அது கமல், ரஜினி இருவருமே கே.பாலாஜி தயாரித்த படங்களில் நடித்துக் கொண்டிருந்த நேரம். ரஜினி திருமணமும் அப்போதுதான் நடந்து முடிந்திருந்தது. அது சமயம் திருமணத்தையொட்டி பாலாஜி சினிமா முக்கியஸ்தர்களுக்கு ஒரு விருந்து கொடுத்திருந்தார். நட்சத்திரங்களின் சங்கமத்தில் மது கரைபுரண்டோடுவது இயற்கை. மது தந்த மயக்கத்தில் தனி நபர் விமர்சனங்கள் தலை தூக்கின. அது களேபரத்தில் முடிந்தது. அடுத்த நாள் ரஜினி-கமல் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாயின. அப்போது குமுதம் லைட்ஸ் ஆனில் எழுதப்பட்ட கிசுகிசு:
“ஏழுமலையான் பெயர் கொண்ட தயாரிப்பாளரின் பார்ட்டியில் இரண்டு பெரிய நடிகர்கள் மோதிக் கொண்டதை பற்றி எல்லா பத்திரிக்கையிலும் செய்திகள் வெளியாகின. அவற்றை படித்தால் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் நடைபெற்றிருப்பதாக மட்டுமே தோன்றும்.
More than that ஸ்டைல்காரர் கமலாரின் சட்டைக் காலரை பிடித்தாராம். அதுவரை பொறுமையோடு இருந்த அவர், இதற்கு மேல் இடம் கொடுக்க கூடாதென்று விட்டாராம் ஒரு குத்து. தடாரென்று விழுந்து விட்டாராம் முரட்டுக்காளை”
(குமுதம் 28.05.1981)
பிறகு நடந்தவை கமலின் வார்த்தைகளில்:
“ஜெய்சங்கர் குறுக்கே புகுந்து விலக்கி இருவரையும் சமாதானம் செய்தார். அதனாலேயே ஜெய் சாரை எங்கள் இருவருக்கும் பிடிக்கும்.
இந்த சம்பவம் நடந்த மறுநாள் நான் வாகினி ஸ்டூடியோவில் இருந்தேன். என்னை பார்க்க ரஜினி வேகமாக வந்து கொண்டிருந்தார். வந்த வேகத்தை பார்த்தால் தகராறு செய்வதற்குத் தான் வருகிறார் போலிருக்கிறது என்று நினைத்தேன். வரட்டும், வந்தால் இரண்டில் ஒன்று பார்த்து விட வேண்டியதுதான் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே, அருகில் வந்த ரஜினி என் கையை அழுத்தமாக பிடித்தார். அடுத்த விளைவுக்கு நான் தயாரான போது, “ஸாரி.. நேத்து நடந்ததுக்கு என்னை மன்னிச்சுடுங்க” என்றார். எனக்கு வெட்கமாகி விட்டது. அவரது பெருந்தன்மை என்னை சுட்டது.
மறுநாள் ரஜினி தன்னோடு பேசிக் கொண்டிருந்தவர்களிடம், “கமலிடம் மன்னிப்பு கேட்க போனபோது பகை உணர்ச்சியை மறக்க மாட்டாரோ என்று நினைத்தேன். ஆனால் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டார்” என்று கூறியிருக்கிறார். அதைக் கேள்விப்பட்ட போது நாம் முந்திக் கொள்ளாமல் போனோமே என்று என்னை நொந்து கொண்டேன்.
(கமல் முழுமையான வாழ்க்கை வரலாறு நூலில்)
ரஜினி ஒரு பெருந்தன்மையான மனிதர் என்பதற்கு 30 வருடங்களுக்கு முன்பே அத்தாட்சியான சம்பவம் இது. நமக்குதான் அவர்கள் ஐகான்கள். அவர்களுக்கு அவர்கள் மனிதர்கள் தாம். சடுதியில் உணர்ச்சிவயப்படுவது எல்லா மனிதர்களுக்கும் இயல்புதாம்.
இந்த முட்டல் மோதல்களையெல்லாம் தாண்டியும், சுற்றியுள்ளவர்களின் திருகு வேலைகளுக்கு மத்தியிலும் அவர்கள் தங்களுக்கென்று ஒரு பாதை வகுத்துக் கொண்டு இவ்வளவு நாளும் நட்புடன் இருந்திருக்கிறார்கள் என்பது உண்மையிலேயே பெரிய விஷயம்.
கமல் 50-ல் ரஜினி பேசியதை கண்டு கண்கள் பனிக்க கமல் சொல்வார், ‘எவன் பேசுவான் இப்படி...?’ என்று. மனதிலிருந்து வந்த வார்த்தைகள்!
0 comments:
Post a Comment