்ந்து கவனித்தவர்களுக்கும், இருவரின் தனித்தன்மைகளையும் புரிந்தவர்களுக்கும் அண்ணாவின் வழித்தடத்தில் முன்செல்ல கருணாநிதிக்கே தகுதி இருந்தது என்று சொல்வேன். உதாரணமாக அவருக்கு ‘தம்பி!’ கடிதப் பிரச்சாரம் என்றால், கருணாநிதிக்கு ‘உடன்பிறப்பே!’. இப்படிச் சில.
சமீபத்தில் வெளியான தமிழ்மகனின் ‘வெட்டுப்புலி’ நாவலில் திராவிட இயக்கங்களைப்பற்றிய ஒரு அழுத்தமான பதிவு இருப்பதாக விமர்சனங்கள் பதிவு செய்கின்றன. இருப்பதை முடித்து விட்டுத்தான் கையில் எடுக்க வேண்டும்.
ஆனால் இன்னும் சில மாதங்களுக்கு அதிகம் எதையும் படிக்கமுடியாதபடி சில விஷயங்கள் ஆக்கிரமித்துக்கொள்ள இருக்கின்றன. இணையத்தில் உலவுவதும்கூட இனி குறைவாகத்தான் இருக்கும்.
*
வாசிப்பு முடிந்தது. திருவிதாங்கூர் சமஸ்தான விடுதலை வேட்கையையும், அதில் சர்.சி.பி.ராமசாமி ஐயர் எடுத்துவைத்த வாதங்களையும் திராவிட நாடு கோரிக்கையுடன் சம்மந்தப்படுத்தி ஒரு இடத்தில் வலுவான ஒரு முடிச்சை போட்டிருந்தார். இதையெல்லாம் படித்துதானே இளைஞர் கூட்டம் எழுச்சி பெற்றது என்னும் எண்ணத்தை படிக்கும் வரிதோறும் மனதில் ஓடவிட்டபடி படிப்பதே ஒரு தனி அனுபவமாக உள்ளது. இதுவரை படித்தது 1961-62 காலகட்ட கடிதங்கள் மட்டுமே. இதற்கு அடுத்த 5 வருடங்கள் தான் மிக முக்கியமானவை. இந்தி எதிர்ப்பு போராட்டம் தமிழ்நாட்டில் பற்றியெரிந்த, அல்லது பற்ற வைக்கப்பட்ட கால இடைவெளிகள். ஆனால் அவை இந்த தொகுப்பில் இல்லை. அடுத்த தொகுப்பு என்னிடம் கைவசமில்லை. நூலகத்தில் தேடி பார்க்கவேண்டும்.
0 comments:
Post a Comment