கைபோன போக்கில்...
இப்போதைக்கு SE Cedar (அ) Nokia 2700 Classic - இரண்டில் ஒன்றை வாங்கும் உத்தேசத்தில் இருக்கிறேன். இடையிடையே ஸ்மார்ட் போன் ஆசையும் எட்டிப்பார்க்கிறது. Samsung Wave பெங்களூரில் விலை குறைவாக கிடைப்பதாக கேள்விப்பட்டேன். உண்மையென்றால் அதையே வாங்கி விடவும் வாய்ப்புண்டு.
* * *
விலைவாசி கூடிப் போச்சி என்று என்னதான் அலுத்துக் கொண்டாலும் மக்களின் பட்டாசு மோகம் குறைந்த மாதிரி தெரியவில்லை. இந்த தீபாவளியின் மாலைப் பொழுதில் வீட்டின் முன்புற பால்கனியில் நின்றவாறு மழை மேகம் கூடிய வானத்தையே உற்று நோக்கிய வண்ணம் இருந்தேன். அது ஆதிசேஷன் பேட்டையினருக்கு உரித்தான வானம். வண்ணமயமான வெடிகளால் வானத்தில் ராஜபாட்டையே போட்டுக் கொண்டிருந்தார்கள். பார்த்த கண்கள் பூத்தன. வெடியின் ஒலிச் சத்தங்கள் நள்ளிரவு வரையிலும் கூட ஒலித்துக் கொண்டே இருந்தன.
பருப்பில்லாமல் பஃபே விருந்துடன் மட்டும் கல்யாணம் கூட இருக்கலாம். ஆனால் பட்டாசு இல்லாமல் தீபாவளி இருக்கமுடியாது. எனினும் பணவீக்கம் இரட்டைபடையில் சென்று கொண்டிருக்கும் இந்த நாட்களிலும் கூட காசு கரியாவது சரிதானா என்று மனதில் ஒரு கேள்வி எழுகிறது. எழும் எல்லா கேள்விகளையும் நிராகரிக்கச் செய்வது குழந்தைகளின் குதூகலம். அதற்கு முன் பணம் ஒன்றும் பெரிதல்ல. என் நான்கு வயது குழந்தைக்கு 700 ரூபாய்க்கு பட்டாசு வாங்கினேன். எல்லாவற்றையும் நானேதான் வெடித்தேன். நம் குழந்தைகள் குழந்தைகளாக உள்ள வரை மட்டுமே நாமும் நமக்குள் இருக்கும் குழந்தைமையை கண்டு கொண்டாடிக் கொள்ள முடியும்.
***
இந்த தீபாவளி பட்டாசு பர்சேஸின் போது மேலதிகமாக சீன பட்டாசுகளும் விற்பனைக்கு இருந்ததைப் பார்த்தேன். இதற்கு முன் அவைகளை விற்பனைக்கு பார்த்ததாக நினைவில்லை. மெல்ல மெல்ல சீன மலிவு விலை தயாரிப்புகள் எல்லா தரப்பு விற்பனை பொருட்களிலும் ஊடுருவி வருகின்றன. விலையை போலவே தரமும் மலிவுதான். இந்தியாவின் வெகுசன மனோபாவத்தை, மிடில் கிளாஸின் செலவளிக்கும் திறனை சீனனை விட நம்ம ஊர் வியாபாரிகள் நன்கு எடை போட்டு வைத்திருக்கிறார்கள். முன்பு சீன, கொரிய செல்போன்களையும் பர்னிசார்களையும் வாங்கி குவித்தவர்கள், இப்போது பண்ட பாத்திரங்கள் வரை சீன தயாரிப்புகளாக இறக்குமதி செய்து கொண்டிருக்கிறார்கள். பட்டாசும் வந்து விட்டது. இதில் சந்தேகம் இருப்பவர்கள் கண்ணன் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸின் வீட்டு உபயோக பொருட்கள் பிரிவை ஒருமுறை வலம் வரலாம்.
எல்லாமே மலிவும் மலினமுமானவை. இந்திய மெகா சந்தையில் கால் பதித்து விட்ட சீனா பிறகு ஏன் கொழிக்காது? இந்திய விற்பனை பொருட்களுக்கு இப்படி புறக்கடையில் ஆபத்து வந்திருக்கும்போது, நம்முடைய வணிகர் சங்கங்களெல்லாம் வால்மார்ட்டை எதிர்த்து கொண்டிருக்கின்றன.
நேற்று ஒபாமாவின் பேட்டியை பார்த்தேன். இந்திய சந்தையை எங்களுக்கு திறந்து விடுங்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தார். அமெரிக்க அதிபர்களின் சேவை; என் பாக்கியம் என்று நடந்துவரும் அதிகம் படித்த மேதாவி பிரதமர் மன்மோகன் அதையும் செய்யாமலா போகப் போகிறார். மரபை மீறி ஒபாமாவை மலர்தூவி வரவேற்க விமான நிலையத்தின் விதானத்தில் லஜ்ஜையற்று நின்றவராச்சே!
***
தீபாவளி ரிலீஸ் படங்களில் மைனா வெற்றிப் படமாகியுள்ளதாக அறிகிறேன். என்னவோ எனக்கு அதில் ஒரு ஈர்ப்பு வரவில்லை. ‘வ குவாட்டர் கட்டிங்’ படத்தைதான் மிகவும் எதிர்பார்த்தேன். ஆனால் பார்த்தவர்களெல்லாம் தலைதெறிக்க ஓடி வருகிறார்கள். அடுத்து இனி மன்மதன் அம்பு தான் என் எதிர்பார்ப்பில். படம் முழுநீள நகைச்சுவை சித்திரம் என்று அறிகிறேன். தமிழ் நகைச்சுவை படங்களில் கமல் படங்களை மட்டும் எடுத்துக்கொண்டு ஒரு அமர்வு அமர்ந்து பேச முடியும். அவ்வளவு நுணுக்கமான துணுக்குகள் விரவியிருக்கும். உதாரணத்திற்கு தோல்விப் படமாக அமைந்த மும்பை எக்ஸ்பிரஸையே எடுத்துக் கொள்ளலாம். இன்றில்லை இன்னொரு நாள்.
0 comments:
Post a Comment