தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு நிலாச்சோறு ஊட்டிய காலம் போய் நடிகர்களை காட்டி சன்சோறு ஊட்டப்படும் காலமிது. குழந்தை வளர வளர வீட்டில் டிவி மற்றும் சினிமா சம்மந்தமான சூழலை வெகுவாக குறைத்துக் கொள்வதைப்பற்றி மனதில் பரிசீலித்து கொண்டிருக்கிறேன். இருந்தாலும் அதற்கு இன்னும் காலமிருக்கிறது. இப்போதைக்கு அவளின் குழந்தை பருவத்தை தனக்கு பிடித்த வழியில் அவள் கொண்டாடிக் கொள்ளட்டும்.
*
அந்நியமொழி ஆங்கிலத்தை ஓர் உலகளாவிய தொடர்பு சாதனமாக, வேலைதேடலில் முன்னுரிமை பெற்றுத் தரும் ஒரு சிறப்பு தகுதியாக, அறிவுதேடலுக்கு உதவும் ஒரு மீடியமாக மட்டும் நெஞ்சில் நிறுத்தி அதை ஒரு மொழி என்னும் கண்ணோட்டத்தில் மட்டும் நன்கு கற்றறிந்தால் போதும். மேற்கொண்டு அதிலென்ன பெருமை இருக்கிறது?
ஆனால் இதையெல்லாம் எடுத்தியம்பும் வயதில் அவளோ அதற்கான மனமுதிர்ச்சியில் குடும்பத்தாரோ இல்லை. அவர்களுக்கு மம்மி-டாடி என்று குழந்தை அழைத்ததில் ஆகபெருமை. இதிலெல்லாம் நான் தலையிட போவதுமில்லை. அவள் பாட்டுக்கு அவள் ஆங்கிலத்தில் புலமை பெறட்டும். நான் தமிழிலும் தக்க ஆர்வம் அவளுக்கு ஏற்படுத்துவதில் முனைப்பாக இருந்து கொள்வேன். ஆனால் முனைப்பு மட்டும் போதாது; காலத்தே கவனமும் தேவை.
NRI-களின் குழந்தைகள் மட்டுமல்ல நானறிந்த சில ஐரோப்பிய தேசங்களில் வாழும் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கும் கூட தாய்மொழி தமிழ் எழுதப் படிக்க சுத்தமாக தெரியவில்லை. அதிலும் டச்சு நாட்டில் வாழும் ஒரு அம்மணி அங்கேயே பிறந்து வளர்ந்து படித்து வரும் தன் மகளுக்கு தமிழில் ஓரிடு வார்த்தைகளுக்கு மேல் பேசகூட தெரியாது என்று என்னிடம் வருத்தப்பட்டிருக்கிறார். நம்ப கொஞ்சம் சிரமாகத்தான் இருந்தது. சில நேரங்களில் எப்படி இவர்கள் மொழி என்னும் ஓர் இனத்தின் உயிர்நாடியான ஒரு முக்கிய நரம்பை அற்று போக அனுமதிக்கிறார்கள் என்று நினைத்தால் ஆச்சரியமாவதுண்டு.
இவர்களுக்காவது பிழைக்க/வேலைக்காக சென்ற இடத்தில் இருக்கும் survival பிரச்னையில் மொழியில் எல்லாம் கவனம் செலுத்தி கொண்டிருக்க முடியாது என்ற ஒரு எதார்த்த பிரச்னை உள்ளது. ஆனால் நம் சென்னை போன்ற மெட்ரோக்களின் மேட்டுகுடி வர்க்க குழந்தைகள் ஆங்கிலம் மட்டுமே அறியும் என்பது விளக்கங்களுக்கு அப்பாற்பட்ட வருத்தம். காரணம் அவர்களின் பெற்றோர்களும் தமிழில் பேசுவதில்லை. அப்படி ஒரு நபரையும் குழந்தையையும் நான் கோவையில் கூட சந்தித்திருக்கிறேன். என்னிடம் நல்ல தமிழில் பேசிய அவர் மனைவியும் அவரும் குழந்தையிடம் முற்றாக ஆங்கிலத்தில் மட்டுமே உரையாடினர்.
மொழிவெறி என்பது அரசியல்வாதிகள் ஓட்டுக்காக காட்டுவது. மொழியுணர்வு என்பது அடிப்படையிலேயே ஒவ்வொரு தமிழருக்கும் இருக்கவேண்டியது. தமிழ் மொழியின் தொன்மையை அறியா தமிழராயிருக்கிறோம். இது பிறமொழி போல சொற்களை கடன் வாங்கி உருவானதல்ல. இதற்கு இலக்கண நூலே (தொல்காப்பியம்) குறைந்தது 3500 - 4000 ஆண்டுகளுக்கு முன்பு உருவாகி விட்டது எனில், அதற்கு முன் இது எவ்வளவு காலமாக பேசப்பட்டிருந்தால் அது இலக்கண விதிகள் வகுக்கும் அளவிற்கு குலைந்து மெருகேறி ஒரு அழகிய வடிவத்திற்கு வந்திருக்க வேண்டும்! எண்ணிப் பாருங்கள் தமிழர்களே! அவசியம் உங்கள் குழந்தைகளுக்கு தமிழ் எழுதப் படிக்க தெரிந்திருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
0 comments:
Post a Comment