செய்திமூலம்: http://www.deccanchronicle.com/chennai/kovai-kids%E2%80%99-killer-shot-dead-cops-road-811
//மக்களின் ஆதரவும் இதற்கிருப்பதாக சித்தரிப்பதில்//
இன்று நடந்த போலிமோதல் கொலையை அடுத்து அவருக்கு போன் செய்து இதுபற்றி சொன்னேன். மிக உற்சாகமான குரலில் ‘வெரி குட்’ என்றார். அதுபற்றி சில நேரம் மகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருந்ததில் அவர் மனதில் ஏற்பட்ட பயரேகையின் அடையாளங்கள் வலுவிழப்பதை என்னால் உணர முடிந்தது.
இது உண்மையிலேயே ஒரு குழப்பமான நிலை. இதன்மேல் இரண்டு பக்கங்களிலும் நின்று வக்காலத்து வாங்க முடியும். சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்ட ஒரு சமுதாய குடிமகனாக இதை நான் எதிர்க்கிறேன். அவன் குற்றவாளியேயாயினும் அவன் தரப்பை நீதிமன்றத்தில் சொல்ல அவனுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்க வேண்டும். அதுதான் நாகரிக சமுதாயத்தின் அடையாளம்.
அதேசமயம் காட்டுமிராண்டிகளுக்கு நாகரிக சட்ட திட்டங்கள் பொருந்துமா என்பது குறித்தும் யோசிக்க வேண்டும். தெளிவாக குற்றவாளி என்று தெரியும் ஒருவனை நீதிமன்ற நடைமுறைகளுக்கு உட்படுத்தினாலும் சட்டத்தின் ஓட்டைகளில் ஒளிந்துகொண்டு காலமெல்லாம் செய்த குற்றத்தின் தன்மைகேற்பில்லாத குறைந்த தண்டனையுடன் காலத்தை ஓட்டிவிட முடியும். இதைத்தான் நாம் நடைமுறையில் கண்டுவருகிறோம். அஜ்மல் கசாப்பை விட வேறு உதாரணம் இதற்கு தேவையில்லை. அவனுக்கெல்லாம் விசாரணையும் அப்பீலுக்கு அனுமதியும் தேவைதானா? ஆனால் நம் சட்டம் அனுமதிக்கிறது. அவன் ஆயுளும் நீண்டு கொண்டிருக்கிறது.
‘தண்டனைகள் கடுமையாக கடுமையாகத்தான் குற்றங்கள் குறையும்’ என்னும் வாதத்தில் நம்பிக்கை கொண்டவன் என்னும் முறையில் இந்த போலிமோதல் கொலையை மௌனமாக அங்கீரிப்பதிலும் பெரிய மனத்தடை எனக்கு இல்லை. அந்த குற்றவாளிக்கு விரைந்து அளிக்கப்பட்ட தண்டனை காரணமாக என் தோழி போன்ற தாய்மார்களின் மனஅழுத்தம் குறைந்திருக்கிறது. குழந்தைகளிடம் தவறாக நடக்க எண்ணம் கொண்டிருப்பவர்களின் காதில் அழுத்தமாக ஒரு எச்சரிக்கை மணி ஒலித்திருக்கிறது.
எனவே சமூக ஒழுங்கு நடவடிக்கையாக இதனை காண நேரும்போது இது தர்மம். வெறும் சட்ட புத்தகங்களை கையில் ஏந்திக்கொண்டு வாதிட்டால் குற்றம். அவரவருக்கான நியாயத்தின் பக்கம் அவரவர் நின்றுகொள்ளலாம். தட்டு இருவர் பக்கமும் சமமாகத்தான் இருக்கிறது. அந்த மாதிரி நேரங்களில் மனம் எந்தப் பக்கம் சாய்கிறது என்பதுதான் நிலைப்பாடை தீர்மானிக்கிறது.
நாமே நேரடியாக பாதிக்கப்படும் வரை இதுபோல் குற்றவாளிகளின் மனித உரிமைக்காக வாதிட்டுக் கொண்டிருப்போம் என்பதும் நிதர்சனம்.
o0o
o0o
o0o
இந்த சம்பவம் பற்றி படித்ததும் நான் முதலில் எழுதி பின் அழித்த கருத்து ‘சட்டம் நல்ல ஒழுங்குதான்’ என்பது. தினமும் நிறைய கொலைகள் நடக்கின்றன. கையும் கொலையுமாக நிறைய பேர் மாட்டவும் செய்கிறார்கள். அவர்கள் எல்லோரையும் இப்படி என்கௌன்டர் செய்து விட்டால் பிரச்னை முடிந்து விடுமா? நீதித்துறை என்ற ஒன்றை எதற்காக வைத்துக் கொண்டிருக்கிறோம்? இது மக்களின் உணர்வு ரீதியான பிரச்னைக்கு தீர்வு என்றால், எல்லா உணர்வு ரீதியான பிரச்னைக்கும் தனிமனிதர்கள் தாங்களே தீர்ப்பை எழுதிவிட முடியுமா? அதை இந்த சமூகம் அனுமதிக்குமா? என் அப்பனை அவன் வெட்டினான். அவனை நான் வெட்டினேன் என்றால், ‘இது உணர்வு ரீதியான கொலையல்லவா’ என்று சும்மா போக விட்டு விடுவார்களா? சட்டத்தின் முன் சமூகத்தின் முன் நீயும் ஒரு கொலைகாரன் தான் அப்போது.
ஆனால் இங்கே மட்டும் எப்படி இது நியாயம் ஆகிறது?
இங்கேதான் சமுதாயத்தின் கும்பல் மனநிலையும் அதிகாரத்தின் மறைமுகமும்(hidden face) கைகோர்க்கின்றன. நீ தனியாக செய்தால் அது கொலை. கும்பலாக சேர்ந்தால் அது கலவரம். அதுவே அதற்கு அதிகார வர்க்கத்தின் ஆதரவும் கிடைக்கும்போது என்கௌன்டர். இதனால்தான் எழுதினேன்: சட்டம், ஒழுங்கு, பாரம்பரியம், மரபு, கலாச்சாரம் இத்யாதி சமூக கட்டுப்பாட்டு உபகரணங்கள் எல்லாமே நம் சௌகரியத்துக்கு நாம் நம்மை சுற்றி போற்றிக் கொண்டிருக்கும் போர்வை போல. பொதுவாக அப்போர்வையின் நிறமே சமூகத்தின் நிறமென ஆகிவிட்டது; ஆனாலது நிஜமன்று. சட்டத்தரணி அவையினரை விட துப்பாக்கி ரவைகள் பேச அனுமதிக்கப்படும் விதி விலக்கான இப்படி சில நேரங்களில் அப்போர்வை கிழி(க்கப்)படும்போதுதான் நம் உண்மை தோலின் நிறம் நமக்கேகூட தெரியவரும்.
இந்த கொலையையே ஒரு பெரும் பணக்காரரின் பிள்ளையோ, அரசியல்வாதியின் உறவினனோ செய்திருந்தால் - அங்கே மக்களின் உணர்வுநிலை கொந்தளித்தபோதும் - இப்படி ஒரு என்கௌன்டர் நடந்திருக்குமா என்னும் கேள்வியை நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும். ஏன் அப்போது மட்டும் வெகுஜன உணர்வுக்கு அதிகார வர்க்கம் செவிசாய்க்கவில்லை? அப்போது எங்கே போகிறது சட்டத்துக்கு அப்பாற்பட்ட தர்மம்?
உதாரணமாக, சமீபத்தில் வீரபாண்டி ஆற்முகத்தின் தம்பி மகன் கொலை வழக்கில் வலுவான ஆதாரங்களுடன் கைது செய்யப்பட்டார். அவர் அடாவடியான பேர்வழியென்றும் தற்போது சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் பத்திரிக்கைகள் எழுதுகின்றன. அங்கேயெல்லாம் சைலேந்திரபாபுவின் துப்பாக்கி ஒலிக்குமா? குறைந்த பட்சம் சாட்டை?
இங்கே மோகன்ராஜ் என்னும் கேட்பாரற்ற ஒரு சாமானியன் குற்றவாளி என்றதும் என்கௌன்டர் விளையாட்டை விளையாடி மக்களின் உணர்வை பயன்படுத்தி பெயர் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். சட்டம் நல்ல ஒழுங்குதான்.
நியாயம், தர்மம், சட்டம் ஒழுங்கு, நீதி எல்லாமே அன்றாடங்காய்ச்சிக்குத்தான். நியாய கத்தி பாய தயாராக இருப்பதுவும் அவன் தலைக்கு மேலே மட்டும்தான். எவன் கேட்கப் போகிறான்?
போலி ஜனநாயகத்தில் போலியான சமூக கட்டுபாட்டுக்குள் போலி மனிதர்களாக உலா வந்து கொண்டிருக்கிறோம். இதில் சரியென்ன? தவறென்ன?
o0o
o0o
o0o
டெல்லி அருகே ஒரு தொழிலதிபர் சின்ன சின்ன பிள்ளைகளாக பிடித்து வன்புணர்ந்து கொலை செய்து சாக்கடையில் வீசிய சம்பவத்தில் இன்னும் கூட தண்டனை நிறைவேற்றப்படவில்லை.
சரி, அதெல்லாம் இருக்கட்டும். இன்னொரு கேள்வி இங்கே எழுகிறது. அது எல்லா கொலைகளும் ஒரே மாதிரி அணுகப்பட வேண்டியவை தானா என்பது.
கொலைகளை - கொலை, கொடூரகொலை என்று பிரித்துக் கொண்டால், அவையவை அதனதன் தன்மைக்கேற்ப தண்டனையளிக்கப்பட வேண்டியவை என்றாகிறது. அதை ஓரளவு கோவை சம்பவத்துடன், அங்கே பாதிக்கப்பட்ட தாய்மார்களின் மனநிலையுடன் ஒப்பிட்டு ஏற்றுக் கொண்டாலும்கூட அந்த கொடூரகொலைகளுக்கான கொடூர தண்டனை ஏன் மோகன்ராஜ்களுக்கு மட்டும் என்பதுதான் சமரசம் உலாவும் நாடு இஜ்ஜனநாயக நாடு என்னும் அரசியல் சட்ட பிரிவின் (அ) மக்களின் கும்பல் மனநிலையின் முன் நம் கேள்வி!
o0o
o0o
o0o
//writerpara: வன்முறைக்கு பதில் வன்முறையே சரியான தீர்ப்பென்று மக்களனைவரும் முடிவு செய்துவிட்டதைப் புரிந்துகொள்ள முடிகிறது. நீதிமன்ற நடவடிக்கைகளின் நிதானம் எல்லை கடந்துவிட்டதன் விபரீத விளைவு மட்டுமே இது //
நியாயமான கருத்து. நீதிமன்ற நடவடிக்கைகளில் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள் என்பதும் என்கௌன்டர்களுக்கு கிடைக்கும் ஆதரவுக்கு முக்கிய காரணம்.