வானும் மண்ணும்

Posted: Friday, November 26, 2010 | Posted by no-nononsense | Labels:
பொழுது போகாத நேரங்களில், நூல்களும் உடன் சேர்ந்து அலுப்பூட்டும் பொழுதுகளில் இசையை கேட்பதுடன் அதன் வரிகளை கவனமாக கவனித்து ரசிப்பது எனக்கு வாடிக்கை. இக்குழுவின் whats happening சந்துமுனையில் கூட நான் அவ்வாறு பல சிந்துகளை பாடி திரிந்தது உண்டு. லய, சந்த, தாளங்களுக்கு ஏற்ப மெட்டுக்கு வார்த்தைகளை தேர்ந்தெடுத்து இட்டுக் கட்டுவது ஒரு தனி கலை. அது எல்லோருக்கும் எளிதில் கைவரக் கூடியதல்ல. கூடி வரப்பெற்றவர்களின் புகழ் எளிதில் அகலக் கூடியதும் அல்ல. 

அதனால்தான் ‘அள்ளி தந்த பூமி அன்னையல்லவா.. சொல்லி தந்த வானம் தந்தையல்லவா’ என்ற ஒரே பாடலின் மூலம் மட்டும் இன்று வரை அதை எழுதிய மதுக்கூர் கண்ணன் என் நினைவில் நீங்காமல் இருக்கிறார். (இவர்தான் பின்னாட்களில் ‘யார்’ கண்ணன் என்ற பெயரில் தொடர்ந்து பேய் படங்களாக எடுத்தவர்).

இன்று மைனா பாடல்களை கேட்டுக் கொண்டிருந்தேன். ஜிங்கிலி ஜிங்கிலி லேட்டஸ்ட் ஹிட் முடிந்து அடுத்து கேட்ட பாடல், 

’நீயும் நானும்
வானும் மண்ணும்
நெனைச்சது நடக்கும் புள்ள
வீசும் காத்தும்
கூவும் குயிலும்
நெனைச்சது கிடைக்கும் புள்ள’

பாடல் நல்ல மெல்லிசையாக கேட்க இதமாகவே உள்ளது. இருந்தாலும் பாடல் வரிகளில் பொருள் தளை தட்டுவதாக எனக்கு ஒரு சம்சயம். நீயும் நானும் எப்படி வானும் மண்ணும் ஆகமுடியும்? வானும் மண்ணும் சேரும் காலம் என்று ஒன்று கிடையாதே. வானாகி, மண்ணாகி பயனில்லை. வளியாகி, ஒளியாகி வேண்டுமானால் இணைய முடியும். மேலும், அதென்ன காதலின் உன்னதமான வேளையில் போய் மண் என்றெல்லாம் பாடிக் கொண்டிருப்பது? சகிக்கவில்லை. அடுத்த இரண்டு வரிகளும் கூட அப்படித்தான். இதே போன்ற ஒரு சூழலில் வைரமுத்துவின் பேனா எப்படி எழுதியது என்றால், 

‘நீ மழை, நான் பூமி,
எங்கு விழுந்தாலும் ஏந்தி கொள்வேன்’

கவிஞர்களும் கவியரசர்களும் வேறுபடுவது இங்கே தான். 

இளையராஜா 80-களின் பிற்பகுதியில், அதாவது வைரமுத்துவுடன் ஏற்பட்ட பிரிவுக்கு பிறகு இப்படித்தான் பல அபத்த வரிகளை பாடல்களாக ஏற்றுக் கொண்டிருக்கிறார். அவற்றுள் கேட்கும்போதெல்லாம் எனக்கு சொல்லொனா எரிச்சலை ஏற்படுத்துவது, ‘மாறுகோ மாறுகோ’ பாடல். ‘மாலையில் ஆடிக்கோ; மந்திரம் பாடிக்கோ’ என்று முடியும் அதில் ஒரு பொருளையும் நான் காணவில்லை. சும்மா மெட்டுக்கு வாயில் வந்ததை போட்டிருக்கிறார்கள். அதை எழுதியவர் வாலி என்று நினைக்கிறேன். அதிலொன்றும் ஆச்சரியமும் இல்லை. வாலி பேனா எப்படியும் வளையும். சமயத்தில் இப்படித்தான் முனை உடையும்.

0 comments:

Post a Comment